Wednesday, February 23, 2022

தாய் மொழி தினம்.

 தகவல் தொழில் நுட்ப துறையை பொறுத்த அளவில் பல் மொழி, பல் நாட்டு மக்களுடன் பேச வேண்டும். அதில் தமிழில் பேச ஒருவர் கிடைத்தால் சற்று சுலபமாக புரியவைத்து விடலாம். தமிழில் பேசும் ஒருவர் கிடைக்க மாட்டாரா என ஏங்கும் பிரஜாக்ட்டும் உண்டு. ஈமெயில்/பெயர் வைத்து நம்மூர் மக்களை கண்டுபிடிப்பது சற்று சிக்கலான ஒன்றாக மாறி வருகிறது. தற்பொழுது புதிதாக வந்து சேர்பவர்களின், பெயரின் மூலம் தமிழ்தானா? என்பதில் சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. என் அப்பாவின் பெயர் மூலம் தான், நானே தமிழ் என்பதை அறிந்து கொள்வர். சிலர் சேட்டில்(chat) "வணக்கம்" என்று ஆரம்பிப்பார்கள். சிலர் "நீங்க தமிழா?" என நேரிடையாக கேட்டுவிடுவார்கள்.



நானும் இப்படி கண்டுபிடித்து, "வணக்கம்" என்று ஆரம்பித்து, பதில் தமிழில் கிடைத்தால் அதிலேயே தொடர்வேன். நம்மைவிட ஜூனியர்கள் தமிழ் என தெரிந்தால் உடனே ஆரம்பித்து விடுவேன். ஆனால் மேலாளர்கள், க்ளையண்ட் என வரும்போது அவர்கள் முதலில் ஆரம்பிக்க வேண்டும் என்பது என் கொள்கை, பஞ்சாயத்து ஏதும் வராமல் இருக்க. சில தென்னிந்தியப் பெயர்கள் தமிழ் போலவே தோன்றும். அவர்களிடம் பல்பு வாங்கிய சம்பவங்களும் உண்டு.


மலேசியன் ப்ராஜக்ட். அவரின் பெயரின் மூலமும், அக்கம் பக்கம் விசாரித்ததிலும், அவர் சுத்த தமிழ் என்பது நன்றாக தெரிந்தது. ஆனாலும் அவர் கிளையன்ட் மற்றும் மேலாளர் ஆக இருந்தால் , தமிழில் ஆரம்பிக்கவில்லை. ஆங்கிலத்திலேயே 'சேட்' மற்றும் தொலைபேசி உரையாடல்கள் இடம்பெரும். ஆறு ஏழு மாதமாக அவ்வாறே தொடர்ந்தது. ஒருநாள் டெஸ்க் தொலைபேசி அழைத்தது. அதில் பரபரப்பாக பேசினார். "எப்ப இந்த ரிப்போர்ட் அனுப்புவே. கொஞ்சம் அத மட்டும் மாத்திட்டு சீக்கிரம் அனுப்பு" என்று தமிழில் சில நிமிடங்கள் கடுமை காட்டிவிட்டு போனை வைத்துவிட்டார். அது தான் முதலும் கடைசியும் அவரிடம் இருந்து வந்த தமிழ். அதன் பிறகு ஒரு வருட காலம் அவரோடு வேலை பார்த்திருப்பேன்.

மற்றொரு கிளையன்ட், லண்டன் அலுவலகம் வருகிறார். நம்ம ஊர் பகுதியில் இருந்து புலம் பெயர்ந்திருப்பவர். அவர் சேர்ந்த புதிதில், ஊர்ப்பேர் வரையில் விசாரித்தும் தமிழுக்கு மாறாமல், ஆங்கிலத்திலேயே தொடர்ந்தார் அந்த கிளையன்ட் மற்றும் மேலாளர். கொள்கைப்படி நான் தமிழில் தொடரவில்லை. ஒரு வருடமாக தமிழிலேயே பேசாதவர், அன்று காலை ஒரு பத்து மணி இருக்கும் அவசரமாக அலுவலகம் வந்தார். தமிழில் "ஏம்பா, காலைல பிரேக் பாஸ்ட் இன்னும் சாப்பிடல, இந்த கேன்டீன் எங்க இருக்கு?" என கேட்டார். "பிப்த் ப்ளோர்ல இருக்குங்க" "கொஞ்சமா லைட்டா இருந்தா போதும்" என்றார். "சான்டவிச் எப்பவும் கிடைக்கும்... அது வேணாம்னா..காஃபி & மஃபின் இருக்கும் பாருங்க". சாப்பிட கிளம்பினார். சாப்பிட்டு விட்டு தெம்பாய் வந்தவர் போற வரைக்கும் தமிழை ஊறுகாய் அளவு கூட தொடவே இல்லை. ஆனால் அவர்தான் வடநாட்டு மக்களோடு இந்தியில் குலாவிக்கொண்டு இருந்தார்.

அவர்களே அறியாமல், அனிச்சை செயல் போல சில கணங்களை உயிர்ப்பித்து விடுகிறது தாய்மொழி .

#தாய்மொழிதினம்.

No comments:

குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...