Wednesday, April 29, 2020

வாசிப்பில் நேசிப்பு - உடையார்

இப்பொழுது வீட்டிற்குள் மாதக்கணக்கில் முடங்கி இருப்பது போலவே 2009-ல்  வீட்டின் படி தாண்டாமல் இரு வாரங்கள் முடங்கிக் கிடந்தேன்.  காரணம் சின்னம்மை. அப்பொழுது முடங்கியிருந்த இடம் லண்டன்.  அப்பொழுது தான் ஸ்மார்ட் போ∴ன்கள் வர ஆரம்பித்த நேரம்.  அவ்வளவாக புழக்கத்தில் இல்லை.  பாட்டு கேட்பது மட்டுமே பொழுதை ஓட்டியது.   அது போரடிக்க ஆரம்பித்த பொழுது நுழைந்த இடம் புத்தகம்.   அந்த இக்கட்டான நேரத்தில் பெரும் ஆறுதலாகவும், நேரம் கடத்தியாவும்  இருந்தது  புத்தகம் மட்டுமே.  ஈஸ்ட் ஹாம் நூலகத்தில் இருந்த பொன்னியின் செல்வனை வரவழைத்து, அதன் வழியாக சோழநாட்டிற்கு பயணப்பட்டேன்.  மீண்டும் இரண்டாவது முறையாக படிக்கும் பொழுது, பொன்னி நதி வேறு மாதிரியான கோணத்தில் புலப்பட ஆரம்பித்தது.  இப்படித்தான் பெரும் புத்தக வாசிப்பு என்னை ஆட்கொண்டது. 

இதில் குறிப்பிட வேண்டிய விசயம், அங்கு நூலகத்தில் 10 புத்தகங்கள் வரை எடுத்துக்கொள்ளலாம். அந்தப்பகுதியில் பெரும்பான்மையினர்  தமிழ் பேசும் மக்கள் என்பதால், நூலகத்தில் தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்கும்.  உறுப்பினராக பெரிய நடைமுறைகள் இல்லை, அந்த கவுன்சிலில் கட்டுப்பாட்டுக்குள் முகவரி 
இருந்தால் போதும்.

அதன் பிறகு, கல்கியைத் மீண்டும் ஒரு வலம் வர ஆரம்பித்தேன். பல்லவர்களிடம் இருந்து சோழ நாட்டை மீட்ட பார்த்திபன் கனவு.   இந்த புதினங்களின் வழியாக, சோழர்களின் வரலாறு பற்றிய பெருமை  என்னுள்  அப்பிக் கிடந்தது.  தொடர்ந்து சில மாதங்கள் கழித்து தஞ்சையிலிருந்து  'சிவகாமியின் சபதம்' வழியாக காஞ்சிக்கு      பல்லவர் கால வரலாறு பற்றித் தெரிந்து கொள்ள நகர்ந்தேன்.    இப்படியாக கல்கியின் சுவைஞனாக அந்நேரத்தில் மாறியிருந்தேன்.    ஆனாலும், புத்தங்களில் கூறி இருந்ததை மட்டும், பெரும்பாலும் நம்பி வண்டி ஓடிக்கொண்டு இருந்தது.

ஒவ்வொரு முறை தஞ்சைப் பக்கம் போகும்பொழுது, பெரிய கோவில் எனது பார்க்கும் பட்டியலில் இருக்கும்.  ஒவ்வொரு முறையும் அதன்மீது ஆச்சர்யம் மேலிடும்.  தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய வரலாற்றை முழுவதும் தெரிந்து கொள்வதில் ஆவல் ஏற்பட்டது.   அது பற்றி ஏதாவது புத்தகம் உள்ளதா? எனும்  தேடல் நின்ற இடம்…

பாலகுமாரனின் உடையார். 

உடையார் புத்தகத்தின் அனைத்து பகுதிகளும், லண்டன் ஈஸ்ட் ஹாம் நூலகத்தில் பார்த்திருந்தேன்.   அப்பொழுதெல்லாம் பாலகுமாரனின் மேல் அவ்வளவாக ஈர்ப்பு  இல்லாததால், அவர் பக்கம் செல்லவில்லை.  (ஆமா, இவரு வேற எல்லாரையும் வாசித்துவிட்ட மாதிரி, அதுவரை படித்தது, ரெண்டு புத்தகம் அதுவும் கல்கி அவர்களுடையது.)

 ஐந்தாறு வருடம் முன்பு ஈரோடு புத்தகத் திருவிழாவில் உடையாரின் முதல் பகுதியை வாங்கினேன்.  நம்ம வசிக்கும் வேகம் தான் நமக்கு தெரியுமே?  ஒரு வழியாக, அனைத்து பகுதிகளையும் வருடக் கணக்காக படித்து முடித்தேன்.   இன்னும் தெளிவாக குறிப்பிட வேண்டுமென்றால்  மூன்று புத்தகத் திருவிழாக்களில் ஒவ்வொரு பகுதியாக வாங்கித்தான் முடித்தேன்.  தோராயமாக ஆறு மாத இடைவெளியில் நடக்கும்  சென்னை மற்றும் ஈரோடு புத்தகத் திருவிழாக்களில் வாங்கியவை தான். 

தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு நான் சென்ற அனுபவத்தையும், என்  வாசிப்பு அனுபவத்தையும்  உடையாருக்கு முன், உடையாருக்குப்  பின் என்று பிரிக்கலாம். 

ராஜராஜ சோழன் சாளுக்கிய நாடுகளின் மீது படையெடுத்துச் செல்வதை மட்டுமே அவ்வளவு பிரமாண்டமாக ஒரு பாகத்தில் அழகான, விரிவான வர்ணனைகளோடு விவரித்து இருப்பார்.   போருக்கு வீரர்கள் செல்லும் வழியில், அவர்களுக்கு முன் உணவு சமைப்பவர்கள் சென்று தங்கி அவர்களுக்கு சமைத்துவிட்டு அடுத்த இடம் நோக்கி நகர்வார்கள்.  பின்னே வீரர்கள் கிளம்பி வருவார்கள்.  இது ஏனோ பழனிக்கு பாத யாத்திரை செல்லும் மக்களை நினைவூட்டியது.  காலகட்டத்திற்கு ஏற்ப முன்னே அவர்களின் கட்ட வண்டி அல்லது  டெம்போவில் சென்று உணவு சமைத்து வைத்திருப்பாப்பார்கள்.   நடைபயணம் வருவோரும் பின்னே வந்து சாப்பிட்டுவிட்டு நடை பயணத்தை தொடர்வார்கள்.  இப்படியாகத் தான்  தஞ்சையிலிருந்து ஹம்பி வரை வாரக்கணக்கில் சென்று உள்ளார்கள்.
 
துங்கபத்திரா நதி காட்டாற்று வெள்ளம் போல சென்று கொண்டிருக்கும் ஒரு நதியாகும்.  புவியியல் ரீதியாகவே துங்கபத்திரா நதி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பலர் படையெடுத்து வருவதைத் தடுக்கும் அரண்.    ஆற்றுக்கு இந்தப் பக்கம் தங்கி,  தண்ணீர் குறைய காத்திருப்பார்கள்.  ஆனால் ராஜராஜ சோழன்  அந்த காற்றாற்று  நீரில் ஓரிடத்தில் அவரின் குதிரையோடு இறங்கி, சினங்கொண்ட யானை போல ஆற்றைக் கடந்து முன் செல்வார், வீரர்கள் பின் தொடர்வார்கள்.  போர் நடக்கும்.  வெற்றி அடைவார்கள். அங்கு இருந்த செல்வங்களை, பொருட்களை சூறையாடி வருவார்கள்.   இந்த போருக்கான காரணம், தஞ்சை பெரிய கோயில் கட்ட ஆரம்பித்த பிறகு நிதி பற்றாக்குறை வரும் எனும் போதுதான்.  இரு வருடங்களுக்கு முன் துங்கபத்ரா நதியை ஒட்டிய ஹம்பி இடங்களுக்குச் சென்றிருந்தோம்.  உடன் வந்த நண்பர்களிடம்  இதனைக் கூற, நம்புவதற்கு சற்று சிரமப்பட்டார்கள்.

உடையார் புத்தகம், பெரிய கோவிலைக் கட்டுவதற்கான திட்டமிடலில் தொடங்கும்.   கட்டும்பொழுது இடையே நிதி பற்றாமல் போகும்  என படையெடுப்பு.   அதற்கு போகும் திட்டமிடல்.  கோவில் கட்டுவது எக்காரணம் கொண்டும் நிற்கக்கூடாது என்பதற்காக,  ஆரம்பம் முதல் முடிவு வரை முழு வரைபடங்களையும்  ஒன்றன் பின் ஒன்றாக  வரைந்த குஞ்சர மல்லன் ராஜராஜப் பெருந்தச்சன்.     அதில் சிற்பிகள்,  சிலை வடிக்க மாடலிங் போல நின்ற நடனம் ஆடும் பெண்கள்.  ராஜகுருவாக இருக்கும் கருவூர்த் தேவர். கோயிலின் மண்டபத்தின் முதல் தளத்தில் இன்றும் அழியாமல் இருக்கும் ஓவியங்கள்.  இவை ஒவ்வொன்றும் அதில்  சொல்லப்பட்டிருக்கும் விதம் பிரம்மிப்பூட்டும்.  வாசிக்கும் பொழுது நம்மை அந்த இடத்திற்கே கூட்டிச்சென்று விடுவார்.  இப்படி ஐந்து பாகங்களை வாசித்து விட்டு பெரிய கோவிலுக்குச் சென்று அசை போட்டால் எப்படி இருக்கும்?   

உடையாருக்கு முன், தஞ்சைக்கு பெரிய கோயில் பார்க்கும்பொழுது  மனதில் ஒரு வியப்பு மட்டுமே தோன்றும்.   எத்தனை முறை அந்தப் பெரிய லிங்கத்தின் முன்பாக உட்கார்ந்து இருந்தாலும்,  அது பயபக்தி அனுபவமாக இருந்தது.   அது எப்படி கட்டியிருப்பார்கள், இது எப்படி திட்டமிட்டு இருப்பார்கள்  என்று திகைப்பு கலந்த யோசனை வரும்.   உடையாருக்கு பின்,  இப்படித்தானே  இதைக் கட்டினார்கள்,  இந்த இடத்தில்தான் அந்த மணலை மலைப் பாதைபோல கொண்டு போய் இருப்பார்களோ?   அந்த லிங்கத்தை இவ்வாறு தான் ஒட்டி இருப்பார்கள் என்பது பாலகுமாரன் அவர்கள் கூறியது போல கண்ணில் விரியும்.   விவரிக்கும் ஒவ்வொரு இடத்தையும், அந்த இடத்தில் நின்று, மெல்ல அசைபோட்டுப்  பார்க்கும் போது, ஆயிரம் வருடங்களுக்கு முன் செல்லும் பேரனுபவம்,  அலாதியானது,  விவரிக்க முடியாதது.   

கடைசியாக தஞ்சை சென்ற பொழுது, அது ஒரு பொழுது சாய்ந்த பொன் மாலை நேரம். அங்கு நிலவொளியில் ராஜ ராஜரோடும், கருவூர்த் தேவரோடும் பெருந்தச்சரோடும் 11ம் நூற்றாண்டுக்குச் சென்று உலாவினேன். கடைசியாக  அங்குள்ள அலுவலக அதிகாரிகளிடம் அந்த சித்திர மண்டபத்தைப்  பார்க்கலாமா? என்று கேட்டபொழுது தான்,  "நாளைக்கு வாங்க,  மத்தியானத்தில் தான் பார்க்க முடியும்,   இரவில் பார்க்க முடியாது" என்று கூறினார்கள்.  அடுத்த முறை அங்கு செல்லும் பொழுது, கண்டிப்பாக அதனைப் பார்க்க வேண்டும். 

அந்த கால கட்டங்களில் கோயில் காட்டியதை  தேவையில்லை என பொதுமக்கள் பலர் பேசிக்கொள்வதாக   அங்கங்கு கூறி இருப்பார்.  அதாவது இன்று வல்லபாய் பட்டேல் சிலையை நிறுவியிருக்கிறார்கள், அதோடு மட்டும் இல்லாமல் இந்த கரோனா நேரத்திலும் புதிய பாரளுமன்றத்தை கட்ட முனைப்பில் உள்ளார்கள்.   தலைமுறைகள், நூற்றாண்டுகள் கடந்து தங்கள் பெயர் வரலாற்றில் நிலைபெற மன்னர்கள் இதுபோல ஏதேனும் செய்து கொண்டுதான் உள்ளார்களோ  என தோன்றுகிறது.  அந்த காலகட்டத்தில் மக்கள் எவ்வாறு வாழ்ந்து இருப்பார்கள் என்பதைப் பற்றி தெரிவதற்கான வாய்ப்புகள் பிரம்மாண்டங்களின் மூலம் குறைவு. 
எப்பொழுதும் இருவேறு கருத்துக்கள் உண்டு, இப்போது இருப்பது போலவே.  இந்த புத்தகத்தில் இருந்த வேறு எதைப் பற்றியோ ராஜராஜ சோழனின் அறிவையும், வீரத்தைப் பற்றியோ மறுப்பதற்கில்லை,  மறைப்பதற்கும் இல்லை.   பாலகுமாரன் இந்த புத்தகத்தில் கற்பனை கலந்தும்   எழுதி  இருக்கலாம்.  இதற்காக ஒரு போருக்கு சென்று, அங்கு சண்டை போட்டு,  அங்குள்ள மக்களைத் துன்புறுத்தி,  அங்கிருந்து பொருட்களை எடுத்து விட்டு வந்து இந்த மாதிரியான பிரம்மாண்டங்களை எழுப்ப வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது.   கூடவே இதனைக் கட்டாமல்  இருந்திருந்தால் நமக்கு தமிழர்களின் சோழர்களின்  கட்டிடக்கலையைப் பற்றித் தெரியாமலும் போயிருக்கலாம்.  பல மாதிரியான கோணங்களில், ஒவ்வொரு பிரம்மாண்டத்தின் பின்னால் சென்று பார்க்க,  இந்த உடையாரின் வாசிப்பு எனக்கு கற்றுக் கொடுத்தது
இன்று இந்த புத்தகத்தை மீண்டும் வாசிக்க ஆரம்பித்தால், அது மற்றொரு கோணத்தையும் காண்பிக்கலாம்.

வாசிப்போம்.

Sunday, April 26, 2020

கொரோனாவும் கொள்ளுப்பருப்பும்

உகாதி மற்றும் தெலுங்கு வருடப் பிறப்பில் ஆரம்பித்தது  21 நாள் ஊரடங்கு உத்தரவு.      விஷு மற்றும் தமிழ் வருடப்பிறப்பில்(!?) மீண்டும் தொடர்ந்து கொண்டுள்ளது.  இந்த இடைவெளியில் கொரோனா  இந்தியாவில் மெதுவாக ஆரம்பித்து, இரண்டாவது ஊரடங்கில் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டுள்ளது.   இப்பொழுது தான் மூன்றாவது ஸ்டேஜ்  அடைந்துள்ளதாக நினைக்கிறேன்.  எண்ணிக்கை தினமும் மேல்நோக்கியே உள்ளது.  இதே நிலைமை இன்னும் பத்து  நாட்களுக்கும்  நீடித்தால்,  மே 3-ல் ஊரடங்கு உத்தரவை, மத்திய அரசு தளர்த்துவது பெரும் கேள்விக்குறி.   தளர்த்தினாலும், பெரு மற்றும் சிறு நகரங்களில், சகஜ நிலை இருக்காது என்று தான் தெரிகிறது.  


தமிழகத்தில் எண்ணிக்கை அரசின் அறிவிப்பின் படி குறைந்தும்  வருகிறது.  அதிலும் நோய்  பூரணமாக குணமாகி வெளியே வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி நம்பிக்கையை வளர்ந்துள்ளது.  ஆனாலும், மருத்துவர்கள் பாதிப்படைந்து இறப்பதும், அவர்களின் அடையாள போராட்டமும் யோசிக்க வைக்கிறது.  கூடவே சத்யம் தொலைக்காட்சி அதன் ஊழியர்கள் பாதிப்படைந்ததால் ஒளிபரப்பை தற்காலிகமாக நிறுத்தி உள்ளதையும் உற்று நோக்க வேண்டும்.   கூடவே முதல் கட்டமாக ரெட் அலர்ட்டில் வந்த ஈரோட்டிலும் அரசு அதிகாரிகளின் முனைப்பால் மிக நன்றாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இன்று அது ஆம்பர் பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  


கர்நாடகாவில் பெங்களூரிலிலும் அவ்வளவாக பாதிப்பை ஏற்படுத்தவில்லை.  நான் எதிர்பார்த்த அளவில் பரவல் இல்லை என்பது சற்று ஆறுதல்.


அமெரிக்கா, ஸ்பெய்ன், பிரிட்டன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் நிலைமை மிகவும் மோசமாக சென்று கொண்டிருக்கின்றது.  இறப்பு விகிதமும்  அதிகம்.  ஒரு குடும்பத்தில் ஆறு பேறும்  தாத்தா பாட்டி, அப்பா அம்மா குழந்தைகள் என மொத்தமாக உயிரிளந்தது  அதிர்ச்சி அளிக்கிறது.   


 இதற்கு காரணமாக சின்னம்மை, பெரியம்மை மற்றும் சில தடுப்பூசிகளை,  நாம் இன்றும் போட்டுக்கொண்டிருப்பது காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் சமூக வலைத்தளங்களில் பேசிக்கொள்கிறார்கள்.  வளர்ந்த மற்றும் மேற்கத்திய நாடுகளில் இதுபோன்ற நோய்களை முன்னரே நிரந்தரமாக தடுத்துவிட்டதால்,   இந்த தடுப்பூசிகளை போட்டுக்கொள்வதில்லை  என்ற கருத்தும்  நிலவுகிறது.    கூடவே மலேரியாவிற்கான மருந்தினை,  அமெரிக்காவிற்கும், பிரேசிலுக்கும் உதவும் என்று அந்தந்த நாட்டின் அதிபர்களும்,  பிரதமர்களும்  நம்மிடம் மிரட்டியும் கெஞ்சியும் வாங்குகிறார்கள்.    தடுப்பூசிக்கான ஆராய்ச்சி இன்னும் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.   கண்டுபிடிக்கப்பட்டவுடன்,  வளர்ந்த நாடுகள் ராபிட் டெஸ்ட் கிட்டை வழிப்பறி செய்தது போல, இதனையும்   எடுத்துக்கொண்டு,  அது நம் கையில் கிடைக்க சில மாதங்கள் ஆகலாம்.    அந்த கிட், சரியாக சோதனை செய்யவில்லை என்பது வேறு விசயம்.    


இதுவரை நாம் ஊரடங்கினால் ஒழிந்து கொண்டு இருந்ததால், இப்பொழுது இதன் வேகம் குறைவாகவும்  இருக்கலாம்.  மீண்டும் இதுபோல ஒரு அலை கூட அடிக்கலாம்.   இந்த கண்ணாமூச்சி விளையாட்டு இன்னும் எவ்வளவு காலம் தொடரும் என்பதை யாரும் கணிக்க இயலவில்லை.  கண்டிப்பாக மற்ற வைரஸ்களைப்போல கொரோனாவோடு தான் வாழப்  பழகுவோம் நேர்மறையாக.    


இந்த காலகட்டம் எப்படி சென்று கொண்டிருக்கின்றது?


இந்த ஊரடங்கு  காலகட்டம் குழந்தைகளுக்கு எப்படி சென்று கொண்டிருக்கின்றது?


முதல் ஒரு வாரம்,  இந்த பதைபதைப்பு ஒரு பக்கம் நமக்கு இருந்தாலும், குழந்தைகளுக்கு விடுமுறை மனநிலை  தான்.    குழந்தைகள் அவரவர் போக்கில் டிவியில் மூழ்கினர்.    டிவியில் இருந்து அவர்களை விடுவிக்க சற்று படாத பாடு பட வேண்டியதாக இருந்தது.     ஒரு பொன்னான(!) நாளில், அவர்களின் செல்ஃப்களில் இருந்த  சென்ற வருட புத்தகங்களை எடுத்துவிட்டு,  அடுத்து வருடத்திற்கு தயாராவதற்கு, அதனை சுத்தம் செய்ய ஆரம்பித்தோம்.   பள்ளி மீண்டும் எப்பொழுது ஆரம்பிப்பார்கள் என்பது கொரோன விட்ட வழி தான்.   இருந்தாலும், நமக்கு வளையும்போது கடமையை செய்துவிட வேண்டும்.   அந்த சுரங்கத்தில்(!) இருந்து ,பழைய உண்டி ஒன்று சற்றே கணமாகக்  கிடைத்தது.   திறந்து சில்லறைகளை எண்ணிப் பார்த்ததில் கணிசமாக கிடைத்தது 116 ரூபாய்.  


 "என்கிட்ட இந்த காயின்ஸ்  எல்லாமே குடுடா,   உனக்கு அதுக்கு பதிலா 100 ரூபா நோட்டு தாறேன்.  நீங்க ஒரு நாளைக்கு மூணு  மணி நேரம் மட்டும் டிவி பாருங்க.. உங்களுக்கு தினமும் ஒரு ரூபா தாறேன்... உண்டில போட்டு வைங்க " எப்படியோ இந்த யோசனை வந்தது.  


கேட்டதும், உடனே தந்து விடுவார்களா என்ன?  அதிலும் டிவியில் வேற கைய வெச்சாச்சு. கொஞ்ச நேரம் விளக்கி, அவர்களின் 100 ரூ நோட்டும், அதிலேயே இருக்கும் என கூற வேண்டியதிருந்தது.   ஒருவழியாக சமாதானமாகி அந்த சில்லறைகளை கொடுத்து நோட்டை வாங்கி அதனுள்ளே  போட்டதும் திருப்தி அடைகிறார்கள்.  இதுல இன்னொருவருக்கு பழைய உண்டியில் ஒன்றுமே  இல்லாததால், பஞ்சாயத்தைத்  தீர்க்க சும்மாவேனும் கொடுக்க வேண்டி இருந்தது.     


அந்த மூன்று மணி நேர கணக்கு என்னவென்றால்,  மூன்று வேளையும் அரை மணி நேரம் முதல் முக்கால் மணி நேரம் வரை  டிஸ்னி கிட்ஸ்  டிவி யில் வரும் "லிட்டில் சிங்கம்" எனும் அரை மண்டையன் தான் "ஆத்தா.. மாகி.. சதக்களி" என்று  அவர்களுக்கு சோறு ஊட்டுவான். 


'சரி, இதையே அடுத்த கட்டத்துக்கு நகர்த்தலாம்' என்று நினைத்து, அவர்கள் சில செய்யாத  காரியங்களையும் பட்டியல் இட ஆரம்பித்தோம்.  ஒவ்வொரு காரியத்திற்கும் ரூபாய் கொடுத்தால் கம்பெனிக்கு கட்டுபடியாகாது.  இங்கு தான் இந்த சூப்பர் மார்க்கெட் தந்திரம்  உதவியது. 

"அஞ்சாறு பாயிண்ட் சேர்த்தால் ஒரு ரூபாய் வெச்சுக்கலாமா?" .என்றதும் ஏதோ விளையாட்டு என்று நினைத்து அவர்களாகவே மகிழ்ச்சியுடன் 'சரி' என்றார்கள்.   பின்னாடி வரும் விளைவுகள் அவர்களுக்குத் தெரியவில்லை.    "காலைல எந்திரிச்சு, மூஞ்சி கழுவி, பிரஸ் பண்ணி பெட்சீட் மடிச்சு போட்டீங்கன்னா,  ஒரு பாயிண்ட்".   எனக்கே,  'இது எல்லாத்துக்கும் ஒரு பாய்ண்டா தானா?'  என்று தான் இருந்தது.  அவர்களே சரி என்று விட்டார்கள்.    
"அப்புறம் பூச்செடிக்கெல்லாம்  தண்ணி ஊத்தணும்.  அதுக்கு ஒரு பாயிண்ட்.  கழுவிய  பாத்திரமெல்லாம் அங்க அங்க எடுத்து வச்சீங்கன்னா அதுக்கும் ஒரு பாய்ண்ட்"   நம்ம டிபார்ட்மெண்ட்டெல்லாம் நைசாக சேர்த்துக் கொண்டே வந்தேன்.     "அப்புறம் அம்மாவுக்கு  என்ன ஹெல்ப் பண்ணுனாலும்  ஒரு பாயிண்ட்"  (பஞ்சாயத்து வந்துடக்கூடாது).. "நீயே தூங்க போறதுக்கு முன்னாடி எவ்வளவு பாயிண்ட்னு சொல்லிரு." இருவரும் ரொம்பவும் உற்சாகம் ஆகிவிட்டார்கள்.  


இரண்டு மூன்று நாட்கள் சென்றது.  அவர்களே இரவு எத்தனை புள்ளிகள் எடுத்தார்கள் என்பதைக் கூறினர்.    அவர்கள் சொல்வதைக் கொண்டு அந்தந்த  நாட்களுக்கான  1 ரூபாய் கொடுத்தேன்.   புள்ளிகள் சற்று கூட குறைய இருந்தாலும் கொடுத்தேன்.    இன்னும் இதை செம்மைப்படுத்த,  "ஒரு நோட்ல உங்களுக்கு எதற்கெல்லாம் பாயிண்ட் வேண்டும் என்று யோசிக்கிறயோ, அதெல்லாம் வரிசையா எழுதுடா" 


ஒரு பத்து பன்னிரண்டு சிறு சிறு வேலைகளை எழுதி வைத்துக் கொண்டார்கள்.   அதில் குறிப்பாக டிவி நேரத்தை குறைத்தோம்.  "டிவி ஒன்றரை மணி நேரம் பாத்தீங்கன்னா.. 2 பாயிண்ட்.   மூன்று மணி நேரம் பாத்தீங்கன்னா ஒரே பாயிண்ட்  தான்...   அதுக்கு மேல போயிருச்சுனா பாயிண்ட் இல்லை, சரியா?"     ரெண்டு பாயிண்ட் கிடைப்பதால், சரி என்பதற்கான தலையாட்டல் உற்சாகமாக வந்தது.  

லிஸ்ட் போட்ட மறுநாளே அவர்களைப் பொறுத்த அளவில் சிக்கல்.  "அப்பா, இன்னிக்கு நான் 8 பாயிண்ட்.  6 பாய்ண்ட்டுக்கு ஒரு ரூபா.  மீதி ரெண்டு பாய்ண்ட்ட என்ன பண்ணலாம்.  அதுக்கு எவ்வளவு இன்னிக்கு?" என்றாள்.    " மீதி பாயிண்ட நாளைக்கு  சேர்த்திக்க, அவ்வளவு தான்" 


இப்படியா ஆரம்பித்து  நல்லபடியாக சென்று கொண்டிருந்தது.   டிவி முற்றிலும் குறையவில்லை என்றாலும், தொடர்ந்து மணிக் கணக்காக பார்ப்பது குறைந்து விட்டிருந்தது.   சில உருப்படியான வேலைகள்  நடக்க ஆரம்பித்தது.  


இரண்டு  மூன்று நாட்கள் கழித்து சாப்பாட்டு  நேரத்தில் டிவி பார்ப்பதை நிறுத்த இன்னொரு புள்ளி கொடுத்தோம்.    சில நாட்கள் கதைகள், சில நாட்கள் அட்லாஸ் விளையாட்டு என ஓடும். அட்லாஸ் என்பது  "வாட் பிக்சர்" போல ஊர்களின் பெயர்கள்.  முடியும் எழுத்தில் தொடர வேண்டும்.  இது கொஞ்சம் அனைவருக்கும் பொதுவாக இருந்தது.   இப்போதைக்கு சினிமா பெயர்கள் அவ்வளவாக அவர்களுக்குத் தெரியாது.     
     
அப்படித்தான் அன்று கொள்ளுப்பருப்பு. 


"சரி வாங்க.. தட்டெல்லாம் எடுத்து வைங்க.. டிவி  பாக்கமாக சேர்ந்து சாப்பிடுவோம்" 
"ஓகே"  என வந்து சேர்ந்து விட்டார்கள்.  


"இந்த கொள்ளு பருப்ப எப்படி சாப்பிடனும் தெரியுமா?"
" "
"சோறு போட்டு.. அதுமேல கொள்ளுப்பருப்பு போட்டு.. நடுவுல ஒரு பெரிய குழி பண்ணனும்.   குழி நம்பர வரைக்கும்  நல்லெண்ணெய் ஊத்தி, நல்லா பெசஞ்சுக்கணும். இப்ப வாய்க்கு அளவா உருண்டை பிடிச்சு வெச்சுக்கணும்.   இப்போ ஒரு உருண்டை எடுத்துக்குங்க.   இந்த உருண்டைய யாருக்குக்  குடுக்கலாம்?"
" " அமைதி 
"உங்களுக்கு யாரு ரொம்ப பிடிக்கும்?"  
"தியா"
"சரி,  தியாவுக்கு ஒரு ஆப்பு போட்டுக்குங்க"
"சென்னைல  தான தியா  இருக்கா... எப்படி கொடுக்கறது?"  இந்தமாதிரி லாஜிக்கானா  கேள்வியெல்லாம் நாம் கேட்டிருப்போமா? எனத் தெரியவில்லை.   
"அவுங்க பேர சொல்லிட்டு நாம போட்டுக்கணும், அது அவங்களுக்கு போய் சேர்ந்துடும்"
"ஓகே"
"ஆஆப்" 


ஒருவழியாக முதல் உருண்டையின் சுவையை உணர்ந்து, மெதுவாக மென்று முழுங்க ஆரம்பித்தார்கள்.   இதற்கிடையில் எனக்கு, பசி தாங்க முடியாமல் இன்னோர் உருண்டையும் நைசாக போட ஆரம்பித்தேன்.  


"அப்புறம் அடுத்த வாய் யார்க்கு? "
"அம்மாக்கு"


 "இங்க இருக்கறவங்களுக்கு கொடுக்க தேவையில்லை, சரி  இருந்தாலும் பரவால்ல,  ஆஆப் போட்டுக்குங்க" 


அடுத்தடுத்து அப்பா, அம்மாயி, ஆயா, தாத்தாக்கள், ஜனனி அக்கா, அத்தை, மாமா என  உருண்டைகள் காலி ஆகி இருந்தது.  


கொரோனா ஊரடங்கில் இந்த பாய்ண்ட் சிஸ்டம், கொள்ளுப் பருப்புடன் நன்றாகவே வேலை செய்ய  ஆரம்பித்துள்ளது. எப்பொழுதுமே சாப்பாட்டுத் தட்டில் ஒரு வாய் சோறு வைத்து விடும் பழக்கமும் உண்டு.  சமுத்திரக்கனியாக மாறி அதற்கும் விளக்கம் கொடுத்து அதுவும் குறைந்து உள்ளது.    இதற்கு  முன்பு சோறு ஊட்டிக் கொண்டிருந்த அந்த "லிட்டில் சிங்கம்" மற்ற நேரங்களுக்கு  அளவாக சென்று விட்டான்.  சாப்பிட்டு முடித்துவிட்டு  "அப்பா, காத்தால கோட்டா ஹால்ப் ஏ ஹவர்க்கு அந்த அரை மண்டையன  பார்த்துக்குறோம்" என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். 


அவர்களாகவே சாப்பாட்டுத் தட்டை எடுத்து வைத்துக்கொண்டு கதைபேச, விளையாட, ஏதேனும் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளார்கள்.  கூடவே டிவிக்கான நேரம் குறைந்து விட்டதால் சமையல் உதவிக்கும்(?) வந்து விடுகிறார்கள்.   ஒவ்வொரு வேளையும் வேறு வேறு விதமாக அவர்களுக்கு சென்றுகொண்டு உள்ளது, கூடவே நமக்கும்.  சின்னச்சின்ன மாற்றமும், முயற்சியில் தான் உள்ளது.  ஊரடங்கு உங்களுக்கு எப்படி?  

Wednesday, April 01, 2020

பெங்களூரில் கொரோனா -2


அதிகாரப்பூர்வமாக பெங்களூரில்  மூன்றாவது  வாரம் வீடடங்கி இருத்தலில் உள்ளோம்.  மார்ச் 10 பெங்களூரின் முதல் கொரோன நபர் ( இந்தியாவின் 'Patient 51') மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   அந்த வாரத்தின் சில நாட்கள் பயத்தோடு அலுவலகம் சென்று வந்தோம்.   அடுத்த திங்கள் முதல்  வீடு மட்டுமே. கர்நாடக அரசும் அதன் பிறகு பெங்களூரை ஊரடங்கின் கீழ் கொண்டு வந்துவிடுகிறார்கள்.  இப்படியாக பிரதமர் ஊரடங்கை  அறிவித்த 24ம் தேதிக்கு,  முன் கிட்டத்தட்ட ஒருவாரம் முன்னதாகவே இங்கு வீட்டினுள் உள்ளோம்.     

தற்பொழுது இங்கு  ஒரு ஆறுதல் செய்தி.   முதலில் கோரோனோவுக்கு பாதிப்படைந்த  'Patient 51',  2666 பேரை மறைமுகமாகப் பாதித்ததாக கர்நாடக அரசு கூறியிருந்தனர்.   அவரின் மனைவி மற்றும் குழந்தையைத் தவிர வேறு யாருக்கும் அவர் தொற்றை இதுவரை அளிக்கவில்லை.  இந்த ஆறுதல்,  கலவரமடைந்து இருந்த எங்களை சற்று ஆசுவாசமடைய வைக்கிறது.   இவர் பெங்களூர் கொரோனா தொற்றுக்கு நல்லவிதமான நிகழ்தகவின் (best  case) உதாரணம்.  ஆனால் முன்பே கூறியது போல, தென் கொரியாவின் 'patient  31'  போல மோசமான  நிகழ்தகவாக (Worst case)  இருந்திருந்தால்,  இங்கு நிலைமையை கற்பனை செய்ய முடியவில்லை.  நிலைமை மிக மோசமாக போய்  இருக்கும்.       


இரு வாரங்களுக்கு முன் இதனைப் பற்றி எழுதும்பொழுது,
தமிழ்நாடு - 0
கர்நாடகா - 1
யுகே  - 396

இன்றைய நிலைமை நமக்கே தெரியும்.  பல மடங்காக  வேகமாக பரவி வருகிறது.  
        

தமிழத்தில் நேற்றும்,  இன்றும்  இரு மடங்குகளாக அதிகரித்துள்ளது.   இத்தோடு  முடிந்துவிடக் கூடாதா என்று எண்ண  வைக்கிறது.  கூடவே  அச்சத்தையும்  விளைவிக்கிறது.    திடீரென அதிகப்படியான எண்ணிக்கையில்  ஈரோட்டுடன் நேற்று திருநெல்வேலியும், நாமக்கலும்  சேர்ந்து கொண்டது.    இன்று கோவையில் சட்டென அதிகரித்துள்ளது.   இந்திய அளவில் தமிழ் நாடு மூன்றாம் இடத்துக்கு நகர்ந்துள்ளதும் அதிர்ச்சி.   தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம், நாமக்கல், திருநெல்வேலியில் பரவ மிக  முக்கிய காரணமாக டெல்லியில் நடைபெற்ற தப்லிக் மாநாடு என்பது மேலும் அதிர்ச்சித் தகவல்.  இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் கணிசமாக ஆந்திரா , தெலுங்கானாவிலும்  கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார்கள் என இங்குள்ள நண்பர்கள் கூறுகிறார்கள்.  இந்த இக்கட்டான நேரத்தில், மார்ச் முதல் வாரத்தில் நடைபெற்ற  இந்த மாநாட்டிற்கு  எதற்காக அனுமதி அளித்தார்கள் என்பது தெரியவில்லை.     

பிரதமர் அறிவித்த ஊரடங்கை ஒருவாரம்  கழித்து உற்று நோக்கினால், இதுவும் டிமானிடைசேஷன் போல பின் விளைவுகளை யோசிக்காமல் எடுத்து விட்ட முடிவோ என்றும் தோன்றுகிறது.  பல இடங்களில் கட்டிட மற்றும் கூலி தொழிளார்கள் உண்ண உணவு இல்லாமல், சொந்த ஊருக்கு நடை பயணமாக திரும்பும்  காட்சி கலங்கடிக்கிறது.  குழந்தைகளுடன் நடந்து வரும் பெண்கள், நம் நாட்டின் ஏற்ற தாழ்வை பொட்டில் அடித்தாற்போல உணர்த்தி விடுகிறார்கள்.  இந்த மனிதர்களுக்கும் பயத்தைப் போக்கி  அங்கங்கு இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளை  உதவ சொல்லி கொஞ்சம் மனிதத்தையும் அரசு காட்டி இருக்கலாம்.  பயப்படாமல்  இருக்க இந்த விதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என தெளிவாக தெரிவிக்கலாம். 

தமிழக அரசு இந்த விஷயத்தில்  மிகத்தீவிரமாக வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.  பாராட்ட  வேண்டிய ஒன்று.  சமூக வலைத்தளங்களை நல்ல விதமாக பயன்படுத்தி மாவட்ட ஆட்சியருக்கு நேரடியான  உத்தரவுகள் நடக்கிறது.   கூடவே வேறு மாநில முதல்வர்களுக்கும், அங்கங்கு தவிக்கும் தமிழ் மக்களைக் காக்க நடவடிக்கை எடுக்கிறார்கள்.   கொரோனாவிற்கு எதிரான போரை வழி நடத்தும் மருத்துவர்களின் பணியைப் பற்றி கூறத் தேவையில்லை.   அத்தோடு காவலர்களின் பணி  மகத்தானது. ஊரடங்கை  மீறுவோருக்கு தோப்புக்கரணம், முட்டிங்கால், கை நீட்டி வைத்தல், உறுதிமொழி எடுக்க வைத்தல்  என வித விதமான தண்டனைகள் பள்ளி காலத்தை நினைவு படுத்துகிறது.   விதிமீறும் பொது மக்கள் சிலரின் ஆணவப் பேச்சுக்கள் அவர்களை லாடம் காட்டினால்  தான் என்ன என நமக்கே பொறுமை போகிறது. 

இதில் கவலை கொள்ளும் விஷயமாக இருப்பது  ஒத்துழைப்பு கொடுக்காமல் இருக்கும் மக்கள். 
சென்ற ஞாயிறு இறைச்சிக்கடையில் குழுமியிருந்த எதனை உணர்த்துகிறார்கள் என்று தெரியவில்லை இன்னும் இவர்கள் கொரோனாவின் 'பிரியத்தை' உணர்ந்ததாக தெரியவில்லை.  இந்தியாவின் கொரோன புள்ளி விவரத்தைப்  தற்பொழுது பார்க்கும் பொழுது  அது 4, 5 மையப் புள்ளிகளை உருவாக்கியுள்ளது.   சென்ற வாரத்தில் கிளஸ்டர் எதுவுமே இல்லாமல்  இருந்தது ( பார்க்க சுட்டி).   மேலும் மையப்புள்ளிகள் உருவாகாமல் இருக்க நம்மால் இயன்றது  வீட்டில் அடங்கி இருந்து முழு அளவில்  அரசுக்கு ஒத்துழைப்பு தருவது மட்டுமே.  இது மட்டுமே நம்மால் அரசுக்கு  தற்போதைக்கு உதவ முடியும்.    


இதே நேரத்தில் உலகெங்கும் அடுக்கடுக்காக  நோய்த்தொற்று பரவி வருகிறது. அப்பொழுது களத்தில் இல்லாத அமெரிக்காவை  இப்பொழுது கொரோனா மையம் கொண்டு உள்ளது.   இத்தாலியில் இப்பொழுது இறங்கு முகம்.   சீனா  நான்கு மாத கடும் போராட்டத்திற்குப் பிறகு எந்த தொற்றும் இப்பொழுது இல்லை என அறிவித்து  அவர்களின் வுகாண் நகரத்தின் வௌவால் மார்க்கெட்டை திறந்திருக்கிறது.    சைனா வைரஸ் என்று கூறிக்கொண்டு இருந்த டிரம்ப் கொரோன  வைரஸ் என கூற ஆரம்பிக்கிறார்.   இவர்களின் ஆடுபுலி ஆட்டம்  நமக்குத்தான் புரிபடவில்லை. 

கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு நாட்கள் இருக்கும் என்பது யாருக்குமே தெரியவில்லை.   உலகின்  பொருளாதாரம்  எவ்வளவு மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து மீண்டு வரும் என்பது யாருக்கும் புரியாத ஒன்று.   ஜெர்மனியின்  நிதியமைச்சர் இதன் காரணமாக மன உளைச்சல் அடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஒவ்வொரு அரசாங்கமும் இந்த நேரத்தில் எடுக்கும் முடிவுகள், அதனைப் பற்றிய விளைவுகள் பொருளாதார ரீதியாக தெரிய சில மாதங்கள் ஆகும்.    அவற்றை நாம் பிற்காலங்களில் வரலாறாக மட்டுமே பேச முடியும்.   இப்பொழுது நாம் பத்திரமாக இருப்பது மட்டுமே நம் கையில். 

இன்னும் சற்று கூர்நோக்கிப் பார்த்து இன்னும் ஒரு சில மாதங்களுக்கு நம் வாழ்விற்க்கு தேவையான பொருள்  இருப்பை  வைத்துக் கொள்வது  அவசியம்.    சிக்கனமான  நடைமுறைகளைக் கையாள  வேண்டும். இதன் பாதிப்பினால் ஆறு மாதம் கழித்து என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது.  பொருளாதார வீழ்ச்சியால் என்ன மாதிரியான பின்விளைவுகள்  வரும்,   அது ஒவ்வொருவருக்கும் பாதிப்பை எப்படி ஏற்படுத்தும் என்பது நம்மால் இப்பொழுது எண்ணிப் பார்க்க முடியாது.    இதையொட்டி நேற்று முன்தினமும் ட்விட்டரில் பஞ்ச காலத்தைப் பற்றிய ஒரு விவாதம் சென்று கொண்டிருந்தது.   விவசாயம் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த அன்றைய காலத்தில் பஞ்ச நேரங்களில் கற்றாழை கிழங்குகளையும்,  மரவள்ளிக்கிழங்கும்  தேடி எடுத்து மக்கள் சாப்பிட்டது  வரலாறு.   கண்டிப்பாக விலைவாசி ஏறலாம்.  பொருள் தட்டுப்பாடு வரலாம்.  இன்னும் மூன்று மாதங்களுக்கான தேவையான அத்தியாவசியமான பொருட்களை அவரவர் அளவில் தற்காத்து வைத்துக் கொள்ள வேண்டும் என கருதுகிறேன்.   இப்போதும்,  இன்னும் கொஞ்ச காலத்திற்கும் மினிமலிசம் எனப்படும் எளிய வாழ்க்கை முறைக்கு பழகிக்கொள்தல் நலம்.   இப்பொழுது இருந்தே அதற்கான ஆயுதத்தை மேற்கொள்ள வேண்டும்.  

இவை எப்படியாக இருப்பினும் தற்போதைய நமது நிலைமை மனதினை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது மட்டுமே.   பலரும் காலை, மாலை மட்டும் ஒரு பத்து, இருபது நிமிடங்கள் செய்தியை பார்க்க பரிந்துரைகின்றனர்.   திரும்பத்  திரும்ப கொரோனாவில் உழன்று கொண்டிருந்தால்,  தேவையில்லாத  மன உளைச்சல்  வரும் என்கிறார்கள்.   குறிப்பாக குடும்பம் இல்லாமல் தனியாக இருக்கும் பலர்.   
  • யாராவது சில  மக்களோடு தினமும் பேசுங்கள்;  சும்மாவேனும் பேசுங்கள்;  அது உங்களது மன உளைச்சலில் இருந்து விடுதலை கொடுக்கும். அது உங்கள் நண்பர் ஆகவும் இருக்கலாம், தூரத்து உறவினர் ஆகவும் இருக்கலாம்.  எப்பொழுதோ சந்தித்த நண்பராகவும் இருக்கலாம்.  
  • இந்த நேரத்தை குடும்பத்தோடு, குழந்தைகளோடு எப்படி செலவிட வேண்டும் என்பதை திட்டமிட்டு செயல்படுத்தலாம். 
  • புதிதாக இதுவரை செய்யாத ஒரு வேலையை செய்யலாம்.
  • தள்ளிப்போட்ட சில வேலைகளை முடிக்கலாம். 


இன்னமும் 21 நாட்களுக்கு பிறகு கோடை விடுமுறை கிடைக்கும் எங்காவது செல்லலாம் என்று நினைத்திருப்போர் தயவுசெய்து அமைதி காக்கவும்.   நமக்கு இந்த வருட  கோடை விடுமுறை என்பது கிடையாது.   குழந்தைகளை பதட்டப்படாமல் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்து அவர்களை முறைப்படுத்துவது நமது கையில் தான் உள்ளது.   இது ஒரு இக்கட்டான தருணம்.   அரசுக்கு மட்டுமல்ல, ஒவ்வொருவருக்கும்  இந்தத் தருணத்தை கடப்பது அவரவர்களிடம் மட்டுமே உள்ளது.   இதையும் தைரியமாக  கடப்போம். 


குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...