Sunday, March 10, 2019

கி.ரா வின் கதவு

கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராஜநாராயணன் அவர்களின் “கதவு” எனும் புத்தகம் ஒரு சிறுகதைத் தொகுப்பா அல்லது கட்டுரைத் தொகுப்பா என எனக்குத் தெரியவில்லை. அவர் இயல்பாக எழுதியிருப்பதை பார்க்கும் பொழுது, கதைத்தொகுப்பு போல தெரியவில்லை, உண்மைச் சம்பவங்கள் என்றே நினைக்கிறேன். ஒரு சிறு கிராமத்தில் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து கொண்டிருந்த சிறிய, பெரிய, எளிய, மனிதர்களின், அவர்களோடு உறவாடும் செல்ல பிராணிகளின் இயல்பான வாழ்க்கையை மாறாத மண் வாசத்தோடு நம் கண்முன் விவரிக்கின்றார். வழக்கம் போல அவரின் கதைக்களம் கரிசல் மண். "வாசிக்கும் வாசல்" நிகழ்விற்காக ஒவ்வொன்றாக படித்து உள்வாங்கிக் கொண்டே வருகிறேன், ஒரு கதை சட்டென எழுந்து உட்கார வைத்தது. "மாயமான்" எனும் தலைப்பில் உள்ளது. சரஸ்வதி இதழில் 1958 ஆம் வருடம் எழுதி இருக்கிறார். கிட்டத்தட்ட இருபது பக்கங்கள். கதை சுருக்கம் இதுதான்.


தினசரி செய்தித்தாள் வாங்கி அவரின் கடையில் போட்டாலும், படிக்கும் வழக்கமில்லாத செட்டியார், அவரின் பெட்டிக்கடைக்கு வரும் ஒருவர் படிப்பதிலிருந்து, அரசாங்கம் கிணறு வெட்ட 400 ரூபாய் பணம் கொடுக்கிறார்கள் எனும் செய்தியை தெரிந்து கொள்கிறார். செட்டியார் அவரின் புஞ்சை நிலத்தில் ஒரு கிணறு வெட்ட யோசிக்கிறார். சின்ன பெட்டிக்கடை, புஞ்சை நிலம், கூட்டுக்குடும்பம் என நிம்மதியான, பிரச்சனையில்லாத, சௌகர்யமான வாழ்க்கை.

சுதந்திரம் வாங்கிய பத்து வருடத்திலேயே அவரால் நேர்மையாக ரூ 400ஐ வாங்க முடியவில்லை அரசாங்கத்திடமிருந்து. அதனை வாங்க இன்று, நாளை என அலய விட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இடைத்தரகர் உள்நுழைகிறார். 400 ரூபாயில் நூறு ரூபாய் கொடுத்த பிறகு, அவருக்கு 300 ரூபாய் மானியப் பணம் வருகிறது. கிணறு வெட்ட ஆரம்பித்தவுடன் பணம் பத்தாமல் மேலும் 500 ரூபாய் கடன் வாங்குகிறார். பணம் படைத்த நாயக்கரிடம் செல்கிறார். இவர் கடன் கேட்டவுடன், நாயக்கர் சரி என்று சம்மதித்ததவுடன் செட்டியாருக்கு மகிழ்ச்சி. ஆனால் கி.ரா இவ்வாறு எழுதுகிறார் 'நாயக்கரின் கண் முன் செட்டியாரின் ஐந்து ஏக்கர் வந்து போனது' என்று. இதைவிட எளிதாக நாயக்கரின் கேரக்டரை சொல்ல முடியாது.

கிணறு வெட்டி முடிச்சாச்சு. நல்ல தண்ணீர். அதை ஊர் மக்களே வந்து குடிக்க எடுத்துக்கிறாங்க. ஆனாலும் பாசனத்திற்கு போதாத தண்ணீர். இன்னும் கொஞ்சம் அடி தோண்டினால் மட்டுமே பாசனத்துக்கு உதவும். கூடவே கமலையும், மாடுகளும் வாங்க வேண்டும். மீண்டும் நாயக்கரிடம் இன்னும் கொஞ்சம் கடன் வாங்குகிறார். நாயக்கர் ஏக்கருக்கான விலை கணக்கு போட்டு அடமானத்தில் வைக்க சொல்கிறார். குடும்பத்தினர் சம்மதத்தோடு கையெழுத்திட்டு நிலத்தை அடமானமும் வைத்து விடுகிறார். பத்திரத்திற்கும், உண்மை நிலவரத்திற்கும் இருக்கும் ரூபாய் முரணை கதையில் கி.ரா இயல்பாக பதிவு செய்துள்ளார்.

'சரி, சீக்கிரம் கடனை அடைக்கலாம், அதனால முதல் வருடம் மிளகு போடலாம்' என ஏற்பாடு செய்து முடிக்கையில், அரசாங்கத்தின் அறிவிப்பு பேரிடியாக உள்ளது. மானியம் வாங்கி கிணறு வெட்டி உள்ளவர்கள் மிளகு போன்ற பணப்பயிர்களை அறுவடை செய்ய மூன்று வருடம் தடை விதிக்கிறது. கையில் இருக்கும் காசை வைத்து கேப்பை பயிரிடுகிறார். இடைப்பட்ட காலத்தில் கடையில் வியாபாரம் படுத்து விடுகிறது. பயிரின் அறுவடை காலத்தில் கிணற்றில் தண்ணீரும் இல்லை, மழையும் இல்லை, தாது வருடப் பஞ்சம் என்கிறார்கள். நாயக்கர் முதல்வருட வட்டியை கட்ட சொல்கிறார். நகைகளை விற்று அந்த வருடம் கட்டி விடுகிறார். வட்சியினால் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக ஊரைவிட்டு ஆந்திராவுக்கும், தஞ்சாவூர் நோக்கியும் பஞ்சம் பிழைக்க செல்கிறார்கள்.

அடுத்த வருடம் கடனை கட்டமுடியாமல் ஊரைவிட்டு, நிலத்தை விட்டு, தாயை இழந்து குடும்பத்தோடு செட்டியாரும் வெளியேறுகிறார். அப்பொழுதும் பேப்பர் வாங்கும் பழக்கத்தை விடாத செட்டியார், ரயில் நிலையத்தில் வாங்கி அவர் இருக்கையின் பக்கம் வைத்திருக்கிறார். அங்கு வரும் பயணி ஒருவர் செய்தியை படிக்கிறார் 'கிணறு வெட்ட அரசாங்கம் கொடுத்த 400 ரூபாய் திட்டம் வெற்றி பெற்றதால் அந்தத் திட்டத்தை அரசாங்கம் நீட்டித்துள்ளதாக'.... பேப்பரைப் பிடுங்கி வெளியே வீசி விடுகிறார். இந்த இடத்தில் கட்டுரை/கதை முடிகிறது

ஒவ்வொரு கதைமாந்தர்களின் பெயர்களையும், பெயரின் பின் சாதியை போட்டுக்கொள்ளும் அன்றைய வழக்கப்படி எழுதியுள்ளார். அன்றைய காலகட்ட கதை அதனை நெருடாமல் செல்கின்றது. ஒவ்வொரு பெயரின் பின்னாலும் இருந்த சாதி தமிழகத்தில் மட்டும் எங்கே, எப்படி போனது (பெயரில் மட்டுமாவது) என்று தந்தை பெரியாரை யோசிக்க வைக்கின்றது.

ஒவ்வொரு இடங்களிலும் அந்தக் காலத்திய கிராமத்து சூழ்நிலை, அங்குள்ள மனிதர்கள், மக்களின் இயல்பான வெகுளித்தனமான வாழ்க்கை, கடன் கொடுக்கும் வசதி படைத்தவர்களின் மனநிலை, அரசு எந்திரம் என நெருடாமல் காட்சிப்படுத்திக் கொண்டே செல்கிறார்.


இது தவிர, இந்தப் புத்தகத்தில் மற்ற கதைகளிலும் சாதாரண மனிதர்களின் இயல்பான வாழ்க்கையை அழகான எழுத்தில் நெகிழச் செய்பவர், ஒவ்வொரு கதையிலும் சின்ன சின்ன சம்பவங்களில் அந்தக் காலகட்டத்திய அரசாங்க அலுவலர்கள் போக்கை சாடிக் கொண்டே அல்லது இயல்பாக விவரித்துக்கொண்டே சென்றிருப்பார். சுதந்திரம் அடைந்து பத்து வருடங்களுக்கு பின் எப்படி இருந்ததோ, அதுபோலவே கிட்டத்தட்ட கதை எழுதி 60 வருடங்களுக்குப் பிறகும், நிகழ்காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் கதை பொருத்துகிறது. அனேகமாக வினைத்தொகைக்கு உதாரணமாக கூறலாம்.. அரசாங்க இயந்திரம் அப்படியேதான் இருக்கின்றது அல்லது அதைவிட மோசமாகி இருக்கின்றது. அன்று போலவே இன்றும் அரசாங்கத்தின் திட்டங்கள், சாதாரண மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நன்மை பயக்கின்றனவா என்பது விடை தெரியாத கேள்வி. ஆசையை தூண்டும் அரசின் திட்டங்கள் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போடுகிறது என்பது இப்போதும், அப்பொழுது போலத்தான் போல.

யார் கண்டது, அன்று கரிசல் காட்டில் இருந்து தஞ்சைக்கு கிளம்பி வந்து விவசாயம் செய்தவர்கள் தான், சில பல தலைமுறைகளாக "சோழநாட்டில் சோறுடைத்து" நமக்குப் பசி ஆற்றிவிட்டு, இன்று ஹைட்ரோகார்பனால் துரத்தப்பட்டுக் கொண்டிருக்கலாம்.

இதுபோல நடு இரவில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் டிஜிட்டல் வாழ்க்கையோடு ஒட்டாமலிருந்த சாதாரண, விவசாய, எளிய, நடுத்தர மக்களின், சிறு குறு, குடிசைத் தொழில்களின் வாழ்க்கையை தடம் புரட்டி இருக்கலாம். மனிதர்களோடும், மண்ணோடும் இயற்கையோடும், வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தவர்கள், இன்று ஏதேனும் ஒரு நகரத்தில் செக்யூரிட்டியாகவோ, டிபார்ட்மெண்ட் ஸ்டோரிலோ, பிழைத்துக்கொண்டு இருக்கலாம்.

உலகமயமாக்கலுக்குப் பின், அன்று ஏர் பிடித்து, மாடு கன்னு வைத்து, நீர் பாய்ச்சி விவசாயம் செய்த வேளாண் குடியினரின் ஒரு வகையினர் மேலே படித்து வெளியேறி பெரு நகரங்களில் பொருளீட்டி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஊரோடு வாழும் பெற்றோர்கள், சில வருடங்களுக்கு ஒருமுறை வயலை நனைத்துவிட்டு செல்லும் வாய்க்கால் முறை தண்ணீருக்காகவும் அல்லது வானம் அழுகும் என்று எதிர் பார்த்துக்கொண்டு காய்ந்து கிடக்கும் நிலங்களை புரோக்கர்களிடமிருந்து பாதுகாத்துக் கொண்டு, அவர்களுக்குத் தேவையான உணவு வகைகளை மட்டும் பயிரிட்டுக் கொண்டு, ஆடிக்கொரு முறை அமாவாசைக்கு ஒருமுறை வருகை தரும் பேரக் குழந்தைகளை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கலாம்.

மற்றொரு வகையினர், இதிலிருந்து வேறுபட்டு விவசாயமே போதும் என்று திருப்தியுடன் அதிகம் படிக்காமல் பள்ளிப் படிப்போடு நிறுத்தி, தொடர்ந்து விவசாயத்திலேயே ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களின் குடும்பம், அன்று அவர்கள் இருந்த மிடுக்கோடு, செல்வச் செழிப்போடு இன்று இருக்கிறார்களா என்று உறுதியாகக் கூற முடியவில்லை. அவர்களின் மகள்களுக்கு எப்பாடு பட்டாவது திருமணம் செய்து வைத்திருந்தாலும், மகன்களுக்கு? இந்த படிப்பு வித்தியாசங்களாலும் விவசாயம் மட்டுமே வாழ்வு என்றும் இருந்தவர்களுக்கும், இருப்பவர்களுக்கும் பெண் தர மறுக்கும் சமூகம் தானே இது. அப்படியே கல்யாணமாகி இருப்போரும் சுற்றத்தாரின் வாழ்க்கைக்கு ஈடுகொடுக்க நேர்மையாக என்ன செய்வதென்று தெரியாமல், கொஞ்சம் கொஞ்சமாக நிலங்களை கைமாற்றிக் கொண்டு இருந்தவர்களும், கடன்பட்டு இறந்தவர்களும் கண்முன் வந்து போகிறார்கள்.

இந்தியாவின் GDPல் 18 சதவீதமும், 50 ℅ மக்களுக்கான வாழ்வாதரம் விவசாயத்தை ஒட்டியே உள்ளதாக புள்ளி விவரங்கள் வருகின்றன. விவசாயிகளின் பேரணி, தொடர் போராட்டங்கள், அவர்களுக்கான உரம் என்ற பெயரில் மானியம், இவைகள் உண்டு செய்யும் கடன், அதனால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் என பல கேள்விகளுக்கு என்ன தீர்வு என்பதை முன்னிருத்தாமல் மௌனமே அரசுகளிடமிருந்து. மௌனத்தின் சாட்சியாக நாமும்.




Wednesday, January 16, 2019

அணில் துள்ளி ஓடும் முன்றிலில்!

அடடா... 
நேற்றே வந்திருப்பார்களே..
இன்றும் வரவில்லை....
மூச்சுக்காற்றை வெளியே அனுப்ப முடியாமல் கதவு பூட்டப்பட்டே கிடக்கின்றதே..
என்னைக்  குளிப்பாட்டி
துடைத்து
'பவுடர்' இட்டு 
வேப்பிலையும், பூலப்பூடும்,  ஆவாரம் தலையோடு  காப்பு கட்டி இருக்க வேண்டுமே... 

காகம் வந்தமர்ந்துவிட்டு கரையாமல் போகிறதே..
சின்னஞ்சிறு பாதங்கள் துள்ளி விளையாடுமே
என் மார்மீது..
கீச் மூச்சென சிரிப்பொலி என் தோல் மீது பட்டு எதிரொலிக்குமே..
"வாங்க வாங்க" எனும் சத்தம் சுற்றாருக்காக கேட்டுக் கொண்டே இருக்குமே.. 
ஏன் ஒருவரையும் காணோம்...

திரண்ட மஞ்சள் கொத்தோடு பொங்கல் பானையும்.. அது
பொங்கி வழிந்தோடிய தடமும்...
தோகையோடு செங்கரும்பும்...
வண்ணக் கோலத்தின் நடுவில்
வாழை இலையும்.. அதன் நடுவே
ஆவிபறக்கும் பொங்கலுக்காக
அருகம்புல் சூடிய புள்ளாரும்
காத்திருக்கையில்....
நீர் விலாவி, 
பூ தூவி
சாம்பிராணி காட்டி
கற்பூரம் ஏற்றி முடித்து,
தவளைக்கு ஒதுக்கி...
பொங்கலை கொஞ்சமாக  எடுத்து
என் மீதும் சிந்தியும்
வாயில் இடும் அந்த அறும்புகள் 
எங்கே இன்னும் வரவில்லை..

இருப்பினும் என்ன....  
நாமே கொண்டாடுவோம்...
எறும்புகளின் தாரைகளால் இட்ட கோலத்தோடும்..
காகம் கொண்டுவந்த பொங்கலோடும்...
அணில் துள்ளி ஓடும் முன்றிலில்!!!

"பொங்கலோ பொங்கல்"

இப்படிக்கு
என் இல்லம் 
மொடக்குறிச்சி.
16-1-2019

குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...