Monday, March 08, 2021

பவானி செல்லாண்டி அம்மன் மாசி திருவிழா

 பவானி, செல்லாண்டி அம்மன் மாசி திருவிழா என்பது அந்த கோயிலின் திருவிழா மட்டும் அல்ல.  அதனை சுற்றி இருக்கும் சின்னச் சின்ன தெருக்களில் உள்ள அம்மன்களுக்கும் சேர்ந்ததே.   பலமுறை கலந்து கொண்டு இருந்தாலும், சேத்து வேசம் போடும் நிகழ்வைப்  பார்த்தது இல்லை. அதற்கான நேரமும் வாய்க்கவில்லை என்று தான் கூறவேண்டும்.  புதன்கிழமையில் பண்டிகை வருவதாலோ என்னவோ, தொடர்ந்து  மூன்று நாள் விடுமுறை கிடைக்காது என்பதால்,  புதன் மதியம் நடைபெறும் இந்த நிகழ்வை மட்டும் தவற விட்டுக்கொண்டு இருந்தேன். இம்முறை வீட்டில் இருந்து வேலை செய்ய வைத்த கொரோனாவிற்கு நன்றி.  

மற்ற ஊர்களின் அம்மன் திருவிழாவில் இருந்து, இந்த சேத்து வேசம் நிகழ்வு முற்றிலும் வித்தியாசமாக இருக்கின்றது.  இதுவரை நான் பார்த்த மாரியம்மன் திருவிழாக்களில் இந்த மாதிரியான நடைமுறை இருந்ததில்லை. தேர் வடம் பிடித்து இழுப்பார்கள், அக்கினிச்சட்டி எடுப்பார்கள், அழகு குத்திக்கொள்வார்கள், குண்டம் இறங்குவார்கள்,  கம்பம் ஆடுவார்கள்,  தெப்பத்தேர், மகந்தேர், மிரமனை வருதல் என்பகை தான்,  அனைத்து பக்கமும் நடைபெறும்.  ஒரு சில  நிகழ்வு மாறுபடும் அல்லது இருக்காது.   இங்கு மட்டும்தான் இவற்றோடு சேர்த்து,  இந்த சேற்று வேடமிடும் நிகழ்ச்சி உள்ளது. அது மட்டுமில்லாமல் சனி இரவு வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கும் லைட்டிங்கும் வேறு எங்கும் இல்லாத நிகழ்வு.  

இந்த சேற்று வேடமிடும் நிகழ்ச்சி வழி வழியாக நடந்து கொண்டு உள்ளதாக கூறுகிறார்கள்.  இப்பொழுது இதனை  சேற்ற்றில்  மட்டும் இடும் வேசம் என்று முற்றிலும்கூற முடியாது.   பல வகையான வண்ண வண்ண கலவைகளைத்தான்  உடல், முகம் என பூசி இருந்தார்கள்.  கிரிக்கெட் ஸ்டேடியத்தில் காணப்படுபவர்கள் போலவும்,  மாறுவேட போட்டிக்கு போவதுபோலவும், வேசமிட்டு அலப்பறை விட்டுக் கொண்டிருந்தார்கள்.  சுற்றுலா தளத்தில் சில்வர் பூசப்பட்டு தடி ஊன்றி நிற்கும் காந்தி தாத்தா போல நிறைய சில்வர் மனிதர்களையும் காண முடிந்தது.  ஜோக்கர் திரைப்படத்தில் வருவது போல டெரர்ராக முகத்தினை மாற்றியிருந்தார்கள்.  ஜோக்கர் வேடம் தான் அளவுக்கு அதிகமாக இருந்தது.  புலி, பெண், அம்மன் வேடமும் கூடவே.  இவை எல்லாவற்றையும் விட என்னை சட்டெனெ கவர்ந்தது தல ரசிகரின் முதுகில் எழுதப்பட்டு இருந்த வலிமை அப்டேட்.  ட்ரெண்டில் உள்ளார்கள். 





 


 


இந்த  ஊர்வலத்தில் ட்ரம்ஸ் அல்லது தப்பாட்ட அடியை கேட்க முடியவில்லை.  அது இல்லாமலே கோலாகலாமாக இருந்தது.  நிகழ்வு முக்கிய சாலையில் கிட்டத்தட்ட ஒன்றரை கிமீ தூரம், 3-4 மணி நேரம் நடைபெறுகிறது.  பவானியின் அந்த முக்கிய சாலை அன்று முடக்கப்பட்டு போக்குவரத்து வேறு பக்கம் திருப்பப்படுகிறது. நான்கு சாலைகள் சந்திக்கும் முக்கிய சந்திப்புகளில் நீண்ட நேரம் விளையாடுகிறார்கள்   வேடமிட்டர்வர்கள் முன்னால் நகர்ந்து நகர்ந்து செல்ல சாலையின் இருபுறமும் கூடியிருக்கும் மக்கள் உப்பு மற்றும் மிளகுடன்  சாக்லெட் அல்லது சில்லரையும் கூடவே சேர்த்து அவர்களின் மீது வீசுகின்றார்கள்.   சாக்லேட்டும் , சில்லரையும் எப்பொழுது சேர்ந்திருக்கும் என தெரியவில்லை.  



"அக்கா இந்த பக்கம் போடுங்க " 

"அக்கா வெறும் உப்பு மட்டும் போடாதீங்க சாக்லேட்டோட போடுங்க"...

 "காசு போட்டு போடுங்க"... 

"ஒருபக்கமாக போடாதீங்க"  என்று பலவிதமாக குரல்களில், விசிறும் பெண்களிடம் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். இந்த வேடம் இட்டவர்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இருந்தார்கள். வர்க்க வேறுபாடு, சாதி வேறுபாடு இல்லாமல் நடைபெறுகிறது.  ஆண்கள்தான் இந்த சேத்து வேசத்தை  ஏற்று இருந்தார்கள். கூடவே சிறுமிகள் சிலரும். வேடிக்கை பார்ப்பவர்களும் இந்த கலவையை வீசுபவர்களும்  பெரும்பாலும் பெண்களாக இருந்தார்கள்.  


அந்த காசையும், சாக்லேட்டையும் குதித்து 'கேட்ச்' பிடிப்பதில் தான் இதில் இருக்கும் த்ரில்.  போட்டி, விளையாட்டு, கொண்டாட்டம் என எப்படி வேண்டுமானாலும் கூறலாம்.  அந்த காசை இருவரும் பிடித்து விட்டால் அது எனக்கு, உனக்கு என்று அடிதடி. பலரும் அந்த நாணயத்தைக்  கைப்பற்ற மொட்டை வெயிலில், தார் ரோட்டில் அப்படியே  உட்கார்ந்து கொள்கின்றார்கள்.  நாணயத்தை அழுத்தி, நெட்டித் தள்ளி உரிமை கொண்டாடுகிறார்கள்.  இந்த பஞ்சாயத்து சில நிமிடங்கள் நடந்து ஒருவர் விட்டுக்கொடுக்கிறார் அல்லது வெற்றி பெறுகிறார்.  இவையாவும் அங்கங்கு, அக்கூட்டத்தின் ஊடே பலவாறாக நடந்து கொண்டு இருக்கிரது.  அதுதான் நிகழ்வின் எழுதப்படாத விதி.  


முன்பு குழந்தை இல்லாத பலரும் இந்த சேத்து வேச நிகழ்வில் சூறை விடுவதாக வேண்டிக்கொள்வார்களாம்.  வேண்டுதல் நிறைவேறினால் அவர்கள் சொந்தம் சூழ அந்தக் குழந்தையையும் சூறை விடுவார்களாம். குழந்தை அவர்கள் தெரிந்தவர்கள் கையில் கிடைக்காமல் வேறு ஒருவரின் கையில் கிடைத்து விட்டால் அவர்கள் கேட்கும் காசு பணத்தை இவர்கள் கொடுக்க வேண்டுமாம்.   இப்பொழுது அது தடை செய்யப்பட்டு உள்ளது.   சூறை விடுவது என்பது கூட்டத்தில் உப்பு மிளகை வீசுவது போல தூக்கி வீசுவது தான். 


என்னைப்போல வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த ஒரு அண்ணன், பக்கத்தில் இருந்த பெட்டிக்  கடையில் லிட்டில் ஹார்ட்ஸ் பிஸ்கட் ஒரு சரம்  வாங்கினார்.  அதனை ஒவ்வொன்றாக கிழித்து  அவர்களின் மீது சரசரவென ரம்மி விளையாடுகையில் சீட்டுக்கட்டிலிருந்து சீட்டு போடுவதுபோல விசிறினார்.  கூட்டத்தில் ஒரே ஆரவாரம்.  கூடவே மற்றொருவர் வேறு பிஸ்கட் பாக்கெட்களை  வாங்கி வீசினார்.  அடுத்ததாக  லேஸ் சிப்ஸ்.  சிலர் 'அண்ணா அண்ணா இங்கயே கொடுங்க' என அருகே வந்து அவரிடம் பிடுங்காத குறை.   ஒருவர் முழு லெஸ் சாரத்தையும் வாங்கிக் கொண்டு ஓட, அவரின் சக போட்டியாளர் அவரைத் துரத்தி அவரிடம் இருந்து பாதியை பங்கிட்டுக் கொண்டார். 


ஒரு பக்கம் தண்ணீர் பாட்டிலையும் வாங்கி விசிறி அடித்தார்கள்.  திடீரென ஒரு கடையில் இருந்து  துணிகளைத் தூக்கி போட்டார்கள்.  இன்னொரு பக்கம் இருந்து வாழைப்பழங்கள்.  என்ன ஒரு ஆனந்தம் அதனை குதித்துப் பிடிப்பவர்களுக்கு.  கலந்துகொண்டு இருந்த சிறுவனின் கையில் மஞ்சள் பை இருந்தது.  அதில் கிட்டத்தட்ட முக்கால்வாசி நாணயங்கள், சாக்லெட்டுகள் என நிரம்பி இருந்தது.  அவனும் கிடைத்தவற்றை பிடித்து மீண்டும் அந்தப் பையில் திணித்துக்கொண்டு இருந்தான்.  கிட்டத்தட்ட ஆரம்பித்த இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் வந்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.  இன்னும் சற்று தொலைவில் முடிந்துவிடும்.   


தார்ரோடு மதியம் ஒரு மணி வெயில் எதையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை.  வழிநெடுக இதுதான் அவர்களுக்கு விளையாட்டு. அவர்களுக்கு இது கொண்டாட்டமாகத் தான் இருந்தது.  இரு தண்ணிர் வண்டிகள்  பின்னால் வந்து கொண்டிருந்தது.  தண்ணீர் திறந்துவிட்டு சாலைக்கு அடித்துக் கொண்டு வந்தார்கள்.  அந்த வண்டியில்  வேசம் போட்டவர்களும் அவர்களின் வேசம் கலைந்து விடும் என குளித்துக் கொள்ளவில்லை. மற்றவர்கள் அந்த வண்டியின் அடியில் ஷவரில் குளிப்பது போல ஏகாந்தமாக குளித்துக் கொண்டிருந்தார்கள். முடித்துவிட்டு மீண்டும் கேட்ச் பிடிக்கும் ஆட்டத்திற்கு வந்தார்கள்.



இந்த ஊர்வலத்தின் எஞ்சின் போல ஒரு குழு.   அந்த  குழுவின் புகைப்படங்களைத்தான் முன்பு பதிவிட்டு இருந்தேன்.  அதில் ஒருவர் கிரிக்கெட் வர்ணனையாளர் போல ஒரு கையில் மைக் வைத்துக்கொண்டு சாலை ஓரத்தில் இருந்தவர்களிடம் வம்பு வளர்த்துக் கொண்டு இருந்தார்.  அந்த ஊர்வலத்தின் இறுதியில் குதிரை அதன் பின்னே பூக்களால் சோடிக்கப்பட்ட கரகமும், சாமியும் மெதுவாக வந்து கொண்டிருந்தது.  அதற்கு மட்டும் கயிற்றில் பாதுகாப்பு வளையம் வைத்து நகர்ந்துகொண்டு இருந்தார்கள்.  ஆனால் கூட்டம் என்னவோ இந்த வேஷம் போட்டு வந்தவர்களையும், சூறை பிடிக்க வருபவர்களிடமும்  தான் தேங்கியிருந்தது.   அவர்கள்தான் கொண்டாட்டத்தை உச்சகட்டமாக மக்களுக்கு அளித்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.   


வண்டி வெயிலில் நின்று இருந்ததால் கொதித்தது.  இந்த வெய்யிலிலும் மக்கள் உற்சாகமா இருந்தார்கள் .  .  இந்த ஊர்வலம் நடந்த பாதையின் பின்னே ஏதோ ஒரு கலவரம் நடந்து முடிந்தது போன்ற தோற்றம். கொரோனா ஆரம்பிக்கும் முன் சென்ற வருட நோம்பி  நடந்து முடிந்திருந்தது.  எனக்கு என்னவோ இந்த வருடம் கொரோனாவை சூரசம்ஹாரம் செய்துவிட்டு, இந்த பண்டிகை கொண்டாட்டித் தீர்த்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது    



செல்லாண்டி அம்மன் சேத்து வேசம் பார்த்துவிட்டு வீடு அருகே வந்தேன். 

"நோம்பிக்கு எப்ப வந்தீங்க" என்றார் பக்கத்து வீட்டு பாட்டி.  

"நேத்து நைட்டு வந்தேங்க" என்று தொடர்ந்தேன்  "எங்க யாரையும் காணோம்.  உங்க வீட்ல யாரும் வர்லீங்களா?. நோம்பிக்கு என்ன பண்ணிங்க?" என தொடர் கேள்வியை எழுப்பினேன்.  

 "யாரும் வரலைன்னு சொல்லிட்டாங்க.. வந்தாங்கன்னா எதையாவது சமைக்கலாம்.. எதோ என்னால முடிஞ்சத போடுவேன்..ஒருவேளையாவது வந்துட்டு போனாங்கன்னா நமக்கு நல்லா இருக்கும்" என்றார் வெளியில் சிரித்தபடி.  அவர்கள் மகன்/மகள் வீடு அரை மணிதூரத்தில் தான் இருந்தது.  


கயிற்றுக் கட்டிலை மல்லாக்க போட்டு கட்டிலின் இரண்டு கால்களுக்கும் சேர்த்து புதிய ஜமுக்காளத்தைக் கட்டி இருந்தார்.   கையில் ஊசி வைத்து கோர்த்துக் கொண்டு இருந்தார்.  சட்டென மடைமாற்ற  "என்ன பண்ணிட்டு இருக்கீங்க?" என்று கேட்டேன்.  

"தெரிஞ்சவங்க ஜமுக்காளத்துல பேர் எழுதி தர சொன்னாங்க.. இப்பெல்லாம் பண்ணறது இல்லை... சரி தெரிஞ்சவங்கன்னு தான்" என்றார்.   பவானியில் இது  ஒரு முக்கியமான தொழில்.  

 "இதுல ஒரு எழுத்துக்கு ரெண்டு அம்பது  குடுப்பாங்க. தமிழ், இங்லீஸ், இந்தி எதுவா இருந்தாலும் பேப்பர்ல போட்டு கொடுத்தா, நான் ஜமுக்காளத்துல எழுதிருவேன்" என்றார். ஒருவேளை 250ஐ ரெண்டு அம்பது என்று கூறுகிறாரே என நினைத்து "எவ்வளவுங்க?" என மீண்டும் கேட்டேன்   "ரெண்டு ரூவா அம்பது காசுங்க.  நான் ஆரம்பிச்சப்ப அப்பல்லாம் 40 பைசா இருந்தது.  படிப்படியா இப்ப ரெண்டு அம்பது ஆகிடுச்சு" என்றார்.  அதில் ஒரு 20 எழுத்து இருந்திருக்கும்.  50 ரூபாய் கிடைக்கும் 


வெளியே ஊரே கொண்டாட்டமாக இருந்த அந்த நேரத்தில், இது போல தனித்து இருப்பவர்கள் அன்றும் தனித்து தானே இருக்கின்றார்கள். 



No comments:

குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...