Wednesday, April 26, 2017

அன்னதானம்?

காலை 11 மணி. பெங்களூரின் புறநகர் வர்த்தூர் ஏரி. வழக்கமாக செல்லும் சாலையில் வாகனத்தில் சென்று கொண்டு இருந்தேன். சற்று குறுகலான சாலை, ஒருபுரம் ஏரிக்கரை, மறுபக்கம் புதர் மண்டிய ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிக்கொண்டு இருக்கும் நிலங்கள். வழக்கமாக அந்த சாலையை நெரிசல் இல்லாமல் கடந்து விடுவேன். இன்று வழக்கத்தை விட சற்று போக்குவரத்து நெரிசல், வாகனங்கள் ஊர்ந்து சென்றன. 'சரி, ஏதோ ஒரு வண்டி பிரேக் டவுன் ஆகியிருக்கும்' என்று நினைத்துக்கொண்டு, முன் ஊர்ந்த வாகனத்தை, பின் தொடர்ந்து ஊர்ந்தேன். சற்று தொலைவு சென்றதும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. மோர் அல்லது பானகம் குடித்துக்கொண்டும், தக்காளி அல்லது புளியோதரை சாதம் சாப்பிட்டுக்கொண்டு மக்கள் நின்றுகொண்டு இருந்தார்கள். ‘இங்க எதுக்கு இத கொடுத்துட்டு இருக்கிறாங்க’, என்று நினைக்கையில், புதர்களோடு சேர்ந்து ஒரு சிறிய கோவில், நல்ல அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
இந்தமாதிரி அன்னதானம் கொடுப்பதில் சில கேள்விகள் தொக்கி நிற்கின்றன...
* மோர் அல்லது பானகம் கொடுப்பதை கூட வெயிலுக்காக 'சரி பரவாயில்லை' என்று விட்டுவிடலாம், ஆனால் 11 மணிக்கு கொடுக்கப்படும் , உணவு உண்மையாக பசியை போக்கவா?
* அடுத்தது, plastic டம்ளர் மற்றும் தட்டுகளில் சாப்பிட்டுவிட்டு, through ball மற்றும் flying disk விளையாடிவிட்டு, சென்றுகொண்டு இருந்தார்கள்.
* அடுத்தது, இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.

அறம் செய விரும்பு ....அதில் .....நன்மை கடைபிடி !!!

தாய்மொழி பயிலல்


தாய்மொழி பயிலல் :
 ------------------------------
செய்தி : “பிற மாநிலத்தவரும் தமிழ் படிக்க வேண்டும்!" முதல்வர்கள் கூட்டத்தில், பிரதமர் மோடி பேச்சு.
அரசியல் தவிர்த்து இதை சற்று உள்நோக்கி பார்ப்போம்.
வேலை நிமித்தமாக ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலத்திற்கு சென்று வசிப்பவர்கள் இன்றைய கால கட்டத்தில் மிகவும் அதிகம். அவர்கள், தங்களது குழந்தைகளை தங்கள் தாய் மொழியில் படிக்க வைக்க நினைத்தாலும் முடியாத சூழலே 'இந்தி'யாவில் நிலவுகிறது. தாய்மொழிக்காக பலர் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்ப நினைத்தாலும், சொந்த ஊரில் அதே போன்ற, அதே ஊதியத்தில் வேலை கிடைக்குமா என்ற அச்சம், அங்கு திரும்ப நினைப்பதை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது. சொந்த மாநிலத்திலும் பெரு நகரங்களையே பணிகளுக்கு நம்பி இருப்பதாலும், சொந்த ஊருக்கும் பெரு நகரத்திற்குமான இடைவெளி மற்றும் போக்குவரத்தில் உள்ள சிக்கல் மற்றோர் காரணமாகவும் உள்ளது.
பெங்களூரை உதாரணமாக எடுத்துக்கொண்டால், பெங்களூரை ஒட்டியுள்ள சுமார் 200-300 கிமீ தொலைவில் உள்ள பெருவாரியான மக்கள் பெங்களூரையே வாழ்வாதாரமாக கொண்டு உள்ளார்கள். இது தமிழ்நாட்டிற்கு மட்டும் அல்ல.. ஆந்திர மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கும் பொருந்தும். இதே மனநிலையில் தான் சென்னையில் வாழும் பிற மாநிலத்தவரும் இருக்கக்கூடும் என கருதுகிறேன்.
மோடி அவர்களின் இந்த பேச்சு மனப்பூர்வமாக இருந்தால், மத்திய அரசு இதனை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த ஆவன செய்ய வேண்டும். மாநில அரசுகளும், மற்ற மாநில மொழிகளுக்கு மதிப்புக் கொடுத்து இதனை செயல் படுத்த முயற்சி எடுக்கலாம்.
படத்தில் இருப்பது பெங்களூரின் மைய பகுதியில் இருக்கும் அரசு தமிழ்ப் பள்ளி. இதன் பின்னால் அழகாக பொழிவுடன் இருப்பது திப்பு சுல்தான் சம்மர் பேலஸ்.
(சொந்த ஊருக்கு பக்கத்துல இருக்குன்னு பெங்களூர் வந்துட்டு, நாம படும் பாடு இருக்கே... 😥 )

மொடக்குறிச்சி கிருஷ்

27-April-2017

Sunday, April 09, 2017

நீரோடும் எங்கள் ஈரோடு

நீரோடும் எங்கள் ஈரோடு


"ஈரோடு வாசல்" வாட்ஸ் அப் குழுவில், கடந்த ஒரு சில வாரங்களாக
நடைபெற்ற"ஈரோடு மாவட்டம்" பற்றிய கட்டுரை எழுதும் போட்டியில் முதல் இடம் பிடித்த எனது கட்டுரை.
-------------------------------------------
நீரோடும் எங்கள் ஈரோடு
==========================

இரு ஓடைகளுக்கு மத்தியில் இருப்பதால் வந்த பெயர். பல காலங்களுக்கு பிறகு இரண்டு ரோடுகளுக்கு மத்தியில் இருப்பதால் ஈரோடு என்ற பெயர் வந்ததாக வரலாறு சொல்லுமளவுக்கு, நமது காலகட்டத்தில் உருமாறிக் கொண்டு உள்ளது.


நம்மூர் கலிங்கராயனில் குட்டிக்கரணம் போட்டு, அம்மாயி ஊருக்கு செல்லும்போது அங்குள்ள கீழ்பவானியிலோ, சுற்றியுள்ள கிணற்றிலோ குமுளி போட்டு நீச்சல் பழகியவர்கள் நாங்கள் என்றால், நமது பிள்ளைகள் கூட நம்ப மறுக்குமளவிற்கு நீர் வரத்து  இன்று இல்லை.   அவ்வாறே ஒரு போகத்திற்கு நீர் வந்தாலும், கழிவுகள் களைந்து முடிவதற்குள் நீர் வரத்து நின்று விடுகிறது.  

நாம் எதையும் மாசு படுத்தவில்லை, இந்த சாயத்தொழிற்சாலைகளே நமது நீரோடைகளையும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்துகின்றன  என்று  நம்பிக்கொண்டு இருக்கிறோம்.   ஆனால், நமக்கே தெரியாமல் நாமும் மிக முக்கிய காரணமாக இருக்கிறோம் என்பது கசப்பான உண்மை. 

சற்று பின்னோக்கி பயணம் சென்று, 1980 மற்றும் 90 களில் இருந்த ஈரோட்டையும், அதன் கிராமங்களையும் பார்ப்போம்.

பச்சை பந்தலிட்டு
மாயிலை தோரணம்கட்டி..
மாட்டு சாணத்தில் வாசல் மெழுகி
உறவினர்கள் ஒன்றாககூடி
வீட்டோடு திருமணம்.

தொப்புள் கொடி அறுபட
மூதாட்டி துணையோடு
மனையில் சுகமாக பிறந்த
மழழை...

பாட்டி மடியில் கதை பேசி
தாத்தாவுடன் விளையாடி
ஊரார்  ஊட்டி வளர்க்க
வளர்ந்து.

பல் துலக்க ஆலும் , வேலும்
தலை முழுக்க அரப்பும் , சீகைக்காயும்
மேனிக்கு கடலைமாவு
தமக்கை முகம் பூசும் மஞ்சள்
தலைவார தேங்காய் எண்ணெய்.
என்று தூய்மை பேணி.

காலை உணவாக கம்பங்களியும், ராகிக்கூழும்
புறக்கடையில் பறித்து வந்த கீரையும், காய்கறியும்
நம் பெயர் வெட்டிய சிறு போசியில் உண்ட  உணவு.
எவ்விடத்திலும் அள்ளி பருகும் நீரும்

காக்கி வெள்ளையோடு நாம்
கதர் வேட்டி சட்டை கட்டிய அப்பா
நோம்பி என்றால் மட்டுமே அதுவும் கட்டும் தாத்தா
நூல் சேலையில் கொசுவம் வைத்து கட்டும் பாட்டி
நோம்பிகளுக்கு மட்டுமே புடவை எடுக்கும் அம்மா

பள்ளிசெல்ல ஓட்டமும் நடையும்
வேலைக்கு போக ஒரு மிதிவண்டியும்
ஈரோடு டவுனுக்கு செல்ல சில டவுன் பஸ்களும்


மஞ்சள் பையுடன் கடைக்கு செல்லும் குட்டிகள்
செய்தித்தாளில் அன்போடு கட்டிக் கொடுக்கும் கடைக்காரர்

சிறு புண்ணுக்கு கசக்கி விடப்படும் செடி
வேது வைக்க வற்றிய வீக்கம்
தேடி இலை பறித்து
வைத்தியம் செய்யும் ஒரு பாட்டி

சுற்றம் சூழ குளிப்பாட்டி  
பச்சையில் பாடை கட்டி
ஆவரஞ்செடிக்கு பால் ஊற்றி
பாட்டுப்பாடி
விடை அனுப்பப்பட்ட  நம் தாத்தா...

இன்னும் இன்னும்  ....

ஏக்கத்தோடு கூடிய பெரு மூச்சு வருகிறது, இப்படி சின்ன சின்ன கிராமத்து மணமுடன் திகழ்ந்த ஈரோடை இன்று பார்க்கும் பொழுது
....

2017 க்கு வருவோம்

"பெருந்துறை ரோட்டுல X மண்டபம் எப்ப கிடைக்குதுன்னு பாருங்க , கல்யாணத்தஅப்ப வெச்சுக்கலாம்" சம்மந்தி வீட்டினர்.    

ரெண்டு பெரிய ப்ளக்ஸ் முன்னாடி வெச்சுரலாம். இந்த பக்கம் ஒரு கிலோ மீட்டர் அந்தப்பக்கம் ஒரு கிலோமீட்டர்  லைட் மின்னணும். மண்டபம் முழுக்க சீரியல் செட்.   ரெண்டு மூணு  TV  வெச்சு லைவ் டெலிகாஸ்ட்என்று ஒரு அரசியல் கட்சி கூட்டத்தையே மிஞ்சும் அளவுக்கான  தடபுடல்கள்.

சாப்பாட்டு விஷயத்தை பற்றி பேசவேண்டியதில்லை, அதில் வீணாக்கப்படும் உணவுகள் மற்றும் திண்பண்டங்கள்   என்ன  மாதிரியான  விளைவுகளை  நமக்கு விட்டு செல்கிறது என்பதை தெரிந்தும், ஒரு மரக்கன்றையோ, புத்தகங்களையோ பரிசளித்து நல்லவர்களாக காட்டிக்கொள்கிறோம்.


"ஏங்க நா எல்லார்த்துக்கிட்டயும் விசாரிச்சுட்டேன், ஈரோட்டுல அந்த X ஹாஸ்பிடல்ல இருக்குற, Y  டாக்டர் அம்மா ரொம்ப நல்லா பாக்குறாங்களாம், அவங்ககிட்ட போற எல்லோருக்கும் நார்மல் டெலிவரி ஆகுதாம், நாம அங்கேயே பார்த்துக்கலாம்"  ஈரோடு சுற்றுவட்டாரத்தில் இந்த குரல் ஒலிக்காத வீடுகளே இல்லை.  இயல்பாக உண்டானாலும் மாதமொரு செக்அப்க்கு, அங்கு சென்றால், நமக்கும் சுகப்பிரசவம் என்ற மூடநம்பிக்கையில், காலை முதல் மாலை வரை அந்த மருத்துவர் பார்க்கும் வரை    காத்திருந்து, வெயிலில் புழுங்கி, ஒரு வழியாக வீடு வந்து சேருவோம். 



இதுக்கு முன்னாடி ஒரு படலம் இருக்கிறது, அது செயற்கை முறை கருத்தரிப்பு.  பல மாவட்டங்களில் இருந்தும் இன்று ஈரோட்க்கு படையெடுத்து வருகிறார்கள் கருத்தரிப்பதற்கு.  பெருந்துறை ரோட்டில் புற்றீசல்போல் முளைத்துக்கொண்டு இருக்கும் கருத்தரிப்பு மையங்கள் இதற்கு சாட்சி சொல்லும்.  அவர்கள் கொடுக்கும் மருந்துகளும் மாத்திரைகளும், அதற்காக தள்ளுபடி விலையில் தெருவுக்கு, தெரு கிளைகள்  திறந்து கொண்டு உள்ள மருந்தகங்களும்ஒரு தனி கதை.


குழந்தை பிறந்தவுடனே தாய்ப்பால் கொடுக்கறாங்களோ இல்லையோ  hygenically packed  பால் பவுடர் வாங்க சொல்லும் மருத்துவர்கள்.   ஒவ்வொரு சில பல மாதங்களுக்கும் போஷாக்கு அளிக்கும்(அழிக்கும் ??)  ஊட்டச்சத்து  பானங்கள்.   வெளிநாட்டில்  இருந்து தருவிக்கப்பட்ட குழந்தைகளுக்கான  சோப்பு மற்றும் பவுடர். தடுப்பூசி என்ற பெயரில் நடக்கும் வணிகம்.  


பல் துலக்க விதவிதமான பற்பசைகள், 6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றப்படும் பிரஷ், ஷாம்பு இட்டு முடி உதிர்ந்த தலைகள், இருக்கும் முடிக்கும் சாயமிடும் நரைதலைகள்,  15 நாளில் அழகு தரும் முகப் பூச்சுக்கள் மற்றும் வண்ண வண்ண சோப்புகள், இவை களையும்போது, கழிவுகள் அனைத்தும் சென்று சேருமிடம் வேறு
எங்கும் இல்லை, கத்தி திரைப்படத்தில் விஜய், மேஜைக்கு அடியில் அண்டர் கிரௌண்ட் மேப்  பார்ப்பது போல பார்த்தால், பெரும்பள்ளம் ஓடை வழியாக காவேரிக்கு  சென்று கொண்டு இருக்கும்.


"X மெஸ்ல பரோட்டா மறக்காம வாங்கிட்டு வாங்க.  அங்கதான் கொளம்பு நல்லா இருக்குதாம்"  பாலிதீன் பையில் சுடசுட ஊற்றிக் கொடுக்கப்படும் குழம்பு புற்றுநோயின் ஒரு காரணி என்பதை அறியாத அப்பாவிப் பெண்மணிகள்.  அப்படியே அறிந்தாலும் எப்பவாவது என்று மாதம் சில  முறையாக பழக்கப்படுத்திக் கொண்டோம். 


"8 மணி ஆயிருச்சு, இந்த ஸ்கூல் வேன எங்க இன்னும் காணோம்" என்று புலம்பாத வீடுகள் குறைவு.  நம் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் அரசு பள்ளிக்கு, 5 கிலோமீட்டர்  நடந்து வந்து படிக்கும் குழந்தைகளும்,   நம் குழந்தைகள் 10 கிலோமீட்டர் தள்ளி  உள்ள தனியார்  பள்ளிக்கு  மூச்சுமுட்ட பள்ளிப்பேருந்தில்  பயணம் சென்று படிப்பதும் இயல்பான ஒன்றாக மாறியுள்ளது.

மேட்டூர் சாலையில் சமீபத்தில் துவங்கியுள்ள  துணிக்கடை.   ஒரு பேண்ட், சர்ட்  வாங்க சென்றேன்.  பில் போட்டு டெலிவரி வாங்கும் சமயம், ஒரு அம்மா  "2000 ரூபாய்க்கு மேல வாங்கிருக்கேன்அதனால 2 கட்ட பை கொடுங்க" என்று கேட்டுக்கொண்டு இருந்தார்.   டெலிவரி கொடுப்பவரும் முணுமுணுத்துக்கொண்டு இன்னொரு பையை தருகிறார்.   இந்த கட்டபை என்று சொல்லக்கூடிய பை, முன்பு போல சணலால் ஆனதல்ல.  எனக்கும்  ஒரு கட்ட பையில், காக்கி காகித கவரில்  போடப்பட்ட துணியை, வைக்க  முயல்கிறார்.  நான்  "கட்டப்பை வேண்டாங்க, அப்படியே குடுங்க " என்று சொல்லிவிட்டு, காக்கி காகித கவரில்  போடப்பட்டதுணியை  வாங்க, அவர்  என்னை  மேலும் கீழும் பார்க்கிறார்.  


80 மற்றும் 90களில் எவ்வளவு எளிமையான, இயற்கையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு  இருந்தோம்.   நாகரீகம்நவீனம் என்ற பெயரில், இன்றளவில் நிகழ்ந்துகொண்டு இருக்கும்இந்த ஒரு சில சம்பவங்கள் ,   நமக்கும், நமது சுற்றுப்புறத்திற்கும் நல்லவை எது, அல்லவை எது என்று பிரித்து அறியமுடியாத அளவில் நம் வாழ்வோடு இரண்டற கலந்துவிட்டதை  உணர்த்தும்.     



இன்றளவில் ஈரோட்டை மீட்டெடுக்கலாம் என்று நம்பிக்கையை கொடுத்துக்கொண்டு  இருப்பதுசில நல்  உள்ளம் படைத்த மனிதர்கள்சத்தமில்லாமல் ஈரோட்டில் எற்படுத்திக்கொண்டு இருக்கும் நீர்நிலை பாதுகாப்பு, இயற்கை பற்றிய விழிப்புணர்வுகள், நல்ல உணவுப்பழக்க  வழக்கங்களுக்கான முன்னெடுப்பு.   நம்மளவில் நாம் நமது ஈரோட்டையும் அதன் சுற்றுப்புறத்தையும்  எப்படி வைத்துள்ளோம் என்று, காலை முதல் மலை வரை நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் சிந்தித்து, நமது பங்களிப்பை அளிக்க முயற்சி எடுப்போம்.



புகைவண்டியில் வரும்பொழுது காவேரிப் பாலம் தடதடவென சப்தமிட்டு ஈரோடு வந்து விட்டதை நினைவு கூறும்.  காவிரியில் எவ்வளவு நீர் சென்றுகொண்டு உள்ளது என்று  நாமும் ஒவ்வொரு முறையும் எட்டி பார்ப்போம்.   காவிரி இன்னுமொரு பாலாறாக மாறாமல் இருக்க, நாம் மாறுவோம், நமக்காக.



மொடக்குறிச்சி கிருஷ்
22-March-2017




குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...