Showing posts with label Diary. Show all posts
Showing posts with label Diary. Show all posts

Sunday, April 25, 2021

ஈரோடும் தேர்தலும் - 2017 to 2021

2017 ல்  "ஈரோடு வாசல்" வாட்ஸ் அப் குழுவில், "ஈரோடு மாவட்டம்" பற்றிய கட்டுரையில் எழுதியவை முதல் இடம்  பெற்றது. இன்று 2021ல் எப்படி உள்ளது? 


கல்யாணங்களில் ஆடம்பரங்களை கொரானா மட்டுமே தற்போது தற்காலிகமாக  நிறுத்திவைத்து உள்ளது.  கொரானா மட்டுப்பட்டிருந்த கடந்த மூன்று, நான்கு மாதங்களாக, அந்த ஆடம்பரமும் கொஞ்சமேனும் வெளிப்பட்டுத்தான் இருந்தது.  அதே போல எளிமையை உணர்ந்தவர்கள், மிகவும் சிக்கனமாகவும், சிறப்பாகவும் நடத்தி முடித்து விட்டார்கள்.   நேரில் சென்றே பத்திரிகை வைத்து அழைக்க வேண்டும் என்று இருந்ததையும், கல்யாணத்திற்கு செல்லவில்லை என்றால் கோபித்துக்கொள்வார்கள் என்பதையும் கொரோன காலம் உடைத்துள்ளது.   சில நாட்கள் தங்கி சிறப்பிக்கும் நெருங்கிய வட்டத்தின் கூட்டமும் குறைந்துள்ளது.  மாஸ்க்(போடவில்லை என்றாலும்),  சானிடைசரோடு இது இன்னும் சில காலம் தொடர வாய்ப்பு உள்ளது.


மருத்துவதுறை பற்றி இருந்த பார்வை, எனக்கு மாறியுள்ளது. இப்பொழுது சிசேரியன் டெலிவரி என்பது பெரிய விஷயமாக பேசுபொருள் ஆவது இல்லை. நார்மலா? சிசேரியனா? எனும் ஒற்றைக் கேள்வியில் மக்கள் கடந்து விடுகிறார்கள்.  அதற்கு உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்வியல் மாற்றங்கள்  போன்ற பலவகை காரணங்களை உணர்ந்து இருக்கலாம்.  தமிழ்நாட்டில் குழந்தைப் பிறப்பில், குறைந்துள்ள இறப்பு விகிதம் இதன் பயனை பறைசாற்றும். அதேபோல செயற்கைக் கருத்தரிப்பு பற்றிய பார்வையும் மாறியுள்ளது.  அறிவியல், குழந்தை இல்லாதவர்களுக்கு போலிச் சாமியார்களிடம் சென்று ஏமாறாமல் இருக்க ஒரு அற்புதமான மேஜிக்கை கண்டுபிடித்துள்ளது.  வாடகைத்தாய் வழி பிறக்கும் குழந்தைகள் என  உலகம் அறிவியல்  பாதையில் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு நகர்ந்து கொண்டுதான் உள்ளது.  அதனைப்  பற்றி தனியாகவே எழுதலாம்.    


அதேபோல தெருவுக்கு தெரு மெடிக்கல்ஸ் இருப்பது, மருந்து, மாத்திரைகள் சட்டென சராசரி மக்களுக்கும் கிடைக்க இது உதவுகிறது.  நமது மக்களின் சராசரி ஆயுளை நீட்டித்துக் கொண்டு தான் உள்ளது. குறிப்பாக இந்த கொரோனா காலகட்டத்தில் அரசு மருத்துவமனைகள் பற்றிய தவறான புரிதல் மக்களிடம் மாறியுள்ளது.  தடுப்பூசிகளும் அதிவிரைவாகக் கண்டுபிடிக்கப்பட்டு மக்களை இறப்பிலிருந்தும், கொரானாவின் வீரியத்திலிருந்தும்  தடுத்துக்  கொண்டுள்ளது.  தடுப்பூசி என்பது வியாபார நோக்கம் அல்ல என என் பார்வை மாறியுள்ளது.   


பேஸ்ட் இல்லாமல், இந்த மக்கள்தொகைக்கு வேப்பங்குச்சி மட்டுமே ஈடு கொடுக்க முடியுமா என்பதும் சந்தேகமே.  அது போலத்தான்  சோப்பு, சாம்பு பற்றி பேசுவதும்.   தோல் மற்றும் சாயக்கழிவுகள் நிலை பெரிதாக மாறியுள்ளதாக தெரியவில்லை.  இந்த கழிவுகளை எல்லாம்  ஆறுகளில் கலக்க விடாமல், சுத்திகரிப்பு நிலையத்தை வைப்பதும், முறையாக மறுசுழற்சி செய்வதுமே தீர்வாகும்.  அதனை நோக்கித்தான் இருக்க வேண்டுமே தவிர பழங்காலத்திற்கு செல்வதாக இருக்க முடியாது. 


கொரோனா காரணமாக 8 மணிக்கு அடித்துப்பிடித்து குழந்தைகளை பேருந்தில் பள்ளிக்கு ஏற்றிவிடும் வேலை இப்பொழுது இல்லை.  ஆனால் குழந்தைகள் வீட்டிலேயே இருப்பதால், வேறு விதமான பிரச்சனைகளை கையாண்டு வருகிறோம்.  குறிப்பாக ஆன்லைன் க்ளாஸ் அழுத்தங்கள் பெற்றோருக்கு எனில், யாரையும் பார்க்காமல், விளையாடாமல் ஆன்லைனில் இருக்கும் குழந்தைக்கு வேறு மாதிரியான மன அழுத்தம். குழந்தைகளை எவ்வாறு முழுநேரமும் பிஸியா வைத்துக்கொள்வது என்பது ஒரு சவாலான விஷயமும்.  கொரோனாவிற்குப் பின் கல்வி முறை மாறுமா? ஓரிடத்தில் அமர்ந்து ஆசிரியர்கள் கூறுவதை கேட்பார்களா? என்பதெல்லாம் காலம் தான் பதில் கூறும்.   

   

புரோட்டா சாப்பிடும் பழக்கம் குறைந்தது போல தெரியவில்லை.  இன்றும் நெகிழிகளில் குழம்பு ஊற்றி எடுத்துச் செல்கிறார்கள்.  டீக்கடைகளில் டீ நெகிழியில் கட்டித் தருவது ட்ரெண்ட்ட்டாகவே மாறியுள்ளது. 

ஆனாலும் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல உணவுப் பழக்க வழக்கங்களுக்கு மாறிக்கொண்டிருக்கிறோம்.   அங்கங்கு நாம் பார்க்கும் செக்கு எண்ணெய்,  திணை, ஆர்கானிக் கடைகள் இதனை மெய்ப்பிக்கும்.  ஆனாலும் இதில் இன்னும் வெகு தொலைவு செல்ல வேண்டி உள்ளது.  


மாறாக நீர்நிலைகள் பற்றி கொஞ்சமேனும் மக்களுக்கு விழிப்புணர்வு வந்துள்ளது. இந்த சில வருடங்களில் நீர்நிலைகள் சீரமைப்பு, மரம் நடுதல் போன்றவை அதிகமாகவே நடைபெற்றது. அரசாங்கமே பல நீர் நிலைகளை சீரமைத்தும் உள்ளது.  சில இடங்களில் 100 நாள் திட்டத்தினை இந்த பக்கமும் மடைமாற்றி உள்ளது ஆரோக்கியமான விஷயம். 


ஆனால் கீழ்பவானி, காலிங்கராயன் கரையில்  அல்லது ஏதேனும் நீர்நிலைகளை ஒட்டி, சென்ற இடங்களில், என்னை வருத்தப்பட வைத்த விஷயம் ஒன்று உண்டு. அது அங்கங்கு கிடந்த பாட்டில்கள்,  கூடவே இரண்டு மூன்று பிளாஸ்டிக் டம்ளர்கள் மற்றும் கோக் பாட்டில்கள் அல்லது வாட்டர் பாக்கெட்டுகள்.  வாய்க்காலின் கரையில் ஒரு கிலோமீட்டருக்கு சென்று வந்தால் தெரியும்.  பத்து இருபது அடிக்கு ஒரு குவியலாகவும் அல்லது எங்கெல்லாம் நிழல் இருக்கின்றதோ அங்கும், சமூகப் பொறுப்பு  துளியும் இல்லாத குடிமகன்களின்  இந்த தடயங்களை காண முடிந்தது.  'ஐயா, நீங்கள் குடியுங்கள் ஆனால் இந்த பாட்டிலை எங்காவது ஒரு இடத்தில் போட்டுச் செல்லலாமே'.   அரசேகூட அந்த பாட்டில்களை போடுவதற்கு தனியாக  குப்பைத் தொட்டியை அங்கங்கு வைக்கலாம் அல்லது பாட்டிலைத்  திருப்பிக் கொடுத்தால் டாஸ்மாக்கில் தள்ளுபடி அளிக்கலாம்.   பாட்டில்கள் மறுசுழற்சிக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும்.  கீழ்பவானி, காலிங்கராயன் வாய்க்காலின் இந்த பிரச்சினை தமிழ் நாட்டுப் பானையின் ஒரு சோறு தான். கடந்த அரசு படிப்படியாக டாஸ்மாக்கை குறைக்கவில்லை.  வரும் அரசும்  இதில் கைவைக்காது, ஆனால் இந்த பாட்டில் கழிவுகளை ஒழுங்குமுறைப் படுத்துமா?  


80க்கும்  2010க்குமான பல ஒப்பீடுகள் நகரம் Vs கிராமம் போலவே இருக்கும். 90க்கு பிறகான நகரமயமாக்கல் இவற்றிற்கு முக்கிய காரணம்.  ஆனால் இன்று  நகரத்தின் ருசியை அறிந்தர்வர்கள், நகரங்களை விட்டு வர முடியுமா என்பது கேள்விக்குறி.  அதற்கு மருத்துவ காரணங்கள் தவிர, ஊர்ப்பக்கம் இன்றும் நிலவும் ஏற்ற தாழ்வும், பெண்களுக்கு நகரத்தில் கிடைக்கும் ஒருவித ∴பிரீனஸ்,  இன்னும் வேறு பல காரணங்களும் அடக்கம்.  ஆனால் கிராமங்கள் இப்பொழுதும் இயற்கை, உறவு, நட்பு என வேறு மாதிரி அழகாக உள்ளது. 


ஈரோடு மாவட்டம் பற்றிய கருத்து இப்படி மாறி இருக்க 2019ல் எழுதிய தேர்தல் பற்றிய கட்டுரை, மற்றொரு விதமாக மாறி உள்ளது.  பாராளுமன்றத் தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் இடைப்பட்ட காலம் வாக்காளர்களும் ஏற்றமே.  சென்ற தேர்தலில் அந்தக் கட்சியின் வாக்கு வங்கிகளுக்கு மட்டுமே பணம் கொடுத்தார்கள்.   ஆனால் இந்த முறை இரண்டு கட்சிகளுமே வாக்கு வங்கி தவிர, அனைவருக்கும் பணம் கொடுத்துள்ளார்கள்.  மக்களும்  இரண்டு பக்கமும் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு எது பிடிக்கிறதோ அதற்கு குத்துவதற்கு தயாராக இருந்தார்கள்.  குத்தினார்கள்.  ஒரு சிலர் பணம் வாங்க மறுத்த சம்பவங்களும் நடந்தது.   


சில தொகுதிகள் எல்லாம் ஒரு மாத காலமாக பரிசுமழை பொழிந்துகொண்டே இருந்தது. புடவை, வேட்டி அவர்கள் குடும்பத்திற்கு தேவையானதை செய்து கொடுத்து உள்ளார்கள்.  'யார்க்கு ஓட்டு போட போறீங்க'  என்ற இருந்த  பேச்சு 'உங்களுக்கு ரெண்டு பக்கம் இருந்தும் வந்துடுச்சா' என்று மக்கள் மட்டத்தில் மாறி விட்டது.   


 90களில் கட்சியினர் கள்ள ஓட்டு போடுவது மட்டுமே இருந்தது.  இன்று அரசு மற்றும்  அரசியல்வாதிகள்,  அவர்களின் குற்றத்தை சரிசமமாக மக்களுக்கும் பங்கிட்டுக் கொடுக்கின்றார்கள்.  மக்களும் குற்ற உணர்வு இல்லாமல் அதனை வாங்கிக் கொள்கின்றார்கள்.  ஒரு வகையில் இதனைப் பார்க்கும் பொழுது, ஒரு சாமானியன் அரசியல்வாதிகளிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்க முடியுமா?  அவர்கள் செய்த எதிர்மறைச் செயலுக்குத் தானே கொடுக்கின்றார்கள்? தேர்தல் கமிஷனே இதனை கண்டு கொள்ளாமல்  யார்மீதும் வழக்கு பதிவு செய்யாத நிலையில் நம்  மக்கள் செய்வது சரிதானோ? 


மாற்றம்  ஒன்றே மாறாதது. காலத்தின் பாதையில் கவனித்து பயணிப்போம்.


பி.கு : 

2017 -ல்  "ஈரோடு வாசல்" வாட்ஸ் அப் குழுவில், "ஈரோடு மாவட்டம்" பற்றி எழுதி முதல் இடம் பிடித்த கட்டுரை.


https://tinyurl.com/yxju8tk5



2019-ல் பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் எழுதியது.  

https://tinyurl.com/n6kwcjma








Monday, March 08, 2021

பவானி செல்லாண்டி அம்மன் மாசி திருவிழா

 பவானி, செல்லாண்டி அம்மன் மாசி திருவிழா என்பது அந்த கோயிலின் திருவிழா மட்டும் அல்ல.  அதனை சுற்றி இருக்கும் சின்னச் சின்ன தெருக்களில் உள்ள அம்மன்களுக்கும் சேர்ந்ததே.   பலமுறை கலந்து கொண்டு இருந்தாலும், சேத்து வேசம் போடும் நிகழ்வைப்  பார்த்தது இல்லை. அதற்கான நேரமும் வாய்க்கவில்லை என்று தான் கூறவேண்டும்.  புதன்கிழமையில் பண்டிகை வருவதாலோ என்னவோ, தொடர்ந்து  மூன்று நாள் விடுமுறை கிடைக்காது என்பதால்,  புதன் மதியம் நடைபெறும் இந்த நிகழ்வை மட்டும் தவற விட்டுக்கொண்டு இருந்தேன். இம்முறை வீட்டில் இருந்து வேலை செய்ய வைத்த கொரோனாவிற்கு நன்றி.  

மற்ற ஊர்களின் அம்மன் திருவிழாவில் இருந்து, இந்த சேத்து வேசம் நிகழ்வு முற்றிலும் வித்தியாசமாக இருக்கின்றது.  இதுவரை நான் பார்த்த மாரியம்மன் திருவிழாக்களில் இந்த மாதிரியான நடைமுறை இருந்ததில்லை. தேர் வடம் பிடித்து இழுப்பார்கள், அக்கினிச்சட்டி எடுப்பார்கள், அழகு குத்திக்கொள்வார்கள், குண்டம் இறங்குவார்கள்,  கம்பம் ஆடுவார்கள்,  தெப்பத்தேர், மகந்தேர், மிரமனை வருதல் என்பகை தான்,  அனைத்து பக்கமும் நடைபெறும்.  ஒரு சில  நிகழ்வு மாறுபடும் அல்லது இருக்காது.   இங்கு மட்டும்தான் இவற்றோடு சேர்த்து,  இந்த சேற்று வேடமிடும் நிகழ்ச்சி உள்ளது. அது மட்டுமில்லாமல் சனி இரவு வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கும் லைட்டிங்கும் வேறு எங்கும் இல்லாத நிகழ்வு.  

இந்த சேற்று வேடமிடும் நிகழ்ச்சி வழி வழியாக நடந்து கொண்டு உள்ளதாக கூறுகிறார்கள்.  இப்பொழுது இதனை  சேற்ற்றில்  மட்டும் இடும் வேசம் என்று முற்றிலும்கூற முடியாது.   பல வகையான வண்ண வண்ண கலவைகளைத்தான்  உடல், முகம் என பூசி இருந்தார்கள்.  கிரிக்கெட் ஸ்டேடியத்தில் காணப்படுபவர்கள் போலவும்,  மாறுவேட போட்டிக்கு போவதுபோலவும், வேசமிட்டு அலப்பறை விட்டுக் கொண்டிருந்தார்கள்.  சுற்றுலா தளத்தில் சில்வர் பூசப்பட்டு தடி ஊன்றி நிற்கும் காந்தி தாத்தா போல நிறைய சில்வர் மனிதர்களையும் காண முடிந்தது.  ஜோக்கர் திரைப்படத்தில் வருவது போல டெரர்ராக முகத்தினை மாற்றியிருந்தார்கள்.  ஜோக்கர் வேடம் தான் அளவுக்கு அதிகமாக இருந்தது.  புலி, பெண், அம்மன் வேடமும் கூடவே.  இவை எல்லாவற்றையும் விட என்னை சட்டெனெ கவர்ந்தது தல ரசிகரின் முதுகில் எழுதப்பட்டு இருந்த வலிமை அப்டேட்.  ட்ரெண்டில் உள்ளார்கள். 





 


 


இந்த  ஊர்வலத்தில் ட்ரம்ஸ் அல்லது தப்பாட்ட அடியை கேட்க முடியவில்லை.  அது இல்லாமலே கோலாகலாமாக இருந்தது.  நிகழ்வு முக்கிய சாலையில் கிட்டத்தட்ட ஒன்றரை கிமீ தூரம், 3-4 மணி நேரம் நடைபெறுகிறது.  பவானியின் அந்த முக்கிய சாலை அன்று முடக்கப்பட்டு போக்குவரத்து வேறு பக்கம் திருப்பப்படுகிறது. நான்கு சாலைகள் சந்திக்கும் முக்கிய சந்திப்புகளில் நீண்ட நேரம் விளையாடுகிறார்கள்   வேடமிட்டர்வர்கள் முன்னால் நகர்ந்து நகர்ந்து செல்ல சாலையின் இருபுறமும் கூடியிருக்கும் மக்கள் உப்பு மற்றும் மிளகுடன்  சாக்லெட் அல்லது சில்லரையும் கூடவே சேர்த்து அவர்களின் மீது வீசுகின்றார்கள்.   சாக்லேட்டும் , சில்லரையும் எப்பொழுது சேர்ந்திருக்கும் என தெரியவில்லை.  



"அக்கா இந்த பக்கம் போடுங்க " 

"அக்கா வெறும் உப்பு மட்டும் போடாதீங்க சாக்லேட்டோட போடுங்க"...

 "காசு போட்டு போடுங்க"... 

"ஒருபக்கமாக போடாதீங்க"  என்று பலவிதமாக குரல்களில், விசிறும் பெண்களிடம் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். இந்த வேடம் இட்டவர்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இருந்தார்கள். வர்க்க வேறுபாடு, சாதி வேறுபாடு இல்லாமல் நடைபெறுகிறது.  ஆண்கள்தான் இந்த சேத்து வேசத்தை  ஏற்று இருந்தார்கள். கூடவே சிறுமிகள் சிலரும். வேடிக்கை பார்ப்பவர்களும் இந்த கலவையை வீசுபவர்களும்  பெரும்பாலும் பெண்களாக இருந்தார்கள்.  


அந்த காசையும், சாக்லேட்டையும் குதித்து 'கேட்ச்' பிடிப்பதில் தான் இதில் இருக்கும் த்ரில்.  போட்டி, விளையாட்டு, கொண்டாட்டம் என எப்படி வேண்டுமானாலும் கூறலாம்.  அந்த காசை இருவரும் பிடித்து விட்டால் அது எனக்கு, உனக்கு என்று அடிதடி. பலரும் அந்த நாணயத்தைக்  கைப்பற்ற மொட்டை வெயிலில், தார் ரோட்டில் அப்படியே  உட்கார்ந்து கொள்கின்றார்கள்.  நாணயத்தை அழுத்தி, நெட்டித் தள்ளி உரிமை கொண்டாடுகிறார்கள்.  இந்த பஞ்சாயத்து சில நிமிடங்கள் நடந்து ஒருவர் விட்டுக்கொடுக்கிறார் அல்லது வெற்றி பெறுகிறார்.  இவையாவும் அங்கங்கு, அக்கூட்டத்தின் ஊடே பலவாறாக நடந்து கொண்டு இருக்கிரது.  அதுதான் நிகழ்வின் எழுதப்படாத விதி.  


முன்பு குழந்தை இல்லாத பலரும் இந்த சேத்து வேச நிகழ்வில் சூறை விடுவதாக வேண்டிக்கொள்வார்களாம்.  வேண்டுதல் நிறைவேறினால் அவர்கள் சொந்தம் சூழ அந்தக் குழந்தையையும் சூறை விடுவார்களாம். குழந்தை அவர்கள் தெரிந்தவர்கள் கையில் கிடைக்காமல் வேறு ஒருவரின் கையில் கிடைத்து விட்டால் அவர்கள் கேட்கும் காசு பணத்தை இவர்கள் கொடுக்க வேண்டுமாம்.   இப்பொழுது அது தடை செய்யப்பட்டு உள்ளது.   சூறை விடுவது என்பது கூட்டத்தில் உப்பு மிளகை வீசுவது போல தூக்கி வீசுவது தான். 


என்னைப்போல வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த ஒரு அண்ணன், பக்கத்தில் இருந்த பெட்டிக்  கடையில் லிட்டில் ஹார்ட்ஸ் பிஸ்கட் ஒரு சரம்  வாங்கினார்.  அதனை ஒவ்வொன்றாக கிழித்து  அவர்களின் மீது சரசரவென ரம்மி விளையாடுகையில் சீட்டுக்கட்டிலிருந்து சீட்டு போடுவதுபோல விசிறினார்.  கூட்டத்தில் ஒரே ஆரவாரம்.  கூடவே மற்றொருவர் வேறு பிஸ்கட் பாக்கெட்களை  வாங்கி வீசினார்.  அடுத்ததாக  லேஸ் சிப்ஸ்.  சிலர் 'அண்ணா அண்ணா இங்கயே கொடுங்க' என அருகே வந்து அவரிடம் பிடுங்காத குறை.   ஒருவர் முழு லெஸ் சாரத்தையும் வாங்கிக் கொண்டு ஓட, அவரின் சக போட்டியாளர் அவரைத் துரத்தி அவரிடம் இருந்து பாதியை பங்கிட்டுக் கொண்டார். 


ஒரு பக்கம் தண்ணீர் பாட்டிலையும் வாங்கி விசிறி அடித்தார்கள்.  திடீரென ஒரு கடையில் இருந்து  துணிகளைத் தூக்கி போட்டார்கள்.  இன்னொரு பக்கம் இருந்து வாழைப்பழங்கள்.  என்ன ஒரு ஆனந்தம் அதனை குதித்துப் பிடிப்பவர்களுக்கு.  கலந்துகொண்டு இருந்த சிறுவனின் கையில் மஞ்சள் பை இருந்தது.  அதில் கிட்டத்தட்ட முக்கால்வாசி நாணயங்கள், சாக்லெட்டுகள் என நிரம்பி இருந்தது.  அவனும் கிடைத்தவற்றை பிடித்து மீண்டும் அந்தப் பையில் திணித்துக்கொண்டு இருந்தான்.  கிட்டத்தட்ட ஆரம்பித்த இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் வந்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.  இன்னும் சற்று தொலைவில் முடிந்துவிடும்.   


தார்ரோடு மதியம் ஒரு மணி வெயில் எதையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை.  வழிநெடுக இதுதான் அவர்களுக்கு விளையாட்டு. அவர்களுக்கு இது கொண்டாட்டமாகத் தான் இருந்தது.  இரு தண்ணிர் வண்டிகள்  பின்னால் வந்து கொண்டிருந்தது.  தண்ணீர் திறந்துவிட்டு சாலைக்கு அடித்துக் கொண்டு வந்தார்கள்.  அந்த வண்டியில்  வேசம் போட்டவர்களும் அவர்களின் வேசம் கலைந்து விடும் என குளித்துக் கொள்ளவில்லை. மற்றவர்கள் அந்த வண்டியின் அடியில் ஷவரில் குளிப்பது போல ஏகாந்தமாக குளித்துக் கொண்டிருந்தார்கள். முடித்துவிட்டு மீண்டும் கேட்ச் பிடிக்கும் ஆட்டத்திற்கு வந்தார்கள்.



இந்த ஊர்வலத்தின் எஞ்சின் போல ஒரு குழு.   அந்த  குழுவின் புகைப்படங்களைத்தான் முன்பு பதிவிட்டு இருந்தேன்.  அதில் ஒருவர் கிரிக்கெட் வர்ணனையாளர் போல ஒரு கையில் மைக் வைத்துக்கொண்டு சாலை ஓரத்தில் இருந்தவர்களிடம் வம்பு வளர்த்துக் கொண்டு இருந்தார்.  அந்த ஊர்வலத்தின் இறுதியில் குதிரை அதன் பின்னே பூக்களால் சோடிக்கப்பட்ட கரகமும், சாமியும் மெதுவாக வந்து கொண்டிருந்தது.  அதற்கு மட்டும் கயிற்றில் பாதுகாப்பு வளையம் வைத்து நகர்ந்துகொண்டு இருந்தார்கள்.  ஆனால் கூட்டம் என்னவோ இந்த வேஷம் போட்டு வந்தவர்களையும், சூறை பிடிக்க வருபவர்களிடமும்  தான் தேங்கியிருந்தது.   அவர்கள்தான் கொண்டாட்டத்தை உச்சகட்டமாக மக்களுக்கு அளித்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.   


வண்டி வெயிலில் நின்று இருந்ததால் கொதித்தது.  இந்த வெய்யிலிலும் மக்கள் உற்சாகமா இருந்தார்கள் .  .  இந்த ஊர்வலம் நடந்த பாதையின் பின்னே ஏதோ ஒரு கலவரம் நடந்து முடிந்தது போன்ற தோற்றம். கொரோனா ஆரம்பிக்கும் முன் சென்ற வருட நோம்பி  நடந்து முடிந்திருந்தது.  எனக்கு என்னவோ இந்த வருடம் கொரோனாவை சூரசம்ஹாரம் செய்துவிட்டு, இந்த பண்டிகை கொண்டாட்டித் தீர்த்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது    



செல்லாண்டி அம்மன் சேத்து வேசம் பார்த்துவிட்டு வீடு அருகே வந்தேன். 

"நோம்பிக்கு எப்ப வந்தீங்க" என்றார் பக்கத்து வீட்டு பாட்டி.  

"நேத்து நைட்டு வந்தேங்க" என்று தொடர்ந்தேன்  "எங்க யாரையும் காணோம்.  உங்க வீட்ல யாரும் வர்லீங்களா?. நோம்பிக்கு என்ன பண்ணிங்க?" என தொடர் கேள்வியை எழுப்பினேன்.  

 "யாரும் வரலைன்னு சொல்லிட்டாங்க.. வந்தாங்கன்னா எதையாவது சமைக்கலாம்.. எதோ என்னால முடிஞ்சத போடுவேன்..ஒருவேளையாவது வந்துட்டு போனாங்கன்னா நமக்கு நல்லா இருக்கும்" என்றார் வெளியில் சிரித்தபடி.  அவர்கள் மகன்/மகள் வீடு அரை மணிதூரத்தில் தான் இருந்தது.  


கயிற்றுக் கட்டிலை மல்லாக்க போட்டு கட்டிலின் இரண்டு கால்களுக்கும் சேர்த்து புதிய ஜமுக்காளத்தைக் கட்டி இருந்தார்.   கையில் ஊசி வைத்து கோர்த்துக் கொண்டு இருந்தார்.  சட்டென மடைமாற்ற  "என்ன பண்ணிட்டு இருக்கீங்க?" என்று கேட்டேன்.  

"தெரிஞ்சவங்க ஜமுக்காளத்துல பேர் எழுதி தர சொன்னாங்க.. இப்பெல்லாம் பண்ணறது இல்லை... சரி தெரிஞ்சவங்கன்னு தான்" என்றார்.   பவானியில் இது  ஒரு முக்கியமான தொழில்.  

 "இதுல ஒரு எழுத்துக்கு ரெண்டு அம்பது  குடுப்பாங்க. தமிழ், இங்லீஸ், இந்தி எதுவா இருந்தாலும் பேப்பர்ல போட்டு கொடுத்தா, நான் ஜமுக்காளத்துல எழுதிருவேன்" என்றார். ஒருவேளை 250ஐ ரெண்டு அம்பது என்று கூறுகிறாரே என நினைத்து "எவ்வளவுங்க?" என மீண்டும் கேட்டேன்   "ரெண்டு ரூவா அம்பது காசுங்க.  நான் ஆரம்பிச்சப்ப அப்பல்லாம் 40 பைசா இருந்தது.  படிப்படியா இப்ப ரெண்டு அம்பது ஆகிடுச்சு" என்றார்.  அதில் ஒரு 20 எழுத்து இருந்திருக்கும்.  50 ரூபாய் கிடைக்கும் 


வெளியே ஊரே கொண்டாட்டமாக இருந்த அந்த நேரத்தில், இது போல தனித்து இருப்பவர்கள் அன்றும் தனித்து தானே இருக்கின்றார்கள். 



Sunday, August 30, 2020

புதன்கிழமை சந்தை

 காரோனா அதன்போக்கில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.   பலதரப்பட்ட மக்கள் வெளியே வந்து அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.  ஊரில் திருமணங்கள், கிடா வெட்டு விசேஷங்கள் குறைந்த எண்ணிக்கையில் நிகழத் துவங்கியுள்ளது.   அரசும் லாக் டவுனை(?!) கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தி வருகிறது.  இருந்தாலும் நகரங்களில் முடிந்தளவு மக்கள் இன்னும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறோம்.  முன்புபோல இயல்பான நிலைக்கு மாறி விட்டோமா?  என்றால் இல்லவே இல்லை. 


கடந்த ஆறுமாத கால கட்டம் பல பழக்கங்களை மாற்றி உள்ளது.   அதிலும் கடைகளுக்கு சென்று மளிகை பொருட்கள், காய்கறி வாங்கும் முறை முற்றிலும் மாறி இருக்கின்றது.  இந்த நான்கைந்து  மாதங்களில் காய்கறிகளை வாங்கியவுடன் சுத்தமாக  கழுவியது போல், வேறு எப்போதும் கழுவியது உண்டா என்று யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.   காய்கறிகள் கழுவிக்கொண்டு இருக்கும்பொழுது சோகமாக  இப்படியும் நான் உளறுவது உண்டு 'காவியங்கள் உனைப் பாட காத்திருக்கும் பொழுது, காய்கறிகளை நீ கழுவினால்  என்னவாகும் மனது'  என்று.  


 

லாக்டவுன் ஆரம்பித்த புதிதில் செய்த செயல்கள் வரலாறு முக்கியம் அமைச்சரே போன்றவை.  காய்கறிகள் வாங்கி வந்தவுடன் அவற்றை வெளியே வைத்து, முக்கால் பக்கெட் தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் போட்டு தண்ணீர் கரைசல் தயாராகும்.  அதில்  எல்லா காய்கறிகளையும் கொட்டி,  கொஞ்ச நேரம் ஊற வைத்து விடுவேன்.  பின் ஒரு பெரிய துணியை விரித்து,  அதன் மேல் காய்கறிகளைக் கொட்டி நீண்ட நேரம் ஈரம் காய உலர வைத்து விடுவோம்.  அதன் பின் அதனை குளிர்சாதன பெட்டியில் ஒவ்வொறாக தனி தனி டப்பா அல்லது கவர் அல்லது பையில்  எடுத்து வைப்போம்.  இது ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாமல் நடைபெற்று வந்தது.  


 காய்கறிக்கே அப்படி என்றால் நமக்கு.   நேராக குளியல் அறைக்கு சென்று குளித்துவிட்டு, அந்த துணிமணிகளை சோப்பு போட்டு துவைத்து காயப்போட்டு விட்டுத்தான் அடுத்த வேலை.  வேறு ஏதேனும் காய்கறிகள் தவிர மளிகைப்  பொருட்கள் வாங்கி வந்தால் அதனையும் வெளியில் வைத்துவிட்டு, அதற்கும் சனிடைசர் அல்லது டெட்டால் கரைசலில் துடைத்து வைத்ததும் நடந்தது.   பின்னர் ஓரிரு நாட்கள் கழித்துத் தான் அந்தப் பொருட்களை எடுத்து உபயோகப் படுத்தி இருக்கிறோம்.    


அதுவும் லாக்டவுன் ஆரம்பித்த மார்ச் இறுதியில் இது மிகவும் அதிகம்.   அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, கடந்த இரு மாதங்களாக அதுவும்   மங்கிப்  போய்  உள்ளது.   கொரோனாவை நாம் புரிந்து கொள்ள ஆர்மபித்துவிட்டோம் எனலாம் அல்லது சோம்பேறித்தனம் என்றும் கூறலாம்.    காய்கறிகளின் மூலமாக கொரோனா  தொற்று வராது என்று நம்பிக் கொண்டும்  இருக்கலாம்.  


அதுபோல எங்கும் தொடாமல் காய்கறிகளை வாங்கி விட்டு வந்தவுடன்,  அதற்காக கொண்டு சென்ற பணத்தை அப்படியே சோப்பு நீரில் ஊறவைத்து கழுவி அதையும் காய வைத்துவிட்டு, வண்டி சாவியையும் கழுவி காய வைத்துவிட்டு பின்னர்தான் குளிக்க செல்வேன்.   கூடவே வண்டியின் கைப்பிடி, கதவு  என தொட்ட ஒவ்வொன்றையும்  துடைத்தது  வரலாற்றில் குறித்துக்கொள்ள வேண்டும்.     

முதல் ஓரிரு மாதங்கள் இப்படியாகத் தான் சென்றது.   அதன் பிறகு கிட்டத்தட்ட அனைத்து பண பரிமாற்றமும் Gpay  மற்றும் paytm க்கு மாறியிருந்தது.   இப்பொழுது பணம் அவ்வளவாக எடுத்துச் செல்வதில்லை. ஆனாலும் வெளியில் சாலையில் கடை போட்டிருக்கும் அந்த பாட்டியை பார்த்தவுடன் அவர்களிடம் தான் வாங்க தோன்றுகிறது.     



இது ஒருபுறமிருக்க எங்களது கம்யூனிட்டிக்கு நான்கு சக்கர வாகனத்தில், ஒருவர் காய்கறியை நேரடியாக கொண்டு வர ஆரம்பித்து விட்டார்.   இது இன்னும் சுலபமாகவே இருந்தது.   அவர் உள்ளே நுழைந்ததும் ஆப் அலாரம் அடிக்கும். பலர் பரபரப்பாக ஓடி வந்து முதலில் வாங்க ஆரம்பித்தார்கள்.  அந்த கூட்டம் எனக்கு சற்று பயத்தை கொடுத்ததால், கூட்டம் குறைந்த பின்னர் கடைசியாக சென்று வாங்குவதற்கு பழக்கப்படுத்திக் கொண்டேன்.    அவரிடமும் நெருக்கம் ஆகி விட்டது. 

 "என்ன சார், இன்னிக்கு ரொம்ப லேட்டா வரீங்க?"  "கீரை பிரெஷ் சார் வாங்கிக்கோங்க"   என்பார்.  கன்னடமும், தெலுங்கும் ஹிந்தியும் பேசுவார்.   இந்த மொழி சார்ந்த விஷயம் பெங்களூரில் ஆச்சர்யமான ஒன்று.  தொழில் செய்யும் பலரும் குறைந்தது மூன்று நான்கு மொழிகளாவது பேசுவார்கள்.   


சில வாரங்கள்  அவர்களின் குழந்தைகளோடு வந்தார்.   "என்ன  இன்னிக்கு உங்க பசங்கள காணோம்? " "இல்ல சார் ரொம்ப லேட் ஆகுது,   அவங்க சாப்பிட லேட் ஆகிடுது" என்றார்.   

"இன்னிக்கு  என்ன ஆச்சு ரொம்ப லேட்டா வந்துருக்கீங்க"   எனும் மற்றோரு நாளின் கேள்விக்கு  " சார், வேற வண்டி சார் இது,  என்னோட வண்டி பஞ்சர் ஆயிடுச்சு"   என்பார்.


 மற்றொரு நாள்  "இன்னிக்கி KR புரம் மார்க்கெட் போகலைங்க.." "கொரோன அந்த பக்கம் இருக்கறதால இப்படி இந்த பக்கமா போயி சிந்தாமணியில் வாங்கிட்டு வந்துட்டேன்."  


 இவ்வாறாக பலவாறான பேச்சுக்கள் அவரோடு தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.    பெரும்பாலான காய்கறிகள் அவரிடம் பேரம் பேசாமல் வாங்கிச் செல்வேன்.   ஒரு சிலவற்றை வேறோரிடத்தில் வாங்கினால் 

 குறைவாகத்தான் இருக்கும்.  அங்குள்ள ஒரு சிலர் வெளியில கம்மியா இருக்கு என பேரம் பேசுவார்கள்.   அது ஏனோ இவர்களிடம் பேரம் பேசும்  ஆட்களை பார்த்தவுடன் சற்று ஆயாசமாக தான் இருக்கின்றது.   இவர்களிடம்  பேரம் பேசி என்ன கொண்டு செல்லப் போகிறார்கள்.   என்ன நூறு ரூபாயா அதிகமாக வைத்து விடுவார்கள் ?  சூப்பர் மார்க்கெட்டிலும் அல்லது அமேசான்களில்  அதிகமாக  வைத்திருப்பது போல.   எனக்கு கண்கூடாக தெரிந்தது வெளியில் நான் சென்று வாங்கினால் ஒரு பத்து இருபது ரூபாய் குறையத்தான் செய்யும்.  பரவாயில்லை.   நம்மைத் தேடி  வருகின்றார்.   அவரிடம் வாங்குவது தானே முறையாக இருக்கும்.



எனக்கு இந்த மாதிரி வெளியில் சென்று காய்கறி வாங்கிவிட்டு வந்தவுடன் இவ்வளவு சுத்தமாக இருப்பது,  எனது தாத்தாவின் காலத்தை நினைவூட்டியது.   பள்ளி முடிந்து புதன்கிழமை என்றதும் அவ்வளவு மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கும்.  ஆயாவும், தாத்தாவும் சந்தையிலிருந்து வாங்கி வரும் தயிர்வடைக்காக.   இன்றும் அவர்கள் நினைவு தினம் கும்பிடும் வேளையிலே,  தயிர்வடை அவர்களுக்கு பிரியமானது என இலையில் படைப்பது உண்டு.  அல்லி இலையில் சுற்றி அடியில் ஒரு காகிதம் வைத்து நூலில் சுற்றப்பட்டு இருக்கும் அந்த பொட்டலம்.  அதில் குட்டி குட்டி போண்டாக்கள்.  ஒன்றை எடுத்து வாயில்  போட்டாலும், அது அப்படியே மெதுவாக தயிரின் புளிப்புச் சுவையோடு கலந்து அவ்வளவு அமிர்தமாக இருக்கும்.   இப்பொழுதும்  இதை எழுத நாவில் எச்சில் ஊறுகிறது.   


சந்தைக்கு சென்று விட்டு வந்தவுடன் நேரடியாக கிணத்தடிக்கு சென்று குளித்துவிடுவார்.   அனைத்து உடைமைகளையும் துவைத்து காயப்போட்டு விட்டுத்தான் தாத்தா உள்ளே செல்வார்.  இந்தப் பழக்கத்தை அப்பாவிடமும் கண்டதுண்டு.  புதன்கிழமை சந்தை சென்று வந்ததும் என்ன தீனி  இருக்கும் என்று பார்க்கும் நான் தான்,  அந்த காய்கறிகளை எங்கள் வீட்டில்  எடுத்து அடுக்குவது உண்டு.   அந்த வாரத்திற்கு  தேவையான காய்கறிகள் என அனைத்தையும் பரந்த மூங்கில் கூடைகளில் கூறு போட்டு வைப்பதும் உண்டு.  முக்கியமாக அப்பொழுது ஆப்பிள் மற்றும் மாதுளை கிடைப்பது அரிது.   அன்றைய வார சந்தைக்கும் இன்று வாரம் ஒருமுறை வாங்குவதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.  இடையில்தான் தினமும் ஒருமுறை காய்கறிகள் வாங்க வேண்டும் என்பது வந்திருக்கக்கூடும்  என்று நினைக்கின்றேன்.    


அதுபோலவே அவர் காலத்தில் கசங்கிய, கிழிந்த,  அழுக்குப்படிந்த ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் நோட்டுகளை கடைகளில் வாங்க மாட்டார்கள்.  அதனை சோப்பு போட்டு கழுவி, புத்தம் புது நோட்டு போல ஆக்கி செலுத்தி விடுவார்.  அவர்கள் காலத்தில், 2 ரூபாயே  சந்தை செலவுக்கு அதிகம் என்பார்.   


இன்று கொரோனா காலத்தில் சில பழைய பழக்கங்களை  நம்மை அறியாமல் நாம் ஏற்றுக்கொண்டு இருக்கிறோம்.




Saturday, August 01, 2020

ஊரும் நீரும்




இன்று நாம் குடிக்கும் நீர் RO மூலம் சுத்தப்படுத்தி சுகாதாரமான நீரை குடிக்கிறோம். கடைகளில் கேன்களில் கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட நீரை குடிக்க பயன்படுத்துகிறோம். இப்பொழுது எங்கள் ஊருக்கு சுத்திகரிக்கப்பட்ட காவிரி நீர் பல மைல் கடந்து தெருமுனைகளுக்கும், சிலரின் வீடுகளுக்குமே வருகிறது. தண்ணீரை வியாபாரமாக்கி உள்ளார்கள் எனும் சர்ச்சைக்கு செல்லவில்லை. அதேபோல காவிரியில் கலக்கும் கழிவுகளுக்கும் செல்லவில்லை. அதில் இருக்கும் சில பிரச்சினைகள் களையப்பட வேண்டும்.  அது பலரும் பேசிய விஷயம். ஆனால் இந்த சுத்தமான சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடிக்கும் இந்த சுகாதாரமான நிலைமைக்கு எப்படி வந்தோம் என்பதை அறிந்துகொள்ள இந்த கட்டுரை.


எங்கள் ஊரின் ஆரம்பப் பள்ளியின் அருகில் ஒரு அமுக்கு பைப் இருக்கும். அது தான் எங்கள் ஊருக்கு வந்த முதல் அடி பம்ப். அதுவரையில் ஊரின் மத்தியில் இருந்த கிணற்றில் இருந்து மட்டுமே தண்ணீர் சேந்தி எடுத்துச் செல்வார்கள். அந்த கிணற்றை சுற்றியும் வட்டமாக இடுப்புயர சுவர். அதன் மேல் சம இடைவெளியில் மூன்று சுவர் தடிமனுக்கு தூண்கள். அதன் மேல் மூன்று பக்கம் இரும்பில் விட்டம். ஒரு பருந்துப் பார்வை பார்த்தால் முக்கோணமாக இருக்கும். ஒவ்வொரு விட்டத்தின் நடுவில் உருளை இருக்கும். அதில் கயிறு போட்டு பக்கெட் ஒன்றை கட்டி, அதனைக் கிணற்றில் விட்டு தண்ணீர் இறைப்பார்கள். சிலர் 'அட பாக்கெட் பக்கெட்டா ஊத்தி என்னைக்கு நாம்பறது" என குடங்களையே கயிற்றில் கட்டி ஒரே இழுப்பில் தண்ணீர் கிணற்றில் இருந்து எடுத்துவிடுவார்கள். ஊர்க்காரர்கள் புரளி பேசும் இடம். சைட் அடிக்க கூடுமிடமாகவும் இருக்கும். இது தான் ஒட்டுமொத்த ஊரின் நல்ல குடிநீருக்கான மையம்.


அப்பாவின் காலத்தில் அந்த ஊர்க்கிணறும் இல்லை. ஊர்ப் பெரியவர்களின் வீடுகளில் கிணறு இருக்குமாம். அதுவும் மூன்றே மூன்று.  அதில் பள்ளிக்கு செல்லும்முன் தண்ணீர் பல நடை மோந்து ஊற்றி வைக்க வேண்டும். பெரும்பாலும் அந்த கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டால், காட்டுக்குள் இருக்கும் செம்மண்குழி கிணற்றில் எடுப்பார்களாம். 


 அடி பம்ப் வந்தவுடன் நல்ல குடிநீருக்கான மையமாக இந்த பம்ப் மாறியிருந்தது. சைக்கிள்களில் இருபுறமும் குடங்களைக் கட்டிக்கொண்டு பலரும் எடுத்துச் செல்வார்கள். நாங்கள் இரண்டு பேர் சேர்ந்து இதனை வேகமாக அழுத்துவது ஒரு விளையாட்டு. அந்த பம்பை அடைத்து வேக வேகமாக அழுத்தி சுற்றிலும் தண்ணீரை பீச்சி அடித்து ட்ரவுசர் சட்டைகளை நனைத்து ஜாலியாக நடைபெறும் தினசரி சம்பவம். அதிலும் யாரும் இல்லாதபோது நாமே அடித்துவிட்டு வேகமாக ஓடிவந்து தண்ணீரைக் குடிக்க வேண்டும். 


தென்னை மரங்களை சுற்றி ஒரு பாத்தி கட்டி அதனை நிரப்புவது தான் கடைசி பிரிவேளையில் நடக்கும்.  கிட்டத்தட்ட அதில் தண்ணீர் நிரம்பும்  வரை நீர் எடுத்திருப்போம்.  பள்ளி சுற்றிலும் இருக்கும்  வேலிக்கும் தண்ணீரை ஊற்றவேண்டும். பூந்தோட்ட காவல்காரன் வந்த சமயம். அந்தோணி வண்டி என்று இரு நண்பர்கள் தண்ணீரை வேகமாக எடுத்து வருவார்கள். அடி பைப்பிலிருந்து சிறிய மேடு ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக ஏறி பள்ளிக்கு கொண்டு சென்று மரங்களுக்கு ஊற்ற வேண்டும். இன்று பள்ளி சுற்றுப்புற சுவரோடு, கான்க்ரீட் காட்டிடத்துடன் அழகாக உள்ளது.


அந்த பைப்பில் தண்ணீர் வரும் தலைகீழான L வடிவ பைப்பில் பாக்கெட் மாட்டி தண்ணீர் பிடிப்போம்.  ஒருமுறை பிடிக்கும்பொழுது கீழே விழுந்து பெருவிரல் நசுங்கி,  பக்கத்தில் இருந்த அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் தான் கட்டு போட்டுவிட்டு இருந்தார்கள்.  இப்பொழுது அந்த பம்பில் இருந்து மோட்டர் வைத்து மேல்நிலைத்தொட்டி கட்டிவிட்டார்கள். அதன் வழியாக கிட்டத்தட்ட ஒவ்வொரு வீதிக்கும் தண்ணீர் வரும். பத்தடி தொலைவில் சென்று பிடித்துக்கொள்ளலாம்.  அதன் அருகில் காவேரி நீர் பைப்பும் இருக்கும்.



இன்று போர் போட்டு் பராமரிப்பு இல்லாமல் உள்ள ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுந்து தத்தளிப்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. ஆனால் இந்த அடி பம்புகளின் வரலாறு எத்தனை நெடியது. நீர் சம்பந்தமான நோய்களை தீர்த்ததில் பெரும் பங்கு வகித்துள்ளது.



Guinea Worm Water Based Disease என்ற ஒரு நோயை உலகம் முழுவதும் தீர்க்க உலக சுகாதார நிறுவனம் நிதியை ஒதுக்குகிறது. 1980 இந்த திட்டம் ஒருங்கிணைத்த இந்தியாவில் ஆரம்பிக்கிறது. பொது சுகாதாரத்தில் முதல் இடத்தில் இருந்த தமிழகத்தில் நாலே வருடங்களில், நாம் சாதித்ததை ராஜஸ்தானால் 16 வருடங்கள் கழித்து தான் சாதிக்க முடிந்துள்ளது.


லிங்க் https://ncdc.gov.in/index1.php?lang=1&level=1&sublinkid=142&lid=73


இது என்ன நோய்? சேந்து கிணறு அமைப்புக்கு முன்பாக வெட்டப்பட்ட கிணறுகளில் படி வைத்து குடிநீரை எடுத்து வந்துள்ளார்கள். இன்றும் ராஜஸ்தானில் படிவைத்த பிரமாண்ட கிணறுகள் ஒரு வரலாற்று ஆவணம் போல அழகாக இருக்கும்.



குடிக்கும் நீரில் நரம்பு சிலந்தி நோய் இருப்பவர்கள் மூலம் அந்த  லார்வா குடிநீரில் கலந்துவிடும். L3 லார்வா, இரைப்பையினுள் செல்லுதல், காலில் இருக்கும் புழு நீரினுள் L1 லார்வாக்களை வெளியிடுதல். இவை இரண்டையும் தடுத்தாலே நரம்பு சிலந்தி புழு பரவ முடியாது. அதற்கு என்ன செய்ய வேண்டும்?  குடிக்கும் நீரில் நரம்பு சிலந்தியின் லார்வா செல்லுவதை தடுக்க ஆழ் துளை கிணறுகளை அமைத்து கைபம்புகளை அமைத்தல் தான். அதன்பின் தண்ணீரை காய்ச்சி குடித்தல்.



இந்த பிரச்சினை தமிழ் நாட்டில் பெரும்பாலும் தஞ்சை கும்பகோணம் பகுதிகளில் இருந்துள்ளது. குளம் அதிகமாக இருந்த இடங்கள் அவை.




நாடு முழுவதும் சுகாதாரத்திற்கான சிந்தனை மாற்றத்தை அளித்த நிகழ்வு "நரம்பு சிலந்தி ஒழிப்பு திட்டம்" தான். இதற்கான முக்கிய விஷயமாக கருதுவது நமது அரசு ஆரம்ப சுகாதார அமைப்பின் கட்டுமானம். அதனால் தான் நான்கு வருடத்தில் அதனை முடிக்க முடிந்துள்ளது.


இந்த நோய் புத்தகத்தில் கூறப்பட்ட ஒன்று,  அது தவிர நீரினால் பரவும் காலரா, டயறியா போன்றவை எல்லாம் இன்று  இல்லை. இன்று  கொரோனாவுக்கு போராடும் நிலையில் அதற்கான கட்டமைப்பு எப்படி உள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்


நான் அங்கு படித்துக் கொண்டு இருந்த போதுதான் , பள்ளியை ஒட்டி அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் ஒன்றை ஆரம்பித்தார்கள். புதிதாய் ஒரு கட்டிடம் இன்றும் அன்று காலை திறப்பு விழாவில் போது இட்ட கேசரி, தக்காளி சோறும் தயிர் வெங்காயமும் நினைவில் உள்ளது. அப்பொழுதெல்லாம் காலை நடக்கும் புதுமனை புகுவிழாக்களில் இந்த மெனுதான். சற்று வசதி உள்ளவர்கள் மெதுவடையும் போடுவார்கள்.


ஆரம்ப காலத்தில் இவை வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வந்து கொண்டுள்ளது. சில பல சமூகப் பிரச்சினைகளும் இந்த மருத்துவமனையில் தங்கி வேலை பார்க்கத்தவர்களிடம் நடந்தும் உள்ளது அதெல்லாம் வேறு விசயம். இந்த ஆரம்ப துணை சுகாதார நிலையம் கிட்டத்தட்ட 5000 மக்களுக்கானதாக இருந்துள்ளது. இவை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களுடன் இணைக்கப்பட்டு இருக்கும். இவர்களின் முக்கிய வேலை வருமுன் காப்போம் என்பது. அதாவது இவர்களின் பணி அரசின் சுகாதார திட்டங்களை கடைக்கோடி கிராமம் வரை சேர்ப்பது . குடும்ப நலம், தடுப்பூசி, தொழுநோய் தடுப்பு, பள்ளி சிறுவர்களின் நலம் , தொற்று பரவாமல் தடுப்பது என்கிறார் இந்த அமைப்பில் தனது பணியை ஆரம்பித்து அதில் ஓய்வு பெற்ற என் பக்கத்துக்கு ஊர் மாமா.   அவரிடம் பேசியபோது இந்த சுகாதார அமைப்பை உருவாக்க அவர்களின் போராட்டங்களை கூறினார்



இவர்கள் டீம் தான் பள்ளிக்கு அம்மை தடுப்பூசி போட வருவார்கள். இவர்களின் ஜீப் வந்ததும், 'அய்யயோ இன்னிக்கு ஊசி போட்டு் விடுவார்களோ' என பயந்ததும் உண்டு. ஒரு வழியாக அழுது  புரண்டு போட்டுக்கொண்டால்  ஊசி போட்ட இடம் வீங்கிக் கொள்ளும், அன்று வெந்நீர் ஒத்தடம் கொடுப்பார்கள்.



வந்ததும் காப்போம் என்பது அரசு மருத்துவமனையின் கடமை. ஆரம்ப துணை சுகாதார நிலையித்தின் வேலை வருமுன் காப்பது.  அப்பொழுதெல்லாம களத்தில் அதிகமாக வேலை செய்தார்களாம். இப்பொழுது வேலை செய்ததை எழுதி வைப்பதில் உள்ளதாக கூறினார். 

அந்த ஆரம்ப துணை சுகாதார நிலையங்கள் 85களில்  கட்ட  ஊரில் பேச்சுவார்த்தை நடத்தி, இடம் வாங்கி கட்டி உள்ளார்கள்.  இந்த அமைப்பு வியப்பில் ஆழ்த்திக்கொண்டு உள்ளது.  குடிநீர் சுகாதாரத்தில் எங்கிருந்து எங்கு வந்துள்ளோம் என்பதுவும் சாதனை தான்.   



Monday, June 15, 2020

ஊரும் பெயரும்



இந்த பெயர் மாற்ற மீம்கள் 'மெட்ராஸை' சுற்றிப்பார்க்க வைத்தது. சென்னையில் முதலில் எங்களுக்கு தங்க கிடைத்த இடம் எம்எல்ஏ ஹாஸ்டல். தலைமை செயலகமாக கட்டப்பட்டு இப்பொழுது மருத்துவ மனையாக உள்ள இடத்தில் பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதி இருந்தது. 'எம்எல்ஏ-க்கு எதுக்கு விடுதி?' என ஆரம்பத்தில் நினைத்ததுண்டு. அந்த ஓமந்தூரார் தோட்டத்தில், தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பெரிய தனித்தனி அடுக்கக வீடு உண்டு. கூடவே அவர்கள் பரிந்துரைத்தால், அவர்களின் சார்பாக ஓரிரு அறைகளும் புது அல்லது பழைய விடுதியில் கிடைக்கும். அங்கு பெரும்பாலும் ஊர்ப் பிரச்சனைகளுக்காக கோட்டையில்(Fort) இருக்கும் தலைமை செயலகத்திற்கு வருபவர்களாக இருக்கும். வருடக்கணக்கில் தங்கிய சிலரையும் பார்த்தது உண்டு. சென்னையின் மையப் பகுதியில் அடர்த்தியான மரங்களின் ஊடக பரந்து விரிந்த அதன் அழகும், கூடவே அங்கு வளைய வந்த அதிகாரமும், சொகுசும் சற்றே மிரட்டியது.





அதனை ஒட்டிய பகுதிதான் திருவல்லிக்கேணி. Triplicane- என்று தான் அனைவருமே கூறுவார்கள். இரண்டும் ஒரே பெயர் என அங்கு இருந்த போதுதான் தெரிந்தது. அதன் வழியாக செல்லும் பேருந்து, 'Anna Square' என ஆங்கிலத்திலும் அண்ணா சதுக்கம் என தமிழிலும் இருக்கும். இப்படி பல ஊர்களின் பெயரும் இரு மொழிகளிலும் பேருந்துகளின் பலகைகளில் இருக்கும்.










சென்னை பல வித்தியாசமான பெயர்கள் கொண்ட பெருநகரம். நெடுநீண்ட வரலாறு கொண்டது. கிட்டத்தட்ட 300 வருடங்கள் ஆங்கிலேயர்கள் இருந்ததால் அதன் பெயர்கள் அவர்களின் வசதிக்கேற்ப மாற்றிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு வீதிக்கும், ஒவ்வொரு சாலைக்கும், ஒவ்வொரு ஊருக்கும் இரண்டு பெயர்கள் இருந்ததை அறிந்துகொள்ள முடிந்தது. சில இடங்களுக்கு மூன்று பெயர்கள் கூட இருக்கும், பூந்தமல்லி-பூவிருந்தவல்லி-Poonamallee அதில் ஒன்று. ஒவ்வொரு பேட்டையில் முடியும் இடங்களையும் பேட் என்று 'இஸ்டைலாக' தான் பீட்டர் விடுவார்கள். சைதாபேட், குரோம்பேட், தேனாம்பேட், ராயப்பேட் என்று பீட்டர் விட, நாமும் பழகிக் கொள்ள வேண்டும். 'பேட்டை-பேட்' போன்றே 'பாக்கங்களும்' 'பாக்' ஆகி இருந்தது. சேப்பாக், கீழ்பாக், புரசைவாக், மீனாம்பாக் என சேப்பாக்கம் என்பதின் 'கம்' விட்டுவிடுவார்கள்.





அண்ணாசாலை- மவுண்ட் ரோடு குழப்பம் நெடியது. எங்கு ஆரம்பிக்கும் எங்கு முடியும் என ஆரம்பத்தில் தெரியாது. அண்ணா சாலையில் நின்று கொண்டே 'ஏங்க, இந்த மவுண்ட் ரோட்டுக்கு எப்படி போகணும்?' என்பதை பலரும் அனுபவித்து இருக்கக்கூடும்.





பரங்கிமலை என்பதும், செயின்ட் தாமஸ் மவுண்ட் என்பதுவும் ஒன்று என அறிந்துகொள்ள சற்று நாட்கள் ஆகியிருந்தது. திருமயிலை எனும் பறக்கும் ரயில் நிலையத்தின் பெயரைப் பார்த்துதான் பலருக்கும் மயிலாப்பூர் என்பதன் உண்மையான பெயர் தெரிய வரும். இன்டர்வியூக்கான ∴பைலை தூக்கிக்கொண்டு காலை நேரங்களில் கிளம்பி விடுவோம். மாலையில் நண்பர்கள் ஒன்று கூடி, அன்று சென்ற இடங்களின் பெயரை அலசும்போது தான், ஒரே இடத்தின் இருவேறு பெயர்களை தெரிந்து கொள்ள நேரிடும்.











எம்ல்ஏ ஹாஸ்டலில் நான்கு மாதம் இருந்துவிட்டு, அப்பொழுது புறநகராக இருந்த வேளச்சேரிக்கு மாறினோம். சைதையில் எந்த பேருந்து வேளச்சேரி செல்லும் என்பதில் குழப்பமாகும் என்பதால், சின்னமலையில் இறங்கித் தான் வேளச்சேரிக்கு பேருந்தைப் பிடிப்போம். மாநகரப் பேருந்தில் கண்டக்டரிடம் ஆங்கிலத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தின் பெயரைக் குறிப்பிட்டுதான் பெரும்பாலும் பயணச் சீட்டு கேட்பார்கள். பின்புறம் படியை ஒட்டிய அவரது இருக்கையில் தான் அமர்ந்திருப்பார். ஊரில் இருப்பது போல, சென்னையின் நடத்துனர்கள் கூட்டத்தினுடாக புகுத்து வந்து பயணச்சீட்டு வழங்க மாட்டார்கள். அந்த நெரிசலில்,முன்பு உள்ளவரிடம் சில்லறை கொடுத்து 'சின்ன மலை ஒன்னு வாங்குங்க' என கூறவேண்டும். அந்த சில்லரை ஒவ்வொருவர் கையாக மாறி நடத்துனரை அடையும். அவரிடம் போவதற்குள் அது 'லிட்டில் மவுண்ட்டாக' மாறி இருக்கும். பெரும்பாலும் ஆங்கிலத்தில் கேட்பது தான் அங்கு இயல்பாகவே அனைவருக்கும் வரும்.





பெசன்ட் நகர் பீச்சுக்கு எலியட்ஸ் பீச் என்ற ஒரு பெயரும் உண்டு. எழும்பூர் - Egmore குழப்பத்தில் நண்பர்கள் ஆட்டோ ஓட்டுனரிடம் சண்டை போட்ட கதையும் உண்டு. Foreshore estate - பட்டினப்பாக்கம் எனப்படும். இன்னும் இதில் விடுபட்ட நிறைய இடங்கள் உள்ளது. பலவற்றிற்கு அப்படியே மொழி மாற்றி இருப்பார்கள் அதில் ஒன்று தீவுத்திடல் எனும் island grounds. எழிலகம் எனும் அழகான தமிழ்பெயர்கள் கண்டு வியந்ததும் உண்டு.





இதில் குறிப்பிட தோன்றியது சென்னை சென்ட்ரலில் இருந்து, சென்ட்ரல் ஜெயில் பாலம் ஏறி இறங்கியதும் பல்லவன் சாலையில் உள்ள பாடிகாட் முனீஸ்வரர் கோவிலின் பெயர். முனீஸ்வரன் கோவில் சென்னையிலும் உள்ளதா என நினைக்கையில், Bodygurad முனீஸ்வர் எனும் வித்தியாசமான பெயர் ஈர்க்கும். எப்படி 'பாடிகாட்' முனீஸ்வரர் ஆனார் என்பதில் தான் சென்னை மக்களின் பேர் வைக்கும் திறனை வியக்க வேண்டும். வேறு ஒரு மொழியை உள்வாங்கிக் கொள்வதில் சென்னை மக்கள் எப்போதும் தனி.





1995 - Bombay to Mumbai , 1996 - Madras to Chennai, 2001 - Calcutta to Kolkata என இந்திய பெருநகரங்களின் பெயர்கள் மாற்றம் அடைந்து கொண்டு இருந்தது. எனக்கு சென்னையை விட மெட்ராஸ் 'கெத்தாகத்' தான் இருந்தது. இப்பொழுது சென்னை பழகிவிட்டது. சென்னை நண்பர்களும், அங்கு தலைமுறைகளாக வாழும் மக்களும் 'மெட்ராஸ்'(Madras) என்றுதான் கூறுவார்கள். அங்கு நீண்ட காலம் இருந்த உறவினர் அப்பொழுது "என்னப்பா நீங்க எல்லாம் மெட்றாஸ்ன்னு சொல்லாம, சென்னைன்னு சொல்லறீங்க.. எங்களுக்கு எப்பவும் மெட்ராஸ் தான்" என்பார்.





ஊரிலும் பலருக்கு இன்னமும் மெட்ராஸ் தான். ஊரில் எனைப் பார்த்ததும் விசாரிப்பவர்கள் "ஏப்பா எங்க இருக்க, இப்ப என்ன பண்ணற" என்னும் அன்பர்களின் கேள்விக்கு சட்டென 'மெட்ராஸ்' என்றுதான் வரும். இப்படித்தான் ஒருமுறை "அப்பறம் மெட்ராஸ்ல எங்க இருக்க" என்ற கேள்வி வந்தது. " வேளச்சேரிங்க" என்றேன். " அட.. மெட்ராஸ்ல வேலை செய்யறேன்னு தெரியுது.. அங்க எங்க இருக்கன்னு கேட்டன்" என்று கேட்பார்கள் நம்மைக் கலாய்த்து விட்டு செல்வார்கள் அந்த வெள்ளந்தி மனிதர்கள்.





சென்னை தவிர மற்ற ஊர்களில் இந்த மாதிரியான பெயர்க் குழப்பங்கள் குறைவுதான். 'ஊட்டிக்கு ஒரிஜினல் பெயரே உதகமண்டலம், அத வெள்ளைக்காரங்க ஒத்தக்கமண்ட் என கூப்பிட்டு பார்த்தாங்க... அதுவும் முடியாம ஊட்டி என சுருக்கிட்டாங்க' . 'இப்படித்தான் முந்திரி பழம் வித்துட்டு இருந்த ஆயாகிட்ட, இது என்ன என கேட்க, அந்த ஆயா, காசுக்கு எட்டு என்றார்களாம். அதன் பெயர் என நினைத்து cashew nut என முந்திரியை மாற்றினார்கள்' என்று சிறுவயதில் இந்த பெயர் காரணங்களை வியந்து கொண்டது உண்டு.





என்னளவில் முதலில் இந்த ஆங்கில- தமிழ் பெயர் குழப்பம் அநேகமாக திண்டுக்கலுக்கு தான் வந்து இருக்கும். லாரிகளில் பக்கவாட்டில் பர்மிட்டுக்காக எழுதப்பட்டு இருக்கும் Dindigal எழுதிய பெயரை பார்த்த ஞாபகம். ஈரோட்டில் சுற்றிக்கொண்டு இருந்தபொழுது, எங்கள் ஊரில் பெரிதாக குழப்பம் வந்தது இல்லை, VMC-வேளாளர் மகளிர் கல்லூரி தவிர. மதுரைக்குள் வளம் வந்த போது தான் குழப்பம் இன்னும் அதிகமானது. பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பரங்குன்றம் கல்லூரிக்கு செல்லும் வழியில் மதுரை கல்லூரி இருக்கும். 'Madura college' என்று ஆங்கிலத்தில் எழுதி இருப்பார்கள். மதுரை கல்லூரி என தமிழில் இருக்கும். அதை மதுரை அல்லது மதுரா என்றும் கூற மாட்டார்கள் நண்பர்கள். 'மெஜ்ரா காலேஜ்' என்று தான் கூறுவார்கள்.





மதுரையின் பக்கத்துக்கு ஊர்களில் இருந்து வரும் நண்பர்களின் பேச்சுவழக்கில் அவர்களின் ஊர்களின் பெயர்கள் அலப்பறையாக இருக்கும். திண்டுக்கல் நண்பர்கள் ' திண்டில்' என வேகமாக கூறுவார். நாரோயில், தின்னெலி என்பது நாகர்கோவிலில், திருநெல்வேலி என கேலி கிண்டலுக்குப்பின் தான் தெரிய வரும். மக்களின் பேச்சு வழக்கு என்பது வேறாகத்தான் இருந்து கொண்டிக்கிறது. அது அந்தந்த உள்ளூர் மக்களைப் பொறுத்தளவில் நாகரிகமாக, ஸ்டைலாக பெருமையாக கருதப்படுகிறது.





லண்டனில் இருந்த நேரம். பேச்சுவாக்கில் அங்கிருந்த உள்ளூர் பிரிட்டிஷ் மேலாளரிடம் சென்னை, கொல்கத்தா, மும்பை பெயர் மாற்றம் பற்றிய உரையாடல் வந்தது. அவர் 'எதற்காக இப்படி மக்களின் பழக்கத்தில் உள்ள பெயர்களை மாற்றுகிறார்கள். இது ஒரு நேர, பணம் விரயம் அல்லவா?' என்றார். பதிலுக்கு அவரிடம் "நீங்கள் எங்கள் ஊருக்கு வந்து உங்கள் வசதிக்காக ஆங்கிலத்தில் மாற்றிக்கொண்டீர்கள். எங்கள் மக்களுக்கு புரிய வேண்டுமல்லவா?" என்றதும் உண்டு. 'அப்படியானால் லண்டன் என்பது லண்டனியம்(Londinium) என்று மாறுமோ?' என்று நம்மை பகடி செய்து கொண்டிருந்தார். லண்டனுக்கான பழைய பெயர் லண்டனியம் என்பதும் அப்போது தான் தெரிந்தது. கவுண்டமணி கூறியது போல 'இந்த வெள்ளைக்காரன் லண்டன்ன்னு எவ்வளவு சின்னதா நாளே எழுத்துல வெச்சுருக்கான். நீ ஏன்டா நீட்டி முழக்கற' என்பது போல நம் ஊர்களின் பெயரை அவர்களின் வசதிக்காக சின்னதாக வைத்துவிட்டு சென்றார்களோ என்னவோ?









இங்கு கர்நாடகத்தில் மைசூரு, பெங்களூரூ( Bengaluru) என்று கன்னடத்தில் மாற்றி இருந்தாலும், அதை 'பேங்ளூர்' (Banglore) என்று சொல்வதையே விருப்பமாக பலரும் கருதுகின்றனர். 'நீங்க எப்படி வேணாலும் பேரு வச்சுக்குங்க, நாங்க இப்படி தான் கூப்பிடுவோம்'. பேச்சு வழக்கில் அந்த மாற்றம் என்பது தலைமுறைகள் கடக்க வேண்டும். அவர்கள் அறியும் பொழுது என்ன பெயர் இருக்கின்றதோ அதைத்தான் பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள். இந்த பெயர் மாற்றங்கள் தேவையா இல்லையா எனில், புதிதாக செல்பவர்களுக்கு பல குழப்பங்கள் விளைவிப்பதை தடுக்கும் எனபதால் தேவை தான். ஆனால் பணப்புழக்கம் குறைந்த இக்கட்டான இந்த நேரத்தில் இது தேவையா என்பது யோசிக்க வேண்டியது. கூடவே அதன் ஸ்பெல்லிங் 'வீலுர்' என குழப்பம் விளைவிப்பதாக இருக்ககூடாது.





இந்த பெயர் மாற்றம் தேவையா, இல்லையா என்பது பற்றி ஈரோடு கதிர் மற்றும் ஷான் கருப்பசாமி நேற்று நேரலையில் அடித்து துவைத்து உள்ளார்கள். லிங்க்

https://youtu.be/oONN0Ep_HXY












Friday, March 13, 2020

பெங்களூரில் கொரோனா



எங்கயோ அது சீனாபக்கம், இத்தாலிப் பக்கம் என்று சொல்லிக்கொண்டிருந்த கொரோனா, பெங்களூரில் எங்கள் பக்கத்துக்கு ஊருக்கும் வந்தேவிட்டது. அது நான் முன்பு வசித்த பகுதி. அமெரிக்காவில் இருந்து துபாய் வழியாக வந்தவர், இங்கு இறக்குமதி செய்துவிட்டார். அவரது மனைவிக்கும், அவரின் மகளுக்கும் உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள். ஆனால் COVID-19 கண்டறியப்படும் முன் அவர் அலுவலகமும் சென்றுள்ளார். இப்பொழுது அவரின் அலுவலகத்தின் அதே தளத்தில் வேலை பார்த்த அனைவரும், வீட்டிலிருத்து வேலை பார்க்க அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். அடுத்த 10 நாட்களுக்கு அவர்கள் தீவிர கண்காணிப்பில் இருக்கப் போகிறார்கள். அலுவலகம் மட்டுமல்லாமல், அவரது அடுக்ககம், அவர் சென்ற இடங்கள், சூப்பர் மார்க்கெட் என, கிட்டத்தட்ட 2666 பேரை அவர் மறைமுகமாக பாதித்திருக்கலாம் என்று கர்நாடக அரசு கூறுகிறது.
இந்த எண் தான் சற்று அடிவயிற்றில் கலவரத்தை உண்டு செய்கிறது. சற்று யோசிக்கவும் வைக்கிறது. 2666 என்ற எண் எனக்கு சற்று குறைவாகவே தெரிகின்றது. உண்மையான எண் சற்று கூடுதலாகவும் இருக்கலாம். அவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணி நடப்பதாக அரசு கூறியுள்ளது. கொரோனா அவர்களில் ஒருவர்க்கு தொற்றி இருந்தாலும், அவர்கள் மக்கள் நெருக்கமான இடங்களுக்கு சென்றாலும் அது மேலும் விரிவடையும்.
அந்த சிறுமியும், அவருக்கும் COVID-19 வைரஸ் பாதிப்பு உள்ளது என கண்டறியும் முன், பள்ளிக்கு சில நாட்கள் சென்றிருக்கின்றார். இப்பொழுது அந்தப் பள்ளி முழுவதும் மூடப்பட்டுள்ளது. அதில் படிக்கும் 1700 மாணவ மாணவிகளும், பணியாற்றும் 300 ஆசிரியர்களும் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களில் சிலருக்கு பரிசோதனை ஆரம்பித்துள்ளதாம். இது ஆரம்பம் என்றே நினைக்கிறேன். முடிவாக இருந்தால் மகிழ்ச்சி.
எப்பொழுதும் இன்ச் இன்சாக நகரும் பெங்களூரின் போக்குவரத்து கடந்த சில நாட்களாக வெகுவாக குறைந்துள்ளது. வேலை நிறுத்தமான நாள் போல சாலைகளும் சற்று வெறிச்சோட ஆரம்பித்துள்ளது. பல அலுவலகங்களும் வீடுகளில் இருந்தே வேலை செய்யப் பணித்துள்ளார்கள்.
கடந்த திங்களன்று 5 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளித்தார்கள். செவ்வாய் 5ம் வகுப்பு வரையான குழந்தைகளுக்கும் அதேபோல காலவரையற்ற விடுமுறை விட்டு விட்டார்கள். கூடவே பல பள்ளிகளில் இந்த வருடம் 5ம் வகுப்பு வரையான சிறுவர்களுக்கு தேர்வு இல்லை என்ற அறிவிப்பும். இதுவரை இந்த கல்வி ஆண்டில் நடந்த, எழுதிய தேர்வுகளை எடுத்துக்கொண்டு மாணவர்களை அடுத்த வருடத்திற்கு தேர்ச்சி செய்ய உள்ளார்கள். குறைவான மதிப்பெண் எடுத்த தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மட்டும் மே மாத வாக்கில் தேர்வு நடைபெறும் என கூறுகிறார்கள்.
இங்கு மூன்று மாதங்கள் விடுமுறை அளித்த காரணத்தினால் பெங்களூர் மக்கள், குறிப்பாக இருவரும் பணிக்கு செல்லும் பெற்றோர்கள், எப்படி குழந்தைகளை சமாளிப்பது? என்ன செய்வது? என்ற யோசனைகளில் இருக்கின்றார்கள். அதனையொட்டி நகைச்சுவைத் துணுக்குகளும் வந்துகொண்டிருக்கின்றன. 'அடுத்த மூன்று மாசம் குழந்தைகள் செய்யும் இம்சைகளை பொறுக்க முடியாமல் அம்மாக்களே மருந்தினை கண்டு பிடித்து விடுவார்களாம்'. ('சரி அப்ப நீங்க மிக்ஸர் சாப்பிட போறீங்களா?' என்பது ஆண்களுக்கான பெண்களின் கேள்வி). நகைச்சுவை கடந்து உற்று நோக்கினால், சற்று சிரமம் தான்.
நண்பர் "என்ன செய்றதுன்னே தெரியலை?" என்றவரிடம் "குழந்தைகளை ஊருக்கு அனுப்பிடுங்க" என்றேன்.
"நாங்க இதுவரைக்கும் தனியா அனுப்பினதே இல்லை" என்று புலம்ப ஆரம்பிக்கிறார். பிரிட்ஜில் வளர்த்தப்பட்ட குழந்தைகளின் நிலையும் இது தான்.
மற்ற வகுப்புகளுக்கும் தேர்வை உடனடியாக நடத்தி ஒரு வாரத்தில் முடிக்க முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகிறது. பொதுத் தேர்வு மாணவர்களுக்கு விடுமுறையை விட்டுள்ளார்கள். தேர்வு நாள் அன்று வந்தால் போதுமானதாம். கூட்டம் கூடும் விழாக்களை கர்நாடக அரசு தடை செய்துள்ளதாகவும் தெரிகிறது.
எது எப்படி இருந்தாலும், வழக்கமான கோடைகால விடுமுறை போல இந்த கோடை விடுமுறை இருக்க வாய்ப்பில்லை. சுற்றுலா, சொந்தங்களின் சந்திப்பு, பயணம் இவை இல்லாமல் அவரவர்களின் வீட்டில் தான் அடைபட்டு இருக்க முடியும். வழக்கமாக வெளியில் சுற்றிக் கொண்டிருப்பது போல் இந்த வருடமும் இருக்கமுடியாது என்பது நன்றாகத் தெரிகிறது. இதுவரை நாம் இந்தமாதிரியான சூழலைக் கடந்ததில்லை என எண்ணுகிறேன்.
பல நாடுகளுக்கும் பரவி உள்ளதால், நேற்று WHO(World Health Org) இதனை தொற்று நோயாக அறிவித்துள்ளது. சீனாவின் மருத்துவர் இது அனைத்து நாடுகளும் இணைந்தால் ஜூன் மாத வாக்கில் காட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்கிறார்.
எப்படி உள்ளது?
கோரோனா பற்றிய செய்திகளை, வீடியோக்களை பார்த்துக் கொண்டு வரும்பொழுது, இது பற்றிய வீடியோ பிபிசியில் கிடைத்தது. சீனாவின் 'வுகன்' நகரத்தில் வாழும் பிரிட்டிஷ் ஒருவரை பிபிசி பேட்டி கண்டு வெளியிட்டுள்ளது. இளம் வயதில் இருக்கும் இவர் இதிலிருந்து மீண்டு வந்தவர். "வழக்கமாக ஆரம்பித்த இருமல் மற்றும் சளி இரண்டு நாட்கள் கழித்து சரியானது போல இருந்தது. அதன் பிறகு மூச்சுத் திணறல் ஆரம்பம். அது சற்றே பயப்படுத்தியது. நிமோனியா வந்தபோது இருந்ததைப் போல 20% மட்டுமே மூச்சு விட முடிந்தது"
கலகலப்பான மக்கள், பரபரப்புடன் இருக்கும் 'வுகன்' நகரம் வெறிச்சோடி கிடப்பதாக கூறுகிறார். குறிப்பாக தனிமை அவரை கொடுமைப்படுத்தியதாக கூறியிருந்தார். நோய்வாய்ப்பட்ட நேரத்தில் அவர் படித்துக் கொண்டும இருந்தாலும், வெளியுலகத் தொடர்பு சமூக வலைத்தளங்களின் மூலம் இருந்தாலும் அந்த நேரத்தில் தனிமை மிகவும் கொடுமையானது என்கிறார். நாடு கடந்து நாடு செல்பவர்களுக்கு, அங்கு நோயினால் பாதிப்பு இருந்தால், அது மிகவும் கொடுமையான உணர்வுதான்.
யூகேவில் 596 பேர் பதிப்படைத்துள்ளனர். இது இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளது. அங்கு வழக்கம் போல 'பாரசத்தமால்' மாத்திரை கொடுத்து அனுப்ப மாட்டார்கள் என்று நினைக்கிறேன். யூகே தமிழ்நாடு போன்ற மக்கள் தொகை கொண்ட, கிட்டத்தட்ட அதே பரப்பளவு கொண்ட ஒரு நாடு. தமிழ் நாட்டில் இருந்த ஒரே ஒரு கொரோனா எண்ணிக்கையும் முறியடிக்கப்பட்டு குணமடைந்துள்ளார். என்னதான் ஊழல் என்று நாம் நம்மூரை கிண்டல் செய்து மட்டம் தட்டிக் கொண்டு இருந்தாலும், இந்த நேரங்களில் தீயாக வேலை பார்த்து விடுவார்கள். ஒரு விஷயம், யூகேவில் வரும் எண்ணிக்கை உண்மையாக இருக்கும். ஆனால் நம்மூரில் நம்ப முடியாது. இருப்பினும் தமிழ்நாட்டில் பயப்படும் படியான சூழல் இல்லை எனலாம். சற்று பயம் கொள்ள வைப்பது பெங்களூரில் இருக்கும் தற்போதைய நிலை.
முன்னெச்சரிக்கை :
சமீபத்தில் சிக்கன் குனியாவின் தூரத்து சொந்த வைரஸ் போன்ற ஒரு காய்ச்சலால் பாதிப்படைந்திருந்தேன். அதற்கான காரணம் என்ன என்று பார்த்தால், முன்னெச்சரிக்கை இல்லாததே. வழக்கமாக பாதிப்படைந்தவர்களை பார்க்க செல்லும் பொழுது நாம் வாய்க்கூடு போட்டுக்கொள்வதில்லை அல்லது பாதிப்படைந்தவர்களும் போட்டுக்கொள்வதில்லை. "அட, நமக்கென்ன வரப்போகுது" என்ற அசால்ட்டான எண்ணம் அல்லது சங்கடமாக இருக்கும் என்பதாகவும் இருக்கலாம். அந்த நேரத்தில் மருத்துவமனைக்கு தெரிந்தவர்களை பார்க்க வரும் 99% நம் மக்கள் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் தான் செல்கிறார்கள். இது போன்ற முன்னெச்சரிக்கைகளில் நாம் பின் தங்கியே உள்ளோம் என நினைக்கிறேன். இதில் நாம் மாற வேண்டும்
ஆனாலும், கொரோனாவை முன்னிட்டு சென்ற வாரத்திலிருந்தே இந்தியாவின் பல இடங்களிலிலும் மாஸ்க் விலை கூடிக்கொண்டே வருகிறது என்ற செய்தியும் சாதாரணமாக கடந்து விட முடியாது. சாதாரண சர்ஜிகல் மாஸ்க் என்று சொல்லக்கூடிய பச்சை நிற அறுவைச் சிகிச்சை வாய்க்கூடு கிடைப்பதில்லை. வருவதே இல்லை என்றும் மருந்தகத்தில் கூறினார்கள். ஒருவித செயற்கை தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த மாஸ்க் இப்பொழுது தேவையா? தேவை இல்லையா? என்று யோசிக்க முடிவதில்லை.
பக்கத்தில் ஒருவர் தும்மினாலும் இருமினாலும் பயப்படக்கூடிய நிலை. தெரியாமல் வழக்கம்போல கேன்டீனில் தும்மிவிட்டேன், பக்கத்தில் இருந்த அனைவரும் என்னை முறைத்துக்கொண்டே சற்று தள்ளிப் போய்விட்டார்கள். அதேபோல ஊரில் இருந்து ஒரு கூரியர் அனுப்ப சொன்னோம். proffessional கூரியர் பாதிக்கப்பட்ட பெங்களூரின் இரண்டு பின்கோடுகளுக்கும் அனுப்ப மறுத்துள்ளனர். ஒரு வழியாக அஞ்சல் அலுவலகம் அதனை வாங்கி உள்ளார்கள். இதன் தீவிரத்தன்மையை உணர முடியும்.
பெங்களூர் நம்மூரோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும் நகரம். கேரளாவை விடவும் பெங்களூருக்கு வந்து செல்லும் மக்கள் அதிகம். ஆதலால், தொடர்ந்து சில வாரங்களுக்கு இங்கும், அங்குமான பயணங்களைத் தவிர்க்க வேண்டியது முக்கியம். சாதாரணமாக நமக்கு வராது என இல்லாமல் பெருத்த முன் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய நேரம். இது பீதியை கிளப்பும் நோக்கில் செய்யப்பட்ட பதிவு அல்ல. பயணம் தவிர்ப்போம். பயம் இல்லாமல் முன்னெச்சரிக்கையாக இருப்போம்.

Sunday, July 02, 2017

தொலைந்துபோன பட்டிமன்றமும், அறச்சலூர் திருவிழாவும்

பள்ளியில் படித்துக்கொண்டு இருந்த 90களின் காலம்.     தொலைபேசி இல்லாத காலகட்டங்களில் சில நிகழ்வுகள் ஆச்சர்யமாக, முறைப்படி திட்டமிட்டது போல நடக்கும்.   கோடை விடுமுறையில் தாய்மாமாவின்  ஊரான அறச்சலூருக்கு செல்வது  வழக்கம்.   சித்திரை மாதம் அறச்சாலை அம்மன் தேர்த்திருவிழா.   பள்ளிகளுக்கு விடுமுறை விட்ட முதல் ஞாயிறு, மாமாவின் பையன்(மாமா என்றுதான் அழைப்போம் - சற்றே எங்களை விட வயது கூடியவர்)  எங்களை அழைத்து செல்ல எப்பொழுது வருவார் என்று காத்துகொண்டு இருப்போம்.  அப்படியே திருவிழாவிற்கு எங்களது வீட்டிற்கு அழைப்பு சொல்லவதற்கும் வருவார்.  ஒரு 15 கிமீ தூரத்தை மிதிவண்டியில் கடந்து வந்து எங்களையும் அதில் அழைத்து செல்வார்.  கீழ்பவானியின்  சிறு மற்றும் சின்னஞ்சிறு கடைமடை வாய்க்கால்கள்  ஓரமாக  எங்கள் பயணம் இருக்கும்.  பங்குனி,  சித்திரையிலும் பச்சை போர்த்திய வயல்வெளிகளின் ஊடாக,   வயல்களின் ஓரங்களில் இருந்து வரும் தண்ணீர் தெறிக்க, வரப்புகளின் இடையில் பயணப்படுவோம்.  


பள்ளியூத்து அருகே நிறைய நகப்பழ(நாவல்பழ)   மரங்கள்  சாலையின் இரு  ஓரங்களிலும்  ஆசையை தூண்டும்.  அங்கு வண்டியை நிறுத்தி கல் அல்லது  தடி எடுத்து எறிந்து, பொல பொல  என கீழே விழும்,   மண் ஒட்டிய,  சற்று பிஞ்சாகவும், பழமாகவும்  உள்ள பழங்களை ஊதி சாப்பிட்டுக்கொண்டு வண்டியை விடுவோம்.   நாகமலையின்   மொட்டைப்பாறைகளில் செங்குத்தாக ஏறுவது,  நாகமலையை  ஒட்டி செல்லும் கீழ்பவானியின் பெரிய கால்வாயில் ஆனந்தக் குளியல்,   இசைக்கல்வெட்டை தட்டி பார்த்தால் சத்தம் வரும் என  தட்டிப்பார்ப்பது  ஆகியவை ஒவ்வொரு வருடமும் தவறாமல் செய்யும் கோடைவிடுமுறையின் நேர்த்திக்கடன்கள்.   
அறச்சலூர்   இசைக்கல்வெட்டு,  கிமு 2ம் நூற்றாண்டில் சமணர்களால் செதுக்கப்பட்ட   இசையைப்பற்றிய குறிப்புக் கல்வெட்டுகள் என்ற கற்பூரவாசனையை அப்போது அறியாதவன்


  தேர்த்திருவிழா இருவாரங்களுக்கு மிக சிறப்பாக நடைபெறும்  குறைந்தது 10 நாட்களுக்கு இரவு கலை நிகழ்ச்சிகள்  நடைபெறும்.  எங்கள் ஊரிலிருந்து பயணம் செய்யும்போது என்ன என்ன நிகழ்ச்சிகள் என்று தொண தொண என கேட்டுக்கொண்டு செல்வது வழக்கம்.     ஊரில் இறங்கியவுடன் கலை நிகழ்ச்சிக்கான நிகழ்ச்சிநிரல் அட்டவணையை பார்ப்பதே ஒரு மகிழ்வாக இருக்கும்.    சுற்று பட்டி 18 கிராமங்களுக்கும் அதில் முறை கொடுக்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் ஒரு ஊர் மக்கள் முன்னின்று ஒரு கலைநிகழ்ச்சியை நடத்துவார்கள்.   பெரும்பாலான இரவுகளில்  அந்தந்த  ஊர் நடிகர்களும், இயக்குனர்களும் பங்குபெறும்  நாடகம் நடைபெறும், கடைசி நாளன்று சிறந்த நாடகங்களுக்கான, நடிகர்களுக்கான, இன்னும் பிற  பரிசுகளும் வழங்கப்படும் .    

விழாவின் முக்கிய நாளான புதன் இரவில் இரண்டு,  மூன்று கலை நிகழ்ச்சிகள்,  இடையில் 1 மணி நேரம் விண் அதிரும் பிரமாண்டமான  வாணவேடிக்கையும் இடம்பெறும்.     அதில் ஒன்றாக பட்டிமன்றம் கண்டிப்பாக இடம்பெறும்.   அணிக்கு மூவர், புரியாத வயதிலும் சுவையான சம்பவங்களால், குட்டி கதைகளால் கோர்க்கப்பட்ட தெள்ளு தமிழ் பேச்சுக்களை கேட்க மிக அருமையாக இருக்கும்.     நடுவரும் நாம் எதிர்பார்க்காத தீர்ப்பை வழங்கி விடுவார்.  பட்டிமன்றத்தைப் பார்ப்பதற்கு,  உட்கார இடம் கிடைக்குமளவுக்கு கணிசமான  கூட்டம் இருக்கும்.     அந்த நேரங்களில்  தான்,  திரைப்பாடலுக்கு நடனம் ஆடும்,  ஆடல் பாடல் நிகழ்ச்சி பிரபலமான காலகட்டம்.   அபிநயா, நீக்ரோ பாய்ஸ் என இரு பெரும் நடனக்குழுவை கூட்டிக்கொண்டு வர சண்டை நடக்கும் என கேள்விப்பட்டதுண்டு.  

இவ்வாறுதான் பட்டிமன்றம் எனக்கு அறிமுகமானது.    அதன் பின்,  எங்கள் ஊர்  மொடக்குறிச்சி   கோவில் கும்பாபிஷேகத்தின்போது சாலமன் பாப்பையா அவர்கள்  நடுவராக வந்திருந்த பட்டிமன்றம் நினைவில் உள்ளது.     பிறகு,  தனியார்  தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்ட புதிதில்,   தீபாவளி, பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகளில் பட்டிமன்றதில் ஆரம்பித்து அனைத்து நிகழ்ச்சியையும் வாய் மூடாமல் கண்டுகளித்ததுண்டு.  நிறைய தனியார்  தொலைக்காட்சிகள்  வர ஆரம்பித்ததும்,  விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகளின் மீதான கவர்ச்சி வெகுவாக குறைந்த இன்றைய கால கட்டத்திலும்,  கொஞ்சமேனும் பார்க்கலாம்  என நினைப்பது சாலமன் பாப்பையா அவர்களின் பட்டி மண்டபமே,  வணிக மற்றும் அரசியல் கட்டமைப்புக்குள் இருந்தாலும்      

ஒருமுறை, இங்கு தமிழ் தெரிந்த கன்னட நண்பர்களிடம் நமது கலாச்சாரங்களைப்பற்றி கார,  சாரமாக பேசிக்கொண்டு இருக்கும்பொழுது 'பட்டிமன்றம் போன்ற  நிகழ்ச்சிகள் அவர்களது தொலைக்காட்சிகளில் இல்லை' என்று அவர்களும்  நமது பட்டிமன்றங்களைப் பார்ப்பதாக கூறி  நம் பெருமையை  உணர்த்தினார்.  மற்ற மொழிகளில் இந்த நிகழ்வு தற்காலத்தில் இருக்கின்றதா என ஆராயவேண்டியுள்ளது.

பெரும்பாலும் தொலைக்காட்சியில் மட்டுமே  இன்றைய காலத்தில் உள்ள பட்டிமன்றத்தை, சில மாதங்களுக்கு முன் எங்களின்  'ஈரோடு வாசல் குழுமம்',  'வாட்ஸ் அப்' மூலம் நேரடி பட்டிமன்றம் நடத்தி பழைய நினைவுகளை மீட்டி,  தொழில்நுட்ப வளர்ச்சியை இவ்வாறான நல்லவற்றிற்கும்,  பயன்படுத்தி கொள்ளலாம் என்று பறைசாற்றியது.  அதேபோல,  சென்ற வாரம் ஈரோடு சம்பத் நகர் நவீன நூலகத்தில் 'ஈரோடு வாசல்' நட்புக்களை கொண்டு நடந்து முடிந்திருக்கும் பட்டிமன்றம் அதனை, அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் முயற்சி எனலாம்.    பட்டிமன்றத்தை பற்றி எங்கள் குழுவின் தொடர் பேச்சுக்கள், இந்த நினைவலைகளை மலர செய்தது.

சில வருடங்களுக்குப்பின், நாங்கள் வந்த மிதிவண்டி, TVS50 மற்றும் பைக்காக மாறியது.  கீழ்பவானியின் தண்ணீர் வரத்து கடைமடைகளுக்கு  கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.   ஆடல், பாடல் எனும் குத்தாட்டங்கள்  நாடகங்களையும்,  பட்டிமன்றத்தையும்,  கொஞ்சம் கொஞ்சமாக பின்னுக்குத்தள்ளிக் கொண்டு இருந்தது.


இன்று, வேரை விட்டு விலகி இருக்கும் நானும் திருவிழாவிற்கு  செல்ல முடிவதில்லை.  பட்டிமன்றமும்  அங்கு நடப்பதில்லை, ஒரு சில நாடகங்களே  நடக்கிறது.   நாடகங்களுக்காக அப்பொழுது இருந்த நிரந்தர மேடை, இப்பொழுது காவலர்களின் குடியிருப்பாக உள்ளது.   சென்ற வழிகள்,  'தார் ரோடு'களா மாறி , கீழ்பவானியின் கடைமடை வாய்க்கால்கள் 'கான்க்ரீட்' போடப்பட்டு தண்ணீர் இன்றி, காய்ந்துபோன எலும்புக்கு கூடுகளாக காட்சி அளிக்கின்றது. 

வாழ்ந்தோம் வெள்ளிமலை எனும் கல்லூரியில்..













வாழ்ந்தோம் வெள்ளிமலை எனும் கல்லூரியில் 

வெள்ளி மலைக்கு களைகட்டி வரும் காலை நேர பேருந்து ...
அந்நேர வராந்தா அரட்டைகள்..
பால்கனியிலிருந்து அடித்த 'சைட்கள்'....
பேசுவதற்கு பயப்பட்ட தாவணித் தோழிகள்...
அச்சத்துடன் வார்த்தைகள் சில பேசியதை
ஓட்டித்தள்ளிய சக மாமன், மச்சான், பங்காளிகள்...
பேராசிரியர் வாரா வகுப்புகள்...
வந்த வகுப்புகளின் தூக்கங்கள்...
அவர்களின் கேள்விக்கு முழித்த வேளைகள்...
அதற்கென வாங்கிய வசவுகள்..
'அசைன்மென்ட்' எழுதாமல் வெளியேற்றப்பட்ட நாட்கள்...
ஆங்கிலம் பேச கட்டாயப்படுத்தியும்,
'yes , no' என சமாளித்து
தமிழில் பேசி 'பைன்' கட்டியது...
பயபக்தியுடன் தொட்டுப்பார்த்த
மோனோகுரோம் கணினிகள்...
பகிர்ந்துகொள்ளப்பட்ட மதிய உணவு...
இறுதியில் உண்ண இருக்கும் வடையை பிடுங்கித்தின்று
அந்த கணத்தில் எதிரியான நண்பன்..
அதற்காக முதலில் முடிக்கப்பட்ட வடைகள்...
கல்லூரியில் இருந்து பிரிவுக்கு
கேலியும் கிண்டலுமான நடை..
கல்லூரி பிரிவில் செய்த, செய்ய வைத்த 'ராக்கிங்'...
ஜெயமாருதியில் மாற்றப்பட்ட
திரைப்படங்களுக்காக 'ஸ்ட்ரைக்' நடந்த வெள்ளிகள்...
அதற்கு கூறப்பட்ட அகில உலக காரணங்கள்...
கல்லூரி அளவில் கடலை போடுவதற்காக சேர்ந்த NSS...
சேலைகளில் வலம் வரும் தேவதைகளுக்கான ஆண்டுவிழாக்கள்..
கலவரமான கல்லூரி தேர்தல்கள்..
மொத்தமாக வாங்கிக்கட்டிக்கொண்ட 'வெல்கம் பார்ட்டி'கள்...
சில சின்ன சண்டைகள்..
பேசாமலிருந்த நாட்கள்..
வருத்தத்துடன் விடைபெற்ற இறுதி நாட்கள்..
இதில் விடப்பட்ட இன்னும் இன்னும்....

------------------------------------------------------------
மொடக்குறிச்சி கிருஷ் (23-June-2017)
--------------------------------------------------------------------
திடீரென எங்கள் UG வாட்ஸ் அப் குழுமம், களைகட்டி மலரும் நினைவுகளை மீட்டியது... அதிலிருந்து.......


குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...