Showing posts with label Personality. Show all posts
Showing posts with label Personality. Show all posts

Monday, November 16, 2020

டாக்டர் செலின், US-மொடக்குறிச்சி

சென்ற வாரத்தில் எங்களது ஊர் மொடக்குறிச்சி மீண்டும் தலைப்புச் செய்திகளில்.  சென்ற முறை 1996-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தல் நடந்த போது இருக்கும்.  தினமும் நூறு, ஐம்பது பேராக எங்கள் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்கள்.  தினமும் மாலை தொலைக்காட்சி செய்தியில் பரபரப்பாக பேசப்படும்.   வேளாண் பிரச்சினைகளில் கவனத்தை ஈர்ப்பதற்காக  கீழ்பவானி விவசாயிகள் சங்கத்தின் மூலம் 1033 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு கின்னஸ் சாதனை அடைந்தது.  எங்கு சென்றாலும் அதனைப் பற்றியே கேட்பார்கள்.  நக்கலின் உச்சமாக "நீயும் எலக்சன்ல நின்னயா" என்பார்கள்.    இந்த முறை அமெரிக்காவின் செலின் ராஜ் கவுண்டர் அவர்கள் முக்கியச் செய்தியாக இடம்பெற்றுள்ளார்.  அவரது அப்பா ராஜ் அவர்கள் படித்த பள்ளி தான், மொடக்குறிச்சி அரசு மேல் நிலைப்பள்ளி.  தற்போது அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி.

 

வருடா வருடம் நடக்கும் பள்ளியின் இலக்கிய மன்ற விழா மற்றும் ஆண்டு விழாக்களில் நாவல் பழ  மரத்தடியிலும், வேப்பமரத்தின் நிழலில் உட்கார்ந்து கொண்டுதான் சிறப்பு விருந்தினருக்கு காத்திருப்போம்.

அந்த காத்திருக்கும் மாலை வெயில் நேரத்தில், சின்ன கல்லை எடுத்து, சற்று தள்ளி உட்கார்ந்திருக்கும் நண்பனின் முதுகில் தூக்கி போட்டு விளையாடி சுவாரசியம் ஆக்கிக் கொண்டதுண்டு.   எப்பொழுதும் பரிசளிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு முன்பாக சிறப்பு விருந்தினரின் பேச்சு இருக்கும்.  கலை நிகழ்ச்சிகளுக்கு ஆர்வத்தோடு காத்திருக்கும் வேளையில்,  சிறப்பு விருந்தினரின் பேச்சு, அவர் கூறும் குட்டிக் கதைகளைப் பொறுத்து ஆர்வம் வரும்.  

 

பெரும்பாலும் சிறப்பு விருந்தினராக SKM நிறுவனத்தின் எஸ்கே மயில்சாமி கவுண்டர் அவர்கள் தான் அழைக்கப்பட்டு இருப்பார்கள்.  எங்கள் பள்ளியில் படித்த அவர், ஒரு சிறந்த தொழிலதிபராக, தனித்துவம் மிக்கவராக இருந்தார் அப்போதும், இப்போதும்.  பள்ளிக்கு கேட்கும் நேரங்களில் நிதி வழங்கிக் கொண்டிருந்தார்.  கீழ்மட்டத்தில் இருந்து படிப்படியாக வளர்ந்த அவரது வரலாறை, பேச்சைக் கேட்கக்  கேட்க நம்மில் ஒருவர் என சுவாரசியமும், ஊக்கமும் வரும்.   அவை மூளையின் ஓரத்தில் எங்கோ ஒரு பக்கம் உட்கார்ந்து, வேண்டிய நேரத்தில் நம்மை உசுப்பி விடும்.  சில வருடங்கள் கழித்து எஸ்கே மயில்சாமிக் கவுண்டர் எனும் அவரின் பெயரை,  எஸ்கே மயிலானந்தன் என மாற்றிக்கொண்டார். அவர் மாற்றிக்கொண்ட சமயம்,  நுயுமராலஜி படி மாற்றிக்கொண்டார் என நினைத்துக் கொண்டுதான்  இருந்தேன்.  அதன் பிண்ணணி அப்பொழுது தெரியவில்லை.  அவரது SKM நிறுவனம், இன்று நான்கு கிளை நிறுவனமாக பெருகி, எங்கள் பகுதியில் பலருக்கும் வேலை வாய்ப்பளிக்கும் சிறந்த நிறுவனம்.  அவரது பிறந்த ஊரை தத்து எடுத்து,  அவர்களின்  குழந்தைகளுக்கு,   உயர்கல்வி வரை படிக்கவும் வைத்து வருகிறார்.  வாழ்க வளமுடன் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு, வேதாந்திரி மகரிஷிக்குப்பின் அதனை வழிநடத்தி வருகிறார்.

 

சரி, எதற்காக இந்த ப்ளாஸ்பேக்.  SKM அவர்களுக்கும், டாக்டர் செலின் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்?

இன்று அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் அவர்களின் கொரோனா குழுவில் இடம்பெற்றுள்ள பெண் மருத்துவர், செலின் கவுண்டர் அவர்கள் என்பது அறிந்ததே.   சென்ற வாரம் அவரைப்பற்றிய செய்திகள் வந்த நேரத்தில், எனது வாட்ஸ்அப் முழுக்க நண்பர்கள் "மச்சி, உங்க ஊர்க்காரங்க போல" என அவரின் பார்வர்டுகளால்  நனைத்துக் கொண்டு  இருந்தார்கள்.  நண்பர் ஒருவர் எனக்கு வாழ்த்தும் கூறினார்.   காரணம் மொடக்குறிச்சி அவரின் பூர்விகம் என்பது மட்டும் தான்.  இது அவரது தனிப்பட்ட முயற்சி, சொந்த சாதனை தான்.  அதையும் தாண்டி, அவர் நான்கு முறை பள்ளிக்கு வந்து, அவரின் டிரஸ்ட் வழியாக நிறைய உதவிகளை செய்துள்ளார் என்பது தான் கூடுதல் மகிழ்ச்சி.

 

அந்த புகைப்படங்களில், நாங்கள் பள்ளியில் உட்கார்ந்து கொண்டு இருந்த திடலில்,  அதே மேடையில் சிறப்பு விருந்தினராக அலங்கரித்து மாணவர்களுக்குப் பரிசை வழங்கிய புகைப்படங்கள் வலம் வந்தன.  நாங்கள் SKM அவர்களின் பேச்சை விளையாட்டாகக்  கேட்டு  உள்வாங்கிக் கொண்டது போல,  அந்தக் கூட்டத்தில் எத்தனையோ மாணவர்கள் டாக்டர் செலின் அவர்களின் உரையைக் கேட்டிருக்க கூடும்.  அது அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் சிறு பொறியை கிளப்பிவிடும்.  அந்த சிறு பொறி அவர்களுக்கு ஊன்றுகோலாக, அவர்களை உலகம் முழுக்க எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்ய உதவும். 

 

அந்த மேடையை நோக்கி அவர் நடந்து வரும் பொழுது, அந்த சிறுவர்கள் வேடிக்கை வைத்திருப்பார்கள். அவர்களுக்குள் பேசிக் கொண்டிருப்பார்கள்.   'இவங்க தான் இன்னிக்கு பேசறதுக்கு வந்திருக்காங்களா?  எங்கிருந்து வர்ராங்க?  நம்மூர்லயா படிச்சாங்க?  என்னடா, பேன்ட்  சர்ட்டெல்லாம் போட்டுருக்காங்க?'  என்று பல வித கேள்விகள் வந்திருக்கக் கூடும்.  இத்தகைய கேள்விகள் தான் அவர்களுக்குள் ஒரு 'ஸ்பார்க்'. 'அப்ப நாமும் படிச்சால் அங்க போக முடியமா?  இவங்க மாதிரியே சாதிக்க முடியுமா?'  எனும் அடுத்தடுத்து அவர்களை யோசிக்கத் தூண்டும்.     

 

அந்த வியப்பு, ஆச்சரியம் நிறைந்த கிசுகிசு கேள்விகள்,  அவர்களுக்கு எங்கோ ஒரு பொறியை, படிப்பின் தாகத்தை, அமெரிக்காவிற்கான கனவை உருவாக்கி விட்டிருக்க கூடும்.  இன்று இவரின் தந்தையின் கனவுக்காக பள்ளிக்கு உதவி செய்து கொண்டிருப்பதைப் போல, அந்த முணுமுணுத்த கூட்டத்திலிருந்து ஒருவர்,  பல நாடுகளுக்கும் சென்றுவிட்டு வந்து மேலும் பலரைத் தூக்கி விடலாம்.   அதுதானே இன்றைய மற்றும்  நாளைய தலைமுறையின் தேவையாக இருக்கின்றது.

 

அவர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்றாரா எனத் தெரியவில்லை.   அடுத்த முறை வந்தால் அவர் அங்கேயும் செல்ல வேண்டும்.  நம்மூரில் நாம் அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் விஷயத்தை அவர் ட்வீட்டாக பதிவு செய்திருந்தார்.  இதுகூட பலருக்கும் அவரவர்களின் பள்ளிக்கு ஏதாவது செய்வோமே என தோன்றி இருக்கும். இவருக்கும் கமலா ஹாரிஸ்க்குமான ஒற்றுமை.   இருவருமே இரண்டாம் தலைமுறையாக அமெரிக்காவில் இருப்பவர்கள்.  முதல் தலைமுறை முயற்சி எடுத்து, வாயுப்புக்களைப் பயன்படுத்தி சென்றதால் தான், இவர்களால் அங்கு சாதிக்க முடிந்தது.  பேச எவ்வளவோ அவரின் சாதனைகள் இருக்கும்போது சமூக வலைதளங்களில் வழக்கம்போல ஏதோ ஒரு எதிர்மறையை எடுத்துக்கொண்டு அவரது பெயர் பற்றி  சர்ச்சையை கிளப்பிக்கொண்டு இருந்தார்கள்.   SKM  அவர்கள் போலவே அவரும் செய்யலாம். 

 

கிட்டத்தட்ட நான் ஊருக்கு வந்ததில் இருந்து, கொரோன ஊரடங்கு தளர்வுக்குப் பின் மீண்டும்  கல்யாணம், விசேஷங்கள் என பரபரப்பாகவே, எனது  தனிப்பட்ட நேரம்  நிரம்பி வழிந்து கொண்டே இருக்கின்றது.  பல வருடங்களுக்குப் பின் இங்கு இருப்பதால் கொரோன பயத்தோடு முக்கியமானவற்றில்  பங்கு கொள்கிறேன்.

பெங்களூர், சென்னையில்  இருக்கும் என்  நண்பர்கள் இதன் காரணமாகவே ஊர்ப்பக்கம் வரவில்லை என்கிறார்கள். "அட, அங்க இருந்தா சின்னச் சின்ன விசேசம் ஒவ்வொன்னுக்கும் கூப்பிடுறாங்க.  போகலைன்னா சங்கடம் வேற.  கோவிச்சுக்கறாங்க".   டாக்டர்  செலின்  போன்ற சாதனையாளர்கள், இவை எல்லாவற்றையும் கடந்து விட்டுத்தானே சாதனைகள் செய்கிறார்கள்.

 

பெரும்பாலான சாதனையாளர்கள் அந்த வட்டத்தை உடைத்து வெளியேறியதால் மட்டும் தான் அவர்களால் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடிகிறது.  ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருக்கும்போது, பார்வை விரிவடைய மறுக்கின்றது.  பார்வை விரிவடைய, வெளிவட்டத்தின் வாய்ப்புகளை அறிந்துகொள்ள, உலகத்திற்கான திறவுகோலை வழங்க,  இத்தகைய சிறப்பு விருந்தினர்களின் நேரடிப் பங்கேற்பு உதவும்.  அவர்கள் நம் ஊரில் இருந்து சென்றவர்கள் எனும்போது நாமும் அதனைச் செய்ய முடியும் எனும் நம்ம்பிக்கை ஊற்று பிறக்கிறது. 

 

எங்கள் பகுதியில் இருந்து வெளியில் வந்து பிரபலமானவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.  அவர்கள் அல்லது அவர்களின் வழித்தோன்றல்கள் எங்கு இருந்தாலும், மீண்டும் வேர்களை நோக்கி விழுதுகளைப் பரப்பி மற்றவர்களைத் தூக்கிவிடுவதென்பது கண்டிப்பாக பாராட்டப்பட  வேண்டிய விஷயம்.   அதுவும் அவரின் அப்பா படித்த பள்ளி என்பது கூடுதலாக பாராட்ட வேண்டிய விஷயம்.  வாழ்த்துக்கள்  டாக்டர் செலின். 

 #mondaymotivation #MotivationalStories

   

 



Saturday, September 26, 2020

எஸ் பி பாலசுப்ரமணியம்

நேற்றும் இன்றும் FMல்  கேட்டவரைக்கும் எஸ்பிபி பாடல்கள்.   அப்பொழுதெல்லாம் திருச்சி வானொலி நிலையத்தில் காலை 7.30 க்கு  அரை மணி நேரத்திற்கு பாடல்களை ஒலிபரப்புவார்கள்.  பள்ளிக்கு கிளம்பிக்கொண்டே பாடல்களைக்  கேட்பது தான் வழக்கம்.  தொகுப்பாளர்கள் ஒரு சில நேரங்களில், பாடலுக்கு முன்பே படத்தின் பெயரை கூறிவிடுவார்கள்.  பிறகு பாடகர்களின் பெயரைக் குறிப்பிடுவார்கள்.  சில நேரங்களில்  படத்தின்  பெயருக்கு முன்பே,  பாடகர்களின்  பெயரைக் குறிப்பிடுவார்கள்.    'நிகழ்ச்சியின் தொடக்கமாக படிக்காதவன் திரைப்படத்தில் இருந்து  எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் சித்ரா பாடிய பாடல்'.  'அடுத்ததாக காக்கி சட்டை திரைப் படத்திலிருந்து எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் ஜானகி பாடிய பாடல்'  என்பார்கள் .   எஸ்பி பாலசுப்ரமணியம் என்று ஆரம்பித்தால் புதிய பாடல் என்று ஒரு குட்டி குதூகலம் அந்த கணத்தில் தோன்றி மறையும்.   'டிஎம்  சௌந்தர்ராஜன் அல்லது பிபி ஸ்ரீனிவாஸ்' என்று தொகுப்பாளர் ஆரம்பித்தால், ஏதோ பழைய பாடல் போடப் போகிறார்கள் என்று சுவாரசியம் குறைந்து விடும்.  அதற்கடுத்து படத்தின் பெயரைக் குறிப்பிடும்போது இது கமல் படமா?  அல்லது ரஜினி படமா?  என்பதில் மனம் உற்சாகமடையும்.

எங்களைப்  பொறுத்தளவில், பாடலை யார் பாடி  இருந்தாலும்,  ரஜினி பாட்டா ?  கமல்  பாட்டா? என்பதுதான்.  பள்ளிக்கு பையைத்  தூக்கிக் கொண்டு செல்லும் பொழுது  'இன்னிக்கு ரெண்டு கமல் பாட்டு, ஒரு ரஜினி பாட்டு தான்டா'  என்று தான் சண்டைகள் நடக்கும்.  ஊர் முடிந்த பின் வரும் கிணற்றை ஒட்டிய வளைவு தாண்டி, விரியம்பழ மரத்தின் அடியில் நடந்துகொண்டே தான் இந்த உரையாடல் நடந்தது.  சிலவற்றை பற்றி யோசிக்கும் பொழுது, அந்த இடமும் சம்பவமும் மனதில் காட்சிபோல பளிச்சென்று விரிகிறது.    அப்பொழுதெல்லாம் எஸ்பி பாலசுப்ரமணியம், மனோ, மலேசியா வாசுதேவன், ஜானகி, சித்ராவை யார் என்றெல்லாம் தெரியாது.   கமலுக்கும், ரஜினிக்கும் மட்டும்  எஸ்பி பாலசுப்ரமணியம்  பாடுவார்கள்;  சிவாஜி, எம்ஜிஆர் என்றால் டிஎம்  சௌந்தர்ராஜன் என்று குத்துமதிப்பாக பேசிக்கொள்வோம்.   அதன் பிறகுதான் படிப்படியாக தெரிந்தது, பாடல்களைப் பின்னணியில் பாடியவர்கள்  வேறு, அதனை முன்னிருந்த நடிப்பவர்கள் வேறு என்பது. 

"மண்ணில் இந்த காதல் இன்றி"  பாட்டு ஹிட் ஆனபோது  பாட்டு புத்தகம் வாங்கி,  பாடலை அவரோடு சேர்ந்து மூச்சுவிடாமல் பாட  முயற்சி செய்தது பலர். அந்த கால கட்டத்தில்  தான் இவர் ஹீரோவாகவும் தடம் பதித்தார். 
 

தேர்வுகளுக்கு இரவில் படித்துக் கொண்டிருக்கும்பொழுது, வீட்டின் அருகில் ரவி அண்ணன் அவர்களின் டெய்லரிங் கடை  இருக்கும்.  கமல் ரசிகர். அவர்தான் அப்பொழுது ஏரியாவின் பிரபலமான டெய்லர்.  பத்து, பதினோரு மணிக்கு மேல் இரவில் பல மென்மையான பாடல்கள் அங்கிருந்து மிதந்து வரும்.   பெரும்பாலும் கமலஹாசன் + இளையராஜா + எஸ்பி பாலசுப்ரமணியம் கூட்டணி பாடல்கள். பாடப் புத்தகம் சற்று நேரம் படித்தாலே தூக்கம்  வரும்.  கூடவே இவர்களின் கூட்டணி தாலாட்டும், . படிக்கணும் என்று இருக்கும் நேரத்தில்   தூங்க வைத்துவிடும்.  அடுத்தநாள்  'அண்ணா.. என்னண்ணா எப்ப பார்த்தாலும்  சோகப் பாட்டு போடறீங்க, ராத்திரில எல்லாம் நல்ல அடி பாட்டு போடுங்கண்ணா.. அப்ப தான தூக்கம்  வராது"  என்பேன்.  "குமாரு,  இந்த பாட்டெல்லாம்  அருமையா  இருக்கும், வேலை செய்யறதே  தெரியாம வேலை பார்க்கலாம்" என்பார்.   அவர் அன்று கூறியது,  எனக்குப் புரியவில்லை.  ஆனால் நண்பர்களோடு இரவுகளில் வேலை செய்யும் நேரங்களில்  இளையராஜா + எஸ்பிபி பாடல்களில் தான் வாழ்ந்தோம்.  இன்றும்  கூட இரவு நேர அலுவல் வேலைகளிலோ அல்லது மனது அழுத்தமாக இருக்கும்போதோ அவர்களே சரணம்.  கல்லூரி நண்பர் கூட அப்போது கூறுவார் "இன்னைக்கு ரெக்கார்ட் நோட்ட முடிக்கணும்னா,  விடிநைட் உட்காரணும்.  இளையராஜா பாட்டோட முடிச்சிடலாம்" என்பார்.  இங்கு இளையராஜா எனில், எஸ்பிபியும்  கூடவே வந்துவிடுவார். 

கல்லூரி ஹாஸ்டலில் நண்பன் ஒருவனின் டேப்ரிக்கார்டர் இருக்கும்.  ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் கேசட் கடையில் பதிவுசெய்த 90M கேசட் கூடவே இருக்கும்.   கல்லூரி முடித்த மாலைகளில்  ஒரு மணிநேரம் அவரை ரசித்த பின்பு தான் அந்த நாள் முழுமையடையும்.    மௌன ராகம் திரைப்படத்தின் ' நிலாவே வா... செல்லாதே வா..'  பாடல் தான் அதில் முதல்.   'உனக்கு புடிச்ச பாட்டு என்ன?' என்று கேள்விக்கான பதில் எப்பொழுதும் இந்த பாடலே. சற்று சோகம் கலந்த மென்மையான பாடல்.  அதற்கு அடுத்ததாக இருந்த பாடல்   "மன்றம் வந்த தென்றலுக்கு.. மஞ்சம் வர நெஞ்சம்  இல்லையா ?".  இந்த பாடலில் அவரின் குரல் மெய் மறக்க வைக்கும்.   இந்த இரண்டு பாடல்களும் ரீவைண்ட் செய்து,  ரிப்பீட் மோடில் அதிகப்படியாக கேட்டவை.  "டேய், கெஸட்டுக்கு வாய் இருந்தா,  கதறிடும் டா" என்பார்கள்   அந்த பாடல்கள் தான் பெரும்பாலான நேரங்களில்  ஹம்மிங் ஆகும்.  அவரின் குரலில் அந்த  உணர்வுகளை நமக்கு கடத்தி விடுவார் இந்த காந்தக் குரலோன்.  

ரஜினி அவர்களுக்கு  அவரது பிம்பத்தை உயர்த்திப் பிடிக்கக் கூடிய பாடலை பாடியவர் எஸ்பிபி.    அண்ணாமலையில்  "வந்தேண்டா பால்காரன்",  பாட்ஷாவில் "நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்", அருணாச்சலத்தில்  "அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா", முத்து படத்தின்   "ஒருவன் ஒருவன் முதலாளி" , படையப்பாவில் " என் பேரு படையப்பா படையப்பா இளவட்ட நடையப்பா" என வரிசையாக  ரஜினி அறிமுகம் ஆகும் பாடலை எஸ்பிபி மட்டுமே பாடுவார்.  இந்த பாடல்கலில் ரஜினிக்கு ஒரு மாஸ் ஹீரோ பிம்பத்தை ஏற்படுத்தியது, வைரமுத்துவின் வரிகளோடு இவரின் அதிரும் குரல் தான். பாபாவின் தோல்விக்கு சென்டிமென்டாக, எஸ்பிபி அறிமுகப் பாடலைப் பாடாதது  தான் காரணம் என்றும்  கூறுவார்கள். அதன்பிறகு சந்திரமுகியில் 'தேவுடா தேவுடா' பாடலை மீண்டும் அவர் பாடியதுதான், அந்த பட வெற்றிக்கு வெற்றிக்கு காரணம் என்றும் கூறுவார்கள்.   

நாயகனின் புகழ் பாடும் பாடல்கள் அந்த வரிசை என்றால்,  அதன் பிறகு ஒரே பாட்டில் பெரிய ஆளாக மாறும் பூஸ்டர் பாடல்கள் வேறு ரகம்.   அண்ணாமலை திரைப்படத்தில் "வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்" என்ற பாடல்.  அந்த பாடலில்  வரும் "அடே.. நண்பா உண்மை சொல்வேன்... சவால் வேண்டாம்... உன்னை வெல்வேன்" வரிகளுக்கு இவரின் ஹை பிட்ச் குரல், உற்சாக மூட்டும்.  நண்பர்களிடம் செல்ல சண்டைகளுக்கு ,  இந்த பாடல்களை விளையாட்டாக பாடியதும் உண்டு. மற்றுமோர் பூஸ்ட் பாடல் என்று கூறினால்  "வெற்றிக்கொடி கட்டு மலைகளை முட்டும் வரை முட்டு" தான்.  படையப்பா திரைப்படம் வந்த நேரம், கல்லூரியின் செமஸ்டர்  தேர்வு நேரம்.  ஒவ்வொரு தேர்வுக்கு செல்லும் முன்பும், சென்டிமெண்டாக இந்த பாடலை அலற விட்டு விட்டுத்தான் பரீட்சை எழுத செல்வோம்.  இன்றும் இந்த பாடல்களை கேட்கும்பொழுது உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.   ஆனால்  அந்த படங்களில்  "சிங்கம் ஒன்று புறப்பட்டதே" பாடலை மட்டும் மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடி இருப்பார்.  ரஜினி அவர்கள் இரங்கல் செய்தியில் கூறியது போல, அவரின் வாய்ஸ் ஆக இருந்தது எஸ்பிபி அவர்கள். 

அது ஏனோ துள்ளலான ஜோடியான பாடல் என்றால் எஸ்பிபி அல்லது மனோ தான் படுவார் எனவும், சோகமான பாடல் என்றால் யேசுதாசும், இளையராஜாவும் பாடுவார்கள் என மனதில் பதியப்பட்டு இருந்தது.  
இன்று எனது கணினியில் இருந்த எனக்குப் பிடித்த 80ஸ் பாடல்களை ஒரு பார்வையிட்டேன்.  அந்த 90M கேசட்டில் இருந்தவையும்  இந்த போல்டரில் இருக்கும்.  ரஜினி, கமல் பாடல்களை விட்டுவிட்டு பார்த்தால்  மோகன், ராமராஜன் பாடல்கள் என பலருக்கும் அவர்களின் குரலுக்கு தகுந்தவாறு பாடியவராக எஸ்பிபி தான்  இருந்தார்.  அவரின் வாய்ஸ்  மாடுலேஷன், அந்தந்த நடிகரோடு பொருந்திப் போகும்படி பாட்டு இருக்கும்.   தெலுங்கு தசாவதாரம் படத்தில், அனைத்து கமலுக்கும் வித்தியாசமாக குரல் கொடுத்த பல குரல் மன்னன்.    

இளையராஜாவை கொண்டாடும்  போது  கூட இவரும்  வந்து விடுகிறார்.   இருவரும் இணைந்த பாடல்கள் தான், மழையோடு வரும் வானவில் போல அழகானவை. இறுதிக்காலத்தில் நண்பர்களுக்குள் வரும் பிணக்கு  போல இருந்தாலும், இளையராஜா அவர்கள், எஸ்பிபி மருத்துவமனையில் இருந்த போது, 'பாலு எழுந்து வா, நாம் மீண்டும் ஒரே மேடையில் கச்சேரி செய்வோம்' என்று அழைத்தார்.  எஸ்பிபி அவர்களும்  எழுந்து வருவார்.  இந்த இசை நண்பர்களை ஒரே மேடையில் பார்க்கலாம் என ஆவலாகத்தான் இருந்தோம்.  ஆனால் காலம் பாடும் நிலாவிற்கு இசைஞானியை இரங்கற்பா பாட வைத்துவிட்டது.  சும்மா வேணும் இசையை  ரசிப்பதற்காகட்டும், சோகத்தில் இருந்து மீள்வதற்காகட்டும், அவரின் குரலோடு தான் பயணத்திலும் பயணிப்போம்.  நிறைவாழ்வு.  நனி நன்றி எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களே.

Tuesday, August 07, 2018

"ஈரோடு எனது குருகுலம்" கலைஞர்

"ஈரோடு எனது குருகுலம்" கரகரத்த குரலில்  கலைஞர் பேச்சை ஆரம்பித்தவுடன் அங்கங்கு சரக்கடித்துக்கொண்டும், சரக்கடித்து முடித்து தம்மடித்துக்கொண்டு இருக்கும் தொண்டர்கள் பரபரப்புடன் தங்களை ஆசுவாசப் படுத்திக்கொண்டு  இவரின் பேச்சை அமைதியாக கேட்க இவர் பக்கம் திரும்புவார்கள்.   தக  தக என வண்ண சிறு மின் விளக்குகள் உதய சூரியனாகவும், கலைஞராகவும், கருப்பு சிவப்பில்  மின்னிக்கொண்டு இருக்கும்.  இப்படி  கலைஞரை முதன்முதலிலில் பார்த்த இடம்  ஈரோடு வ. ஊ. சி. திடலில் தான். பெரும்பாலான அரசியல் கூட்டம் அங்குதான் நடைபெறும்.   சுமார் ஒரு நாற்பது, ஐம்பது நிமிடங்கள் குறிப்புகளை வைத்துக்கொண்டு, புள்ளி விவரங்களுடன் இடைவிடாமல் அடுக்குமொழியில் பேசிக்கொண்டே செல்வார்.   

தேர்தல் பிரசாரத்திற்கு ஈரோடு வருகிறார் என்றால் எங்கள் ஊரின் உடன்பிறப்புகள் பரபரப்பாவர்கள். ஒரு வாரத்திற்கும் மேலாக அண்ணணின் கடையில் கலைஞரின் கூட்டம் பற்றிய பேச்சாகவே இருக்கும்.  'நாங்கல்லாம்'  என ஆரம்பித்து வெறும் "டீ" குடித்துவிட்டு கட்சிக்கு கொடி நட்ட வரலாரை, அதற்கும் முந்தைய தலைமுறையினர் கூறிவிட்டு இவர்களை உசுப்பேத்திவிட்டு செல்வர்.  'அம்மா கட்சிலயாவது ஏதாவது குடுப்பாங்க, நம்ம கூட்டத்துக்குப்போனா நம்ம கட்சில  என்ன தராங்க' என்று சொல்லிக்கொண்டே கூட்டத்துக்கு செல்வார்கள் கழக உடன்பிறப்புகள்.  

அப்பா ஒரு தீவிரமான கலைஞரின் விசிறி.   2011 க்கான தேர்தலில் "அத்தனை ஊழல் பண்ணிருக்காங்க அவங்களுக்கு போடாதிங்க" என்று காலில் விழாத குறையாக  கெஞ்சியும்,  "கலைஞர தவிர வேற யாருக்கும் போட மனசு வரலை" என மீண்டும் அவருக்கே வாக்களித்துவிட்டு  வந்து கூறியவர்.   அவரைப்போலத்தான் ஊர் பக்கம் பலரும், அதுதான் கலைஞரின் சொத்து, திமுகவின் வாக்கு வங்கி.   மதிமுக துவங்கிய புதிதிலும் இது போன்ற பேச்சுக்களை கேட்டுள்ளேன். மதிமுகவில் இருப்பவர்களே கலைஞருக்கு வாக்களித்ததை இப்படி கூறுவார்கள்.   "சூரியனப் பார்த்தா, கை  அங்க தானா போகுதப்பா" . 

ஆறாம் வகுப்பில் பிடித்தமான ஒரு பிரிவேளை ஓவியம்.  ஓவியம் கிறுக்கி, பழகிக்கொண்டு இருந்த காலங்களில், ஒருநாள் ஏனோ உதயசூரியனைப்போட்டு அப்பாவிடம் காட்டி நற்பெயர் எடுக்க முற்பட்டேன்.     என்னைச் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் கலைஞரைக் கொண்டாடியபோது நானும்தெரிந்தும் தெரியாமல்  அவரையே ஆதரிக்க ஆரம்பித்திருந்தேன்.  

1996ல் தான் முதல் முறையாக ஓட்டுரிமை.   அந்த சமயம் தான் பாட்ஷா விழாவில் ஜெ வை எதிர்த்து தலைவர் ரஜினியின் வாய்ஸ்.   பரபரப்பானது தேர்தல்.  அந்த தேர்தலில் தான் ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பிபார்க்கும் வரலாற்று நிகழ்வாக எங்கள் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 1033 வேட்பாளர்கள் விவசாய சங்கம் சார்பில் நிறுத்தப்பட்டார்கள்.   அப்போது  +2 தேர்வு சமயம்,  ஆயினும் "ரஜினி-கலைஞர்-மூப்பனார்" என  இவர்களைப்பற்றித்தான் எங்களின் நட்புவட்டம் சிலாகித்துப் பேசிக்கொண்டு இருக்கும். 
எங்கள் தொகுதியில் மட்டும் தேர்தல் ஒரு மாதம்  தள்ளிவைக்கப்பட்டு,  புத்தகம் போடுமளவு சென்றது.  அந்த வருடம் பெருவாரியாக திமுக-தமாக வெற்றி பெற்றிருந்தது. 

2006-2011 காலத்தில் சிறு குறுநில மன்னர்கள் துணையுடன்,  குடும்ப ஆதிக்கத்தினால் ஊழல்,  இலங்கை படுகொலைகளில் இவரின் செயல்பாடு,  கட்சிக்காரர்களின் கல்லூரிகள், கொள்கையிலிருந்து வழுவல்  என்று   இவரின்  வரலாற்றில் பெரும் கறை.  அந்த ஐந்து வருடம்  தடம்புரண்டு  போகாமல் இருந்திருந்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி வேறுவிதமாக, மேற்கத்திய நாடுகளுக்கு சவால் விடும் விதத்தில் அமைந்திருக்கும். 

இன்று, நின்று நிதானமாக  அவர் செய்த ஊழலைத்தாண்டி யோசித்துப் பார்த்தால், என் ஊரிலிருந்தும்,  நண்பர்கள் வட்டங்களில் இருந்தும்,  சொந்தங்களில் இருந்தும், அன்று திமுக கொடியை நட்டு கதை பேசிக்கொண்டிருந்தோரின் பிள்ளைகள், பேரன்கள் என பலர் அடைந்திருக்கும் பொருளாதார இடம் என்பது  அவரவர்களுக்கே தெரியாமல் கலைஞரின் சமூக நீதியால் கல்லூரிகளில்  இட  ஒதுக்கீட்டின் மூலம்  கிடைத்த இடங்கள் ஒரு மிக முக்கிய காரணம்.   கிராமங்களில் இருந்தவர்களை மேற்படிப்பு படிக்கவிட்டு  விடுதலையாக்கியதில் பெரும்பங்கு அவரையே சாரும்.     கிராமங்களில்  கல்விக்கூடங்களை மீண்டும் திறந்து கல்வியின் விதைகளை ஊன்றியவர் காமராசர் எனில்,  பள்ளியிலிருந்து   அனைத்து விதமான  கல்லூரிகளுக்கும் சென்று படிக்கும் ஆகச்சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் என்பதில்  இவர் ஒரு சரித்திர நாயகன்.   இன்றும் தமிழகத்தின்  மிக முக்கியமான கல்லூரிகளில் அனைத்து மக்களும் சேரமுடிகிறதென்றால் அது அவரின் சாதனை.  இந்த பின்புலத்திலிருந்து வந்தவர்கள் எவ்வளவு கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள் என்பதை சொல்ல தேவையில்லை, ஏனெனில் அது அவர்களின்  ஒட்டு மொத்த  தலைமுறையின் கனவு.  இப்பொழுது நீட் எங்களுக்கு வேண்டாம் என போராடுவதன் நீட்சியும் இதுதான். 

படித்துவிட்டு, வேலையின் பொருட்டு சொந்த ஊரை, சொந்த மக்களை விட்டு வெகுதூரம் விட்டு விலகி இருந்தாலும், இந்த வளர்ச்சி எனும் வீக்கம் தேவையா  என்று ஒருபுறம் நினைத்தாலும், கள யதார்த்தம் வேறு.  

இன்றைய நிலையில் தொடர்ந்து  தொலைநோக்குடன் வழி நடத்தும் தலைவர்கள் இல்லை என்பது தான் வேதனை.    நீங்கள் போட்டுக்கொடுத்த வழியில் நடக்க உடன்பிறப்புகள் மட்டுமல்ல உங்களால் பயனடைந்த ஒரு கூட்டம் உலகமெங்கும் விரவிக் கடக்கிறது. 

#சென்றுவாதலைவா

#கலைஞர்

குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...