சென்ற வாரத்தில் எங்களது ஊர் மொடக்குறிச்சி மீண்டும் தலைப்புச் செய்திகளில். சென்ற முறை 1996-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தல் நடந்த போது இருக்கும். தினமும் நூறு, ஐம்பது பேராக எங்கள் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்கள். தினமும் மாலை தொலைக்காட்சி செய்தியில் பரபரப்பாக பேசப்படும். வேளாண் பிரச்சினைகளில் கவனத்தை ஈர்ப்பதற்காக கீழ்பவானி விவசாயிகள் சங்கத்தின் மூலம் 1033 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு கின்னஸ் சாதனை அடைந்தது. எங்கு சென்றாலும் அதனைப் பற்றியே கேட்பார்கள். நக்கலின் உச்சமாக "நீயும் எலக்சன்ல நின்னயா" என்பார்கள். இந்த முறை அமெரிக்காவின் செலின் ராஜ் கவுண்டர் அவர்கள் முக்கியச் செய்தியாக இடம்பெற்றுள்ளார். அவரது அப்பா ராஜ் அவர்கள் படித்த பள்ளி தான், மொடக்குறிச்சி அரசு மேல் நிலைப்பள்ளி. தற்போது அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி.
வருடா வருடம் நடக்கும் பள்ளியின் இலக்கிய மன்ற விழா மற்றும் ஆண்டு விழாக்களில் நாவல் பழ மரத்தடியிலும், வேப்பமரத்தின் நிழலில் உட்கார்ந்து கொண்டுதான் சிறப்பு விருந்தினருக்கு காத்திருப்போம்.
அந்த காத்திருக்கும் மாலை வெயில் நேரத்தில், சின்ன கல்லை எடுத்து, சற்று தள்ளி உட்கார்ந்திருக்கும் நண்பனின் முதுகில் தூக்கி போட்டு விளையாடி சுவாரசியம் ஆக்கிக் கொண்டதுண்டு. எப்பொழுதும் பரிசளிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு முன்பாக சிறப்பு விருந்தினரின் பேச்சு இருக்கும். கலை நிகழ்ச்சிகளுக்கு ஆர்வத்தோடு காத்திருக்கும் வேளையில், சிறப்பு விருந்தினரின் பேச்சு, அவர் கூறும் குட்டிக் கதைகளைப் பொறுத்து ஆர்வம் வரும்.
பெரும்பாலும் சிறப்பு விருந்தினராக SKM நிறுவனத்தின் எஸ்கே மயில்சாமி கவுண்டர் அவர்கள் தான் அழைக்கப்பட்டு இருப்பார்கள். எங்கள் பள்ளியில் படித்த அவர், ஒரு சிறந்த தொழிலதிபராக, தனித்துவம் மிக்கவராக இருந்தார் அப்போதும், இப்போதும். பள்ளிக்கு கேட்கும் நேரங்களில் நிதி வழங்கிக் கொண்டிருந்தார். கீழ்மட்டத்தில் இருந்து படிப்படியாக வளர்ந்த அவரது வரலாறை, பேச்சைக் கேட்கக் கேட்க நம்மில் ஒருவர் என சுவாரசியமும், ஊக்கமும் வரும். அவை மூளையின் ஓரத்தில் எங்கோ ஒரு பக்கம் உட்கார்ந்து, வேண்டிய நேரத்தில் நம்மை உசுப்பி விடும். சில வருடங்கள் கழித்து எஸ்கே மயில்சாமிக் கவுண்டர் எனும் அவரின் பெயரை, எஸ்கே மயிலானந்தன் என மாற்றிக்கொண்டார். அவர் மாற்றிக்கொண்ட சமயம், நுயுமராலஜி படி மாற்றிக்கொண்டார் என நினைத்துக் கொண்டுதான் இருந்தேன். அதன் பிண்ணணி அப்பொழுது தெரியவில்லை. அவரது SKM நிறுவனம், இன்று நான்கு கிளை நிறுவனமாக பெருகி, எங்கள் பகுதியில் பலருக்கும் வேலை வாய்ப்பளிக்கும் சிறந்த நிறுவனம். அவரது பிறந்த ஊரை தத்து எடுத்து, அவர்களின் குழந்தைகளுக்கு, உயர்கல்வி வரை படிக்கவும் வைத்து வருகிறார். வாழ்க வளமுடன் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு, வேதாந்திரி மகரிஷிக்குப்பின் அதனை வழிநடத்தி வருகிறார்.
சரி, எதற்காக இந்த ப்ளாஸ்பேக். SKM அவர்களுக்கும், டாக்டர் செலின் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்?
இன்று அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் அவர்களின் கொரோனா குழுவில் இடம்பெற்றுள்ள பெண் மருத்துவர், செலின் கவுண்டர் அவர்கள் என்பது அறிந்ததே. சென்ற வாரம் அவரைப்பற்றிய செய்திகள் வந்த நேரத்தில், எனது வாட்ஸ்அப் முழுக்க நண்பர்கள் "மச்சி, உங்க ஊர்க்காரங்க போல" என அவரின் பார்வர்டுகளால் நனைத்துக் கொண்டு இருந்தார்கள். நண்பர் ஒருவர் எனக்கு வாழ்த்தும் கூறினார். காரணம் மொடக்குறிச்சி அவரின் பூர்விகம் என்பது மட்டும் தான். இது அவரது தனிப்பட்ட முயற்சி, சொந்த சாதனை தான். அதையும் தாண்டி, அவர் நான்கு முறை பள்ளிக்கு வந்து, அவரின் டிரஸ்ட் வழியாக நிறைய உதவிகளை செய்துள்ளார் என்பது தான் கூடுதல் மகிழ்ச்சி.
அந்த புகைப்படங்களில், நாங்கள் பள்ளியில் உட்கார்ந்து கொண்டு இருந்த திடலில், அதே மேடையில் சிறப்பு விருந்தினராக அலங்கரித்து மாணவர்களுக்குப் பரிசை வழங்கிய புகைப்படங்கள் வலம் வந்தன. நாங்கள் SKM அவர்களின் பேச்சை விளையாட்டாகக் கேட்டு உள்வாங்கிக் கொண்டது போல, அந்தக் கூட்டத்தில் எத்தனையோ மாணவர்கள் டாக்டர் செலின் அவர்களின் உரையைக் கேட்டிருக்க கூடும். அது அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் சிறு பொறியை கிளப்பிவிடும். அந்த சிறு பொறி அவர்களுக்கு ஊன்றுகோலாக, அவர்களை உலகம் முழுக்க எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்ய உதவும்.
அந்த மேடையை நோக்கி அவர் நடந்து வரும் பொழுது, அந்த சிறுவர்கள் வேடிக்கை வைத்திருப்பார்கள். அவர்களுக்குள் பேசிக் கொண்டிருப்பார்கள். 'இவங்க தான் இன்னிக்கு பேசறதுக்கு வந்திருக்காங்களா? எங்கிருந்து வர்ராங்க? நம்மூர்லயா படிச்சாங்க? என்னடா, பேன்ட் சர்ட்டெல்லாம் போட்டுருக்காங்க?' என்று பல வித கேள்விகள் வந்திருக்கக் கூடும். இத்தகைய கேள்விகள் தான் அவர்களுக்குள் ஒரு 'ஸ்பார்க்'. 'அப்ப நாமும் படிச்சால் அங்க போக முடியமா? இவங்க மாதிரியே சாதிக்க முடியுமா?' எனும் அடுத்தடுத்து அவர்களை யோசிக்கத் தூண்டும்.
அந்த வியப்பு, ஆச்சரியம் நிறைந்த கிசுகிசு கேள்விகள், அவர்களுக்கு எங்கோ ஒரு பொறியை, படிப்பின் தாகத்தை, அமெரிக்காவிற்கான கனவை உருவாக்கி விட்டிருக்க கூடும். இன்று இவரின் தந்தையின் கனவுக்காக பள்ளிக்கு உதவி செய்து கொண்டிருப்பதைப் போல, அந்த முணுமுணுத்த கூட்டத்திலிருந்து ஒருவர், பல நாடுகளுக்கும் சென்றுவிட்டு வந்து மேலும் பலரைத் தூக்கி விடலாம். அதுதானே இன்றைய மற்றும் நாளைய தலைமுறையின் தேவையாக இருக்கின்றது.
அவர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்றாரா எனத் தெரியவில்லை. அடுத்த முறை வந்தால் அவர் அங்கேயும் செல்ல வேண்டும். நம்மூரில் நாம் அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் விஷயத்தை அவர் ட்வீட்டாக பதிவு செய்திருந்தார். இதுகூட பலருக்கும் அவரவர்களின் பள்ளிக்கு ஏதாவது செய்வோமே என தோன்றி இருக்கும். இவருக்கும் கமலா ஹாரிஸ்க்குமான ஒற்றுமை. இருவருமே இரண்டாம் தலைமுறையாக அமெரிக்காவில் இருப்பவர்கள். முதல் தலைமுறை முயற்சி எடுத்து, வாயுப்புக்களைப் பயன்படுத்தி சென்றதால் தான், இவர்களால் அங்கு சாதிக்க முடிந்தது. பேச எவ்வளவோ அவரின் சாதனைகள் இருக்கும்போது சமூக வலைதளங்களில் வழக்கம்போல ஏதோ ஒரு எதிர்மறையை எடுத்துக்கொண்டு அவரது பெயர் பற்றி சர்ச்சையை கிளப்பிக்கொண்டு இருந்தார்கள். SKM அவர்கள் போலவே அவரும் செய்யலாம்.
கிட்டத்தட்ட நான் ஊருக்கு வந்ததில் இருந்து, கொரோன ஊரடங்கு தளர்வுக்குப் பின் மீண்டும் கல்யாணம், விசேஷங்கள் என பரபரப்பாகவே, எனது தனிப்பட்ட நேரம் நிரம்பி வழிந்து கொண்டே இருக்கின்றது. பல வருடங்களுக்குப் பின் இங்கு இருப்பதால் கொரோன பயத்தோடு முக்கியமானவற்றில் பங்கு கொள்கிறேன்.
பெங்களூர், சென்னையில் இருக்கும் என் நண்பர்கள் இதன் காரணமாகவே ஊர்ப்பக்கம் வரவில்லை என்கிறார்கள். "அட, அங்க இருந்தா சின்னச் சின்ன விசேசம் ஒவ்வொன்னுக்கும் கூப்பிடுறாங்க. போகலைன்னா சங்கடம் வேற. கோவிச்சுக்கறாங்க". டாக்டர் செலின் போன்ற சாதனையாளர்கள், இவை எல்லாவற்றையும் கடந்து விட்டுத்தானே சாதனைகள் செய்கிறார்கள்.
பெரும்பாலான சாதனையாளர்கள் அந்த வட்டத்தை உடைத்து வெளியேறியதால் மட்டும் தான் அவர்களால் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடிகிறது. ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருக்கும்போது, பார்வை விரிவடைய மறுக்கின்றது. பார்வை விரிவடைய, வெளிவட்டத்தின் வாய்ப்புகளை அறிந்துகொள்ள, உலகத்திற்கான திறவுகோலை வழங்க, இத்தகைய சிறப்பு விருந்தினர்களின் நேரடிப் பங்கேற்பு உதவும். அவர்கள் நம் ஊரில் இருந்து சென்றவர்கள் எனும்போது நாமும் அதனைச் செய்ய முடியும் எனும் நம்ம்பிக்கை ஊற்று பிறக்கிறது.
எங்கள் பகுதியில் இருந்து வெளியில் வந்து பிரபலமானவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவர்கள் அல்லது அவர்களின் வழித்தோன்றல்கள் எங்கு இருந்தாலும், மீண்டும் வேர்களை நோக்கி விழுதுகளைப் பரப்பி மற்றவர்களைத் தூக்கிவிடுவதென்பது கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டிய விஷயம். அதுவும் அவரின் அப்பா படித்த பள்ளி என்பது கூடுதலாக பாராட்ட வேண்டிய விஷயம். வாழ்த்துக்கள் டாக்டர் செலின்.
#mondaymotivation #MotivationalStories
No comments:
Post a Comment