Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Wednesday, January 16, 2019

அணில் துள்ளி ஓடும் முன்றிலில்!

அடடா... 
நேற்றே வந்திருப்பார்களே..
இன்றும் வரவில்லை....
மூச்சுக்காற்றை வெளியே அனுப்ப முடியாமல் கதவு பூட்டப்பட்டே கிடக்கின்றதே..
என்னைக்  குளிப்பாட்டி
துடைத்து
'பவுடர்' இட்டு 
வேப்பிலையும், பூலப்பூடும்,  ஆவாரம் தலையோடு  காப்பு கட்டி இருக்க வேண்டுமே... 

காகம் வந்தமர்ந்துவிட்டு கரையாமல் போகிறதே..
சின்னஞ்சிறு பாதங்கள் துள்ளி விளையாடுமே
என் மார்மீது..
கீச் மூச்சென சிரிப்பொலி என் தோல் மீது பட்டு எதிரொலிக்குமே..
"வாங்க வாங்க" எனும் சத்தம் சுற்றாருக்காக கேட்டுக் கொண்டே இருக்குமே.. 
ஏன் ஒருவரையும் காணோம்...

திரண்ட மஞ்சள் கொத்தோடு பொங்கல் பானையும்.. அது
பொங்கி வழிந்தோடிய தடமும்...
தோகையோடு செங்கரும்பும்...
வண்ணக் கோலத்தின் நடுவில்
வாழை இலையும்.. அதன் நடுவே
ஆவிபறக்கும் பொங்கலுக்காக
அருகம்புல் சூடிய புள்ளாரும்
காத்திருக்கையில்....
நீர் விலாவி, 
பூ தூவி
சாம்பிராணி காட்டி
கற்பூரம் ஏற்றி முடித்து,
தவளைக்கு ஒதுக்கி...
பொங்கலை கொஞ்சமாக  எடுத்து
என் மீதும் சிந்தியும்
வாயில் இடும் அந்த அறும்புகள் 
எங்கே இன்னும் வரவில்லை..

இருப்பினும் என்ன....  
நாமே கொண்டாடுவோம்...
எறும்புகளின் தாரைகளால் இட்ட கோலத்தோடும்..
காகம் கொண்டுவந்த பொங்கலோடும்...
அணில் துள்ளி ஓடும் முன்றிலில்!!!

"பொங்கலோ பொங்கல்"

இப்படிக்கு
என் இல்லம் 
மொடக்குறிச்சி.
16-1-2019

Sunday, July 02, 2017

வாழ்ந்தோம் வெள்ளிமலை எனும் கல்லூரியில்..













வாழ்ந்தோம் வெள்ளிமலை எனும் கல்லூரியில் 

வெள்ளி மலைக்கு களைகட்டி வரும் காலை நேர பேருந்து ...
அந்நேர வராந்தா அரட்டைகள்..
பால்கனியிலிருந்து அடித்த 'சைட்கள்'....
பேசுவதற்கு பயப்பட்ட தாவணித் தோழிகள்...
அச்சத்துடன் வார்த்தைகள் சில பேசியதை
ஓட்டித்தள்ளிய சக மாமன், மச்சான், பங்காளிகள்...
பேராசிரியர் வாரா வகுப்புகள்...
வந்த வகுப்புகளின் தூக்கங்கள்...
அவர்களின் கேள்விக்கு முழித்த வேளைகள்...
அதற்கென வாங்கிய வசவுகள்..
'அசைன்மென்ட்' எழுதாமல் வெளியேற்றப்பட்ட நாட்கள்...
ஆங்கிலம் பேச கட்டாயப்படுத்தியும்,
'yes , no' என சமாளித்து
தமிழில் பேசி 'பைன்' கட்டியது...
பயபக்தியுடன் தொட்டுப்பார்த்த
மோனோகுரோம் கணினிகள்...
பகிர்ந்துகொள்ளப்பட்ட மதிய உணவு...
இறுதியில் உண்ண இருக்கும் வடையை பிடுங்கித்தின்று
அந்த கணத்தில் எதிரியான நண்பன்..
அதற்காக முதலில் முடிக்கப்பட்ட வடைகள்...
கல்லூரியில் இருந்து பிரிவுக்கு
கேலியும் கிண்டலுமான நடை..
கல்லூரி பிரிவில் செய்த, செய்ய வைத்த 'ராக்கிங்'...
ஜெயமாருதியில் மாற்றப்பட்ட
திரைப்படங்களுக்காக 'ஸ்ட்ரைக்' நடந்த வெள்ளிகள்...
அதற்கு கூறப்பட்ட அகில உலக காரணங்கள்...
கல்லூரி அளவில் கடலை போடுவதற்காக சேர்ந்த NSS...
சேலைகளில் வலம் வரும் தேவதைகளுக்கான ஆண்டுவிழாக்கள்..
கலவரமான கல்லூரி தேர்தல்கள்..
மொத்தமாக வாங்கிக்கட்டிக்கொண்ட 'வெல்கம் பார்ட்டி'கள்...
சில சின்ன சண்டைகள்..
பேசாமலிருந்த நாட்கள்..
வருத்தத்துடன் விடைபெற்ற இறுதி நாட்கள்..
இதில் விடப்பட்ட இன்னும் இன்னும்....

------------------------------------------------------------
மொடக்குறிச்சி கிருஷ் (23-June-2017)
--------------------------------------------------------------------
திடீரென எங்கள் UG வாட்ஸ் அப் குழுமம், களைகட்டி மலரும் நினைவுகளை மீட்டியது... அதிலிருந்து.......


Sunday, April 09, 2017

நீரோடும் எங்கள் ஈரோடு

நீரோடும் எங்கள் ஈரோடு


"ஈரோடு வாசல்" வாட்ஸ் அப் குழுவில், கடந்த ஒரு சில வாரங்களாக
நடைபெற்ற"ஈரோடு மாவட்டம்" பற்றிய கட்டுரை எழுதும் போட்டியில் முதல் இடம் பிடித்த எனது கட்டுரை.
-------------------------------------------
நீரோடும் எங்கள் ஈரோடு
==========================

இரு ஓடைகளுக்கு மத்தியில் இருப்பதால் வந்த பெயர். பல காலங்களுக்கு பிறகு இரண்டு ரோடுகளுக்கு மத்தியில் இருப்பதால் ஈரோடு என்ற பெயர் வந்ததாக வரலாறு சொல்லுமளவுக்கு, நமது காலகட்டத்தில் உருமாறிக் கொண்டு உள்ளது.


நம்மூர் கலிங்கராயனில் குட்டிக்கரணம் போட்டு, அம்மாயி ஊருக்கு செல்லும்போது அங்குள்ள கீழ்பவானியிலோ, சுற்றியுள்ள கிணற்றிலோ குமுளி போட்டு நீச்சல் பழகியவர்கள் நாங்கள் என்றால், நமது பிள்ளைகள் கூட நம்ப மறுக்குமளவிற்கு நீர் வரத்து  இன்று இல்லை.   அவ்வாறே ஒரு போகத்திற்கு நீர் வந்தாலும், கழிவுகள் களைந்து முடிவதற்குள் நீர் வரத்து நின்று விடுகிறது.  

நாம் எதையும் மாசு படுத்தவில்லை, இந்த சாயத்தொழிற்சாலைகளே நமது நீரோடைகளையும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்துகின்றன  என்று  நம்பிக்கொண்டு இருக்கிறோம்.   ஆனால், நமக்கே தெரியாமல் நாமும் மிக முக்கிய காரணமாக இருக்கிறோம் என்பது கசப்பான உண்மை. 

சற்று பின்னோக்கி பயணம் சென்று, 1980 மற்றும் 90 களில் இருந்த ஈரோட்டையும், அதன் கிராமங்களையும் பார்ப்போம்.

பச்சை பந்தலிட்டு
மாயிலை தோரணம்கட்டி..
மாட்டு சாணத்தில் வாசல் மெழுகி
உறவினர்கள் ஒன்றாககூடி
வீட்டோடு திருமணம்.

தொப்புள் கொடி அறுபட
மூதாட்டி துணையோடு
மனையில் சுகமாக பிறந்த
மழழை...

பாட்டி மடியில் கதை பேசி
தாத்தாவுடன் விளையாடி
ஊரார்  ஊட்டி வளர்க்க
வளர்ந்து.

பல் துலக்க ஆலும் , வேலும்
தலை முழுக்க அரப்பும் , சீகைக்காயும்
மேனிக்கு கடலைமாவு
தமக்கை முகம் பூசும் மஞ்சள்
தலைவார தேங்காய் எண்ணெய்.
என்று தூய்மை பேணி.

காலை உணவாக கம்பங்களியும், ராகிக்கூழும்
புறக்கடையில் பறித்து வந்த கீரையும், காய்கறியும்
நம் பெயர் வெட்டிய சிறு போசியில் உண்ட  உணவு.
எவ்விடத்திலும் அள்ளி பருகும் நீரும்

காக்கி வெள்ளையோடு நாம்
கதர் வேட்டி சட்டை கட்டிய அப்பா
நோம்பி என்றால் மட்டுமே அதுவும் கட்டும் தாத்தா
நூல் சேலையில் கொசுவம் வைத்து கட்டும் பாட்டி
நோம்பிகளுக்கு மட்டுமே புடவை எடுக்கும் அம்மா

பள்ளிசெல்ல ஓட்டமும் நடையும்
வேலைக்கு போக ஒரு மிதிவண்டியும்
ஈரோடு டவுனுக்கு செல்ல சில டவுன் பஸ்களும்


மஞ்சள் பையுடன் கடைக்கு செல்லும் குட்டிகள்
செய்தித்தாளில் அன்போடு கட்டிக் கொடுக்கும் கடைக்காரர்

சிறு புண்ணுக்கு கசக்கி விடப்படும் செடி
வேது வைக்க வற்றிய வீக்கம்
தேடி இலை பறித்து
வைத்தியம் செய்யும் ஒரு பாட்டி

சுற்றம் சூழ குளிப்பாட்டி  
பச்சையில் பாடை கட்டி
ஆவரஞ்செடிக்கு பால் ஊற்றி
பாட்டுப்பாடி
விடை அனுப்பப்பட்ட  நம் தாத்தா...

இன்னும் இன்னும்  ....

ஏக்கத்தோடு கூடிய பெரு மூச்சு வருகிறது, இப்படி சின்ன சின்ன கிராமத்து மணமுடன் திகழ்ந்த ஈரோடை இன்று பார்க்கும் பொழுது
....

2017 க்கு வருவோம்

"பெருந்துறை ரோட்டுல X மண்டபம் எப்ப கிடைக்குதுன்னு பாருங்க , கல்யாணத்தஅப்ப வெச்சுக்கலாம்" சம்மந்தி வீட்டினர்.    

ரெண்டு பெரிய ப்ளக்ஸ் முன்னாடி வெச்சுரலாம். இந்த பக்கம் ஒரு கிலோ மீட்டர் அந்தப்பக்கம் ஒரு கிலோமீட்டர்  லைட் மின்னணும். மண்டபம் முழுக்க சீரியல் செட்.   ரெண்டு மூணு  TV  வெச்சு லைவ் டெலிகாஸ்ட்என்று ஒரு அரசியல் கட்சி கூட்டத்தையே மிஞ்சும் அளவுக்கான  தடபுடல்கள்.

சாப்பாட்டு விஷயத்தை பற்றி பேசவேண்டியதில்லை, அதில் வீணாக்கப்படும் உணவுகள் மற்றும் திண்பண்டங்கள்   என்ன  மாதிரியான  விளைவுகளை  நமக்கு விட்டு செல்கிறது என்பதை தெரிந்தும், ஒரு மரக்கன்றையோ, புத்தகங்களையோ பரிசளித்து நல்லவர்களாக காட்டிக்கொள்கிறோம்.


"ஏங்க நா எல்லார்த்துக்கிட்டயும் விசாரிச்சுட்டேன், ஈரோட்டுல அந்த X ஹாஸ்பிடல்ல இருக்குற, Y  டாக்டர் அம்மா ரொம்ப நல்லா பாக்குறாங்களாம், அவங்ககிட்ட போற எல்லோருக்கும் நார்மல் டெலிவரி ஆகுதாம், நாம அங்கேயே பார்த்துக்கலாம்"  ஈரோடு சுற்றுவட்டாரத்தில் இந்த குரல் ஒலிக்காத வீடுகளே இல்லை.  இயல்பாக உண்டானாலும் மாதமொரு செக்அப்க்கு, அங்கு சென்றால், நமக்கும் சுகப்பிரசவம் என்ற மூடநம்பிக்கையில், காலை முதல் மாலை வரை அந்த மருத்துவர் பார்க்கும் வரை    காத்திருந்து, வெயிலில் புழுங்கி, ஒரு வழியாக வீடு வந்து சேருவோம். 



இதுக்கு முன்னாடி ஒரு படலம் இருக்கிறது, அது செயற்கை முறை கருத்தரிப்பு.  பல மாவட்டங்களில் இருந்தும் இன்று ஈரோட்க்கு படையெடுத்து வருகிறார்கள் கருத்தரிப்பதற்கு.  பெருந்துறை ரோட்டில் புற்றீசல்போல் முளைத்துக்கொண்டு இருக்கும் கருத்தரிப்பு மையங்கள் இதற்கு சாட்சி சொல்லும்.  அவர்கள் கொடுக்கும் மருந்துகளும் மாத்திரைகளும், அதற்காக தள்ளுபடி விலையில் தெருவுக்கு, தெரு கிளைகள்  திறந்து கொண்டு உள்ள மருந்தகங்களும்ஒரு தனி கதை.


குழந்தை பிறந்தவுடனே தாய்ப்பால் கொடுக்கறாங்களோ இல்லையோ  hygenically packed  பால் பவுடர் வாங்க சொல்லும் மருத்துவர்கள்.   ஒவ்வொரு சில பல மாதங்களுக்கும் போஷாக்கு அளிக்கும்(அழிக்கும் ??)  ஊட்டச்சத்து  பானங்கள்.   வெளிநாட்டில்  இருந்து தருவிக்கப்பட்ட குழந்தைகளுக்கான  சோப்பு மற்றும் பவுடர். தடுப்பூசி என்ற பெயரில் நடக்கும் வணிகம்.  


பல் துலக்க விதவிதமான பற்பசைகள், 6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றப்படும் பிரஷ், ஷாம்பு இட்டு முடி உதிர்ந்த தலைகள், இருக்கும் முடிக்கும் சாயமிடும் நரைதலைகள்,  15 நாளில் அழகு தரும் முகப் பூச்சுக்கள் மற்றும் வண்ண வண்ண சோப்புகள், இவை களையும்போது, கழிவுகள் அனைத்தும் சென்று சேருமிடம் வேறு
எங்கும் இல்லை, கத்தி திரைப்படத்தில் விஜய், மேஜைக்கு அடியில் அண்டர் கிரௌண்ட் மேப்  பார்ப்பது போல பார்த்தால், பெரும்பள்ளம் ஓடை வழியாக காவேரிக்கு  சென்று கொண்டு இருக்கும்.


"X மெஸ்ல பரோட்டா மறக்காம வாங்கிட்டு வாங்க.  அங்கதான் கொளம்பு நல்லா இருக்குதாம்"  பாலிதீன் பையில் சுடசுட ஊற்றிக் கொடுக்கப்படும் குழம்பு புற்றுநோயின் ஒரு காரணி என்பதை அறியாத அப்பாவிப் பெண்மணிகள்.  அப்படியே அறிந்தாலும் எப்பவாவது என்று மாதம் சில  முறையாக பழக்கப்படுத்திக் கொண்டோம். 


"8 மணி ஆயிருச்சு, இந்த ஸ்கூல் வேன எங்க இன்னும் காணோம்" என்று புலம்பாத வீடுகள் குறைவு.  நம் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் அரசு பள்ளிக்கு, 5 கிலோமீட்டர்  நடந்து வந்து படிக்கும் குழந்தைகளும்,   நம் குழந்தைகள் 10 கிலோமீட்டர் தள்ளி  உள்ள தனியார்  பள்ளிக்கு  மூச்சுமுட்ட பள்ளிப்பேருந்தில்  பயணம் சென்று படிப்பதும் இயல்பான ஒன்றாக மாறியுள்ளது.

மேட்டூர் சாலையில் சமீபத்தில் துவங்கியுள்ள  துணிக்கடை.   ஒரு பேண்ட், சர்ட்  வாங்க சென்றேன்.  பில் போட்டு டெலிவரி வாங்கும் சமயம், ஒரு அம்மா  "2000 ரூபாய்க்கு மேல வாங்கிருக்கேன்அதனால 2 கட்ட பை கொடுங்க" என்று கேட்டுக்கொண்டு இருந்தார்.   டெலிவரி கொடுப்பவரும் முணுமுணுத்துக்கொண்டு இன்னொரு பையை தருகிறார்.   இந்த கட்டபை என்று சொல்லக்கூடிய பை, முன்பு போல சணலால் ஆனதல்ல.  எனக்கும்  ஒரு கட்ட பையில், காக்கி காகித கவரில்  போடப்பட்ட துணியை, வைக்க  முயல்கிறார்.  நான்  "கட்டப்பை வேண்டாங்க, அப்படியே குடுங்க " என்று சொல்லிவிட்டு, காக்கி காகித கவரில்  போடப்பட்டதுணியை  வாங்க, அவர்  என்னை  மேலும் கீழும் பார்க்கிறார்.  


80 மற்றும் 90களில் எவ்வளவு எளிமையான, இயற்கையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு  இருந்தோம்.   நாகரீகம்நவீனம் என்ற பெயரில், இன்றளவில் நிகழ்ந்துகொண்டு இருக்கும்இந்த ஒரு சில சம்பவங்கள் ,   நமக்கும், நமது சுற்றுப்புறத்திற்கும் நல்லவை எது, அல்லவை எது என்று பிரித்து அறியமுடியாத அளவில் நம் வாழ்வோடு இரண்டற கலந்துவிட்டதை  உணர்த்தும்.     



இன்றளவில் ஈரோட்டை மீட்டெடுக்கலாம் என்று நம்பிக்கையை கொடுத்துக்கொண்டு  இருப்பதுசில நல்  உள்ளம் படைத்த மனிதர்கள்சத்தமில்லாமல் ஈரோட்டில் எற்படுத்திக்கொண்டு இருக்கும் நீர்நிலை பாதுகாப்பு, இயற்கை பற்றிய விழிப்புணர்வுகள், நல்ல உணவுப்பழக்க  வழக்கங்களுக்கான முன்னெடுப்பு.   நம்மளவில் நாம் நமது ஈரோட்டையும் அதன் சுற்றுப்புறத்தையும்  எப்படி வைத்துள்ளோம் என்று, காலை முதல் மலை வரை நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் சிந்தித்து, நமது பங்களிப்பை அளிக்க முயற்சி எடுப்போம்.



புகைவண்டியில் வரும்பொழுது காவேரிப் பாலம் தடதடவென சப்தமிட்டு ஈரோடு வந்து விட்டதை நினைவு கூறும்.  காவிரியில் எவ்வளவு நீர் சென்றுகொண்டு உள்ளது என்று  நாமும் ஒவ்வொரு முறையும் எட்டி பார்ப்போம்.   காவிரி இன்னுமொரு பாலாறாக மாறாமல் இருக்க, நாம் மாறுவோம், நமக்காக.



மொடக்குறிச்சி கிருஷ்
22-March-2017




குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...