Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Sunday, July 15, 2018

ஓட்டுனருடன் உரையாடல்


எப்பொழுதும் ஆட்டோவிலோ அல்லது வாடகை காரிலோ சொல்லும்போது டிரைவருடன் பேச்சுக் கொடுப்பது வழக்கம்.  பெரும்பாலும்  நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் மக்களே இங்கு டிரைவர்களாக இருப்பர்.  அப்படித்தான் சென்றமுறை பாகிஸ்தானை சேர்ந்த டிரைவர் சூப்பர் ஸ்டாரைப்பற்றி புகழ்ந்து தள்ளினார், அவரது  அப்பொழுதுதான் சமூக விரோதிகளைப் பற்றி தலைவர்பேசியிருந்த்தால், ஏனோ ஆர்வம் இல்லாமல் பேசிக்கொண்டு வந்தேன்.  இருந்தாலும் அவரின் ஸ்டைலை சிலாகித்துக்கொண்டு. சென்றவாரம்  மூட்டை, முடிச்சுகளை எடுத்துவைத்த போது  நாங்கள் தமிழில் பேசிக் கொண்டிருந்தைக் கேட்டு வாகன ஓட்டுனரும் தமிழில் 'கதைக்க' ஆரம்பித்தார்.   ஆம் அவர் 18 வருடங்களுக்கு முன் லண்டனுக்கு புலம்பெயர்ந்த  தமிழர், ஈழத்தை சேர்ந்தவர். 

பரஸ்பர விசாரிப்புக்குப்பின்,  பேச்சு அவர்களின் குழந்தைகளின் தமிழைப் பற்றி சென்றது.  "பெரியவங்க யாரும் கூட இல்லைங்க, அவங்க இருந்தா கொஞ்சம் குழந்தைகளோடு தமிழில் கதைப்பாங்க ...அதனால  தமிழ் குழந்தைகளுக்கு கடினமாக தான் இருக்கு, புரியாததை நாங்களும் ஆங்கிலத்துல தான் பேசறோன்ங்க... பள்ளியிலயும், வெளியிலயும் ஆங்கிலம் இருப்பதால அடுத்த தலைமுறை குழந்தைகள்  தமிழ் பேசறது கொஞ்சம்  சிரமம் தான்" என்றார்.  அதைஆமோதித்துவிட்டு "தமிழ்நாட்லயே அந்த நிலைமை தாங்க 'சிட்டில'... ஆங்கில வழி படிப்பு ரொம்ப அதிகமாகிட்டதால,  ஆங்கிலம் கலந்து பேசறவங்க அதிகம்.   இங்லீஸ்  எழுத்துல எழுதி தமிழ்ல படிக்கிறவங்களும்  நிறைய ஆகிட்டாங்க. நீங்க, ஈழத்தமிழர்கள், இங்க தமிழ் வளர்க்கறதைப் பார்க்கறப்ப  மகிழ்ச்சியா இருக்குங்க " என்று கூறிவிட்டு.  "இங்க  பக்கத்துல உங்க ஊர்  அம்மா வாரம் ஒருநாள் தமிழ்  சொல்லிக்கொடுக்காறாங்க, வருட முடிவில் 'எக்ஸாம்' கூட இருக்குங்க" ஆங்கிலம் கலக்காமல் என்னால் சரளமாக பேச முடியவில்லை.

"அப்படீங்களா" என்ற எங்களது பேச்சு குடியுரிமை பற்றி திரும்பியது.  "இங்க சிட்டிசன்சிப் உங்களுக்கு தந்துட்டாங்களாங்க?" "ஓமங்க, அது வந்து ஆரேழு வருடத்திலயே கொடுத்துட்டாங்க" என்றவர்,  "உங்க ஊருக்கு வந்திருக்கேன், அங்க  ஈழத்தமிழர் எப்படி இருக்காங்க?", இந்த கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை,அவர்களை எங்கோ ஒரு மூளையில் தானே ஒதுக்கி வைத்துள்ளோம்.   "எங்க ஊருக்கு பக்கத்துல முகாம்ல இருக்கறவங்க எங்க வீடு வேலை செய்யரப்ப பாத்திருக்கேன்.  வேலை ரொம்ப சின்ஸியரா செய்வாங்க. ஆனா அவங்களுக்கு எல்லாம் இன்னும் சிட்டிசன்சிப் அங்க தரலைங்க" என்றேன்.     சீரான வேகத்தில் வாகனத்தை பத்து வழிச்சாலையில் செலுத்திக்கொண்டு நம்மூர் பற்றிய நினைவுகளை மலரவிட்டார்.

"இங்க வர்ரதுக்கு முன்னாடி இலங்கைல இருந்து அங்க வந்தப்பண, மடிப்பாக்கத்துல தான் இருந்தேன்ங்க, கொண்டாட்டம்னா அங்கதாங்க...  பொங்கல், தீபாவளினா ஒரு திருவிழா மாதிரி ஊரே கலகலப்பா, அருமையா இருக்கும்ங்க,  ரொம்ப நல்லா இருந்தது, தமிழ்நாட்டுலயே இருந்துடலாம்ன்னு நினைச்சேன்.  இப்ப அங்க எப்படி இருக்குங்க" என்று ஆர்வமோடு கேட்டார்.  'என்னத்த சொல்ல', என்று நம்மூர் பற்றிய அவரின் எண்ணத்தை மாற்ற எண்ணவில்லை எனினும்,   இருந்தாலும் சொல்லாமல் இருக்க முடியாது " கொண்டாட்டமல்லாம் அப்படியே இருக்குங்க, ஆனா எல்லாத்துக்கும் மக்கள் போராட வேண்டி இருக்கு, அரசியல்ல பார்த்தீங்கன்ன, ஜெ மறைவுக்கு பின்னாடி ரொம்ப மோசமான நிலைமைல இருக்கு, ஜெ ஆட்சி நல்லா இருந்ததென சொல்லல, ஊழல்தான்,  ஆனா தமிழ்நாட்டோட உரிமையை பல நேரங்களில் விட்டுக்கொடுக்கலை.   இப்ப மத்திய அரசு சைலன்டா எல்லாம்  திணிக்கறாங்க.     என்ன நடக்கும்ன்னே தெரியலை"   ரொம்ப பயமுறுத்திட்டமோ என நிறுத்திக்கொண்டேன்

"இங்க பிடிச்சிருக்குங்களா?" என்ற வழக்கமான கேள்வி.   "இங்க ஆபிஸ் வேலை அப்படீன்னு ஒரு ஸ்டரக்ட்ர்டு லைப்.  சுத்தமான காற்று,  ட்ராபிக் கிடையாது,   எதுக்கும் க்யூல நிக்க தேவையில்லை, கட்டர டேக்ஸ்ஸ ஒழுங்கா செலவு பண்ணறாங்க.   பணிவான மக்கள்.   ஆனா,  அங்க ஆபீஸ் போறதே பெரும்பாடு தான், ட்ராபிக்ல மாட்டி, பொல்யூசன்ல மாட்டி.  காசு கொடுத்தீங்கன்னா மட்டும்தான் வேலை நடக்கும், இல்லனா ஒன்னும் பண்ண முடியாது.  ஆனா  நண்பர்கள், சொந்தம் எல்லாம் அங்க இருக்கறதால,  சோசியல் லைப்  அங்கதான் இருக்குங்க.   பண்டிகை, பங்ஷன்னா கொண்டாட்டமா இருக்கும்" நான் சொன்னதை அவர் அசை போட்டுக்கொண்டு இருந்தார்.   அவரின் ஊர் ஞாபகம் வந்திருக்க வேண்டும். 

"போர்க்கு முன்னாடியே இங்க வந்துட்டீங்க, இப்ப நீங்க இலங்கை போன விசா எடுக்கனுமா,  இப்ப அங்க நிலமை எப்படி இருக்கு? ஒரு அமைச்சர் கூட விடுதலைப்புலிகளோட தேவை இப்ப ரொம்ப இருக்குன்னு சொல்லிருக்காங்களே?". தோனியதை எல்லாம் சீரியஸாக கேட்டுக்கொண்டு இருந்தேன்.

"அவ்வளவு ஒன்னும் சொல்ற மாதிரி இல்லங்க. ராணுவமே ட்ரக்(drug) கொடுக்கறாங்க" "ட்ரக்கா"
"ஓமங்க.. கஞ்சா, மக்கள பயன்படுத்த வெச்சு சமுதாயத்த நாசப்படுத்தி,  சீரழிஞ்சு போகட்டும்மென கவர்ன்மென்ட்டே இதை பண்ணறாங்க.  அப்ப எல்லாம் ஒழுக்கமா , ஒரு கட்டுக்கோப்போடு நல்லா இருந்தாங்க" எங்கயோ இதைப்பற்றி  இவர் கூறியதுபோல் படித்த ஞாபகம் இருந்தது.  நம்மூரின் டாஸ்மாக்கின் சரித்திர விற்பனையும் ஒரு கணம் வந்து சென்றது. 

"இலங்கை அமைச்சர் சொன்னது போல இப்ப யாரவது வழி நடத்த வாய்ப்பு இருக்குங்களா?" 

"இனிமேல் அந்தமாதிரி ஒரு வாய்ப்பே வராதுங்க, பிரபாகரன் மாதிரி இன்னொருவர் கண்டிப்பாக வர முடியாது.  அப்ப எம்ஜிஆர் உதவி பண்ணாங்க,    ஆரம்பத்துல இந்தியாவும் பயிற்சி  கொடுத்தாங்க.   இனிமேல் எந்தநாடும் உதவி பண்ணமாட்டாங்க.   இங்கிலாந்தும் சேர்ந்து எல்லா நாட்டோட ஆதரவோடதான அழிச்சாங்க, அப்புறம் எப்படி..." பட படவென கூறிமுடித்தவரிடம் கணத்த அமைதி.  என்ன சொல்வதென தெரிவில்லை.  பத்து வருடம் கழிந்திருந்தாலும் அந்த அமைதியின் வலி என்ன என்னவோ யோசிக்க வைத்தது. அவரே தொடரட்டும் என காத்திருந்தேன்.

தொடர்ந்தவரின் கடைசி வாக்கியம் பலமாக யோசிக்க வைத்தது.  "தனியா  ஒரு நாடு இருந்த, தமிழ்நாடும் சேர்ந்து  கூட ஆட ஆரம்பிச்சிடுவாங்க என திட்டம்போட்டு பண்ணிட்டாங்க"  உண்மையாகவும் இருக்கலாம்.  கற்பனையிலேயே கலக்கலாக இருந்தது.    

#பயணங்கள்

Thursday, May 25, 2017

நூலகம் - அகத்திலும், இணையத்திலும்



சித்திரை திருநாள் வாரம் சென்னையில் இருக்க நேர்ந்தது.   ஞாயிறு மதியம் உணவு உண்ட பின், வழமையாக தூங்கி அ.
தொலைக்காட்சியுடன் பொழுதை கழிக்க விருப்பம் இல்லாமல், உண்ட களைப்புடன், மொபைலை நோண்டிக்கொண்டு இருந்தேன்.     அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 'சுஜாதாவின் பன்முக ஆளுமை' என்ற தலைப்பில் பல எழுத்தாளர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என அறிந்து, உடன் இருந்த அக்காவின் மகனையும் இழுத்துக்கொண்டு வண்டியை விரட்டினேன்.   நேரடியாக அரங்கை தேடி நுழைந்து கேட்க ஆரம்பித்தோம்.   நல்லதொரு நிகழ்வு.  சுஜாதா அவர்கள் பற்றி அறியாத தகவல்களையும் அறிய முடிந்தது.     நிகழ்வின் இடையே தேநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது(வரலாறு முக்கியம்).  நூலகத்திற்கு  முதன் முறையாக சென்றிருந்தேன்.  நிகழ்வு முடிந்தவுடன் அப்படியே நூலகத்தை சுற்றி பார்வையிட்டோம்.  படிக்கப்படாமல் அலமாரியில் வைக்கப்பட்டுள்ள புதிய புத்தகம்போல், குளிர்சாதன வசதி செய்யப்பட்டும்,  மக்களால் பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஒரு  நூலகம்.    சில  வாரங்களாக  பொன் மாலைப்பொழுது என்ற நிகழ்வின் மூலம் பிரபல எழுத்தாளர்களின்  கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதையும்  அறிந்து, 'சென்னையிலேயே வசித்து இருக்கலாமோ' என்ற ஏக்கம் ஒரு கணம் வந்து சென்றது.    இது மட்டுமல்லாமல் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பு என நல்ல முயற்சிகள் திரு உதயச்சத்திரன் அவர்களால் எடுக்கப்பட்டு வருவது மகிழ்ச்சி.

திருவான்மியூர் வழியாக திரும்புகையில், மாலை வெயிலில்  கூட்டமாக இளைஞர்கள் கூட்டம் அள்ளியது சத்யம் வாசலில்.  'சரி விடு, தியாஐராஜர் திரையரங்காக  இருந்தபோது, ஞாயிறு மாலை நாமும் இங்கு தானே நின்றுகொண்டு இருந்தோம்'.  


அதே வாரம், ஈரோடு சம்பத் நகர் நவீன நூலகத்தில் ஒரு நிகழ்வு.  நண்பர் ஈரோடு கதிர் அவர்கள் உரையாற்றுவதை  கேட்கவும், அவருடன் உரையாடவும் சென்றிருந்தேன்.   இங்கும் ஒரு நேர்த்தியான கருத்தரங்கு கூடம், பயிற்சி வகுப்புகளுக்கான அறை, பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தனித்தனி படிக்கும் அறைகள் மற்றும் கழிப்பறை  வசதி என  ஒரு 'மினி' அண்ணா நூலகத்தை கொண்டு இருந்தது.   இங்கும் தேநீர் கொடுக்கப்ப்பட்டது(வரலாறு மீண்டும் முக்கியம்).  இரண்டு நூலகத்தின் நிகழ்விலும்  ஏறக்குறைய அரங்கு நிரம்பி இருந்தது(நானே நூலகம் செல்லும்போது, அரங்கு நிறையத்தானே செய்யும்) .  "நல்ல வசதிகளுடன் உள்ளது இந்த நூலகத்தை, நாம் சிறப்பாக பயன்படுத்த வேண்டும்" என்று அப்போது கூறிய  ஈரோடு கதிர் அவர்கள்,    கடந்த ஞாயிறு அன்று,   ஈரோடு வாசல் குழுமத்தின்  மலர்களை பேச அழைத்து 'புத்தகங்களைப் பேசுவோம்'  என்ற  தலைப்பில் நடத்தியது,  அண்ணா நூலகத்தின்  நிகழ்வு  போல் ஆன ஒன்று.     .    

இந்த இரு நூலக வடிவமைப்பின் ஒற்றுமையை விட மேலும் ஆச்சர்யமூட்டிய ஒன்று.        அண்ணா நூலகம் பற்றி  சில தகவல்களை அறிய இணையத்தில் தேடும்பொழுது, வந்து விழுந்தவை  'பொன்மாலைப் பொழுதின் காணொளிகள்'(இதற்குத்தானே ஆசைப்பட்டாய் .    இந்த காணொளிகள்  காலைப்பொழுதையும் அதன் நடைபயிற்சியையும்  'கற்றலின் கேட்டல்  நன்று' என இனிதாக்குகின்றன.       படிக்க நேரம் கிடைக்காமல் அ. விருப்பம் இல்லாமல்   இருப்பவர்களுக்கு  இந்த காணொளிகள் வரம்.

அதிலிருந்து  எனது செவிக்கு உணவிட்ட  சித்த மருத்துவர் கு.சிவராமன் அவர்களுடனான வயிற்றின் உணவைப்பற்றிய கலந்துரையாடல் இங்கே.

https://www.youtube.com/watch?v=yGJ4xCbYDfg&t=5643s

Wednesday, April 26, 2017

தாய்மொழி பயிலல்


தாய்மொழி பயிலல் :
 ------------------------------
செய்தி : “பிற மாநிலத்தவரும் தமிழ் படிக்க வேண்டும்!" முதல்வர்கள் கூட்டத்தில், பிரதமர் மோடி பேச்சு.
அரசியல் தவிர்த்து இதை சற்று உள்நோக்கி பார்ப்போம்.
வேலை நிமித்தமாக ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலத்திற்கு சென்று வசிப்பவர்கள் இன்றைய கால கட்டத்தில் மிகவும் அதிகம். அவர்கள், தங்களது குழந்தைகளை தங்கள் தாய் மொழியில் படிக்க வைக்க நினைத்தாலும் முடியாத சூழலே 'இந்தி'யாவில் நிலவுகிறது. தாய்மொழிக்காக பலர் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்ப நினைத்தாலும், சொந்த ஊரில் அதே போன்ற, அதே ஊதியத்தில் வேலை கிடைக்குமா என்ற அச்சம், அங்கு திரும்ப நினைப்பதை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது. சொந்த மாநிலத்திலும் பெரு நகரங்களையே பணிகளுக்கு நம்பி இருப்பதாலும், சொந்த ஊருக்கும் பெரு நகரத்திற்குமான இடைவெளி மற்றும் போக்குவரத்தில் உள்ள சிக்கல் மற்றோர் காரணமாகவும் உள்ளது.
பெங்களூரை உதாரணமாக எடுத்துக்கொண்டால், பெங்களூரை ஒட்டியுள்ள சுமார் 200-300 கிமீ தொலைவில் உள்ள பெருவாரியான மக்கள் பெங்களூரையே வாழ்வாதாரமாக கொண்டு உள்ளார்கள். இது தமிழ்நாட்டிற்கு மட்டும் அல்ல.. ஆந்திர மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கும் பொருந்தும். இதே மனநிலையில் தான் சென்னையில் வாழும் பிற மாநிலத்தவரும் இருக்கக்கூடும் என கருதுகிறேன்.
மோடி அவர்களின் இந்த பேச்சு மனப்பூர்வமாக இருந்தால், மத்திய அரசு இதனை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த ஆவன செய்ய வேண்டும். மாநில அரசுகளும், மற்ற மாநில மொழிகளுக்கு மதிப்புக் கொடுத்து இதனை செயல் படுத்த முயற்சி எடுக்கலாம்.
படத்தில் இருப்பது பெங்களூரின் மைய பகுதியில் இருக்கும் அரசு தமிழ்ப் பள்ளி. இதன் பின்னால் அழகாக பொழிவுடன் இருப்பது திப்பு சுல்தான் சம்மர் பேலஸ்.
(சொந்த ஊருக்கு பக்கத்துல இருக்குன்னு பெங்களூர் வந்துட்டு, நாம படும் பாடு இருக்கே... 😥 )

மொடக்குறிச்சி கிருஷ்

27-April-2017

குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...