Showing posts with label குறள். Show all posts
Showing posts with label குறள். Show all posts

Monday, April 04, 2022

குறள் 681

பால்: பொருட்பால்

அதிகாரம்/Chapter: தூது / The Envoy

குறள் 681:

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்

பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.

விளக்கம்:

அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள்.


**

நம் தமிழ் பாடங்களில் மயில் விடு தூது,  புறா விடு தூது,  தமிழ் விடு தூது படித்திருப்போம்.  லவ் பண்ணிட்டு இருக்கும் தலைவன் போருக்கு போனாலோ அல்லது பார்க்க முடியாமல் போனாலோ,  தலைவி அஃறிணை பொருள் வழியாக தூது விடுற மாதிரி நிறைய செய்யுள்கள் உண்டு.  

தமிழ் திரைப்படங்களின் பாடல்களிலும்  தூது விடும் பாடல்கள் உண்டு.   நான் ரசித்த ஒன்று "சின்னக்கிளி வண்ணக்கிளி சேதி சொல்லும் செல்லக்கிளி"  என்ற சின்னக் கவுண்டர் பட பாடல்.  இது  ஒரு அழகிய கிளி விடு தூது.  சுகன்யாவும்- விஜயகாந்தும் கிளிகளின் வழியே உரையாடிக்கொண்டு இருப்பார்கள்.   ( இதுபோல வேறு பாடல் இருந்தால் பகிருங்கள் )  

ஆனால் வள்ளுவர், இங்கு அரசருக்கு தூது கொடுப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.   இன்றைக்கு இது பொருந்துமா?   அல்லது அன்றும் அப்படி இருந்ததால் வள்ளுவர் தனது ரூல் புத்தகத்தில் இப்படி எழுதி உள்ளாரா என தெரியவில்லை.   

அரசருக்கு என பார்க்கும் பொழுது நம் மாநிலத்திற்கு, நாட்டிற்கு, உலகத்திற்கு என பெரிய அளவில் யோசிப்போம்.  அரசருக்கும் தொழில் அதிபர்களுக்கும்  இடையே இருக்கக்கூடிய  தூது படலங்கள் வேற லெவல்.    இதனை  "லாபி விடு தூது"  எனலாம்.  அதன் சிறிய அளவை "புரோக்கர் விடு தூது" என வகைப்படுத்தலாம்.   

இரண்டுக்கும் என்ன வித்யாசம்.  அரசன் எனில் அரசாங்கமும் தான்.  இதனை நம் அளவிற்கான தூது படலம் என கொள்ளலாம்.    எந்த ஒரு அரசு துறையும் இதில் பொறுத்த முடியும்.   இந்த  ப்ரோக்கர் விடு தூது படலம்  இல்லாமல் எதுவும் இங்கு அசையாது.  

ஒரு சாதாரண பதிவு அலுவலகத்தில் நேரில் சென்ற, இந்த தூது படலம் இல்லாமல் பத்திரப்பதிவு பண்ணிவிட  முடியுமா?  அப்படி தூது செல்பவர்கள் நம்மிடம் பேரன்புடன் தான் உள்ளார்கள்,  தூது படலத்தில் அழகாக பேச தகுதியானவர்களாக  உள்ளார்கள்,  பதிவு செய்யும் அந்த இடத்தின் வேந்தனிடம் ப(ண)ண்பாகவும்  தான் உள்ளார்கள்.   ஆகவே வள்ளுவர் வாக்கினை  எந்த வகையிலாவது பின்பற்றிவிடுகிறார்கள்



Friday, February 11, 2022

குறள் 1040

 *குறள் 1040:*

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.

*பொருள்:* எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.

என் விளக்கம் :

முதலில் இந்த குறளில் வரும் *அசைஇ எனும் சொல்லிசை அளபெடை* தான், இந்த குறளின் அடிநாதம். அசையாமல் =சோம்பல் எனும் பொருளில் வருகிறது. அதனை வைத்து பார்க்கும் பொழுது, மூன்று வகையான பொருள் எனக்குத் தோன்றுகிறது.
1.
"தாரு காடு? அவங்க காடா? ஒன்னும் போட மாட்டாங்க.. நறுவுசாவே வெச்சிருக்க மாட்டாங்க.. செடி செத்தை மொளச்சு பொதர் மாதிரி கெடக்கும்.. புழு பூச்சி இருந்தா கூட தெரியாது"
சோம்பலால் எந்த வேளாண்மையும் செய்யாமல் இருக்கும் நிலம் சிரிக்கும் என்பதை புல், பூண்டு முளைத்து பயன்படாமல் இருப்பதை //நிலமென்னும் நல்லாள் நகும்.// என்று கூறுகிறார் எனலாம்.
2.
நிலம் பன்மடங்கு வைத்திருந்தவர்கள், கடன் காரணமாக அதனை விற்றுவிட்டு ஒரே ஒரு வீட்டில் இருப்பதையும் காணலாம். படிக்காதவர்கள், ஒரே ஒரு வாடகை வீடு மட்டும் வைத்து இருந்தவர்கள், நிலத்தினை குத்தகைக்கு எடுத்து, உழைப்பின் மூலம் இன்று சொந்த வீட்டிலும் உள்ளார்கள் (அவர்கள் அளவில் அது சாதனை ).
முதலாமவர்க்கு கடன் சோம்பலால் மட்டுமே வந்ததா? இருக்காது, புறக்காரணிகள், பருவம் தப்பிய மழை, வெயில் அல்லது அவர்களின் தவறான முடிவு.
இரண்டாமவர்க்கு, உழைப்பு மட்டுமே காரணமாகுமா? உழவை பொறுத்த வரையில் முயற்சியோடு நேரம் கை கூடவேண்டும். முதலாமவர்க்கு இருந்த அதே புறக்காரணிகள் இவருக்கும் இருந்திருக்கும். ஆனால் hard work உடன் Smart work சேர்த்து செய்து முன்னேறி இருப்பார்.
//நிலமென்னும் நல்லாள் நகும்.// இங்கு நிலமகள் என்பதை ஊர் மக்கள் என்றும் கூறலாம். சோம்பலால் மட்டும் அல்ல, வெற்றிபெறாத மனிதர்களை புறம் பேசி நகைக்கவே செய்வார்கள்.
3.
இந்த குறளை உழவுக்கான குறளாக மட்டும் கருதாமல் முயற்சிக்கான குறளாகவும் எடுத்துக்கொள்ளலாம். அப்படி எடுத்துக்கொண்டால்
"முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்". - இந்த குறளின் சாரம் மேற்சொன்ன 1040 வது குறளில் இருக்கும்.
இந்த குறள் இருக்க, அதேபோல ஏன் மற்றோர் குறள்? இப்ப ட்விட்டர்ல காப்பி பேஸ்ட் ட்ரெண்ட் மாதிரி, வள்ளுவர் ஒவ்வொரு அதிகாரத்திலும் தனித்தனியாக அதே நல்ல விஷயங்களை வேறு வேறு வகையான மக்களுக்கு கூறியள்ளார் என எடுத்துக்கொள்ளலாம்🙂
இனிய நாளாகட்டும்.

Sunday, January 16, 2022

குறள் 108


குறள் 108


நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று.




கமல் 60 நிகழ்வில் வடிவேலு பேசிய வீடியோ சமீபத்தில் மீண்டும் கண்டேன்.   அதில் நிறைய புகழ் மாலையை  கமலுக்கு அளித்திருப்பார்.  பெரும்பாலும் அது நன்றி பாராட்டுவதாகவே இருக்கும்.  கமல் அவர்கள் ஆரம்ப காலத்தில் செய்த உதவியை மறக்காமல், வடிவேலு அவருக்கே உரிய  நகைச்சுவை உணர்வோடு கூறியிருப்பார்.  சிங்கார வேலன் திரைப்படத்தில் மூன்றே மூன்று டயலாக் பேசி நடித்த வடிவேலுவை பார்த்த கமல்,  தேவர்மகன் திரைப்படத்தில் அவரை நடிக்க முன் பணம் பெற்றுக்கொள்ள நாளை கமல் அலுவலகத்திற்கு செல்ல சொல்வார்.    அடுத்த நாள் போகாமல், அன்று மாலையே சென்று இருப்பார்.  இதுவும் ஒரு குறிப்பிடத்தக்க ஒரு பண்பு. 



அதில் ஒரு இடத்தில் 'கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடி வைக்கிற திரையுலகத்தில்'  என்பார், அந்த வரியை திரும்ப திரும்ப யோசித்தால் வள்ளுவரின் 'நன்றல்லது அன்றே மறப்பது நன்று'  பற்றி வடிவேலு இடித்துரைப்பது போல தான் இருக்கும்.   எத்தனை விதமான துரோகங்களை,  நல்லது அல்லாதவற்றை இவர்கள் சந்தித்து இருப்பார்கள், நிறைய மனிதர்கள் புழங்கும் இந்த மாபெரும் கனவு தொழிற்சாலையில்.      அவற்றை அந்த ஒற்றை வரியில் நகைச்சுவையாக பேசி மறந்து கடந்திருப்பார்.  


நன்றல்லது அன்றே மறப்போம்.   இனிய நாளாகட்டும்.


https://www.youtube.com/watch?v=uxanERLYqLE



குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...