குறள் 108
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
கமல் 60 நிகழ்வில் வடிவேலு பேசிய வீடியோ சமீபத்தில் மீண்டும் கண்டேன். அதில் நிறைய புகழ் மாலையை கமலுக்கு அளித்திருப்பார். பெரும்பாலும் அது நன்றி பாராட்டுவதாகவே இருக்கும். கமல் அவர்கள் ஆரம்ப காலத்தில் செய்த உதவியை மறக்காமல், வடிவேலு அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு கூறியிருப்பார். சிங்கார வேலன் திரைப்படத்தில் மூன்றே மூன்று டயலாக் பேசி நடித்த வடிவேலுவை பார்த்த கமல், தேவர்மகன் திரைப்படத்தில் அவரை நடிக்க முன் பணம் பெற்றுக்கொள்ள நாளை கமல் அலுவலகத்திற்கு செல்ல சொல்வார். அடுத்த நாள் போகாமல், அன்று மாலையே சென்று இருப்பார். இதுவும் ஒரு குறிப்பிடத்தக்க ஒரு பண்பு.
அதில் ஒரு இடத்தில் 'கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடி வைக்கிற திரையுலகத்தில்' என்பார், அந்த வரியை திரும்ப திரும்ப யோசித்தால் வள்ளுவரின் 'நன்றல்லது அன்றே மறப்பது நன்று' பற்றி வடிவேலு இடித்துரைப்பது போல தான் இருக்கும். எத்தனை விதமான துரோகங்களை, நல்லது அல்லாதவற்றை இவர்கள் சந்தித்து இருப்பார்கள், நிறைய மனிதர்கள் புழங்கும் இந்த மாபெரும் கனவு தொழிற்சாலையில். அவற்றை அந்த ஒற்றை வரியில் நகைச்சுவையாக பேசி மறந்து கடந்திருப்பார்.
நன்றல்லது அன்றே மறப்போம். இனிய நாளாகட்டும்.
https://www.youtube.com/watch?v=uxanERLYqLE
No comments:
Post a Comment