Sunday, March 01, 2020

படி விளையாடுதலும் சிவராத்திரியும்....

நேற்று காலையிலிருந்தே பக்கத்து ஊரில் இருந்து பக்திப் பாட்டுச் சத்தம் கன்னடத்தில், தமிழிலும், தெலுங்கிலும், சமஸ்கிருதத்திலும்,மலையாளத்திலும் கலந்து கட்டிக்  கேட்டுக்கொண்டே இருந்தது. அலுவலகம் முடித்து வந்த சாயங்காலமும் கேட்டுக்கொண்டே இருந்தது. இரவு எட்டு மணி வாக்கில் ட்ரம்ஸ் முழங்க, பேண்ட் செட் அடி சத்தம் வீட்டை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்க ஆரம்பித்தது.   தப்பாட்ட அடி போல கால்களை ஆட இழுத்தது. 'என்னதான் நடக்கிறது' என்று வேடிக்கை பார்க்கச் செல்ல முனைந்தேன். இவர்கள் ஊரின் சிவராத்திரி எப்படித்தான் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆவலும் அதில் உண்டு. வாண்டுகளும் "நாங்களும் வருவோம்" என்று சேர்ந்து கொண்டார்கள்.    


வண்டியை கிளை சாலையில் நிறுத்திவிட்டு,  வேடிக்கை பார்க்கும் மக்களோடு ஐக்கியமானோம்.  நின்று கொண்டு இருந்த இடத்தை, பேண்ட் செட் குழு முதலில் நெருங்கியது.  பின்னால் சற்று தொலைவில் ரதம். தள்ளிக்கொண்டு வந்த பெரிய ட்ரம்ஸ் நின்றது.  கூடவே பேண்ட் செட் அடியை சற்று நிறுத்தினார்கள். ஒரு தவுசண்ட் வாலாவை கீழே வைத்து பற்ற வைத்தார்கள்.    வாண்டுகள் காதுகளை மூடிக்கொண்டார்கள்.  

பட படவென  ஐந்து நிமிடம் வெடித்து ஓய்ந்தது.  ட்ரம்ஸ், பேண்ட் செட் மறுபடியும் நம்மை ஆட அழைப்பது போல அடியை ஆரம்பித்தார்கள். மெல்லமாக நகர ஆரம்பிக்க, பின்னால் ஒரு குழு நடந்து சென்றது.   ஆட்டம் இல்லை.     


 ரதம் போன்ற மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அமைப்பு பக்கமாக வந்தது.   மின்மினி விளக்குகளால் சுற்றிலும் ஒளிர்ந்து கொண்டு வந்தது. மனித முகம் போல ஒரு தகடு வைக்கப்பட்டு பிரமாண்டமாக சோடிக்கப்பட்டு இருந்தது.  வழக்கமான சிவன் முகம் மாதிரியும் தெரியவில்லை. வேறு ஏதேனும் சாமியோ? சந்தேகத்தை தெளிந்திட பக்கத்தில் இருந்த உள்ளூர்காரரிடம், கன்னடம், தமிழ், ஆங்கிலம் கலந்து தயங்கியபடியே ஒருவாராக கேட்டேன்.

 

"ஏனு சாமிங்?" ( அந்த நம்மூரு ங்க மட்டும் சட்டென போவதில்லை)

 "சிவா" 

 "கோயில் எள்ளிதே?" 

 "ஈக்கட ஆலமரம் பேக் சைடு"  அந்த ரதம் வந்த வழியாக கையைக்  காண்பித்தார். அது ஊரின் பின்பகுதி.      அந்த ஆலமரத்தின் வழியாக பலமுறை காலை ஓட்டம் ஓடி இருந்தாலும், அங்கு ஒரு சிவன் கோவில் இருந்ததை இதுவரை பார்த்ததில்லை.   


"இதி ரவுண்ட் ஹோகிதா?" 

"ஆக்கட ஹோகி ஈக்கட பரித்தே" என இப்படிக்கா போயி அப்படிக்கா ஊரைச் சுற்றிக்கொண்டு வரும் என்றார்.  


வேடிக்கை பார்த்த மக்கள் ஒவ்வொருவராக ரதத்தின் அருகில் சென்று குங்குமம் வாங்கிக்கொண்டு வந்தார்கள்.  அவரின் மனைவியும் குங்குமம் வாங்கிக்கொண்டு வந்தார். அவருக்கு கொடுத்துவிட்டு, என் வாண்டுகளுக்கும் வைத்துவிட்டார், கூடவே எனக்கும் கொடுத்தார்.   சாதாரண மனிதர்களின் அன்புக்கு மொழி ஒரு பொருட்டே இல்லை.         

   

அந்த ரதமும், மேள தாளமும் மெதுவாக தேங்கித் தேங்கிச் செல்ல ஆரம்பித்தது.   கோவில் எப்படி இருக்கு என ரதம் வந்த வழியில் கோயிலை நோக்கி சென்றோம். ஆலமரம் சீரியல் லைட் விழுதுகளால்  மின்னிக்கொண்டு இருந்தது. கீழே வயலுக்கு செல்லும் வழி. பக்கவாட்டில் சப்போட்டா தோப்பு. நெடுக பளிச் அலங்கரிப்பு.  தரையில் விரிப்பு. விரிப்பின் இறுதியில் கோவில். ஒரு பத்துக்குப் பத்து தான் இருக்கும். திறந்தவெளியில் நந்தி.   சுற்றிலும் எந்த சுற்றுச்சுவரும் இல்லை. உள்ளே ரதத்தில் பார்த்தது போன்ற தகடால் ஆன ஒரு குட்டி மனித முகம் போன்ற அமைப்பு.   என்னால் மீண்டும் சிவன் என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தீபாராதனை உடன், பாலையும் தயிரையும் கலந்து கொடுத்த பிரசாதத்தை வாங்கிக் கொண்டு வெளியேறினோம்.    


அங்கங்கு ஒரு முப்பது பேராவது இருப்பார்கள்.  பெருங் கூட்டம் இல்லை. ஆனாலும் கூட்டம் வந்த வண்ணமும், கலைந்தும் சென்று கொண்டும்  இருந்தது. உள்ளூர் மக்களைத் தவிர வடக்கு, தெற்கு என பல தரப்பட்ட கூட்டம். நகரமயமாக்கல் பெங்களூரின் புறநகரில் உள்ள இதுபோன்ற கிராமங்களையும், தன்னோடு இணைத்து பெருநகரமாகிக்  கொண்டு இருக்கிறது. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வந்து இந்த சிற்றூரை, கொஞ்சம் கொஞ்சமாக வளைத்துக் கொண்டு இருக்கும் இந்த சமயத்தில், இந்த கிராமத்தின், இந்த சிறு கோவிலின் சிவராத்திரிக்கான கூட்டம் கண்டிப்பாக அதிகரித்து இருக்கும் என்று சொல்லமுடியும்.  உள்ளூர் மக்கள் என் போன்ற மக்களை குறு குறு என பார்ப்பது போன்ற உணர்வு. வாண்டுகளின் தமிழைக் கேட்டு இன்னொரு தமிழ் குடும்பம் புன்முறுவல் இட்டு கடந்தார்கள்.  



வெளியேறும் தருவாயில் நண்பர் ஒருவர் வந்தார்.   "சின்ன கோவில் தான் போலங்க. ரதம் வந்துச்சு, சரி கோயில் எங்க இருக்குன்னு பார்க்க வந்தோம்"  

"ஆமாங்க, இது சுயம்புவாக உருவான கோவில், நாங்க இங்க வந்ததிலிருந்து ரெண்டு.மூணு வருஷமா  வந்துட்டு இருக்கோம்" என்றார்.  


வண்டியை எடுத்து வந்த வழியில் திரும்பினாள்,  ரதமும் அந்த கூட்டமும் ஒரு 50 அடி தொலைவு நகர்ந்து  சென்றிருந்தது.   


இங்குள்ள சிவ வழிபாடு என்பது 11-12 ம் நூற்றாண்டில் பசவன்னா அவர்கள் உருவாக்கிய லிங்காயத்து சமயம் சார்ந்ததாக இருக்கலாம்.    அது நமது 6-7ம் நூற்றாண்டின் நாயன்மார்கள் உருவாக்கிய சைவம் சார்ந்து வந்துள்ளது என்றும் கூறுகிறார்கள். அது அப்படியே அகத்தியர் வரை செல்கிறது. காலத்திற்கேற்ப கொண்டாட்டமும் குடி இருக்கலாம்.   இத லிங்காயத்து சமய வழி வந்தவர் தான் சென்ற வருடம் மறைந்த 111 வருடம் வாழ்ந்த சிவகுமார் சுவாமிகள். இந்த லிங்காயத்து சமயம் சாதிய ஏற்ற தாழ்வு இல்லாமல் கட்டமைக்கப்பட்டது என்கிறார்கள். ஆனால்  இப்பொழுது அப்படியா என தெரியவில்லை.    

 


சிவராத்திரியின் போது அப்பொழுதெல்லாம் என்ன நடக்கும்  என ஊர் சார்ந்த அனுபவம் ஒப்பீடாக வந்து சென்றது. இப்படியாகத்தானே காட்டுக்  கருப்பண்ண சாமி கோவிலுக்கு சென்று வருவோம்? படி விளையாடுதல் என்று ஒரு நிகழ்வு நடக்குமே! அது என்ன ஆச்சு?


வீட்டிற்குள்  வநுழைந்தால் டிவியில் ஜக்கி  அந்த நெடு நீண்ட மேடையில் நடந்து கொண்டு இருந்தார். அவ்வப்போது ஆடிக்கொண்டிருந்தார்.   "என்ன இந்தய்யனெல்லாம் ஆடராறு?" என்று ஒரு கமெண்ட் எங்கம்மாவிடம் இருந்து வந்தது.  

    

இப்படியாக  இந்தப்பக்கம்(சமூக வலைத்தளங்களுக்கு) வந்தால்,  சிவராத்திரியை சீரியஸா எடுத்துக்கிட்டு ஒரு க்ரூப்.  கழுவி ஊத்த ஒரு பெரும் குரூப்.    


நமது சிற்றுர்களில் ஒவ்வொரு சமூகமும் அவர்களுக்கான தனிக்  கோவிலை கட்டி எழுப்பி இருப்பார்கள். கருப்பணன், மதுரை வீரன், முனியப்பன் போன்ற பண்பாட்டுத் தெய்வங்களாகவே இவையாவும் இருக்கும்.    பிள்ளையார், பொட்டுசாமி இதில் கலந்துகொள்ள மாட்டார்கள். இவுங்க முறை வேறு நாட்களில் வரும். அப்போது ஊரில் இருந்த சிவன் கோவில் கூட சிவராத்திரி அன்று திறந்து வைத்திருந்த ஞாபகம் இல்லை.   அப்பாவும் அதனை ஆமோதித்தார்.  


சிவராத்திரி வரும் ஒரு பத்து பதினைந்து நாட்களுக்கு  முன் அதற்குட்பட்ட அங்காளி, பங்காளிகள் சேர்ந்து கொள்வார்கள்.  "இந்த வருஷம் செவன்ராத்திரி சனிக்கெழம வருது. எப்ப விளையாட போலாம்?"   "எங்க இருந்து ஆரம்பிக்கலாம்?" என்ற ஒரு கேள்விக்கு ஒரு செயல்திட்டம் வாய்வழியாகவே உருவாகும்.     இங்கு விளையாடுதல் என்பது படி விளையாடுவதைக் குறிக்கும்.   


 கிட்டதட்ட என் அப்பாவுக்கு ஞாபகம் தெரிந்து இது நடைபெற்றதாம், படிப்படியாக இப்பொழுது ஒரு பத்து/பதினைந்து வருடங்களாக நடைபெறுவதில்லை என்றார்.   சமீபத்தில் கேட்ட ஜெயரஞ்சன் அவர்களின் நிலக்கிழார் என்ற அமைப்பு எப்படி மறைந்துபோனது என்பதை நினைத்துக் கொண்டேன். 


அவரவர்களுக்கு, ஒவ்வொரு சமூகத்திற்கும், பாத்தியப்பட்ட நான்கைந்து அல்லது பத்து பதினெட்டு ஊர்களுக்கு கூட செல்வார்கள்.   "அட எங்கப்பா... இந்த வருஷம் மழையே இல்லாம, எல்லாம் காஞ்சு போய் கிடக்குது. ஒன்னும் கிடைக்காது. பேசாம விட்டறலாம்" 

 "இதெல்லாம் வழி வழியா சாமிக்கு பண்ணறது,  சாங்கியதுக்கு ஒரே ஒரு ஊருக்கு மட்டுமாவது போயிட்டு வரலாம்.  சாமிக்குன்னா எல்லாருமே செய்வாங்கப்பா " என்று வறட்சி காலத்தில் பேருக்காக,  ஒரு சில ஊர்களுக்கு சில வீடுகளுக்கு மட்டும் செல்வதும் உண்டு.   


குறைந்தது ஐந்தாறு பேர்.  அதில் பூசாரி எனப்படுபவர் கையில் தட்டு. மறு கையில்  மணி. தட்டு நிறைய திருநீர். ஒரு உயரமான வேல். திருநீறு பொட்டு வைக்கப்பட்டு, எலுமிச்சை குத்தப்பட்டு இருக்கும்.  கதம்ப பூவால் நளினமாக சுற்றப்பட்டு இருக்கும். கூடவே ஒரு வாள். அதனைப் பிடித்துக்கொள்ள இருவர். சிண்டு, சிறுசுகளிடம் செவண்டி, மணி.    சாயங்காலம் இருட்டியதும் ஆரம்பிப்பார்கள். ஒரு கை விளக்கு. அவ்வப்போது எண்ணெய் ஊற்றிக்கொள்வார்கள்.   


 ஒரு  ஊரை எடுத்துக்கொண்டு, ஒரு பக்கமா இருந்து ஆரம்பிப்பார்கள்.  அல்லது பெரிய தலைக்கட்டு குடும்பத்திடம் இருந்து ஆரம்பிப்பார்கள்.   பெரும் நிலம் வைத்து இருந்தர்வர்கள் நெல்லை முறத்தில் கொண்டு வந்து போடுவார்கள்.   சிலர் வள்ளத்தில் அளந்து போடுவார்கள். பூசணி, சேனைக்கிழங்கு என காட்டில் விளைவதைக் கொடுப்பார்கள்.  கை விளக்கிற்கும் எண்ணெயும் கொடுக்கப்படும்.    


" எப்ப  பொங்க, 

"அடுத்த ஞாயித்துக்கெழமைங்" 

"அந்தன்னிக்கு வந்து எளனி வாங்கிட்டுப் போயிருப்பா, பாலு கீழு வேணும்னாலும் வாங்கிக்க"


சில வீடுகளில் அரிசியும் உண்டு.   நெல், அரிசி கொடுக்காதவர்கள் அல்லது இல்லாதவர்கள் காணிக்கை மட்டும் இடுவதுண்டு.  இவையாவும் பக்திக்காக, சாமிக்கானது மட்டுமல்ல; அப்போதைய கிராமப் பொருளாதாரத்தின் ஒரு அன்பு பிணைந்த நெட்வொர்க்.  இப்படியாக இரவு ஒன்பது, பத்து மணிக்கு முடியும். 


ஆயுதபூஜைக்கு பொரி  போல, சிவன் ராத்திரிக்கு கண்டிக்கிழங்கு.    ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு சாப்பிடும் பொருள் பேமஸ் தானே.  அன்று காலையில் கண்டிக்கிழங்கு மூட்டை மூட்டையாக ஊரின் முக்கிய கடையில் கடை போட்டுவிடுவார்கள்.   ஒவ்வொரு வீடுகளிலும் சாயங்காலம் கண்டிப்பாக வேவிக்கப்படும். கோவில்களில் சுண்டல், கிழங்கு, மொச்சக்கொட்டை,  பாசி பயிர், பூசணி என இரவு முழுவதும் வேக வைப்பார்கள். விடிகாலை பூசை. அத்தோடு சிவராத்திரி முடிவடையும். பெரிய ஆர்ப்பாட்டம் இருக்காது.  


கொண்டாட்டம் என்பது தொடர்ந்து மாசி பங்குனியில் வரும் அந்த காவல் தெய்வங்களின் பொங்கல் பண்டிகை தான்.  காலையிலிருந்தே மைக் செட் கட்டி விட்டிருப்பார்கள். இந்த ஒற்றுமை இந்தியா முழுவதும் இருக்குதோ என்னவோ?  படி விளையாண்டு சேர்த்த நெல், அதில் கிடைத்த காணிக்கையோடு அந்த காவல் தெய்வங்களுக்கு தீர்த்தம் அழைத்தல், கெடா வெட்டுதல், படையல், காவு சோற்று என ஒரு நாள் முழுக்க வழக்கமான ஊர் கொண்டாட்டத்துடன் நடக்கும்.   


அன்று சின்னதாக வசூல் செய்து அவர்களுக்கு உரிய வகையில் கெடா வெட்டு, சாராயம் என்று இருந்தார்கள். இன்று பெரிய அளவில் மார்க்கெட்டிங், அதன் மூலம் வசூல் செய்து அனைத்து டிவியிலும், வலை தளங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்து, அவர்களுக்கு உரிய வகையிலான 'கொண்டாட்டத்தில்' இருக்கிறார்.   எப்படி மற்ற எல்ல விஷயங்களும் சந்தைப்படுத்தப் பட்டுள்ளதோ, அது போலவே. கூடவே சாதாரண மக்களுக்கு உரிய கொண்டாட்டம் அதன் போக்கில் மாறிக்கொண்டு அன்பு பறிமாறிக்கொண்டு உள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக சிவராத்திரி மற்றொரு நாளாக சென்றுகொண்டே இருக்கிறது.



No comments:

குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...