Friday, February 11, 2022

குறள் 1040

 *குறள் 1040:*

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.

*பொருள்:* எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.

என் விளக்கம் :

முதலில் இந்த குறளில் வரும் *அசைஇ எனும் சொல்லிசை அளபெடை* தான், இந்த குறளின் அடிநாதம். அசையாமல் =சோம்பல் எனும் பொருளில் வருகிறது. அதனை வைத்து பார்க்கும் பொழுது, மூன்று வகையான பொருள் எனக்குத் தோன்றுகிறது.
1.
"தாரு காடு? அவங்க காடா? ஒன்னும் போட மாட்டாங்க.. நறுவுசாவே வெச்சிருக்க மாட்டாங்க.. செடி செத்தை மொளச்சு பொதர் மாதிரி கெடக்கும்.. புழு பூச்சி இருந்தா கூட தெரியாது"
சோம்பலால் எந்த வேளாண்மையும் செய்யாமல் இருக்கும் நிலம் சிரிக்கும் என்பதை புல், பூண்டு முளைத்து பயன்படாமல் இருப்பதை //நிலமென்னும் நல்லாள் நகும்.// என்று கூறுகிறார் எனலாம்.
2.
நிலம் பன்மடங்கு வைத்திருந்தவர்கள், கடன் காரணமாக அதனை விற்றுவிட்டு ஒரே ஒரு வீட்டில் இருப்பதையும் காணலாம். படிக்காதவர்கள், ஒரே ஒரு வாடகை வீடு மட்டும் வைத்து இருந்தவர்கள், நிலத்தினை குத்தகைக்கு எடுத்து, உழைப்பின் மூலம் இன்று சொந்த வீட்டிலும் உள்ளார்கள் (அவர்கள் அளவில் அது சாதனை ).
முதலாமவர்க்கு கடன் சோம்பலால் மட்டுமே வந்ததா? இருக்காது, புறக்காரணிகள், பருவம் தப்பிய மழை, வெயில் அல்லது அவர்களின் தவறான முடிவு.
இரண்டாமவர்க்கு, உழைப்பு மட்டுமே காரணமாகுமா? உழவை பொறுத்த வரையில் முயற்சியோடு நேரம் கை கூடவேண்டும். முதலாமவர்க்கு இருந்த அதே புறக்காரணிகள் இவருக்கும் இருந்திருக்கும். ஆனால் hard work உடன் Smart work சேர்த்து செய்து முன்னேறி இருப்பார்.
//நிலமென்னும் நல்லாள் நகும்.// இங்கு நிலமகள் என்பதை ஊர் மக்கள் என்றும் கூறலாம். சோம்பலால் மட்டும் அல்ல, வெற்றிபெறாத மனிதர்களை புறம் பேசி நகைக்கவே செய்வார்கள்.
3.
இந்த குறளை உழவுக்கான குறளாக மட்டும் கருதாமல் முயற்சிக்கான குறளாகவும் எடுத்துக்கொள்ளலாம். அப்படி எடுத்துக்கொண்டால்
"முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்". - இந்த குறளின் சாரம் மேற்சொன்ன 1040 வது குறளில் இருக்கும்.
இந்த குறள் இருக்க, அதேபோல ஏன் மற்றோர் குறள்? இப்ப ட்விட்டர்ல காப்பி பேஸ்ட் ட்ரெண்ட் மாதிரி, வள்ளுவர் ஒவ்வொரு அதிகாரத்திலும் தனித்தனியாக அதே நல்ல விஷயங்களை வேறு வேறு வகையான மக்களுக்கு கூறியள்ளார் என எடுத்துக்கொள்ளலாம்🙂
இனிய நாளாகட்டும்.

No comments:

குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...