Thursday, May 25, 2017

நூலகம் - அகத்திலும், இணையத்திலும்



சித்திரை திருநாள் வாரம் சென்னையில் இருக்க நேர்ந்தது.   ஞாயிறு மதியம் உணவு உண்ட பின், வழமையாக தூங்கி அ.
தொலைக்காட்சியுடன் பொழுதை கழிக்க விருப்பம் இல்லாமல், உண்ட களைப்புடன், மொபைலை நோண்டிக்கொண்டு இருந்தேன்.     அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 'சுஜாதாவின் பன்முக ஆளுமை' என்ற தலைப்பில் பல எழுத்தாளர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என அறிந்து, உடன் இருந்த அக்காவின் மகனையும் இழுத்துக்கொண்டு வண்டியை விரட்டினேன்.   நேரடியாக அரங்கை தேடி நுழைந்து கேட்க ஆரம்பித்தோம்.   நல்லதொரு நிகழ்வு.  சுஜாதா அவர்கள் பற்றி அறியாத தகவல்களையும் அறிய முடிந்தது.     நிகழ்வின் இடையே தேநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது(வரலாறு முக்கியம்).  நூலகத்திற்கு  முதன் முறையாக சென்றிருந்தேன்.  நிகழ்வு முடிந்தவுடன் அப்படியே நூலகத்தை சுற்றி பார்வையிட்டோம்.  படிக்கப்படாமல் அலமாரியில் வைக்கப்பட்டுள்ள புதிய புத்தகம்போல், குளிர்சாதன வசதி செய்யப்பட்டும்,  மக்களால் பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஒரு  நூலகம்.    சில  வாரங்களாக  பொன் மாலைப்பொழுது என்ற நிகழ்வின் மூலம் பிரபல எழுத்தாளர்களின்  கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதையும்  அறிந்து, 'சென்னையிலேயே வசித்து இருக்கலாமோ' என்ற ஏக்கம் ஒரு கணம் வந்து சென்றது.    இது மட்டுமல்லாமல் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பு என நல்ல முயற்சிகள் திரு உதயச்சத்திரன் அவர்களால் எடுக்கப்பட்டு வருவது மகிழ்ச்சி.

திருவான்மியூர் வழியாக திரும்புகையில், மாலை வெயிலில்  கூட்டமாக இளைஞர்கள் கூட்டம் அள்ளியது சத்யம் வாசலில்.  'சரி விடு, தியாஐராஜர் திரையரங்காக  இருந்தபோது, ஞாயிறு மாலை நாமும் இங்கு தானே நின்றுகொண்டு இருந்தோம்'.  


அதே வாரம், ஈரோடு சம்பத் நகர் நவீன நூலகத்தில் ஒரு நிகழ்வு.  நண்பர் ஈரோடு கதிர் அவர்கள் உரையாற்றுவதை  கேட்கவும், அவருடன் உரையாடவும் சென்றிருந்தேன்.   இங்கும் ஒரு நேர்த்தியான கருத்தரங்கு கூடம், பயிற்சி வகுப்புகளுக்கான அறை, பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தனித்தனி படிக்கும் அறைகள் மற்றும் கழிப்பறை  வசதி என  ஒரு 'மினி' அண்ணா நூலகத்தை கொண்டு இருந்தது.   இங்கும் தேநீர் கொடுக்கப்ப்பட்டது(வரலாறு மீண்டும் முக்கியம்).  இரண்டு நூலகத்தின் நிகழ்விலும்  ஏறக்குறைய அரங்கு நிரம்பி இருந்தது(நானே நூலகம் செல்லும்போது, அரங்கு நிறையத்தானே செய்யும்) .  "நல்ல வசதிகளுடன் உள்ளது இந்த நூலகத்தை, நாம் சிறப்பாக பயன்படுத்த வேண்டும்" என்று அப்போது கூறிய  ஈரோடு கதிர் அவர்கள்,    கடந்த ஞாயிறு அன்று,   ஈரோடு வாசல் குழுமத்தின்  மலர்களை பேச அழைத்து 'புத்தகங்களைப் பேசுவோம்'  என்ற  தலைப்பில் நடத்தியது,  அண்ணா நூலகத்தின்  நிகழ்வு  போல் ஆன ஒன்று.     .    

இந்த இரு நூலக வடிவமைப்பின் ஒற்றுமையை விட மேலும் ஆச்சர்யமூட்டிய ஒன்று.        அண்ணா நூலகம் பற்றி  சில தகவல்களை அறிய இணையத்தில் தேடும்பொழுது, வந்து விழுந்தவை  'பொன்மாலைப் பொழுதின் காணொளிகள்'(இதற்குத்தானே ஆசைப்பட்டாய் .    இந்த காணொளிகள்  காலைப்பொழுதையும் அதன் நடைபயிற்சியையும்  'கற்றலின் கேட்டல்  நன்று' என இனிதாக்குகின்றன.       படிக்க நேரம் கிடைக்காமல் அ. விருப்பம் இல்லாமல்   இருப்பவர்களுக்கு  இந்த காணொளிகள் வரம்.

அதிலிருந்து  எனது செவிக்கு உணவிட்ட  சித்த மருத்துவர் கு.சிவராமன் அவர்களுடனான வயிற்றின் உணவைப்பற்றிய கலந்துரையாடல் இங்கே.

https://www.youtube.com/watch?v=yGJ4xCbYDfg&t=5643s

No comments:

குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...