காரோனா அதன்போக்கில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. பலதரப்பட்ட மக்கள் வெளியே வந்து அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஊரில் திருமணங்கள், கிடா வெட்டு விசேஷங்கள் குறைந்த எண்ணிக்கையில் நிகழத் துவங்கியுள்ளது. அரசும் லாக் டவுனை(?!) கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தி வருகிறது. இருந்தாலும் நகரங்களில் முடிந்தளவு மக்கள் இன்னும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறோம். முன்புபோல இயல்பான நிலைக்கு மாறி விட்டோமா? என்றால் இல்லவே இல்லை.
கடந்த ஆறுமாத கால கட்டம் பல பழக்கங்களை மாற்றி உள்ளது. அதிலும் கடைகளுக்கு சென்று மளிகை பொருட்கள், காய்கறி வாங்கும் முறை முற்றிலும் மாறி இருக்கின்றது. இந்த நான்கைந்து மாதங்களில் காய்கறிகளை வாங்கியவுடன் சுத்தமாக கழுவியது போல், வேறு எப்போதும் கழுவியது உண்டா என்று யோசித்துக் கொண்டிருக்கின்றேன். காய்கறிகள் கழுவிக்கொண்டு இருக்கும்பொழுது சோகமாக இப்படியும் நான் உளறுவது உண்டு 'காவியங்கள் உனைப் பாட காத்திருக்கும் பொழுது, காய்கறிகளை நீ கழுவினால் என்னவாகும் மனது' என்று.
லாக்டவுன் ஆரம்பித்த புதிதில் செய்த செயல்கள் வரலாறு முக்கியம் அமைச்சரே போன்றவை. காய்கறிகள் வாங்கி வந்தவுடன் அவற்றை வெளியே வைத்து, முக்கால் பக்கெட் தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் போட்டு தண்ணீர் கரைசல் தயாராகும். அதில் எல்லா காய்கறிகளையும் கொட்டி, கொஞ்ச நேரம் ஊற வைத்து விடுவேன். பின் ஒரு பெரிய துணியை விரித்து, அதன் மேல் காய்கறிகளைக் கொட்டி நீண்ட நேரம் ஈரம் காய உலர வைத்து விடுவோம். அதன் பின் அதனை குளிர்சாதன பெட்டியில் ஒவ்வொறாக தனி தனி டப்பா அல்லது கவர் அல்லது பையில் எடுத்து வைப்போம். இது ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாமல் நடைபெற்று வந்தது.
காய்கறிக்கே அப்படி என்றால் நமக்கு. நேராக குளியல் அறைக்கு சென்று குளித்துவிட்டு, அந்த துணிமணிகளை சோப்பு போட்டு துவைத்து காயப்போட்டு விட்டுத்தான் அடுத்த வேலை. வேறு ஏதேனும் காய்கறிகள் தவிர மளிகைப் பொருட்கள் வாங்கி வந்தால் அதனையும் வெளியில் வைத்துவிட்டு, அதற்கும் சனிடைசர் அல்லது டெட்டால் கரைசலில் துடைத்து வைத்ததும் நடந்தது. பின்னர் ஓரிரு நாட்கள் கழித்துத் தான் அந்தப் பொருட்களை எடுத்து உபயோகப் படுத்தி இருக்கிறோம்.
அதுவும் லாக்டவுன் ஆரம்பித்த மார்ச் இறுதியில் இது மிகவும் அதிகம். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, கடந்த இரு மாதங்களாக அதுவும் மங்கிப் போய் உள்ளது. கொரோனாவை நாம் புரிந்து கொள்ள ஆர்மபித்துவிட்டோம் எனலாம் அல்லது சோம்பேறித்தனம் என்றும் கூறலாம். காய்கறிகளின் மூலமாக கொரோனா தொற்று வராது என்று நம்பிக் கொண்டும் இருக்கலாம்.
அதுபோல எங்கும் தொடாமல் காய்கறிகளை வாங்கி விட்டு வந்தவுடன், அதற்காக கொண்டு சென்ற பணத்தை அப்படியே சோப்பு நீரில் ஊறவைத்து கழுவி அதையும் காய வைத்துவிட்டு, வண்டி சாவியையும் கழுவி காய வைத்துவிட்டு பின்னர்தான் குளிக்க செல்வேன். கூடவே வண்டியின் கைப்பிடி, கதவு என தொட்ட ஒவ்வொன்றையும் துடைத்தது வரலாற்றில் குறித்துக்கொள்ள வேண்டும்.
முதல் ஓரிரு மாதங்கள் இப்படியாகத் தான் சென்றது. அதன் பிறகு கிட்டத்தட்ட அனைத்து பண பரிமாற்றமும் Gpay மற்றும் paytm க்கு மாறியிருந்தது. இப்பொழுது பணம் அவ்வளவாக எடுத்துச் செல்வதில்லை. ஆனாலும் வெளியில் சாலையில் கடை போட்டிருக்கும் அந்த பாட்டியை பார்த்தவுடன் அவர்களிடம் தான் வாங்க தோன்றுகிறது.
இது ஒருபுறமிருக்க எங்களது கம்யூனிட்டிக்கு நான்கு சக்கர வாகனத்தில், ஒருவர் காய்கறியை நேரடியாக கொண்டு வர ஆரம்பித்து விட்டார். இது இன்னும் சுலபமாகவே இருந்தது. அவர் உள்ளே நுழைந்ததும் ஆப் அலாரம் அடிக்கும். பலர் பரபரப்பாக ஓடி வந்து முதலில் வாங்க ஆரம்பித்தார்கள். அந்த கூட்டம் எனக்கு சற்று பயத்தை கொடுத்ததால், கூட்டம் குறைந்த பின்னர் கடைசியாக சென்று வாங்குவதற்கு பழக்கப்படுத்திக் கொண்டேன். அவரிடமும் நெருக்கம் ஆகி விட்டது.
"என்ன சார், இன்னிக்கு ரொம்ப லேட்டா வரீங்க?" "கீரை பிரெஷ் சார் வாங்கிக்கோங்க" என்பார். கன்னடமும், தெலுங்கும் ஹிந்தியும் பேசுவார். இந்த மொழி சார்ந்த விஷயம் பெங்களூரில் ஆச்சர்யமான ஒன்று. தொழில் செய்யும் பலரும் குறைந்தது மூன்று நான்கு மொழிகளாவது பேசுவார்கள்.
சில வாரங்கள் அவர்களின் குழந்தைகளோடு வந்தார். "என்ன இன்னிக்கு உங்க பசங்கள காணோம்? " "இல்ல சார் ரொம்ப லேட் ஆகுது, அவங்க சாப்பிட லேட் ஆகிடுது" என்றார்.
"இன்னிக்கு என்ன ஆச்சு ரொம்ப லேட்டா வந்துருக்கீங்க" எனும் மற்றோரு நாளின் கேள்விக்கு " சார், வேற வண்டி சார் இது, என்னோட வண்டி பஞ்சர் ஆயிடுச்சு" என்பார்.
மற்றொரு நாள் "இன்னிக்கி KR புரம் மார்க்கெட் போகலைங்க.." "கொரோன அந்த பக்கம் இருக்கறதால இப்படி இந்த பக்கமா போயி சிந்தாமணியில் வாங்கிட்டு வந்துட்டேன்."
இவ்வாறாக பலவாறான பேச்சுக்கள் அவரோடு தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. பெரும்பாலான காய்கறிகள் அவரிடம் பேரம் பேசாமல் வாங்கிச் செல்வேன். ஒரு சிலவற்றை வேறோரிடத்தில் வாங்கினால்
குறைவாகத்தான் இருக்கும். அங்குள்ள ஒரு சிலர் வெளியில கம்மியா இருக்கு என பேரம் பேசுவார்கள். அது ஏனோ இவர்களிடம் பேரம் பேசும் ஆட்களை பார்த்தவுடன் சற்று ஆயாசமாக தான் இருக்கின்றது. இவர்களிடம் பேரம் பேசி என்ன கொண்டு செல்லப் போகிறார்கள். என்ன நூறு ரூபாயா அதிகமாக வைத்து விடுவார்கள் ? சூப்பர் மார்க்கெட்டிலும் அல்லது அமேசான்களில் அதிகமாக வைத்திருப்பது போல. எனக்கு கண்கூடாக தெரிந்தது வெளியில் நான் சென்று வாங்கினால் ஒரு பத்து இருபது ரூபாய் குறையத்தான் செய்யும். பரவாயில்லை. நம்மைத் தேடி வருகின்றார். அவரிடம் வாங்குவது தானே முறையாக இருக்கும்.
எனக்கு இந்த மாதிரி வெளியில் சென்று காய்கறி வாங்கிவிட்டு வந்தவுடன் இவ்வளவு சுத்தமாக இருப்பது, எனது தாத்தாவின் காலத்தை நினைவூட்டியது. பள்ளி முடிந்து புதன்கிழமை என்றதும் அவ்வளவு மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கும். ஆயாவும், தாத்தாவும் சந்தையிலிருந்து வாங்கி வரும் தயிர்வடைக்காக. இன்றும் அவர்கள் நினைவு தினம் கும்பிடும் வேளையிலே, தயிர்வடை அவர்களுக்கு பிரியமானது என இலையில் படைப்பது உண்டு. அல்லி இலையில் சுற்றி அடியில் ஒரு காகிதம் வைத்து நூலில் சுற்றப்பட்டு இருக்கும் அந்த பொட்டலம். அதில் குட்டி குட்டி போண்டாக்கள். ஒன்றை எடுத்து வாயில் போட்டாலும், அது அப்படியே மெதுவாக தயிரின் புளிப்புச் சுவையோடு கலந்து அவ்வளவு அமிர்தமாக இருக்கும். இப்பொழுதும் இதை எழுத நாவில் எச்சில் ஊறுகிறது.
சந்தைக்கு சென்று விட்டு வந்தவுடன் நேரடியாக கிணத்தடிக்கு சென்று குளித்துவிடுவார். அனைத்து உடைமைகளையும் துவைத்து காயப்போட்டு விட்டுத்தான் தாத்தா உள்ளே செல்வார். இந்தப் பழக்கத்தை அப்பாவிடமும் கண்டதுண்டு. புதன்கிழமை சந்தை சென்று வந்ததும் என்ன தீனி இருக்கும் என்று பார்க்கும் நான் தான், அந்த காய்கறிகளை எங்கள் வீட்டில் எடுத்து அடுக்குவது உண்டு. அந்த வாரத்திற்கு தேவையான காய்கறிகள் என அனைத்தையும் பரந்த மூங்கில் கூடைகளில் கூறு போட்டு வைப்பதும் உண்டு. முக்கியமாக அப்பொழுது ஆப்பிள் மற்றும் மாதுளை கிடைப்பது அரிது. அன்றைய வார சந்தைக்கும் இன்று வாரம் ஒருமுறை வாங்குவதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. இடையில்தான் தினமும் ஒருமுறை காய்கறிகள் வாங்க வேண்டும் என்பது வந்திருக்கக்கூடும் என்று நினைக்கின்றேன்.
அதுபோலவே அவர் காலத்தில் கசங்கிய, கிழிந்த, அழுக்குப்படிந்த ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் நோட்டுகளை கடைகளில் வாங்க மாட்டார்கள். அதனை சோப்பு போட்டு கழுவி, புத்தம் புது நோட்டு போல ஆக்கி செலுத்தி விடுவார். அவர்கள் காலத்தில், 2 ரூபாயே சந்தை செலவுக்கு அதிகம் என்பார்.
இன்று கொரோனா காலத்தில் சில பழைய பழக்கங்களை நம்மை அறியாமல் நாம் ஏற்றுக்கொண்டு இருக்கிறோம்.
No comments:
Post a Comment