இன்று நாம் குடிக்கும் நீர் RO மூலம் சுத்தப்படுத்தி சுகாதாரமான நீரை குடிக்கிறோம். கடைகளில் கேன்களில் கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட நீரை குடிக்க பயன்படுத்துகிறோம். இப்பொழுது எங்கள் ஊருக்கு சுத்திகரிக்கப்பட்ட காவிரி நீர் பல மைல் கடந்து தெருமுனைகளுக்கும், சிலரின் வீடுகளுக்குமே வருகிறது. தண்ணீரை வியாபாரமாக்கி உள்ளார்கள் எனும் சர்ச்சைக்கு செல்லவில்லை. அதேபோல காவிரியில் கலக்கும் கழிவுகளுக்கும் செல்லவில்லை. அதில் இருக்கும் சில பிரச்சினைகள் களையப்பட வேண்டும். அது பலரும் பேசிய விஷயம். ஆனால் இந்த சுத்தமான சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடிக்கும் இந்த சுகாதாரமான நிலைமைக்கு எப்படி வந்தோம் என்பதை அறிந்துகொள்ள இந்த கட்டுரை.
எங்கள் ஊரின் ஆரம்பப் பள்ளியின் அருகில் ஒரு அமுக்கு பைப் இருக்கும். அது தான் எங்கள் ஊருக்கு வந்த முதல் அடி பம்ப். அதுவரையில் ஊரின் மத்தியில் இருந்த கிணற்றில் இருந்து மட்டுமே தண்ணீர் சேந்தி எடுத்துச் செல்வார்கள். அந்த கிணற்றை சுற்றியும் வட்டமாக இடுப்புயர சுவர். அதன் மேல் சம இடைவெளியில் மூன்று சுவர் தடிமனுக்கு தூண்கள். அதன் மேல் மூன்று பக்கம் இரும்பில் விட்டம். ஒரு பருந்துப் பார்வை பார்த்தால் முக்கோணமாக இருக்கும். ஒவ்வொரு விட்டத்தின் நடுவில் உருளை இருக்கும். அதில் கயிறு போட்டு பக்கெட் ஒன்றை கட்டி, அதனைக் கிணற்றில் விட்டு தண்ணீர் இறைப்பார்கள். சிலர் 'அட பாக்கெட் பக்கெட்டா ஊத்தி என்னைக்கு நாம்பறது" என குடங்களையே கயிற்றில் கட்டி ஒரே இழுப்பில் தண்ணீர் கிணற்றில் இருந்து எடுத்துவிடுவார்கள். ஊர்க்காரர்கள் புரளி பேசும் இடம். சைட் அடிக்க கூடுமிடமாகவும் இருக்கும். இது தான் ஒட்டுமொத்த ஊரின் நல்ல குடிநீருக்கான மையம்.
அப்பாவின் காலத்தில் அந்த ஊர்க்கிணறும் இல்லை. ஊர்ப் பெரியவர்களின் வீடுகளில் கிணறு இருக்குமாம். அதுவும் மூன்றே மூன்று. அதில் பள்ளிக்கு செல்லும்முன் தண்ணீர் பல நடை மோந்து ஊற்றி வைக்க வேண்டும். பெரும்பாலும் அந்த கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டால், காட்டுக்குள் இருக்கும் செம்மண்குழி கிணற்றில் எடுப்பார்களாம்.
அடி பம்ப் வந்தவுடன் நல்ல குடிநீருக்கான மையமாக இந்த பம்ப் மாறியிருந்தது. சைக்கிள்களில் இருபுறமும் குடங்களைக் கட்டிக்கொண்டு பலரும் எடுத்துச் செல்வார்கள். நாங்கள் இரண்டு பேர் சேர்ந்து இதனை வேகமாக அழுத்துவது ஒரு விளையாட்டு. அந்த பம்பை அடைத்து வேக வேகமாக அழுத்தி சுற்றிலும் தண்ணீரை பீச்சி அடித்து ட்ரவுசர் சட்டைகளை நனைத்து ஜாலியாக நடைபெறும் தினசரி சம்பவம். அதிலும் யாரும் இல்லாதபோது நாமே அடித்துவிட்டு வேகமாக ஓடிவந்து தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
தென்னை மரங்களை சுற்றி ஒரு பாத்தி கட்டி அதனை நிரப்புவது தான் கடைசி பிரிவேளையில் நடக்கும். கிட்டத்தட்ட அதில் தண்ணீர் நிரம்பும் வரை நீர் எடுத்திருப்போம். பள்ளி சுற்றிலும் இருக்கும் வேலிக்கும் தண்ணீரை ஊற்றவேண்டும். பூந்தோட்ட காவல்காரன் வந்த சமயம். அந்தோணி வண்டி என்று இரு நண்பர்கள் தண்ணீரை வேகமாக எடுத்து வருவார்கள். அடி பைப்பிலிருந்து சிறிய மேடு ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக ஏறி பள்ளிக்கு கொண்டு சென்று மரங்களுக்கு ஊற்ற வேண்டும். இன்று பள்ளி சுற்றுப்புற சுவரோடு, கான்க்ரீட் காட்டிடத்துடன் அழகாக உள்ளது.
அந்த பைப்பில் தண்ணீர் வரும் தலைகீழான L வடிவ பைப்பில் பாக்கெட் மாட்டி தண்ணீர் பிடிப்போம். ஒருமுறை பிடிக்கும்பொழுது கீழே விழுந்து பெருவிரல் நசுங்கி, பக்கத்தில் இருந்த அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் தான் கட்டு போட்டுவிட்டு இருந்தார்கள். இப்பொழுது அந்த பம்பில் இருந்து மோட்டர் வைத்து மேல்நிலைத்தொட்டி கட்டிவிட்டார்கள். அதன் வழியாக கிட்டத்தட்ட ஒவ்வொரு வீதிக்கும் தண்ணீர் வரும். பத்தடி தொலைவில் சென்று பிடித்துக்கொள்ளலாம். அதன் அருகில் காவேரி நீர் பைப்பும் இருக்கும்.
இன்று போர் போட்டு் பராமரிப்பு இல்லாமல் உள்ள ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுந்து தத்தளிப்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. ஆனால் இந்த அடி பம்புகளின் வரலாறு எத்தனை நெடியது. நீர் சம்பந்தமான நோய்களை தீர்த்ததில் பெரும் பங்கு வகித்துள்ளது.
Guinea Worm Water Based Disease என்ற ஒரு நோயை உலகம் முழுவதும் தீர்க்க உலக சுகாதார நிறுவனம் நிதியை ஒதுக்குகிறது. 1980 இந்த திட்டம் ஒருங்கிணைத்த இந்தியாவில் ஆரம்பிக்கிறது. பொது சுகாதாரத்தில் முதல் இடத்தில் இருந்த தமிழகத்தில் நாலே வருடங்களில், நாம் சாதித்ததை ராஜஸ்தானால் 16 வருடங்கள் கழித்து தான் சாதிக்க முடிந்துள்ளது.
லிங்க் https://ncdc.gov.in/index1.php?lang=1&level=1&sublinkid=142&lid=73
இது என்ன நோய்? சேந்து கிணறு அமைப்புக்கு முன்பாக வெட்டப்பட்ட கிணறுகளில் படி வைத்து குடிநீரை எடுத்து வந்துள்ளார்கள். இன்றும் ராஜஸ்தானில் படிவைத்த பிரமாண்ட கிணறுகள் ஒரு வரலாற்று ஆவணம் போல அழகாக இருக்கும்.
குடிக்கும் நீரில் நரம்பு சிலந்தி நோய் இருப்பவர்கள் மூலம் அந்த லார்வா குடிநீரில் கலந்துவிடும். L3 லார்வா, இரைப்பையினுள் செல்லுதல், காலில் இருக்கும் புழு நீரினுள் L1 லார்வாக்களை வெளியிடுதல். இவை இரண்டையும் தடுத்தாலே நரம்பு சிலந்தி புழு பரவ முடியாது. அதற்கு என்ன செய்ய வேண்டும்? குடிக்கும் நீரில் நரம்பு சிலந்தியின் லார்வா செல்லுவதை தடுக்க ஆழ் துளை கிணறுகளை அமைத்து கைபம்புகளை அமைத்தல் தான். அதன்பின் தண்ணீரை காய்ச்சி குடித்தல்.
இந்த பிரச்சினை தமிழ் நாட்டில் பெரும்பாலும் தஞ்சை கும்பகோணம் பகுதிகளில் இருந்துள்ளது. குளம் அதிகமாக இருந்த இடங்கள் அவை.
நாடு முழுவதும் சுகாதாரத்திற்கான சிந்தனை மாற்றத்தை அளித்த நிகழ்வு "நரம்பு சிலந்தி ஒழிப்பு திட்டம்" தான். இதற்கான முக்கிய விஷயமாக கருதுவது நமது அரசு ஆரம்ப சுகாதார அமைப்பின் கட்டுமானம். அதனால் தான் நான்கு வருடத்தில் அதனை முடிக்க முடிந்துள்ளது.
இந்த நோய் புத்தகத்தில் கூறப்பட்ட ஒன்று, அது தவிர நீரினால் பரவும் காலரா, டயறியா போன்றவை எல்லாம் இன்று இல்லை. இன்று கொரோனாவுக்கு போராடும் நிலையில் அதற்கான கட்டமைப்பு எப்படி உள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்
நான் அங்கு படித்துக் கொண்டு இருந்த போதுதான் , பள்ளியை ஒட்டி அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் ஒன்றை ஆரம்பித்தார்கள். புதிதாய் ஒரு கட்டிடம் இன்றும் அன்று காலை திறப்பு விழாவில் போது இட்ட கேசரி, தக்காளி சோறும் தயிர் வெங்காயமும் நினைவில் உள்ளது. அப்பொழுதெல்லாம் காலை நடக்கும் புதுமனை புகுவிழாக்களில் இந்த மெனுதான். சற்று வசதி உள்ளவர்கள் மெதுவடையும் போடுவார்கள்.
ஆரம்ப காலத்தில் இவை வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வந்து கொண்டுள்ளது. சில பல சமூகப் பிரச்சினைகளும் இந்த மருத்துவமனையில் தங்கி வேலை பார்க்கத்தவர்களிடம் நடந்தும் உள்ளது அதெல்லாம் வேறு விசயம். இந்த ஆரம்ப துணை சுகாதார நிலையம் கிட்டத்தட்ட 5000 மக்களுக்கானதாக இருந்துள்ளது. இவை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களுடன் இணைக்கப்பட்டு இருக்கும். இவர்களின் முக்கிய வேலை வருமுன் காப்போம் என்பது. அதாவது இவர்களின் பணி அரசின் சுகாதார திட்டங்களை கடைக்கோடி கிராமம் வரை சேர்ப்பது . குடும்ப நலம், தடுப்பூசி, தொழுநோய் தடுப்பு, பள்ளி சிறுவர்களின் நலம் , தொற்று பரவாமல் தடுப்பது என்கிறார் இந்த அமைப்பில் தனது பணியை ஆரம்பித்து அதில் ஓய்வு பெற்ற என் பக்கத்துக்கு ஊர் மாமா. அவரிடம் பேசியபோது இந்த சுகாதார அமைப்பை உருவாக்க அவர்களின் போராட்டங்களை கூறினார்
இவர்கள் டீம் தான் பள்ளிக்கு அம்மை தடுப்பூசி போட வருவார்கள். இவர்களின் ஜீப் வந்ததும், 'அய்யயோ இன்னிக்கு ஊசி போட்டு் விடுவார்களோ' என பயந்ததும் உண்டு. ஒரு வழியாக அழுது புரண்டு போட்டுக்கொண்டால் ஊசி போட்ட இடம் வீங்கிக் கொள்ளும், அன்று வெந்நீர் ஒத்தடம் கொடுப்பார்கள்.
வந்ததும் காப்போம் என்பது அரசு மருத்துவமனையின் கடமை. ஆரம்ப துணை சுகாதார நிலையித்தின் வேலை வருமுன் காப்பது. அப்பொழுதெல்லாம களத்தில் அதிகமாக வேலை செய்தார்களாம். இப்பொழுது வேலை செய்ததை எழுதி வைப்பதில் உள்ளதாக கூறினார்.
அந்த ஆரம்ப துணை சுகாதார நிலையங்கள் 85களில் கட்ட ஊரில் பேச்சுவார்த்தை நடத்தி, இடம் வாங்கி கட்டி உள்ளார்கள். இந்த அமைப்பு வியப்பில் ஆழ்த்திக்கொண்டு உள்ளது. குடிநீர் சுகாதாரத்தில் எங்கிருந்து எங்கு வந்துள்ளோம் என்பதுவும் சாதனை தான்.
No comments:
Post a Comment