Sunday, April 25, 2021

ஈரோடும் தேர்தலும் - 2017 to 2021

2017 ல்  "ஈரோடு வாசல்" வாட்ஸ் அப் குழுவில், "ஈரோடு மாவட்டம்" பற்றிய கட்டுரையில் எழுதியவை முதல் இடம்  பெற்றது. இன்று 2021ல் எப்படி உள்ளது? 


கல்யாணங்களில் ஆடம்பரங்களை கொரானா மட்டுமே தற்போது தற்காலிகமாக  நிறுத்திவைத்து உள்ளது.  கொரானா மட்டுப்பட்டிருந்த கடந்த மூன்று, நான்கு மாதங்களாக, அந்த ஆடம்பரமும் கொஞ்சமேனும் வெளிப்பட்டுத்தான் இருந்தது.  அதே போல எளிமையை உணர்ந்தவர்கள், மிகவும் சிக்கனமாகவும், சிறப்பாகவும் நடத்தி முடித்து விட்டார்கள்.   நேரில் சென்றே பத்திரிகை வைத்து அழைக்க வேண்டும் என்று இருந்ததையும், கல்யாணத்திற்கு செல்லவில்லை என்றால் கோபித்துக்கொள்வார்கள் என்பதையும் கொரோன காலம் உடைத்துள்ளது.   சில நாட்கள் தங்கி சிறப்பிக்கும் நெருங்கிய வட்டத்தின் கூட்டமும் குறைந்துள்ளது.  மாஸ்க்(போடவில்லை என்றாலும்),  சானிடைசரோடு இது இன்னும் சில காலம் தொடர வாய்ப்பு உள்ளது.


மருத்துவதுறை பற்றி இருந்த பார்வை, எனக்கு மாறியுள்ளது. இப்பொழுது சிசேரியன் டெலிவரி என்பது பெரிய விஷயமாக பேசுபொருள் ஆவது இல்லை. நார்மலா? சிசேரியனா? எனும் ஒற்றைக் கேள்வியில் மக்கள் கடந்து விடுகிறார்கள்.  அதற்கு உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்வியல் மாற்றங்கள்  போன்ற பலவகை காரணங்களை உணர்ந்து இருக்கலாம்.  தமிழ்நாட்டில் குழந்தைப் பிறப்பில், குறைந்துள்ள இறப்பு விகிதம் இதன் பயனை பறைசாற்றும். அதேபோல செயற்கைக் கருத்தரிப்பு பற்றிய பார்வையும் மாறியுள்ளது.  அறிவியல், குழந்தை இல்லாதவர்களுக்கு போலிச் சாமியார்களிடம் சென்று ஏமாறாமல் இருக்க ஒரு அற்புதமான மேஜிக்கை கண்டுபிடித்துள்ளது.  வாடகைத்தாய் வழி பிறக்கும் குழந்தைகள் என  உலகம் அறிவியல்  பாதையில் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு நகர்ந்து கொண்டுதான் உள்ளது.  அதனைப்  பற்றி தனியாகவே எழுதலாம்.    


அதேபோல தெருவுக்கு தெரு மெடிக்கல்ஸ் இருப்பது, மருந்து, மாத்திரைகள் சட்டென சராசரி மக்களுக்கும் கிடைக்க இது உதவுகிறது.  நமது மக்களின் சராசரி ஆயுளை நீட்டித்துக் கொண்டு தான் உள்ளது. குறிப்பாக இந்த கொரோனா காலகட்டத்தில் அரசு மருத்துவமனைகள் பற்றிய தவறான புரிதல் மக்களிடம் மாறியுள்ளது.  தடுப்பூசிகளும் அதிவிரைவாகக் கண்டுபிடிக்கப்பட்டு மக்களை இறப்பிலிருந்தும், கொரானாவின் வீரியத்திலிருந்தும்  தடுத்துக்  கொண்டுள்ளது.  தடுப்பூசி என்பது வியாபார நோக்கம் அல்ல என என் பார்வை மாறியுள்ளது.   


பேஸ்ட் இல்லாமல், இந்த மக்கள்தொகைக்கு வேப்பங்குச்சி மட்டுமே ஈடு கொடுக்க முடியுமா என்பதும் சந்தேகமே.  அது போலத்தான்  சோப்பு, சாம்பு பற்றி பேசுவதும்.   தோல் மற்றும் சாயக்கழிவுகள் நிலை பெரிதாக மாறியுள்ளதாக தெரியவில்லை.  இந்த கழிவுகளை எல்லாம்  ஆறுகளில் கலக்க விடாமல், சுத்திகரிப்பு நிலையத்தை வைப்பதும், முறையாக மறுசுழற்சி செய்வதுமே தீர்வாகும்.  அதனை நோக்கித்தான் இருக்க வேண்டுமே தவிர பழங்காலத்திற்கு செல்வதாக இருக்க முடியாது. 


கொரோனா காரணமாக 8 மணிக்கு அடித்துப்பிடித்து குழந்தைகளை பேருந்தில் பள்ளிக்கு ஏற்றிவிடும் வேலை இப்பொழுது இல்லை.  ஆனால் குழந்தைகள் வீட்டிலேயே இருப்பதால், வேறு விதமான பிரச்சனைகளை கையாண்டு வருகிறோம்.  குறிப்பாக ஆன்லைன் க்ளாஸ் அழுத்தங்கள் பெற்றோருக்கு எனில், யாரையும் பார்க்காமல், விளையாடாமல் ஆன்லைனில் இருக்கும் குழந்தைக்கு வேறு மாதிரியான மன அழுத்தம். குழந்தைகளை எவ்வாறு முழுநேரமும் பிஸியா வைத்துக்கொள்வது என்பது ஒரு சவாலான விஷயமும்.  கொரோனாவிற்குப் பின் கல்வி முறை மாறுமா? ஓரிடத்தில் அமர்ந்து ஆசிரியர்கள் கூறுவதை கேட்பார்களா? என்பதெல்லாம் காலம் தான் பதில் கூறும்.   

   

புரோட்டா சாப்பிடும் பழக்கம் குறைந்தது போல தெரியவில்லை.  இன்றும் நெகிழிகளில் குழம்பு ஊற்றி எடுத்துச் செல்கிறார்கள்.  டீக்கடைகளில் டீ நெகிழியில் கட்டித் தருவது ட்ரெண்ட்ட்டாகவே மாறியுள்ளது. 

ஆனாலும் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல உணவுப் பழக்க வழக்கங்களுக்கு மாறிக்கொண்டிருக்கிறோம்.   அங்கங்கு நாம் பார்க்கும் செக்கு எண்ணெய்,  திணை, ஆர்கானிக் கடைகள் இதனை மெய்ப்பிக்கும்.  ஆனாலும் இதில் இன்னும் வெகு தொலைவு செல்ல வேண்டி உள்ளது.  


மாறாக நீர்நிலைகள் பற்றி கொஞ்சமேனும் மக்களுக்கு விழிப்புணர்வு வந்துள்ளது. இந்த சில வருடங்களில் நீர்நிலைகள் சீரமைப்பு, மரம் நடுதல் போன்றவை அதிகமாகவே நடைபெற்றது. அரசாங்கமே பல நீர் நிலைகளை சீரமைத்தும் உள்ளது.  சில இடங்களில் 100 நாள் திட்டத்தினை இந்த பக்கமும் மடைமாற்றி உள்ளது ஆரோக்கியமான விஷயம். 


ஆனால் கீழ்பவானி, காலிங்கராயன் கரையில்  அல்லது ஏதேனும் நீர்நிலைகளை ஒட்டி, சென்ற இடங்களில், என்னை வருத்தப்பட வைத்த விஷயம் ஒன்று உண்டு. அது அங்கங்கு கிடந்த பாட்டில்கள்,  கூடவே இரண்டு மூன்று பிளாஸ்டிக் டம்ளர்கள் மற்றும் கோக் பாட்டில்கள் அல்லது வாட்டர் பாக்கெட்டுகள்.  வாய்க்காலின் கரையில் ஒரு கிலோமீட்டருக்கு சென்று வந்தால் தெரியும்.  பத்து இருபது அடிக்கு ஒரு குவியலாகவும் அல்லது எங்கெல்லாம் நிழல் இருக்கின்றதோ அங்கும், சமூகப் பொறுப்பு  துளியும் இல்லாத குடிமகன்களின்  இந்த தடயங்களை காண முடிந்தது.  'ஐயா, நீங்கள் குடியுங்கள் ஆனால் இந்த பாட்டிலை எங்காவது ஒரு இடத்தில் போட்டுச் செல்லலாமே'.   அரசேகூட அந்த பாட்டில்களை போடுவதற்கு தனியாக  குப்பைத் தொட்டியை அங்கங்கு வைக்கலாம் அல்லது பாட்டிலைத்  திருப்பிக் கொடுத்தால் டாஸ்மாக்கில் தள்ளுபடி அளிக்கலாம்.   பாட்டில்கள் மறுசுழற்சிக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும்.  கீழ்பவானி, காலிங்கராயன் வாய்க்காலின் இந்த பிரச்சினை தமிழ் நாட்டுப் பானையின் ஒரு சோறு தான். கடந்த அரசு படிப்படியாக டாஸ்மாக்கை குறைக்கவில்லை.  வரும் அரசும்  இதில் கைவைக்காது, ஆனால் இந்த பாட்டில் கழிவுகளை ஒழுங்குமுறைப் படுத்துமா?  


80க்கும்  2010க்குமான பல ஒப்பீடுகள் நகரம் Vs கிராமம் போலவே இருக்கும். 90க்கு பிறகான நகரமயமாக்கல் இவற்றிற்கு முக்கிய காரணம்.  ஆனால் இன்று  நகரத்தின் ருசியை அறிந்தர்வர்கள், நகரங்களை விட்டு வர முடியுமா என்பது கேள்விக்குறி.  அதற்கு மருத்துவ காரணங்கள் தவிர, ஊர்ப்பக்கம் இன்றும் நிலவும் ஏற்ற தாழ்வும், பெண்களுக்கு நகரத்தில் கிடைக்கும் ஒருவித ∴பிரீனஸ்,  இன்னும் வேறு பல காரணங்களும் அடக்கம்.  ஆனால் கிராமங்கள் இப்பொழுதும் இயற்கை, உறவு, நட்பு என வேறு மாதிரி அழகாக உள்ளது. 


ஈரோடு மாவட்டம் பற்றிய கருத்து இப்படி மாறி இருக்க 2019ல் எழுதிய தேர்தல் பற்றிய கட்டுரை, மற்றொரு விதமாக மாறி உள்ளது.  பாராளுமன்றத் தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் இடைப்பட்ட காலம் வாக்காளர்களும் ஏற்றமே.  சென்ற தேர்தலில் அந்தக் கட்சியின் வாக்கு வங்கிகளுக்கு மட்டுமே பணம் கொடுத்தார்கள்.   ஆனால் இந்த முறை இரண்டு கட்சிகளுமே வாக்கு வங்கி தவிர, அனைவருக்கும் பணம் கொடுத்துள்ளார்கள்.  மக்களும்  இரண்டு பக்கமும் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு எது பிடிக்கிறதோ அதற்கு குத்துவதற்கு தயாராக இருந்தார்கள்.  குத்தினார்கள்.  ஒரு சிலர் பணம் வாங்க மறுத்த சம்பவங்களும் நடந்தது.   


சில தொகுதிகள் எல்லாம் ஒரு மாத காலமாக பரிசுமழை பொழிந்துகொண்டே இருந்தது. புடவை, வேட்டி அவர்கள் குடும்பத்திற்கு தேவையானதை செய்து கொடுத்து உள்ளார்கள்.  'யார்க்கு ஓட்டு போட போறீங்க'  என்ற இருந்த  பேச்சு 'உங்களுக்கு ரெண்டு பக்கம் இருந்தும் வந்துடுச்சா' என்று மக்கள் மட்டத்தில் மாறி விட்டது.   


 90களில் கட்சியினர் கள்ள ஓட்டு போடுவது மட்டுமே இருந்தது.  இன்று அரசு மற்றும்  அரசியல்வாதிகள்,  அவர்களின் குற்றத்தை சரிசமமாக மக்களுக்கும் பங்கிட்டுக் கொடுக்கின்றார்கள்.  மக்களும் குற்ற உணர்வு இல்லாமல் அதனை வாங்கிக் கொள்கின்றார்கள்.  ஒரு வகையில் இதனைப் பார்க்கும் பொழுது, ஒரு சாமானியன் அரசியல்வாதிகளிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்க முடியுமா?  அவர்கள் செய்த எதிர்மறைச் செயலுக்குத் தானே கொடுக்கின்றார்கள்? தேர்தல் கமிஷனே இதனை கண்டு கொள்ளாமல்  யார்மீதும் வழக்கு பதிவு செய்யாத நிலையில் நம்  மக்கள் செய்வது சரிதானோ? 


மாற்றம்  ஒன்றே மாறாதது. காலத்தின் பாதையில் கவனித்து பயணிப்போம்.


பி.கு : 

2017 -ல்  "ஈரோடு வாசல்" வாட்ஸ் அப் குழுவில், "ஈரோடு மாவட்டம்" பற்றி எழுதி முதல் இடம் பிடித்த கட்டுரை.


https://tinyurl.com/yxju8tk5



2019-ல் பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் எழுதியது.  

https://tinyurl.com/n6kwcjma








Monday, March 08, 2021

பவானி செல்லாண்டி அம்மன் மாசி திருவிழா

 பவானி, செல்லாண்டி அம்மன் மாசி திருவிழா என்பது அந்த கோயிலின் திருவிழா மட்டும் அல்ல.  அதனை சுற்றி இருக்கும் சின்னச் சின்ன தெருக்களில் உள்ள அம்மன்களுக்கும் சேர்ந்ததே.   பலமுறை கலந்து கொண்டு இருந்தாலும், சேத்து வேசம் போடும் நிகழ்வைப்  பார்த்தது இல்லை. அதற்கான நேரமும் வாய்க்கவில்லை என்று தான் கூறவேண்டும்.  புதன்கிழமையில் பண்டிகை வருவதாலோ என்னவோ, தொடர்ந்து  மூன்று நாள் விடுமுறை கிடைக்காது என்பதால்,  புதன் மதியம் நடைபெறும் இந்த நிகழ்வை மட்டும் தவற விட்டுக்கொண்டு இருந்தேன். இம்முறை வீட்டில் இருந்து வேலை செய்ய வைத்த கொரோனாவிற்கு நன்றி.  

மற்ற ஊர்களின் அம்மன் திருவிழாவில் இருந்து, இந்த சேத்து வேசம் நிகழ்வு முற்றிலும் வித்தியாசமாக இருக்கின்றது.  இதுவரை நான் பார்த்த மாரியம்மன் திருவிழாக்களில் இந்த மாதிரியான நடைமுறை இருந்ததில்லை. தேர் வடம் பிடித்து இழுப்பார்கள், அக்கினிச்சட்டி எடுப்பார்கள், அழகு குத்திக்கொள்வார்கள், குண்டம் இறங்குவார்கள்,  கம்பம் ஆடுவார்கள்,  தெப்பத்தேர், மகந்தேர், மிரமனை வருதல் என்பகை தான்,  அனைத்து பக்கமும் நடைபெறும்.  ஒரு சில  நிகழ்வு மாறுபடும் அல்லது இருக்காது.   இங்கு மட்டும்தான் இவற்றோடு சேர்த்து,  இந்த சேற்று வேடமிடும் நிகழ்ச்சி உள்ளது. அது மட்டுமில்லாமல் சனி இரவு வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கும் லைட்டிங்கும் வேறு எங்கும் இல்லாத நிகழ்வு.  

இந்த சேற்று வேடமிடும் நிகழ்ச்சி வழி வழியாக நடந்து கொண்டு உள்ளதாக கூறுகிறார்கள்.  இப்பொழுது இதனை  சேற்ற்றில்  மட்டும் இடும் வேசம் என்று முற்றிலும்கூற முடியாது.   பல வகையான வண்ண வண்ண கலவைகளைத்தான்  உடல், முகம் என பூசி இருந்தார்கள்.  கிரிக்கெட் ஸ்டேடியத்தில் காணப்படுபவர்கள் போலவும்,  மாறுவேட போட்டிக்கு போவதுபோலவும், வேசமிட்டு அலப்பறை விட்டுக் கொண்டிருந்தார்கள்.  சுற்றுலா தளத்தில் சில்வர் பூசப்பட்டு தடி ஊன்றி நிற்கும் காந்தி தாத்தா போல நிறைய சில்வர் மனிதர்களையும் காண முடிந்தது.  ஜோக்கர் திரைப்படத்தில் வருவது போல டெரர்ராக முகத்தினை மாற்றியிருந்தார்கள்.  ஜோக்கர் வேடம் தான் அளவுக்கு அதிகமாக இருந்தது.  புலி, பெண், அம்மன் வேடமும் கூடவே.  இவை எல்லாவற்றையும் விட என்னை சட்டெனெ கவர்ந்தது தல ரசிகரின் முதுகில் எழுதப்பட்டு இருந்த வலிமை அப்டேட்.  ட்ரெண்டில் உள்ளார்கள். 





 


 


இந்த  ஊர்வலத்தில் ட்ரம்ஸ் அல்லது தப்பாட்ட அடியை கேட்க முடியவில்லை.  அது இல்லாமலே கோலாகலாமாக இருந்தது.  நிகழ்வு முக்கிய சாலையில் கிட்டத்தட்ட ஒன்றரை கிமீ தூரம், 3-4 மணி நேரம் நடைபெறுகிறது.  பவானியின் அந்த முக்கிய சாலை அன்று முடக்கப்பட்டு போக்குவரத்து வேறு பக்கம் திருப்பப்படுகிறது. நான்கு சாலைகள் சந்திக்கும் முக்கிய சந்திப்புகளில் நீண்ட நேரம் விளையாடுகிறார்கள்   வேடமிட்டர்வர்கள் முன்னால் நகர்ந்து நகர்ந்து செல்ல சாலையின் இருபுறமும் கூடியிருக்கும் மக்கள் உப்பு மற்றும் மிளகுடன்  சாக்லெட் அல்லது சில்லரையும் கூடவே சேர்த்து அவர்களின் மீது வீசுகின்றார்கள்.   சாக்லேட்டும் , சில்லரையும் எப்பொழுது சேர்ந்திருக்கும் என தெரியவில்லை.  



"அக்கா இந்த பக்கம் போடுங்க " 

"அக்கா வெறும் உப்பு மட்டும் போடாதீங்க சாக்லேட்டோட போடுங்க"...

 "காசு போட்டு போடுங்க"... 

"ஒருபக்கமாக போடாதீங்க"  என்று பலவிதமாக குரல்களில், விசிறும் பெண்களிடம் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். இந்த வேடம் இட்டவர்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இருந்தார்கள். வர்க்க வேறுபாடு, சாதி வேறுபாடு இல்லாமல் நடைபெறுகிறது.  ஆண்கள்தான் இந்த சேத்து வேசத்தை  ஏற்று இருந்தார்கள். கூடவே சிறுமிகள் சிலரும். வேடிக்கை பார்ப்பவர்களும் இந்த கலவையை வீசுபவர்களும்  பெரும்பாலும் பெண்களாக இருந்தார்கள்.  


அந்த காசையும், சாக்லேட்டையும் குதித்து 'கேட்ச்' பிடிப்பதில் தான் இதில் இருக்கும் த்ரில்.  போட்டி, விளையாட்டு, கொண்டாட்டம் என எப்படி வேண்டுமானாலும் கூறலாம்.  அந்த காசை இருவரும் பிடித்து விட்டால் அது எனக்கு, உனக்கு என்று அடிதடி. பலரும் அந்த நாணயத்தைக்  கைப்பற்ற மொட்டை வெயிலில், தார் ரோட்டில் அப்படியே  உட்கார்ந்து கொள்கின்றார்கள்.  நாணயத்தை அழுத்தி, நெட்டித் தள்ளி உரிமை கொண்டாடுகிறார்கள்.  இந்த பஞ்சாயத்து சில நிமிடங்கள் நடந்து ஒருவர் விட்டுக்கொடுக்கிறார் அல்லது வெற்றி பெறுகிறார்.  இவையாவும் அங்கங்கு, அக்கூட்டத்தின் ஊடே பலவாறாக நடந்து கொண்டு இருக்கிரது.  அதுதான் நிகழ்வின் எழுதப்படாத விதி.  


முன்பு குழந்தை இல்லாத பலரும் இந்த சேத்து வேச நிகழ்வில் சூறை விடுவதாக வேண்டிக்கொள்வார்களாம்.  வேண்டுதல் நிறைவேறினால் அவர்கள் சொந்தம் சூழ அந்தக் குழந்தையையும் சூறை விடுவார்களாம். குழந்தை அவர்கள் தெரிந்தவர்கள் கையில் கிடைக்காமல் வேறு ஒருவரின் கையில் கிடைத்து விட்டால் அவர்கள் கேட்கும் காசு பணத்தை இவர்கள் கொடுக்க வேண்டுமாம்.   இப்பொழுது அது தடை செய்யப்பட்டு உள்ளது.   சூறை விடுவது என்பது கூட்டத்தில் உப்பு மிளகை வீசுவது போல தூக்கி வீசுவது தான். 


என்னைப்போல வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த ஒரு அண்ணன், பக்கத்தில் இருந்த பெட்டிக்  கடையில் லிட்டில் ஹார்ட்ஸ் பிஸ்கட் ஒரு சரம்  வாங்கினார்.  அதனை ஒவ்வொன்றாக கிழித்து  அவர்களின் மீது சரசரவென ரம்மி விளையாடுகையில் சீட்டுக்கட்டிலிருந்து சீட்டு போடுவதுபோல விசிறினார்.  கூட்டத்தில் ஒரே ஆரவாரம்.  கூடவே மற்றொருவர் வேறு பிஸ்கட் பாக்கெட்களை  வாங்கி வீசினார்.  அடுத்ததாக  லேஸ் சிப்ஸ்.  சிலர் 'அண்ணா அண்ணா இங்கயே கொடுங்க' என அருகே வந்து அவரிடம் பிடுங்காத குறை.   ஒருவர் முழு லெஸ் சாரத்தையும் வாங்கிக் கொண்டு ஓட, அவரின் சக போட்டியாளர் அவரைத் துரத்தி அவரிடம் இருந்து பாதியை பங்கிட்டுக் கொண்டார். 


ஒரு பக்கம் தண்ணீர் பாட்டிலையும் வாங்கி விசிறி அடித்தார்கள்.  திடீரென ஒரு கடையில் இருந்து  துணிகளைத் தூக்கி போட்டார்கள்.  இன்னொரு பக்கம் இருந்து வாழைப்பழங்கள்.  என்ன ஒரு ஆனந்தம் அதனை குதித்துப் பிடிப்பவர்களுக்கு.  கலந்துகொண்டு இருந்த சிறுவனின் கையில் மஞ்சள் பை இருந்தது.  அதில் கிட்டத்தட்ட முக்கால்வாசி நாணயங்கள், சாக்லெட்டுகள் என நிரம்பி இருந்தது.  அவனும் கிடைத்தவற்றை பிடித்து மீண்டும் அந்தப் பையில் திணித்துக்கொண்டு இருந்தான்.  கிட்டத்தட்ட ஆரம்பித்த இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் வந்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.  இன்னும் சற்று தொலைவில் முடிந்துவிடும்.   


தார்ரோடு மதியம் ஒரு மணி வெயில் எதையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை.  வழிநெடுக இதுதான் அவர்களுக்கு விளையாட்டு. அவர்களுக்கு இது கொண்டாட்டமாகத் தான் இருந்தது.  இரு தண்ணிர் வண்டிகள்  பின்னால் வந்து கொண்டிருந்தது.  தண்ணீர் திறந்துவிட்டு சாலைக்கு அடித்துக் கொண்டு வந்தார்கள்.  அந்த வண்டியில்  வேசம் போட்டவர்களும் அவர்களின் வேசம் கலைந்து விடும் என குளித்துக் கொள்ளவில்லை. மற்றவர்கள் அந்த வண்டியின் அடியில் ஷவரில் குளிப்பது போல ஏகாந்தமாக குளித்துக் கொண்டிருந்தார்கள். முடித்துவிட்டு மீண்டும் கேட்ச் பிடிக்கும் ஆட்டத்திற்கு வந்தார்கள்.



இந்த ஊர்வலத்தின் எஞ்சின் போல ஒரு குழு.   அந்த  குழுவின் புகைப்படங்களைத்தான் முன்பு பதிவிட்டு இருந்தேன்.  அதில் ஒருவர் கிரிக்கெட் வர்ணனையாளர் போல ஒரு கையில் மைக் வைத்துக்கொண்டு சாலை ஓரத்தில் இருந்தவர்களிடம் வம்பு வளர்த்துக் கொண்டு இருந்தார்.  அந்த ஊர்வலத்தின் இறுதியில் குதிரை அதன் பின்னே பூக்களால் சோடிக்கப்பட்ட கரகமும், சாமியும் மெதுவாக வந்து கொண்டிருந்தது.  அதற்கு மட்டும் கயிற்றில் பாதுகாப்பு வளையம் வைத்து நகர்ந்துகொண்டு இருந்தார்கள்.  ஆனால் கூட்டம் என்னவோ இந்த வேஷம் போட்டு வந்தவர்களையும், சூறை பிடிக்க வருபவர்களிடமும்  தான் தேங்கியிருந்தது.   அவர்கள்தான் கொண்டாட்டத்தை உச்சகட்டமாக மக்களுக்கு அளித்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.   


வண்டி வெயிலில் நின்று இருந்ததால் கொதித்தது.  இந்த வெய்யிலிலும் மக்கள் உற்சாகமா இருந்தார்கள் .  .  இந்த ஊர்வலம் நடந்த பாதையின் பின்னே ஏதோ ஒரு கலவரம் நடந்து முடிந்தது போன்ற தோற்றம். கொரோனா ஆரம்பிக்கும் முன் சென்ற வருட நோம்பி  நடந்து முடிந்திருந்தது.  எனக்கு என்னவோ இந்த வருடம் கொரோனாவை சூரசம்ஹாரம் செய்துவிட்டு, இந்த பண்டிகை கொண்டாட்டித் தீர்த்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது    



செல்லாண்டி அம்மன் சேத்து வேசம் பார்த்துவிட்டு வீடு அருகே வந்தேன். 

"நோம்பிக்கு எப்ப வந்தீங்க" என்றார் பக்கத்து வீட்டு பாட்டி.  

"நேத்து நைட்டு வந்தேங்க" என்று தொடர்ந்தேன்  "எங்க யாரையும் காணோம்.  உங்க வீட்ல யாரும் வர்லீங்களா?. நோம்பிக்கு என்ன பண்ணிங்க?" என தொடர் கேள்வியை எழுப்பினேன்.  

 "யாரும் வரலைன்னு சொல்லிட்டாங்க.. வந்தாங்கன்னா எதையாவது சமைக்கலாம்.. எதோ என்னால முடிஞ்சத போடுவேன்..ஒருவேளையாவது வந்துட்டு போனாங்கன்னா நமக்கு நல்லா இருக்கும்" என்றார் வெளியில் சிரித்தபடி.  அவர்கள் மகன்/மகள் வீடு அரை மணிதூரத்தில் தான் இருந்தது.  


கயிற்றுக் கட்டிலை மல்லாக்க போட்டு கட்டிலின் இரண்டு கால்களுக்கும் சேர்த்து புதிய ஜமுக்காளத்தைக் கட்டி இருந்தார்.   கையில் ஊசி வைத்து கோர்த்துக் கொண்டு இருந்தார்.  சட்டென மடைமாற்ற  "என்ன பண்ணிட்டு இருக்கீங்க?" என்று கேட்டேன்.  

"தெரிஞ்சவங்க ஜமுக்காளத்துல பேர் எழுதி தர சொன்னாங்க.. இப்பெல்லாம் பண்ணறது இல்லை... சரி தெரிஞ்சவங்கன்னு தான்" என்றார்.   பவானியில் இது  ஒரு முக்கியமான தொழில்.  

 "இதுல ஒரு எழுத்துக்கு ரெண்டு அம்பது  குடுப்பாங்க. தமிழ், இங்லீஸ், இந்தி எதுவா இருந்தாலும் பேப்பர்ல போட்டு கொடுத்தா, நான் ஜமுக்காளத்துல எழுதிருவேன்" என்றார். ஒருவேளை 250ஐ ரெண்டு அம்பது என்று கூறுகிறாரே என நினைத்து "எவ்வளவுங்க?" என மீண்டும் கேட்டேன்   "ரெண்டு ரூவா அம்பது காசுங்க.  நான் ஆரம்பிச்சப்ப அப்பல்லாம் 40 பைசா இருந்தது.  படிப்படியா இப்ப ரெண்டு அம்பது ஆகிடுச்சு" என்றார்.  அதில் ஒரு 20 எழுத்து இருந்திருக்கும்.  50 ரூபாய் கிடைக்கும் 


வெளியே ஊரே கொண்டாட்டமாக இருந்த அந்த நேரத்தில், இது போல தனித்து இருப்பவர்கள் அன்றும் தனித்து தானே இருக்கின்றார்கள். 



Friday, February 26, 2021

ரகிட ரகிட ரகிட

"மரணமாஸ" விட நமக்கு #ULLAALLAA தான்...

in repeat mode..

இரு வருடத்துக்கு முந்தைய #OTD

அந்த  பாட்டு போலவே கடந்த சில நாட்களாக  "ரகிட ரகிட ரகிட ஊ" ரிப்பீட் மோடில்.  ஆனால 'ஊல்லல்லா' பாட்டு,  வழக்கமான தலைவரின் அட்வைஸ் மழை பொழியும் தத்துவ பாடல்..  'ரகிட ரகிட ' அப்படி இல்லாமல் don't care ரக பாடல்.   அந்தப் பாடல் பற்றி அலசுவோம்.


அணிகளில் பிடித்த அணி சொற்பொருள் பின்வருநிலையணி.  எனக்கு சுலபமான அணியும்.  அதில் தான் மிகச் சுலபமான இந்தக் குறளை உதாரணமாக குறிப்பிடலாம். 


நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல். 


அதற்கடுத்து வஞ்ச புகழ்ச்சி அணி எனலாம்.    


அதற்கான எடுத்துக்காட்டு பெரும்பாலும்  அனைவரும் அறிந்த அதியமான்-தொண்டைமான்-ஒளவை விடு தூது தான்.   ஒரு சமயம் தொண்டைமான்,  அதியமான்மீது படை எடுத்து வரப்போவதாக கேள்விப்பட்ட ஒளவையார், தொண்டைமானை சந்திக்க செல்லுகின்றார்.  தொண்டைமான் படைக்கலங்கள் உடைய அறைக்கு கூட்டிச் சென்று காண்பிக்கிறார்.  அங்கு சென்ற ஒளவை அந்த ஆயுதங்களை பார்வை இடுகிறார். 

 அக்கலங்கள் எல்லாம் புத்தம் புதிதாக,  பளிச் என மின்னுகிறது.  


அதனைக் கண்ட ஒளவை,  அதியமானின் வீரத்தினை தொண்டைமானிடம் எடுத்துக் கூறுகின்றார். 

 எப்படி?  தொண்டைமானைப் புகழ்வது போல ஆரம்பத்தில் தெரியும். 


இவ்வே, பீலி அணிந்து மாலை சூட்டி,

கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து

கடியுடை வியல்நக ரவ்வே. (புறநானூனு,95)


'தம்பி.. நீ இங்க பளிச்சுன்னு தொடச்சு பூஜை போட்டு வெச்சிருக்கே.   அது நல்லது.  ஆனா இந்த அதியமானின்  படைக்கலங்கள் எப்படி இருக்குன்னு பார்த்துட்டு வந்தேன்'.  


பகைவர்க் குத்தி,கோடு,நுதி சிதைந்து

கொற்றுறைக் குற்றில மாதோ ! என்றும்

அண்ணல்எம் கோமான்,வைநுதி வேலே (புறநானூறு,95)


அதியமான் பயல் இந்தமாதிரி வெச்சுக்கல.. சுத்துப்பட்டிலயும் போர்க்கு போய் சண்டை அடிக்கடி போட்டு வரார்.  அதனால கொல்லனோட வேல் செய்யும் பட்டறையில் ரிப்பேருக்கு போயிருக்குப்பா'.  அதனால எப்படி வசதி என்று அதியமானை வஞ்ச புகழ்ச்சியாப் புகழ்கின்றார்.  போரை நிறுத்துகிறார்.  இப்படி தான் எதையாவது எழுதி மார்க் வாங்கிருப்போம்.     


இந்த வஞ்ச புகழ்ச்சி அணிக்கு ஆகச் சிறந்த சமீபத்திய உதாரணம் "ரகிட‌ ரகிட‌ ரகிட‌ " பாட்டில் வரும் முதல் சரணம் தான்.  


"நாலு பேரு மதிக்கும்படி

 நீயும் நானும் இருக்கணும்.." 

என ஆரம்பிக்கும்.  முதல் முறை கேட்கும் போது வழக்கமான அட்வைஸ் மழையா  இருக்கும் போல  என நினைத்து  சளிப்போடு தான் கேட்க ஆரம்பித்தேன்.  மீண்டும் மீண்டும் கேட்கும் பொழுதுதான் அந்த பாடலை வஞ்ச புகழ்ச்சி அமைப்பில் உருவாக்கி இருப்பது தெரிந்தது.  


பள்ளியில் கல்லூரியில் நண்பர்களிடம் விவாதிக்கும்பொழுது கூட,  இந்த மாதிரி ஏத்திவிட்டு, அவர்களை இறக்கும்பொழுது  'என்ன மச்சி வஞ்ச புகழ்ச்சியா' என்று தான் கூறுவோம்.  அப்படி பேமஸ் ஆனது இந்த அணி.  அதன் சென்னை ஸ்லாங் தான் "என்ன மாப்ள... லந்தா.." என்பது.   இந்த ஒரு வரி உரையாடலை சரணத்தின் இடையில் சொருகி இருப்பார்.  அந்த இடத்தில் பாடல் யூ-டர்ன் போட்டு வஞ்ச புகழ்ச்சியாக மாறி அடுத்த வரி ஆரம்பிக்கும்.  


"அந்த நாலு பேர 

இதுவரைக்கும் பார்த்ததில்ல  நானு..

எனக்கு தேவைப்பட்ட நேர(ம்)  

அந்த பரதேசியக் காணோஓஓஓம்...."


ஒட்டு மொத்தமாக இந்தச் சரணம்,  'Dont listen on others negative words'  என்று ஊர் உலகத்துக்காக பயப்படாம, உனக்கு என்ன பிடிக்குதோ/ தோணுதோ, அதைச் செய் என்பதைக் கூறும்.  




இரண்டாவது சரணம் மோட்டிவேஷனை அள்ளித் தெளிக்கிறது. அடுத்தநாளை எப்படி வரவேற்கிறார்கள் பாருங்க. 


"ஏதோ ஒன்னு கொடுக்கத் தானே

அடுத்த நாளும் வருது..

ஆஹா

நல்லத நான் எடுத்துகிட்டா

நல்லதத்தான் தருது"


"The Secret" எனும் புத்தகம் ஈர்ப்பு விசை பற்றி நுணுக்கமாக கூறி இருப்பார்கள்.  நாம் எந்த விஷயத்தை தீவிரமாக ஈர்க்கிறோமோ அது நம்மை அடைகிறது. ஒரு விஷயத்தை நீங்கள் யோசித்து யோசித்து,  அது உங்கள் கண் முன் காட்சியாக விரிந்துகொண்டே இருக்கும்.  அப்படி யோசித்து யோசித்து, காட்சிப் படுத்திய 

 ஒரு விஷயம்,  கண்டிப்பாக நடக்கும் என்கிறது.   கனவு காணுங்கள்,  என்று அப்துல் கலாம் கூறியதன் சாராம்சமும் இது தான்.  கனவு இலக்கை நோக்கி நம்மை இழுத்துச் செல்லும்.   தென்னை மரத்தில் பன்னாடை இருக்கும்.  அது வடிகட்டி மாதிரி, தேவை இல்லாத பூச்சி போன்றவற்றை மட்டும் வடிகட்டும். பல நேரங்களில் நாம கூட தேவை இல்லாத விஷயங்களை மட்டும், மனதில் போட்டு உளப்பிக்கொண்டே கிடப்போம். 


இதையே தான் வள்ளுவர் இப்படி கூறுகிறார் 

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து.



"எது என் தகுதி…..

யாரு வந்து சொல்லணும்

நெஜமா யார் நான்…….

என்கிட்டதான் கேக்கணும்"


வினாக்களை  யாரிடம் எழுப்பிகிறோம் என்பது தான் இங்கு கேள்வியே.  நமக்குள் மாற்றி மாற்றி கேள்வி எழுப்பாமல், நம்மைப் பற்றி, நம் இலக்கைப் பற்றி, அந்தப் பயணத்தில் எங்கு இருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள முடியாது. வேறு யாரும் நம்மைப் பற்றி முழுதாக கூற முடியாது. அதனை மனசாட்சிக்கும், நமக்குமான உரையாடல் போல அமைத்திருப்பார் சந்தோஷ் நாராயணன்.




இரண்டாவது சரணத்தில்  கடைசியாக வரும் வரிகள் தான் ஹைலைட். 

  

"என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும்

வருவானே……ஏ…..ஏ…..ஏ…..ஏஹே…..ஏஹே….

என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே

மன்னிக்கணும் மாம்சே….

அட.. அவனும் இங்க நான்தானே"


#beatyourself #beatyesterday எனும் மோட்டிவேசனல் டேக் லைன் தான் இந்த வரிகள்.   உள்ளத்தனைய உடலில்   ஓடும் பலரும் இந்த ஹேஸ்டேக் போடுவதைக் கண்டுள்ளேன்.  குறிப்பாக ஷான்.  அதே தூரத்தை, முந்தைய நாளைவிட குறைந்த நிமிடத்தில் முடித்துக்கொள்ள இது ஒரு self motivation. நமக்கான போட்டியாளர் வெறும் யாரும் இல்லை நாம் மட்டுமே. 


அடுத்ததாக இந்த பாட்டின் எனர்ஜியே, "ரகிட ரகிட ரகிட" முடித்தவுடன் வரும் 'ஊ' எனும் உற்சாக ஒலி தான்.  கூடவே இடையிடையே வரும் சின்னச் சின்னச் உற்சாக ஒலிகள் தான்.  


 

இப்போது ஆரம்ப வரிகளுக்கு வருவோம் 

"ஹே, என்ன வேணா நடக்கட்டும்..

நா சந்தோசமா இருப்பேன்..

உசிரு இருக்கு வேறன்ன வேணும்

உல்லாசமா இருப்பேன்".

அன்றைய

"ராமன் ஆண்டாலும்

ராவணன் ஆண்டாலும் 

எனக்கொரு கவலை இல்ல"பாட்டின்  சமீபத்திய வடிவம்.



முதல் இரு வரிகள் சுயநலம் பேசுவது போல தெரிந்தாலும், அடுத்த வரியையும் சேர்த்து கவனிக்கும்பொழுது தான் அதன் ஆழம் தெரியும்.   வாழ்தல் அறம்  எனும்   ஈரோடு கதிரின் அடிப்படை கோட்பாடு. "எவருக்குமே சாவதற்கான காரணங்களைவிட, வாழ்வதற்கான காரணங்கள் ஒன்றே ஒன்றாவது கூடுதலாக இல்லாமல் போகாது".   அந்த இரு வரிகளும் உணர்த்துவது அதுவே. 



#வஞ்சபுகழ்ச்சி  #sarcasm #Motivation

#ரகிட-ரகிட


Thursday, January 14, 2021

Covid (Be) +

2020 இப்படியாக முடியும் என்றோ,  2021 இப்படி ஆரம்பிக்கும் என்றோ எதிர்பார்க்கவில்லை.  கடைசியாக அது எங்களை நோக்கி வந்து விட்டது.  சென்ற திங்கள் மருத்துவமனையில் அப்பாவிற்கு கோவிட் நெகட்டிவ் என்று கூறி வீட்டுக்கு கூட்டிட்டு போலாம் என்றதும் தான் சற்றேனும் தெளிவடைந்தேன்.   11 நாட்கள் மருத்துவமனை வாசம்  அன்றுதான் முடிவுக்கு வந்தது.

வெள்ளிக்கிழமை , கிறிஸ்துமஸ் அன்று மதியத்திற்கு மேல் அப்பாவிற்கு காய்ச்சல்.   அதற்கு இரு நாட்களுக்கு முன் தான் ஊரில் இருந்த மருத்துவரிடம் காண்பித்து காய்ச்சலுக்கு மருந்து வாங்கி இருந்தேன்.  ஆன்டிபயாடிக் மருந்தினை அவர் கொடுக்கவில்லை.  இரண்டு நாட்கள் கழித்து  காய்ச்சல் நிற்கவில்லை என்றால் வர சொல்லி இருந்தார். ஒருநாள் நன்றாக இருந்தவர்,  கிறிஸ்துமஸ் மாலை, சற்று இருமலோடு இருந்தார். கூடவே காய்ச்சலும் அதிகமானது.   ஊரில் அதே மருத்துவர் வர மாலை 6.30/7.00 ஆகும்.  ஈரோடு கிளம்பினோம்.  ஒரு பக்கம், ஈரோடு மருத்துவமனைக்கு செல்ல கொரானா பயம்.  இருந்தாலும் வேறு வழி இல்லாததால் சென்றோம்.  

மருத்துவமனையில் முதலில் காய்ச்சலுக்கான ஊசி போட்டதும் காய்ச்சல் நின்றது.  "நல்லாயிடுச்சு, வீட்டுக்கு போலாமா?" என்றார் அப்பா.   இருமல் இருக்கவே  CT  ஸ்கேன் எடுக்க டாக்டர் கூறினார்.  தெரிந்த மருத்துவர் தான்.   ஓரிரு மணிநேரம் கழித்து CT  ஸ்கேன் முடிவில் கோவிட் பாசிட்டிவ் என்றதும் எனக்கு அதிர்ச்சி.  பனியில் நடைப்பயிற்சி சென்றதால் வந்த சாதாரண சளி காய்ச்சல் என்று  நினைத்துக் கொண்டிருந்தேன்.  நகரத்திலிருந்து விலகி ஒதுக்குப்புறமாக இருக்கும் எங்கள் ஊருக்கு கொரோனா வராது என்ற நினைப்பு பொய்யானது.   எப்படி வந்தது? எங்கிருந்து வந்திருக்கும்? ஒருவேளை காலையில் வாக்கிங் செல்லும்போது காற்றில் பறந்து வந்திருக்குமா?   நான்கு நாட்கள் கழித்து, சென்ற பெரிய காரியத்தில் தொற்றியிருக்குமா?  கடைகளுக்கு சென்ற போது வந்திருக்குமா?   அல்லது கோயிலில் பிரதோஷம் என்று போனார்களே, அங்கு  கூட்டம் என்று கூறினார்களே, அங்கிருந்து  வந்திருக்குமா? பாசிட்டிவ்  என கூறியவுடன், மனதில் தொடர்ந்து குழப்பம் நிறைந்த கேள்விகள், கவலைகள்.   

'சரி, வந்துவிட்டது.  அடுத்து குணமாக என்ன  செய்ய வேண்டுமோ அதை மட்டுமே இப்பொழுது பார்ப்போம்.'  கோவிட் என்று மெதுவாக கூறிய மருத்துவர்   "அட்மிசன் போட்டுடுங்க.  மைல்டா தான் இருக்கு.  ஆறு நாள் கழித்துதான் மறுபடியும் செக் பண்ண முடியும்.  ஸ்வாப் ரிசல்ட் காலைல வரும்" என்றார்.   அதுவரை சுற்றிலும் நின்று கொண்டிருந்த செவிலியர்கள்  தள்ளி நின்று கொள்கிறார்கள்.  அவரது படுக்கை  மறைக்கப்படுகிறது.  தனி அறைக்கு மாற்ற என்னிடம் கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.  கிட்டத்தட்ட மணி ஒன்பது.     
 மருத்துவமனையின் உள்ளே நுழைந்து ஊசி ஒன்றை போட்டதுமே, 'காய்ச்சல் போய்டுச்சு தெம்பாயிட்டேன், வீட்டுக்கு போலாமா' என்றவருக்கு என்ன கூறுவது.  ஒருவழியாக என்னை முதலில் திடப்படுத்திக்கொண்டு,  மனதளவில் அவரை தயார் செய்து தனி அறைக்கு அனுப்பினேன்.   "இன்னும் ரெண்டு மூணு நாள் தனியா இருக்கணும் போல இருக்கு.   இருமல் நிக்கணும்.   தைரியமாக இருங்க. சரியாயிடும்" என்று கூறி  ஒரு தனி அறைக்கு அவரை அனுப்பிவிட்டு,  இரவு உணவை வாங்கி கொடுத்து விட்டு அப்பாவிற்கு தேவையான உடமைகளை தம்பியை விட்டு எடுத்து வர சொல்லிவிட்டு கோவிட் வார்டின் முன்பாக காத்து  நின்றேன்.   

என்னைப்போலவே மற்றொருவர், கவலை படிந்த முகத்தோடு கோவிட் வார்டின் முன்பாக நின்றுகொண்டு இருந்தார்.   அவரிடம் விசாரித்தேன், அவரும் அவருடைய அப்பாவை அன்று மாலை அங்கு அட்மிட் செய்திருந்தார்.     அவரின் அப்பவிற்கு என்னென்ன அறிகுறிகள் வந்தன என்பதை உறுதிப்படுத்தி, அவரும் நானும் சமாதானம் ஆகிறோம்.   இவைதான் அவை:

தலை சுற்றல் ஒரு வார காலம்  (இது முக்கியமான ஒன்று)
லேசான சளி ஒரு வார காலம்
உடல் அசதி   ஒரு வார காலம். 
காய்ச்சல் இரு நாட்களுக்கு முன் 
இருமல் ஒரு நாளுக்கு முன். 

அவரது குடும்பத்தில் சிலருக்கும் பாசிட்டிவ் வந்ததாக கூறியவர், அவர்களை வீட்டிலேயே தனிமையில் வைத்து இருப்பதாக கூறினார்.  உடன் இருந்தவர்களையும் டெஸ்ட் எடுக்க கூறினார். 

உடமைகள் வர அதனைக்  கொடுத்துவிட்டு அடுத்தநாள் வருவதாக கூறி விடைபெற்று வீட்டிற்கு வந்தேன். அன்றிரவு எவ்வளவு புரண்டு படுத்தும்  தூக்கம் வர மறுத்தது.    அடுத்த நாளுக்கு எங்களுக்கும்  டெஸ்ட் எடுக்க வேண்டும் என்ற திட்டம் மட்டுமே இருந்தது.  அவருக்கு காய்ச்சல் இருந்த இரண்டு நாட்கள் நானும் அம்மாவும் கூடவே இருந்து இருக்கின்றோம்.   நல்லவேளையாக குழந்தைகள், மனைவி அவர்களின் ஊரில் இருந்தார்கள். 

அடுத்த நாள்  சனிக்கிழமை அவருக்குத் தேவையான துணிமணிகளை எடுத்துக்கொண்டு சென்றோம்.   
 மருத்துவர் ஸ்வாப் டெஸ்டிலும் பாசிட்டிவ் வந்துள்ளதாக தெரிவிக்கிறார்.  இரவு அப்பாவும் தூங்கவில்லை என்கிறார்.  இருமல் குறையவில்லை. 

எங்களுக்கான கோவிட் டெஸ்ட் அங்கு எடுப்போமா அல்லது பெருந்துறை மருத்துவ கல்லூரியில்  எடுப்போமா எனும் குழப்பம்.   நான் அரசு மருத்துவமனை என்பதில் தெளிவடைந்து இருந்தேன்.  ஆனால் அம்மா, கோவிட் டெஸ்ட் எடுக்க  மறுக்கிறார்கள், அதுவும் அரசு மருத்துவமனைக்கு வர பலத்த மறுப்பு.   ஒருவழியாக  நானும் அங்குதான் எடுக்கப்போகிறேன் என்று சமாதானப்படுத்தி பெருந்துறை செல்கிறோம்.  

 இங்கு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியை பாராட்டியே ஆகவேண்டும்.   ஊரின்  ஒதுக்குபுறமாக நல்ல திறந்தவெளி.  அனுசரணையான பேச்சுகள்.   30 நிமிடத்தில் சோதனையை எடுத்து அனுப்பி விடுகின்றார்கள்.  நாங்கள் சென்ற பொழுது ஐந்தாறு பேர் இருந்தார்கள்.  முடிவு  36 மணி நேரத்திற்குள் ஈரோடு கோவிட் வெப் சைட்டில் வரும் என்று கூறினார்கள்.  

வீட்டிற்கு சென்று வீடு முழுவதையும் கழுவி விட்டு, துணிமணிகளை அலசி பக்கத்தில் இருந்தவர்களுக்கும் கூறி பாதுகாப்பாக இருக்க சொல்லிவிட்டோம்.  சனிக்கிழமை இரவும் தூக்கம் இல்லாமல் கழிந்தது.  நமக்குள்ளும்  வைரஸ்  இருப்பது போலவே ஒரு குறுகுறு உணர்ச்சி.  உடல் அசதி.  தொண்டை கரகரப்பு.   ஒருவேளை ரெண்டு பேருக்கும் பாசிட்டிவ் வந்தால், பெருந்துறை போலாமா? அல்லது அப்பா இருக்கிற மருத்துவமனையிலேயே அட்மிட் ஆகிக்கொள்ளலாமா?   பல கலவையான கவலைகள், யோசனைகள், வருத்தங்ககள்.  அதையும் விட அப்பாவின் இருமல், கூடுதலாக கவலை அளித்துக்கொண்டு கொண்டிருந்தது. 

அப்பாவிற்கு பாசிட்டிவ் ஆன அடுத்தநாள், சனிக்கிழமை ,  ஈரோடு சுகாதாரத்துறையில் இருந்து தொலைபேசியில் அழைத்து அப்பாவின் உடன் இருந்த எங்களையும் மருத்துவ பரிசோதனை எடுக்க சொல்லியிருந்தார்கள்.   ஞாயிறு, மொடக்குறிச்சி சுகாதாரத்துறையில்  இருந்து, எங்களுக்கும் மருத்துவ பரிசோதனை எடுத்துவிட்டதா என்பதை உறுதி செய்து கொண்டார்கள்.  ஞாயிறு  மாலையே ரிசல்ட் வந்து இருக்கும்.   ஆனால் அன்று இரவு நான் பார்க்கவில்லை.  எதுவாக இருந்தாலும் காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று திங்கள் காலையில் தான் ரிசல்ட் பார்க்கின்றேன். 

இருந்தாலும் வெள்ளி மாலை ஆரம்பித்து முன்னெச்சரிக்கையாக அடுத்த 5 நாட்களுக்கு தொடர்ந்து மத்திய அரசின் சித்தா வெப்சைட்டில் இருந்தவற்றை கடைபிடித்தோம்.   

1. 5 times salt/turmeric hot water gargle
2. Ginger water for drinking
3. Steam inhale with nochi Or  tulasi 3 times
4. Kabasoor 2 times a day
5. Morning and evening sambrani / neem leaves sambrani
6. Stand in 11 am - 2 pm sun at least 10 mins
7. zincovit tablets 1

நல்லவேளையாக இருவருக்குமே நெகட்டிவ்.   சற்றே நிம்மதி.   திங்கள் காலை எட்டு மணியளவில் பேரூராட்சி ஊழியர் எங்கள் வீடுகளுக்கு முன்பு மருந்து தெளித்து விட்டு உள்ளே சானிடைசர் அடித்துவிட்டு சென்றார்.  ஏரியாவில் பரபரப்பு.  அந்த மருந்து அடிக்கும் பணியாளரிடம் கேட்டேன்.
"வேற எங்கேயாவது இருக்காண்ணா?" 
"கொரோனா ஆரம்பித்ததிலிருந்து சுத்தி சுத்தி மூணு நாலு பேருக்கு  இருந்துட்டே தான் இருக்குங்க.  நேத்து கூட மஞ்சகாட்டு வலசுல. மூணு பேரும் ஒரே ஃபேமிலி.  பாவம் சின்ன குழந்தைக்கும் வந்துடுச்சு"

நான் தான் நமது ஊரில் இல்லை என்று நினைத்து கொண்டிருந்தாலும்,  சுற்றிலும் அங்கங்கே இருந்து கொண்டு தான் இருக்கின்றது. தொடர்ந்து நான்கு நாட்கள் அவரின் கடமையை செய்துவிட்டு போனார்.
அவர் வந்து விட்டு சென்றதும் ஊரில் பலரும் விசாரிக்க ஆர்ம்பித்தனர்.  சிலர் "சாமிகிட்ட வேண்டிட்டு  இருக்கேன், சீக்கிரமா நல்லா போயிடும்" என்றார்கள்.  இவர்களின் அன்பு ஒன்று தான் ஆறுதல்.   

செவ்வாய்க்கு பிறகு அப்பாவிற்கு இருமல் லேசாக குறைய ஆரம்பித்தது.   அதன் பிறகுதான் எனது பரிதவிப்பும் சற்று குறைந்தது.  மீண்டும் ஒரு வாரத்திற்குப் பிறகு, நியூ இயர் வெள்ளியன்று சோதனையில் பாசிட்டிவ் என்றே வந்தது.  அன்று நெகடிவ் வரும் வீட்டுக்கு செல்லலாம் என நினைத்து இருந்தோம்.  அதன் பிறகு மூன்று நாட்கள் கழித்து மீண்டும் நடந்த டெஸ்டில் நெகடிவ் என்று வரத்தான் நிம்மதி பெருமூச்சு. 11 நாள் முடிந்திருந்தது.  டிஸ்சார்ஜ் செய்து அவரை கூட்டி  செல்லும்போது, பரபரப்பாக வழக்கம் போல இயங்கிக் கொண்டு தான் இருந்தது.  

இன்னும் சில மாதங்கள்   கண்டிப்பாக பத்திரமாக இருக்க வேண்டும். அது  சிற்றூராக இருந்தாலும் நகரமாக இருந்தாலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.   அலைச்சல், மன உளைச்சல், மருத்துவமனையில் இருந்து வந்தும் தனிமையில் இருப்பது என்பது  'தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்'  என்பது போலத் தான்.

குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...