2020 இப்படியாக முடியும் என்றோ, 2021 இப்படி ஆரம்பிக்கும் என்றோ எதிர்பார்க்கவில்லை. கடைசியாக அது எங்களை நோக்கி வந்து விட்டது. சென்ற திங்கள் மருத்துவமனையில் அப்பாவிற்கு கோவிட் நெகட்டிவ் என்று கூறி வீட்டுக்கு கூட்டிட்டு போலாம் என்றதும் தான் சற்றேனும் தெளிவடைந்தேன். 11 நாட்கள் மருத்துவமனை வாசம் அன்றுதான் முடிவுக்கு வந்தது.
வெள்ளிக்கிழமை , கிறிஸ்துமஸ் அன்று மதியத்திற்கு மேல் அப்பாவிற்கு காய்ச்சல். அதற்கு இரு நாட்களுக்கு முன் தான் ஊரில் இருந்த மருத்துவரிடம் காண்பித்து காய்ச்சலுக்கு மருந்து வாங்கி இருந்தேன். ஆன்டிபயாடிக் மருந்தினை அவர் கொடுக்கவில்லை. இரண்டு நாட்கள் கழித்து காய்ச்சல் நிற்கவில்லை என்றால் வர சொல்லி இருந்தார். ஒருநாள் நன்றாக இருந்தவர், கிறிஸ்துமஸ் மாலை, சற்று இருமலோடு இருந்தார். கூடவே காய்ச்சலும் அதிகமானது. ஊரில் அதே மருத்துவர் வர மாலை 6.30/7.00 ஆகும். ஈரோடு கிளம்பினோம். ஒரு பக்கம், ஈரோடு மருத்துவமனைக்கு செல்ல கொரானா பயம். இருந்தாலும் வேறு வழி இல்லாததால் சென்றோம்.
மருத்துவமனையில் முதலில் காய்ச்சலுக்கான ஊசி போட்டதும் காய்ச்சல் நின்றது. "நல்லாயிடுச்சு, வீட்டுக்கு போலாமா?" என்றார் அப்பா. இருமல் இருக்கவே CT ஸ்கேன் எடுக்க டாக்டர் கூறினார். தெரிந்த மருத்துவர் தான். ஓரிரு மணிநேரம் கழித்து CT ஸ்கேன் முடிவில் கோவிட் பாசிட்டிவ் என்றதும் எனக்கு அதிர்ச்சி. பனியில் நடைப்பயிற்சி சென்றதால் வந்த சாதாரண சளி காய்ச்சல் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நகரத்திலிருந்து விலகி ஒதுக்குப்புறமாக இருக்கும் எங்கள் ஊருக்கு கொரோனா வராது என்ற நினைப்பு பொய்யானது. எப்படி வந்தது? எங்கிருந்து வந்திருக்கும்? ஒருவேளை காலையில் வாக்கிங் செல்லும்போது காற்றில் பறந்து வந்திருக்குமா? நான்கு நாட்கள் கழித்து, சென்ற பெரிய காரியத்தில் தொற்றியிருக்குமா? கடைகளுக்கு சென்ற போது வந்திருக்குமா? அல்லது கோயிலில் பிரதோஷம் என்று போனார்களே, அங்கு கூட்டம் என்று கூறினார்களே, அங்கிருந்து வந்திருக்குமா? பாசிட்டிவ் என கூறியவுடன், மனதில் தொடர்ந்து குழப்பம் நிறைந்த கேள்விகள், கவலைகள்.
'சரி, வந்துவிட்டது. அடுத்து குணமாக என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே இப்பொழுது பார்ப்போம்.' கோவிட் என்று மெதுவாக கூறிய மருத்துவர் "அட்மிசன் போட்டுடுங்க. மைல்டா தான் இருக்கு. ஆறு நாள் கழித்துதான் மறுபடியும் செக் பண்ண முடியும். ஸ்வாப் ரிசல்ட் காலைல வரும்" என்றார். அதுவரை சுற்றிலும் நின்று கொண்டிருந்த செவிலியர்கள் தள்ளி நின்று கொள்கிறார்கள். அவரது படுக்கை மறைக்கப்படுகிறது. தனி அறைக்கு மாற்ற என்னிடம் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். கிட்டத்தட்ட மணி ஒன்பது.
மருத்துவமனையின் உள்ளே நுழைந்து ஊசி ஒன்றை போட்டதுமே, 'காய்ச்சல் போய்டுச்சு தெம்பாயிட்டேன், வீட்டுக்கு போலாமா' என்றவருக்கு என்ன கூறுவது. ஒருவழியாக என்னை முதலில் திடப்படுத்திக்கொண்டு, மனதளவில் அவரை தயார் செய்து தனி அறைக்கு அனுப்பினேன். "இன்னும் ரெண்டு மூணு நாள் தனியா இருக்கணும் போல இருக்கு. இருமல் நிக்கணும். தைரியமாக இருங்க. சரியாயிடும்" என்று கூறி ஒரு தனி அறைக்கு அவரை அனுப்பிவிட்டு, இரவு உணவை வாங்கி கொடுத்து விட்டு அப்பாவிற்கு தேவையான உடமைகளை தம்பியை விட்டு எடுத்து வர சொல்லிவிட்டு கோவிட் வார்டின் முன்பாக காத்து நின்றேன்.
என்னைப்போலவே மற்றொருவர், கவலை படிந்த முகத்தோடு கோவிட் வார்டின் முன்பாக நின்றுகொண்டு இருந்தார். அவரிடம் விசாரித்தேன், அவரும் அவருடைய அப்பாவை அன்று மாலை அங்கு அட்மிட் செய்திருந்தார். அவரின் அப்பவிற்கு என்னென்ன அறிகுறிகள் வந்தன என்பதை உறுதிப்படுத்தி, அவரும் நானும் சமாதானம் ஆகிறோம். இவைதான் அவை:
தலை சுற்றல் ஒரு வார காலம் (இது முக்கியமான ஒன்று)
லேசான சளி ஒரு வார காலம்
உடல் அசதி ஒரு வார காலம்.
காய்ச்சல் இரு நாட்களுக்கு முன்
இருமல் ஒரு நாளுக்கு முன்.
அவரது குடும்பத்தில் சிலருக்கும் பாசிட்டிவ் வந்ததாக கூறியவர், அவர்களை வீட்டிலேயே தனிமையில் வைத்து இருப்பதாக கூறினார். உடன் இருந்தவர்களையும் டெஸ்ட் எடுக்க கூறினார்.
உடமைகள் வர அதனைக் கொடுத்துவிட்டு அடுத்தநாள் வருவதாக கூறி விடைபெற்று வீட்டிற்கு வந்தேன். அன்றிரவு எவ்வளவு புரண்டு படுத்தும் தூக்கம் வர மறுத்தது. அடுத்த நாளுக்கு எங்களுக்கும் டெஸ்ட் எடுக்க வேண்டும் என்ற திட்டம் மட்டுமே இருந்தது. அவருக்கு காய்ச்சல் இருந்த இரண்டு நாட்கள் நானும் அம்மாவும் கூடவே இருந்து இருக்கின்றோம். நல்லவேளையாக குழந்தைகள், மனைவி அவர்களின் ஊரில் இருந்தார்கள்.
அடுத்த நாள் சனிக்கிழமை அவருக்குத் தேவையான துணிமணிகளை எடுத்துக்கொண்டு சென்றோம்.
மருத்துவர் ஸ்வாப் டெஸ்டிலும் பாசிட்டிவ் வந்துள்ளதாக தெரிவிக்கிறார். இரவு அப்பாவும் தூங்கவில்லை என்கிறார். இருமல் குறையவில்லை.
எங்களுக்கான கோவிட் டெஸ்ட் அங்கு எடுப்போமா அல்லது பெருந்துறை மருத்துவ கல்லூரியில் எடுப்போமா எனும் குழப்பம். நான் அரசு மருத்துவமனை என்பதில் தெளிவடைந்து இருந்தேன். ஆனால் அம்மா, கோவிட் டெஸ்ட் எடுக்க மறுக்கிறார்கள், அதுவும் அரசு மருத்துவமனைக்கு வர பலத்த மறுப்பு. ஒருவழியாக நானும் அங்குதான் எடுக்கப்போகிறேன் என்று சமாதானப்படுத்தி பெருந்துறை செல்கிறோம்.
இங்கு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியை பாராட்டியே ஆகவேண்டும். ஊரின் ஒதுக்குபுறமாக நல்ல திறந்தவெளி. அனுசரணையான பேச்சுகள். 30 நிமிடத்தில் சோதனையை எடுத்து அனுப்பி விடுகின்றார்கள். நாங்கள் சென்ற பொழுது ஐந்தாறு பேர் இருந்தார்கள். முடிவு 36 மணி நேரத்திற்குள் ஈரோடு கோவிட் வெப் சைட்டில் வரும் என்று கூறினார்கள்.
வீட்டிற்கு சென்று வீடு முழுவதையும் கழுவி விட்டு, துணிமணிகளை அலசி பக்கத்தில் இருந்தவர்களுக்கும் கூறி பாதுகாப்பாக இருக்க சொல்லிவிட்டோம். சனிக்கிழமை இரவும் தூக்கம் இல்லாமல் கழிந்தது. நமக்குள்ளும் வைரஸ் இருப்பது போலவே ஒரு குறுகுறு உணர்ச்சி. உடல் அசதி. தொண்டை கரகரப்பு. ஒருவேளை ரெண்டு பேருக்கும் பாசிட்டிவ் வந்தால், பெருந்துறை போலாமா? அல்லது அப்பா இருக்கிற மருத்துவமனையிலேயே அட்மிட் ஆகிக்கொள்ளலாமா? பல கலவையான கவலைகள், யோசனைகள், வருத்தங்ககள். அதையும் விட அப்பாவின் இருமல், கூடுதலாக கவலை அளித்துக்கொண்டு கொண்டிருந்தது.
அப்பாவிற்கு பாசிட்டிவ் ஆன அடுத்தநாள், சனிக்கிழமை , ஈரோடு சுகாதாரத்துறையில் இருந்து தொலைபேசியில் அழைத்து அப்பாவின் உடன் இருந்த எங்களையும் மருத்துவ பரிசோதனை எடுக்க சொல்லியிருந்தார்கள். ஞாயிறு, மொடக்குறிச்சி சுகாதாரத்துறையில் இருந்து, எங்களுக்கும் மருத்துவ பரிசோதனை எடுத்துவிட்டதா என்பதை உறுதி செய்து கொண்டார்கள். ஞாயிறு மாலையே ரிசல்ட் வந்து இருக்கும். ஆனால் அன்று இரவு நான் பார்க்கவில்லை. எதுவாக இருந்தாலும் காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று திங்கள் காலையில் தான் ரிசல்ட் பார்க்கின்றேன்.
இருந்தாலும் வெள்ளி மாலை ஆரம்பித்து முன்னெச்சரிக்கையாக அடுத்த 5 நாட்களுக்கு தொடர்ந்து மத்திய அரசின் சித்தா வெப்சைட்டில் இருந்தவற்றை கடைபிடித்தோம்.
1. 5 times salt/turmeric hot water gargle
2. Ginger water for drinking
3. Steam inhale with nochi Or tulasi 3 times
4. Kabasoor 2 times a day
5. Morning and evening sambrani / neem leaves sambrani
6. Stand in 11 am - 2 pm sun at least 10 mins
7. zincovit tablets 1
நல்லவேளையாக இருவருக்குமே நெகட்டிவ். சற்றே நிம்மதி. திங்கள் காலை எட்டு மணியளவில் பேரூராட்சி ஊழியர் எங்கள் வீடுகளுக்கு முன்பு மருந்து தெளித்து விட்டு உள்ளே சானிடைசர் அடித்துவிட்டு சென்றார். ஏரியாவில் பரபரப்பு. அந்த மருந்து அடிக்கும் பணியாளரிடம் கேட்டேன்.
"வேற எங்கேயாவது இருக்காண்ணா?"
"கொரோனா ஆரம்பித்ததிலிருந்து சுத்தி சுத்தி மூணு நாலு பேருக்கு இருந்துட்டே தான் இருக்குங்க. நேத்து கூட மஞ்சகாட்டு வலசுல. மூணு பேரும் ஒரே ஃபேமிலி. பாவம் சின்ன குழந்தைக்கும் வந்துடுச்சு"
நான் தான் நமது ஊரில் இல்லை என்று நினைத்து கொண்டிருந்தாலும், சுற்றிலும் அங்கங்கே இருந்து கொண்டு தான் இருக்கின்றது. தொடர்ந்து நான்கு நாட்கள் அவரின் கடமையை செய்துவிட்டு போனார்.
அவர் வந்து விட்டு சென்றதும் ஊரில் பலரும் விசாரிக்க ஆர்ம்பித்தனர். சிலர் "சாமிகிட்ட வேண்டிட்டு இருக்கேன், சீக்கிரமா நல்லா போயிடும்" என்றார்கள். இவர்களின் அன்பு ஒன்று தான் ஆறுதல்.
செவ்வாய்க்கு பிறகு அப்பாவிற்கு இருமல் லேசாக குறைய ஆரம்பித்தது. அதன் பிறகுதான் எனது பரிதவிப்பும் சற்று குறைந்தது. மீண்டும் ஒரு வாரத்திற்குப் பிறகு, நியூ இயர் வெள்ளியன்று சோதனையில் பாசிட்டிவ் என்றே வந்தது. அன்று நெகடிவ் வரும் வீட்டுக்கு செல்லலாம் என நினைத்து இருந்தோம். அதன் பிறகு மூன்று நாட்கள் கழித்து மீண்டும் நடந்த டெஸ்டில் நெகடிவ் என்று வரத்தான் நிம்மதி பெருமூச்சு. 11 நாள் முடிந்திருந்தது. டிஸ்சார்ஜ் செய்து அவரை கூட்டி செல்லும்போது, பரபரப்பாக வழக்கம் போல இயங்கிக் கொண்டு தான் இருந்தது.
இன்னும் சில மாதங்கள் கண்டிப்பாக பத்திரமாக இருக்க வேண்டும். அது சிற்றூராக இருந்தாலும் நகரமாக இருந்தாலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். அலைச்சல், மன உளைச்சல், மருத்துவமனையில் இருந்து வந்தும் தனிமையில் இருப்பது என்பது 'தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்' என்பது போலத் தான்.