பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter: தூது / The Envoy
குறள் 681:
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.
விளக்கம்:
அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள்.
**
நம் தமிழ் பாடங்களில் மயில் விடு தூது, புறா விடு தூது, தமிழ் விடு தூது படித்திருப்போம். லவ் பண்ணிட்டு இருக்கும் தலைவன் போருக்கு போனாலோ அல்லது பார்க்க முடியாமல் போனாலோ, தலைவி அஃறிணை பொருள் வழியாக தூது விடுற மாதிரி நிறைய செய்யுள்கள் உண்டு.
தமிழ் திரைப்படங்களின் பாடல்களிலும் தூது விடும் பாடல்கள் உண்டு. நான் ரசித்த ஒன்று "சின்னக்கிளி வண்ணக்கிளி சேதி சொல்லும் செல்லக்கிளி" என்ற சின்னக் கவுண்டர் பட பாடல். இது ஒரு அழகிய கிளி விடு தூது. சுகன்யாவும்- விஜயகாந்தும் கிளிகளின் வழியே உரையாடிக்கொண்டு இருப்பார்கள். ( இதுபோல வேறு பாடல் இருந்தால் பகிருங்கள் )
ஆனால் வள்ளுவர், இங்கு அரசருக்கு தூது கொடுப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறார். இன்றைக்கு இது பொருந்துமா? அல்லது அன்றும் அப்படி இருந்ததால் வள்ளுவர் தனது ரூல் புத்தகத்தில் இப்படி எழுதி உள்ளாரா என தெரியவில்லை.
அரசருக்கு என பார்க்கும் பொழுது நம் மாநிலத்திற்கு, நாட்டிற்கு, உலகத்திற்கு என பெரிய அளவில் யோசிப்போம். அரசருக்கும் தொழில் அதிபர்களுக்கும் இடையே இருக்கக்கூடிய தூது படலங்கள் வேற லெவல். இதனை "லாபி விடு தூது" எனலாம். அதன் சிறிய அளவை "புரோக்கர் விடு தூது" என வகைப்படுத்தலாம்.
இரண்டுக்கும் என்ன வித்யாசம். அரசன் எனில் அரசாங்கமும் தான். இதனை நம் அளவிற்கான தூது படலம் என கொள்ளலாம். எந்த ஒரு அரசு துறையும் இதில் பொறுத்த முடியும். இந்த ப்ரோக்கர் விடு தூது படலம் இல்லாமல் எதுவும் இங்கு அசையாது.
ஒரு சாதாரண பதிவு அலுவலகத்தில் நேரில் சென்ற, இந்த தூது படலம் இல்லாமல் பத்திரப்பதிவு பண்ணிவிட முடியுமா? அப்படி தூது செல்பவர்கள் நம்மிடம் பேரன்புடன் தான் உள்ளார்கள், தூது படலத்தில் அழகாக பேச தகுதியானவர்களாக உள்ளார்கள், பதிவு செய்யும் அந்த இடத்தின் வேந்தனிடம் ப(ண)ண்பாகவும் தான் உள்ளார்கள். ஆகவே வள்ளுவர் வாக்கினை எந்த வகையிலாவது பின்பற்றிவிடுகிறார்கள்