- யாராவது சில மக்களோடு தினமும் பேசுங்கள்; சும்மாவேனும் பேசுங்கள்; அது உங்களது மன உளைச்சலில் இருந்து விடுதலை கொடுக்கும். அது உங்கள் நண்பர் ஆகவும் இருக்கலாம், தூரத்து உறவினர் ஆகவும் இருக்கலாம். எப்பொழுதோ சந்தித்த நண்பராகவும் இருக்கலாம்.
- இந்த நேரத்தை குடும்பத்தோடு, குழந்தைகளோடு எப்படி செலவிட வேண்டும் என்பதை திட்டமிட்டு செயல்படுத்தலாம்.
- புதிதாக இதுவரை செய்யாத ஒரு வேலையை செய்யலாம்.
- தள்ளிப்போட்ட சில வேலைகளை முடிக்கலாம்.
Wednesday, April 01, 2020
பெங்களூரில் கொரோனா -2
Friday, March 13, 2020
பெங்களூரில் கொரோனா
நண்பர் "என்ன செய்றதுன்னே தெரியலை?" என்றவரிடம் "குழந்தைகளை ஊருக்கு அனுப்பிடுங்க" என்றேன்.
"நாங்க இதுவரைக்கும் தனியா அனுப்பினதே இல்லை" என்று புலம்ப ஆரம்பிக்கிறார். பிரிட்ஜில் வளர்த்தப்பட்ட குழந்தைகளின் நிலையும் இது தான்.
கோரோனா பற்றிய செய்திகளை, வீடியோக்களை பார்த்துக் கொண்டு வரும்பொழுது, இது பற்றிய வீடியோ பிபிசியில் கிடைத்தது. சீனாவின் 'வுகன்' நகரத்தில் வாழும் பிரிட்டிஷ் ஒருவரை பிபிசி பேட்டி கண்டு வெளியிட்டுள்ளது. இளம் வயதில் இருக்கும் இவர் இதிலிருந்து மீண்டு வந்தவர். "வழக்கமாக ஆரம்பித்த இருமல் மற்றும் சளி இரண்டு நாட்கள் கழித்து சரியானது போல இருந்தது. அதன் பிறகு மூச்சுத் திணறல் ஆரம்பம். அது சற்றே பயப்படுத்தியது. நிமோனியா வந்தபோது இருந்ததைப் போல 20% மட்டுமே மூச்சு விட முடிந்தது"
சமீபத்தில் சிக்கன் குனியாவின் தூரத்து சொந்த வைரஸ் போன்ற ஒரு காய்ச்சலால் பாதிப்படைந்திருந்தேன். அதற்கான காரணம் என்ன என்று பார்த்தால், முன்னெச்சரிக்கை இல்லாததே. வழக்கமாக பாதிப்படைந்தவர்களை பார்க்க செல்லும் பொழுது நாம் வாய்க்கூடு போட்டுக்கொள்வதில்லை அல்லது பாதிப்படைந்தவர்களும் போட்டுக்கொள்வதில்லை. "அட, நமக்கென்ன வரப்போகுது" என்ற அசால்ட்டான எண்ணம் அல்லது சங்கடமாக இருக்கும் என்பதாகவும் இருக்கலாம். அந்த நேரத்தில் மருத்துவமனைக்கு தெரிந்தவர்களை பார்க்க வரும் 99% நம் மக்கள் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் தான் செல்கிறார்கள். இது போன்ற முன்னெச்சரிக்கைகளில் நாம் பின் தங்கியே உள்ளோம் என நினைக்கிறேன். இதில் நாம் மாற வேண்டும்
Sunday, March 01, 2020
படி விளையாடுதலும் சிவராத்திரியும்....
நேற்று காலையிலிருந்தே பக்கத்து ஊரில் இருந்து பக்திப் பாட்டுச் சத்தம் கன்னடத்தில், தமிழிலும், தெலுங்கிலும், சமஸ்கிருதத்திலும்,மலையாளத்திலும் கலந்து கட்டிக் கேட்டுக்கொண்டே இருந்தது. அலுவலகம் முடித்து வந்த சாயங்காலமும் கேட்டுக்கொண்டே இருந்தது. இரவு எட்டு மணி வாக்கில் ட்ரம்ஸ் முழங்க, பேண்ட் செட் அடி சத்தம் வீட்டை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்க ஆரம்பித்தது. தப்பாட்ட அடி போல கால்களை ஆட இழுத்தது. 'என்னதான் நடக்கிறது' என்று வேடிக்கை பார்க்கச் செல்ல முனைந்தேன். இவர்கள் ஊரின் சிவராத்திரி எப்படித்தான் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆவலும் அதில் உண்டு. வாண்டுகளும் "நாங்களும் வருவோம்" என்று சேர்ந்து கொண்டார்கள்.
வண்டியை கிளை சாலையில் நிறுத்திவிட்டு, வேடிக்கை பார்க்கும் மக்களோடு ஐக்கியமானோம். நின்று கொண்டு இருந்த இடத்தை, பேண்ட் செட் குழு முதலில் நெருங்கியது. பின்னால் சற்று தொலைவில் ரதம். தள்ளிக்கொண்டு வந்த பெரிய ட்ரம்ஸ் நின்றது. கூடவே பேண்ட் செட் அடியை சற்று நிறுத்தினார்கள். ஒரு தவுசண்ட் வாலாவை கீழே வைத்து பற்ற வைத்தார்கள். வாண்டுகள் காதுகளை மூடிக்கொண்டார்கள்.
பட படவென ஐந்து நிமிடம் வெடித்து ஓய்ந்தது. ட்ரம்ஸ், பேண்ட் செட் மறுபடியும் நம்மை ஆட அழைப்பது போல அடியை ஆரம்பித்தார்கள். மெல்லமாக நகர ஆரம்பிக்க, பின்னால் ஒரு குழு நடந்து சென்றது. ஆட்டம் இல்லை.
ரதம் போன்ற மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அமைப்பு பக்கமாக வந்தது. மின்மினி விளக்குகளால் சுற்றிலும் ஒளிர்ந்து கொண்டு வந்தது. மனித முகம் போல ஒரு தகடு வைக்கப்பட்டு பிரமாண்டமாக சோடிக்கப்பட்டு இருந்தது. வழக்கமான சிவன் முகம் மாதிரியும் தெரியவில்லை. வேறு ஏதேனும் சாமியோ? சந்தேகத்தை தெளிந்திட பக்கத்தில் இருந்த உள்ளூர்காரரிடம், கன்னடம், தமிழ், ஆங்கிலம் கலந்து தயங்கியபடியே ஒருவாராக கேட்டேன்.
"ஏனு சாமிங்?" ( அந்த நம்மூரு ங்க மட்டும் சட்டென போவதில்லை)
"சிவா"
"கோயில் எள்ளிதே?"
"ஈக்கட ஆலமரம் பேக் சைடு" அந்த ரதம் வந்த வழியாக கையைக் காண்பித்தார். அது ஊரின் பின்பகுதி. அந்த ஆலமரத்தின் வழியாக பலமுறை காலை ஓட்டம் ஓடி இருந்தாலும், அங்கு ஒரு சிவன் கோவில் இருந்ததை இதுவரை பார்த்ததில்லை.
"இதி ரவுண்ட் ஹோகிதா?"
"ஆக்கட ஹோகி ஈக்கட பரித்தே" என இப்படிக்கா போயி அப்படிக்கா ஊரைச் சுற்றிக்கொண்டு வரும் என்றார்.
வேடிக்கை பார்த்த மக்கள் ஒவ்வொருவராக ரதத்தின் அருகில் சென்று குங்குமம் வாங்கிக்கொண்டு வந்தார்கள். அவரின் மனைவியும் குங்குமம் வாங்கிக்கொண்டு வந்தார். அவருக்கு கொடுத்துவிட்டு, என் வாண்டுகளுக்கும் வைத்துவிட்டார், கூடவே எனக்கும் கொடுத்தார். சாதாரண மனிதர்களின் அன்புக்கு மொழி ஒரு பொருட்டே இல்லை.
அந்த ரதமும், மேள தாளமும் மெதுவாக தேங்கித் தேங்கிச் செல்ல ஆரம்பித்தது. கோவில் எப்படி இருக்கு என ரதம் வந்த வழியில் கோயிலை நோக்கி சென்றோம். ஆலமரம் சீரியல் லைட் விழுதுகளால் மின்னிக்கொண்டு இருந்தது. கீழே வயலுக்கு செல்லும் வழி. பக்கவாட்டில் சப்போட்டா தோப்பு. நெடுக பளிச் அலங்கரிப்பு. தரையில் விரிப்பு. விரிப்பின் இறுதியில் கோவில். ஒரு பத்துக்குப் பத்து தான் இருக்கும். திறந்தவெளியில் நந்தி. சுற்றிலும் எந்த சுற்றுச்சுவரும் இல்லை. உள்ளே ரதத்தில் பார்த்தது போன்ற தகடால் ஆன ஒரு குட்டி மனித முகம் போன்ற அமைப்பு. என்னால் மீண்டும் சிவன் என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தீபாராதனை உடன், பாலையும் தயிரையும் கலந்து கொடுத்த பிரசாதத்தை வாங்கிக் கொண்டு வெளியேறினோம்.
அங்கங்கு ஒரு முப்பது பேராவது இருப்பார்கள். பெருங் கூட்டம் இல்லை. ஆனாலும் கூட்டம் வந்த வண்ணமும், கலைந்தும் சென்று கொண்டும் இருந்தது. உள்ளூர் மக்களைத் தவிர வடக்கு, தெற்கு என பல தரப்பட்ட கூட்டம். நகரமயமாக்கல் பெங்களூரின் புறநகரில் உள்ள இதுபோன்ற கிராமங்களையும், தன்னோடு இணைத்து பெருநகரமாகிக் கொண்டு இருக்கிறது. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வந்து இந்த சிற்றூரை, கொஞ்சம் கொஞ்சமாக வளைத்துக் கொண்டு இருக்கும் இந்த சமயத்தில், இந்த கிராமத்தின், இந்த சிறு கோவிலின் சிவராத்திரிக்கான கூட்டம் கண்டிப்பாக அதிகரித்து இருக்கும் என்று சொல்லமுடியும். உள்ளூர் மக்கள் என் போன்ற மக்களை குறு குறு என பார்ப்பது போன்ற உணர்வு. வாண்டுகளின் தமிழைக் கேட்டு இன்னொரு தமிழ் குடும்பம் புன்முறுவல் இட்டு கடந்தார்கள்.
வெளியேறும் தருவாயில் நண்பர் ஒருவர் வந்தார். "சின்ன கோவில் தான் போலங்க. ரதம் வந்துச்சு, சரி கோயில் எங்க இருக்குன்னு பார்க்க வந்தோம்"
"ஆமாங்க, இது சுயம்புவாக உருவான கோவில், நாங்க இங்க வந்ததிலிருந்து ரெண்டு.மூணு வருஷமா வந்துட்டு இருக்கோம்" என்றார்.
வண்டியை எடுத்து வந்த வழியில் திரும்பினாள், ரதமும் அந்த கூட்டமும் ஒரு 50 அடி தொலைவு நகர்ந்து சென்றிருந்தது.
இங்குள்ள சிவ வழிபாடு என்பது 11-12 ம் நூற்றாண்டில் பசவன்னா அவர்கள் உருவாக்கிய லிங்காயத்து சமயம் சார்ந்ததாக இருக்கலாம். அது நமது 6-7ம் நூற்றாண்டின் நாயன்மார்கள் உருவாக்கிய சைவம் சார்ந்து வந்துள்ளது என்றும் கூறுகிறார்கள். அது அப்படியே அகத்தியர் வரை செல்கிறது. காலத்திற்கேற்ப கொண்டாட்டமும் குடி இருக்கலாம். இத லிங்காயத்து சமய வழி வந்தவர் தான் சென்ற வருடம் மறைந்த 111 வருடம் வாழ்ந்த சிவகுமார் சுவாமிகள். இந்த லிங்காயத்து சமயம் சாதிய ஏற்ற தாழ்வு இல்லாமல் கட்டமைக்கப்பட்டது என்கிறார்கள். ஆனால் இப்பொழுது அப்படியா என தெரியவில்லை.
சிவராத்திரியின் போது அப்பொழுதெல்லாம் என்ன நடக்கும் என ஊர் சார்ந்த அனுபவம் ஒப்பீடாக வந்து சென்றது. இப்படியாகத்தானே காட்டுக் கருப்பண்ண சாமி கோவிலுக்கு சென்று வருவோம்? படி விளையாடுதல் என்று ஒரு நிகழ்வு நடக்குமே! அது என்ன ஆச்சு?
வீட்டிற்குள் வநுழைந்தால் டிவியில் ஜக்கி அந்த நெடு நீண்ட மேடையில் நடந்து கொண்டு இருந்தார். அவ்வப்போது ஆடிக்கொண்டிருந்தார். "என்ன இந்தய்யனெல்லாம் ஆடராறு?" என்று ஒரு கமெண்ட் எங்கம்மாவிடம் இருந்து வந்தது.
இப்படியாக இந்தப்பக்கம்(சமூக வலைத்தளங்களுக்கு) வந்தால், சிவராத்திரியை சீரியஸா எடுத்துக்கிட்டு ஒரு க்ரூப். கழுவி ஊத்த ஒரு பெரும் குரூப்.
நமது சிற்றுர்களில் ஒவ்வொரு சமூகமும் அவர்களுக்கான தனிக் கோவிலை கட்டி எழுப்பி இருப்பார்கள். கருப்பணன், மதுரை வீரன், முனியப்பன் போன்ற பண்பாட்டுத் தெய்வங்களாகவே இவையாவும் இருக்கும். பிள்ளையார், பொட்டுசாமி இதில் கலந்துகொள்ள மாட்டார்கள். இவுங்க முறை வேறு நாட்களில் வரும். அப்போது ஊரில் இருந்த சிவன் கோவில் கூட சிவராத்திரி அன்று திறந்து வைத்திருந்த ஞாபகம் இல்லை. அப்பாவும் அதனை ஆமோதித்தார்.
சிவராத்திரி வரும் ஒரு பத்து பதினைந்து நாட்களுக்கு முன் அதற்குட்பட்ட அங்காளி, பங்காளிகள் சேர்ந்து கொள்வார்கள். "இந்த வருஷம் செவன்ராத்திரி சனிக்கெழம வருது. எப்ப விளையாட போலாம்?" "எங்க இருந்து ஆரம்பிக்கலாம்?" என்ற ஒரு கேள்விக்கு ஒரு செயல்திட்டம் வாய்வழியாகவே உருவாகும். இங்கு விளையாடுதல் என்பது படி விளையாடுவதைக் குறிக்கும்.
கிட்டதட்ட என் அப்பாவுக்கு ஞாபகம் தெரிந்து இது நடைபெற்றதாம், படிப்படியாக இப்பொழுது ஒரு பத்து/பதினைந்து வருடங்களாக நடைபெறுவதில்லை என்றார். சமீபத்தில் கேட்ட ஜெயரஞ்சன் அவர்களின் நிலக்கிழார் என்ற அமைப்பு எப்படி மறைந்துபோனது என்பதை நினைத்துக் கொண்டேன்.
அவரவர்களுக்கு, ஒவ்வொரு சமூகத்திற்கும், பாத்தியப்பட்ட நான்கைந்து அல்லது பத்து பதினெட்டு ஊர்களுக்கு கூட செல்வார்கள். "அட எங்கப்பா... இந்த வருஷம் மழையே இல்லாம, எல்லாம் காஞ்சு போய் கிடக்குது. ஒன்னும் கிடைக்காது. பேசாம விட்டறலாம்"
"இதெல்லாம் வழி வழியா சாமிக்கு பண்ணறது, சாங்கியதுக்கு ஒரே ஒரு ஊருக்கு மட்டுமாவது போயிட்டு வரலாம். சாமிக்குன்னா எல்லாருமே செய்வாங்கப்பா " என்று வறட்சி காலத்தில் பேருக்காக, ஒரு சில ஊர்களுக்கு சில வீடுகளுக்கு மட்டும் செல்வதும் உண்டு.
குறைந்தது ஐந்தாறு பேர். அதில் பூசாரி எனப்படுபவர் கையில் தட்டு. மறு கையில் மணி. தட்டு நிறைய திருநீர். ஒரு உயரமான வேல். திருநீறு பொட்டு வைக்கப்பட்டு, எலுமிச்சை குத்தப்பட்டு இருக்கும். கதம்ப பூவால் நளினமாக சுற்றப்பட்டு இருக்கும். கூடவே ஒரு வாள். அதனைப் பிடித்துக்கொள்ள இருவர். சிண்டு, சிறுசுகளிடம் செவண்டி, மணி. சாயங்காலம் இருட்டியதும் ஆரம்பிப்பார்கள். ஒரு கை விளக்கு. அவ்வப்போது எண்ணெய் ஊற்றிக்கொள்வார்கள்.
ஒரு ஊரை எடுத்துக்கொண்டு, ஒரு பக்கமா இருந்து ஆரம்பிப்பார்கள். அல்லது பெரிய தலைக்கட்டு குடும்பத்திடம் இருந்து ஆரம்பிப்பார்கள். பெரும் நிலம் வைத்து இருந்தர்வர்கள் நெல்லை முறத்தில் கொண்டு வந்து போடுவார்கள். சிலர் வள்ளத்தில் அளந்து போடுவார்கள். பூசணி, சேனைக்கிழங்கு என காட்டில் விளைவதைக் கொடுப்பார்கள். கை விளக்கிற்கும் எண்ணெயும் கொடுக்கப்படும்.
" எப்ப பொங்க,
"அடுத்த ஞாயித்துக்கெழமைங்"
"அந்தன்னிக்கு வந்து எளனி வாங்கிட்டுப் போயிருப்பா, பாலு கீழு வேணும்னாலும் வாங்கிக்க"
சில வீடுகளில் அரிசியும் உண்டு. நெல், அரிசி கொடுக்காதவர்கள் அல்லது இல்லாதவர்கள் காணிக்கை மட்டும் இடுவதுண்டு. இவையாவும் பக்திக்காக, சாமிக்கானது மட்டுமல்ல; அப்போதைய கிராமப் பொருளாதாரத்தின் ஒரு அன்பு பிணைந்த நெட்வொர்க். இப்படியாக இரவு ஒன்பது, பத்து மணிக்கு முடியும்.
ஆயுதபூஜைக்கு பொரி போல, சிவன் ராத்திரிக்கு கண்டிக்கிழங்கு. ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு சாப்பிடும் பொருள் பேமஸ் தானே. அன்று காலையில் கண்டிக்கிழங்கு மூட்டை மூட்டையாக ஊரின் முக்கிய கடையில் கடை போட்டுவிடுவார்கள். ஒவ்வொரு வீடுகளிலும் சாயங்காலம் கண்டிப்பாக வேவிக்கப்படும். கோவில்களில் சுண்டல், கிழங்கு, மொச்சக்கொட்டை, பாசி பயிர், பூசணி என இரவு முழுவதும் வேக வைப்பார்கள். விடிகாலை பூசை. அத்தோடு சிவராத்திரி முடிவடையும். பெரிய ஆர்ப்பாட்டம் இருக்காது.
கொண்டாட்டம் என்பது தொடர்ந்து மாசி பங்குனியில் வரும் அந்த காவல் தெய்வங்களின் பொங்கல் பண்டிகை தான். காலையிலிருந்தே மைக் செட் கட்டி விட்டிருப்பார்கள். இந்த ஒற்றுமை இந்தியா முழுவதும் இருக்குதோ என்னவோ? படி விளையாண்டு சேர்த்த நெல், அதில் கிடைத்த காணிக்கையோடு அந்த காவல் தெய்வங்களுக்கு தீர்த்தம் அழைத்தல், கெடா வெட்டுதல், படையல், காவு சோற்று என ஒரு நாள் முழுக்க வழக்கமான ஊர் கொண்டாட்டத்துடன் நடக்கும்.
அன்று சின்னதாக வசூல் செய்து அவர்களுக்கு உரிய வகையில் கெடா வெட்டு, சாராயம் என்று இருந்தார்கள். இன்று பெரிய அளவில் மார்க்கெட்டிங், அதன் மூலம் வசூல் செய்து அனைத்து டிவியிலும், வலை தளங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்து, அவர்களுக்கு உரிய வகையிலான 'கொண்டாட்டத்தில்' இருக்கிறார். எப்படி மற்ற எல்ல விஷயங்களும் சந்தைப்படுத்தப் பட்டுள்ளதோ, அது போலவே. கூடவே சாதாரண மக்களுக்கு உரிய கொண்டாட்டம் அதன் போக்கில் மாறிக்கொண்டு அன்பு பறிமாறிக்கொண்டு உள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக சிவராத்திரி மற்றொரு நாளாக சென்றுகொண்டே இருக்கிறது.
Sunday, March 10, 2019
கி.ரா வின் கதவு
Wednesday, January 16, 2019
அணில் துள்ளி ஓடும் முன்றிலில்!
Tuesday, August 07, 2018
"ஈரோடு எனது குருகுலம்" கலைஞர்
"ஈரோடு எனது குருகுலம்" கரகரத்த குரலில் கலைஞர் பேச்சை ஆரம்பித்தவுடன் அங்கங்கு சரக்கடித்துக்கொண்டும், சரக்கடித்து முடித்து தம்மடித்துக்கொண்டு இருக்கும் தொண்டர்கள் பரபரப்புடன் தங்களை ஆசுவாசப் படுத்திக்கொண்டு இவரின் பேச்சை அமைதியாக கேட்க இவர் பக்கம் திரும்புவார்கள். தக தக என வண்ண சிறு மின் விளக்குகள் உதய சூரியனாகவும், கலைஞராகவும், கருப்பு சிவப்பில் மின்னிக்கொண்டு இருக்கும். இப்படி கலைஞரை முதன்முதலிலில் பார்த்த இடம் ஈரோடு வ. ஊ. சி. திடலில் தான். பெரும்பாலான அரசியல் கூட்டம் அங்குதான் நடைபெறும். சுமார் ஒரு நாற்பது, ஐம்பது நிமிடங்கள் குறிப்புகளை வைத்துக்கொண்டு, புள்ளி விவரங்களுடன் இடைவிடாமல் அடுக்குமொழியில் பேசிக்கொண்டே செல்வார்.
தேர்தல் பிரசாரத்திற்கு ஈரோடு வருகிறார் என்றால் எங்கள் ஊரின் உடன்பிறப்புகள் பரபரப்பாவர்கள். ஒரு வாரத்திற்கும் மேலாக அண்ணணின் கடையில் கலைஞரின் கூட்டம் பற்றிய பேச்சாகவே இருக்கும். 'நாங்கல்லாம்' என ஆரம்பித்து வெறும் "டீ" குடித்துவிட்டு கட்சிக்கு கொடி நட்ட வரலாரை, அதற்கும் முந்தைய தலைமுறையினர் கூறிவிட்டு இவர்களை உசுப்பேத்திவிட்டு செல்வர். 'அம்மா கட்சிலயாவது ஏதாவது குடுப்பாங்க, நம்ம கூட்டத்துக்குப்போனா நம்ம கட்சில என்ன தராங்க' என்று சொல்லிக்கொண்டே கூட்டத்துக்கு செல்வார்கள் கழக உடன்பிறப்புகள்.
அப்பா ஒரு தீவிரமான கலைஞரின் விசிறி. 2011 க்கான தேர்தலில் "அத்தனை ஊழல் பண்ணிருக்காங்க அவங்களுக்கு போடாதிங்க" என்று காலில் விழாத குறையாக கெஞ்சியும், "கலைஞர தவிர வேற யாருக்கும் போட மனசு வரலை" என மீண்டும் அவருக்கே வாக்களித்துவிட்டு வந்து கூறியவர். அவரைப்போலத்தான் ஊர் பக்கம் பலரும், அதுதான் கலைஞரின் சொத்து, திமுகவின் வாக்கு வங்கி. மதிமுக துவங்கிய புதிதிலும் இது போன்ற பேச்சுக்களை கேட்டுள்ளேன். மதிமுகவில் இருப்பவர்களே கலைஞருக்கு வாக்களித்ததை இப்படி கூறுவார்கள். "சூரியனப் பார்த்தா, கை அங்க தானா போகுதப்பா" .
ஆறாம் வகுப்பில் பிடித்தமான ஒரு பிரிவேளை ஓவியம். ஓவியம் கிறுக்கி, பழகிக்கொண்டு இருந்த காலங்களில், ஒருநாள் ஏனோ உதயசூரியனைப்போட்டு அப்பாவிடம் காட்டி நற்பெயர் எடுக்க முற்பட்டேன். என்னைச் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் கலைஞரைக் கொண்டாடியபோது நானும்தெரிந்தும் தெரியாமல் அவரையே ஆதரிக்க ஆரம்பித்திருந்தேன்.
1996ல் தான் முதல் முறையாக ஓட்டுரிமை. அந்த சமயம் தான் பாட்ஷா விழாவில் ஜெ வை எதிர்த்து தலைவர் ரஜினியின் வாய்ஸ். பரபரப்பானது தேர்தல். அந்த தேர்தலில் தான் ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பிபார்க்கும் வரலாற்று நிகழ்வாக எங்கள் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 1033 வேட்பாளர்கள் விவசாய சங்கம் சார்பில் நிறுத்தப்பட்டார்கள். அப்போது +2 தேர்வு சமயம், ஆயினும் "ரஜினி-கலைஞர்-மூப்பனார்" என இவர்களைப்பற்றித்தான் எங்களின் நட்புவட்டம் சிலாகித்துப் பேசிக்கொண்டு இருக்கும்.
எங்கள் தொகுதியில் மட்டும் தேர்தல் ஒரு மாதம் தள்ளிவைக்கப்பட்டு, புத்தகம் போடுமளவு சென்றது. அந்த வருடம் பெருவாரியாக திமுக-தமாக வெற்றி பெற்றிருந்தது.
2006-2011 காலத்தில் சிறு குறுநில மன்னர்கள் துணையுடன், குடும்ப ஆதிக்கத்தினால் ஊழல், இலங்கை படுகொலைகளில் இவரின் செயல்பாடு, கட்சிக்காரர்களின் கல்லூரிகள், கொள்கையிலிருந்து வழுவல் என்று இவரின் வரலாற்றில் பெரும் கறை. அந்த ஐந்து வருடம் தடம்புரண்டு போகாமல் இருந்திருந்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி வேறுவிதமாக, மேற்கத்திய நாடுகளுக்கு சவால் விடும் விதத்தில் அமைந்திருக்கும்.
இன்று, நின்று நிதானமாக அவர் செய்த ஊழலைத்தாண்டி யோசித்துப் பார்த்தால், என் ஊரிலிருந்தும், நண்பர்கள் வட்டங்களில் இருந்தும், சொந்தங்களில் இருந்தும், அன்று திமுக கொடியை நட்டு கதை பேசிக்கொண்டிருந்தோரின் பிள்ளைகள், பேரன்கள் என பலர் அடைந்திருக்கும் பொருளாதார இடம் என்பது அவரவர்களுக்கே தெரியாமல் கலைஞரின் சமூக நீதியால் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டின் மூலம் கிடைத்த இடங்கள் ஒரு மிக முக்கிய காரணம். கிராமங்களில் இருந்தவர்களை மேற்படிப்பு படிக்கவிட்டு விடுதலையாக்கியதில் பெரும்பங்கு அவரையே சாரும். கிராமங்களில் கல்விக்கூடங்களை மீண்டும் திறந்து கல்வியின் விதைகளை ஊன்றியவர் காமராசர் எனில், பள்ளியிலிருந்து அனைத்து விதமான கல்லூரிகளுக்கும் சென்று படிக்கும் ஆகச்சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் என்பதில் இவர் ஒரு சரித்திர நாயகன். இன்றும் தமிழகத்தின் மிக முக்கியமான கல்லூரிகளில் அனைத்து மக்களும் சேரமுடிகிறதென்றால் அது அவரின் சாதனை. இந்த பின்புலத்திலிருந்து வந்தவர்கள் எவ்வளவு கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள் என்பதை சொல்ல தேவையில்லை, ஏனெனில் அது அவர்களின் ஒட்டு மொத்த தலைமுறையின் கனவு. இப்பொழுது நீட் எங்களுக்கு வேண்டாம் என போராடுவதன் நீட்சியும் இதுதான்.
படித்துவிட்டு, வேலையின் பொருட்டு சொந்த ஊரை, சொந்த மக்களை விட்டு வெகுதூரம் விட்டு விலகி இருந்தாலும், இந்த வளர்ச்சி எனும் வீக்கம் தேவையா என்று ஒருபுறம் நினைத்தாலும், கள யதார்த்தம் வேறு.
இன்றைய நிலையில் தொடர்ந்து தொலைநோக்குடன் வழி நடத்தும் தலைவர்கள் இல்லை என்பது தான் வேதனை. நீங்கள் போட்டுக்கொடுத்த வழியில் நடக்க உடன்பிறப்புகள் மட்டுமல்ல உங்களால் பயனடைந்த ஒரு கூட்டம் உலகமெங்கும் விரவிக் கடக்கிறது.
#சென்றுவாதலைவா
#கலைஞர்
Sunday, July 15, 2018
ஓட்டுனருடன் உரையாடல்
எப்பொழுதும் ஆட்டோவிலோ அல்லது வாடகை காரிலோ சொல்லும்போது டிரைவருடன் பேச்சுக் கொடுப்பது வழக்கம். பெரும்பாலும் நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் மக்களே இங்கு டிரைவர்களாக இருப்பர். அப்படித்தான் சென்றமுறை பாகிஸ்தானை சேர்ந்த டிரைவர் சூப்பர் ஸ்டாரைப்பற்றி புகழ்ந்து தள்ளினார், அவரது அப்பொழுதுதான் சமூக விரோதிகளைப் பற்றி தலைவர்பேசியிருந்த்தால், ஏனோ ஆர்வம் இல்லாமல் பேசிக்கொண்டு வந்தேன். இருந்தாலும் அவரின் ஸ்டைலை சிலாகித்துக்கொண்டு. சென்றவாரம் மூட்டை, முடிச்சுகளை எடுத்துவைத்த போது நாங்கள் தமிழில் பேசிக் கொண்டிருந்தைக் கேட்டு வாகன ஓட்டுனரும் தமிழில் 'கதைக்க' ஆரம்பித்தார். ஆம் அவர் 18 வருடங்களுக்கு முன் லண்டனுக்கு புலம்பெயர்ந்த தமிழர், ஈழத்தை சேர்ந்தவர்.
பரஸ்பர விசாரிப்புக்குப்பின், பேச்சு அவர்களின் குழந்தைகளின் தமிழைப் பற்றி சென்றது. "பெரியவங்க யாரும் கூட இல்லைங்க, அவங்க இருந்தா கொஞ்சம் குழந்தைகளோடு தமிழில் கதைப்பாங்க ...அதனால தமிழ் குழந்தைகளுக்கு கடினமாக தான் இருக்கு, புரியாததை நாங்களும் ஆங்கிலத்துல தான் பேசறோன்ங்க... பள்ளியிலயும், வெளியிலயும் ஆங்கிலம் இருப்பதால அடுத்த தலைமுறை குழந்தைகள் தமிழ் பேசறது கொஞ்சம் சிரமம் தான்" என்றார். அதைஆமோதித்துவிட்டு "தமிழ்நாட்லயே அந்த நிலைமை தாங்க 'சிட்டில'... ஆங்கில வழி படிப்பு ரொம்ப அதிகமாகிட்டதால, ஆங்கிலம் கலந்து பேசறவங்க அதிகம். இங்லீஸ் எழுத்துல எழுதி தமிழ்ல படிக்கிறவங்களும் நிறைய ஆகிட்டாங்க. நீங்க, ஈழத்தமிழர்கள், இங்க தமிழ் வளர்க்கறதைப் பார்க்கறப்ப மகிழ்ச்சியா இருக்குங்க " என்று கூறிவிட்டு. "இங்க பக்கத்துல உங்க ஊர் அம்மா வாரம் ஒருநாள் தமிழ் சொல்லிக்கொடுக்காறாங்க, வருட முடிவில் 'எக்ஸாம்' கூட இருக்குங்க" ஆங்கிலம் கலக்காமல் என்னால் சரளமாக பேச முடியவில்லை.
"அப்படீங்களா" என்ற எங்களது பேச்சு குடியுரிமை பற்றி திரும்பியது. "இங்க சிட்டிசன்சிப் உங்களுக்கு தந்துட்டாங்களாங்க?" "ஓமங்க, அது வந்து ஆரேழு வருடத்திலயே கொடுத்துட்டாங்க" என்றவர், "உங்க ஊருக்கு வந்திருக்கேன், அங்க ஈழத்தமிழர் எப்படி இருக்காங்க?", இந்த கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை,அவர்களை எங்கோ ஒரு மூளையில் தானே ஒதுக்கி வைத்துள்ளோம். "எங்க ஊருக்கு பக்கத்துல முகாம்ல இருக்கறவங்க எங்க வீடு வேலை செய்யரப்ப பாத்திருக்கேன். வேலை ரொம்ப சின்ஸியரா செய்வாங்க. ஆனா அவங்களுக்கு எல்லாம் இன்னும் சிட்டிசன்சிப் அங்க தரலைங்க" என்றேன். சீரான வேகத்தில் வாகனத்தை பத்து வழிச்சாலையில் செலுத்திக்கொண்டு நம்மூர் பற்றிய நினைவுகளை மலரவிட்டார்.
"இங்க வர்ரதுக்கு முன்னாடி இலங்கைல இருந்து அங்க வந்தப்பண, மடிப்பாக்கத்துல தான் இருந்தேன்ங்க, கொண்டாட்டம்னா அங்கதாங்க... பொங்கல், தீபாவளினா ஒரு திருவிழா மாதிரி ஊரே கலகலப்பா, அருமையா இருக்கும்ங்க, ரொம்ப நல்லா இருந்தது, தமிழ்நாட்டுலயே இருந்துடலாம்ன்னு நினைச்சேன். இப்ப அங்க எப்படி இருக்குங்க" என்று ஆர்வமோடு கேட்டார். 'என்னத்த சொல்ல', என்று நம்மூர் பற்றிய அவரின் எண்ணத்தை மாற்ற எண்ணவில்லை எனினும், இருந்தாலும் சொல்லாமல் இருக்க முடியாது " கொண்டாட்டமல்லாம் அப்படியே இருக்குங்க, ஆனா எல்லாத்துக்கும் மக்கள் போராட வேண்டி இருக்கு, அரசியல்ல பார்த்தீங்கன்ன, ஜெ மறைவுக்கு பின்னாடி ரொம்ப மோசமான நிலைமைல இருக்கு, ஜெ ஆட்சி நல்லா இருந்ததென சொல்லல, ஊழல்தான், ஆனா தமிழ்நாட்டோட உரிமையை பல நேரங்களில் விட்டுக்கொடுக்கலை. இப்ப மத்திய அரசு சைலன்டா எல்லாம் திணிக்கறாங்க. என்ன நடக்கும்ன்னே தெரியலை" ரொம்ப பயமுறுத்திட்டமோ என நிறுத்திக்கொண்டேன்.
"இங்க பிடிச்சிருக்குங்களா?" என்ற வழக்கமான கேள்வி. "இங்க ஆபிஸ் வேலை அப்படீன்னு ஒரு ஸ்டரக்ட்ர்டு லைப். சுத்தமான காற்று, ட்ராபிக் கிடையாது, எதுக்கும் க்யூல நிக்க தேவையில்லை, கட்டர டேக்ஸ்ஸ ஒழுங்கா செலவு பண்ணறாங்க. பணிவான மக்கள். ஆனா, அங்க ஆபீஸ் போறதே பெரும்பாடு தான், ட்ராபிக்ல மாட்டி, பொல்யூசன்ல மாட்டி. காசு கொடுத்தீங்கன்னா மட்டும்தான் வேலை நடக்கும், இல்லனா ஒன்னும் பண்ண முடியாது. ஆனா நண்பர்கள், சொந்தம் எல்லாம் அங்க இருக்கறதால, சோசியல் லைப் அங்கதான் இருக்குங்க. பண்டிகை, பங்ஷன்னா கொண்டாட்டமா இருக்கும்" நான் சொன்னதை அவர் அசை போட்டுக்கொண்டு இருந்தார். அவரின் ஊர் ஞாபகம் வந்திருக்க வேண்டும்.
"போர்க்கு முன்னாடியே இங்க வந்துட்டீங்க, இப்ப நீங்க இலங்கை போன விசா எடுக்கனுமா, இப்ப அங்க நிலமை எப்படி இருக்கு? ஒரு அமைச்சர் கூட விடுதலைப்புலிகளோட தேவை இப்ப ரொம்ப இருக்குன்னு சொல்லிருக்காங்களே?". தோனியதை எல்லாம் சீரியஸாக கேட்டுக்கொண்டு இருந்தேன்.
"அவ்வளவு ஒன்னும் சொல்ற மாதிரி இல்லங்க. ராணுவமே ட்ரக்(drug) கொடுக்கறாங்க" "ட்ரக்கா"
"ஓமங்க.. கஞ்சா, மக்கள பயன்படுத்த வெச்சு சமுதாயத்த நாசப்படுத்தி, சீரழிஞ்சு போகட்டும்மென கவர்ன்மென்ட்டே இதை பண்ணறாங்க. அப்ப எல்லாம் ஒழுக்கமா , ஒரு கட்டுக்கோப்போடு நல்லா இருந்தாங்க" எங்கயோ இதைப்பற்றி இவர் கூறியதுபோல் படித்த ஞாபகம் இருந்தது. நம்மூரின் டாஸ்மாக்கின் சரித்திர விற்பனையும் ஒரு கணம் வந்து சென்றது.
"இலங்கை அமைச்சர் சொன்னது போல இப்ப யாரவது வழி நடத்த வாய்ப்பு இருக்குங்களா?"
"இனிமேல் அந்தமாதிரி ஒரு வாய்ப்பே வராதுங்க, பிரபாகரன் மாதிரி இன்னொருவர் கண்டிப்பாக வர முடியாது. அப்ப எம்ஜிஆர் உதவி பண்ணாங்க, ஆரம்பத்துல இந்தியாவும் பயிற்சி கொடுத்தாங்க. இனிமேல் எந்தநாடும் உதவி பண்ணமாட்டாங்க. இங்கிலாந்தும் சேர்ந்து எல்லா நாட்டோட ஆதரவோடதான அழிச்சாங்க, அப்புறம் எப்படி..." பட படவென கூறிமுடித்தவரிடம் கணத்த அமைதி. என்ன சொல்வதென தெரிவில்லை. பத்து வருடம் கழிந்திருந்தாலும் அந்த அமைதியின் வலி என்ன என்னவோ யோசிக்க வைத்தது. அவரே தொடரட்டும் என காத்திருந்தேன்.
தொடர்ந்தவரின் கடைசி வாக்கியம் பலமாக யோசிக்க வைத்தது. "தனியா ஒரு நாடு இருந்த, தமிழ்நாடும் சேர்ந்து கூட ஆட ஆரம்பிச்சிடுவாங்க என திட்டம்போட்டு பண்ணிட்டாங்க" உண்மையாகவும் இருக்கலாம். கற்பனையிலேயே கலக்கலாக இருந்தது.
#பயணங்கள்
குறள் 681
பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...
-
தமிழில் பங்குவணிகம் பங்குவணிகம் தொடர்பான தகவல்கள் மற்றும் குறிப்புகள் It is always easy to understand if we learn something in our mother-to...
-
ஈரோடு தினம் என காலையில் FM கேட்டுக்கொண்டு செல்லும்போதே காதில் விழுந்தது. கூடவே வாசலின் ஈரோடு குறித்த அனுபவம், நினைவுகளைக் கீற ஆரம்பித்...





