அதிகாரப்பூர்வமாக பெங்களூரில் மூன்றாவது
வாரம் வீடடங்கி இருத்தலில் உள்ளோம்.
மார்ச் 10 பெங்களூரின் முதல் கொரோன நபர் ( இந்தியாவின் 'Patient 51') மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த வாரத்தின் சில நாட்கள் பயத்தோடு அலுவலகம்
சென்று வந்தோம். அடுத்த திங்கள்
முதல் வீடு மட்டுமே. கர்நாடக அரசும் அதன்
பிறகு பெங்களூரை ஊரடங்கின் கீழ் கொண்டு வந்துவிடுகிறார்கள். இப்படியாக பிரதமர் ஊரடங்கை அறிவித்த 24ம் தேதிக்கு, முன் கிட்டத்தட்ட ஒருவாரம் முன்னதாகவே இங்கு வீட்டினுள்
உள்ளோம்.
தற்பொழுது இங்கு ஒரு ஆறுதல் செய்தி. முதலில் கோரோனோவுக்கு பாதிப்படைந்த 'Patient 51', 2666 பேரை மறைமுகமாகப் பாதித்ததாக கர்நாடக அரசு கூறியிருந்தனர். அவரின் மனைவி மற்றும் குழந்தையைத் தவிர வேறு
யாருக்கும் அவர் தொற்றை இதுவரை அளிக்கவில்லை.
இந்த ஆறுதல், கலவரமடைந்து இருந்த எங்களை சற்று
ஆசுவாசமடைய வைக்கிறது. இவர் பெங்களூர்
கொரோனா தொற்றுக்கு நல்லவிதமான நிகழ்தகவின் (best case) உதாரணம். ஆனால் முன்பே
கூறியது போல, தென் கொரியாவின் 'patient 31' போல மோசமான நிகழ்தகவாக (Worst case)
இருந்திருந்தால், இங்கு நிலைமையை கற்பனை செய்ய முடியவில்லை. நிலைமை மிக மோசமாக போய் இருக்கும்.
இரு வாரங்களுக்கு முன் இதனைப் பற்றி
எழுதும்பொழுது,
தமிழ்நாடு - 0
கர்நாடகா - 1
யுகே
- 396
இன்றைய நிலைமை நமக்கே தெரியும். பல மடங்காக
வேகமாக பரவி வருகிறது.
தமிழத்தில் நேற்றும், இன்றும் இரு மடங்குகளாக
அதிகரித்துள்ளது. இத்தோடு முடிந்துவிடக் கூடாதா என்று எண்ண வைக்கிறது.
கூடவே அச்சத்தையும் விளைவிக்கிறது. திடீரென அதிகப்படியான எண்ணிக்கையில் ஈரோட்டுடன் நேற்று திருநெல்வேலியும், நாமக்கலும் சேர்ந்து கொண்டது. இன்று கோவையில் சட்டென அதிகரித்துள்ளது. இந்திய அளவில் தமிழ் நாடு மூன்றாம் இடத்துக்கு
நகர்ந்துள்ளதும் அதிர்ச்சி.
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம், நாமக்கல், திருநெல்வேலியில் பரவ மிக
முக்கிய காரணமாக டெல்லியில் நடைபெற்ற தப்லிக் மாநாடு என்பது மேலும் அதிர்ச்சித்
தகவல். இந்த மாநாட்டில் கலந்து
கொண்டவர்கள் கணிசமாக ஆந்திரா , தெலுங்கானாவிலும் கொரோனா
பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார்கள் என இங்குள்ள நண்பர்கள் கூறுகிறார்கள். இந்த இக்கட்டான நேரத்தில், மார்ச் முதல்
வாரத்தில் நடைபெற்ற இந்த
மாநாட்டிற்கு எதற்காக அனுமதி அளித்தார்கள்
என்பது தெரியவில்லை.
பிரதமர் அறிவித்த ஊரடங்கை
ஒருவாரம் கழித்து உற்று நோக்கினால், இதுவும்
டிமானிடைசேஷன் போல பின் விளைவுகளை யோசிக்காமல் எடுத்து விட்ட முடிவோ என்றும்
தோன்றுகிறது. பல இடங்களில் கட்டிட மற்றும்
கூலி தொழிளார்கள் உண்ண உணவு இல்லாமல், சொந்த ஊருக்கு நடை பயணமாக
திரும்பும் காட்சி கலங்கடிக்கிறது. குழந்தைகளுடன் நடந்து வரும் பெண்கள், நம் நாட்டின்
ஏற்ற தாழ்வை பொட்டில் அடித்தாற்போல உணர்த்தி விடுகிறார்கள். இந்த மனிதர்களுக்கும் பயத்தைப் போக்கி அங்கங்கு இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளை உதவ சொல்லி கொஞ்சம் மனிதத்தையும் அரசு காட்டி
இருக்கலாம். பயப்படாமல் இருக்க இந்த விதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்
என தெளிவாக தெரிவிக்கலாம்.
தமிழக அரசு இந்த விஷயத்தில் மிகத்தீவிரமாக வேலை பார்த்துக்கொண்டு
இருக்கிறார்கள். பாராட்ட வேண்டிய ஒன்று. சமூக வலைத்தளங்களை நல்ல விதமாக பயன்படுத்தி
மாவட்ட ஆட்சியருக்கு நேரடியான உத்தரவுகள்
நடக்கிறது. கூடவே வேறு மாநில
முதல்வர்களுக்கும், அங்கங்கு தவிக்கும் தமிழ் மக்களைக் காக்க நடவடிக்கை
எடுக்கிறார்கள். கொரோனாவிற்கு எதிரான
போரை வழி நடத்தும் மருத்துவர்களின் பணியைப் பற்றி கூறத் தேவையில்லை. அத்தோடு காவலர்களின் பணி மகத்தானது. ஊரடங்கை மீறுவோருக்கு தோப்புக்கரணம், முட்டிங்கால், கை நீட்டி
வைத்தல், உறுதிமொழி எடுக்க வைத்தல் என
வித விதமான தண்டனைகள் பள்ளி காலத்தை நினைவு படுத்துகிறது. விதிமீறும் பொது மக்கள் சிலரின் ஆணவப் பேச்சுக்கள்
அவர்களை லாடம் காட்டினால் தான் என்ன என
நமக்கே பொறுமை போகிறது.
இதில் கவலை கொள்ளும் விஷயமாக
இருப்பது ஒத்துழைப்பு கொடுக்காமல்
இருக்கும் மக்கள்.
சென்ற ஞாயிறு இறைச்சிக்கடையில்
குழுமியிருந்த எதனை உணர்த்துகிறார்கள் என்று தெரியவில்லை இன்னும் இவர்கள்
கொரோனாவின் 'பிரியத்தை' உணர்ந்ததாக தெரியவில்லை.
இந்தியாவின் கொரோன புள்ளி விவரத்தைப்
தற்பொழுது பார்க்கும் பொழுது அது 4, 5 மையப்
புள்ளிகளை உருவாக்கியுள்ளது. சென்ற
வாரத்தில் கிளஸ்டர் எதுவுமே இல்லாமல்
இருந்தது ( பார்க்க சுட்டி).
மேலும் மையப்புள்ளிகள் உருவாகாமல் இருக்க நம்மால் இயன்றது வீட்டில் அடங்கி இருந்து முழு அளவில் அரசுக்கு ஒத்துழைப்பு தருவது மட்டுமே. இது மட்டுமே நம்மால் அரசுக்கு தற்போதைக்கு உதவ முடியும்.
இதே நேரத்தில் உலகெங்கும்
அடுக்கடுக்காக நோய்த்தொற்று பரவி
வருகிறது. அப்பொழுது களத்தில் இல்லாத அமெரிக்காவை
இப்பொழுது கொரோனா மையம் கொண்டு உள்ளது.
இத்தாலியில் இப்பொழுது இறங்கு முகம்.
சீனா நான்கு மாத கடும்
போராட்டத்திற்குப் பிறகு எந்த தொற்றும் இப்பொழுது இல்லை என அறிவித்து அவர்களின் வுகாண் நகரத்தின் வௌவால்
மார்க்கெட்டை திறந்திருக்கிறது. சைனா
வைரஸ் என்று கூறிக்கொண்டு இருந்த டிரம்ப் கொரோன
வைரஸ் என கூற ஆரம்பிக்கிறார்.
இவர்களின் ஆடுபுலி ஆட்டம்
நமக்குத்தான் புரிபடவில்லை.
கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு நாட்கள்
இருக்கும் என்பது யாருக்குமே தெரியவில்லை.
உலகின் பொருளாதாரம் எவ்வளவு மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து
மீண்டு வரும் என்பது யாருக்கும் புரியாத ஒன்று.
ஜெர்மனியின் நிதியமைச்சர் இதன்
காரணமாக மன உளைச்சல் அடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஒவ்வொரு அரசாங்கமும்
இந்த நேரத்தில் எடுக்கும் முடிவுகள், அதனைப் பற்றிய விளைவுகள் பொருளாதார ரீதியாக
தெரிய சில மாதங்கள் ஆகும். அவற்றை நாம்
பிற்காலங்களில் வரலாறாக மட்டுமே பேச முடியும்.
இப்பொழுது நாம் பத்திரமாக இருப்பது மட்டுமே நம் கையில்.
இன்னும் சற்று கூர்நோக்கிப் பார்த்து
இன்னும் ஒரு சில மாதங்களுக்கு நம் வாழ்விற்க்கு தேவையான பொருள் இருப்பை
வைத்துக் கொள்வது அவசியம். சிக்கனமான
நடைமுறைகளைக் கையாள வேண்டும். இதன்
பாதிப்பினால் ஆறு மாதம் கழித்து என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. பொருளாதார வீழ்ச்சியால் என்ன மாதிரியான
பின்விளைவுகள் வரும், அது ஒவ்வொருவருக்கும் பாதிப்பை எப்படி ஏற்படுத்தும் என்பது நம்மால்
இப்பொழுது எண்ணிப் பார்க்க முடியாது.
இதையொட்டி நேற்று முன்தினமும் ட்விட்டரில் பஞ்ச காலத்தைப் பற்றிய ஒரு
விவாதம் சென்று கொண்டிருந்தது. விவசாயம்
மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த அன்றைய காலத்தில் பஞ்ச நேரங்களில் கற்றாழை
கிழங்குகளையும், மரவள்ளிக்கிழங்கும் தேடி எடுத்து மக்கள் சாப்பிட்டது வரலாறு.
கண்டிப்பாக விலைவாசி ஏறலாம்.
பொருள் தட்டுப்பாடு வரலாம்.
இன்னும் மூன்று மாதங்களுக்கான தேவையான அத்தியாவசியமான பொருட்களை அவரவர்
அளவில் தற்காத்து வைத்துக் கொள்ள வேண்டும் என கருதுகிறேன். இப்போதும், இன்னும் கொஞ்ச காலத்திற்கும் மினிமலிசம் எனப்படும் எளிய வாழ்க்கை
முறைக்கு பழகிக்கொள்தல் நலம். இப்பொழுது
இருந்தே அதற்கான ஆயுதத்தை மேற்கொள்ள வேண்டும்.
இவை எப்படியாக இருப்பினும் தற்போதைய
நமது நிலைமை மனதினை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது மட்டுமே. பலரும் காலை, மாலை மட்டும் ஒரு பத்து, இருபது
நிமிடங்கள் செய்தியை பார்க்க பரிந்துரைகின்றனர்.
திரும்பத் திரும்ப கொரோனாவில்
உழன்று கொண்டிருந்தால், தேவையில்லாத மன உளைச்சல்
வரும் என்கிறார்கள். குறிப்பாக
குடும்பம் இல்லாமல் தனியாக இருக்கும் பலர்.
- யாராவது சில மக்களோடு தினமும் பேசுங்கள்; சும்மாவேனும் பேசுங்கள்; அது உங்களது மன உளைச்சலில் இருந்து விடுதலை கொடுக்கும். அது உங்கள் நண்பர் ஆகவும் இருக்கலாம், தூரத்து உறவினர் ஆகவும் இருக்கலாம். எப்பொழுதோ சந்தித்த நண்பராகவும் இருக்கலாம்.
- இந்த நேரத்தை குடும்பத்தோடு, குழந்தைகளோடு எப்படி செலவிட வேண்டும் என்பதை திட்டமிட்டு செயல்படுத்தலாம்.
- புதிதாக இதுவரை செய்யாத ஒரு வேலையை செய்யலாம்.
- தள்ளிப்போட்ட சில வேலைகளை முடிக்கலாம்.
இன்னமும் 21 நாட்களுக்கு பிறகு கோடை
விடுமுறை கிடைக்கும் எங்காவது செல்லலாம் என்று நினைத்திருப்போர் தயவுசெய்து அமைதி
காக்கவும். நமக்கு இந்த வருட கோடை விடுமுறை என்பது கிடையாது. குழந்தைகளை பதட்டப்படாமல் வீட்டுக்குள்ளேயே
வைத்திருந்து அவர்களை முறைப்படுத்துவது நமது கையில் தான் உள்ளது. இது ஒரு இக்கட்டான தருணம். அரசுக்கு மட்டுமல்ல, ஒவ்வொருவருக்கும் இந்தத் தருணத்தை கடப்பது அவரவர்களிடம் மட்டுமே
உள்ளது. இதையும் தைரியமாக கடப்போம்.
No comments:
Post a Comment