உகாதி மற்றும் தெலுங்கு வருடப் பிறப்பில் ஆரம்பித்தது 21 நாள் ஊரடங்கு உத்தரவு. விஷு மற்றும் தமிழ் வருடப்பிறப்பில்(!?) மீண்டும் தொடர்ந்து கொண்டுள்ளது. இந்த இடைவெளியில் கொரோனா இந்தியாவில் மெதுவாக ஆரம்பித்து, இரண்டாவது ஊரடங்கில் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டுள்ளது. இப்பொழுது தான் மூன்றாவது ஸ்டேஜ் அடைந்துள்ளதாக நினைக்கிறேன். எண்ணிக்கை தினமும் மேல்நோக்கியே உள்ளது. இதே நிலைமை இன்னும் பத்து நாட்களுக்கும் நீடித்தால், மே 3-ல் ஊரடங்கு உத்தரவை, மத்திய அரசு தளர்த்துவது பெரும் கேள்விக்குறி. தளர்த்தினாலும், பெரு மற்றும் சிறு நகரங்களில், சகஜ நிலை இருக்காது என்று தான் தெரிகிறது.
தமிழகத்தில் எண்ணிக்கை அரசின் அறிவிப்பின் படி குறைந்தும் வருகிறது. அதிலும் நோய் பூரணமாக குணமாகி வெளியே வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி நம்பிக்கையை வளர்ந்துள்ளது. ஆனாலும், மருத்துவர்கள் பாதிப்படைந்து இறப்பதும், அவர்களின் அடையாள போராட்டமும் யோசிக்க வைக்கிறது. கூடவே சத்யம் தொலைக்காட்சி அதன் ஊழியர்கள் பாதிப்படைந்ததால் ஒளிபரப்பை தற்காலிகமாக நிறுத்தி உள்ளதையும் உற்று நோக்க வேண்டும். கூடவே முதல் கட்டமாக ரெட் அலர்ட்டில் வந்த ஈரோட்டிலும் அரசு அதிகாரிகளின் முனைப்பால் மிக நன்றாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இன்று அது ஆம்பர் பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடகாவில் பெங்களூரிலிலும் அவ்வளவாக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. நான் எதிர்பார்த்த அளவில் பரவல் இல்லை என்பது சற்று ஆறுதல்.
அமெரிக்கா, ஸ்பெய்ன், பிரிட்டன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் நிலைமை மிகவும் மோசமாக சென்று கொண்டிருக்கின்றது. இறப்பு விகிதமும் அதிகம். ஒரு குடும்பத்தில் ஆறு பேறும் தாத்தா பாட்டி, அப்பா அம்மா குழந்தைகள் என மொத்தமாக உயிரிளந்தது அதிர்ச்சி அளிக்கிறது.
இதற்கு காரணமாக சின்னம்மை, பெரியம்மை மற்றும் சில தடுப்பூசிகளை, நாம் இன்றும் போட்டுக்கொண்டிருப்பது காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் சமூக வலைத்தளங்களில் பேசிக்கொள்கிறார்கள். வளர்ந்த மற்றும் மேற்கத்திய நாடுகளில் இதுபோன்ற நோய்களை முன்னரே நிரந்தரமாக தடுத்துவிட்டதால், இந்த தடுப்பூசிகளை போட்டுக்கொள்வதில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. கூடவே மலேரியாவிற்கான மருந்தினை, அமெரிக்காவிற்கும், பிரேசிலுக்கும் உதவும் என்று அந்தந்த நாட்டின் அதிபர்களும், பிரதமர்களும் நம்மிடம் மிரட்டியும் கெஞ்சியும் வாங்குகிறார்கள். தடுப்பூசிக்கான ஆராய்ச்சி இன்னும் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. கண்டுபிடிக்கப்பட்டவுடன், வளர்ந்த நாடுகள் ராபிட் டெஸ்ட் கிட்டை வழிப்பறி செய்தது போல, இதனையும் எடுத்துக்கொண்டு, அது நம் கையில் கிடைக்க சில மாதங்கள் ஆகலாம். அந்த கிட், சரியாக சோதனை செய்யவில்லை என்பது வேறு விசயம்.
இதுவரை நாம் ஊரடங்கினால் ஒழிந்து கொண்டு இருந்ததால், இப்பொழுது இதன் வேகம் குறைவாகவும் இருக்கலாம். மீண்டும் இதுபோல ஒரு அலை கூட அடிக்கலாம். இந்த கண்ணாமூச்சி விளையாட்டு இன்னும் எவ்வளவு காலம் தொடரும் என்பதை யாரும் கணிக்க இயலவில்லை. கண்டிப்பாக மற்ற வைரஸ்களைப்போல கொரோனாவோடு தான் வாழப் பழகுவோம் நேர்மறையாக.
இந்த காலகட்டம் எப்படி சென்று கொண்டிருக்கின்றது?
இந்த ஊரடங்கு காலகட்டம் குழந்தைகளுக்கு எப்படி சென்று கொண்டிருக்கின்றது?
முதல் ஒரு வாரம், இந்த பதைபதைப்பு ஒரு பக்கம் நமக்கு இருந்தாலும், குழந்தைகளுக்கு விடுமுறை மனநிலை தான். குழந்தைகள் அவரவர் போக்கில் டிவியில் மூழ்கினர். டிவியில் இருந்து அவர்களை விடுவிக்க சற்று படாத பாடு பட வேண்டியதாக இருந்தது. ஒரு பொன்னான(!) நாளில், அவர்களின் செல்ஃப்களில் இருந்த சென்ற வருட புத்தகங்களை எடுத்துவிட்டு, அடுத்து வருடத்திற்கு தயாராவதற்கு, அதனை சுத்தம் செய்ய ஆரம்பித்தோம். பள்ளி மீண்டும் எப்பொழுது ஆரம்பிப்பார்கள் என்பது கொரோன விட்ட வழி தான். இருந்தாலும், நமக்கு வளையும்போது கடமையை செய்துவிட வேண்டும். அந்த சுரங்கத்தில்(!) இருந்து ,பழைய உண்டி ஒன்று சற்றே கணமாகக் கிடைத்தது. திறந்து சில்லறைகளை எண்ணிப் பார்த்ததில் கணிசமாக கிடைத்தது 116 ரூபாய்.
"என்கிட்ட இந்த காயின்ஸ் எல்லாமே குடுடா, உனக்கு அதுக்கு பதிலா 100 ரூபா நோட்டு தாறேன். நீங்க ஒரு நாளைக்கு மூணு மணி நேரம் மட்டும் டிவி பாருங்க.. உங்களுக்கு தினமும் ஒரு ரூபா தாறேன்... உண்டில போட்டு வைங்க " எப்படியோ இந்த யோசனை வந்தது.
கேட்டதும், உடனே தந்து விடுவார்களா என்ன? அதிலும் டிவியில் வேற கைய வெச்சாச்சு. கொஞ்ச நேரம் விளக்கி, அவர்களின் 100 ரூ நோட்டும், அதிலேயே இருக்கும் என கூற வேண்டியதிருந்தது. ஒருவழியாக சமாதானமாகி அந்த சில்லறைகளை கொடுத்து நோட்டை வாங்கி அதனுள்ளே போட்டதும் திருப்தி அடைகிறார்கள். இதுல இன்னொருவருக்கு பழைய உண்டியில் ஒன்றுமே இல்லாததால், பஞ்சாயத்தைத் தீர்க்க சும்மாவேனும் கொடுக்க வேண்டி இருந்தது.
அந்த மூன்று மணி நேர கணக்கு என்னவென்றால், மூன்று வேளையும் அரை மணி நேரம் முதல் முக்கால் மணி நேரம் வரை டிஸ்னி கிட்ஸ் டிவி யில் வரும் "லிட்டில் சிங்கம்" எனும் அரை மண்டையன் தான் "ஆத்தா.. மாகி.. சதக்களி" என்று அவர்களுக்கு சோறு ஊட்டுவான்.
'சரி, இதையே அடுத்த கட்டத்துக்கு நகர்த்தலாம்' என்று நினைத்து, அவர்கள் சில செய்யாத காரியங்களையும் பட்டியல் இட ஆரம்பித்தோம். ஒவ்வொரு காரியத்திற்கும் ரூபாய் கொடுத்தால் கம்பெனிக்கு கட்டுபடியாகாது. இங்கு தான் இந்த சூப்பர் மார்க்கெட் தந்திரம் உதவியது.
"அஞ்சாறு பாயிண்ட் சேர்த்தால் ஒரு ரூபாய் வெச்சுக்கலாமா?" .என்றதும் ஏதோ விளையாட்டு என்று நினைத்து அவர்களாகவே மகிழ்ச்சியுடன் 'சரி' என்றார்கள். பின்னாடி வரும் விளைவுகள் அவர்களுக்குத் தெரியவில்லை. "காலைல எந்திரிச்சு, மூஞ்சி கழுவி, பிரஸ் பண்ணி பெட்சீட் மடிச்சு போட்டீங்கன்னா, ஒரு பாயிண்ட்". எனக்கே, 'இது எல்லாத்துக்கும் ஒரு பாய்ண்டா தானா?' என்று தான் இருந்தது. அவர்களே சரி என்று விட்டார்கள்.
"அப்புறம் பூச்செடிக்கெல்லாம் தண்ணி ஊத்தணும். அதுக்கு ஒரு பாயிண்ட். கழுவிய பாத்திரமெல்லாம் அங்க அங்க எடுத்து வச்சீங்கன்னா அதுக்கும் ஒரு பாய்ண்ட்" நம்ம டிபார்ட்மெண்ட்டெல்லாம் நைசாக சேர்த்துக் கொண்டே வந்தேன். "அப்புறம் அம்மாவுக்கு என்ன ஹெல்ப் பண்ணுனாலும் ஒரு பாயிண்ட்" (பஞ்சாயத்து வந்துடக்கூடாது).. "நீயே தூங்க போறதுக்கு முன்னாடி எவ்வளவு பாயிண்ட்னு சொல்லிரு." இருவரும் ரொம்பவும் உற்சாகம் ஆகிவிட்டார்கள்.
இரண்டு மூன்று நாட்கள் சென்றது. அவர்களே இரவு எத்தனை புள்ளிகள் எடுத்தார்கள் என்பதைக் கூறினர். அவர்கள் சொல்வதைக் கொண்டு அந்தந்த நாட்களுக்கான 1 ரூபாய் கொடுத்தேன். புள்ளிகள் சற்று கூட குறைய இருந்தாலும் கொடுத்தேன். இன்னும் இதை செம்மைப்படுத்த, "ஒரு நோட்ல உங்களுக்கு எதற்கெல்லாம் பாயிண்ட் வேண்டும் என்று யோசிக்கிறயோ, அதெல்லாம் வரிசையா எழுதுடா"
ஒரு பத்து பன்னிரண்டு சிறு சிறு வேலைகளை எழுதி வைத்துக் கொண்டார்கள். அதில் குறிப்பாக டிவி நேரத்தை குறைத்தோம். "டிவி ஒன்றரை மணி நேரம் பாத்தீங்கன்னா.. 2 பாயிண்ட். மூன்று மணி நேரம் பாத்தீங்கன்னா ஒரே பாயிண்ட் தான்... அதுக்கு மேல போயிருச்சுனா பாயிண்ட் இல்லை, சரியா?" ரெண்டு பாயிண்ட் கிடைப்பதால், சரி என்பதற்கான தலையாட்டல் உற்சாகமாக வந்தது.
லிஸ்ட் போட்ட மறுநாளே அவர்களைப் பொறுத்த அளவில் சிக்கல். "அப்பா, இன்னிக்கு நான் 8 பாயிண்ட். 6 பாய்ண்ட்டுக்கு ஒரு ரூபா. மீதி ரெண்டு பாய்ண்ட்ட என்ன பண்ணலாம். அதுக்கு எவ்வளவு இன்னிக்கு?" என்றாள். " மீதி பாயிண்ட நாளைக்கு சேர்த்திக்க, அவ்வளவு தான்"
இப்படியா ஆரம்பித்து நல்லபடியாக சென்று கொண்டிருந்தது. டிவி முற்றிலும் குறையவில்லை என்றாலும், தொடர்ந்து மணிக் கணக்காக பார்ப்பது குறைந்து விட்டிருந்தது. சில உருப்படியான வேலைகள் நடக்க ஆரம்பித்தது.
இரண்டு மூன்று நாட்கள் கழித்து சாப்பாட்டு நேரத்தில் டிவி பார்ப்பதை நிறுத்த இன்னொரு புள்ளி கொடுத்தோம். சில நாட்கள் கதைகள், சில நாட்கள் அட்லாஸ் விளையாட்டு என ஓடும். அட்லாஸ் என்பது "வாட் பிக்சர்" போல ஊர்களின் பெயர்கள். முடியும் எழுத்தில் தொடர வேண்டும். இது கொஞ்சம் அனைவருக்கும் பொதுவாக இருந்தது. இப்போதைக்கு சினிமா பெயர்கள் அவ்வளவாக அவர்களுக்குத் தெரியாது.
அப்படித்தான் அன்று கொள்ளுப்பருப்பு.
"சரி வாங்க.. தட்டெல்லாம் எடுத்து வைங்க.. டிவி பாக்கமாக சேர்ந்து சாப்பிடுவோம்"
"ஓகே" என வந்து சேர்ந்து விட்டார்கள்.
"இந்த கொள்ளு பருப்ப எப்படி சாப்பிடனும் தெரியுமா?"
" "
"சோறு போட்டு.. அதுமேல கொள்ளுப்பருப்பு போட்டு.. நடுவுல ஒரு பெரிய குழி பண்ணனும். குழி நம்பர வரைக்கும் நல்லெண்ணெய் ஊத்தி, நல்லா பெசஞ்சுக்கணும். இப்ப வாய்க்கு அளவா உருண்டை பிடிச்சு வெச்சுக்கணும். இப்போ ஒரு உருண்டை எடுத்துக்குங்க. இந்த உருண்டைய யாருக்குக் குடுக்கலாம்?"
" " அமைதி
"உங்களுக்கு யாரு ரொம்ப பிடிக்கும்?"
"தியா"
"சரி, தியாவுக்கு ஒரு ஆப்பு போட்டுக்குங்க"
"சென்னைல தான தியா இருக்கா... எப்படி கொடுக்கறது?" இந்தமாதிரி லாஜிக்கானா கேள்வியெல்லாம் நாம் கேட்டிருப்போமா? எனத் தெரியவில்லை.
"அவுங்க பேர சொல்லிட்டு நாம போட்டுக்கணும், அது அவங்களுக்கு போய் சேர்ந்துடும்"
"ஓகே"
"ஆஆப்"
ஒருவழியாக முதல் உருண்டையின் சுவையை உணர்ந்து, மெதுவாக மென்று முழுங்க ஆரம்பித்தார்கள். இதற்கிடையில் எனக்கு, பசி தாங்க முடியாமல் இன்னோர் உருண்டையும் நைசாக போட ஆரம்பித்தேன்.
"அப்புறம் அடுத்த வாய் யார்க்கு? "
"அம்மாக்கு"
"இங்க இருக்கறவங்களுக்கு கொடுக்க தேவையில்லை, சரி இருந்தாலும் பரவால்ல, ஆஆப் போட்டுக்குங்க"
அடுத்தடுத்து அப்பா, அம்மாயி, ஆயா, தாத்தாக்கள், ஜனனி அக்கா, அத்தை, மாமா என உருண்டைகள் காலி ஆகி இருந்தது.
கொரோனா ஊரடங்கில் இந்த பாய்ண்ட் சிஸ்டம், கொள்ளுப் பருப்புடன் நன்றாகவே வேலை செய்ய ஆரம்பித்துள்ளது. எப்பொழுதுமே சாப்பாட்டுத் தட்டில் ஒரு வாய் சோறு வைத்து விடும் பழக்கமும் உண்டு. சமுத்திரக்கனியாக மாறி அதற்கும் விளக்கம் கொடுத்து அதுவும் குறைந்து உள்ளது. இதற்கு முன்பு சோறு ஊட்டிக் கொண்டிருந்த அந்த "லிட்டில் சிங்கம்" மற்ற நேரங்களுக்கு அளவாக சென்று விட்டான். சாப்பிட்டு முடித்துவிட்டு "அப்பா, காத்தால கோட்டா ஹால்ப் ஏ ஹவர்க்கு அந்த அரை மண்டையன பார்த்துக்குறோம்" என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
அவர்களாகவே சாப்பாட்டுத் தட்டை எடுத்து வைத்துக்கொண்டு கதைபேச, விளையாட, ஏதேனும் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளார்கள். கூடவே டிவிக்கான நேரம் குறைந்து விட்டதால் சமையல் உதவிக்கும்(?) வந்து விடுகிறார்கள். ஒவ்வொரு வேளையும் வேறு வேறு விதமாக அவர்களுக்கு சென்றுகொண்டு உள்ளது, கூடவே நமக்கும். சின்னச்சின்ன மாற்றமும், முயற்சியில் தான் உள்ளது. ஊரடங்கு உங்களுக்கு எப்படி?
No comments:
Post a Comment