Friday, March 13, 2020

பெங்களூரில் கொரோனா



எங்கயோ அது சீனாபக்கம், இத்தாலிப் பக்கம் என்று சொல்லிக்கொண்டிருந்த கொரோனா, பெங்களூரில் எங்கள் பக்கத்துக்கு ஊருக்கும் வந்தேவிட்டது. அது நான் முன்பு வசித்த பகுதி. அமெரிக்காவில் இருந்து துபாய் வழியாக வந்தவர், இங்கு இறக்குமதி செய்துவிட்டார். அவரது மனைவிக்கும், அவரின் மகளுக்கும் உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள். ஆனால் COVID-19 கண்டறியப்படும் முன் அவர் அலுவலகமும் சென்றுள்ளார். இப்பொழுது அவரின் அலுவலகத்தின் அதே தளத்தில் வேலை பார்த்த அனைவரும், வீட்டிலிருத்து வேலை பார்க்க அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். அடுத்த 10 நாட்களுக்கு அவர்கள் தீவிர கண்காணிப்பில் இருக்கப் போகிறார்கள். அலுவலகம் மட்டுமல்லாமல், அவரது அடுக்ககம், அவர் சென்ற இடங்கள், சூப்பர் மார்க்கெட் என, கிட்டத்தட்ட 2666 பேரை அவர் மறைமுகமாக பாதித்திருக்கலாம் என்று கர்நாடக அரசு கூறுகிறது.
இந்த எண் தான் சற்று அடிவயிற்றில் கலவரத்தை உண்டு செய்கிறது. சற்று யோசிக்கவும் வைக்கிறது. 2666 என்ற எண் எனக்கு சற்று குறைவாகவே தெரிகின்றது. உண்மையான எண் சற்று கூடுதலாகவும் இருக்கலாம். அவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணி நடப்பதாக அரசு கூறியுள்ளது. கொரோனா அவர்களில் ஒருவர்க்கு தொற்றி இருந்தாலும், அவர்கள் மக்கள் நெருக்கமான இடங்களுக்கு சென்றாலும் அது மேலும் விரிவடையும்.
அந்த சிறுமியும், அவருக்கும் COVID-19 வைரஸ் பாதிப்பு உள்ளது என கண்டறியும் முன், பள்ளிக்கு சில நாட்கள் சென்றிருக்கின்றார். இப்பொழுது அந்தப் பள்ளி முழுவதும் மூடப்பட்டுள்ளது. அதில் படிக்கும் 1700 மாணவ மாணவிகளும், பணியாற்றும் 300 ஆசிரியர்களும் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களில் சிலருக்கு பரிசோதனை ஆரம்பித்துள்ளதாம். இது ஆரம்பம் என்றே நினைக்கிறேன். முடிவாக இருந்தால் மகிழ்ச்சி.
எப்பொழுதும் இன்ச் இன்சாக நகரும் பெங்களூரின் போக்குவரத்து கடந்த சில நாட்களாக வெகுவாக குறைந்துள்ளது. வேலை நிறுத்தமான நாள் போல சாலைகளும் சற்று வெறிச்சோட ஆரம்பித்துள்ளது. பல அலுவலகங்களும் வீடுகளில் இருந்தே வேலை செய்யப் பணித்துள்ளார்கள்.
கடந்த திங்களன்று 5 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளித்தார்கள். செவ்வாய் 5ம் வகுப்பு வரையான குழந்தைகளுக்கும் அதேபோல காலவரையற்ற விடுமுறை விட்டு விட்டார்கள். கூடவே பல பள்ளிகளில் இந்த வருடம் 5ம் வகுப்பு வரையான சிறுவர்களுக்கு தேர்வு இல்லை என்ற அறிவிப்பும். இதுவரை இந்த கல்வி ஆண்டில் நடந்த, எழுதிய தேர்வுகளை எடுத்துக்கொண்டு மாணவர்களை அடுத்த வருடத்திற்கு தேர்ச்சி செய்ய உள்ளார்கள். குறைவான மதிப்பெண் எடுத்த தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மட்டும் மே மாத வாக்கில் தேர்வு நடைபெறும் என கூறுகிறார்கள்.
இங்கு மூன்று மாதங்கள் விடுமுறை அளித்த காரணத்தினால் பெங்களூர் மக்கள், குறிப்பாக இருவரும் பணிக்கு செல்லும் பெற்றோர்கள், எப்படி குழந்தைகளை சமாளிப்பது? என்ன செய்வது? என்ற யோசனைகளில் இருக்கின்றார்கள். அதனையொட்டி நகைச்சுவைத் துணுக்குகளும் வந்துகொண்டிருக்கின்றன. 'அடுத்த மூன்று மாசம் குழந்தைகள் செய்யும் இம்சைகளை பொறுக்க முடியாமல் அம்மாக்களே மருந்தினை கண்டு பிடித்து விடுவார்களாம்'. ('சரி அப்ப நீங்க மிக்ஸர் சாப்பிட போறீங்களா?' என்பது ஆண்களுக்கான பெண்களின் கேள்வி). நகைச்சுவை கடந்து உற்று நோக்கினால், சற்று சிரமம் தான்.
நண்பர் "என்ன செய்றதுன்னே தெரியலை?" என்றவரிடம் "குழந்தைகளை ஊருக்கு அனுப்பிடுங்க" என்றேன்.
"நாங்க இதுவரைக்கும் தனியா அனுப்பினதே இல்லை" என்று புலம்ப ஆரம்பிக்கிறார். பிரிட்ஜில் வளர்த்தப்பட்ட குழந்தைகளின் நிலையும் இது தான்.
மற்ற வகுப்புகளுக்கும் தேர்வை உடனடியாக நடத்தி ஒரு வாரத்தில் முடிக்க முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகிறது. பொதுத் தேர்வு மாணவர்களுக்கு விடுமுறையை விட்டுள்ளார்கள். தேர்வு நாள் அன்று வந்தால் போதுமானதாம். கூட்டம் கூடும் விழாக்களை கர்நாடக அரசு தடை செய்துள்ளதாகவும் தெரிகிறது.
எது எப்படி இருந்தாலும், வழக்கமான கோடைகால விடுமுறை போல இந்த கோடை விடுமுறை இருக்க வாய்ப்பில்லை. சுற்றுலா, சொந்தங்களின் சந்திப்பு, பயணம் இவை இல்லாமல் அவரவர்களின் வீட்டில் தான் அடைபட்டு இருக்க முடியும். வழக்கமாக வெளியில் சுற்றிக் கொண்டிருப்பது போல் இந்த வருடமும் இருக்கமுடியாது என்பது நன்றாகத் தெரிகிறது. இதுவரை நாம் இந்தமாதிரியான சூழலைக் கடந்ததில்லை என எண்ணுகிறேன்.
பல நாடுகளுக்கும் பரவி உள்ளதால், நேற்று WHO(World Health Org) இதனை தொற்று நோயாக அறிவித்துள்ளது. சீனாவின் மருத்துவர் இது அனைத்து நாடுகளும் இணைந்தால் ஜூன் மாத வாக்கில் காட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்கிறார்.
எப்படி உள்ளது?
கோரோனா பற்றிய செய்திகளை, வீடியோக்களை பார்த்துக் கொண்டு வரும்பொழுது, இது பற்றிய வீடியோ பிபிசியில் கிடைத்தது. சீனாவின் 'வுகன்' நகரத்தில் வாழும் பிரிட்டிஷ் ஒருவரை பிபிசி பேட்டி கண்டு வெளியிட்டுள்ளது. இளம் வயதில் இருக்கும் இவர் இதிலிருந்து மீண்டு வந்தவர். "வழக்கமாக ஆரம்பித்த இருமல் மற்றும் சளி இரண்டு நாட்கள் கழித்து சரியானது போல இருந்தது. அதன் பிறகு மூச்சுத் திணறல் ஆரம்பம். அது சற்றே பயப்படுத்தியது. நிமோனியா வந்தபோது இருந்ததைப் போல 20% மட்டுமே மூச்சு விட முடிந்தது"
கலகலப்பான மக்கள், பரபரப்புடன் இருக்கும் 'வுகன்' நகரம் வெறிச்சோடி கிடப்பதாக கூறுகிறார். குறிப்பாக தனிமை அவரை கொடுமைப்படுத்தியதாக கூறியிருந்தார். நோய்வாய்ப்பட்ட நேரத்தில் அவர் படித்துக் கொண்டும இருந்தாலும், வெளியுலகத் தொடர்பு சமூக வலைத்தளங்களின் மூலம் இருந்தாலும் அந்த நேரத்தில் தனிமை மிகவும் கொடுமையானது என்கிறார். நாடு கடந்து நாடு செல்பவர்களுக்கு, அங்கு நோயினால் பாதிப்பு இருந்தால், அது மிகவும் கொடுமையான உணர்வுதான்.
யூகேவில் 596 பேர் பதிப்படைத்துள்ளனர். இது இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளது. அங்கு வழக்கம் போல 'பாரசத்தமால்' மாத்திரை கொடுத்து அனுப்ப மாட்டார்கள் என்று நினைக்கிறேன். யூகே தமிழ்நாடு போன்ற மக்கள் தொகை கொண்ட, கிட்டத்தட்ட அதே பரப்பளவு கொண்ட ஒரு நாடு. தமிழ் நாட்டில் இருந்த ஒரே ஒரு கொரோனா எண்ணிக்கையும் முறியடிக்கப்பட்டு குணமடைந்துள்ளார். என்னதான் ஊழல் என்று நாம் நம்மூரை கிண்டல் செய்து மட்டம் தட்டிக் கொண்டு இருந்தாலும், இந்த நேரங்களில் தீயாக வேலை பார்த்து விடுவார்கள். ஒரு விஷயம், யூகேவில் வரும் எண்ணிக்கை உண்மையாக இருக்கும். ஆனால் நம்மூரில் நம்ப முடியாது. இருப்பினும் தமிழ்நாட்டில் பயப்படும் படியான சூழல் இல்லை எனலாம். சற்று பயம் கொள்ள வைப்பது பெங்களூரில் இருக்கும் தற்போதைய நிலை.
முன்னெச்சரிக்கை :
சமீபத்தில் சிக்கன் குனியாவின் தூரத்து சொந்த வைரஸ் போன்ற ஒரு காய்ச்சலால் பாதிப்படைந்திருந்தேன். அதற்கான காரணம் என்ன என்று பார்த்தால், முன்னெச்சரிக்கை இல்லாததே. வழக்கமாக பாதிப்படைந்தவர்களை பார்க்க செல்லும் பொழுது நாம் வாய்க்கூடு போட்டுக்கொள்வதில்லை அல்லது பாதிப்படைந்தவர்களும் போட்டுக்கொள்வதில்லை. "அட, நமக்கென்ன வரப்போகுது" என்ற அசால்ட்டான எண்ணம் அல்லது சங்கடமாக இருக்கும் என்பதாகவும் இருக்கலாம். அந்த நேரத்தில் மருத்துவமனைக்கு தெரிந்தவர்களை பார்க்க வரும் 99% நம் மக்கள் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் தான் செல்கிறார்கள். இது போன்ற முன்னெச்சரிக்கைகளில் நாம் பின் தங்கியே உள்ளோம் என நினைக்கிறேன். இதில் நாம் மாற வேண்டும்
ஆனாலும், கொரோனாவை முன்னிட்டு சென்ற வாரத்திலிருந்தே இந்தியாவின் பல இடங்களிலிலும் மாஸ்க் விலை கூடிக்கொண்டே வருகிறது என்ற செய்தியும் சாதாரணமாக கடந்து விட முடியாது. சாதாரண சர்ஜிகல் மாஸ்க் என்று சொல்லக்கூடிய பச்சை நிற அறுவைச் சிகிச்சை வாய்க்கூடு கிடைப்பதில்லை. வருவதே இல்லை என்றும் மருந்தகத்தில் கூறினார்கள். ஒருவித செயற்கை தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த மாஸ்க் இப்பொழுது தேவையா? தேவை இல்லையா? என்று யோசிக்க முடிவதில்லை.
பக்கத்தில் ஒருவர் தும்மினாலும் இருமினாலும் பயப்படக்கூடிய நிலை. தெரியாமல் வழக்கம்போல கேன்டீனில் தும்மிவிட்டேன், பக்கத்தில் இருந்த அனைவரும் என்னை முறைத்துக்கொண்டே சற்று தள்ளிப் போய்விட்டார்கள். அதேபோல ஊரில் இருந்து ஒரு கூரியர் அனுப்ப சொன்னோம். proffessional கூரியர் பாதிக்கப்பட்ட பெங்களூரின் இரண்டு பின்கோடுகளுக்கும் அனுப்ப மறுத்துள்ளனர். ஒரு வழியாக அஞ்சல் அலுவலகம் அதனை வாங்கி உள்ளார்கள். இதன் தீவிரத்தன்மையை உணர முடியும்.
பெங்களூர் நம்மூரோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும் நகரம். கேரளாவை விடவும் பெங்களூருக்கு வந்து செல்லும் மக்கள் அதிகம். ஆதலால், தொடர்ந்து சில வாரங்களுக்கு இங்கும், அங்குமான பயணங்களைத் தவிர்க்க வேண்டியது முக்கியம். சாதாரணமாக நமக்கு வராது என இல்லாமல் பெருத்த முன் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய நேரம். இது பீதியை கிளப்பும் நோக்கில் செய்யப்பட்ட பதிவு அல்ல. பயணம் தவிர்ப்போம். பயம் இல்லாமல் முன்னெச்சரிக்கையாக இருப்போம்.

Sunday, March 01, 2020

படி விளையாடுதலும் சிவராத்திரியும்....

நேற்று காலையிலிருந்தே பக்கத்து ஊரில் இருந்து பக்திப் பாட்டுச் சத்தம் கன்னடத்தில், தமிழிலும், தெலுங்கிலும், சமஸ்கிருதத்திலும்,மலையாளத்திலும் கலந்து கட்டிக்  கேட்டுக்கொண்டே இருந்தது. அலுவலகம் முடித்து வந்த சாயங்காலமும் கேட்டுக்கொண்டே இருந்தது. இரவு எட்டு மணி வாக்கில் ட்ரம்ஸ் முழங்க, பேண்ட் செட் அடி சத்தம் வீட்டை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்க ஆரம்பித்தது.   தப்பாட்ட அடி போல கால்களை ஆட இழுத்தது. 'என்னதான் நடக்கிறது' என்று வேடிக்கை பார்க்கச் செல்ல முனைந்தேன். இவர்கள் ஊரின் சிவராத்திரி எப்படித்தான் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆவலும் அதில் உண்டு. வாண்டுகளும் "நாங்களும் வருவோம்" என்று சேர்ந்து கொண்டார்கள்.    


வண்டியை கிளை சாலையில் நிறுத்திவிட்டு,  வேடிக்கை பார்க்கும் மக்களோடு ஐக்கியமானோம்.  நின்று கொண்டு இருந்த இடத்தை, பேண்ட் செட் குழு முதலில் நெருங்கியது.  பின்னால் சற்று தொலைவில் ரதம். தள்ளிக்கொண்டு வந்த பெரிய ட்ரம்ஸ் நின்றது.  கூடவே பேண்ட் செட் அடியை சற்று நிறுத்தினார்கள். ஒரு தவுசண்ட் வாலாவை கீழே வைத்து பற்ற வைத்தார்கள்.    வாண்டுகள் காதுகளை மூடிக்கொண்டார்கள்.  

பட படவென  ஐந்து நிமிடம் வெடித்து ஓய்ந்தது.  ட்ரம்ஸ், பேண்ட் செட் மறுபடியும் நம்மை ஆட அழைப்பது போல அடியை ஆரம்பித்தார்கள். மெல்லமாக நகர ஆரம்பிக்க, பின்னால் ஒரு குழு நடந்து சென்றது.   ஆட்டம் இல்லை.     


 ரதம் போன்ற மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அமைப்பு பக்கமாக வந்தது.   மின்மினி விளக்குகளால் சுற்றிலும் ஒளிர்ந்து கொண்டு வந்தது. மனித முகம் போல ஒரு தகடு வைக்கப்பட்டு பிரமாண்டமாக சோடிக்கப்பட்டு இருந்தது.  வழக்கமான சிவன் முகம் மாதிரியும் தெரியவில்லை. வேறு ஏதேனும் சாமியோ? சந்தேகத்தை தெளிந்திட பக்கத்தில் இருந்த உள்ளூர்காரரிடம், கன்னடம், தமிழ், ஆங்கிலம் கலந்து தயங்கியபடியே ஒருவாராக கேட்டேன்.

 

"ஏனு சாமிங்?" ( அந்த நம்மூரு ங்க மட்டும் சட்டென போவதில்லை)

 "சிவா" 

 "கோயில் எள்ளிதே?" 

 "ஈக்கட ஆலமரம் பேக் சைடு"  அந்த ரதம் வந்த வழியாக கையைக்  காண்பித்தார். அது ஊரின் பின்பகுதி.      அந்த ஆலமரத்தின் வழியாக பலமுறை காலை ஓட்டம் ஓடி இருந்தாலும், அங்கு ஒரு சிவன் கோவில் இருந்ததை இதுவரை பார்த்ததில்லை.   


"இதி ரவுண்ட் ஹோகிதா?" 

"ஆக்கட ஹோகி ஈக்கட பரித்தே" என இப்படிக்கா போயி அப்படிக்கா ஊரைச் சுற்றிக்கொண்டு வரும் என்றார்.  


வேடிக்கை பார்த்த மக்கள் ஒவ்வொருவராக ரதத்தின் அருகில் சென்று குங்குமம் வாங்கிக்கொண்டு வந்தார்கள்.  அவரின் மனைவியும் குங்குமம் வாங்கிக்கொண்டு வந்தார். அவருக்கு கொடுத்துவிட்டு, என் வாண்டுகளுக்கும் வைத்துவிட்டார், கூடவே எனக்கும் கொடுத்தார்.   சாதாரண மனிதர்களின் அன்புக்கு மொழி ஒரு பொருட்டே இல்லை.         

   

அந்த ரதமும், மேள தாளமும் மெதுவாக தேங்கித் தேங்கிச் செல்ல ஆரம்பித்தது.   கோவில் எப்படி இருக்கு என ரதம் வந்த வழியில் கோயிலை நோக்கி சென்றோம். ஆலமரம் சீரியல் லைட் விழுதுகளால்  மின்னிக்கொண்டு இருந்தது. கீழே வயலுக்கு செல்லும் வழி. பக்கவாட்டில் சப்போட்டா தோப்பு. நெடுக பளிச் அலங்கரிப்பு.  தரையில் விரிப்பு. விரிப்பின் இறுதியில் கோவில். ஒரு பத்துக்குப் பத்து தான் இருக்கும். திறந்தவெளியில் நந்தி.   சுற்றிலும் எந்த சுற்றுச்சுவரும் இல்லை. உள்ளே ரதத்தில் பார்த்தது போன்ற தகடால் ஆன ஒரு குட்டி மனித முகம் போன்ற அமைப்பு.   என்னால் மீண்டும் சிவன் என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தீபாராதனை உடன், பாலையும் தயிரையும் கலந்து கொடுத்த பிரசாதத்தை வாங்கிக் கொண்டு வெளியேறினோம்.    


அங்கங்கு ஒரு முப்பது பேராவது இருப்பார்கள்.  பெருங் கூட்டம் இல்லை. ஆனாலும் கூட்டம் வந்த வண்ணமும், கலைந்தும் சென்று கொண்டும்  இருந்தது. உள்ளூர் மக்களைத் தவிர வடக்கு, தெற்கு என பல தரப்பட்ட கூட்டம். நகரமயமாக்கல் பெங்களூரின் புறநகரில் உள்ள இதுபோன்ற கிராமங்களையும், தன்னோடு இணைத்து பெருநகரமாகிக்  கொண்டு இருக்கிறது. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வந்து இந்த சிற்றூரை, கொஞ்சம் கொஞ்சமாக வளைத்துக் கொண்டு இருக்கும் இந்த சமயத்தில், இந்த கிராமத்தின், இந்த சிறு கோவிலின் சிவராத்திரிக்கான கூட்டம் கண்டிப்பாக அதிகரித்து இருக்கும் என்று சொல்லமுடியும்.  உள்ளூர் மக்கள் என் போன்ற மக்களை குறு குறு என பார்ப்பது போன்ற உணர்வு. வாண்டுகளின் தமிழைக் கேட்டு இன்னொரு தமிழ் குடும்பம் புன்முறுவல் இட்டு கடந்தார்கள்.  



வெளியேறும் தருவாயில் நண்பர் ஒருவர் வந்தார்.   "சின்ன கோவில் தான் போலங்க. ரதம் வந்துச்சு, சரி கோயில் எங்க இருக்குன்னு பார்க்க வந்தோம்"  

"ஆமாங்க, இது சுயம்புவாக உருவான கோவில், நாங்க இங்க வந்ததிலிருந்து ரெண்டு.மூணு வருஷமா  வந்துட்டு இருக்கோம்" என்றார்.  


வண்டியை எடுத்து வந்த வழியில் திரும்பினாள்,  ரதமும் அந்த கூட்டமும் ஒரு 50 அடி தொலைவு நகர்ந்து  சென்றிருந்தது.   


இங்குள்ள சிவ வழிபாடு என்பது 11-12 ம் நூற்றாண்டில் பசவன்னா அவர்கள் உருவாக்கிய லிங்காயத்து சமயம் சார்ந்ததாக இருக்கலாம்.    அது நமது 6-7ம் நூற்றாண்டின் நாயன்மார்கள் உருவாக்கிய சைவம் சார்ந்து வந்துள்ளது என்றும் கூறுகிறார்கள். அது அப்படியே அகத்தியர் வரை செல்கிறது. காலத்திற்கேற்ப கொண்டாட்டமும் குடி இருக்கலாம்.   இத லிங்காயத்து சமய வழி வந்தவர் தான் சென்ற வருடம் மறைந்த 111 வருடம் வாழ்ந்த சிவகுமார் சுவாமிகள். இந்த லிங்காயத்து சமயம் சாதிய ஏற்ற தாழ்வு இல்லாமல் கட்டமைக்கப்பட்டது என்கிறார்கள். ஆனால்  இப்பொழுது அப்படியா என தெரியவில்லை.    

 


சிவராத்திரியின் போது அப்பொழுதெல்லாம் என்ன நடக்கும்  என ஊர் சார்ந்த அனுபவம் ஒப்பீடாக வந்து சென்றது. இப்படியாகத்தானே காட்டுக்  கருப்பண்ண சாமி கோவிலுக்கு சென்று வருவோம்? படி விளையாடுதல் என்று ஒரு நிகழ்வு நடக்குமே! அது என்ன ஆச்சு?


வீட்டிற்குள்  வநுழைந்தால் டிவியில் ஜக்கி  அந்த நெடு நீண்ட மேடையில் நடந்து கொண்டு இருந்தார். அவ்வப்போது ஆடிக்கொண்டிருந்தார்.   "என்ன இந்தய்யனெல்லாம் ஆடராறு?" என்று ஒரு கமெண்ட் எங்கம்மாவிடம் இருந்து வந்தது.  

    

இப்படியாக  இந்தப்பக்கம்(சமூக வலைத்தளங்களுக்கு) வந்தால்,  சிவராத்திரியை சீரியஸா எடுத்துக்கிட்டு ஒரு க்ரூப்.  கழுவி ஊத்த ஒரு பெரும் குரூப்.    


நமது சிற்றுர்களில் ஒவ்வொரு சமூகமும் அவர்களுக்கான தனிக்  கோவிலை கட்டி எழுப்பி இருப்பார்கள். கருப்பணன், மதுரை வீரன், முனியப்பன் போன்ற பண்பாட்டுத் தெய்வங்களாகவே இவையாவும் இருக்கும்.    பிள்ளையார், பொட்டுசாமி இதில் கலந்துகொள்ள மாட்டார்கள். இவுங்க முறை வேறு நாட்களில் வரும். அப்போது ஊரில் இருந்த சிவன் கோவில் கூட சிவராத்திரி அன்று திறந்து வைத்திருந்த ஞாபகம் இல்லை.   அப்பாவும் அதனை ஆமோதித்தார்.  


சிவராத்திரி வரும் ஒரு பத்து பதினைந்து நாட்களுக்கு  முன் அதற்குட்பட்ட அங்காளி, பங்காளிகள் சேர்ந்து கொள்வார்கள்.  "இந்த வருஷம் செவன்ராத்திரி சனிக்கெழம வருது. எப்ப விளையாட போலாம்?"   "எங்க இருந்து ஆரம்பிக்கலாம்?" என்ற ஒரு கேள்விக்கு ஒரு செயல்திட்டம் வாய்வழியாகவே உருவாகும்.     இங்கு விளையாடுதல் என்பது படி விளையாடுவதைக் குறிக்கும்.   


 கிட்டதட்ட என் அப்பாவுக்கு ஞாபகம் தெரிந்து இது நடைபெற்றதாம், படிப்படியாக இப்பொழுது ஒரு பத்து/பதினைந்து வருடங்களாக நடைபெறுவதில்லை என்றார்.   சமீபத்தில் கேட்ட ஜெயரஞ்சன் அவர்களின் நிலக்கிழார் என்ற அமைப்பு எப்படி மறைந்துபோனது என்பதை நினைத்துக் கொண்டேன். 


அவரவர்களுக்கு, ஒவ்வொரு சமூகத்திற்கும், பாத்தியப்பட்ட நான்கைந்து அல்லது பத்து பதினெட்டு ஊர்களுக்கு கூட செல்வார்கள்.   "அட எங்கப்பா... இந்த வருஷம் மழையே இல்லாம, எல்லாம் காஞ்சு போய் கிடக்குது. ஒன்னும் கிடைக்காது. பேசாம விட்டறலாம்" 

 "இதெல்லாம் வழி வழியா சாமிக்கு பண்ணறது,  சாங்கியதுக்கு ஒரே ஒரு ஊருக்கு மட்டுமாவது போயிட்டு வரலாம்.  சாமிக்குன்னா எல்லாருமே செய்வாங்கப்பா " என்று வறட்சி காலத்தில் பேருக்காக,  ஒரு சில ஊர்களுக்கு சில வீடுகளுக்கு மட்டும் செல்வதும் உண்டு.   


குறைந்தது ஐந்தாறு பேர்.  அதில் பூசாரி எனப்படுபவர் கையில் தட்டு. மறு கையில்  மணி. தட்டு நிறைய திருநீர். ஒரு உயரமான வேல். திருநீறு பொட்டு வைக்கப்பட்டு, எலுமிச்சை குத்தப்பட்டு இருக்கும்.  கதம்ப பூவால் நளினமாக சுற்றப்பட்டு இருக்கும். கூடவே ஒரு வாள். அதனைப் பிடித்துக்கொள்ள இருவர். சிண்டு, சிறுசுகளிடம் செவண்டி, மணி.    சாயங்காலம் இருட்டியதும் ஆரம்பிப்பார்கள். ஒரு கை விளக்கு. அவ்வப்போது எண்ணெய் ஊற்றிக்கொள்வார்கள்.   


 ஒரு  ஊரை எடுத்துக்கொண்டு, ஒரு பக்கமா இருந்து ஆரம்பிப்பார்கள்.  அல்லது பெரிய தலைக்கட்டு குடும்பத்திடம் இருந்து ஆரம்பிப்பார்கள்.   பெரும் நிலம் வைத்து இருந்தர்வர்கள் நெல்லை முறத்தில் கொண்டு வந்து போடுவார்கள்.   சிலர் வள்ளத்தில் அளந்து போடுவார்கள். பூசணி, சேனைக்கிழங்கு என காட்டில் விளைவதைக் கொடுப்பார்கள்.  கை விளக்கிற்கும் எண்ணெயும் கொடுக்கப்படும்.    


" எப்ப  பொங்க, 

"அடுத்த ஞாயித்துக்கெழமைங்" 

"அந்தன்னிக்கு வந்து எளனி வாங்கிட்டுப் போயிருப்பா, பாலு கீழு வேணும்னாலும் வாங்கிக்க"


சில வீடுகளில் அரிசியும் உண்டு.   நெல், அரிசி கொடுக்காதவர்கள் அல்லது இல்லாதவர்கள் காணிக்கை மட்டும் இடுவதுண்டு.  இவையாவும் பக்திக்காக, சாமிக்கானது மட்டுமல்ல; அப்போதைய கிராமப் பொருளாதாரத்தின் ஒரு அன்பு பிணைந்த நெட்வொர்க்.  இப்படியாக இரவு ஒன்பது, பத்து மணிக்கு முடியும். 


ஆயுதபூஜைக்கு பொரி  போல, சிவன் ராத்திரிக்கு கண்டிக்கிழங்கு.    ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு சாப்பிடும் பொருள் பேமஸ் தானே.  அன்று காலையில் கண்டிக்கிழங்கு மூட்டை மூட்டையாக ஊரின் முக்கிய கடையில் கடை போட்டுவிடுவார்கள்.   ஒவ்வொரு வீடுகளிலும் சாயங்காலம் கண்டிப்பாக வேவிக்கப்படும். கோவில்களில் சுண்டல், கிழங்கு, மொச்சக்கொட்டை,  பாசி பயிர், பூசணி என இரவு முழுவதும் வேக வைப்பார்கள். விடிகாலை பூசை. அத்தோடு சிவராத்திரி முடிவடையும். பெரிய ஆர்ப்பாட்டம் இருக்காது.  


கொண்டாட்டம் என்பது தொடர்ந்து மாசி பங்குனியில் வரும் அந்த காவல் தெய்வங்களின் பொங்கல் பண்டிகை தான்.  காலையிலிருந்தே மைக் செட் கட்டி விட்டிருப்பார்கள். இந்த ஒற்றுமை இந்தியா முழுவதும் இருக்குதோ என்னவோ?  படி விளையாண்டு சேர்த்த நெல், அதில் கிடைத்த காணிக்கையோடு அந்த காவல் தெய்வங்களுக்கு தீர்த்தம் அழைத்தல், கெடா வெட்டுதல், படையல், காவு சோற்று என ஒரு நாள் முழுக்க வழக்கமான ஊர் கொண்டாட்டத்துடன் நடக்கும்.   


அன்று சின்னதாக வசூல் செய்து அவர்களுக்கு உரிய வகையில் கெடா வெட்டு, சாராயம் என்று இருந்தார்கள். இன்று பெரிய அளவில் மார்க்கெட்டிங், அதன் மூலம் வசூல் செய்து அனைத்து டிவியிலும், வலை தளங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்து, அவர்களுக்கு உரிய வகையிலான 'கொண்டாட்டத்தில்' இருக்கிறார்.   எப்படி மற்ற எல்ல விஷயங்களும் சந்தைப்படுத்தப் பட்டுள்ளதோ, அது போலவே. கூடவே சாதாரண மக்களுக்கு உரிய கொண்டாட்டம் அதன் போக்கில் மாறிக்கொண்டு அன்பு பறிமாறிக்கொண்டு உள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக சிவராத்திரி மற்றொரு நாளாக சென்றுகொண்டே இருக்கிறது.



Sunday, March 10, 2019

கி.ரா வின் கதவு

கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராஜநாராயணன் அவர்களின் “கதவு” எனும் புத்தகம் ஒரு சிறுகதைத் தொகுப்பா அல்லது கட்டுரைத் தொகுப்பா என எனக்குத் தெரியவில்லை. அவர் இயல்பாக எழுதியிருப்பதை பார்க்கும் பொழுது, கதைத்தொகுப்பு போல தெரியவில்லை, உண்மைச் சம்பவங்கள் என்றே நினைக்கிறேன். ஒரு சிறு கிராமத்தில் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து கொண்டிருந்த சிறிய, பெரிய, எளிய, மனிதர்களின், அவர்களோடு உறவாடும் செல்ல பிராணிகளின் இயல்பான வாழ்க்கையை மாறாத மண் வாசத்தோடு நம் கண்முன் விவரிக்கின்றார். வழக்கம் போல அவரின் கதைக்களம் கரிசல் மண். "வாசிக்கும் வாசல்" நிகழ்விற்காக ஒவ்வொன்றாக படித்து உள்வாங்கிக் கொண்டே வருகிறேன், ஒரு கதை சட்டென எழுந்து உட்கார வைத்தது. "மாயமான்" எனும் தலைப்பில் உள்ளது. சரஸ்வதி இதழில் 1958 ஆம் வருடம் எழுதி இருக்கிறார். கிட்டத்தட்ட இருபது பக்கங்கள். கதை சுருக்கம் இதுதான்.


தினசரி செய்தித்தாள் வாங்கி அவரின் கடையில் போட்டாலும், படிக்கும் வழக்கமில்லாத செட்டியார், அவரின் பெட்டிக்கடைக்கு வரும் ஒருவர் படிப்பதிலிருந்து, அரசாங்கம் கிணறு வெட்ட 400 ரூபாய் பணம் கொடுக்கிறார்கள் எனும் செய்தியை தெரிந்து கொள்கிறார். செட்டியார் அவரின் புஞ்சை நிலத்தில் ஒரு கிணறு வெட்ட யோசிக்கிறார். சின்ன பெட்டிக்கடை, புஞ்சை நிலம், கூட்டுக்குடும்பம் என நிம்மதியான, பிரச்சனையில்லாத, சௌகர்யமான வாழ்க்கை.

சுதந்திரம் வாங்கிய பத்து வருடத்திலேயே அவரால் நேர்மையாக ரூ 400ஐ வாங்க முடியவில்லை அரசாங்கத்திடமிருந்து. அதனை வாங்க இன்று, நாளை என அலய விட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இடைத்தரகர் உள்நுழைகிறார். 400 ரூபாயில் நூறு ரூபாய் கொடுத்த பிறகு, அவருக்கு 300 ரூபாய் மானியப் பணம் வருகிறது. கிணறு வெட்ட ஆரம்பித்தவுடன் பணம் பத்தாமல் மேலும் 500 ரூபாய் கடன் வாங்குகிறார். பணம் படைத்த நாயக்கரிடம் செல்கிறார். இவர் கடன் கேட்டவுடன், நாயக்கர் சரி என்று சம்மதித்ததவுடன் செட்டியாருக்கு மகிழ்ச்சி. ஆனால் கி.ரா இவ்வாறு எழுதுகிறார் 'நாயக்கரின் கண் முன் செட்டியாரின் ஐந்து ஏக்கர் வந்து போனது' என்று. இதைவிட எளிதாக நாயக்கரின் கேரக்டரை சொல்ல முடியாது.

கிணறு வெட்டி முடிச்சாச்சு. நல்ல தண்ணீர். அதை ஊர் மக்களே வந்து குடிக்க எடுத்துக்கிறாங்க. ஆனாலும் பாசனத்திற்கு போதாத தண்ணீர். இன்னும் கொஞ்சம் அடி தோண்டினால் மட்டுமே பாசனத்துக்கு உதவும். கூடவே கமலையும், மாடுகளும் வாங்க வேண்டும். மீண்டும் நாயக்கரிடம் இன்னும் கொஞ்சம் கடன் வாங்குகிறார். நாயக்கர் ஏக்கருக்கான விலை கணக்கு போட்டு அடமானத்தில் வைக்க சொல்கிறார். குடும்பத்தினர் சம்மதத்தோடு கையெழுத்திட்டு நிலத்தை அடமானமும் வைத்து விடுகிறார். பத்திரத்திற்கும், உண்மை நிலவரத்திற்கும் இருக்கும் ரூபாய் முரணை கதையில் கி.ரா இயல்பாக பதிவு செய்துள்ளார்.

'சரி, சீக்கிரம் கடனை அடைக்கலாம், அதனால முதல் வருடம் மிளகு போடலாம்' என ஏற்பாடு செய்து முடிக்கையில், அரசாங்கத்தின் அறிவிப்பு பேரிடியாக உள்ளது. மானியம் வாங்கி கிணறு வெட்டி உள்ளவர்கள் மிளகு போன்ற பணப்பயிர்களை அறுவடை செய்ய மூன்று வருடம் தடை விதிக்கிறது. கையில் இருக்கும் காசை வைத்து கேப்பை பயிரிடுகிறார். இடைப்பட்ட காலத்தில் கடையில் வியாபாரம் படுத்து விடுகிறது. பயிரின் அறுவடை காலத்தில் கிணற்றில் தண்ணீரும் இல்லை, மழையும் இல்லை, தாது வருடப் பஞ்சம் என்கிறார்கள். நாயக்கர் முதல்வருட வட்டியை கட்ட சொல்கிறார். நகைகளை விற்று அந்த வருடம் கட்டி விடுகிறார். வட்சியினால் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக ஊரைவிட்டு ஆந்திராவுக்கும், தஞ்சாவூர் நோக்கியும் பஞ்சம் பிழைக்க செல்கிறார்கள்.

அடுத்த வருடம் கடனை கட்டமுடியாமல் ஊரைவிட்டு, நிலத்தை விட்டு, தாயை இழந்து குடும்பத்தோடு செட்டியாரும் வெளியேறுகிறார். அப்பொழுதும் பேப்பர் வாங்கும் பழக்கத்தை விடாத செட்டியார், ரயில் நிலையத்தில் வாங்கி அவர் இருக்கையின் பக்கம் வைத்திருக்கிறார். அங்கு வரும் பயணி ஒருவர் செய்தியை படிக்கிறார் 'கிணறு வெட்ட அரசாங்கம் கொடுத்த 400 ரூபாய் திட்டம் வெற்றி பெற்றதால் அந்தத் திட்டத்தை அரசாங்கம் நீட்டித்துள்ளதாக'.... பேப்பரைப் பிடுங்கி வெளியே வீசி விடுகிறார். இந்த இடத்தில் கட்டுரை/கதை முடிகிறது

ஒவ்வொரு கதைமாந்தர்களின் பெயர்களையும், பெயரின் பின் சாதியை போட்டுக்கொள்ளும் அன்றைய வழக்கப்படி எழுதியுள்ளார். அன்றைய காலகட்ட கதை அதனை நெருடாமல் செல்கின்றது. ஒவ்வொரு பெயரின் பின்னாலும் இருந்த சாதி தமிழகத்தில் மட்டும் எங்கே, எப்படி போனது (பெயரில் மட்டுமாவது) என்று தந்தை பெரியாரை யோசிக்க வைக்கின்றது.

ஒவ்வொரு இடங்களிலும் அந்தக் காலத்திய கிராமத்து சூழ்நிலை, அங்குள்ள மனிதர்கள், மக்களின் இயல்பான வெகுளித்தனமான வாழ்க்கை, கடன் கொடுக்கும் வசதி படைத்தவர்களின் மனநிலை, அரசு எந்திரம் என நெருடாமல் காட்சிப்படுத்திக் கொண்டே செல்கிறார்.


இது தவிர, இந்தப் புத்தகத்தில் மற்ற கதைகளிலும் சாதாரண மனிதர்களின் இயல்பான வாழ்க்கையை அழகான எழுத்தில் நெகிழச் செய்பவர், ஒவ்வொரு கதையிலும் சின்ன சின்ன சம்பவங்களில் அந்தக் காலகட்டத்திய அரசாங்க அலுவலர்கள் போக்கை சாடிக் கொண்டே அல்லது இயல்பாக விவரித்துக்கொண்டே சென்றிருப்பார். சுதந்திரம் அடைந்து பத்து வருடங்களுக்கு பின் எப்படி இருந்ததோ, அதுபோலவே கிட்டத்தட்ட கதை எழுதி 60 வருடங்களுக்குப் பிறகும், நிகழ்காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் கதை பொருத்துகிறது. அனேகமாக வினைத்தொகைக்கு உதாரணமாக கூறலாம்.. அரசாங்க இயந்திரம் அப்படியேதான் இருக்கின்றது அல்லது அதைவிட மோசமாகி இருக்கின்றது. அன்று போலவே இன்றும் அரசாங்கத்தின் திட்டங்கள், சாதாரண மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நன்மை பயக்கின்றனவா என்பது விடை தெரியாத கேள்வி. ஆசையை தூண்டும் அரசின் திட்டங்கள் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போடுகிறது என்பது இப்போதும், அப்பொழுது போலத்தான் போல.

யார் கண்டது, அன்று கரிசல் காட்டில் இருந்து தஞ்சைக்கு கிளம்பி வந்து விவசாயம் செய்தவர்கள் தான், சில பல தலைமுறைகளாக "சோழநாட்டில் சோறுடைத்து" நமக்குப் பசி ஆற்றிவிட்டு, இன்று ஹைட்ரோகார்பனால் துரத்தப்பட்டுக் கொண்டிருக்கலாம்.

இதுபோல நடு இரவில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் டிஜிட்டல் வாழ்க்கையோடு ஒட்டாமலிருந்த சாதாரண, விவசாய, எளிய, நடுத்தர மக்களின், சிறு குறு, குடிசைத் தொழில்களின் வாழ்க்கையை தடம் புரட்டி இருக்கலாம். மனிதர்களோடும், மண்ணோடும் இயற்கையோடும், வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தவர்கள், இன்று ஏதேனும் ஒரு நகரத்தில் செக்யூரிட்டியாகவோ, டிபார்ட்மெண்ட் ஸ்டோரிலோ, பிழைத்துக்கொண்டு இருக்கலாம்.

உலகமயமாக்கலுக்குப் பின், அன்று ஏர் பிடித்து, மாடு கன்னு வைத்து, நீர் பாய்ச்சி விவசாயம் செய்த வேளாண் குடியினரின் ஒரு வகையினர் மேலே படித்து வெளியேறி பெரு நகரங்களில் பொருளீட்டி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஊரோடு வாழும் பெற்றோர்கள், சில வருடங்களுக்கு ஒருமுறை வயலை நனைத்துவிட்டு செல்லும் வாய்க்கால் முறை தண்ணீருக்காகவும் அல்லது வானம் அழுகும் என்று எதிர் பார்த்துக்கொண்டு காய்ந்து கிடக்கும் நிலங்களை புரோக்கர்களிடமிருந்து பாதுகாத்துக் கொண்டு, அவர்களுக்குத் தேவையான உணவு வகைகளை மட்டும் பயிரிட்டுக் கொண்டு, ஆடிக்கொரு முறை அமாவாசைக்கு ஒருமுறை வருகை தரும் பேரக் குழந்தைகளை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கலாம்.

மற்றொரு வகையினர், இதிலிருந்து வேறுபட்டு விவசாயமே போதும் என்று திருப்தியுடன் அதிகம் படிக்காமல் பள்ளிப் படிப்போடு நிறுத்தி, தொடர்ந்து விவசாயத்திலேயே ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களின் குடும்பம், அன்று அவர்கள் இருந்த மிடுக்கோடு, செல்வச் செழிப்போடு இன்று இருக்கிறார்களா என்று உறுதியாகக் கூற முடியவில்லை. அவர்களின் மகள்களுக்கு எப்பாடு பட்டாவது திருமணம் செய்து வைத்திருந்தாலும், மகன்களுக்கு? இந்த படிப்பு வித்தியாசங்களாலும் விவசாயம் மட்டுமே வாழ்வு என்றும் இருந்தவர்களுக்கும், இருப்பவர்களுக்கும் பெண் தர மறுக்கும் சமூகம் தானே இது. அப்படியே கல்யாணமாகி இருப்போரும் சுற்றத்தாரின் வாழ்க்கைக்கு ஈடுகொடுக்க நேர்மையாக என்ன செய்வதென்று தெரியாமல், கொஞ்சம் கொஞ்சமாக நிலங்களை கைமாற்றிக் கொண்டு இருந்தவர்களும், கடன்பட்டு இறந்தவர்களும் கண்முன் வந்து போகிறார்கள்.

இந்தியாவின் GDPல் 18 சதவீதமும், 50 ℅ மக்களுக்கான வாழ்வாதரம் விவசாயத்தை ஒட்டியே உள்ளதாக புள்ளி விவரங்கள் வருகின்றன. விவசாயிகளின் பேரணி, தொடர் போராட்டங்கள், அவர்களுக்கான உரம் என்ற பெயரில் மானியம், இவைகள் உண்டு செய்யும் கடன், அதனால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் என பல கேள்விகளுக்கு என்ன தீர்வு என்பதை முன்னிருத்தாமல் மௌனமே அரசுகளிடமிருந்து. மௌனத்தின் சாட்சியாக நாமும்.




Wednesday, January 16, 2019

அணில் துள்ளி ஓடும் முன்றிலில்!

அடடா... 
நேற்றே வந்திருப்பார்களே..
இன்றும் வரவில்லை....
மூச்சுக்காற்றை வெளியே அனுப்ப முடியாமல் கதவு பூட்டப்பட்டே கிடக்கின்றதே..
என்னைக்  குளிப்பாட்டி
துடைத்து
'பவுடர்' இட்டு 
வேப்பிலையும், பூலப்பூடும்,  ஆவாரம் தலையோடு  காப்பு கட்டி இருக்க வேண்டுமே... 

காகம் வந்தமர்ந்துவிட்டு கரையாமல் போகிறதே..
சின்னஞ்சிறு பாதங்கள் துள்ளி விளையாடுமே
என் மார்மீது..
கீச் மூச்சென சிரிப்பொலி என் தோல் மீது பட்டு எதிரொலிக்குமே..
"வாங்க வாங்க" எனும் சத்தம் சுற்றாருக்காக கேட்டுக் கொண்டே இருக்குமே.. 
ஏன் ஒருவரையும் காணோம்...

திரண்ட மஞ்சள் கொத்தோடு பொங்கல் பானையும்.. அது
பொங்கி வழிந்தோடிய தடமும்...
தோகையோடு செங்கரும்பும்...
வண்ணக் கோலத்தின் நடுவில்
வாழை இலையும்.. அதன் நடுவே
ஆவிபறக்கும் பொங்கலுக்காக
அருகம்புல் சூடிய புள்ளாரும்
காத்திருக்கையில்....
நீர் விலாவி, 
பூ தூவி
சாம்பிராணி காட்டி
கற்பூரம் ஏற்றி முடித்து,
தவளைக்கு ஒதுக்கி...
பொங்கலை கொஞ்சமாக  எடுத்து
என் மீதும் சிந்தியும்
வாயில் இடும் அந்த அறும்புகள் 
எங்கே இன்னும் வரவில்லை..

இருப்பினும் என்ன....  
நாமே கொண்டாடுவோம்...
எறும்புகளின் தாரைகளால் இட்ட கோலத்தோடும்..
காகம் கொண்டுவந்த பொங்கலோடும்...
அணில் துள்ளி ஓடும் முன்றிலில்!!!

"பொங்கலோ பொங்கல்"

இப்படிக்கு
என் இல்லம் 
மொடக்குறிச்சி.
16-1-2019

Tuesday, August 07, 2018

"ஈரோடு எனது குருகுலம்" கலைஞர்

"ஈரோடு எனது குருகுலம்" கரகரத்த குரலில்  கலைஞர் பேச்சை ஆரம்பித்தவுடன் அங்கங்கு சரக்கடித்துக்கொண்டும், சரக்கடித்து முடித்து தம்மடித்துக்கொண்டு இருக்கும் தொண்டர்கள் பரபரப்புடன் தங்களை ஆசுவாசப் படுத்திக்கொண்டு  இவரின் பேச்சை அமைதியாக கேட்க இவர் பக்கம் திரும்புவார்கள்.   தக  தக என வண்ண சிறு மின் விளக்குகள் உதய சூரியனாகவும், கலைஞராகவும், கருப்பு சிவப்பில்  மின்னிக்கொண்டு இருக்கும்.  இப்படி  கலைஞரை முதன்முதலிலில் பார்த்த இடம்  ஈரோடு வ. ஊ. சி. திடலில் தான். பெரும்பாலான அரசியல் கூட்டம் அங்குதான் நடைபெறும்.   சுமார் ஒரு நாற்பது, ஐம்பது நிமிடங்கள் குறிப்புகளை வைத்துக்கொண்டு, புள்ளி விவரங்களுடன் இடைவிடாமல் அடுக்குமொழியில் பேசிக்கொண்டே செல்வார்.   

தேர்தல் பிரசாரத்திற்கு ஈரோடு வருகிறார் என்றால் எங்கள் ஊரின் உடன்பிறப்புகள் பரபரப்பாவர்கள். ஒரு வாரத்திற்கும் மேலாக அண்ணணின் கடையில் கலைஞரின் கூட்டம் பற்றிய பேச்சாகவே இருக்கும்.  'நாங்கல்லாம்'  என ஆரம்பித்து வெறும் "டீ" குடித்துவிட்டு கட்சிக்கு கொடி நட்ட வரலாரை, அதற்கும் முந்தைய தலைமுறையினர் கூறிவிட்டு இவர்களை உசுப்பேத்திவிட்டு செல்வர்.  'அம்மா கட்சிலயாவது ஏதாவது குடுப்பாங்க, நம்ம கூட்டத்துக்குப்போனா நம்ம கட்சில  என்ன தராங்க' என்று சொல்லிக்கொண்டே கூட்டத்துக்கு செல்வார்கள் கழக உடன்பிறப்புகள்.  

அப்பா ஒரு தீவிரமான கலைஞரின் விசிறி.   2011 க்கான தேர்தலில் "அத்தனை ஊழல் பண்ணிருக்காங்க அவங்களுக்கு போடாதிங்க" என்று காலில் விழாத குறையாக  கெஞ்சியும்,  "கலைஞர தவிர வேற யாருக்கும் போட மனசு வரலை" என மீண்டும் அவருக்கே வாக்களித்துவிட்டு  வந்து கூறியவர்.   அவரைப்போலத்தான் ஊர் பக்கம் பலரும், அதுதான் கலைஞரின் சொத்து, திமுகவின் வாக்கு வங்கி.   மதிமுக துவங்கிய புதிதிலும் இது போன்ற பேச்சுக்களை கேட்டுள்ளேன். மதிமுகவில் இருப்பவர்களே கலைஞருக்கு வாக்களித்ததை இப்படி கூறுவார்கள்.   "சூரியனப் பார்த்தா, கை  அங்க தானா போகுதப்பா" . 

ஆறாம் வகுப்பில் பிடித்தமான ஒரு பிரிவேளை ஓவியம்.  ஓவியம் கிறுக்கி, பழகிக்கொண்டு இருந்த காலங்களில், ஒருநாள் ஏனோ உதயசூரியனைப்போட்டு அப்பாவிடம் காட்டி நற்பெயர் எடுக்க முற்பட்டேன்.     என்னைச் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் கலைஞரைக் கொண்டாடியபோது நானும்தெரிந்தும் தெரியாமல்  அவரையே ஆதரிக்க ஆரம்பித்திருந்தேன்.  

1996ல் தான் முதல் முறையாக ஓட்டுரிமை.   அந்த சமயம் தான் பாட்ஷா விழாவில் ஜெ வை எதிர்த்து தலைவர் ரஜினியின் வாய்ஸ்.   பரபரப்பானது தேர்தல்.  அந்த தேர்தலில் தான் ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பிபார்க்கும் வரலாற்று நிகழ்வாக எங்கள் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 1033 வேட்பாளர்கள் விவசாய சங்கம் சார்பில் நிறுத்தப்பட்டார்கள்.   அப்போது  +2 தேர்வு சமயம்,  ஆயினும் "ரஜினி-கலைஞர்-மூப்பனார்" என  இவர்களைப்பற்றித்தான் எங்களின் நட்புவட்டம் சிலாகித்துப் பேசிக்கொண்டு இருக்கும். 
எங்கள் தொகுதியில் மட்டும் தேர்தல் ஒரு மாதம்  தள்ளிவைக்கப்பட்டு,  புத்தகம் போடுமளவு சென்றது.  அந்த வருடம் பெருவாரியாக திமுக-தமாக வெற்றி பெற்றிருந்தது. 

2006-2011 காலத்தில் சிறு குறுநில மன்னர்கள் துணையுடன்,  குடும்ப ஆதிக்கத்தினால் ஊழல்,  இலங்கை படுகொலைகளில் இவரின் செயல்பாடு,  கட்சிக்காரர்களின் கல்லூரிகள், கொள்கையிலிருந்து வழுவல்  என்று   இவரின்  வரலாற்றில் பெரும் கறை.  அந்த ஐந்து வருடம்  தடம்புரண்டு  போகாமல் இருந்திருந்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி வேறுவிதமாக, மேற்கத்திய நாடுகளுக்கு சவால் விடும் விதத்தில் அமைந்திருக்கும். 

இன்று, நின்று நிதானமாக  அவர் செய்த ஊழலைத்தாண்டி யோசித்துப் பார்த்தால், என் ஊரிலிருந்தும்,  நண்பர்கள் வட்டங்களில் இருந்தும்,  சொந்தங்களில் இருந்தும், அன்று திமுக கொடியை நட்டு கதை பேசிக்கொண்டிருந்தோரின் பிள்ளைகள், பேரன்கள் என பலர் அடைந்திருக்கும் பொருளாதார இடம் என்பது  அவரவர்களுக்கே தெரியாமல் கலைஞரின் சமூக நீதியால் கல்லூரிகளில்  இட  ஒதுக்கீட்டின் மூலம்  கிடைத்த இடங்கள் ஒரு மிக முக்கிய காரணம்.   கிராமங்களில் இருந்தவர்களை மேற்படிப்பு படிக்கவிட்டு  விடுதலையாக்கியதில் பெரும்பங்கு அவரையே சாரும்.     கிராமங்களில்  கல்விக்கூடங்களை மீண்டும் திறந்து கல்வியின் விதைகளை ஊன்றியவர் காமராசர் எனில்,  பள்ளியிலிருந்து   அனைத்து விதமான  கல்லூரிகளுக்கும் சென்று படிக்கும் ஆகச்சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் என்பதில்  இவர் ஒரு சரித்திர நாயகன்.   இன்றும் தமிழகத்தின்  மிக முக்கியமான கல்லூரிகளில் அனைத்து மக்களும் சேரமுடிகிறதென்றால் அது அவரின் சாதனை.  இந்த பின்புலத்திலிருந்து வந்தவர்கள் எவ்வளவு கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள் என்பதை சொல்ல தேவையில்லை, ஏனெனில் அது அவர்களின்  ஒட்டு மொத்த  தலைமுறையின் கனவு.  இப்பொழுது நீட் எங்களுக்கு வேண்டாம் என போராடுவதன் நீட்சியும் இதுதான். 

படித்துவிட்டு, வேலையின் பொருட்டு சொந்த ஊரை, சொந்த மக்களை விட்டு வெகுதூரம் விட்டு விலகி இருந்தாலும், இந்த வளர்ச்சி எனும் வீக்கம் தேவையா  என்று ஒருபுறம் நினைத்தாலும், கள யதார்த்தம் வேறு.  

இன்றைய நிலையில் தொடர்ந்து  தொலைநோக்குடன் வழி நடத்தும் தலைவர்கள் இல்லை என்பது தான் வேதனை.    நீங்கள் போட்டுக்கொடுத்த வழியில் நடக்க உடன்பிறப்புகள் மட்டுமல்ல உங்களால் பயனடைந்த ஒரு கூட்டம் உலகமெங்கும் விரவிக் கடக்கிறது. 

#சென்றுவாதலைவா

#கலைஞர்

Sunday, July 15, 2018

ஓட்டுனருடன் உரையாடல்


எப்பொழுதும் ஆட்டோவிலோ அல்லது வாடகை காரிலோ சொல்லும்போது டிரைவருடன் பேச்சுக் கொடுப்பது வழக்கம்.  பெரும்பாலும்  நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் மக்களே இங்கு டிரைவர்களாக இருப்பர்.  அப்படித்தான் சென்றமுறை பாகிஸ்தானை சேர்ந்த டிரைவர் சூப்பர் ஸ்டாரைப்பற்றி புகழ்ந்து தள்ளினார், அவரது  அப்பொழுதுதான் சமூக விரோதிகளைப் பற்றி தலைவர்பேசியிருந்த்தால், ஏனோ ஆர்வம் இல்லாமல் பேசிக்கொண்டு வந்தேன்.  இருந்தாலும் அவரின் ஸ்டைலை சிலாகித்துக்கொண்டு. சென்றவாரம்  மூட்டை, முடிச்சுகளை எடுத்துவைத்த போது  நாங்கள் தமிழில் பேசிக் கொண்டிருந்தைக் கேட்டு வாகன ஓட்டுனரும் தமிழில் 'கதைக்க' ஆரம்பித்தார்.   ஆம் அவர் 18 வருடங்களுக்கு முன் லண்டனுக்கு புலம்பெயர்ந்த  தமிழர், ஈழத்தை சேர்ந்தவர். 

பரஸ்பர விசாரிப்புக்குப்பின்,  பேச்சு அவர்களின் குழந்தைகளின் தமிழைப் பற்றி சென்றது.  "பெரியவங்க யாரும் கூட இல்லைங்க, அவங்க இருந்தா கொஞ்சம் குழந்தைகளோடு தமிழில் கதைப்பாங்க ...அதனால  தமிழ் குழந்தைகளுக்கு கடினமாக தான் இருக்கு, புரியாததை நாங்களும் ஆங்கிலத்துல தான் பேசறோன்ங்க... பள்ளியிலயும், வெளியிலயும் ஆங்கிலம் இருப்பதால அடுத்த தலைமுறை குழந்தைகள்  தமிழ் பேசறது கொஞ்சம்  சிரமம் தான்" என்றார்.  அதைஆமோதித்துவிட்டு "தமிழ்நாட்லயே அந்த நிலைமை தாங்க 'சிட்டில'... ஆங்கில வழி படிப்பு ரொம்ப அதிகமாகிட்டதால,  ஆங்கிலம் கலந்து பேசறவங்க அதிகம்.   இங்லீஸ்  எழுத்துல எழுதி தமிழ்ல படிக்கிறவங்களும்  நிறைய ஆகிட்டாங்க. நீங்க, ஈழத்தமிழர்கள், இங்க தமிழ் வளர்க்கறதைப் பார்க்கறப்ப  மகிழ்ச்சியா இருக்குங்க " என்று கூறிவிட்டு.  "இங்க  பக்கத்துல உங்க ஊர்  அம்மா வாரம் ஒருநாள் தமிழ்  சொல்லிக்கொடுக்காறாங்க, வருட முடிவில் 'எக்ஸாம்' கூட இருக்குங்க" ஆங்கிலம் கலக்காமல் என்னால் சரளமாக பேச முடியவில்லை.

"அப்படீங்களா" என்ற எங்களது பேச்சு குடியுரிமை பற்றி திரும்பியது.  "இங்க சிட்டிசன்சிப் உங்களுக்கு தந்துட்டாங்களாங்க?" "ஓமங்க, அது வந்து ஆரேழு வருடத்திலயே கொடுத்துட்டாங்க" என்றவர்,  "உங்க ஊருக்கு வந்திருக்கேன், அங்க  ஈழத்தமிழர் எப்படி இருக்காங்க?", இந்த கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை,அவர்களை எங்கோ ஒரு மூளையில் தானே ஒதுக்கி வைத்துள்ளோம்.   "எங்க ஊருக்கு பக்கத்துல முகாம்ல இருக்கறவங்க எங்க வீடு வேலை செய்யரப்ப பாத்திருக்கேன்.  வேலை ரொம்ப சின்ஸியரா செய்வாங்க. ஆனா அவங்களுக்கு எல்லாம் இன்னும் சிட்டிசன்சிப் அங்க தரலைங்க" என்றேன்.     சீரான வேகத்தில் வாகனத்தை பத்து வழிச்சாலையில் செலுத்திக்கொண்டு நம்மூர் பற்றிய நினைவுகளை மலரவிட்டார்.

"இங்க வர்ரதுக்கு முன்னாடி இலங்கைல இருந்து அங்க வந்தப்பண, மடிப்பாக்கத்துல தான் இருந்தேன்ங்க, கொண்டாட்டம்னா அங்கதாங்க...  பொங்கல், தீபாவளினா ஒரு திருவிழா மாதிரி ஊரே கலகலப்பா, அருமையா இருக்கும்ங்க,  ரொம்ப நல்லா இருந்தது, தமிழ்நாட்டுலயே இருந்துடலாம்ன்னு நினைச்சேன்.  இப்ப அங்க எப்படி இருக்குங்க" என்று ஆர்வமோடு கேட்டார்.  'என்னத்த சொல்ல', என்று நம்மூர் பற்றிய அவரின் எண்ணத்தை மாற்ற எண்ணவில்லை எனினும்,   இருந்தாலும் சொல்லாமல் இருக்க முடியாது " கொண்டாட்டமல்லாம் அப்படியே இருக்குங்க, ஆனா எல்லாத்துக்கும் மக்கள் போராட வேண்டி இருக்கு, அரசியல்ல பார்த்தீங்கன்ன, ஜெ மறைவுக்கு பின்னாடி ரொம்ப மோசமான நிலைமைல இருக்கு, ஜெ ஆட்சி நல்லா இருந்ததென சொல்லல, ஊழல்தான்,  ஆனா தமிழ்நாட்டோட உரிமையை பல நேரங்களில் விட்டுக்கொடுக்கலை.   இப்ப மத்திய அரசு சைலன்டா எல்லாம்  திணிக்கறாங்க.     என்ன நடக்கும்ன்னே தெரியலை"   ரொம்ப பயமுறுத்திட்டமோ என நிறுத்திக்கொண்டேன்

"இங்க பிடிச்சிருக்குங்களா?" என்ற வழக்கமான கேள்வி.   "இங்க ஆபிஸ் வேலை அப்படீன்னு ஒரு ஸ்டரக்ட்ர்டு லைப்.  சுத்தமான காற்று,  ட்ராபிக் கிடையாது,   எதுக்கும் க்யூல நிக்க தேவையில்லை, கட்டர டேக்ஸ்ஸ ஒழுங்கா செலவு பண்ணறாங்க.   பணிவான மக்கள்.   ஆனா,  அங்க ஆபீஸ் போறதே பெரும்பாடு தான், ட்ராபிக்ல மாட்டி, பொல்யூசன்ல மாட்டி.  காசு கொடுத்தீங்கன்னா மட்டும்தான் வேலை நடக்கும், இல்லனா ஒன்னும் பண்ண முடியாது.  ஆனா  நண்பர்கள், சொந்தம் எல்லாம் அங்க இருக்கறதால,  சோசியல் லைப்  அங்கதான் இருக்குங்க.   பண்டிகை, பங்ஷன்னா கொண்டாட்டமா இருக்கும்" நான் சொன்னதை அவர் அசை போட்டுக்கொண்டு இருந்தார்.   அவரின் ஊர் ஞாபகம் வந்திருக்க வேண்டும். 

"போர்க்கு முன்னாடியே இங்க வந்துட்டீங்க, இப்ப நீங்க இலங்கை போன விசா எடுக்கனுமா,  இப்ப அங்க நிலமை எப்படி இருக்கு? ஒரு அமைச்சர் கூட விடுதலைப்புலிகளோட தேவை இப்ப ரொம்ப இருக்குன்னு சொல்லிருக்காங்களே?". தோனியதை எல்லாம் சீரியஸாக கேட்டுக்கொண்டு இருந்தேன்.

"அவ்வளவு ஒன்னும் சொல்ற மாதிரி இல்லங்க. ராணுவமே ட்ரக்(drug) கொடுக்கறாங்க" "ட்ரக்கா"
"ஓமங்க.. கஞ்சா, மக்கள பயன்படுத்த வெச்சு சமுதாயத்த நாசப்படுத்தி,  சீரழிஞ்சு போகட்டும்மென கவர்ன்மென்ட்டே இதை பண்ணறாங்க.  அப்ப எல்லாம் ஒழுக்கமா , ஒரு கட்டுக்கோப்போடு நல்லா இருந்தாங்க" எங்கயோ இதைப்பற்றி  இவர் கூறியதுபோல் படித்த ஞாபகம் இருந்தது.  நம்மூரின் டாஸ்மாக்கின் சரித்திர விற்பனையும் ஒரு கணம் வந்து சென்றது. 

"இலங்கை அமைச்சர் சொன்னது போல இப்ப யாரவது வழி நடத்த வாய்ப்பு இருக்குங்களா?" 

"இனிமேல் அந்தமாதிரி ஒரு வாய்ப்பே வராதுங்க, பிரபாகரன் மாதிரி இன்னொருவர் கண்டிப்பாக வர முடியாது.  அப்ப எம்ஜிஆர் உதவி பண்ணாங்க,    ஆரம்பத்துல இந்தியாவும் பயிற்சி  கொடுத்தாங்க.   இனிமேல் எந்தநாடும் உதவி பண்ணமாட்டாங்க.   இங்கிலாந்தும் சேர்ந்து எல்லா நாட்டோட ஆதரவோடதான அழிச்சாங்க, அப்புறம் எப்படி..." பட படவென கூறிமுடித்தவரிடம் கணத்த அமைதி.  என்ன சொல்வதென தெரிவில்லை.  பத்து வருடம் கழிந்திருந்தாலும் அந்த அமைதியின் வலி என்ன என்னவோ யோசிக்க வைத்தது. அவரே தொடரட்டும் என காத்திருந்தேன்.

தொடர்ந்தவரின் கடைசி வாக்கியம் பலமாக யோசிக்க வைத்தது.  "தனியா  ஒரு நாடு இருந்த, தமிழ்நாடும் சேர்ந்து  கூட ஆட ஆரம்பிச்சிடுவாங்க என திட்டம்போட்டு பண்ணிட்டாங்க"  உண்மையாகவும் இருக்கலாம்.  கற்பனையிலேயே கலக்கலாக இருந்தது.    

#பயணங்கள்

Sunday, July 02, 2017

தொலைந்துபோன பட்டிமன்றமும், அறச்சலூர் திருவிழாவும்

பள்ளியில் படித்துக்கொண்டு இருந்த 90களின் காலம்.     தொலைபேசி இல்லாத காலகட்டங்களில் சில நிகழ்வுகள் ஆச்சர்யமாக, முறைப்படி திட்டமிட்டது போல நடக்கும்.   கோடை விடுமுறையில் தாய்மாமாவின்  ஊரான அறச்சலூருக்கு செல்வது  வழக்கம்.   சித்திரை மாதம் அறச்சாலை அம்மன் தேர்த்திருவிழா.   பள்ளிகளுக்கு விடுமுறை விட்ட முதல் ஞாயிறு, மாமாவின் பையன்(மாமா என்றுதான் அழைப்போம் - சற்றே எங்களை விட வயது கூடியவர்)  எங்களை அழைத்து செல்ல எப்பொழுது வருவார் என்று காத்துகொண்டு இருப்போம்.  அப்படியே திருவிழாவிற்கு எங்களது வீட்டிற்கு அழைப்பு சொல்லவதற்கும் வருவார்.  ஒரு 15 கிமீ தூரத்தை மிதிவண்டியில் கடந்து வந்து எங்களையும் அதில் அழைத்து செல்வார்.  கீழ்பவானியின்  சிறு மற்றும் சின்னஞ்சிறு கடைமடை வாய்க்கால்கள்  ஓரமாக  எங்கள் பயணம் இருக்கும்.  பங்குனிசித்திரையிலும் பச்சை போர்த்திய வயல்வெளிகளின் ஊடாக,   வயல்களின் ஓரங்களில் இருந்து வரும் தண்ணீர் தெறிக்க, வரப்புகளின் இடையில் பயணப்படுவோம்.  


பள்ளியூத்து அருகே நிறைய நகப்பழ(நாவல்பழ)   மரங்கள்  சாலையின் இரு  ஓரங்களிலும்  ஆசையை தூண்டும்.  அங்கு வண்டியை நிறுத்தி கல் அல்லது  தடி எடுத்து எறிந்து, பொல பொல  என கீழே விழும்,   மண் ஒட்டியசற்று பிஞ்சாகவும், பழமாகவும்  உள்ள பழங்களை ஊதி சாப்பிட்டுக்கொண்டு வண்டியை விடுவோம்.   நாகமலையின்   மொட்டைப்பாறைகளில் செங்குத்தாக ஏறுவதுநாகமலையை  ஒட்டி செல்லும் கீழ்பவானியின் பெரிய கால்வாயில் ஆனந்தக் குளியல்,   இசைக்கல்வெட்டை தட்டி பார்த்தால் சத்தம் வரும் என  தட்டிப்பார்ப்பது  ஆகியவை ஒவ்வொரு வருடமும் தவறாமல் செய்யும் கோடைவிடுமுறையின் நேர்த்திக்கடன்கள்.   
அறச்சலூர்   இசைக்கல்வெட்டுகிமு 2ம் நூற்றாண்டில் சமணர்களால் செதுக்கப்பட்ட   இசையைப்பற்றிய குறிப்புக் கல்வெட்டுகள் என்ற கற்பூரவாசனையை அப்போது அறியாதவன்


  தேர்த்திருவிழா இருவாரங்களுக்கு மிக சிறப்பாக நடைபெறும்  குறைந்தது 10 நாட்களுக்கு இரவு கலை நிகழ்ச்சிகள்  நடைபெறும்.  எங்கள் ஊரிலிருந்து பயணம் செய்யும்போது என்ன என்ன நிகழ்ச்சிகள் என்று தொண தொண என கேட்டுக்கொண்டு செல்வது வழக்கம்.     ஊரில் இறங்கியவுடன் கலை நிகழ்ச்சிக்கான நிகழ்ச்சிநிரல் அட்டவணையை பார்ப்பதே ஒரு மகிழ்வாக இருக்கும்.    சுற்று பட்டி 18 கிராமங்களுக்கும் அதில் முறை கொடுக்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் ஒரு ஊர் மக்கள் முன்னின்று ஒரு கலைநிகழ்ச்சியை நடத்துவார்கள்.   பெரும்பாலான இரவுகளில்  அந்தந்த  ஊர் நடிகர்களும், இயக்குனர்களும் பங்குபெறும்  நாடகம் நடைபெறும், கடைசி நாளன்று சிறந்த நாடகங்களுக்கான, நடிகர்களுக்கான, இன்னும் பிற  பரிசுகளும் வழங்கப்படும் .    

விழாவின் முக்கிய நாளான புதன் இரவில் இரண்டுமூன்று கலை நிகழ்ச்சிகள்இடையில் 1 மணி நேரம் விண் அதிரும் பிரமாண்டமான  வாணவேடிக்கையும் இடம்பெறும்.     அதில் ஒன்றாக பட்டிமன்றம் கண்டிப்பாக இடம்பெறும்.   அணிக்கு மூவர், புரியாத வயதிலும் சுவையான சம்பவங்களால், குட்டி கதைகளால் கோர்க்கப்பட்ட தெள்ளு தமிழ் பேச்சுக்களை கேட்க மிக அருமையாக இருக்கும்.     நடுவரும் நாம் எதிர்பார்க்காத தீர்ப்பை வழங்கி விடுவார்.  பட்டிமன்றத்தைப் பார்ப்பதற்குஉட்கார இடம் கிடைக்குமளவுக்கு கணிசமான  கூட்டம் இருக்கும்.     அந்த நேரங்களில்  தான்திரைப்பாடலுக்கு நடனம் ஆடும்ஆடல் பாடல் நிகழ்ச்சி பிரபலமான காலகட்டம்.   அபிநயா, நீக்ரோ பாய்ஸ் என இரு பெரும் நடனக்குழுவை கூட்டிக்கொண்டு வர சண்டை நடக்கும் என கேள்விப்பட்டதுண்டு.  

இவ்வாறுதான் பட்டிமன்றம் எனக்கு அறிமுகமானது.    அதன் பின்எங்கள் ஊர்  மொடக்குறிச்சி   கோவில் கும்பாபிஷேகத்தின்போது சாலமன் பாப்பையா அவர்கள்  நடுவராக வந்திருந்த பட்டிமன்றம் நினைவில் உள்ளது.     பிறகுதனியார்  தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்ட புதிதில்,   தீபாவளி, பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகளில் பட்டிமன்றதில் ஆரம்பித்து அனைத்து நிகழ்ச்சியையும் வாய் மூடாமல் கண்டுகளித்ததுண்டு.  நிறைய தனியார்  தொலைக்காட்சிகள்  வர ஆரம்பித்ததும்விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகளின் மீதான கவர்ச்சி வெகுவாக குறைந்த இன்றைய கால கட்டத்திலும்கொஞ்சமேனும் பார்க்கலாம்  என நினைப்பது சாலமன் பாப்பையா அவர்களின் பட்டி மண்டபமேவணிக மற்றும் அரசியல் கட்டமைப்புக்குள் இருந்தாலும்      

ஒருமுறை, இங்கு தமிழ் தெரிந்த கன்னட நண்பர்களிடம் நமது கலாச்சாரங்களைப்பற்றி காரசாரமாக பேசிக்கொண்டு இருக்கும்பொழுது 'பட்டிமன்றம் போன்ற  நிகழ்ச்சிகள் அவர்களது தொலைக்காட்சிகளில் இல்லை' என்று அவர்களும்  நமது பட்டிமன்றங்களைப் பார்ப்பதாக கூறி  நம் பெருமையை  உணர்த்தினார்.  மற்ற மொழிகளில் இந்த நிகழ்வு தற்காலத்தில் இருக்கின்றதா என ஆராயவேண்டியுள்ளது.

பெரும்பாலும் தொலைக்காட்சியில் மட்டுமே  இன்றைய காலத்தில் உள்ள பட்டிமன்றத்தை, சில மாதங்களுக்கு முன் எங்களின்  'ஈரோடு வாசல் குழுமம்',  'வாட்ஸ் அப்' மூலம் நேரடி பட்டிமன்றம் நடத்தி பழைய நினைவுகளை மீட்டிதொழில்நுட்ப வளர்ச்சியை இவ்வாறான நல்லவற்றிற்கும்பயன்படுத்தி கொள்ளலாம் என்று பறைசாற்றியது.  அதேபோலசென்ற வாரம் ஈரோடு சம்பத் நகர் நவீன நூலகத்தில் 'ஈரோடு வாசல்' நட்புக்களை கொண்டு நடந்து முடிந்திருக்கும் பட்டிமன்றம் அதனை, அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் முயற்சி எனலாம்.    பட்டிமன்றத்தை பற்றி எங்கள் குழுவின் தொடர் பேச்சுக்கள், இந்த நினைவலைகளை மலர செய்தது.

சில வருடங்களுக்குப்பின், நாங்கள் வந்த மிதிவண்டி, TVS50 மற்றும் பைக்காக மாறியது.  கீழ்பவானியின் தண்ணீர் வரத்து கடைமடைகளுக்கு  கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.   ஆடல், பாடல் எனும் குத்தாட்டங்கள்  நாடகங்களையும்பட்டிமன்றத்தையும்கொஞ்சம் கொஞ்சமாக பின்னுக்குத்தள்ளிக் கொண்டு இருந்தது.


இன்று, வேரை விட்டு விலகி இருக்கும் நானும் திருவிழாவிற்கு  செல்ல முடிவதில்லை.  பட்டிமன்றமும்  அங்கு நடப்பதில்லை, ஒரு சில நாடகங்களே  நடக்கிறது.   நாடகங்களுக்காக அப்பொழுது இருந்த நிரந்தர மேடை, இப்பொழுது காவலர்களின் குடியிருப்பாக உள்ளது.   சென்ற வழிகள்,  'தார் ரோடு'களா மாறி , கீழ்பவானியின் கடைமடை வாய்க்கால்கள் 'கான்க்ரீட்' போடப்பட்டு தண்ணீர் இன்றி, காய்ந்துபோன எலும்புக்கு கூடுகளாக காட்சி அளிக்கின்றது. 

10*4 நிமிடம் = 1/2 லி கோக்

மாதங்கள் சென்றிருக்கும் இந்த மால்களுக்கு சென்று. மகளின் நச்சரிப்பு வேறு. வழக்கம் போல மரணக்கிணறுல வண்டியை ஓட்டுவது போல, சுற்றி சுற்றி சுற்றி ஒரு வழியாக உள்ளே நுழைந்தாகிவிட்டது. பார்க்கிங் ஏரியாவில் இருந்து மேலே வந்ததும் டொமினோஸ், 'டேய், குட்டி இந்தப்பக்கம் பாரு' என வேறு பக்கம் கவனத்தை திருப்புவதற்குள், "அப்பா, பிஸா வேணும்". ஸ்ஸ்ஸ். மதியம் நடந்த ஒரு பஞ்சாயத்து கண் முன் ஓடியது. "கேக் கேட்டாலும் வாங்கி தர மாட்டேங்கறே , ட்ராபிக்கானா ஜூஸ் கேட்டாலும் வாங்கி தர மாட்டேங்கறே, உங்க ரெண்டு பேர்த்துக்கிட்டயும் டூ " என 'கன்னத்தில் முத்தமிட்டால்' சிறுமி போல உம் என்று கைகட்டி முறைத்து நின்று, அதையும் கண்டுகொள்ளாமல் இருந்ததால், விசும்பலுடன் கசிந்த கண்ணீரை ஒரு வழியாக முடிவுக்கு கொண்டு வந்ததே போதும் போதும் என இருந்தது.
'சரி, ஒரு நாளைக்கு ஒரு பஞ்சாயத்து போதும். நாமும் சாப்பிட்டு ரொம்ப காலம் ஆச்சு, வாங்கலமா' என மேலிடத்தில் அனுமதி பெற்று(!!) ஆர்டர் கொடுக்க சென்றேன். “141 உங்க ஆர்டர் நம்பர். 10 நிமிடம் ஆகும்" என சொன்னார்(எனக்கும் அவருக்குமான உரையாடல் ஆங்கிலத்தில் தொடர்ந்தது). அங்குமிங்கும் மகளோடு பராக்கு பார்த்துவிட்டு, எந்த விளையாட்டு அடுத்து என முடிவு செய்துவிட்டு, பத்து நிமிடம் கழித்து சென்றேன்.
அப்பொழுதும் 138ஐ காட்டிக்கொண்டு இருந்தது டிஸ்பிலே. மேலும் ஒரு ஐந்து நிமிடங்கள் கடந்திருக்கும், 138 ல் இருந்த டிஸ்பிலே, டக் என்று 144 ஐ காட்டியது. ' என்னடா இது' என நினைத்துக்கொண்டு, "141 பீசா என்ன ஆச்சு. ரெடியா?" என வினவினேன்.
"சாரி ஸார், கொஞ்சம் மிஸ்டேக் ஆகிருச்சு, வேற பிரெட் போட்டுட்டாங்க , இன்னும் ஒரு பத்து நிமிடம் ஆகும்". "ஏற்கனவே 10 நிமிடம்னு சொல்லி 15 நிமிடம் வெயிட் பண்ணியாச்சு, மறுபடியும் ஒரு 10 நிமிடமா" என கேட்டேன்.
உடனே "சாரி சார், கோக் அரை லிட்டர் இலவசமா கொடுக்கிறோம்".
"அதெல்லாம் வேணாம். சீக்கிரம் பீஸாவ கொடுங்க" என்று அழுத்தமாக சொல்லிவிட்டு, எங்க மக்கள் துண்டு போட்டு பிடித்து வைத்திருந்த இடத்தில் அமர்ந்தேன். .
"அப்பா.. எங்கப்பா பிஸா" "இன்னும் பத்து நிமிஸம் ஆகுமாம் டா", "ஏம்பா இவ்வளவு லேட் ஆகுது" என கேட்ட மகளை ஏதோ சொல்லி சமாதானப்படுத்தி வேடிக்கை காட்ட ஆரம்பித்த நேரம்,
"சார், கோக்", என ஒரு அரை லிட்டர் பாட்டில் நான்கு டம்ளரை டேபிள் மீது வைத்தார் கடையின் யுனிபார்மில் இருந்தவர்.
"Sorry, we don't drink coke",
"நோ சார், இட்ஸ் அவர் மிஸ்டேக் அண்ட் இட்ஸ் காம்ப்ளிமென்ட்ரி".
"பரவாயில்லை, நீங்க இலவசமா கொடுக்கறீங்க, இருந்தாலும் நாங்க குடிக்க மாட்டோம் ",
"நோ சார் இட்ஸ் ஃபிரி" என்று சொன்னதையே வேறு விதமாக சொல்லிக்கொண்டு இருந்தார்.
'அடேய், ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு முன்னாடி இருந்தே நாங்க கோக் குடிக்கமாட்டோம் டா' என்று சொல்ல நினைத்து "தட்ஸ் பைன். ப்ளீஸ் டேக் இட் பேக்" என்று முடித்தேன்.
'யார்ரா இவன், சரியான காமெடி பீஸ்' என்று அவன் நினைத்திருக்கக்கூடும். நினைக்கட்டுமே, நமக்கு இது சட்டைக்காலரை தூக்கிவிட்டுக்கொள்ளளும் மொமெண்ட் இல்லையா ..
பி.கு : பிஸா நல்லதா அப்படீன்னு கேட்கக்கூடாது. 





-------------------------------------------------------------------------------------------------------------
மொடக்குறிச்சி கிருஷ் 
2-Jun-2017

குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...