Tuesday, June 30, 2020

நூறு நாள் கரோனா



நூறு நாள் ஓட்டம் ஆரம்பித்தள்ள தற்போதைய நிலையில், 100 நாட்கள் லாக் டவுன் முடிந்துள்ளது. தினப்படி தமிழக கரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் இரண்டு இலக்கத்தில் இருந்து மூன்று இலக்கமாக மாறிய பொழுது நமக்கு கரோனாவின் மீதான பயம் போயிருக்க கூடும். இந்த மாத ஆரம்பத்தில் இலக்கம் 4 ஆக மாறி அதிலும் கடந்த சில நாட்களாக 3000 தொட்டு உள்ளது. மற்ற நாடுகளில் உச்சத்தை தொட்டு இறங்குமுகம் கண்டுவிட்டது. ஆனால் இந்தியாவில், குறிப்பாக தற்போது, புதிய புதிய உச்சங்களை தொட்டுக் கொண்டே இருக்கின்றது.



ஆனாலும் குறிப்பிட்ட சில பகுதிகள் தவிர, பல இடங்கள் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளது போல ஒரு தோற்றம் உள்ளது. கிரகணத்தன்று கூட மக்கள் வெளியில் வராமல் முடங்கி இருந்தார்கள். கை கழுவினால் அல்லது மாஸ்க் மட்டும் அணிந்திருந்தால் போதுமானது என்ற ஒரு மூடநம்பிக்கையும் பரவி வருகின்றது. சிலர் அது பற்றியும் கவலைப்படுவதில்லை.





இங்கும் பெங்களூரில் கடந்த சில வாரங்களாக, குறிப்பாக இந்த மாதத்தில் அனைத்து கடைகளும் தாராளமாக திறந்தே உள்ளது. ஏதோ கண்டிப்பாக தேவை என வார நாளில் சென்றிருந்த போதும் கடைகள் அனைத்தும் வழக்கம்போல திறந்தே உள்ளது. கடைவீதி அதற்கான நெரிசலோடு, பரபரப்பாக உள்ளது. பெங்களூரில் 30% மக்களோடு சில அலுவலகம் இயங்க ஆரம்பித்துவிட்டது. நண்பர்கள் செல்ல ஆரம்பித்து உள்ளார்கள். போக்குவரத்து சொற்பமாக உள்ளதாக சென்று வருபவர்கள் கூறுகிறார்கள். நெரிசலும் இல்லை.


இரு வாரங்களுக்கு முன் எந்த உணவகமும் திறக்கப்படவில்லை. இந்த வாரங்களில் அதுவும் திறக்கப்பட்டுள்ளது. நேற்று பலர் வழக்கம்போல அமர்ந்து உணவு உண்டு கொண்டு தான் இருந்தனர்.





இப்படித்தான், சில வாரங்களுக்கு முன் மகளின் பள்ளி கட்டணத்தை கட்டுமாறு தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள். தள்ளித் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தோம். 'வேறு மாற்று வழி என்ன இருக்கிறது' என்பது தெரியாத ஒரே காரணத்தினால் கட்டணத்தைச் செலுத்தி புத்தகங்களை வாங்க முடிவெடுத்தோம். பள்ளி எப்போது திறக்கும் என்பது கேள்விக்குறி. செப்டம்பரா, டிசம்பரா அல்லது இந்த கல்வி வருடம் முழுவதும் இப்படியாக சென்று விடுமா? இன்றைய நிலையில் யாரும் விடை சொல்ல முடியாது.





இரண்டு கிலோ மீட்டர்தான் பள்ளி. இருந்தாலும் கார் எடுத்து பல மாதங்கள் ஆகிவிட்டது என அதில் செல்ல முடிவெடுத்தேன். பள்ளியின் பெருங்கதவின் முன் சீருடை மட்டும் அணிந்த காவலாளி. அவருக்கு முகக் கவசம் இல்லை. 'பீவர் கண்' எடுத்து நெற்றியில் வைத்தார். அதை பக்கத்தில் கொண்டு வரும் பொழுது நமக்கு சற்று அச்சமாகத்தான் இருந்தது. வாகன நிறுத்துமிடத்தில் கணிசமாக கார்கள். காருக்கும் சோசியல் டிஸ்டன்ஸ் கொடுத்து நிறுத்திவிட்டு, முகக்கவசம் சரி செய்துகொண்டு இறங்கி வெளியேறினேன். பிரமாண்டமான போர்டிகோவின் முன்பு ஒரு காவலாளி நின்று காரோனா தீர்த்தம் வழங்கிக் கொண்டிருந்தார் (நன்றி ஜெகதீசன்). அதையும் வாங்கி வழக்கம்போல கைகளைக் குடிக்கச் சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தேன். வரவேற்பறையில் ஒரு பெண் அனாவசியமாக உட்கார்ந்து இருந்தார். முக கவசத்தை கவனமாக டேபிளுக்கு போட்டு இருந்தார். ஆங்காங்கு மைதானத்தில் பெற்றோர்கள் ஜோடியாக. குழந்தைகள், அவர்கள் போக்கில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். வாராவாரம் சுற்றிய கால்கள் சும்மா இருக்காது.





உள்ளே சென்று வராண்டாவில் சுற்றும் முற்றும் பார்த்த படியே நடந்து பணம் கட்டும் இடம் வந்தடைத்தேன். ஜூன் முதல் வாரங்களில் பள்ளிகளில் இருக்கும் பட்டாம் பூச்சிகளின் ஆட்டமும், ஓட்டமும் இல்லை. க்யா, முயா என்ற கோழிக்குஞ்சு சத்தமும் இல்லை. கோடை கால விடுமுறையில் பள்ளி இருப்பது போல அங்கங்கு சிலர். எனக்கும் முன்பு இருந்தவர் சென்றதும் காசாளரரின் முன்பு நின்றேன. பணம் கட்டிய புகைப்படத்தை மொபைலின் வழி காண்பித்து விட்டு எங்கும் தொடாமல் நின்று கொண்டிருந்தேன். பக்கத்து 'கவுண்டரில் ஒருவர் கண்ணாடிக்கு முன்பு படுத்துக்கொண்டு, உள்ளிருந்த காசாளரிடம் கடலை போட்டுக் கொண்டிருக்கிறார். எனக்கு முன் இருந்த காசாளரும் வாய்க்கூட்டை கீழே டேபிளின் மீது போட்டிருந்தார். இந்த வருடம் இன்னும் ஒரு மொழிப்பாடம் சேர்த்து கூடுதலாக பணம் கேட்டார்கள். 'அடேய்களா, பள்ளியே நடக்குமான்னு தெரியலை, இதுல இது வேறயா' என மைண்ட் வாய்ஸை முழுங்கிக்கொண்டு


"Paytm, Google pay இல்லைங்களா?"


"இல்லை" என்றார். இப்பொழுது ATM கார்டு உபயோகித்து தான் ஆகவேண்டும். ஒரே ஒரு விரலை மட்டும் வைத்து அழுத்தி, அந்த கார்டை பத்திரமாக வேறு பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன்.





அவர் கொடுத்த 'பில்லை' வாங்கி பட்டும் படாமல் அதனை எடுத்துக்கொண்டு, புத்தகம் வழங்கும் இடத்திற்கு மேலே ஏறினேன். அங்கு இருந்த பணியாளர்கள் மட்டும் கையுறையும், முக கவசமும் போட்டிருந்தார்கள். புத்தகம் நோட்டு மூட்டைகளைத் தூக்க முடியாமல் இறங்கி, மீண்டும் கார் எடுத்தேன். ஒரு சற்று சுற்றிவிட்டு செல்லலாம் என்று வேறு பாதையில் வண்டியை திருப்பினேன். பக்கத்து ஊரில் கொரோன உள்ளது என்று அந்த ஊருக்கு மட்டும் தடுப்புக் கட்டைகளை வைத்து முடக்கி இருந்தனர். அந்த வழியாக எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. அந்த நுழைவாயிலில் 2 காவல் அதிகாரிகள் உட்கார்ந்திருந்தார்கள். 24 மணி நேரமும் இவர்கள் இப்படித்தான் இருப்பார்களா? காவல் அதிகாரிகளுக்கான பணி அழுத்தம் இங்கு பேச வேண்டியுள்ளது. இதற்காக லாக்கப் கொலைகளை ஒத்துக்கொள்ள முடியாது.





கரோனா பெங்களூரில் ஆரம்பித்த மார்ச் முதல் வாரத்தில் இந்த வருடம் கோடைவிடுமுறை நமக்கு இல்லை என்று தான் நினைத்திருந்தேன். எழுதி இருந்தேன். உலகம் முழுவதும் இணைந்து ஒத்துழைத்து தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தால், ஜூலை வாக்கில் அதனை முற்றிலுமாக ஒழித்துவிட முடியும் என்று அப்பொழுதே சீனாவில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறியிருந்தார்கள். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பு ஊசி இப்பொழுது மனிதர்களுக்கான சோதனையில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா, மற்றும் பிரேசிலில் சோதனைக்கு தயார் படுத்துகின்றனர். இந்த வருட இறுதியில் தான் கிடைக்கும் என தெரிவிக்கிறார்கள்.





சென்ற வாரத்தில் லண்டனில் இருக்கும் சக பணியளரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அங்கும் இங்கு நடப்பது போலவே 'மக்களுக்கு கரோனா பற்றிய பயம் இருப்பது போல தெரியவில்லை' என்றார். Pornmoutth என்ற பீச் பகுதியில் அவரது வீடு இருப்பதாக கூறினார். கடந்த மே இறுதியில் நீண்ட வார இறுதி கிடைக்கும். வழக்கம் போல ஒவ்வொரு வருடமும் கூடும் கூட்டம், இந்த வருடமும் குழுமி இருந்தது என்றார். இத்தனைக்கும் அப்பொழுது பொது கழிப்பறைகள் போன்றவை அங்கு திறக்கப்படவில்லை. கரோனா உச்சத்திலும் இருந்தது. உலகமெங்கும் மக்கள் அடைந்து கிடந்து வெளியே செல்லவே நினைக்கின்றார்கள்.





அமெரிக்க நண்பர்களும் சோதனை செய்யும் குழந்தைகளில் 50 சதவீத குழந்தைகளுக்கு COVID-19 இருப்பதாக கூறுகிறார்கள். இன்னும் குறைந்ததாக தெரியவில்லை என்கின்றனர்.





நம்மூரில் கரோனாவினால் இறப்பு எல்லா வயதினரையும் பாதித்துள்ளது. இளம் வயதினர் 'ஹார்ட் அரெஸ்ட்' என இறந்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஓரிரு குழந்தைகளும் இறந்துள்ளதாக கூறுகிறாரகள். இந்தக் கரோனாவின் மியூட்டேசன் என்பது வேறு வேறு நிலையில் வீரியம் அதிகமாகிக் கொண்டு உள்ளது. இந்தியாவில் நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் அதிகமாக இருக்கின்றது என்று சற்று சாதரணமாக எடுத்துக்கொண்டு வெளியில் சுற்ற மக்கள் கிளம்பி விட்டார்களோ? அல்லது வருவது வரட்டும், இன்றைய உணவுக்கு பாப்போம் என அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்களோ?





முதல் வகையான மக்கள் தான் இங்கு பிரச்சினை என கருதுகிறேன். இரண்டாம் வகையான தினக்கூலி மக்களுக்கு வேறு வழி இல்லை. அன்று கிடைப்பது தான் அவர்களுக்கு உணவு. அரசாங்கம் அனைவருக்குமான உணவு கொடுக்க முடிவதில்லை. அதிலும் வேறு மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்தவர்களுக்கு இன்னும் சிரமம் தான். அரசின் உதவியும் கிடைக்காது.





100 வருடங்களுக்கு முன் வந்த H1N1 ஃப்ளு தொற்றுநோய் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு இருந்ததாம். அன்றைய மக்கள் தொகையில் மூன்றில் 1 பகுதியினர் இறந்து போய் உள்ளார்கள் என்கிறது வரலாறு. நவம்பரில் இன்னுமொரு உச்சம் இந்தியாவில் இருக்கும் என்கின்றனர்.





இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது. மக்கள் தொகை விகிதாசாரப்படி இது குறைவு தான். இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. தென் மாநில, வளர்ச்சி அடைந்த மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களின் புள்ளி விவரங்கள் (Data) சரியாக இல்லை, என்பதை covid -19.org சுட்டுகிறார்கள். நம் வீட்டுக்குப் பக்கத்தில் பாதிப்பு உள்ளதா இல்லையா எனும் தகவல்களை தெரிந்து கொள்வது தான் இன்றைய தேதியில் அவசியமானது..





நமது தமிழகத்தில் எண்ணிக்கை அதிகம் இருக்க காரணம், அதிகப்படியான சோதனைகள். அதுவும் நல்ல விஷயமே. இப்பொழுது தான் ஸ்டேஜ் 3 எனும் சமூகத்தொற்று அடைந்ததாக கருதுகிறேன். அது இன்னும் சில மாதங்களில் விரிவைடையும். அவரவர் உள்ளூர் நிலைமைக்கு ஏற்றவாறு, ரொம்பவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய நேரம். வந்தபின் போராடுவதை விட, நாம் தான் வருமுன் காக்க வேண்டும். சுயகட்டுப்பாடு இல்லாவிடில் என்ன நடக்கும் என்பது தெரியாது.








https://www.hindustantimes.com/india-news/oxford-vaccine-in-final-stage-of-clinical-trials/story-sVJz9DRIR4Lm9DRA7261pM.html

Monday, June 15, 2020

ஊரும் பெயரும்



இந்த பெயர் மாற்ற மீம்கள் 'மெட்ராஸை' சுற்றிப்பார்க்க வைத்தது. சென்னையில் முதலில் எங்களுக்கு தங்க கிடைத்த இடம் எம்எல்ஏ ஹாஸ்டல். தலைமை செயலகமாக கட்டப்பட்டு இப்பொழுது மருத்துவ மனையாக உள்ள இடத்தில் பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதி இருந்தது. 'எம்எல்ஏ-க்கு எதுக்கு விடுதி?' என ஆரம்பத்தில் நினைத்ததுண்டு. அந்த ஓமந்தூரார் தோட்டத்தில், தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பெரிய தனித்தனி அடுக்கக வீடு உண்டு. கூடவே அவர்கள் பரிந்துரைத்தால், அவர்களின் சார்பாக ஓரிரு அறைகளும் புது அல்லது பழைய விடுதியில் கிடைக்கும். அங்கு பெரும்பாலும் ஊர்ப் பிரச்சனைகளுக்காக கோட்டையில்(Fort) இருக்கும் தலைமை செயலகத்திற்கு வருபவர்களாக இருக்கும். வருடக்கணக்கில் தங்கிய சிலரையும் பார்த்தது உண்டு. சென்னையின் மையப் பகுதியில் அடர்த்தியான மரங்களின் ஊடக பரந்து விரிந்த அதன் அழகும், கூடவே அங்கு வளைய வந்த அதிகாரமும், சொகுசும் சற்றே மிரட்டியது.





அதனை ஒட்டிய பகுதிதான் திருவல்லிக்கேணி. Triplicane- என்று தான் அனைவருமே கூறுவார்கள். இரண்டும் ஒரே பெயர் என அங்கு இருந்த போதுதான் தெரிந்தது. அதன் வழியாக செல்லும் பேருந்து, 'Anna Square' என ஆங்கிலத்திலும் அண்ணா சதுக்கம் என தமிழிலும் இருக்கும். இப்படி பல ஊர்களின் பெயரும் இரு மொழிகளிலும் பேருந்துகளின் பலகைகளில் இருக்கும்.










சென்னை பல வித்தியாசமான பெயர்கள் கொண்ட பெருநகரம். நெடுநீண்ட வரலாறு கொண்டது. கிட்டத்தட்ட 300 வருடங்கள் ஆங்கிலேயர்கள் இருந்ததால் அதன் பெயர்கள் அவர்களின் வசதிக்கேற்ப மாற்றிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு வீதிக்கும், ஒவ்வொரு சாலைக்கும், ஒவ்வொரு ஊருக்கும் இரண்டு பெயர்கள் இருந்ததை அறிந்துகொள்ள முடிந்தது. சில இடங்களுக்கு மூன்று பெயர்கள் கூட இருக்கும், பூந்தமல்லி-பூவிருந்தவல்லி-Poonamallee அதில் ஒன்று. ஒவ்வொரு பேட்டையில் முடியும் இடங்களையும் பேட் என்று 'இஸ்டைலாக' தான் பீட்டர் விடுவார்கள். சைதாபேட், குரோம்பேட், தேனாம்பேட், ராயப்பேட் என்று பீட்டர் விட, நாமும் பழகிக் கொள்ள வேண்டும். 'பேட்டை-பேட்' போன்றே 'பாக்கங்களும்' 'பாக்' ஆகி இருந்தது. சேப்பாக், கீழ்பாக், புரசைவாக், மீனாம்பாக் என சேப்பாக்கம் என்பதின் 'கம்' விட்டுவிடுவார்கள்.





அண்ணாசாலை- மவுண்ட் ரோடு குழப்பம் நெடியது. எங்கு ஆரம்பிக்கும் எங்கு முடியும் என ஆரம்பத்தில் தெரியாது. அண்ணா சாலையில் நின்று கொண்டே 'ஏங்க, இந்த மவுண்ட் ரோட்டுக்கு எப்படி போகணும்?' என்பதை பலரும் அனுபவித்து இருக்கக்கூடும்.





பரங்கிமலை என்பதும், செயின்ட் தாமஸ் மவுண்ட் என்பதுவும் ஒன்று என அறிந்துகொள்ள சற்று நாட்கள் ஆகியிருந்தது. திருமயிலை எனும் பறக்கும் ரயில் நிலையத்தின் பெயரைப் பார்த்துதான் பலருக்கும் மயிலாப்பூர் என்பதன் உண்மையான பெயர் தெரிய வரும். இன்டர்வியூக்கான ∴பைலை தூக்கிக்கொண்டு காலை நேரங்களில் கிளம்பி விடுவோம். மாலையில் நண்பர்கள் ஒன்று கூடி, அன்று சென்ற இடங்களின் பெயரை அலசும்போது தான், ஒரே இடத்தின் இருவேறு பெயர்களை தெரிந்து கொள்ள நேரிடும்.











எம்ல்ஏ ஹாஸ்டலில் நான்கு மாதம் இருந்துவிட்டு, அப்பொழுது புறநகராக இருந்த வேளச்சேரிக்கு மாறினோம். சைதையில் எந்த பேருந்து வேளச்சேரி செல்லும் என்பதில் குழப்பமாகும் என்பதால், சின்னமலையில் இறங்கித் தான் வேளச்சேரிக்கு பேருந்தைப் பிடிப்போம். மாநகரப் பேருந்தில் கண்டக்டரிடம் ஆங்கிலத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தின் பெயரைக் குறிப்பிட்டுதான் பெரும்பாலும் பயணச் சீட்டு கேட்பார்கள். பின்புறம் படியை ஒட்டிய அவரது இருக்கையில் தான் அமர்ந்திருப்பார். ஊரில் இருப்பது போல, சென்னையின் நடத்துனர்கள் கூட்டத்தினுடாக புகுத்து வந்து பயணச்சீட்டு வழங்க மாட்டார்கள். அந்த நெரிசலில்,முன்பு உள்ளவரிடம் சில்லறை கொடுத்து 'சின்ன மலை ஒன்னு வாங்குங்க' என கூறவேண்டும். அந்த சில்லரை ஒவ்வொருவர் கையாக மாறி நடத்துனரை அடையும். அவரிடம் போவதற்குள் அது 'லிட்டில் மவுண்ட்டாக' மாறி இருக்கும். பெரும்பாலும் ஆங்கிலத்தில் கேட்பது தான் அங்கு இயல்பாகவே அனைவருக்கும் வரும்.





பெசன்ட் நகர் பீச்சுக்கு எலியட்ஸ் பீச் என்ற ஒரு பெயரும் உண்டு. எழும்பூர் - Egmore குழப்பத்தில் நண்பர்கள் ஆட்டோ ஓட்டுனரிடம் சண்டை போட்ட கதையும் உண்டு. Foreshore estate - பட்டினப்பாக்கம் எனப்படும். இன்னும் இதில் விடுபட்ட நிறைய இடங்கள் உள்ளது. பலவற்றிற்கு அப்படியே மொழி மாற்றி இருப்பார்கள் அதில் ஒன்று தீவுத்திடல் எனும் island grounds. எழிலகம் எனும் அழகான தமிழ்பெயர்கள் கண்டு வியந்ததும் உண்டு.





இதில் குறிப்பிட தோன்றியது சென்னை சென்ட்ரலில் இருந்து, சென்ட்ரல் ஜெயில் பாலம் ஏறி இறங்கியதும் பல்லவன் சாலையில் உள்ள பாடிகாட் முனீஸ்வரர் கோவிலின் பெயர். முனீஸ்வரன் கோவில் சென்னையிலும் உள்ளதா என நினைக்கையில், Bodygurad முனீஸ்வர் எனும் வித்தியாசமான பெயர் ஈர்க்கும். எப்படி 'பாடிகாட்' முனீஸ்வரர் ஆனார் என்பதில் தான் சென்னை மக்களின் பேர் வைக்கும் திறனை வியக்க வேண்டும். வேறு ஒரு மொழியை உள்வாங்கிக் கொள்வதில் சென்னை மக்கள் எப்போதும் தனி.





1995 - Bombay to Mumbai , 1996 - Madras to Chennai, 2001 - Calcutta to Kolkata என இந்திய பெருநகரங்களின் பெயர்கள் மாற்றம் அடைந்து கொண்டு இருந்தது. எனக்கு சென்னையை விட மெட்ராஸ் 'கெத்தாகத்' தான் இருந்தது. இப்பொழுது சென்னை பழகிவிட்டது. சென்னை நண்பர்களும், அங்கு தலைமுறைகளாக வாழும் மக்களும் 'மெட்ராஸ்'(Madras) என்றுதான் கூறுவார்கள். அங்கு நீண்ட காலம் இருந்த உறவினர் அப்பொழுது "என்னப்பா நீங்க எல்லாம் மெட்றாஸ்ன்னு சொல்லாம, சென்னைன்னு சொல்லறீங்க.. எங்களுக்கு எப்பவும் மெட்ராஸ் தான்" என்பார்.





ஊரிலும் பலருக்கு இன்னமும் மெட்ராஸ் தான். ஊரில் எனைப் பார்த்ததும் விசாரிப்பவர்கள் "ஏப்பா எங்க இருக்க, இப்ப என்ன பண்ணற" என்னும் அன்பர்களின் கேள்விக்கு சட்டென 'மெட்ராஸ்' என்றுதான் வரும். இப்படித்தான் ஒருமுறை "அப்பறம் மெட்ராஸ்ல எங்க இருக்க" என்ற கேள்வி வந்தது. " வேளச்சேரிங்க" என்றேன். " அட.. மெட்ராஸ்ல வேலை செய்யறேன்னு தெரியுது.. அங்க எங்க இருக்கன்னு கேட்டன்" என்று கேட்பார்கள் நம்மைக் கலாய்த்து விட்டு செல்வார்கள் அந்த வெள்ளந்தி மனிதர்கள்.





சென்னை தவிர மற்ற ஊர்களில் இந்த மாதிரியான பெயர்க் குழப்பங்கள் குறைவுதான். 'ஊட்டிக்கு ஒரிஜினல் பெயரே உதகமண்டலம், அத வெள்ளைக்காரங்க ஒத்தக்கமண்ட் என கூப்பிட்டு பார்த்தாங்க... அதுவும் முடியாம ஊட்டி என சுருக்கிட்டாங்க' . 'இப்படித்தான் முந்திரி பழம் வித்துட்டு இருந்த ஆயாகிட்ட, இது என்ன என கேட்க, அந்த ஆயா, காசுக்கு எட்டு என்றார்களாம். அதன் பெயர் என நினைத்து cashew nut என முந்திரியை மாற்றினார்கள்' என்று சிறுவயதில் இந்த பெயர் காரணங்களை வியந்து கொண்டது உண்டு.





என்னளவில் முதலில் இந்த ஆங்கில- தமிழ் பெயர் குழப்பம் அநேகமாக திண்டுக்கலுக்கு தான் வந்து இருக்கும். லாரிகளில் பக்கவாட்டில் பர்மிட்டுக்காக எழுதப்பட்டு இருக்கும் Dindigal எழுதிய பெயரை பார்த்த ஞாபகம். ஈரோட்டில் சுற்றிக்கொண்டு இருந்தபொழுது, எங்கள் ஊரில் பெரிதாக குழப்பம் வந்தது இல்லை, VMC-வேளாளர் மகளிர் கல்லூரி தவிர. மதுரைக்குள் வளம் வந்த போது தான் குழப்பம் இன்னும் அதிகமானது. பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பரங்குன்றம் கல்லூரிக்கு செல்லும் வழியில் மதுரை கல்லூரி இருக்கும். 'Madura college' என்று ஆங்கிலத்தில் எழுதி இருப்பார்கள். மதுரை கல்லூரி என தமிழில் இருக்கும். அதை மதுரை அல்லது மதுரா என்றும் கூற மாட்டார்கள் நண்பர்கள். 'மெஜ்ரா காலேஜ்' என்று தான் கூறுவார்கள்.





மதுரையின் பக்கத்துக்கு ஊர்களில் இருந்து வரும் நண்பர்களின் பேச்சுவழக்கில் அவர்களின் ஊர்களின் பெயர்கள் அலப்பறையாக இருக்கும். திண்டுக்கல் நண்பர்கள் ' திண்டில்' என வேகமாக கூறுவார். நாரோயில், தின்னெலி என்பது நாகர்கோவிலில், திருநெல்வேலி என கேலி கிண்டலுக்குப்பின் தான் தெரிய வரும். மக்களின் பேச்சு வழக்கு என்பது வேறாகத்தான் இருந்து கொண்டிக்கிறது. அது அந்தந்த உள்ளூர் மக்களைப் பொறுத்தளவில் நாகரிகமாக, ஸ்டைலாக பெருமையாக கருதப்படுகிறது.





லண்டனில் இருந்த நேரம். பேச்சுவாக்கில் அங்கிருந்த உள்ளூர் பிரிட்டிஷ் மேலாளரிடம் சென்னை, கொல்கத்தா, மும்பை பெயர் மாற்றம் பற்றிய உரையாடல் வந்தது. அவர் 'எதற்காக இப்படி மக்களின் பழக்கத்தில் உள்ள பெயர்களை மாற்றுகிறார்கள். இது ஒரு நேர, பணம் விரயம் அல்லவா?' என்றார். பதிலுக்கு அவரிடம் "நீங்கள் எங்கள் ஊருக்கு வந்து உங்கள் வசதிக்காக ஆங்கிலத்தில் மாற்றிக்கொண்டீர்கள். எங்கள் மக்களுக்கு புரிய வேண்டுமல்லவா?" என்றதும் உண்டு. 'அப்படியானால் லண்டன் என்பது லண்டனியம்(Londinium) என்று மாறுமோ?' என்று நம்மை பகடி செய்து கொண்டிருந்தார். லண்டனுக்கான பழைய பெயர் லண்டனியம் என்பதும் அப்போது தான் தெரிந்தது. கவுண்டமணி கூறியது போல 'இந்த வெள்ளைக்காரன் லண்டன்ன்னு எவ்வளவு சின்னதா நாளே எழுத்துல வெச்சுருக்கான். நீ ஏன்டா நீட்டி முழக்கற' என்பது போல நம் ஊர்களின் பெயரை அவர்களின் வசதிக்காக சின்னதாக வைத்துவிட்டு சென்றார்களோ என்னவோ?









இங்கு கர்நாடகத்தில் மைசூரு, பெங்களூரூ( Bengaluru) என்று கன்னடத்தில் மாற்றி இருந்தாலும், அதை 'பேங்ளூர்' (Banglore) என்று சொல்வதையே விருப்பமாக பலரும் கருதுகின்றனர். 'நீங்க எப்படி வேணாலும் பேரு வச்சுக்குங்க, நாங்க இப்படி தான் கூப்பிடுவோம்'. பேச்சு வழக்கில் அந்த மாற்றம் என்பது தலைமுறைகள் கடக்க வேண்டும். அவர்கள் அறியும் பொழுது என்ன பெயர் இருக்கின்றதோ அதைத்தான் பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள். இந்த பெயர் மாற்றங்கள் தேவையா இல்லையா எனில், புதிதாக செல்பவர்களுக்கு பல குழப்பங்கள் விளைவிப்பதை தடுக்கும் எனபதால் தேவை தான். ஆனால் பணப்புழக்கம் குறைந்த இக்கட்டான இந்த நேரத்தில் இது தேவையா என்பது யோசிக்க வேண்டியது. கூடவே அதன் ஸ்பெல்லிங் 'வீலுர்' என குழப்பம் விளைவிப்பதாக இருக்ககூடாது.





இந்த பெயர் மாற்றம் தேவையா, இல்லையா என்பது பற்றி ஈரோடு கதிர் மற்றும் ஷான் கருப்பசாமி நேற்று நேரலையில் அடித்து துவைத்து உள்ளார்கள். லிங்க்

https://youtu.be/oONN0Ep_HXY












Monday, June 01, 2020

தற்சார்பு எனப்படுவது யாதெனின்


என்பதுகளின் இறுதியில் ஒட்டகம் மார்க் சீயக்காய் தூள், காந்தி மார்க் சீயக்காய்த்தூள் மிக அதிகமாக விற்பனை ஆகும்.  அதே போல்தான் கோபால் பல்பொடி, பயோரியா பல்பொடி போன்றவையும். சோப்பு என்று பார்த்தால் அது ஹமாம்.  துணி துவைக்க உள்ளூர் சோப்பு தான், டிஸ்கவுண்ட் போலவே இருக்கும்.  அதன் பிறகு 501 சக்கை போடு போட்டது.  அப்பொழுது 501 மற்றும் ஹமாம் இரண்டும் டாடா நிறுவனத்திடம் இருந்தது.  ஹமாம் ஐந்து ரூபாய்.   இந்த இரண்டு சோப்புகளும் பெட்டியில் வாங்குவோம்.  அதனை எடுத்து அழகாக அடுக்கி வைப்பது என் பொறுப்பு.  அதேபோல கலர் குடிப்பதற்கும் குண்டு அழுத்தி உள்ளே விழ  வைக்கும் கோலி  சோடா.  சிகப்பு கலர், மஞ்சள் கலரும்  இருக்கும்.  பிறகு 55 எனப்படும் பன்னீர் சோடா வகை பிரபலம்.  மொடக்குறிச்சியில் அப்பொழுது ஒரு சோப்பு அலகு யூனிட் எனும் கதர் சோப் தொழிற்சாலையும் இருந்தது.    

90-களின் ஆரம்பமாக இருக்கலாம்.    அந்த நேரங்களில் தான் பிரபலமானது  சிக், மீரா  ஷாம்புகள். 
 ஒட்டகம் மார்க் சீயக்காய் தூள், காந்தி மார்க் சீயக்காய்த்தூள் விற்பனை குறைய ஆரம்பித்தது.   குளோசப், மற்றும் கோல்கெட்  பேஸ்ட் விற்பனை அதிகமான நேரம் கோபால் பல்பொடி இறங்கு முகத்தை அடைந்தது.    கூடவே ஹமாம் மற்றும் 501 ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட் நிறுவனத்திற்கு கை மாறியது.   அப்பா கூறுவார்  லாபம் முன்பு போல் இல்லை என.   பெப்சி வர ஆரம்பித்தது உள்ளூர் கோலி  சோடா குறைய ஆரம்பித்தது.   

அப்பொழுது ஊரில் ஒருவர் வந்து சுதேசி இயக்க பொருள்களை தான் நாம் பயன்படுத்த வேண்டும், அப்பொழுது தான் நம் நாடு நன்றாக இருக்கும் என்பார் என்று கூறிவிட்டு செல்வார்.    அதுநாள்  வரையிலும் கடையில் என்ன பொருட்கள் புதிதாக வந்தாலும் அதனை பயன்படுத்த முயற்சிப்பேன்.  பியர்ஸ் சோப்பெல்லாம் அந்த வகையில் போட்டது தான்.  அவரின் மீது இருந்த மதிப்பு காரணமாக, முடிந்த அளவு நமது ஊர்  நிறுவன பொருட்களை மட்டுமே பயன்படுத்த ஆரம்பித்தேன்.  மெடிமிக்ஸ் க்கும், மீராவிற்கும் 
 மாறினேன்.   அவ்வப்போது இந்த எண்ணம் தோன்றி மறையும்.   அவ்வப்போது இதில் மாற்றமும் வரும்

இப்பொழுது கூட அந்த சீவக்காய் மற்றும் அரப்புத்தூள்களை வாங்கி தலையை அலசிக் கொள்ளலாம் என்று நமது குளிக்கும் அறையில் டைல்ஸ் முழுக்க தெரிந்து விடுகின்றது.  அதற்கேற்ப நம் அளவுகடந்த தண்ணீரையும் வீண் செய்ய வேண்டியுள்ளது 

வேற்று நாட்டு நிறுவனத்திற்கு நாம் வேலை செய்ய ஆரம்பிக்கும் அந்த நொடியில், தற்சார்பு கொள்கை  முடிந்து போய் விடுகின்றது.   இன்று நமது நாட்டில் தயாராகும் பொருட்களை வாங்கினாலும்,  அதன் பங்குதாரர்கள் யாரேனும் ஒருவர் வெளிநாட்டில் இருக்கலாம்.  

அப்படியானால் தற்சார்பு என்பது எது?  
தற்சார்பு என்பது எழுபது என்பதுகளின் காலத்திற்கு செல்வது மட்டுமாக இருக்காது. அந்த பொருளாதாரத்தை கடந்து  வந்து வெகு காலம் ஆகிவிட்டது என நினைக்கிறேன். காலத்துக்கு காலம் அதுவும் மாறி மாறித்  தான் வந்திருக்கும்.   கோபால் பல்பொடிக்கு முன்னர் வேப்பங் குச்சியை வைத்து விளக்குவது  தற்சார்பாக இருந்திருக்கலாம்.


வால்காவிலிருந்து கங்கை வரை எனும் புத்தகத்தில் ஆரம்பகால மனிதர்கள் பற்றி குறிப்பிடுவார்கள். 

ரஸ்யாவின் வால்கா நதியிலிருந்து  கங்கை வரை மனிதர்கள்  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக புலம் பெயர்ந்து வந்த கதை.  புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது போல பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் காடுகளில்  இருந்தனர். அந்தக் காடுகளில் விலங்குகளுடன், விலங்குகளாக மனித இனம் திரிந்தது. அவர்களுக்குள் மாமிசத்திற்கு சண்டை நடக்கும்.     அங்கு கிடைத்த காய்களையும் பழங்களையும், அங்கிருக்கிற விலங்குகளை வேட்டையாடி சாப்பிட்டு  இருந்ததை  தற்சார்பு என குறிக்கலாம்.

90 க்கு பிறகு பொருளாதார தாராள மயமாக்கல் ரொம்பத் தீவிரமா நடந்த காலகட்டங்கள் மிக முக்கியமானவை.  உலகதோடு ஒட்டி உறவாட ஆரம்பித்து விட்டோம்.    உலகமயமாக்களுக்கு  முன் எப்படி இருந்தது.   இந்தியா முழுக்க இருந்த மக்கள் அங்கங்கு  அவரவர்  கிராமங்களிலும் அவரவர்  ஊர்ளிலும்  இருந்தார்கள்.  வெளி உலகம் தெரியாமலேயே.  பக்கத்தில் இருக்கும் சாமியைப்  பார்த்துக்கொண்டு,  அருகில் இருந்த உறவினர்களை விசாரித்துக்கொண்டு, கிடைத்த  வேலையைப் பார்த்துகொண்டும் தான்  இருந்தார்கள்.   ஆனால் அதில் தான் சாதியப் படிநிலைகள் ரொம்ப தீவிரமாக இருந்தது என்பது பலரும் கூறும் கருத்து.   

 இன்று தமிழ்நாட்டிற்கு எத்தனையோ மக்கள் பஞ்சம் பிழைப்பதற்காக வந்த மக்கள், கொரோனாவின் முடக்கத்தால் திரும்ப அவர்களின் ஊருக்கு போகும், அந்த காட்சிகளையும் நாம் பார்க்கிறோம்.  தமிழகத்தில் இதுவரை பிரச்சனை எல்லாம் இன்றைய காலகட்டத்தில் வண்டிக்கு டியூ  கட்ட முடியலை,  குழந்தையோட பள்ளிக் கூடத்திற்கு பீஸ் என்ன பண்றதுண்ணு  தெரியவில்லை எனும்  இந்த மாதிரியான விஷயங்களில் பிரச்சினை ஆரம்பித்து உள்ளது.   எனக்கு தெரிந்து பசி, பஞ்சம் மாதிரியான பிரச்சினைகள் இதுவரை வரவில்லை என்கிறார்  பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்.   ஒருவிதத்தில்  அது உண்மை என்றே தோன்றுகிறது.   அரிசி முதற்கொண்டு எல்லாமுமே நமக்கு அரசு அளிக்கின்றது,  அதற்கான வருவாய் எந்த வழியாக என்று இப்பொழுது  நம்ம பாக்கத் தேவையில்லை.  

தற்சார்பு பொருளாதாரத்தின் படி, இந்த மாதிரி கிராமங்களில்  வேலை பார்த்துக்கொண்டு இருந்த எல்லாருமே ஏதாவது ஒரு தொழில் சார்ந்த, இண்டஸ்ட்ரீஸ்  மாதிரியான  சூழலுக்கு போய்விட்டோம்.  அந்த தொழில் உலகத்தை சார்ந்து ஒரு கண்ணியாக  இருக்கிறது.   ஓரிடத்தில் அறுபட்டால் அது மற்றோரு பக்கம் பிரச்சினையை விளைவிக்கும்.     

இப்பொழுது தான் நாம்  இண்டஸ்ட்ரியல் வளர்ச்சியால் நடந்த சூழலியல் பிரச்சினைகள் குறித்துப் பேச ஆரம்பிக்கின்றோம்.  இங்கிலாந்திலும் தொழிற்புரட்சிக்குப் பின் நடைபெற்ற சூழலியல் மாற்றங்கள், அதற்குப் பிறகு சூழலின் மீது அக்கறை கொண்டு அவர்கள் மாறியது போல அவற்றைப் பற்றி நிறைய பேசவேண்டும்.    கொரோனா காலம் நம்மை இந்த  நிலைமையை  விட கொஞ்ச காலம் பின்நோக்கி தள்ளி விட்டு போகும். 

 இப்போது  நாம்  செய்துகொண்டு  இருந்த விஷயங்களில் எந்தெந்த  தவறான விஷயம் இருக்கிறது என ஆராய்ந்து அதனை சரி கட்டுவதற்கான வேலைகளை  ஆரம்பிக்கவேண்டும்.   அந்த மனப்பான்மை எல்லா தரப்பு மக்களுக்கும் வரும்.   

தற்சார்பு பொருளாதாரம் இன்றைய காலகட்டத்தில் கண்டிப்பா முடியாது.  நம் ஒரு மாடு வைத்து பராமரிக்க , அதற்கு இடம் வேணும்.  அந்த இடம் எங்கே கிடைக்கும்? அவன் அந்த இடத்திலிருந்து படித்து மேலே சென்று அந்த இந்த முன்பு இருந்த ஜமீன்தார் இருந்த முறை மாறி இப்போ அது ஒரு ஒரு நிறுவனத்துக்கு கீழே போய் இருக்கிறார்கள்.   இங்கே ஒரு கிராமத்தில் அவர்கள் அடிமையாக இருந்த நிலைமை மாறி இன்றைக்கு ஒரு முதலாளித்துவத்தின் கீழ் ஒரு அடிமையாய் இருக்கிற ஒரு நிலைமையில் தான் இருக்கும்.   அதில் கொஞ்சம் படிக்காமல் விஷயம் தெரியாமல் இருந்திருக்கும்.  இப்போ படித்து விஷயம் தெரிஞ்சு இருக்கும் என தோன்றுகிறது.  

தற்சார்பு விஷயங்களெல்லாம்  நமக்கு ஒத்து வருமா என்றால் நம்ம தற்சார்பு னா என்ன அப்படின்னு இருக்கு ஒரு கேள்விக்குறி?  பதில் எந்தப் பொருளையும் வாங்காமலேயே   உற்பத்தி செய்ய முடியுமா?  அப்போழுது ஒரு துறவயின்  வாழ்க்கையைமட்டுமே  வாழ முடியும் என நினைக்கிறேன்.   இந்த கால கார்பொரேட் துறவிகள் அல்ல.     கிடைப்பதை சாப்பிட்டுவிட்டு அப்படியே இருக்கிற வாழ்க்கை.   அந்த வாழ்க்கை முறை நம்ம சாமானியர்களுக்கு இப்போழுது வருமா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்விதான்.   
அப்படியே அது ஒத்து வந்தாலும் இந்த நுகர்வு சமூகத்தில் நம்ம இருக்க முடியுமா?  சிக்கனாமான  மினிமலிஸம் சார்ந்த வாழ்க்கை தான்.   நமக்கு இன்றைய காலகட்டத்தின் தேவை. தேவைக்கு அதிகமாக வாங்குவது நிறுத்தினால் பல பிரச்சனைகள் தீரும்.   

அதற்கடுத்தபடியாக குளோபலைசசன்,  எல்லாருமே கரோனாவிற்கு பின், லோகலைசேஷன் ஆகும் என நினைத்தாலும், அது டி-சென்டர்லைஷேஷன் ஆகுமே ஒழிய  லோகலைசேஷன் ஆகும் வாய்ப்பு குறைவு.  


நெருக்கடிக்குப் பிந்தைய கால கட்டத்தைத்தான் new normal என்று பொருளாதார வட்டாரத்தில் கூறுகிறார்கள்.  new normal என்பதை நாம் புரிந்துகொண்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அது கண்டிப்பாக தற்சார்பை  நோக்கி நகராது, வேண்டுமானால் மினிமலிசம் நோக்கி நகரலாம்.  






ஜெயமோகனின் ராஜன் - Rhonda Byrne The secret

ஜெயமோகனின் ராஜன் சிறுகதை.  வாசல் குழுவின் வாசிக்கும் நிகழ்வின் மூலம், இந்த மாத இறுதியில் படிக்க நேர்ந்தது.   Rhonda Byrne எழுதிய  The  secret  - ரகசியம் எனும் புத்தகம் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் படித்து முடித்திருந்தேன்.  இவை இரண்டும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு உடையதாக உள்ளது.   மொட்டைத்தலை-முழங்கால்,  அம்மாவாசை-அப்துல் காதர் மாதிரி சம்பந்தம் இல்லாத போல தோணும்.  இருந்தாலும் பாப்போம்.     


யானை எப்போதும் ஆச்சரியமான ஒன்று. எங்கள் ஊர் மொடக்குறிச்சி மாரியம்மன் தேர்த் திருவிழாவில் வருடா வருடம் வரும் யானை,  கோயிலின் வலது ஓரம்,  அசை போட்டுக்கொண்டு அமைதியாக நின்று கொண்டிருக்கும்.   அதுதான் எப்பொழுதும் யானை என்றதும் என் முன் வந்து நிற்கும் காட்சி.   ஆடம்பரமான அலங்காரம்  இருக்காது.  ஆனாலும் ஒரு பயபக்தி இருக்கும்.  சற்றுத்தள்ளி யானையின் சாணி, காய்ந்து மண்ணோடு மண்ணாக கிடக்கும்.  பல பேருக்குப் படிப்பைக் கொடுக்க(?!),  மிதிபட்டு சக்கையாக கிடக்கும்.  லுங்கி அணிந்த பாகன் கூடவே இருப்பார்.  சில வேலைகளில் ஓரமாக கணேஷ் பீடி குடித்துக் கொண்டும் இருப்பார்.  'ஆரம்பத்தில் மிதித்தவர்களுக்கு தான் படிப்பு வருமோ?' என்ற அச்சம் இருந்தாலும், வீட்டில் சொல்வதால், அதனை மீண்டும் மிதித்து இருக்கலாம்.  கண்ணாடியைத்  திருப்பினால், ஆட்டோ எப்படி ஓடும் என்பது அப்பொழுதெல்லாம் தெரியாது. 


 இப்பொழுதும் எந்த ஒரு பிரம்மாண்டமான பெரும் கோயிலுக்குச் செல்லும் பொழுதும் பார்த்திருப்போம்.  தேமே என்று அந்தக் கோயிலின் முன்பாகவோ அல்லது ஓரமாகவோ நின்று கொண்டிருக்கும்.   ஈக்களுக்கு தப்பிக்க வாலையும், காதையும் ஆட்டிக்கொண்டு இருக்கும்.  சில நேரங்ககளில், கண்களிலிருந்து ஈரம் கசியவும் செய்யும், கால்களில் சீழ் வடியும் காயங்கள் கூட இருக்கும்.   நாம் கொடுக்கும் சில்லரையையும், சில வேளைகளில் கிடைக்கும் நோட்டுக்களையும் யானைப்பாகனிடம் கொடுத்துவிட்டு, நம் மீது துதிக்கையை தூக்கி 'டோம்' என போட்டு  ஆசிர்வாதம் செய்யும்.   அதற்கென கிடைக்கும் வாழைப் பழங்களை தனது பசிக்கு 'சோளப்பொரியா' தள்ளும்.     இதுதான் நம் ஊரில் நாம் காணும் யானை.  இந்த நம் ஊர் யானை பாவமானதும் கூட.   இந்த கோயிலுக்குள் அடைபட்ட யானைகளுக்கு புத்துணர்வு முகாம் என்பதும் தேவையான ஒன்றே.  


ஆனால் மலையகத்தில், யானை என்பது  ஒரு சொத்து.  மண், பெண், பொன் அதோடு யானையையும் அவர்கள் போற்றுகிறார்கள்.  பொறாமை கொள்கிறார்கள். வஞ்சகம் செய்கிறார்கள். சண்டை செய்கிறார்கள்.   மலைநாடு, யானை, எளிய மனிதன், அரண்மனையின் ஆதிக்கம் என ஒரு நல்ல விறுவிறுப்பான சிறுகதை. இது ஜெயமோகனின் களம்    'கடவுள், யானைகளுக்காக  அருளிய தேசம் கேரளம்'  என பூதத்தான் இந்தக் கதையில் குறிப்பிடுவார்.  அது கதையாக இருந்தாலும், அது தான் உண்மையோ என்றே சிறுகதையின் முடிவில் தோன்ற வைக்கிறது. 


யானையின் மூளையின் எடை 5 கிலோ.  நீல திமிங்கலத்தின் எடை அதை விட இருமடங்காம்.   யானைகள் மனிதர்கள் போலவே யோசிக்கும் திறன் உடையவை என்றும் கூறுகிறார்கள்.  இவ்வளவு பிரமாண்டமான யானையை,  ஒரு சாதாரண மனிதன், ஒரு சிறிய அங்குலத்தை வைத்து எவ்வாறு அடக்குகின்றான் என்பது ஒரு ஆச்சரியமான விஷயம்.  பூதத்தான் அது போன்ற ஒரு சாதாரண  மனிதன், பாகன்.   


ராஜன் எனும் 11 அடி உயர பெரும் யானையை கொல்வதற்கு,  அவனுக்கு கட்டளை வருகிறது.  காரியஸ்தன் அதனை கூறுகிறார், கெஞ்சுகிறார்.   மிரட்டுகிறார்.  அதுவரை அவனை அடிமை போல காண்பித்து இருப்பார்கள்.   கேரளா கடவுளின் தேசம் என  நெடு நீண்ட கதையை ஒரே மூச்சோடு சொல்லி,  அவர்களிடம் பொங்கி எழுந்து சவால் விட்டு வெளியேறுவான் பூதத்தான்.  அண்ணாமலை திரைப்படத்தில் ரஜினிகாந்த் தொடையைத் தட்டி சபதமிட்டு வெளியேறுவது போல,  'சாது மிரண்டால்' எனும் ட்ரான்ஸ்பர்மேஷன் இடம்.  வேறொருவர் மூலமும்  யானையை கொன்றுவிடுவார்கள் என தெரிந்து, நேராக ஒரே சிந்தனை ஓட்டத்தோடு ராஜனை நோக்கி செல்வார்.   அது யானையை காப்பற்றும் வெறிகொண்ட ஓட்டம்.  ஆறு, ஊர், காடு என பல மைல் தூரம் அவனின் ஓட்டத்தை விவரித்த இடம், காட்சி போல் விரிகிறது 


பல மைல்கள் தூரத்தில் இருக்கும், முன்பின் பார்க்காத ராஜன் எனும் யானைக்கு இவன் வருவது எப்படித் தெரிகிறது.  அவனை எப்படி ஆரத் தழுவுகிறது .  அவனோடு எப்படி அன்பு கொள்கிறது.  கதை தான்.  இருந்தாலும் 'ரகசியம்' புத்தகத்தில் படித்த ஒரு விசயம் இங்கு பொருந்துகிறது.  இந்த பிரபஞ்சத்தில்  ஒவ்வொறுவரும், நேரடி பேச்சு  இல்லாமல் எண்ண அலைவரிசைகளாலும், தொடர்புகள் நிகழ்ந்து  கொண்டிருக்கிறதாம்.  அந்த எண்ண அலைவரிசை இந்த பூதத்தானுக்கும்,  யானைக்கும் இடையில் நிகழ்ந்து இருக்குமோ என்று யோசிக்க வைக்கின்றது.  


சிலவேளைகளில் நம்ம ஊர் கோயில்களில் பரபர என்று சாமியாடி வாக்குமூலம் கொடுப்பார்கள்  சிலர்.   அதுவும் இதனால்தானோ? அந்த instinct  எனும் அலைவரிசை என்பது மூடநம்பிக்கையோ?  இது சாத்தியமா? அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப் பட்ட ஒன்றா? 


"ரகசியத்தில்" என்ன கூறுகிறார்கள் என்றால், ஒரு விஷயத்தை நீங்கள் யோசித்து யோசித்து,  அது உங்கள் கண் முன் காட்சியாக விரிந்துகொண்டே இருக்கும்.  அப்படி யோசித்து யோசித்து, காட்சிப் படுத்திய 

 ஒரு விஷயம்,  கண்டிப்பாக நடக்கும் என்கிறது.     இதைத்தான் அப்துல்கலாம் கனவு காணுங்கள் என்று குறிப்பிட் டார் போல.  சில நேரங்களில் நமக்கே கூட இவ்வாறு தோன்றியிருக்கும்.  "இப்பதான் நான் நினைச்சிட்டு இருந்தேன்,  நீங்க போன் பண்ணீட்டிங்க,உங்களுக்கு 100 வயசு".     இந்த மாதிரியான சில சம்பவங்கள் எதனால்,  எவ்வாறு எப்படி நிகழ்கிறது என்பது தெரியவில்லை.    இந்த பிரபஞ்சம் எண்ண அலைவரிசைகளால் ஆனது தானோ? 


சிறுகதைக்கு மீண்டும் வருவோம்.  

 

//“டேய் நீயாடா பூதத்தான்?” என்றபடி அவர் குருவிபோல ஓசையிட்டு வெற்றிலைச்சாற்றின் மிச்சத்தை கூர்மையாக அவன் மேல் துப்பினார்.//   இந்த ஒரு சொற்றொடரில் அவர்களின் ஆதிக்க மனோநிலையை அறிய முடிகிறது.  


//அவருடைய கூனும் குறுகலும் அகன்றுவிட்டிருந்தன முகமும் வேறுமாதிரி மாறியது//   முதல் காரியஸ்தன் கோவிந்தன் நாயர் அவருடைய இடத்தில் அமர்ந்ததும்  அவர் எஜமானர் ஆகிறார், பூதத்தானை ஏவ ஆரம்பிக்கிறார்.   அடிமைத்தனத்தின் அடுக்கு இங்கு தெரிகிறது.   


ஒரு யானையை வாங்க, 8 யானை விலை கொடுக்க நினைக்கிறார், அரண்மனை ராஜா -கண்ணன்குமாரன்.     நம் ஊர் ஏலத்தில் ஒன்றுமே இல்லாத விசயத்திற்கு வெறும் கெரவத்திற்காக பலர் அதிக விலை கொடுத்து வைத்து வாங்குவது போல தான்.  மீண்டும் அண்ணாமலை படத்தில், ஏலம் எடுக்கும் இடம் எனக்கு ஞாபகம் வருகிறது.  


பெயர்களின் பின் இருக்கும் சமூகம்

யானையின் பெயர்கள்  - வலிய சங்கரன், பர்வதராஜன்.   


அரண்மனையில் உள்ளவர்களின் பெயர்கள் - குமாரன் நாயர் , அரண்மனை ராஜா-கண்ணன்குமாரன் , முதல் காரியஸ்தன் கோவிந்தன் நாயர் , சட்டம்பி கருணாகரன் நாயர், கதகளி ஆசான் கிருஷ்ணன் நாயர் என பெரும்பாலும் பெருந்தெய்வ  கடவுள்களின் பெயர்களே,   பூதத்தானை ஆதிக்கம்  செய்பவர்களுக்கு    உள்ளது.  கூடவே தெய்வமாக போற்றப்படும் யானைக்கும்.   


யானைப்பாகனாக வரும் பூதத்தான்.   இவரின் பின்னே நாயர் உள்ளதா என்றால் இல்லை.  பூதத்தான் ஒரு சிறு தெய்வம்.  பூதத்தான் கோவில் சுடலைமாட சாமி கோவிலோடு கன்யாகுமரியில் திருவிதாங்கோடு  எனும் ஊரில் உள்ளது.  பார்க்க லிங்க்.  


"பூதம் என்பது பேய் பிசாசு அல்ல; இறை தூதன் அல்ல; கந்தர்வன் அல்ல. பூதம் என்பது ஈண்டு நிலம் , நீர் , காற்று , ஆகாயம் , தீ எனும் பஞ்ச பூதமும் அல்ல" -   இவ்வாறு நாஞ்சில் நாடான் கூறுகிறார்.  

அந்த சமூக அடுக்கின் கீழ் மட்டத்தில் இருப்பவனை மேல் மட்டத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் இருப்பவர்கள் எவ்வாறு அவனை மரியாதை இல்லாமல் விழிக்கிறார்கள் என்பது கதையில் இயல்பாக பதிவு செய்யப்பட்டு இருக்கும்.  


ஜெமோகனுக்கு அறிய பொருட்களின் மீதான காதல்  இருக்கும் என நினைக்கிறேன்.  ஆர்சனிக்(Arsenic) - சீமை விஷம் பற்றி இதில் கூறி  இருப்பார்.   அது எவ்வளவு கொடிய விஷம்  என்பதை கூகுளால் அறியமுடிகிறது. 


கதையின் காலம் 50 வருடம் பின்னோக்கி இருக்கலாம்.  ஜெயமோகன் அவர்களுக்கு யானைகளின் மீது ஆகச்சிறந்த பிரியங்கள் இருக்கக்கூடும். அவரது கதைகளில் பெரும்பாலும் யானைகளை சேர்த்துவிடுகிறார் அல்லது நான் அவரின் யானை கதைகளை மட்டும் படித்திருக்கக்கூடும்.  யானை டாக்டர் எனும் கதையும்  ஒரு அற்புதமான ஒன்று.   


இறுதியாக பாகன் பூதத்தானும், யானை ராஜனும் என்ன ஆகிறார்கள்?  சண்டைக்கு வந்தவர்கள் ஏன் அவ்வாறு ஆகிறார்கள்?  அந்த ரகசியத்தில் வரும் பிரபஞ்சத்தின் அலைவரிசை தானோ? 

குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...