ஜெயமோகனின் ராஜன் சிறுகதை. வாசல் குழுவின் வாசிக்கும் நிகழ்வின் மூலம், இந்த மாத இறுதியில் படிக்க நேர்ந்தது. Rhonda Byrne எழுதிய The secret - ரகசியம் எனும் புத்தகம் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் படித்து முடித்திருந்தேன். இவை இரண்டும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு உடையதாக உள்ளது. மொட்டைத்தலை-முழங்கால், அம்மாவாசை-அப்துல் காதர் மாதிரி சம்பந்தம் இல்லாத போல தோணும். இருந்தாலும் பாப்போம்.
யானை எப்போதும் ஆச்சரியமான ஒன்று. எங்கள் ஊர் மொடக்குறிச்சி மாரியம்மன் தேர்த் திருவிழாவில் வருடா வருடம் வரும் யானை, கோயிலின் வலது ஓரம், அசை போட்டுக்கொண்டு அமைதியாக நின்று கொண்டிருக்கும். அதுதான் எப்பொழுதும் யானை என்றதும் என் முன் வந்து நிற்கும் காட்சி. ஆடம்பரமான அலங்காரம் இருக்காது. ஆனாலும் ஒரு பயபக்தி இருக்கும். சற்றுத்தள்ளி யானையின் சாணி, காய்ந்து மண்ணோடு மண்ணாக கிடக்கும். பல பேருக்குப் படிப்பைக் கொடுக்க(?!), மிதிபட்டு சக்கையாக கிடக்கும். லுங்கி அணிந்த பாகன் கூடவே இருப்பார். சில வேலைகளில் ஓரமாக கணேஷ் பீடி குடித்துக் கொண்டும் இருப்பார். 'ஆரம்பத்தில் மிதித்தவர்களுக்கு தான் படிப்பு வருமோ?' என்ற அச்சம் இருந்தாலும், வீட்டில் சொல்வதால், அதனை மீண்டும் மிதித்து இருக்கலாம். கண்ணாடியைத் திருப்பினால், ஆட்டோ எப்படி ஓடும் என்பது அப்பொழுதெல்லாம் தெரியாது.
இப்பொழுதும் எந்த ஒரு பிரம்மாண்டமான பெரும் கோயிலுக்குச் செல்லும் பொழுதும் பார்த்திருப்போம். தேமே என்று அந்தக் கோயிலின் முன்பாகவோ அல்லது ஓரமாகவோ நின்று கொண்டிருக்கும். ஈக்களுக்கு தப்பிக்க வாலையும், காதையும் ஆட்டிக்கொண்டு இருக்கும். சில நேரங்ககளில், கண்களிலிருந்து ஈரம் கசியவும் செய்யும், கால்களில் சீழ் வடியும் காயங்கள் கூட இருக்கும். நாம் கொடுக்கும் சில்லரையையும், சில வேளைகளில் கிடைக்கும் நோட்டுக்களையும் யானைப்பாகனிடம் கொடுத்துவிட்டு, நம் மீது துதிக்கையை தூக்கி 'டோம்' என போட்டு ஆசிர்வாதம் செய்யும். அதற்கென கிடைக்கும் வாழைப் பழங்களை தனது பசிக்கு 'சோளப்பொரியா' தள்ளும். இதுதான் நம் ஊரில் நாம் காணும் யானை. இந்த நம் ஊர் யானை பாவமானதும் கூட. இந்த கோயிலுக்குள் அடைபட்ட யானைகளுக்கு புத்துணர்வு முகாம் என்பதும் தேவையான ஒன்றே.
ஆனால் மலையகத்தில், யானை என்பது ஒரு சொத்து. மண், பெண், பொன் அதோடு யானையையும் அவர்கள் போற்றுகிறார்கள். பொறாமை கொள்கிறார்கள். வஞ்சகம் செய்கிறார்கள். சண்டை செய்கிறார்கள். மலைநாடு, யானை, எளிய மனிதன், அரண்மனையின் ஆதிக்கம் என ஒரு நல்ல விறுவிறுப்பான சிறுகதை. இது ஜெயமோகனின் களம் 'கடவுள், யானைகளுக்காக அருளிய தேசம் கேரளம்' என பூதத்தான் இந்தக் கதையில் குறிப்பிடுவார். அது கதையாக இருந்தாலும், அது தான் உண்மையோ என்றே சிறுகதையின் முடிவில் தோன்ற வைக்கிறது.
யானையின் மூளையின் எடை 5 கிலோ. நீல திமிங்கலத்தின் எடை அதை விட இருமடங்காம். யானைகள் மனிதர்கள் போலவே யோசிக்கும் திறன் உடையவை என்றும் கூறுகிறார்கள். இவ்வளவு பிரமாண்டமான யானையை, ஒரு சாதாரண மனிதன், ஒரு சிறிய அங்குலத்தை வைத்து எவ்வாறு அடக்குகின்றான் என்பது ஒரு ஆச்சரியமான விஷயம். பூதத்தான் அது போன்ற ஒரு சாதாரண மனிதன், பாகன்.
ராஜன் எனும் 11 அடி உயர பெரும் யானையை கொல்வதற்கு, அவனுக்கு கட்டளை வருகிறது. காரியஸ்தன் அதனை கூறுகிறார், கெஞ்சுகிறார். மிரட்டுகிறார். அதுவரை அவனை அடிமை போல காண்பித்து இருப்பார்கள். கேரளா கடவுளின் தேசம் என நெடு நீண்ட கதையை ஒரே மூச்சோடு சொல்லி, அவர்களிடம் பொங்கி எழுந்து சவால் விட்டு வெளியேறுவான் பூதத்தான். அண்ணாமலை திரைப்படத்தில் ரஜினிகாந்த் தொடையைத் தட்டி சபதமிட்டு வெளியேறுவது போல, 'சாது மிரண்டால்' எனும் ட்ரான்ஸ்பர்மேஷன் இடம். வேறொருவர் மூலமும் யானையை கொன்றுவிடுவார்கள் என தெரிந்து, நேராக ஒரே சிந்தனை ஓட்டத்தோடு ராஜனை நோக்கி செல்வார். அது யானையை காப்பற்றும் வெறிகொண்ட ஓட்டம். ஆறு, ஊர், காடு என பல மைல் தூரம் அவனின் ஓட்டத்தை விவரித்த இடம், காட்சி போல் விரிகிறது
பல மைல்கள் தூரத்தில் இருக்கும், முன்பின் பார்க்காத ராஜன் எனும் யானைக்கு இவன் வருவது எப்படித் தெரிகிறது. அவனை எப்படி ஆரத் தழுவுகிறது . அவனோடு எப்படி அன்பு கொள்கிறது. கதை தான். இருந்தாலும் 'ரகசியம்' புத்தகத்தில் படித்த ஒரு விசயம் இங்கு பொருந்துகிறது. இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொறுவரும், நேரடி பேச்சு இல்லாமல் எண்ண அலைவரிசைகளாலும், தொடர்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறதாம். அந்த எண்ண அலைவரிசை இந்த பூதத்தானுக்கும், யானைக்கும் இடையில் நிகழ்ந்து இருக்குமோ என்று யோசிக்க வைக்கின்றது.
சிலவேளைகளில் நம்ம ஊர் கோயில்களில் பரபர என்று சாமியாடி வாக்குமூலம் கொடுப்பார்கள் சிலர். அதுவும் இதனால்தானோ? அந்த instinct எனும் அலைவரிசை என்பது மூடநம்பிக்கையோ? இது சாத்தியமா? அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப் பட்ட ஒன்றா?
"ரகசியத்தில்" என்ன கூறுகிறார்கள் என்றால், ஒரு விஷயத்தை நீங்கள் யோசித்து யோசித்து, அது உங்கள் கண் முன் காட்சியாக விரிந்துகொண்டே இருக்கும். அப்படி யோசித்து யோசித்து, காட்சிப் படுத்திய
ஒரு விஷயம், கண்டிப்பாக நடக்கும் என்கிறது. இதைத்தான் அப்துல்கலாம் கனவு காணுங்கள் என்று குறிப்பிட் டார் போல. சில நேரங்களில் நமக்கே கூட இவ்வாறு தோன்றியிருக்கும். "இப்பதான் நான் நினைச்சிட்டு இருந்தேன், நீங்க போன் பண்ணீட்டிங்க,உங்களுக்கு 100 வயசு". இந்த மாதிரியான சில சம்பவங்கள் எதனால், எவ்வாறு எப்படி நிகழ்கிறது என்பது தெரியவில்லை. இந்த பிரபஞ்சம் எண்ண அலைவரிசைகளால் ஆனது தானோ?
சிறுகதைக்கு மீண்டும் வருவோம்.
//“டேய் நீயாடா பூதத்தான்?” என்றபடி அவர் குருவிபோல ஓசையிட்டு வெற்றிலைச்சாற்றின் மிச்சத்தை கூர்மையாக அவன் மேல் துப்பினார்.// இந்த ஒரு சொற்றொடரில் அவர்களின் ஆதிக்க மனோநிலையை அறிய முடிகிறது.
//அவருடைய கூனும் குறுகலும் அகன்றுவிட்டிருந்தன முகமும் வேறுமாதிரி மாறியது// முதல் காரியஸ்தன் கோவிந்தன் நாயர் அவருடைய இடத்தில் அமர்ந்ததும் அவர் எஜமானர் ஆகிறார், பூதத்தானை ஏவ ஆரம்பிக்கிறார். அடிமைத்தனத்தின் அடுக்கு இங்கு தெரிகிறது.
ஒரு யானையை வாங்க, 8 யானை விலை கொடுக்க நினைக்கிறார், அரண்மனை ராஜா -கண்ணன்குமாரன். நம் ஊர் ஏலத்தில் ஒன்றுமே இல்லாத விசயத்திற்கு வெறும் கெரவத்திற்காக பலர் அதிக விலை கொடுத்து வைத்து வாங்குவது போல தான். மீண்டும் அண்ணாமலை படத்தில், ஏலம் எடுக்கும் இடம் எனக்கு ஞாபகம் வருகிறது.
பெயர்களின் பின் இருக்கும் சமூகம்
யானையின் பெயர்கள் - வலிய சங்கரன், பர்வதராஜன்.
அரண்மனையில் உள்ளவர்களின் பெயர்கள் - குமாரன் நாயர் , அரண்மனை ராஜா-கண்ணன்குமாரன் , முதல் காரியஸ்தன் கோவிந்தன் நாயர் , சட்டம்பி கருணாகரன் நாயர், கதகளி ஆசான் கிருஷ்ணன் நாயர் என பெரும்பாலும் பெருந்தெய்வ கடவுள்களின் பெயர்களே, பூதத்தானை ஆதிக்கம் செய்பவர்களுக்கு உள்ளது. கூடவே தெய்வமாக போற்றப்படும் யானைக்கும்.
யானைப்பாகனாக வரும் பூதத்தான். இவரின் பின்னே நாயர் உள்ளதா என்றால் இல்லை. பூதத்தான் ஒரு சிறு தெய்வம். பூதத்தான் கோவில் சுடலைமாட சாமி கோவிலோடு கன்யாகுமரியில் திருவிதாங்கோடு எனும் ஊரில் உள்ளது. பார்க்க லிங்க்.
"பூதம் என்பது பேய் பிசாசு அல்ல; இறை தூதன் அல்ல; கந்தர்வன் அல்ல. பூதம் என்பது ஈண்டு நிலம் , நீர் , காற்று , ஆகாயம் , தீ எனும் பஞ்ச பூதமும் அல்ல" - இவ்வாறு நாஞ்சில் நாடான் கூறுகிறார்.
அந்த சமூக அடுக்கின் கீழ் மட்டத்தில் இருப்பவனை மேல் மட்டத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் இருப்பவர்கள் எவ்வாறு அவனை மரியாதை இல்லாமல் விழிக்கிறார்கள் என்பது கதையில் இயல்பாக பதிவு செய்யப்பட்டு இருக்கும்.
ஜெமோகனுக்கு அறிய பொருட்களின் மீதான காதல் இருக்கும் என நினைக்கிறேன். ஆர்சனிக்(Arsenic) - சீமை விஷம் பற்றி இதில் கூறி இருப்பார். அது எவ்வளவு கொடிய விஷம் என்பதை கூகுளால் அறியமுடிகிறது.
கதையின் காலம் 50 வருடம் பின்னோக்கி இருக்கலாம். ஜெயமோகன் அவர்களுக்கு யானைகளின் மீது ஆகச்சிறந்த பிரியங்கள் இருக்கக்கூடும். அவரது கதைகளில் பெரும்பாலும் யானைகளை சேர்த்துவிடுகிறார் அல்லது நான் அவரின் யானை கதைகளை மட்டும் படித்திருக்கக்கூடும். யானை டாக்டர் எனும் கதையும் ஒரு அற்புதமான ஒன்று.
இறுதியாக பாகன் பூதத்தானும், யானை ராஜனும் என்ன ஆகிறார்கள்? சண்டைக்கு வந்தவர்கள் ஏன் அவ்வாறு ஆகிறார்கள்? அந்த ரகசியத்தில் வரும் பிரபஞ்சத்தின் அலைவரிசை தானோ?
No comments:
Post a Comment