Sunday, August 30, 2020
பெங்களூர்-ஈரோடு; கொரோனாவில்
புதன்கிழமை சந்தை
காரோனா அதன்போக்கில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. பலதரப்பட்ட மக்கள் வெளியே வந்து அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஊரில் திருமணங்கள், கிடா வெட்டு விசேஷங்கள் குறைந்த எண்ணிக்கையில் நிகழத் துவங்கியுள்ளது. அரசும் லாக் டவுனை(?!) கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தி வருகிறது. இருந்தாலும் நகரங்களில் முடிந்தளவு மக்கள் இன்னும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறோம். முன்புபோல இயல்பான நிலைக்கு மாறி விட்டோமா? என்றால் இல்லவே இல்லை.
கடந்த ஆறுமாத கால கட்டம் பல பழக்கங்களை மாற்றி உள்ளது. அதிலும் கடைகளுக்கு சென்று மளிகை பொருட்கள், காய்கறி வாங்கும் முறை முற்றிலும் மாறி இருக்கின்றது. இந்த நான்கைந்து மாதங்களில் காய்கறிகளை வாங்கியவுடன் சுத்தமாக கழுவியது போல், வேறு எப்போதும் கழுவியது உண்டா என்று யோசித்துக் கொண்டிருக்கின்றேன். காய்கறிகள் கழுவிக்கொண்டு இருக்கும்பொழுது சோகமாக இப்படியும் நான் உளறுவது உண்டு 'காவியங்கள் உனைப் பாட காத்திருக்கும் பொழுது, காய்கறிகளை நீ கழுவினால் என்னவாகும் மனது' என்று.
லாக்டவுன் ஆரம்பித்த புதிதில் செய்த செயல்கள் வரலாறு முக்கியம் அமைச்சரே போன்றவை. காய்கறிகள் வாங்கி வந்தவுடன் அவற்றை வெளியே வைத்து, முக்கால் பக்கெட் தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் போட்டு தண்ணீர் கரைசல் தயாராகும். அதில் எல்லா காய்கறிகளையும் கொட்டி, கொஞ்ச நேரம் ஊற வைத்து விடுவேன். பின் ஒரு பெரிய துணியை விரித்து, அதன் மேல் காய்கறிகளைக் கொட்டி நீண்ட நேரம் ஈரம் காய உலர வைத்து விடுவோம். அதன் பின் அதனை குளிர்சாதன பெட்டியில் ஒவ்வொறாக தனி தனி டப்பா அல்லது கவர் அல்லது பையில் எடுத்து வைப்போம். இது ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாமல் நடைபெற்று வந்தது.
காய்கறிக்கே அப்படி என்றால் நமக்கு. நேராக குளியல் அறைக்கு சென்று குளித்துவிட்டு, அந்த துணிமணிகளை சோப்பு போட்டு துவைத்து காயப்போட்டு விட்டுத்தான் அடுத்த வேலை. வேறு ஏதேனும் காய்கறிகள் தவிர மளிகைப் பொருட்கள் வாங்கி வந்தால் அதனையும் வெளியில் வைத்துவிட்டு, அதற்கும் சனிடைசர் அல்லது டெட்டால் கரைசலில் துடைத்து வைத்ததும் நடந்தது. பின்னர் ஓரிரு நாட்கள் கழித்துத் தான் அந்தப் பொருட்களை எடுத்து உபயோகப் படுத்தி இருக்கிறோம்.
அதுவும் லாக்டவுன் ஆரம்பித்த மார்ச் இறுதியில் இது மிகவும் அதிகம். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, கடந்த இரு மாதங்களாக அதுவும் மங்கிப் போய் உள்ளது. கொரோனாவை நாம் புரிந்து கொள்ள ஆர்மபித்துவிட்டோம் எனலாம் அல்லது சோம்பேறித்தனம் என்றும் கூறலாம். காய்கறிகளின் மூலமாக கொரோனா தொற்று வராது என்று நம்பிக் கொண்டும் இருக்கலாம்.
அதுபோல எங்கும் தொடாமல் காய்கறிகளை வாங்கி விட்டு வந்தவுடன், அதற்காக கொண்டு சென்ற பணத்தை அப்படியே சோப்பு நீரில் ஊறவைத்து கழுவி அதையும் காய வைத்துவிட்டு, வண்டி சாவியையும் கழுவி காய வைத்துவிட்டு பின்னர்தான் குளிக்க செல்வேன். கூடவே வண்டியின் கைப்பிடி, கதவு என தொட்ட ஒவ்வொன்றையும் துடைத்தது வரலாற்றில் குறித்துக்கொள்ள வேண்டும்.
முதல் ஓரிரு மாதங்கள் இப்படியாகத் தான் சென்றது. அதன் பிறகு கிட்டத்தட்ட அனைத்து பண பரிமாற்றமும் Gpay மற்றும் paytm க்கு மாறியிருந்தது. இப்பொழுது பணம் அவ்வளவாக எடுத்துச் செல்வதில்லை. ஆனாலும் வெளியில் சாலையில் கடை போட்டிருக்கும் அந்த பாட்டியை பார்த்தவுடன் அவர்களிடம் தான் வாங்க தோன்றுகிறது.
இது ஒருபுறமிருக்க எங்களது கம்யூனிட்டிக்கு நான்கு சக்கர வாகனத்தில், ஒருவர் காய்கறியை நேரடியாக கொண்டு வர ஆரம்பித்து விட்டார். இது இன்னும் சுலபமாகவே இருந்தது. அவர் உள்ளே நுழைந்ததும் ஆப் அலாரம் அடிக்கும். பலர் பரபரப்பாக ஓடி வந்து முதலில் வாங்க ஆரம்பித்தார்கள். அந்த கூட்டம் எனக்கு சற்று பயத்தை கொடுத்ததால், கூட்டம் குறைந்த பின்னர் கடைசியாக சென்று வாங்குவதற்கு பழக்கப்படுத்திக் கொண்டேன். அவரிடமும் நெருக்கம் ஆகி விட்டது.
"என்ன சார், இன்னிக்கு ரொம்ப லேட்டா வரீங்க?" "கீரை பிரெஷ் சார் வாங்கிக்கோங்க" என்பார். கன்னடமும், தெலுங்கும் ஹிந்தியும் பேசுவார். இந்த மொழி சார்ந்த விஷயம் பெங்களூரில் ஆச்சர்யமான ஒன்று. தொழில் செய்யும் பலரும் குறைந்தது மூன்று நான்கு மொழிகளாவது பேசுவார்கள்.
சில வாரங்கள் அவர்களின் குழந்தைகளோடு வந்தார். "என்ன இன்னிக்கு உங்க பசங்கள காணோம்? " "இல்ல சார் ரொம்ப லேட் ஆகுது, அவங்க சாப்பிட லேட் ஆகிடுது" என்றார்.
"இன்னிக்கு என்ன ஆச்சு ரொம்ப லேட்டா வந்துருக்கீங்க" எனும் மற்றோரு நாளின் கேள்விக்கு " சார், வேற வண்டி சார் இது, என்னோட வண்டி பஞ்சர் ஆயிடுச்சு" என்பார்.
மற்றொரு நாள் "இன்னிக்கி KR புரம் மார்க்கெட் போகலைங்க.." "கொரோன அந்த பக்கம் இருக்கறதால இப்படி இந்த பக்கமா போயி சிந்தாமணியில் வாங்கிட்டு வந்துட்டேன்."
இவ்வாறாக பலவாறான பேச்சுக்கள் அவரோடு தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. பெரும்பாலான காய்கறிகள் அவரிடம் பேரம் பேசாமல் வாங்கிச் செல்வேன். ஒரு சிலவற்றை வேறோரிடத்தில் வாங்கினால்
குறைவாகத்தான் இருக்கும். அங்குள்ள ஒரு சிலர் வெளியில கம்மியா இருக்கு என பேரம் பேசுவார்கள். அது ஏனோ இவர்களிடம் பேரம் பேசும் ஆட்களை பார்த்தவுடன் சற்று ஆயாசமாக தான் இருக்கின்றது. இவர்களிடம் பேரம் பேசி என்ன கொண்டு செல்லப் போகிறார்கள். என்ன நூறு ரூபாயா அதிகமாக வைத்து விடுவார்கள் ? சூப்பர் மார்க்கெட்டிலும் அல்லது அமேசான்களில் அதிகமாக வைத்திருப்பது போல. எனக்கு கண்கூடாக தெரிந்தது வெளியில் நான் சென்று வாங்கினால் ஒரு பத்து இருபது ரூபாய் குறையத்தான் செய்யும். பரவாயில்லை. நம்மைத் தேடி வருகின்றார். அவரிடம் வாங்குவது தானே முறையாக இருக்கும்.
எனக்கு இந்த மாதிரி வெளியில் சென்று காய்கறி வாங்கிவிட்டு வந்தவுடன் இவ்வளவு சுத்தமாக இருப்பது, எனது தாத்தாவின் காலத்தை நினைவூட்டியது. பள்ளி முடிந்து புதன்கிழமை என்றதும் அவ்வளவு மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கும். ஆயாவும், தாத்தாவும் சந்தையிலிருந்து வாங்கி வரும் தயிர்வடைக்காக. இன்றும் அவர்கள் நினைவு தினம் கும்பிடும் வேளையிலே, தயிர்வடை அவர்களுக்கு பிரியமானது என இலையில் படைப்பது உண்டு. அல்லி இலையில் சுற்றி அடியில் ஒரு காகிதம் வைத்து நூலில் சுற்றப்பட்டு இருக்கும் அந்த பொட்டலம். அதில் குட்டி குட்டி போண்டாக்கள். ஒன்றை எடுத்து வாயில் போட்டாலும், அது அப்படியே மெதுவாக தயிரின் புளிப்புச் சுவையோடு கலந்து அவ்வளவு அமிர்தமாக இருக்கும். இப்பொழுதும் இதை எழுத நாவில் எச்சில் ஊறுகிறது.
சந்தைக்கு சென்று விட்டு வந்தவுடன் நேரடியாக கிணத்தடிக்கு சென்று குளித்துவிடுவார். அனைத்து உடைமைகளையும் துவைத்து காயப்போட்டு விட்டுத்தான் தாத்தா உள்ளே செல்வார். இந்தப் பழக்கத்தை அப்பாவிடமும் கண்டதுண்டு. புதன்கிழமை சந்தை சென்று வந்ததும் என்ன தீனி இருக்கும் என்று பார்க்கும் நான் தான், அந்த காய்கறிகளை எங்கள் வீட்டில் எடுத்து அடுக்குவது உண்டு. அந்த வாரத்திற்கு தேவையான காய்கறிகள் என அனைத்தையும் பரந்த மூங்கில் கூடைகளில் கூறு போட்டு வைப்பதும் உண்டு. முக்கியமாக அப்பொழுது ஆப்பிள் மற்றும் மாதுளை கிடைப்பது அரிது. அன்றைய வார சந்தைக்கும் இன்று வாரம் ஒருமுறை வாங்குவதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. இடையில்தான் தினமும் ஒருமுறை காய்கறிகள் வாங்க வேண்டும் என்பது வந்திருக்கக்கூடும் என்று நினைக்கின்றேன்.
அதுபோலவே அவர் காலத்தில் கசங்கிய, கிழிந்த, அழுக்குப்படிந்த ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் நோட்டுகளை கடைகளில் வாங்க மாட்டார்கள். அதனை சோப்பு போட்டு கழுவி, புத்தம் புது நோட்டு போல ஆக்கி செலுத்தி விடுவார். அவர்கள் காலத்தில், 2 ரூபாயே சந்தை செலவுக்கு அதிகம் என்பார்.
இன்று கொரோனா காலத்தில் சில பழைய பழக்கங்களை நம்மை அறியாமல் நாம் ஏற்றுக்கொண்டு இருக்கிறோம்.
Saturday, August 01, 2020
ஊரும் நீரும்
இன்று நாம் குடிக்கும் நீர் RO மூலம் சுத்தப்படுத்தி சுகாதாரமான நீரை குடிக்கிறோம். கடைகளில் கேன்களில் கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட நீரை குடிக்க பயன்படுத்துகிறோம். இப்பொழுது எங்கள் ஊருக்கு சுத்திகரிக்கப்பட்ட காவிரி நீர் பல மைல் கடந்து தெருமுனைகளுக்கும், சிலரின் வீடுகளுக்குமே வருகிறது. தண்ணீரை வியாபாரமாக்கி உள்ளார்கள் எனும் சர்ச்சைக்கு செல்லவில்லை. அதேபோல காவிரியில் கலக்கும் கழிவுகளுக்கும் செல்லவில்லை. அதில் இருக்கும் சில பிரச்சினைகள் களையப்பட வேண்டும். அது பலரும் பேசிய விஷயம். ஆனால் இந்த சுத்தமான சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடிக்கும் இந்த சுகாதாரமான நிலைமைக்கு எப்படி வந்தோம் என்பதை அறிந்துகொள்ள இந்த கட்டுரை.
எங்கள் ஊரின் ஆரம்பப் பள்ளியின் அருகில் ஒரு அமுக்கு பைப் இருக்கும். அது தான் எங்கள் ஊருக்கு வந்த முதல் அடி பம்ப். அதுவரையில் ஊரின் மத்தியில் இருந்த கிணற்றில் இருந்து மட்டுமே தண்ணீர் சேந்தி எடுத்துச் செல்வார்கள். அந்த கிணற்றை சுற்றியும் வட்டமாக இடுப்புயர சுவர். அதன் மேல் சம இடைவெளியில் மூன்று சுவர் தடிமனுக்கு தூண்கள். அதன் மேல் மூன்று பக்கம் இரும்பில் விட்டம். ஒரு பருந்துப் பார்வை பார்த்தால் முக்கோணமாக இருக்கும். ஒவ்வொரு விட்டத்தின் நடுவில் உருளை இருக்கும். அதில் கயிறு போட்டு பக்கெட் ஒன்றை கட்டி, அதனைக் கிணற்றில் விட்டு தண்ணீர் இறைப்பார்கள். சிலர் 'அட பாக்கெட் பக்கெட்டா ஊத்தி என்னைக்கு நாம்பறது" என குடங்களையே கயிற்றில் கட்டி ஒரே இழுப்பில் தண்ணீர் கிணற்றில் இருந்து எடுத்துவிடுவார்கள். ஊர்க்காரர்கள் புரளி பேசும் இடம். சைட் அடிக்க கூடுமிடமாகவும் இருக்கும். இது தான் ஒட்டுமொத்த ஊரின் நல்ல குடிநீருக்கான மையம்.
அப்பாவின் காலத்தில் அந்த ஊர்க்கிணறும் இல்லை. ஊர்ப் பெரியவர்களின் வீடுகளில் கிணறு இருக்குமாம். அதுவும் மூன்றே மூன்று. அதில் பள்ளிக்கு செல்லும்முன் தண்ணீர் பல நடை மோந்து ஊற்றி வைக்க வேண்டும். பெரும்பாலும் அந்த கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டால், காட்டுக்குள் இருக்கும் செம்மண்குழி கிணற்றில் எடுப்பார்களாம்.
அடி பம்ப் வந்தவுடன் நல்ல குடிநீருக்கான மையமாக இந்த பம்ப் மாறியிருந்தது. சைக்கிள்களில் இருபுறமும் குடங்களைக் கட்டிக்கொண்டு பலரும் எடுத்துச் செல்வார்கள். நாங்கள் இரண்டு பேர் சேர்ந்து இதனை வேகமாக அழுத்துவது ஒரு விளையாட்டு. அந்த பம்பை அடைத்து வேக வேகமாக அழுத்தி சுற்றிலும் தண்ணீரை பீச்சி அடித்து ட்ரவுசர் சட்டைகளை நனைத்து ஜாலியாக நடைபெறும் தினசரி சம்பவம். அதிலும் யாரும் இல்லாதபோது நாமே அடித்துவிட்டு வேகமாக ஓடிவந்து தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
தென்னை மரங்களை சுற்றி ஒரு பாத்தி கட்டி அதனை நிரப்புவது தான் கடைசி பிரிவேளையில் நடக்கும். கிட்டத்தட்ட அதில் தண்ணீர் நிரம்பும் வரை நீர் எடுத்திருப்போம். பள்ளி சுற்றிலும் இருக்கும் வேலிக்கும் தண்ணீரை ஊற்றவேண்டும். பூந்தோட்ட காவல்காரன் வந்த சமயம். அந்தோணி வண்டி என்று இரு நண்பர்கள் தண்ணீரை வேகமாக எடுத்து வருவார்கள். அடி பைப்பிலிருந்து சிறிய மேடு ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக ஏறி பள்ளிக்கு கொண்டு சென்று மரங்களுக்கு ஊற்ற வேண்டும். இன்று பள்ளி சுற்றுப்புற சுவரோடு, கான்க்ரீட் காட்டிடத்துடன் அழகாக உள்ளது.
அந்த பைப்பில் தண்ணீர் வரும் தலைகீழான L வடிவ பைப்பில் பாக்கெட் மாட்டி தண்ணீர் பிடிப்போம். ஒருமுறை பிடிக்கும்பொழுது கீழே விழுந்து பெருவிரல் நசுங்கி, பக்கத்தில் இருந்த அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் தான் கட்டு போட்டுவிட்டு இருந்தார்கள். இப்பொழுது அந்த பம்பில் இருந்து மோட்டர் வைத்து மேல்நிலைத்தொட்டி கட்டிவிட்டார்கள். அதன் வழியாக கிட்டத்தட்ட ஒவ்வொரு வீதிக்கும் தண்ணீர் வரும். பத்தடி தொலைவில் சென்று பிடித்துக்கொள்ளலாம். அதன் அருகில் காவேரி நீர் பைப்பும் இருக்கும்.
இன்று போர் போட்டு் பராமரிப்பு இல்லாமல் உள்ள ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுந்து தத்தளிப்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. ஆனால் இந்த அடி பம்புகளின் வரலாறு எத்தனை நெடியது. நீர் சம்பந்தமான நோய்களை தீர்த்ததில் பெரும் பங்கு வகித்துள்ளது.
Guinea Worm Water Based Disease என்ற ஒரு நோயை உலகம் முழுவதும் தீர்க்க உலக சுகாதார நிறுவனம் நிதியை ஒதுக்குகிறது. 1980 இந்த திட்டம் ஒருங்கிணைத்த இந்தியாவில் ஆரம்பிக்கிறது. பொது சுகாதாரத்தில் முதல் இடத்தில் இருந்த தமிழகத்தில் நாலே வருடங்களில், நாம் சாதித்ததை ராஜஸ்தானால் 16 வருடங்கள் கழித்து தான் சாதிக்க முடிந்துள்ளது.
லிங்க் https://ncdc.gov.in/index1.php?lang=1&level=1&sublinkid=142&lid=73
இது என்ன நோய்? சேந்து கிணறு அமைப்புக்கு முன்பாக வெட்டப்பட்ட கிணறுகளில் படி வைத்து குடிநீரை எடுத்து வந்துள்ளார்கள். இன்றும் ராஜஸ்தானில் படிவைத்த பிரமாண்ட கிணறுகள் ஒரு வரலாற்று ஆவணம் போல அழகாக இருக்கும்.
குடிக்கும் நீரில் நரம்பு சிலந்தி நோய் இருப்பவர்கள் மூலம் அந்த லார்வா குடிநீரில் கலந்துவிடும். L3 லார்வா, இரைப்பையினுள் செல்லுதல், காலில் இருக்கும் புழு நீரினுள் L1 லார்வாக்களை வெளியிடுதல். இவை இரண்டையும் தடுத்தாலே நரம்பு சிலந்தி புழு பரவ முடியாது. அதற்கு என்ன செய்ய வேண்டும்? குடிக்கும் நீரில் நரம்பு சிலந்தியின் லார்வா செல்லுவதை தடுக்க ஆழ் துளை கிணறுகளை அமைத்து கைபம்புகளை அமைத்தல் தான். அதன்பின் தண்ணீரை காய்ச்சி குடித்தல்.
இந்த பிரச்சினை தமிழ் நாட்டில் பெரும்பாலும் தஞ்சை கும்பகோணம் பகுதிகளில் இருந்துள்ளது. குளம் அதிகமாக இருந்த இடங்கள் அவை.
நாடு முழுவதும் சுகாதாரத்திற்கான சிந்தனை மாற்றத்தை அளித்த நிகழ்வு "நரம்பு சிலந்தி ஒழிப்பு திட்டம்" தான். இதற்கான முக்கிய விஷயமாக கருதுவது நமது அரசு ஆரம்ப சுகாதார அமைப்பின் கட்டுமானம். அதனால் தான் நான்கு வருடத்தில் அதனை முடிக்க முடிந்துள்ளது.
இந்த நோய் புத்தகத்தில் கூறப்பட்ட ஒன்று, அது தவிர நீரினால் பரவும் காலரா, டயறியா போன்றவை எல்லாம் இன்று இல்லை. இன்று கொரோனாவுக்கு போராடும் நிலையில் அதற்கான கட்டமைப்பு எப்படி உள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்
நான் அங்கு படித்துக் கொண்டு இருந்த போதுதான் , பள்ளியை ஒட்டி அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் ஒன்றை ஆரம்பித்தார்கள். புதிதாய் ஒரு கட்டிடம் இன்றும் அன்று காலை திறப்பு விழாவில் போது இட்ட கேசரி, தக்காளி சோறும் தயிர் வெங்காயமும் நினைவில் உள்ளது. அப்பொழுதெல்லாம் காலை நடக்கும் புதுமனை புகுவிழாக்களில் இந்த மெனுதான். சற்று வசதி உள்ளவர்கள் மெதுவடையும் போடுவார்கள்.
ஆரம்ப காலத்தில் இவை வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வந்து கொண்டுள்ளது. சில பல சமூகப் பிரச்சினைகளும் இந்த மருத்துவமனையில் தங்கி வேலை பார்க்கத்தவர்களிடம் நடந்தும் உள்ளது அதெல்லாம் வேறு விசயம். இந்த ஆரம்ப துணை சுகாதார நிலையம் கிட்டத்தட்ட 5000 மக்களுக்கானதாக இருந்துள்ளது. இவை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களுடன் இணைக்கப்பட்டு இருக்கும். இவர்களின் முக்கிய வேலை வருமுன் காப்போம் என்பது. அதாவது இவர்களின் பணி அரசின் சுகாதார திட்டங்களை கடைக்கோடி கிராமம் வரை சேர்ப்பது . குடும்ப நலம், தடுப்பூசி, தொழுநோய் தடுப்பு, பள்ளி சிறுவர்களின் நலம் , தொற்று பரவாமல் தடுப்பது என்கிறார் இந்த அமைப்பில் தனது பணியை ஆரம்பித்து அதில் ஓய்வு பெற்ற என் பக்கத்துக்கு ஊர் மாமா. அவரிடம் பேசியபோது இந்த சுகாதார அமைப்பை உருவாக்க அவர்களின் போராட்டங்களை கூறினார்
இவர்கள் டீம் தான் பள்ளிக்கு அம்மை தடுப்பூசி போட வருவார்கள். இவர்களின் ஜீப் வந்ததும், 'அய்யயோ இன்னிக்கு ஊசி போட்டு் விடுவார்களோ' என பயந்ததும் உண்டு. ஒரு வழியாக அழுது புரண்டு போட்டுக்கொண்டால் ஊசி போட்ட இடம் வீங்கிக் கொள்ளும், அன்று வெந்நீர் ஒத்தடம் கொடுப்பார்கள்.
வந்ததும் காப்போம் என்பது அரசு மருத்துவமனையின் கடமை. ஆரம்ப துணை சுகாதார நிலையித்தின் வேலை வருமுன் காப்பது. அப்பொழுதெல்லாம களத்தில் அதிகமாக வேலை செய்தார்களாம். இப்பொழுது வேலை செய்ததை எழுதி வைப்பதில் உள்ளதாக கூறினார்.
அந்த ஆரம்ப துணை சுகாதார நிலையங்கள் 85களில் கட்ட ஊரில் பேச்சுவார்த்தை நடத்தி, இடம் வாங்கி கட்டி உள்ளார்கள். இந்த அமைப்பு வியப்பில் ஆழ்த்திக்கொண்டு உள்ளது. குடிநீர் சுகாதாரத்தில் எங்கிருந்து எங்கு வந்துள்ளோம் என்பதுவும் சாதனை தான்.
Emotional intelligence கற்போம்...
Emotional intelligence - உணர்வுசார் நுண்ணறிவு இந்த நூற்றாண்டின் கண்டுபிடிப்பு. உலக பொருளாதார நிறுவனம் வரும் காலங்களில், ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒரு EI ஸ்பெசலிஸ்ட்டின் தேவை கண்டிப்பாக இருக்கலாம் என்கிறது. கூடவே இப்பொழுது உயர் பதவியில் இருப்பவர்கள் EI அதிகம் உள்ளவர்கள் எனபதை கோடிட்டுக் காட்டுகிறது. IQ நிறைய இருப்பர்களாக இருந்தாலும், EQ மட்டுமே அவர்களை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்று அமர்த்தி வைக்கிறதாம். IQ மட்டுமே இருப்பவர்கள் ஒரு கட்டத்தில் தேங்கி விடுகிறார்கள்.
"எப்பொழுதெல்லாம் உணர்ச்சி வயப்படுகிறோமோ, அப்பொழுது நமது IQ ஒரு முட்டுச் சந்தில் மாட்டிக்கொள்ளும்" என்கிறார் Daniel Goleman. இவர் தான் உணர்வுசார் நுண்ணறிவின் தந்தை. இவரது Emotional intelligence புத்தகம் 1995ல் வெளிவந்துள்ளது.
உணர்வுசார் நுண்ணறிவு எந்த கால கட்டத்திலும், வயதிலும் அதனை வளர்த்துக்கொள்ளலாம். வேறு எந்தப் பின்னணியும் தேவை இல்லை. EIக்காக ஐந்து முக்கியக் குறிப்புகளை கூறுகிறார். இவை நமக்கு வேறு விதமான பெயர்களில், வேறு வேறு தளங்களில் சொல்லப்பட்டும் இருக்கலாம்
Self-awareness - நம்மை அறிந்து கொள்வது - நான் யார்
Self-regulation - நம்மை முறைப்படுத்திக் கொள்வது - ஒழுக்கம்
Motivation - நமக்கான உந்து சக்தி - முனைப்பு
Empathy - மற்றவர்களைப் புரிந்து கொள்வது - 'அனுசரிச்சு போ'
Social skills - மற்றவர்களிடம் எப்படி உரையாடுகிறோம் என்பது - 'இனிய உளவாக இன்னாத'
இப்பொழுது இதனைப்பற்றி விளக்கி கூறப்போவதில்லை.
IQவை அப்படியே ப்ரோக்ராம் செய்தால் அது "ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்" (AI). பல ரோபோக்களை உருவாக்கி உலவவிட முடியும். மனிதன் செய்ய முடியாதவற்றையும் ரோபோக்கள் கனகச்சிதமாக செய்யும். IQ வழி வந்த ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனும் AI கும், IQ மட்டுமே நிறைந்த புத்திகூர்மை அதிகம் வாய்ந்த மனிதர்களுக்கும் என்ன வித்யாசம்? இங்கே தான் இந்த 'உணர்வு சார்ந்த நுண்ணறிவின்' தேவை மனிதனை இயல்பான, எதார்த்தமான மனிதன் ஆக்குகிறது. ரோபோவிடம் இருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டுவது உணர்வு தான்.
AI தற்போதைய நிலையில் திரும்ப திரும்ப மனிதன் செய்யும் வேலைகளை செய்வதற்கு மட்டுமே உபயோகப்படுத்துகிறார்கள். IBM’s Watson ரோபோ இப்பொழுதே மருத்துவ துறையில் பல சிக்கலான பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டு இருக்கிறது. ரோபோ திரைப்படத்தில் சிட்டி ரோபோ காதல் வயப்படும். அழகாக ஐஸ்வர்யா ராயிடம் பூ கொடுத்து காதல் செய்யும். மனிதன் செய்யும் தவறை இது மிக நேர்த்தியாக தவறில்லாமல் செய்யும். இந்த உணர்வு பூர்வமான மனிதன் போன்றவரைத்தான் ஐஸ்வர்யா ராயும் விரும்புவார். எனினும் ரோபோ என கூறி ரோபோவை கைவிட்டுவிடுவார். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ரோபோக்கள், உணர்வுப்பூர்வமானதாக இல்லாவிடினும், வருங்காலத்தில் ரோபோவின் வில்லனைப்போல அதுவும் யோசிக்க ஆரம்பிக்கலாம்.
படையப்பாவில் ரஜினிகாந்த் , சௌந்தர்யாவிடம் காதலை கூற செல்வார். சௌந்தர்யாவை பார்த்து படபடப்பாக உளறுவார். அதுதான் ஒரு சாதாரண மனிதர் செய்வது. அதே படத்தில் ரஜினி, ரம்யாகிருஷ்ணனிடம் பஞ்ச் பேசும்போது படபடப்பு இல்லாமல் தெளிவாக பேசுவார். இது உணர்வினை முறைப்படுத்திய மனிதன் செய்வது.
திரைப்படங்ககள் என்றாலும், இந்த ஹீரோக்களின் பிம்பங்கள் கட்டமைக்கப்படுவது உணர்வுகளின் மீது. அவர் கோபம் தெறிக்க பேசும் போது நாமும் கோபம் அடைய நேரிடும், அவர்கள் காமெடி செய்யும்போது நாமும். அந்த உணர்வுகளைக் பார்த்துக்கொண்டு இருக்கும், மனிதர்களிடம் கடத்துவது தான் இயக்குனரின் வெற்றி. அந்த உணர்வுகளுக்கு ஆட்படுபவர்கள் அதற்கான செயல்களில் இறங்குகிறார்கள்.
சற்று நமது செய்தி தொலைக்காட்சிகளின் விவாதங்களைப் பார்த்தால் சில விஷயம் புரியும். சிலர் ஆணித்தரமாக கருத்தை ஒட்டி மட்டுமே பேசுவார்கள். எதிர்தரப்பு என்ன மாதிரியான கேள்வியை எழுப்பினாலும், கோபம் வரவே வராது. பொறுமையாக நிதானமாக பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு சிறிய கேள்விக்கே முதல்வன் திரைப்படத்தில் வரும் ரகுவரன்-அர்ஜுன் பேட்டி காட்சி போல கோபம் அடைந்து விடுவார்கள். இங்கு நான் உணர்வினை பற்றி மட்டுமே பேசுகிறேன். அங்கு பேசப்படும் தகவல்களின் உண்மைத்தன்மையை அல்ல. நிறுத்தி நிதானமாக பேசுபர்கள் பொய்த்தகவலையும் கூறலாம், கோபமாக பேசுபவர்கள் உண்மையாகவும் இருக்கலாம்.
ஒரு மிகச் சாதாரணமான சொல் நம்மை எவ்வளவு காயப்படுத்தி விடுகிறது. அல்லது ஒரு தவறான சொல் பிரயோகம், நம்மை எவ்வளவு சிக்கலுக்கு உள்ளாக்கி விடுகிறது. அந்த சொல் அதற்கான எதிர்வினை இவை யாவும் என்ன செய்யும் என்பதை இன்றைய சமூக வலைத்தளங்களில் காணலாம். ஒரு பைசாவுக்கு உபயோகமில்லாதவை ட்ரெண்டிங் அடிக்கும், வனிதா-லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சண்டைகள், மகேஷ் பாபு பிறந்தநாள், அஜீத் விஜய் படத்தின் வசூல், போன்ற விஷயங்கள். அது ஒருவகையில் அதற்குள் நம்மை இழுத்து மன அழுத்தத்தை கூட்டி தேவையில்லாத பிரச்சனையை உண்டாக்கி விடுகிறது. நல்ல விஷயங்களுக்காக வரும் ட்ரெண்டிங் கூட அதில் நாம் பங்கேற்றுவிட்டு நமது வேலையைப் பார்க்க சென்றுவிடலாம். ஆனால் அதற்குள்ளேயே முழ்கி கிடப்பது தான் பிரச்சினை. அதுவும் சில நேரங்களில் சில சம்பவங்கள் நடந்து முடிந்தவுடன் சிலர் தீர்ப்பு எழுதி விடுவதும் உண்டு.
இந்த உணர்வுகள் நம்மை எதுவும் செய்யாமல் இருக்க, அதே மனநிலையில் சுற்றிக்கொண்டு இல்லாமல் இருக்க என்ன செய்யலாம்?
லண்டனில் இருந்தபோது செமினாரில் கலந்துகொள்ள நேரிட்டது. அந்த செமினாரை மில்லியனர் மாங்க் என்று சொல்லக்கூடிய Eric Ho என்பவர் நடத்தினார். ஒரு மணி நேரம் தான் பயிற்சி. ஆரம்பித்தவுடன் "டேக் எ டீப் ப்ரீத்" என்றார். மூச்சை இழுத்ததும் சில நொடிகளுக்குப்பின் "அவுட்" என்றார். அவருடைய பேச்சுக்கு இடையே, பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை பங்குபெற்றவர்களை செய்ய சொல்லிக்கொண்டே இருந்தார். அதேபோல ஒவ்வொருவரும் மூச்சை இழுத்து வெளியே விட்டனர். அதற்கான விளக்கத்தையும் கொடுத்தார். "நீங்கள் ஒவ்வொரு முறை மூச்சை வேகமாக இழுத்து வெளியில் விடும்போது, உங்கள் மூளையில் இருக்கும் மேகம் விலகி விடுகிறது. சிந்தனையை ஒருமுகப் படுத்த முடியும்." என்றார் அதாவது மொக்கத்தனமான சிந்தனைகள் வெளியேறும். வேறு ஒரு பக்கம் நமது மைண்ட் டீ குடிக்கச் சென்றிருந்தால் தரதரவென கட்டி இழுத்து அந்த இடத்திற்கு கொண்டு வரமுடியும் என்கிறார். அது இயல்பாகவே நமக்கு நடக்கும். நாம் ஒரு சவாலான வேலையை செய்து முடித்து பெருமூச்சு விடுவது ஒருவித ஆசுவாசம் அளிக்கும்.
தொடர்ந்து படிக்கும் முன்பு இப்ப நீங்க ஒருமுறை செய்து பாருங்கள். எப்படி உணர்கிறீர்கள் ?
அதேபோல இன்னுமொரு கார்ப்பரேட் பயிற்சின் போதும் மூச்சு பயிற்சியை வலியுறுத்தினார்கள். தினமும் மூன்றுமுறை சில நிமிடங்கள் மூச்சை இழுத்து விட கூறினார்கள். காலையில் அலுவலகம் சென்றதும் ஒருமுறை. ட்ராபிக்கிலிருந்து, பேருந்து நெரிசல்களில் சிக்கியும் ஒருவழியாக அலுவலகம் சென்று அவரவர் இருக்கையில் அமரும்போது இயல்பாகவே ஒரு பெருமூச்சு விட்டு நம்மை இலகுவாக்கிக் கொள்வோம். இதனை மூச்சு பயிற்சியாக மாற்றச் சொல்கிறார்கள். மறுமுறை அலுவலகம் முடிந்து வீடு சென்றதும் செய்யவேண்டும். அலுவலக டென்ஷன்களை வீடுகளில் காட்டாமல் இருப்பதற்கு இது உதவும். தூங்கச் செல்லும்போது மூன்றாம் முறை. அன்றைய நாள் எப்படியாக கழிந்திருந்தாலும் நிம்மதியான உறக்கம் அடைவதற்கு. இன்றைய கரனோகாலத்தில் WFH இருப்பதில் முதல் இரண்டும் நடக்க சாத்தியமில்லை. ஆனால் மூச்சு பயிற்சி உதவும்.
இந்த மூச்சு பயிற்சிகளை எனக்கென்னவோ நமது ஊரில் சம்மனங்கால் போட்டு, கை விரல்களை அபிநயம் பிடித்து யோகா, ப்ராணாயாயம் என்ற ஒரு வட்டத்திற்குள் அடக்கி வைத்துளார்கள் என நினைக்கிறேன். மேலே சொன்ன மூச்சுப்பயிற்சிகள் சாதாரணமாக உட்கார்ந்து கொண்டு செய்தது தான். டேனியல் கோல்மேன் மூச்சுப்பயிற்சி என்பது நம்மை முறைப்படுத்திக் கொள்வது என வலியுறுத்துகிறார். மேற்கத்திய நாடுகள் இந்த பர்னிச்சரை அழகாக உடைத்து மக்களிடம் சேர்த்து உள்ளார்கள்.
அடுத்தாக ஒரு நடை வெளியே உலவி வரலாம். வெளியில் இயற்கையும், மனிதர்களும் கற்றுக்கொடுக்கும் பாடம் அலாதியானது.
அடுத்தாதாக multi-tasking அவ்வளவாக வேலை செய்வதில்லை என்கிறார். ஒரு வேலையின்போது இடையில் நிறுத்தி fb பக்கம் அல்லது ஒரு whatsapp பார்ப்பது அந்த வேலையை செய்வதில் தொடர்ந்து இருக்கும் ஈடுபாட்டை குறைக்கிறதாம்.
மற்றவர்களிடம் Have a nice day ன்னு சொல்றதுக்கு பதிலா, Make your day ன்னு சொல்ல சொல்கிறார்.
அதையே நமக்கு நாமே சொல்லிக்கொண்டால்
"Make my day".
கிட்டத்தட்ட அஜீத் படத்தில் வரும் ஒரு பஞ்ச்..."ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிசமும் நானா செதுக்குனது...".
நாமே செதுக்குவோம் நம்முடைய தினத்தை...
Make your day
இன்றைய கொரோன காலம் பல திருப்பங்களை நிகழ்த்திக்கொண்டு உள்ளது. அதில் ஒன்று வேகமாக மனிதர்களை தொழில்நுட்பத்தின் பக்கமாக திருப்பி விட்டுள்ளது. நிறுவனத்திற்கு வரும் காலத்தில் AI மற்றும் EI இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல தேவை. AI போன்ற அட்வான்ஸஸ்ட் டெக்னாலஜி புகுத்தாத நிறுவனம் வளர முடியாது. இதேபோல வழி நடத்துபவர்கள் EI அதிகம் இருப்பவராக இருந்தால் மட்டுமே வளர்ச்சி பாதையில் செல்ல முடியும். இது நமக்கும் மனிதர்களுக்கும் பொருந்தும். EI கற்போம்.
குறள் 681
பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...
-
தமிழில் பங்குவணிகம் பங்குவணிகம் தொடர்பான தகவல்கள் மற்றும் குறிப்புகள் It is always easy to understand if we learn something in our mother-to...
-
சென்ற வாரத்தில் எங்களது ஊர் மொடக்குறிச்சி மீண்டும் தலைப்புச் செய்திகளில். சென்ற முறை 1996-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தல் நடந்த போது இருக்கும்...
-
ஈரோடு தினம் என காலையில் FM கேட்டுக்கொண்டு செல்லும்போதே காதில் விழுந்தது. கூடவே வாசலின் ஈரோடு குறித்த அனுபவம், நினைவுகளைக் கீற ஆரம்பித்...