Monday, March 08, 2021

பவானி செல்லாண்டி அம்மன் மாசி திருவிழா

 பவானி, செல்லாண்டி அம்மன் மாசி திருவிழா என்பது அந்த கோயிலின் திருவிழா மட்டும் அல்ல.  அதனை சுற்றி இருக்கும் சின்னச் சின்ன தெருக்களில் உள்ள அம்மன்களுக்கும் சேர்ந்ததே.   பலமுறை கலந்து கொண்டு இருந்தாலும், சேத்து வேசம் போடும் நிகழ்வைப்  பார்த்தது இல்லை. அதற்கான நேரமும் வாய்க்கவில்லை என்று தான் கூறவேண்டும்.  புதன்கிழமையில் பண்டிகை வருவதாலோ என்னவோ, தொடர்ந்து  மூன்று நாள் விடுமுறை கிடைக்காது என்பதால்,  புதன் மதியம் நடைபெறும் இந்த நிகழ்வை மட்டும் தவற விட்டுக்கொண்டு இருந்தேன். இம்முறை வீட்டில் இருந்து வேலை செய்ய வைத்த கொரோனாவிற்கு நன்றி.  

மற்ற ஊர்களின் அம்மன் திருவிழாவில் இருந்து, இந்த சேத்து வேசம் நிகழ்வு முற்றிலும் வித்தியாசமாக இருக்கின்றது.  இதுவரை நான் பார்த்த மாரியம்மன் திருவிழாக்களில் இந்த மாதிரியான நடைமுறை இருந்ததில்லை. தேர் வடம் பிடித்து இழுப்பார்கள், அக்கினிச்சட்டி எடுப்பார்கள், அழகு குத்திக்கொள்வார்கள், குண்டம் இறங்குவார்கள்,  கம்பம் ஆடுவார்கள்,  தெப்பத்தேர், மகந்தேர், மிரமனை வருதல் என்பகை தான்,  அனைத்து பக்கமும் நடைபெறும்.  ஒரு சில  நிகழ்வு மாறுபடும் அல்லது இருக்காது.   இங்கு மட்டும்தான் இவற்றோடு சேர்த்து,  இந்த சேற்று வேடமிடும் நிகழ்ச்சி உள்ளது. அது மட்டுமில்லாமல் சனி இரவு வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கும் லைட்டிங்கும் வேறு எங்கும் இல்லாத நிகழ்வு.  

இந்த சேற்று வேடமிடும் நிகழ்ச்சி வழி வழியாக நடந்து கொண்டு உள்ளதாக கூறுகிறார்கள்.  இப்பொழுது இதனை  சேற்ற்றில்  மட்டும் இடும் வேசம் என்று முற்றிலும்கூற முடியாது.   பல வகையான வண்ண வண்ண கலவைகளைத்தான்  உடல், முகம் என பூசி இருந்தார்கள்.  கிரிக்கெட் ஸ்டேடியத்தில் காணப்படுபவர்கள் போலவும்,  மாறுவேட போட்டிக்கு போவதுபோலவும், வேசமிட்டு அலப்பறை விட்டுக் கொண்டிருந்தார்கள்.  சுற்றுலா தளத்தில் சில்வர் பூசப்பட்டு தடி ஊன்றி நிற்கும் காந்தி தாத்தா போல நிறைய சில்வர் மனிதர்களையும் காண முடிந்தது.  ஜோக்கர் திரைப்படத்தில் வருவது போல டெரர்ராக முகத்தினை மாற்றியிருந்தார்கள்.  ஜோக்கர் வேடம் தான் அளவுக்கு அதிகமாக இருந்தது.  புலி, பெண், அம்மன் வேடமும் கூடவே.  இவை எல்லாவற்றையும் விட என்னை சட்டெனெ கவர்ந்தது தல ரசிகரின் முதுகில் எழுதப்பட்டு இருந்த வலிமை அப்டேட்.  ட்ரெண்டில் உள்ளார்கள். 





 


 


இந்த  ஊர்வலத்தில் ட்ரம்ஸ் அல்லது தப்பாட்ட அடியை கேட்க முடியவில்லை.  அது இல்லாமலே கோலாகலாமாக இருந்தது.  நிகழ்வு முக்கிய சாலையில் கிட்டத்தட்ட ஒன்றரை கிமீ தூரம், 3-4 மணி நேரம் நடைபெறுகிறது.  பவானியின் அந்த முக்கிய சாலை அன்று முடக்கப்பட்டு போக்குவரத்து வேறு பக்கம் திருப்பப்படுகிறது. நான்கு சாலைகள் சந்திக்கும் முக்கிய சந்திப்புகளில் நீண்ட நேரம் விளையாடுகிறார்கள்   வேடமிட்டர்வர்கள் முன்னால் நகர்ந்து நகர்ந்து செல்ல சாலையின் இருபுறமும் கூடியிருக்கும் மக்கள் உப்பு மற்றும் மிளகுடன்  சாக்லெட் அல்லது சில்லரையும் கூடவே சேர்த்து அவர்களின் மீது வீசுகின்றார்கள்.   சாக்லேட்டும் , சில்லரையும் எப்பொழுது சேர்ந்திருக்கும் என தெரியவில்லை.  



"அக்கா இந்த பக்கம் போடுங்க " 

"அக்கா வெறும் உப்பு மட்டும் போடாதீங்க சாக்லேட்டோட போடுங்க"...

 "காசு போட்டு போடுங்க"... 

"ஒருபக்கமாக போடாதீங்க"  என்று பலவிதமாக குரல்களில், விசிறும் பெண்களிடம் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். இந்த வேடம் இட்டவர்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இருந்தார்கள். வர்க்க வேறுபாடு, சாதி வேறுபாடு இல்லாமல் நடைபெறுகிறது.  ஆண்கள்தான் இந்த சேத்து வேசத்தை  ஏற்று இருந்தார்கள். கூடவே சிறுமிகள் சிலரும். வேடிக்கை பார்ப்பவர்களும் இந்த கலவையை வீசுபவர்களும்  பெரும்பாலும் பெண்களாக இருந்தார்கள்.  


அந்த காசையும், சாக்லேட்டையும் குதித்து 'கேட்ச்' பிடிப்பதில் தான் இதில் இருக்கும் த்ரில்.  போட்டி, விளையாட்டு, கொண்டாட்டம் என எப்படி வேண்டுமானாலும் கூறலாம்.  அந்த காசை இருவரும் பிடித்து விட்டால் அது எனக்கு, உனக்கு என்று அடிதடி. பலரும் அந்த நாணயத்தைக்  கைப்பற்ற மொட்டை வெயிலில், தார் ரோட்டில் அப்படியே  உட்கார்ந்து கொள்கின்றார்கள்.  நாணயத்தை அழுத்தி, நெட்டித் தள்ளி உரிமை கொண்டாடுகிறார்கள்.  இந்த பஞ்சாயத்து சில நிமிடங்கள் நடந்து ஒருவர் விட்டுக்கொடுக்கிறார் அல்லது வெற்றி பெறுகிறார்.  இவையாவும் அங்கங்கு, அக்கூட்டத்தின் ஊடே பலவாறாக நடந்து கொண்டு இருக்கிரது.  அதுதான் நிகழ்வின் எழுதப்படாத விதி.  


முன்பு குழந்தை இல்லாத பலரும் இந்த சேத்து வேச நிகழ்வில் சூறை விடுவதாக வேண்டிக்கொள்வார்களாம்.  வேண்டுதல் நிறைவேறினால் அவர்கள் சொந்தம் சூழ அந்தக் குழந்தையையும் சூறை விடுவார்களாம். குழந்தை அவர்கள் தெரிந்தவர்கள் கையில் கிடைக்காமல் வேறு ஒருவரின் கையில் கிடைத்து விட்டால் அவர்கள் கேட்கும் காசு பணத்தை இவர்கள் கொடுக்க வேண்டுமாம்.   இப்பொழுது அது தடை செய்யப்பட்டு உள்ளது.   சூறை விடுவது என்பது கூட்டத்தில் உப்பு மிளகை வீசுவது போல தூக்கி வீசுவது தான். 


என்னைப்போல வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த ஒரு அண்ணன், பக்கத்தில் இருந்த பெட்டிக்  கடையில் லிட்டில் ஹார்ட்ஸ் பிஸ்கட் ஒரு சரம்  வாங்கினார்.  அதனை ஒவ்வொன்றாக கிழித்து  அவர்களின் மீது சரசரவென ரம்மி விளையாடுகையில் சீட்டுக்கட்டிலிருந்து சீட்டு போடுவதுபோல விசிறினார்.  கூட்டத்தில் ஒரே ஆரவாரம்.  கூடவே மற்றொருவர் வேறு பிஸ்கட் பாக்கெட்களை  வாங்கி வீசினார்.  அடுத்ததாக  லேஸ் சிப்ஸ்.  சிலர் 'அண்ணா அண்ணா இங்கயே கொடுங்க' என அருகே வந்து அவரிடம் பிடுங்காத குறை.   ஒருவர் முழு லெஸ் சாரத்தையும் வாங்கிக் கொண்டு ஓட, அவரின் சக போட்டியாளர் அவரைத் துரத்தி அவரிடம் இருந்து பாதியை பங்கிட்டுக் கொண்டார். 


ஒரு பக்கம் தண்ணீர் பாட்டிலையும் வாங்கி விசிறி அடித்தார்கள்.  திடீரென ஒரு கடையில் இருந்து  துணிகளைத் தூக்கி போட்டார்கள்.  இன்னொரு பக்கம் இருந்து வாழைப்பழங்கள்.  என்ன ஒரு ஆனந்தம் அதனை குதித்துப் பிடிப்பவர்களுக்கு.  கலந்துகொண்டு இருந்த சிறுவனின் கையில் மஞ்சள் பை இருந்தது.  அதில் கிட்டத்தட்ட முக்கால்வாசி நாணயங்கள், சாக்லெட்டுகள் என நிரம்பி இருந்தது.  அவனும் கிடைத்தவற்றை பிடித்து மீண்டும் அந்தப் பையில் திணித்துக்கொண்டு இருந்தான்.  கிட்டத்தட்ட ஆரம்பித்த இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் வந்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.  இன்னும் சற்று தொலைவில் முடிந்துவிடும்.   


தார்ரோடு மதியம் ஒரு மணி வெயில் எதையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை.  வழிநெடுக இதுதான் அவர்களுக்கு விளையாட்டு. அவர்களுக்கு இது கொண்டாட்டமாகத் தான் இருந்தது.  இரு தண்ணிர் வண்டிகள்  பின்னால் வந்து கொண்டிருந்தது.  தண்ணீர் திறந்துவிட்டு சாலைக்கு அடித்துக் கொண்டு வந்தார்கள்.  அந்த வண்டியில்  வேசம் போட்டவர்களும் அவர்களின் வேசம் கலைந்து விடும் என குளித்துக் கொள்ளவில்லை. மற்றவர்கள் அந்த வண்டியின் அடியில் ஷவரில் குளிப்பது போல ஏகாந்தமாக குளித்துக் கொண்டிருந்தார்கள். முடித்துவிட்டு மீண்டும் கேட்ச் பிடிக்கும் ஆட்டத்திற்கு வந்தார்கள்.



இந்த ஊர்வலத்தின் எஞ்சின் போல ஒரு குழு.   அந்த  குழுவின் புகைப்படங்களைத்தான் முன்பு பதிவிட்டு இருந்தேன்.  அதில் ஒருவர் கிரிக்கெட் வர்ணனையாளர் போல ஒரு கையில் மைக் வைத்துக்கொண்டு சாலை ஓரத்தில் இருந்தவர்களிடம் வம்பு வளர்த்துக் கொண்டு இருந்தார்.  அந்த ஊர்வலத்தின் இறுதியில் குதிரை அதன் பின்னே பூக்களால் சோடிக்கப்பட்ட கரகமும், சாமியும் மெதுவாக வந்து கொண்டிருந்தது.  அதற்கு மட்டும் கயிற்றில் பாதுகாப்பு வளையம் வைத்து நகர்ந்துகொண்டு இருந்தார்கள்.  ஆனால் கூட்டம் என்னவோ இந்த வேஷம் போட்டு வந்தவர்களையும், சூறை பிடிக்க வருபவர்களிடமும்  தான் தேங்கியிருந்தது.   அவர்கள்தான் கொண்டாட்டத்தை உச்சகட்டமாக மக்களுக்கு அளித்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.   


வண்டி வெயிலில் நின்று இருந்ததால் கொதித்தது.  இந்த வெய்யிலிலும் மக்கள் உற்சாகமா இருந்தார்கள் .  .  இந்த ஊர்வலம் நடந்த பாதையின் பின்னே ஏதோ ஒரு கலவரம் நடந்து முடிந்தது போன்ற தோற்றம். கொரோனா ஆரம்பிக்கும் முன் சென்ற வருட நோம்பி  நடந்து முடிந்திருந்தது.  எனக்கு என்னவோ இந்த வருடம் கொரோனாவை சூரசம்ஹாரம் செய்துவிட்டு, இந்த பண்டிகை கொண்டாட்டித் தீர்த்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது    



செல்லாண்டி அம்மன் சேத்து வேசம் பார்த்துவிட்டு வீடு அருகே வந்தேன். 

"நோம்பிக்கு எப்ப வந்தீங்க" என்றார் பக்கத்து வீட்டு பாட்டி.  

"நேத்து நைட்டு வந்தேங்க" என்று தொடர்ந்தேன்  "எங்க யாரையும் காணோம்.  உங்க வீட்ல யாரும் வர்லீங்களா?. நோம்பிக்கு என்ன பண்ணிங்க?" என தொடர் கேள்வியை எழுப்பினேன்.  

 "யாரும் வரலைன்னு சொல்லிட்டாங்க.. வந்தாங்கன்னா எதையாவது சமைக்கலாம்.. எதோ என்னால முடிஞ்சத போடுவேன்..ஒருவேளையாவது வந்துட்டு போனாங்கன்னா நமக்கு நல்லா இருக்கும்" என்றார் வெளியில் சிரித்தபடி.  அவர்கள் மகன்/மகள் வீடு அரை மணிதூரத்தில் தான் இருந்தது.  


கயிற்றுக் கட்டிலை மல்லாக்க போட்டு கட்டிலின் இரண்டு கால்களுக்கும் சேர்த்து புதிய ஜமுக்காளத்தைக் கட்டி இருந்தார்.   கையில் ஊசி வைத்து கோர்த்துக் கொண்டு இருந்தார்.  சட்டென மடைமாற்ற  "என்ன பண்ணிட்டு இருக்கீங்க?" என்று கேட்டேன்.  

"தெரிஞ்சவங்க ஜமுக்காளத்துல பேர் எழுதி தர சொன்னாங்க.. இப்பெல்லாம் பண்ணறது இல்லை... சரி தெரிஞ்சவங்கன்னு தான்" என்றார்.   பவானியில் இது  ஒரு முக்கியமான தொழில்.  

 "இதுல ஒரு எழுத்துக்கு ரெண்டு அம்பது  குடுப்பாங்க. தமிழ், இங்லீஸ், இந்தி எதுவா இருந்தாலும் பேப்பர்ல போட்டு கொடுத்தா, நான் ஜமுக்காளத்துல எழுதிருவேன்" என்றார். ஒருவேளை 250ஐ ரெண்டு அம்பது என்று கூறுகிறாரே என நினைத்து "எவ்வளவுங்க?" என மீண்டும் கேட்டேன்   "ரெண்டு ரூவா அம்பது காசுங்க.  நான் ஆரம்பிச்சப்ப அப்பல்லாம் 40 பைசா இருந்தது.  படிப்படியா இப்ப ரெண்டு அம்பது ஆகிடுச்சு" என்றார்.  அதில் ஒரு 20 எழுத்து இருந்திருக்கும்.  50 ரூபாய் கிடைக்கும் 


வெளியே ஊரே கொண்டாட்டமாக இருந்த அந்த நேரத்தில், இது போல தனித்து இருப்பவர்கள் அன்றும் தனித்து தானே இருக்கின்றார்கள். 



Friday, February 26, 2021

ரகிட ரகிட ரகிட

"மரணமாஸ" விட நமக்கு #ULLAALLAA தான்...

in repeat mode..

இரு வருடத்துக்கு முந்தைய #OTD

அந்த  பாட்டு போலவே கடந்த சில நாட்களாக  "ரகிட ரகிட ரகிட ஊ" ரிப்பீட் மோடில்.  ஆனால 'ஊல்லல்லா' பாட்டு,  வழக்கமான தலைவரின் அட்வைஸ் மழை பொழியும் தத்துவ பாடல்..  'ரகிட ரகிட ' அப்படி இல்லாமல் don't care ரக பாடல்.   அந்தப் பாடல் பற்றி அலசுவோம்.


அணிகளில் பிடித்த அணி சொற்பொருள் பின்வருநிலையணி.  எனக்கு சுலபமான அணியும்.  அதில் தான் மிகச் சுலபமான இந்தக் குறளை உதாரணமாக குறிப்பிடலாம். 


நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல். 


அதற்கடுத்து வஞ்ச புகழ்ச்சி அணி எனலாம்.    


அதற்கான எடுத்துக்காட்டு பெரும்பாலும்  அனைவரும் அறிந்த அதியமான்-தொண்டைமான்-ஒளவை விடு தூது தான்.   ஒரு சமயம் தொண்டைமான்,  அதியமான்மீது படை எடுத்து வரப்போவதாக கேள்விப்பட்ட ஒளவையார், தொண்டைமானை சந்திக்க செல்லுகின்றார்.  தொண்டைமான் படைக்கலங்கள் உடைய அறைக்கு கூட்டிச் சென்று காண்பிக்கிறார்.  அங்கு சென்ற ஒளவை அந்த ஆயுதங்களை பார்வை இடுகிறார். 

 அக்கலங்கள் எல்லாம் புத்தம் புதிதாக,  பளிச் என மின்னுகிறது.  


அதனைக் கண்ட ஒளவை,  அதியமானின் வீரத்தினை தொண்டைமானிடம் எடுத்துக் கூறுகின்றார். 

 எப்படி?  தொண்டைமானைப் புகழ்வது போல ஆரம்பத்தில் தெரியும். 


இவ்வே, பீலி அணிந்து மாலை சூட்டி,

கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து

கடியுடை வியல்நக ரவ்வே. (புறநானூனு,95)


'தம்பி.. நீ இங்க பளிச்சுன்னு தொடச்சு பூஜை போட்டு வெச்சிருக்கே.   அது நல்லது.  ஆனா இந்த அதியமானின்  படைக்கலங்கள் எப்படி இருக்குன்னு பார்த்துட்டு வந்தேன்'.  


பகைவர்க் குத்தி,கோடு,நுதி சிதைந்து

கொற்றுறைக் குற்றில மாதோ ! என்றும்

அண்ணல்எம் கோமான்,வைநுதி வேலே (புறநானூறு,95)


அதியமான் பயல் இந்தமாதிரி வெச்சுக்கல.. சுத்துப்பட்டிலயும் போர்க்கு போய் சண்டை அடிக்கடி போட்டு வரார்.  அதனால கொல்லனோட வேல் செய்யும் பட்டறையில் ரிப்பேருக்கு போயிருக்குப்பா'.  அதனால எப்படி வசதி என்று அதியமானை வஞ்ச புகழ்ச்சியாப் புகழ்கின்றார்.  போரை நிறுத்துகிறார்.  இப்படி தான் எதையாவது எழுதி மார்க் வாங்கிருப்போம்.     


இந்த வஞ்ச புகழ்ச்சி அணிக்கு ஆகச் சிறந்த சமீபத்திய உதாரணம் "ரகிட‌ ரகிட‌ ரகிட‌ " பாட்டில் வரும் முதல் சரணம் தான்.  


"நாலு பேரு மதிக்கும்படி

 நீயும் நானும் இருக்கணும்.." 

என ஆரம்பிக்கும்.  முதல் முறை கேட்கும் போது வழக்கமான அட்வைஸ் மழையா  இருக்கும் போல  என நினைத்து  சளிப்போடு தான் கேட்க ஆரம்பித்தேன்.  மீண்டும் மீண்டும் கேட்கும் பொழுதுதான் அந்த பாடலை வஞ்ச புகழ்ச்சி அமைப்பில் உருவாக்கி இருப்பது தெரிந்தது.  


பள்ளியில் கல்லூரியில் நண்பர்களிடம் விவாதிக்கும்பொழுது கூட,  இந்த மாதிரி ஏத்திவிட்டு, அவர்களை இறக்கும்பொழுது  'என்ன மச்சி வஞ்ச புகழ்ச்சியா' என்று தான் கூறுவோம்.  அப்படி பேமஸ் ஆனது இந்த அணி.  அதன் சென்னை ஸ்லாங் தான் "என்ன மாப்ள... லந்தா.." என்பது.   இந்த ஒரு வரி உரையாடலை சரணத்தின் இடையில் சொருகி இருப்பார்.  அந்த இடத்தில் பாடல் யூ-டர்ன் போட்டு வஞ்ச புகழ்ச்சியாக மாறி அடுத்த வரி ஆரம்பிக்கும்.  


"அந்த நாலு பேர 

இதுவரைக்கும் பார்த்ததில்ல  நானு..

எனக்கு தேவைப்பட்ட நேர(ம்)  

அந்த பரதேசியக் காணோஓஓஓம்...."


ஒட்டு மொத்தமாக இந்தச் சரணம்,  'Dont listen on others negative words'  என்று ஊர் உலகத்துக்காக பயப்படாம, உனக்கு என்ன பிடிக்குதோ/ தோணுதோ, அதைச் செய் என்பதைக் கூறும்.  




இரண்டாவது சரணம் மோட்டிவேஷனை அள்ளித் தெளிக்கிறது. அடுத்தநாளை எப்படி வரவேற்கிறார்கள் பாருங்க. 


"ஏதோ ஒன்னு கொடுக்கத் தானே

அடுத்த நாளும் வருது..

ஆஹா

நல்லத நான் எடுத்துகிட்டா

நல்லதத்தான் தருது"


"The Secret" எனும் புத்தகம் ஈர்ப்பு விசை பற்றி நுணுக்கமாக கூறி இருப்பார்கள்.  நாம் எந்த விஷயத்தை தீவிரமாக ஈர்க்கிறோமோ அது நம்மை அடைகிறது. ஒரு விஷயத்தை நீங்கள் யோசித்து யோசித்து,  அது உங்கள் கண் முன் காட்சியாக விரிந்துகொண்டே இருக்கும்.  அப்படி யோசித்து யோசித்து, காட்சிப் படுத்திய 

 ஒரு விஷயம்,  கண்டிப்பாக நடக்கும் என்கிறது.   கனவு காணுங்கள்,  என்று அப்துல் கலாம் கூறியதன் சாராம்சமும் இது தான்.  கனவு இலக்கை நோக்கி நம்மை இழுத்துச் செல்லும்.   தென்னை மரத்தில் பன்னாடை இருக்கும்.  அது வடிகட்டி மாதிரி, தேவை இல்லாத பூச்சி போன்றவற்றை மட்டும் வடிகட்டும். பல நேரங்களில் நாம கூட தேவை இல்லாத விஷயங்களை மட்டும், மனதில் போட்டு உளப்பிக்கொண்டே கிடப்போம். 


இதையே தான் வள்ளுவர் இப்படி கூறுகிறார் 

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து.



"எது என் தகுதி…..

யாரு வந்து சொல்லணும்

நெஜமா யார் நான்…….

என்கிட்டதான் கேக்கணும்"


வினாக்களை  யாரிடம் எழுப்பிகிறோம் என்பது தான் இங்கு கேள்வியே.  நமக்குள் மாற்றி மாற்றி கேள்வி எழுப்பாமல், நம்மைப் பற்றி, நம் இலக்கைப் பற்றி, அந்தப் பயணத்தில் எங்கு இருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள முடியாது. வேறு யாரும் நம்மைப் பற்றி முழுதாக கூற முடியாது. அதனை மனசாட்சிக்கும், நமக்குமான உரையாடல் போல அமைத்திருப்பார் சந்தோஷ் நாராயணன்.




இரண்டாவது சரணத்தில்  கடைசியாக வரும் வரிகள் தான் ஹைலைட். 

  

"என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும்

வருவானே……ஏ…..ஏ…..ஏ…..ஏஹே…..ஏஹே….

என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே

மன்னிக்கணும் மாம்சே….

அட.. அவனும் இங்க நான்தானே"


#beatyourself #beatyesterday எனும் மோட்டிவேசனல் டேக் லைன் தான் இந்த வரிகள்.   உள்ளத்தனைய உடலில்   ஓடும் பலரும் இந்த ஹேஸ்டேக் போடுவதைக் கண்டுள்ளேன்.  குறிப்பாக ஷான்.  அதே தூரத்தை, முந்தைய நாளைவிட குறைந்த நிமிடத்தில் முடித்துக்கொள்ள இது ஒரு self motivation. நமக்கான போட்டியாளர் வெறும் யாரும் இல்லை நாம் மட்டுமே. 


அடுத்ததாக இந்த பாட்டின் எனர்ஜியே, "ரகிட ரகிட ரகிட" முடித்தவுடன் வரும் 'ஊ' எனும் உற்சாக ஒலி தான்.  கூடவே இடையிடையே வரும் சின்னச் சின்னச் உற்சாக ஒலிகள் தான்.  


 

இப்போது ஆரம்ப வரிகளுக்கு வருவோம் 

"ஹே, என்ன வேணா நடக்கட்டும்..

நா சந்தோசமா இருப்பேன்..

உசிரு இருக்கு வேறன்ன வேணும்

உல்லாசமா இருப்பேன்".

அன்றைய

"ராமன் ஆண்டாலும்

ராவணன் ஆண்டாலும் 

எனக்கொரு கவலை இல்ல"பாட்டின்  சமீபத்திய வடிவம்.



முதல் இரு வரிகள் சுயநலம் பேசுவது போல தெரிந்தாலும், அடுத்த வரியையும் சேர்த்து கவனிக்கும்பொழுது தான் அதன் ஆழம் தெரியும்.   வாழ்தல் அறம்  எனும்   ஈரோடு கதிரின் அடிப்படை கோட்பாடு. "எவருக்குமே சாவதற்கான காரணங்களைவிட, வாழ்வதற்கான காரணங்கள் ஒன்றே ஒன்றாவது கூடுதலாக இல்லாமல் போகாது".   அந்த இரு வரிகளும் உணர்த்துவது அதுவே. 



#வஞ்சபுகழ்ச்சி  #sarcasm #Motivation

#ரகிட-ரகிட


Thursday, January 14, 2021

Covid (Be) +

2020 இப்படியாக முடியும் என்றோ,  2021 இப்படி ஆரம்பிக்கும் என்றோ எதிர்பார்க்கவில்லை.  கடைசியாக அது எங்களை நோக்கி வந்து விட்டது.  சென்ற திங்கள் மருத்துவமனையில் அப்பாவிற்கு கோவிட் நெகட்டிவ் என்று கூறி வீட்டுக்கு கூட்டிட்டு போலாம் என்றதும் தான் சற்றேனும் தெளிவடைந்தேன்.   11 நாட்கள் மருத்துவமனை வாசம்  அன்றுதான் முடிவுக்கு வந்தது.

வெள்ளிக்கிழமை , கிறிஸ்துமஸ் அன்று மதியத்திற்கு மேல் அப்பாவிற்கு காய்ச்சல்.   அதற்கு இரு நாட்களுக்கு முன் தான் ஊரில் இருந்த மருத்துவரிடம் காண்பித்து காய்ச்சலுக்கு மருந்து வாங்கி இருந்தேன்.  ஆன்டிபயாடிக் மருந்தினை அவர் கொடுக்கவில்லை.  இரண்டு நாட்கள் கழித்து  காய்ச்சல் நிற்கவில்லை என்றால் வர சொல்லி இருந்தார். ஒருநாள் நன்றாக இருந்தவர்,  கிறிஸ்துமஸ் மாலை, சற்று இருமலோடு இருந்தார். கூடவே காய்ச்சலும் அதிகமானது.   ஊரில் அதே மருத்துவர் வர மாலை 6.30/7.00 ஆகும்.  ஈரோடு கிளம்பினோம்.  ஒரு பக்கம், ஈரோடு மருத்துவமனைக்கு செல்ல கொரானா பயம்.  இருந்தாலும் வேறு வழி இல்லாததால் சென்றோம்.  

மருத்துவமனையில் முதலில் காய்ச்சலுக்கான ஊசி போட்டதும் காய்ச்சல் நின்றது.  "நல்லாயிடுச்சு, வீட்டுக்கு போலாமா?" என்றார் அப்பா.   இருமல் இருக்கவே  CT  ஸ்கேன் எடுக்க டாக்டர் கூறினார்.  தெரிந்த மருத்துவர் தான்.   ஓரிரு மணிநேரம் கழித்து CT  ஸ்கேன் முடிவில் கோவிட் பாசிட்டிவ் என்றதும் எனக்கு அதிர்ச்சி.  பனியில் நடைப்பயிற்சி சென்றதால் வந்த சாதாரண சளி காய்ச்சல் என்று  நினைத்துக் கொண்டிருந்தேன்.  நகரத்திலிருந்து விலகி ஒதுக்குப்புறமாக இருக்கும் எங்கள் ஊருக்கு கொரோனா வராது என்ற நினைப்பு பொய்யானது.   எப்படி வந்தது? எங்கிருந்து வந்திருக்கும்? ஒருவேளை காலையில் வாக்கிங் செல்லும்போது காற்றில் பறந்து வந்திருக்குமா?   நான்கு நாட்கள் கழித்து, சென்ற பெரிய காரியத்தில் தொற்றியிருக்குமா?  கடைகளுக்கு சென்ற போது வந்திருக்குமா?   அல்லது கோயிலில் பிரதோஷம் என்று போனார்களே, அங்கு  கூட்டம் என்று கூறினார்களே, அங்கிருந்து  வந்திருக்குமா? பாசிட்டிவ்  என கூறியவுடன், மனதில் தொடர்ந்து குழப்பம் நிறைந்த கேள்விகள், கவலைகள்.   

'சரி, வந்துவிட்டது.  அடுத்து குணமாக என்ன  செய்ய வேண்டுமோ அதை மட்டுமே இப்பொழுது பார்ப்போம்.'  கோவிட் என்று மெதுவாக கூறிய மருத்துவர்   "அட்மிசன் போட்டுடுங்க.  மைல்டா தான் இருக்கு.  ஆறு நாள் கழித்துதான் மறுபடியும் செக் பண்ண முடியும்.  ஸ்வாப் ரிசல்ட் காலைல வரும்" என்றார்.   அதுவரை சுற்றிலும் நின்று கொண்டிருந்த செவிலியர்கள்  தள்ளி நின்று கொள்கிறார்கள்.  அவரது படுக்கை  மறைக்கப்படுகிறது.  தனி அறைக்கு மாற்ற என்னிடம் கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.  கிட்டத்தட்ட மணி ஒன்பது.     
 மருத்துவமனையின் உள்ளே நுழைந்து ஊசி ஒன்றை போட்டதுமே, 'காய்ச்சல் போய்டுச்சு தெம்பாயிட்டேன், வீட்டுக்கு போலாமா' என்றவருக்கு என்ன கூறுவது.  ஒருவழியாக என்னை முதலில் திடப்படுத்திக்கொண்டு,  மனதளவில் அவரை தயார் செய்து தனி அறைக்கு அனுப்பினேன்.   "இன்னும் ரெண்டு மூணு நாள் தனியா இருக்கணும் போல இருக்கு.   இருமல் நிக்கணும்.   தைரியமாக இருங்க. சரியாயிடும்" என்று கூறி  ஒரு தனி அறைக்கு அவரை அனுப்பிவிட்டு,  இரவு உணவை வாங்கி கொடுத்து விட்டு அப்பாவிற்கு தேவையான உடமைகளை தம்பியை விட்டு எடுத்து வர சொல்லிவிட்டு கோவிட் வார்டின் முன்பாக காத்து  நின்றேன்.   

என்னைப்போலவே மற்றொருவர், கவலை படிந்த முகத்தோடு கோவிட் வார்டின் முன்பாக நின்றுகொண்டு இருந்தார்.   அவரிடம் விசாரித்தேன், அவரும் அவருடைய அப்பாவை அன்று மாலை அங்கு அட்மிட் செய்திருந்தார்.     அவரின் அப்பவிற்கு என்னென்ன அறிகுறிகள் வந்தன என்பதை உறுதிப்படுத்தி, அவரும் நானும் சமாதானம் ஆகிறோம்.   இவைதான் அவை:

தலை சுற்றல் ஒரு வார காலம்  (இது முக்கியமான ஒன்று)
லேசான சளி ஒரு வார காலம்
உடல் அசதி   ஒரு வார காலம். 
காய்ச்சல் இரு நாட்களுக்கு முன் 
இருமல் ஒரு நாளுக்கு முன். 

அவரது குடும்பத்தில் சிலருக்கும் பாசிட்டிவ் வந்ததாக கூறியவர், அவர்களை வீட்டிலேயே தனிமையில் வைத்து இருப்பதாக கூறினார்.  உடன் இருந்தவர்களையும் டெஸ்ட் எடுக்க கூறினார். 

உடமைகள் வர அதனைக்  கொடுத்துவிட்டு அடுத்தநாள் வருவதாக கூறி விடைபெற்று வீட்டிற்கு வந்தேன். அன்றிரவு எவ்வளவு புரண்டு படுத்தும்  தூக்கம் வர மறுத்தது.    அடுத்த நாளுக்கு எங்களுக்கும்  டெஸ்ட் எடுக்க வேண்டும் என்ற திட்டம் மட்டுமே இருந்தது.  அவருக்கு காய்ச்சல் இருந்த இரண்டு நாட்கள் நானும் அம்மாவும் கூடவே இருந்து இருக்கின்றோம்.   நல்லவேளையாக குழந்தைகள், மனைவி அவர்களின் ஊரில் இருந்தார்கள். 

அடுத்த நாள்  சனிக்கிழமை அவருக்குத் தேவையான துணிமணிகளை எடுத்துக்கொண்டு சென்றோம்.   
 மருத்துவர் ஸ்வாப் டெஸ்டிலும் பாசிட்டிவ் வந்துள்ளதாக தெரிவிக்கிறார்.  இரவு அப்பாவும் தூங்கவில்லை என்கிறார்.  இருமல் குறையவில்லை. 

எங்களுக்கான கோவிட் டெஸ்ட் அங்கு எடுப்போமா அல்லது பெருந்துறை மருத்துவ கல்லூரியில்  எடுப்போமா எனும் குழப்பம்.   நான் அரசு மருத்துவமனை என்பதில் தெளிவடைந்து இருந்தேன்.  ஆனால் அம்மா, கோவிட் டெஸ்ட் எடுக்க  மறுக்கிறார்கள், அதுவும் அரசு மருத்துவமனைக்கு வர பலத்த மறுப்பு.   ஒருவழியாக  நானும் அங்குதான் எடுக்கப்போகிறேன் என்று சமாதானப்படுத்தி பெருந்துறை செல்கிறோம்.  

 இங்கு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியை பாராட்டியே ஆகவேண்டும்.   ஊரின்  ஒதுக்குபுறமாக நல்ல திறந்தவெளி.  அனுசரணையான பேச்சுகள்.   30 நிமிடத்தில் சோதனையை எடுத்து அனுப்பி விடுகின்றார்கள்.  நாங்கள் சென்ற பொழுது ஐந்தாறு பேர் இருந்தார்கள்.  முடிவு  36 மணி நேரத்திற்குள் ஈரோடு கோவிட் வெப் சைட்டில் வரும் என்று கூறினார்கள்.  

வீட்டிற்கு சென்று வீடு முழுவதையும் கழுவி விட்டு, துணிமணிகளை அலசி பக்கத்தில் இருந்தவர்களுக்கும் கூறி பாதுகாப்பாக இருக்க சொல்லிவிட்டோம்.  சனிக்கிழமை இரவும் தூக்கம் இல்லாமல் கழிந்தது.  நமக்குள்ளும்  வைரஸ்  இருப்பது போலவே ஒரு குறுகுறு உணர்ச்சி.  உடல் அசதி.  தொண்டை கரகரப்பு.   ஒருவேளை ரெண்டு பேருக்கும் பாசிட்டிவ் வந்தால், பெருந்துறை போலாமா? அல்லது அப்பா இருக்கிற மருத்துவமனையிலேயே அட்மிட் ஆகிக்கொள்ளலாமா?   பல கலவையான கவலைகள், யோசனைகள், வருத்தங்ககள்.  அதையும் விட அப்பாவின் இருமல், கூடுதலாக கவலை அளித்துக்கொண்டு கொண்டிருந்தது. 

அப்பாவிற்கு பாசிட்டிவ் ஆன அடுத்தநாள், சனிக்கிழமை ,  ஈரோடு சுகாதாரத்துறையில் இருந்து தொலைபேசியில் அழைத்து அப்பாவின் உடன் இருந்த எங்களையும் மருத்துவ பரிசோதனை எடுக்க சொல்லியிருந்தார்கள்.   ஞாயிறு, மொடக்குறிச்சி சுகாதாரத்துறையில்  இருந்து, எங்களுக்கும் மருத்துவ பரிசோதனை எடுத்துவிட்டதா என்பதை உறுதி செய்து கொண்டார்கள்.  ஞாயிறு  மாலையே ரிசல்ட் வந்து இருக்கும்.   ஆனால் அன்று இரவு நான் பார்க்கவில்லை.  எதுவாக இருந்தாலும் காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று திங்கள் காலையில் தான் ரிசல்ட் பார்க்கின்றேன். 

இருந்தாலும் வெள்ளி மாலை ஆரம்பித்து முன்னெச்சரிக்கையாக அடுத்த 5 நாட்களுக்கு தொடர்ந்து மத்திய அரசின் சித்தா வெப்சைட்டில் இருந்தவற்றை கடைபிடித்தோம்.   

1. 5 times salt/turmeric hot water gargle
2. Ginger water for drinking
3. Steam inhale with nochi Or  tulasi 3 times
4. Kabasoor 2 times a day
5. Morning and evening sambrani / neem leaves sambrani
6. Stand in 11 am - 2 pm sun at least 10 mins
7. zincovit tablets 1

நல்லவேளையாக இருவருக்குமே நெகட்டிவ்.   சற்றே நிம்மதி.   திங்கள் காலை எட்டு மணியளவில் பேரூராட்சி ஊழியர் எங்கள் வீடுகளுக்கு முன்பு மருந்து தெளித்து விட்டு உள்ளே சானிடைசர் அடித்துவிட்டு சென்றார்.  ஏரியாவில் பரபரப்பு.  அந்த மருந்து அடிக்கும் பணியாளரிடம் கேட்டேன்.
"வேற எங்கேயாவது இருக்காண்ணா?" 
"கொரோனா ஆரம்பித்ததிலிருந்து சுத்தி சுத்தி மூணு நாலு பேருக்கு  இருந்துட்டே தான் இருக்குங்க.  நேத்து கூட மஞ்சகாட்டு வலசுல. மூணு பேரும் ஒரே ஃபேமிலி.  பாவம் சின்ன குழந்தைக்கும் வந்துடுச்சு"

நான் தான் நமது ஊரில் இல்லை என்று நினைத்து கொண்டிருந்தாலும்,  சுற்றிலும் அங்கங்கே இருந்து கொண்டு தான் இருக்கின்றது. தொடர்ந்து நான்கு நாட்கள் அவரின் கடமையை செய்துவிட்டு போனார்.
அவர் வந்து விட்டு சென்றதும் ஊரில் பலரும் விசாரிக்க ஆர்ம்பித்தனர்.  சிலர் "சாமிகிட்ட வேண்டிட்டு  இருக்கேன், சீக்கிரமா நல்லா போயிடும்" என்றார்கள்.  இவர்களின் அன்பு ஒன்று தான் ஆறுதல்.   

செவ்வாய்க்கு பிறகு அப்பாவிற்கு இருமல் லேசாக குறைய ஆரம்பித்தது.   அதன் பிறகுதான் எனது பரிதவிப்பும் சற்று குறைந்தது.  மீண்டும் ஒரு வாரத்திற்குப் பிறகு, நியூ இயர் வெள்ளியன்று சோதனையில் பாசிட்டிவ் என்றே வந்தது.  அன்று நெகடிவ் வரும் வீட்டுக்கு செல்லலாம் என நினைத்து இருந்தோம்.  அதன் பிறகு மூன்று நாட்கள் கழித்து மீண்டும் நடந்த டெஸ்டில் நெகடிவ் என்று வரத்தான் நிம்மதி பெருமூச்சு. 11 நாள் முடிந்திருந்தது.  டிஸ்சார்ஜ் செய்து அவரை கூட்டி  செல்லும்போது, பரபரப்பாக வழக்கம் போல இயங்கிக் கொண்டு தான் இருந்தது.  

இன்னும் சில மாதங்கள்   கண்டிப்பாக பத்திரமாக இருக்க வேண்டும். அது  சிற்றூராக இருந்தாலும் நகரமாக இருந்தாலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.   அலைச்சல், மன உளைச்சல், மருத்துவமனையில் இருந்து வந்தும் தனிமையில் இருப்பது என்பது  'தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்'  என்பது போலத் தான்.

Monday, November 16, 2020

சூரரைப் போற்று" - an EI View

"சூரரைப் போற்று" அக்குவேரு ஆணி வேராக பலரும் பிரித்து மேய்ந்து விட்டார்கள்.  அதிலும் வழக்கம்போல முரண்பட்ட கருத்துகளும் வந்து போய்விட்டது. 


 ஒரு எமோஷனல் இன்டெலிஜென்ஸ் பார்வையில் இந்த படத்தை அணுகுகிறேன்.  படத்தில் வரும் பாத்திரங்கள்  அனைத்தும் ஏதோ ஒரு வகையில்  உணர்ச்சிகளைக் கொட்டிக்கொண்டே இருப்பார்கள். ஒவ்வொரு பாத்திரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டதை  சிறப்பாக செய்திருப்பார்கள். அங்கங்கு சென்டிமென்ட்களைத் தூவி  இயக்குனர் சுதா கோங்குரா நம்மை உணர்ச்சியால் கட்டிப்போட்டு இருப்பார்.


 பல நேரங்களில்  நாயகன் மாறனாகிய  சூர்யா ஏதோ ஒரு டென்ஷனில் சுற்றிக்கொண்டு இருப்பது போலவே இருக்கும்.  கோபம் வரும்.  ஆத்திரம் வரும். அழுகை வரும்.  இயலாமை வரும்.   ஒரு ஹீரோத் தனம்  இல்லாத சாதாரண மனிதனாக,  இந்த சாதனையைச் செய்தது போல படத்தில் காண்பித்து இருப்பார்கள்.   அது தான் படத்தின்  வெற்றி.  ஆனால் இந்த திரைப்படத்தில்  சூர்யாவை விட,   EI கற்ற  இரு சிறந்த பாத்திரங்களைக் கூறுவேன். 


 ஒன்று அவர் கூடவே இருக்கும் அவருடைய மனைவி பொம்மி.  சூர்யாவுக்கு சமமான, வித்யாசமாக சிந்திக்கும், தைரியமான, பொறுமையான பாத்திரப் படைப்பு. பல  காட்சிகள் இருந்தாலும், குறிப்பாக இரு இடங்களை கூறவேண்டும்.


 முதல் முறை.  மாறன் பொம்மியை கூட்டிக்கொண்டு கேக் டெலிவரி செய்ய பைக்கில் செல்வார்.  நண்பருக்கு போன் செய்ய சொல்லி பேஜரில் ஒரு செய்தி வரும்.   வண்டியை நிறுத்தி பக்கத்தில் இருந்த போன் பூத்தில் அவரின் நண்பருக்கு  அழைப்பார்.   விமான கண்காட்சிக்கு அவர் பார்த்து வைத்த விமானம் வரவேண்டும் எனில்  அந்த விமானத்தின் ப்ளூ ப்ரிண்ட்  இருந்தால் மட்டுமே அனுமதி கிடைக்கும் என அவர் கூறுவார்.  ' வேறு யார்க்கும் இல்லாத புது ரூல்ஸ் நமக்கு  மட்டும் ஏன்' என சூர்யா உடைந்து போய் விடுவார்.  அந்த டென்சனில்,  என்ன செய்வது என  தெரியாமல், போன் பூத்துக்கு பணம் கொடுக்காமல் அப்படியே பைக் நோக்கி செல்வார்.   'காசு குடுத்துட்டு போங்க என அதன் உரிமையாளர்' பின்னால்  வர,  பூத் வெளியே நிற்கும்  பொம்மி 'அண்ணே  நான் குடுத்துக்கறேன்" என்பார்.  சூர்யா பைக்கை பதட்டமாக உதைத்து ஸ்டார்ட் பண்ணி, ஒரு பத்தடி ஓட்டி  செல்வார்.  பொம்மியை விட்டுவிட்டு செல்வதை உணர்ந்துவிட்டு, வண்டியை நிறுத்தி  திரும்பிப் பார்ப்பார்.   அந்த இடத்தில் அவ்வளவு பதட்டம் தெரியும்.   ஆனால் பொம்மியோ, முகத்தில் குழப்ப ரேகைகள் படித்திருந்தாலும்   தலையை லேசாக ஆட்டி, ஒரு கையில் கேக் பிடித்துக்கொண்டு மறு கையில் அவரைப் போகச் சொல்லும் உடல்மொழியோடு, "நான் ஆட்டோல போயிக்கறேன்.." என்பார். 

அதேபோலத்தான் கிட்டத்தட்ட அனை

த்து பிரச்சினைகளும் முடிந்து குட்டி விமானம் பறக்கத்  தயாராக இருக்கும்.  மினிஸ்டர் உள் இருக்க குட்டி விமானத்தில் முதல் முறையாக ஏறி கிளம்ப முற்படும்போது தீ பிடித்துவிடும்.  ஒரு வழியாக எமெர்ஜென்சி லேண்டிங் செய்து வெளியே வருவார்கள்.  சூர்யாவுக்கு எப்படி நடந்தது என குழப்பம்.  விமான தளத்தை விட்டு வெளியே வந்தவுடன் அவரைச் சுற்றி நிருபர்கள். பல கேள்விகள் எழுப்புவார்கள்.  பாதுகாப்பு வசதி இல்லையா என்பது உள்பட.  'அதைப்பற்றி நான் விளக்குகிறேன்' என்பார். 


 அப்பொழுது  தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருக்கும் பொம்மிக்கு பிரசவவலி வரும்.   அந்த இடத்தில சூர்யா பொம்மியின் வலியைப் பார்த்துவிட்டு பதைபதைப்பாவார்.  அப்பவும் பொம்மி "நான் பார்த்துகிறேன்..நீ போ" என ஒரு தைரியத்தை கொடுக்கும் சொற்களை உதிர்ப்பார்.  பதட்டமில்லாமல் பொறுமையாக 'என்னை நான் பார்த்துக் கொள்கிறேன்.  நீ கவலைப்படாம  தைரியமா பேசு' என்பது தான் அது. அந்த  இடங்களில் எல்லாம் பொம்மி பதட்டமடையாமல் இருப்பார்.  அவரின் உணர்ச்சியை மடைமாற்றி வேறு கனிவான சொற்களின் மூலம் பிரதிபலிப்பார்.  பொம்மியின் அந்த சிறு பார்வையும், அந்த உடல்மொழியும், சொற்களும்  தான்  சூர்யாவுக்கு பூஸ்ட்.


இவர்கள் இருவருக்கும் நடக்கும் காதல் கட்சிகளின் கவிதையை விட,  இந்த இடங்களில் பொம்மியின் உணர்வு,  ஊக்கமாக  கண்கள் வழியே கடத்தப்படும்.


மற்றொருவர், மாறனின் மேலதிகாரியாக வரும் நாயுடு(மோகன் பாபு) அவர்களின் கதாபாத்திரம்.  அவர் ஒரு ராணுவ அதிகாரி என்பதாலோ என்னவோ எந்த ஒரு இடத்திலும் அளவுக்கு மீறிய உணர்ச்சிகளைக் காட்டிக் கொள்ளவே மாட்டார்.  அவருக்கும், மாறனுக்கும் ஒரு மோதல் போக்கையே ஆரம்பத்தில் இருந்து காண்பித்திருப்பார்கள்.  ஆனால் அதனைத் தாண்டி 'க்ளுக்' என  ஆனந்தக்கண்ணீர் எட்டிப் பார்க்கும், இரு நெகிழ்ச்சியான காட்சிகளில்.   


முதன்முறையாக குட்டி விமானத்தை தரை இறக்க விட மாட்டார்கள். மாறன், விமானத்தை ஓட்டும் நண்பர் சேவிடம்"நீ தாம்பரத்துல எறக்குடா நான் பார்த்துக்கறேன்" என கூறி, தாம்பரம் விமானப் படைத் தளத்தில் கட்டுப்பாட்டையும் மீறி இறக்குவார்கள்.  

அந்த விதிமீறலுக்காக நண்பர்கள்  மூவரையும் விசாரணைக்கு நிறுத்துவார்கள்.  அந்த காட்சி அவ்வளவு அழகாக இருக்கும்.  நாயுடு சேரில் இருந்து எழுந்து மிடுக்காக நடந்து வருவார்.   அவரின் பேச்சு தெலுங்கு கலந்த தமிழில் ரசிக்கும்படி இருக்கும். 'மேடே(Mayday) டிக்லேர் பண்ணி சென்னை ஏர்போர்ட்ல லேன்ட் பண்ணி இருக்கலாமல்ல' என கூறி அந்த இடத்தில் கேள்விகளைத் துளைப்பார்.   


இருக்கு முன்னாடி இதே மாதிரியான சம்பவத்தை அவர்களிடமிருந்தே போட்டு வாங்குவார். இறுதியில்

"டெல்லி வரைக்கும் எதிரிகளை சம்பாரிச்சிட்ட.  பைன் 25000.  மூனு மாசம் கழிச்சு கொடு."

அப்போதும் அவர்கள் நம்ப முடியாமல் நிற்பார்கள். "என்ன உங்கள கட்டிபிடிச்சு  வழியணுப்பனுமா? போங்க, "


மாறன் "என்னத்தான் உங்களுக்கு பிடிக்காதே, சார்?" என்பார்


"நம்ப இன்னிக்கு பொலிட்டிக்கல் ப்ரசர்ல்ல உன்ன உள்ள வச்சா,  என்னையே நான் மதிக்க மாட்டேன்... தம்புடு...நீ பண்ணனும்ன்னு நினைக்கிறது... உன் ஈகோ, என் ஈகோவ விட பெருசு.   ஒரு சோல்ஜர் அவனை நம்பி வந்தவர்களை உயிரோடு திரும்ப சேர்க்கணும்;  நீ இன்னைக்கு பண்ண மாதிரி.  யூ ஆர் எ லீடர் டுடே"  என்று கூறிவிட்டு ஒரு சிகரெட் எடுப்பார்.   அதன்பிறகு  சூர்யாவுக்கும், நாயுடுவுக்கும் நடக்கும் சிகரெட், வயசு பற்றி உரையாடல் ஒரு ஹைக்கு.  


முன்பிருந்த பகையை மனதில் வைத்து அவர் நினைத்திருந்தால், அந்த இடத்திலேயே மாறனின் கனவை தகர்த்து இருக்க முடியும். 


அதைவிட மிக முக்கியமான காட்சி.   பல பிரச்சினைகளும் முடிந்து, இறுதியாக விமானத்தை இயக்கும் சமயம். இரண்டு மூன்று நாட்களாக மாறன் தூக்கமே இல்லாமல் அலைந்து கொண்டிருப்பார்.  "நாமதான்டா பாதுகாக்கணும், இல்லன்னா தீ கூட வச்சிருவாங்க" என்று நண்பர்களிடம் கூறிவிட்டு அவர் விமானம் நோக்கி அயற்சியான உடற்மொழியோடு வருவார்.  அங்கு அவரின் மேல அதிகாரி, நாயுடுவும் அவரது குழுவும் stand-at-ease ஆக நின்று  கொண்டிருப்பார்கள்.  ஒரு சிறு புன்முறுவலோடு பேசுவார்.   "என்ன நெடுமாறன்  அந்த  கோஸ்சாமிக்கு மட்டும்தான்  ஆள் இருக்குமா?  நமக்கு இல்லையா? நம்மள்ள ஒருத்தர நாம கைவிடமாட்டோம்.  Go and take rest man" என்பார்.  


அவரின் பாத்திரப்படைப்பு எந்த ஒரு இடத்திலும் உணர்ச்சியை மிதமிஞ்சி வெளிக்காட்டாமல் இருக்கும்.  எந்த அளவிற்கு வெளிக்காட்ட முடியுமோ அவ்வளவு அழகாக ஒவ்வொரு இடத்திலும் வெளிப்படுத்தி இருப்பார்.   அதே நேரம் நாம் ஒரு முயற்சியை நோக்கி நகரும்போது எப்படி பழகிய மனிதர்கள் உதவுகிறார்கள் என்பதுவும்.  


பொம்மி, நாயுடு இரு பாத்திரங்களும் உணர்ச்சிகளை சட்டென கொட்டிவிடாமல்,  கதையை மேலும் அழகாக்குகிறது.

டாக்டர் செலின், US-மொடக்குறிச்சி

சென்ற வாரத்தில் எங்களது ஊர் மொடக்குறிச்சி மீண்டும் தலைப்புச் செய்திகளில்.  சென்ற முறை 1996-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தல் நடந்த போது இருக்கும்.  தினமும் நூறு, ஐம்பது பேராக எங்கள் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்கள்.  தினமும் மாலை தொலைக்காட்சி செய்தியில் பரபரப்பாக பேசப்படும்.   வேளாண் பிரச்சினைகளில் கவனத்தை ஈர்ப்பதற்காக  கீழ்பவானி விவசாயிகள் சங்கத்தின் மூலம் 1033 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு கின்னஸ் சாதனை அடைந்தது.  எங்கு சென்றாலும் அதனைப் பற்றியே கேட்பார்கள்.  நக்கலின் உச்சமாக "நீயும் எலக்சன்ல நின்னயா" என்பார்கள்.    இந்த முறை அமெரிக்காவின் செலின் ராஜ் கவுண்டர் அவர்கள் முக்கியச் செய்தியாக இடம்பெற்றுள்ளார்.  அவரது அப்பா ராஜ் அவர்கள் படித்த பள்ளி தான், மொடக்குறிச்சி அரசு மேல் நிலைப்பள்ளி.  தற்போது அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி.

 

வருடா வருடம் நடக்கும் பள்ளியின் இலக்கிய மன்ற விழா மற்றும் ஆண்டு விழாக்களில் நாவல் பழ  மரத்தடியிலும், வேப்பமரத்தின் நிழலில் உட்கார்ந்து கொண்டுதான் சிறப்பு விருந்தினருக்கு காத்திருப்போம்.

அந்த காத்திருக்கும் மாலை வெயில் நேரத்தில், சின்ன கல்லை எடுத்து, சற்று தள்ளி உட்கார்ந்திருக்கும் நண்பனின் முதுகில் தூக்கி போட்டு விளையாடி சுவாரசியம் ஆக்கிக் கொண்டதுண்டு.   எப்பொழுதும் பரிசளிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு முன்பாக சிறப்பு விருந்தினரின் பேச்சு இருக்கும்.  கலை நிகழ்ச்சிகளுக்கு ஆர்வத்தோடு காத்திருக்கும் வேளையில்,  சிறப்பு விருந்தினரின் பேச்சு, அவர் கூறும் குட்டிக் கதைகளைப் பொறுத்து ஆர்வம் வரும்.  

 

பெரும்பாலும் சிறப்பு விருந்தினராக SKM நிறுவனத்தின் எஸ்கே மயில்சாமி கவுண்டர் அவர்கள் தான் அழைக்கப்பட்டு இருப்பார்கள்.  எங்கள் பள்ளியில் படித்த அவர், ஒரு சிறந்த தொழிலதிபராக, தனித்துவம் மிக்கவராக இருந்தார் அப்போதும், இப்போதும்.  பள்ளிக்கு கேட்கும் நேரங்களில் நிதி வழங்கிக் கொண்டிருந்தார்.  கீழ்மட்டத்தில் இருந்து படிப்படியாக வளர்ந்த அவரது வரலாறை, பேச்சைக் கேட்கக்  கேட்க நம்மில் ஒருவர் என சுவாரசியமும், ஊக்கமும் வரும்.   அவை மூளையின் ஓரத்தில் எங்கோ ஒரு பக்கம் உட்கார்ந்து, வேண்டிய நேரத்தில் நம்மை உசுப்பி விடும்.  சில வருடங்கள் கழித்து எஸ்கே மயில்சாமிக் கவுண்டர் எனும் அவரின் பெயரை,  எஸ்கே மயிலானந்தன் என மாற்றிக்கொண்டார். அவர் மாற்றிக்கொண்ட சமயம்,  நுயுமராலஜி படி மாற்றிக்கொண்டார் என நினைத்துக் கொண்டுதான்  இருந்தேன்.  அதன் பிண்ணணி அப்பொழுது தெரியவில்லை.  அவரது SKM நிறுவனம், இன்று நான்கு கிளை நிறுவனமாக பெருகி, எங்கள் பகுதியில் பலருக்கும் வேலை வாய்ப்பளிக்கும் சிறந்த நிறுவனம்.  அவரது பிறந்த ஊரை தத்து எடுத்து,  அவர்களின்  குழந்தைகளுக்கு,   உயர்கல்வி வரை படிக்கவும் வைத்து வருகிறார்.  வாழ்க வளமுடன் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு, வேதாந்திரி மகரிஷிக்குப்பின் அதனை வழிநடத்தி வருகிறார்.

 

சரி, எதற்காக இந்த ப்ளாஸ்பேக்.  SKM அவர்களுக்கும், டாக்டர் செலின் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்?

இன்று அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் அவர்களின் கொரோனா குழுவில் இடம்பெற்றுள்ள பெண் மருத்துவர், செலின் கவுண்டர் அவர்கள் என்பது அறிந்ததே.   சென்ற வாரம் அவரைப்பற்றிய செய்திகள் வந்த நேரத்தில், எனது வாட்ஸ்அப் முழுக்க நண்பர்கள் "மச்சி, உங்க ஊர்க்காரங்க போல" என அவரின் பார்வர்டுகளால்  நனைத்துக் கொண்டு  இருந்தார்கள்.  நண்பர் ஒருவர் எனக்கு வாழ்த்தும் கூறினார்.   காரணம் மொடக்குறிச்சி அவரின் பூர்விகம் என்பது மட்டும் தான்.  இது அவரது தனிப்பட்ட முயற்சி, சொந்த சாதனை தான்.  அதையும் தாண்டி, அவர் நான்கு முறை பள்ளிக்கு வந்து, அவரின் டிரஸ்ட் வழியாக நிறைய உதவிகளை செய்துள்ளார் என்பது தான் கூடுதல் மகிழ்ச்சி.

 

அந்த புகைப்படங்களில், நாங்கள் பள்ளியில் உட்கார்ந்து கொண்டு இருந்த திடலில்,  அதே மேடையில் சிறப்பு விருந்தினராக அலங்கரித்து மாணவர்களுக்குப் பரிசை வழங்கிய புகைப்படங்கள் வலம் வந்தன.  நாங்கள் SKM அவர்களின் பேச்சை விளையாட்டாகக்  கேட்டு  உள்வாங்கிக் கொண்டது போல,  அந்தக் கூட்டத்தில் எத்தனையோ மாணவர்கள் டாக்டர் செலின் அவர்களின் உரையைக் கேட்டிருக்க கூடும்.  அது அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் சிறு பொறியை கிளப்பிவிடும்.  அந்த சிறு பொறி அவர்களுக்கு ஊன்றுகோலாக, அவர்களை உலகம் முழுக்க எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்ய உதவும். 

 

அந்த மேடையை நோக்கி அவர் நடந்து வரும் பொழுது, அந்த சிறுவர்கள் வேடிக்கை வைத்திருப்பார்கள். அவர்களுக்குள் பேசிக் கொண்டிருப்பார்கள்.   'இவங்க தான் இன்னிக்கு பேசறதுக்கு வந்திருக்காங்களா?  எங்கிருந்து வர்ராங்க?  நம்மூர்லயா படிச்சாங்க?  என்னடா, பேன்ட்  சர்ட்டெல்லாம் போட்டுருக்காங்க?'  என்று பல வித கேள்விகள் வந்திருக்கக் கூடும்.  இத்தகைய கேள்விகள் தான் அவர்களுக்குள் ஒரு 'ஸ்பார்க்'. 'அப்ப நாமும் படிச்சால் அங்க போக முடியமா?  இவங்க மாதிரியே சாதிக்க முடியுமா?'  எனும் அடுத்தடுத்து அவர்களை யோசிக்கத் தூண்டும்.     

 

அந்த வியப்பு, ஆச்சரியம் நிறைந்த கிசுகிசு கேள்விகள்,  அவர்களுக்கு எங்கோ ஒரு பொறியை, படிப்பின் தாகத்தை, அமெரிக்காவிற்கான கனவை உருவாக்கி விட்டிருக்க கூடும்.  இன்று இவரின் தந்தையின் கனவுக்காக பள்ளிக்கு உதவி செய்து கொண்டிருப்பதைப் போல, அந்த முணுமுணுத்த கூட்டத்திலிருந்து ஒருவர்,  பல நாடுகளுக்கும் சென்றுவிட்டு வந்து மேலும் பலரைத் தூக்கி விடலாம்.   அதுதானே இன்றைய மற்றும்  நாளைய தலைமுறையின் தேவையாக இருக்கின்றது.

 

அவர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்றாரா எனத் தெரியவில்லை.   அடுத்த முறை வந்தால் அவர் அங்கேயும் செல்ல வேண்டும்.  நம்மூரில் நாம் அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் விஷயத்தை அவர் ட்வீட்டாக பதிவு செய்திருந்தார்.  இதுகூட பலருக்கும் அவரவர்களின் பள்ளிக்கு ஏதாவது செய்வோமே என தோன்றி இருக்கும். இவருக்கும் கமலா ஹாரிஸ்க்குமான ஒற்றுமை.   இருவருமே இரண்டாம் தலைமுறையாக அமெரிக்காவில் இருப்பவர்கள்.  முதல் தலைமுறை முயற்சி எடுத்து, வாயுப்புக்களைப் பயன்படுத்தி சென்றதால் தான், இவர்களால் அங்கு சாதிக்க முடிந்தது.  பேச எவ்வளவோ அவரின் சாதனைகள் இருக்கும்போது சமூக வலைதளங்களில் வழக்கம்போல ஏதோ ஒரு எதிர்மறையை எடுத்துக்கொண்டு அவரது பெயர் பற்றி  சர்ச்சையை கிளப்பிக்கொண்டு இருந்தார்கள்.   SKM  அவர்கள் போலவே அவரும் செய்யலாம். 

 

கிட்டத்தட்ட நான் ஊருக்கு வந்ததில் இருந்து, கொரோன ஊரடங்கு தளர்வுக்குப் பின் மீண்டும்  கல்யாணம், விசேஷங்கள் என பரபரப்பாகவே, எனது  தனிப்பட்ட நேரம்  நிரம்பி வழிந்து கொண்டே இருக்கின்றது.  பல வருடங்களுக்குப் பின் இங்கு இருப்பதால் கொரோன பயத்தோடு முக்கியமானவற்றில்  பங்கு கொள்கிறேன்.

பெங்களூர், சென்னையில்  இருக்கும் என்  நண்பர்கள் இதன் காரணமாகவே ஊர்ப்பக்கம் வரவில்லை என்கிறார்கள். "அட, அங்க இருந்தா சின்னச் சின்ன விசேசம் ஒவ்வொன்னுக்கும் கூப்பிடுறாங்க.  போகலைன்னா சங்கடம் வேற.  கோவிச்சுக்கறாங்க".   டாக்டர்  செலின்  போன்ற சாதனையாளர்கள், இவை எல்லாவற்றையும் கடந்து விட்டுத்தானே சாதனைகள் செய்கிறார்கள்.

 

பெரும்பாலான சாதனையாளர்கள் அந்த வட்டத்தை உடைத்து வெளியேறியதால் மட்டும் தான் அவர்களால் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடிகிறது.  ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருக்கும்போது, பார்வை விரிவடைய மறுக்கின்றது.  பார்வை விரிவடைய, வெளிவட்டத்தின் வாய்ப்புகளை அறிந்துகொள்ள, உலகத்திற்கான திறவுகோலை வழங்க,  இத்தகைய சிறப்பு விருந்தினர்களின் நேரடிப் பங்கேற்பு உதவும்.  அவர்கள் நம் ஊரில் இருந்து சென்றவர்கள் எனும்போது நாமும் அதனைச் செய்ய முடியும் எனும் நம்ம்பிக்கை ஊற்று பிறக்கிறது. 

 

எங்கள் பகுதியில் இருந்து வெளியில் வந்து பிரபலமானவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.  அவர்கள் அல்லது அவர்களின் வழித்தோன்றல்கள் எங்கு இருந்தாலும், மீண்டும் வேர்களை நோக்கி விழுதுகளைப் பரப்பி மற்றவர்களைத் தூக்கிவிடுவதென்பது கண்டிப்பாக பாராட்டப்பட  வேண்டிய விஷயம்.   அதுவும் அவரின் அப்பா படித்த பள்ளி என்பது கூடுதலாக பாராட்ட வேண்டிய விஷயம்.  வாழ்த்துக்கள்  டாக்டர் செலின். 

 #mondaymotivation #MotivationalStories

   

 



Saturday, September 26, 2020

ஈரோடு தினம்

ஈரோடு  தினம் என காலையில் FM  கேட்டுக்கொண்டு செல்லும்போதே காதில் விழுந்தது.   கூடவே வாசலின் ஈரோடு  குறித்த அனுபவம்,  நினைவுகளைக் கீற ஆரம்பித்து, கொசுவர்த்திச்  சுருளை மலர விட்டது. 

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஈரோடு வேறு வேறு பரிணாமத்தை எனக்கு வழங்கியுள்ளது. பள்ளிக்காலங்களில் பேருந்துகளில் வரும்பொழுது சும்மா வேடிக்கை பார்ப்பது திரையரங்குகளின் மீதான ஈர்ப்பாக மாறுகின்றது.  கொங்காளம்மன் கோவில் வீதி, நகைக்கடை வீதி சில காலம்  முக்கியமானதாக இருந்தது. கல்லூரி செல்லும்போது பேருந்து நிலையமும், பஸ்களும் பிடித்தமானதாக  இருந்தது.  அதன்பின் வெளியூர் சென்ற காலகட்டங்களில் ரயில் பேருந்து மற்றும் நிலையத்தில் இருந்து ஏற்றிவிடும் ஒரு ஹப் ஆக மட்டுமே இருந்தது.  இன்று வாசலின் வழி வேறு ஒரு பரிமாணம் எனலாம்.  
பள்ளி காலங்களில் ஈரோடு என்பது எங்களுக்கு ஒரு வெளிநாடு போவது போலத்தான்.  ஈரோடு போவது என்றால் ஒருவித மகிழ்ச்சி குடிகொண்டு விடும்.   "நாளைக்கு ஈரோடு போகப் போறேண்டா ",  "இன்னிக்கு ஈரோடு போய்ட்டு  வந்தேன்டா"  என்று நண்பர்களிடம் சொன்னாலே கெத்தாக  இருக்கும்.   ஈரோட்டில் திரைப்படம் பார்த்துவிட்டு சென்றால் காலர் தூக்கி விட்டுக்கொண்டு சுற்றலாம்.   அதற்கான சாட்சியாக டிக்கெட் எல்லாம் பல நாட்கள் பத்திரமாக இருக்கும்.  

கரகாட்டக்காரன் திரைப்படம் சக்கை போடு போட்ட போது குடும்பம் குடும்பமாக பல ஊர்களில் இருந்தும் ஈரோடு சென்று பார்த்தார்கள்.   அப்பொழுது புதிய படங்களைப்  பார்க்க சுற்று வட்டாரமும் ஈரோடு தான் வர வேண்டும்.  மொடக்குறிச்சி தியேட்டர் வர ஐந்து ஆறு மாதம்  வரை ஆகலாம்.  ஈரோட்டிலும்  ஒரேயொரு தியேட்டரில் தான் படத்தினை வெளியிடுவார்கள்.  ரஜினி கமல் படம் எனில் ரெண்டு தியேட்டர்கள்.     ஊரில் அண்ணா ஒருவர் ஓரிரு குடும்பங்களை ஒன்று சேர்த்து கரகாட்டக்காரன் படத்திற்கு சுற்றுலா(?) கூட்டிச் சென்றார்.  ஸ்டார் தியேட்டரில் ஐம்பது, அறுபது நாட்களைக் கடந்து படம் ஓடிக்கொண்டு இருந்தது.   பேருந்து நிலையத்தில் இறங்கி, ஸ்டார் தியேட்டர் வரை நடந்தே கூட்டிச்சென்றார்.  ஒரு மணி நேரம் முன்பே சென்று டிக்கெட் கவுண்டரின் முன்பு காத்திருந்து உள்ளே சென்றோம்.  காத்திருந்த அந்த நேரத்தில், பல சுவாரசியமான சம்பவங்களை கூறிக்கொண்டே செல்வார். அவர், அதற்கு முன்  இரண்டு முறை பார்த்திருந்தார்.   "இந்தப் படத்துல கடசீல மாரியம்மா மாரியம்மா பாட்டு  வரும்.   கொட்டாய்ல  சாமி வந்தெல்லாம் ஆடுவாங்க" என்றார்.  கூறியது போலத்தான்  திரைக்கு முன்புறம் இருந்த பெண்கள், மாரியம்மா பாட்டின் போது  சாமி ஆடினார்கள்.    "அந்த தீ மிதிக்கிறதெல்லாம்  செட்டிங்ஸ்.  அடியில செவப்பு கலர் சீரியல் பல்பு போட்டு எடுத்துருக்காங்க" என்று வாரமலரில் படித்ததையும் கலந்து கூறுவார்.   இப்படித்தான் ஈரோட்டில் முதல் திரைப்படம் பார்த்தேன்.

ஈரோடு அபிராமியில் படம் பார்ப்பது என்பது பலரின் கனவு.   அப்பாவும், அவர் நண்பரும் ஈரோடு ஒரு  வேலையாக வந்தபோது கூட்டிக்கொண்டு சென்றார்கள்.  வந்த வேலை மாலைக்கு  தள்ளி சென்றதால் எனக்கு அதிர்ஷ்டம் அடித்தது.  பக்கத்தில் தான் அபிராமி காம்ப்ளக்ஸ்.  A  என்று அபிராமியின் ஸ்டைலான லோகோ, அபிராமி எழுத்தின் பின் இருந்த A/C 70MM,  அதன் முன்புற படிக்கட்டு அமைப்பு, வாயிலின் முன்பு தோரணங்கள், பெரிய போஸ்டர், கட் அவுட் என  'பட்டிக்காட்டான் முட்டாய் கடை பார்த்த' மொமெண்ட்டை வரவழைக்கும்.   தேவி அபிராமியில்  சிங்காரவேலன் திரைப்படதிற்கு தான் டிக்கெட் கிடைத்தது.  மற்ற தியேட்டர்களின் டிக்கெட்டைவிட,  அபிராமியின் டிக்கெட் பேப்பர் தரமான காகிதத்தில் இருப்பது போல தோன்றும்.  இரண்டு மாடிகள் சாய்தள படிக்கட்டில் ஏறி, உள்ளே நுழைந்தபோது பொது 'சொன்னபடி கேளு' பாட்டு பாதி சென்றுவிட்டது வருத்தம் தான்.  

சின்ன தியேட்டர் என்றாலும் திரை சற்று பெரிதாக, சுவரில் இருந்து வெளியே வந்து சற்று வளைந்தது போல இருக்கும்.  தியேட்டருக்குள் இருக்கும் ஒருவித ஏசி வாசனை ரம்யமாக பார்க்க வைக்கும்.  குசன் சீட்கள் அப்பொழுது ஒரு மாறுபட்ட சினிமா பார்க்கும் அனுபவத்தை கொடுத்தது.   இன்னுமொரு குறிப்பிட வேண்டிய விஷயம்  இடைவேளையில் அங்கு கிடைக்கும் கட்லெட்.  'டொமோடோ  கேட்ச் அப்' போட்டு சிறு பீங்கான் தட்டில் வைத்து தருவார்கள்.  அந்த கட்லெட் சுவையை வேறு எங்கும் சுவைத்ததில்லை.  அபிராமிக்கு சென்றால் எப்போதும்  கட்லெட் மட்டுமே வாங்குவது உண்டு.  ஆனாலும் அப்போது அபிராமியில் படம்  பார்க்க முடியாத வருத்தம்.   

கரகாட்டக்காரன் கூட்டிச் சென்ற அண்ணா ஒரு தீவிர ரஜினி ரசிகர்.  அதே டீமை அதன் பிறகு சில வருடங்கள் கழித்து எஜமான் திரைப்படத்திற்கும் கூட்டிச்  சென்றார். இந்த முறை படம் அபிராமியில்.  இதற்கும் அதேபோல ஒரு மணிநேரம் முன்பாகவே வந்து, போஸ்டரை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தோம்.   "ரஜினி இந்த படத்துல ஒரே ஒரு சீன்ல மட்டுந்தா  ஜிப்பாவுல வருவாரு,  மத்தபடி படம் முழுக்க வேட்டி சட்டைதான்" என்பார்.  அதேபோல ஒருநாளும் எனை  மறவாத பாட்டு வரும்போது "இதோ இந்த சீன் தான், பாரு பாரு" என்பார்.   இடைவேளையில் அங்குள்ள சீல்டுகளை பார்ப்பதும் ஒரு குதூகலம்.  இப்படியாக அபிராமியில்  திரைப்படம் பார்ப்பது நிறைவேறியது. 

ஈரோட்டில் திரைப்படம் பார்ப்பது ஒரு அனுபவம் எனில், வரும் வழியில் வேடிக்கை பார்ப்பது மற்றுமொரு ஆனந்தம்.  மாமாவின் ஊர் அரச்சலூர். பூந்துறை வழியாக குறுக்கே சென்றால், 30 நிமிடத்தில் வண்டியில் செல்லும் தூரம்.  வண்டி இல்லாத  காலங்களில்  பேருந்து மாற்றித் தான் செல்ல வேண்டும்.   ஒன்று விளக்கேத்தி வழி. இன்னொன்று  நாடர்மேடு பெட்ரோல் பங்க் வழி.   இரண்டாவதே எனக்கு பிடித்தமான வழி.  விளக்கேத்தி வழியில் வேடிக்கை பார்க்க எதுவும் இருக்காது.    நாடார்மேடு பெட்ரோல் பங்க் அப்பொழுது  ஈரோடு நகரின் ஒதுக்குப்புறம்.  பேருந்து நிலையம் கூட்டிச் செல்ல மாட்டர்கள்.   இருந்தாலும் சோலார், கார்மல் பள்ளி என ஏதோ ஒன்று  வேடிக்கை பார்க்க கிடைக்கும். சினிமா போஸ்டர்கள், ஊர் பெயர் பலகைகள் என எதையும் விட்டு விடாமல் வரிசையாக படிப்பதும் உண்டு.   'பஸ்டாண்டு போனா  உக்கார சீட் கிடைக்கும்' என்றாலும், 'அது அர மணி நேரம் சேத்தி ஆகும்' என மாட்டார்கள்.

அம்மாவாசைக்கு திருச்செங்கோடு மலைக்கு செல்வது வழக்கம்.  அதிகாலையில் வரும் முதல் பேருந்து VMS.  அதில் ஏறி ஈரோடு பேருந்து நிலையத்தில் இறங்கி, திருச்செங்கோடு பேருந்தில் மாறுவது தான் எனக்கு நினைவு தெரிந்து முதலில் ஈரோடு வந்த அனுபவமாக இருக்கும். அதிகாலையில் செல்கையில் தூங்கிவிடுவதால், திரும்பி வரும்போது தான்  வேடிக்கை பார்க்கும் படலம்.   எப்படியும்  ஜன்னலோர சீட்டு  கிடைத்துவிடும்.  

ஓரிருவருடன் காலியாக சிவகிரியில் இருந்து 42 டவுன்பஸ் ஏறினால், ஈரோடு பேருந்து நிலையம் அடைய  45 நிமிடம் ஆகும்.    ஒவ்வொரு பஸ் ஸ்டாப்பிலும் நின்று அனைவரையும் ஏற்றி  ஊர்ந்து நத்தை போல ஊர்ந்து செல்லும்.  ஆனால் ஈரோட்டுக்குள் நுழையும்முன் நிரம்பிவிடும்.   நகருக்குள் நுழைந்ததும் ரயில்வே காலனி பள்ளி தான்  வேடிக்கை பார்க்கும் முதல் இடம்.   தாண்டியதும் ரயில்வே நுழைபாலம்.    தற்போது மேலே செல்லும் உயரம் குறைவான பழைய பாலம் மட்டுமே இருக்கும்.  பல வருடங்களாக குழி வெட்டி உயரம் அதிகமான  நுழைபாலம் கட்டினார்கள்.   அதனை நெருங்கும்போது ஏதேனும் புகைவண்டி தெரியாதா? என தேடுவது இயல்பு.  எப்பொழுதேனும் அதிர்ஷ்டம் கூடும்.   அடுத்தாக  காளைமாடு சிலை.   திமிலேறிய  காங்கேயம் காளையை ஒரு வீரன் அடக்கும், அந்த சிலை ஈரோட்டின் ஒரு அடையாளம்.  சில வருடங்கள் வண்ண, வண்ண லைட்டுகளும், சுற்றிலும் பைப் வைத்து நீர் பீச்சி அடிப்பது அழகாக இருக்கும், குறிப்பாக இரவில்.  
நகர பேருந்து அதனை அரை வட்டமிட்டு நுழைந்தால் fire  சர்வீஸ்.   அதற்கு எதிர்புறம் கோஆப்டெக்ஸ்  கட்டிடம்.   அதனை ஒட்டிய சாலையில் சற்று உள்ளே சென்றால் ஆனூர் தியேட்டர்.   கோழிமொட்டு  தியேட்டர் என்பார்கள்.  அதன் வடிவம் முட்டைபோல இருந்ததால் .  பேருந்தில் இருந்தே தியேட்டர் தெரிகிறதா என பார்ப்போம்.  இந்தியன் திரைப்படம் வந்த பொழுது, கமல் ரசிகர் அங்கு கூட்டிச் சென்றார். 

தீ அணைப்பு நிலையம் தாண்டியதும் சற்று தொலைவு சென்றால் சந்திரன் ஸ்டுடியோ.  பெரும்பாலான வீடுகளில், ஒயரில் பின்னப்பட்ட கூடை நாற்காலியில், குழந்தைகளை உட்கார வைத்து எடுத்த போட்டோக்கள், இங்கு எடுக்கப் பட்டதாகத்தான் இருக்கும்.   அடுத்து ஓடை குறுக்கிடும்.   தாண்டினால் பெரியார் நகர் ஆர்ச்.  பெரியார் அங்கு தான் பிறந்தார் என பல நாள் நம்பிக்கொண்டு இருந்தேன்.  எதிரில் மாணிக்கம் தியேட்டர் மற்றும் நடராசா  தியேட்டர்.   போஸ்ட் ஆபீஸ், அரசு பெண்கள் பள்ளி தாண்டியதும் பன்னீர் செல்வம் பார்க் வந்துவிடும்.      

எங்கள் ஊர் பேருந்துகள் பன்னீர் செல்வம் பார்க்கில்,  இடது புறம் திரும்பிவிடும்.   மாரியம்மன் கோவிலின் அம்மன் பெருந்திலிருந்தே அழகாக தரிசனம் கொடுப்பார்.  வலது கை இயல்பாக கன்னம் நோக்கி ஸ்டைல் கும்பிடு போட செல்லும்.   சற்று தொலைவு சென்றால் அப்பொழுதுதான் வந்த ரேமாண்ட்ஸ், பக்கத்திலியே உயரமான டெலிபோன் பவன் என ப்ர∴ப் ரோடு ஆரம்பிக்கும்.  ப்ர∴ப் ரோடின் மறுமுனையில் சவீதா  மருத்துவமனையின் கட்டிடம் புதிதாக மிரட்டும்.  அதன் பின் சந்துகளில் புகுந்து பேருந்து நிலையத்தின் ஒரு முனையில் நுழையும்.    

ஆனால், தொலைதூர பேருந்துகள், ஊரிலிருந்து 30 நிமிடத்தில் விரைந்து பேருந்து நிலையம் அடையும்.   காளைமாடு சிலைக்குப்பின் ரயில் நிலையம், சூரம்பட்டி  நால்ரோடு,  GH  வழியாக பேருந்து நிலையம் வந்தடையும்.   அது எனக்கு ஒரு போரிங் ரூட்.  வேடிக்கை பார்க்க பெரிதாக ஒன்றும் இருக்காது.  ஆனால் இதில் செல்லும்போது, மூன்று முக்கிய  திரைஅரங்கத்தின் போஸ்டர்களை வேடிக்கை பார்க்கலாம்.   ரயில் நிலையத்தின் எதிரில் இருந்த முத்துக்குமார், பின்பு ஸ்ரீசண்டிகாவாக மாற்றப்பட்டது.   அபிராமி காம்ப்ளக்ஸ்ஸில் இருக்கும்  அபிராமி மற்றும் தேவி அபிராமி. பேருந்து நிலையத்தை ஒட்டி இருந்த ராயல் தியேட்டர்.  இந்த திரை அரங்குகளின் போஸ்டர், கட் அவுட் மற்றும் தோரணம் வேடிக்கை பார்ப்பது அலாதி.

அடுத்து இன்னுமொரு வழி, தொலை தூர பேருந்தில் வந்து காளை மாடு சிலை அருகே இறங்கி 1ம்  நம்பர் பிடித்தால் பன்னீர் செல்வம் பார்க் வழியாக மணிக்கூண்டில் இறங்கலாம்.  பன்னீர் செல்வம் பார்க்கில் எங்கே பார்க் என பலமுறை தேடியதுண்டு.   அதேபோலத்தான் மணிக்கூண்டில் எங்கே கடிகாரம் எனவும்.  அந்த சாலை தான் மனிதர்கள் நெருக்கமாக இருக்கும் ஈரோட்டின் ரங்கநாதன் தெரு.  குட்டிக்  குட்டி கடைகள். எண்ணற்ற மனிதர்களின் வாழ்வாதாரம்.  

பன்னீர் செல்வம் பார்க் அருகில் பாடல் பதிவு செய்து தரும் கடை இருந்தது.  விரும்பும் பாடல்களை தெளிவாக பதிவு செய்து தருவார். ரெகுலர் கஸ்டமர்.   இளையராஜாவின் பாடல்களை கொடுத்து 90M கேசட்டில் பதிவு செய்தது பலமுறை நடக்கும்.  கேசட் சிஸ்டதிற்குப் பிறகு, CD, பென்டிரைவ் தற்போது இன்டர்நெடில் பாட்டுக்கேட்கும் அளவிற்கு மாறிய தொழில்நுட்பத்தில் இன்று அவர் என்ன செய்து கொண்டு இருப்பார்?  அந்தக்கடை கரும்பு ஜூஸ் கடையாக மாறி இருந்தது.  பெரும்பாலும் பன்னீர் செல்வம் பார்க் டு கொங்காளம்மன் கோவில் வீதி பேருந்து நிறுத்தம் வரை ஷாப்பிங்கோடு நடைதான்.  அங்கு ஏறினால் பேருந்து நிலையத்தை சக்தி ரோடு வழியாக அடையலாம்.  சத்தி சாலை வேடிக்கை பார்க்க பெயிண்ட் கடைகள் மட்டுமே இருக்கும்.   ஒரு சதுரம் போல ஈரோடு என்பது இந்த மூன்று வழிகளிலும் முடிந்துவிடும்.  

அனைத்து  நகரங்களையும் போல, ஈரோடும் எத்தனையோ விதமான மண்ணின் மைந்தர்களின்  உணர்வுகளோடு கலந்து அவர்களையும் வளர்த்து,  தானும் வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.   இன்று மொடக்குறிச்சியில்  இருந்து வரும்போது லக்காபுரம்  ரிங் ரோட்டிலிருந்தே  நகரம் ஆரம்பித்து விடுகின்றது.   அப்பொழுது  சென்று வந்த திரையரங்குகளும், கடைகளும், அன்று  வேடிக்கை பார்த்த  பல இடங்களும், காலமாற்றத்தில் இன்று கரைந்தும்,  புதிய பொலிவோடும் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நடைபோடுகிறது.  ஆவலாக எதிர்கொள்வோம்.

எஸ் பி பாலசுப்ரமணியம்

நேற்றும் இன்றும் FMல்  கேட்டவரைக்கும் எஸ்பிபி பாடல்கள்.   அப்பொழுதெல்லாம் திருச்சி வானொலி நிலையத்தில் காலை 7.30 க்கு  அரை மணி நேரத்திற்கு பாடல்களை ஒலிபரப்புவார்கள்.  பள்ளிக்கு கிளம்பிக்கொண்டே பாடல்களைக்  கேட்பது தான் வழக்கம்.  தொகுப்பாளர்கள் ஒரு சில நேரங்களில், பாடலுக்கு முன்பே படத்தின் பெயரை கூறிவிடுவார்கள்.  பிறகு பாடகர்களின் பெயரைக் குறிப்பிடுவார்கள்.  சில நேரங்களில்  படத்தின்  பெயருக்கு முன்பே,  பாடகர்களின்  பெயரைக் குறிப்பிடுவார்கள்.    'நிகழ்ச்சியின் தொடக்கமாக படிக்காதவன் திரைப்படத்தில் இருந்து  எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் சித்ரா பாடிய பாடல்'.  'அடுத்ததாக காக்கி சட்டை திரைப் படத்திலிருந்து எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் ஜானகி பாடிய பாடல்'  என்பார்கள் .   எஸ்பி பாலசுப்ரமணியம் என்று ஆரம்பித்தால் புதிய பாடல் என்று ஒரு குட்டி குதூகலம் அந்த கணத்தில் தோன்றி மறையும்.   'டிஎம்  சௌந்தர்ராஜன் அல்லது பிபி ஸ்ரீனிவாஸ்' என்று தொகுப்பாளர் ஆரம்பித்தால், ஏதோ பழைய பாடல் போடப் போகிறார்கள் என்று சுவாரசியம் குறைந்து விடும்.  அதற்கடுத்து படத்தின் பெயரைக் குறிப்பிடும்போது இது கமல் படமா?  அல்லது ரஜினி படமா?  என்பதில் மனம் உற்சாகமடையும்.

எங்களைப்  பொறுத்தளவில், பாடலை யார் பாடி  இருந்தாலும்,  ரஜினி பாட்டா ?  கமல்  பாட்டா? என்பதுதான்.  பள்ளிக்கு பையைத்  தூக்கிக் கொண்டு செல்லும் பொழுது  'இன்னிக்கு ரெண்டு கமல் பாட்டு, ஒரு ரஜினி பாட்டு தான்டா'  என்று தான் சண்டைகள் நடக்கும்.  ஊர் முடிந்த பின் வரும் கிணற்றை ஒட்டிய வளைவு தாண்டி, விரியம்பழ மரத்தின் அடியில் நடந்துகொண்டே தான் இந்த உரையாடல் நடந்தது.  சிலவற்றை பற்றி யோசிக்கும் பொழுது, அந்த இடமும் சம்பவமும் மனதில் காட்சிபோல பளிச்சென்று விரிகிறது.    அப்பொழுதெல்லாம் எஸ்பி பாலசுப்ரமணியம், மனோ, மலேசியா வாசுதேவன், ஜானகி, சித்ராவை யார் என்றெல்லாம் தெரியாது.   கமலுக்கும், ரஜினிக்கும் மட்டும்  எஸ்பி பாலசுப்ரமணியம்  பாடுவார்கள்;  சிவாஜி, எம்ஜிஆர் என்றால் டிஎம்  சௌந்தர்ராஜன் என்று குத்துமதிப்பாக பேசிக்கொள்வோம்.   அதன் பிறகுதான் படிப்படியாக தெரிந்தது, பாடல்களைப் பின்னணியில் பாடியவர்கள்  வேறு, அதனை முன்னிருந்த நடிப்பவர்கள் வேறு என்பது. 

"மண்ணில் இந்த காதல் இன்றி"  பாட்டு ஹிட் ஆனபோது  பாட்டு புத்தகம் வாங்கி,  பாடலை அவரோடு சேர்ந்து மூச்சுவிடாமல் பாட  முயற்சி செய்தது பலர். அந்த கால கட்டத்தில்  தான் இவர் ஹீரோவாகவும் தடம் பதித்தார். 
 

தேர்வுகளுக்கு இரவில் படித்துக் கொண்டிருக்கும்பொழுது, வீட்டின் அருகில் ரவி அண்ணன் அவர்களின் டெய்லரிங் கடை  இருக்கும்.  கமல் ரசிகர். அவர்தான் அப்பொழுது ஏரியாவின் பிரபலமான டெய்லர்.  பத்து, பதினோரு மணிக்கு மேல் இரவில் பல மென்மையான பாடல்கள் அங்கிருந்து மிதந்து வரும்.   பெரும்பாலும் கமலஹாசன் + இளையராஜா + எஸ்பி பாலசுப்ரமணியம் கூட்டணி பாடல்கள். பாடப் புத்தகம் சற்று நேரம் படித்தாலே தூக்கம்  வரும்.  கூடவே இவர்களின் கூட்டணி தாலாட்டும், . படிக்கணும் என்று இருக்கும் நேரத்தில்   தூங்க வைத்துவிடும்.  அடுத்தநாள்  'அண்ணா.. என்னண்ணா எப்ப பார்த்தாலும்  சோகப் பாட்டு போடறீங்க, ராத்திரில எல்லாம் நல்ல அடி பாட்டு போடுங்கண்ணா.. அப்ப தான தூக்கம்  வராது"  என்பேன்.  "குமாரு,  இந்த பாட்டெல்லாம்  அருமையா  இருக்கும், வேலை செய்யறதே  தெரியாம வேலை பார்க்கலாம்" என்பார்.   அவர் அன்று கூறியது,  எனக்குப் புரியவில்லை.  ஆனால் நண்பர்களோடு இரவுகளில் வேலை செய்யும் நேரங்களில்  இளையராஜா + எஸ்பிபி பாடல்களில் தான் வாழ்ந்தோம்.  இன்றும்  கூட இரவு நேர அலுவல் வேலைகளிலோ அல்லது மனது அழுத்தமாக இருக்கும்போதோ அவர்களே சரணம்.  கல்லூரி நண்பர் கூட அப்போது கூறுவார் "இன்னைக்கு ரெக்கார்ட் நோட்ட முடிக்கணும்னா,  விடிநைட் உட்காரணும்.  இளையராஜா பாட்டோட முடிச்சிடலாம்" என்பார்.  இங்கு இளையராஜா எனில், எஸ்பிபியும்  கூடவே வந்துவிடுவார். 

கல்லூரி ஹாஸ்டலில் நண்பன் ஒருவனின் டேப்ரிக்கார்டர் இருக்கும்.  ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் கேசட் கடையில் பதிவுசெய்த 90M கேசட் கூடவே இருக்கும்.   கல்லூரி முடித்த மாலைகளில்  ஒரு மணிநேரம் அவரை ரசித்த பின்பு தான் அந்த நாள் முழுமையடையும்.    மௌன ராகம் திரைப்படத்தின் ' நிலாவே வா... செல்லாதே வா..'  பாடல் தான் அதில் முதல்.   'உனக்கு புடிச்ச பாட்டு என்ன?' என்று கேள்விக்கான பதில் எப்பொழுதும் இந்த பாடலே. சற்று சோகம் கலந்த மென்மையான பாடல்.  அதற்கு அடுத்ததாக இருந்த பாடல்   "மன்றம் வந்த தென்றலுக்கு.. மஞ்சம் வர நெஞ்சம்  இல்லையா ?".  இந்த பாடலில் அவரின் குரல் மெய் மறக்க வைக்கும்.   இந்த இரண்டு பாடல்களும் ரீவைண்ட் செய்து,  ரிப்பீட் மோடில் அதிகப்படியாக கேட்டவை.  "டேய், கெஸட்டுக்கு வாய் இருந்தா,  கதறிடும் டா" என்பார்கள்   அந்த பாடல்கள் தான் பெரும்பாலான நேரங்களில்  ஹம்மிங் ஆகும்.  அவரின் குரலில் அந்த  உணர்வுகளை நமக்கு கடத்தி விடுவார் இந்த காந்தக் குரலோன்.  

ரஜினி அவர்களுக்கு  அவரது பிம்பத்தை உயர்த்திப் பிடிக்கக் கூடிய பாடலை பாடியவர் எஸ்பிபி.    அண்ணாமலையில்  "வந்தேண்டா பால்காரன்",  பாட்ஷாவில் "நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்", அருணாச்சலத்தில்  "அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா", முத்து படத்தின்   "ஒருவன் ஒருவன் முதலாளி" , படையப்பாவில் " என் பேரு படையப்பா படையப்பா இளவட்ட நடையப்பா" என வரிசையாக  ரஜினி அறிமுகம் ஆகும் பாடலை எஸ்பிபி மட்டுமே பாடுவார்.  இந்த பாடல்கலில் ரஜினிக்கு ஒரு மாஸ் ஹீரோ பிம்பத்தை ஏற்படுத்தியது, வைரமுத்துவின் வரிகளோடு இவரின் அதிரும் குரல் தான். பாபாவின் தோல்விக்கு சென்டிமென்டாக, எஸ்பிபி அறிமுகப் பாடலைப் பாடாதது  தான் காரணம் என்றும்  கூறுவார்கள். அதன்பிறகு சந்திரமுகியில் 'தேவுடா தேவுடா' பாடலை மீண்டும் அவர் பாடியதுதான், அந்த பட வெற்றிக்கு வெற்றிக்கு காரணம் என்றும் கூறுவார்கள்.   

நாயகனின் புகழ் பாடும் பாடல்கள் அந்த வரிசை என்றால்,  அதன் பிறகு ஒரே பாட்டில் பெரிய ஆளாக மாறும் பூஸ்டர் பாடல்கள் வேறு ரகம்.   அண்ணாமலை திரைப்படத்தில் "வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்" என்ற பாடல்.  அந்த பாடலில்  வரும் "அடே.. நண்பா உண்மை சொல்வேன்... சவால் வேண்டாம்... உன்னை வெல்வேன்" வரிகளுக்கு இவரின் ஹை பிட்ச் குரல், உற்சாக மூட்டும்.  நண்பர்களிடம் செல்ல சண்டைகளுக்கு ,  இந்த பாடல்களை விளையாட்டாக பாடியதும் உண்டு. மற்றுமோர் பூஸ்ட் பாடல் என்று கூறினால்  "வெற்றிக்கொடி கட்டு மலைகளை முட்டும் வரை முட்டு" தான்.  படையப்பா திரைப்படம் வந்த நேரம், கல்லூரியின் செமஸ்டர்  தேர்வு நேரம்.  ஒவ்வொரு தேர்வுக்கு செல்லும் முன்பும், சென்டிமெண்டாக இந்த பாடலை அலற விட்டு விட்டுத்தான் பரீட்சை எழுத செல்வோம்.  இன்றும் இந்த பாடல்களை கேட்கும்பொழுது உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.   ஆனால்  அந்த படங்களில்  "சிங்கம் ஒன்று புறப்பட்டதே" பாடலை மட்டும் மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடி இருப்பார்.  ரஜினி அவர்கள் இரங்கல் செய்தியில் கூறியது போல, அவரின் வாய்ஸ் ஆக இருந்தது எஸ்பிபி அவர்கள். 

அது ஏனோ துள்ளலான ஜோடியான பாடல் என்றால் எஸ்பிபி அல்லது மனோ தான் படுவார் எனவும், சோகமான பாடல் என்றால் யேசுதாசும், இளையராஜாவும் பாடுவார்கள் என மனதில் பதியப்பட்டு இருந்தது.  
இன்று எனது கணினியில் இருந்த எனக்குப் பிடித்த 80ஸ் பாடல்களை ஒரு பார்வையிட்டேன்.  அந்த 90M கேசட்டில் இருந்தவையும்  இந்த போல்டரில் இருக்கும்.  ரஜினி, கமல் பாடல்களை விட்டுவிட்டு பார்த்தால்  மோகன், ராமராஜன் பாடல்கள் என பலருக்கும் அவர்களின் குரலுக்கு தகுந்தவாறு பாடியவராக எஸ்பிபி தான்  இருந்தார்.  அவரின் வாய்ஸ்  மாடுலேஷன், அந்தந்த நடிகரோடு பொருந்திப் போகும்படி பாட்டு இருக்கும்.   தெலுங்கு தசாவதாரம் படத்தில், அனைத்து கமலுக்கும் வித்தியாசமாக குரல் கொடுத்த பல குரல் மன்னன்.    

இளையராஜாவை கொண்டாடும்  போது  கூட இவரும்  வந்து விடுகிறார்.   இருவரும் இணைந்த பாடல்கள் தான், மழையோடு வரும் வானவில் போல அழகானவை. இறுதிக்காலத்தில் நண்பர்களுக்குள் வரும் பிணக்கு  போல இருந்தாலும், இளையராஜா அவர்கள், எஸ்பிபி மருத்துவமனையில் இருந்த போது, 'பாலு எழுந்து வா, நாம் மீண்டும் ஒரே மேடையில் கச்சேரி செய்வோம்' என்று அழைத்தார்.  எஸ்பிபி அவர்களும்  எழுந்து வருவார்.  இந்த இசை நண்பர்களை ஒரே மேடையில் பார்க்கலாம் என ஆவலாகத்தான் இருந்தோம்.  ஆனால் காலம் பாடும் நிலாவிற்கு இசைஞானியை இரங்கற்பா பாட வைத்துவிட்டது.  சும்மா வேணும் இசையை  ரசிப்பதற்காகட்டும், சோகத்தில் இருந்து மீள்வதற்காகட்டும், அவரின் குரலோடு தான் பயணத்திலும் பயணிப்போம்.  நிறைவாழ்வு.  நனி நன்றி எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களே.

Sunday, August 30, 2020

பெங்களூர்-ஈரோடு; கொரோனாவில்

ஊருக்கு வருவதென்பது எப்போதுமே ஒரு ஆவலான  விஷயம்.   ஆனால் ஆறு மாதங்கள்,  ஆகி இருந்தாலும், இம்முறை தயக்கம்.    ஈ-பாஸ் வழங்குவதில்  ஈரோடு மட்டுமே ரொம்பவும் ஸ்ட்ரிக்ட்.   மூன்று வாரங்களுக்கு முன் ஈரோட்டுக்கு போட்ட பாஸ் கிடைக்கவில்லை.  கோவை சுலபமாக கிடைக்கிறது என்றார்கள்.    சென்ற வாரம் போட்ட பாஸ் கிடைத்து விட்டது.  இருந்தும் கிளம்பும் நேரம் வரை நெருடல், தயக்கம், குழப்பம்.  விநாயகர் சதுர்த்தி அன்று  காலை கிளம்பி விட்டோம்.   ஆறு மாத காலமாக  வீட்டுக்கு அரை கிலோ மீட்டரில் இருக்கும் கடைவீதி தாண்டி எங்கும் சென்றதில்லை.   இரு முறை அருகில் உள்ள பள்ளிக்கு புத்தகம் வாங்க சென்றது மட்டுமே.  

காலை 7 மணியளவில் அந்த கடைவீதியை தாண்டியபொழுது விநாயகர் சதுர்த்திக்கான வாழைக் கன்றுகளும், பூக்களும் கடை வீதியில் வந்து இறங்கிக் கொண்டிருந்தன.  ஒரு சில மக்கள் வாழைக்கன்றையும், இலைகளையும் அந்த காலை நேரத்திலும் வாங்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.   பக்கத்தில் இருந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடலாமா வேண்டாமா? என்று யோசனை செய்து கொண்டே கடந்தேன்.  ஆறு மாதங்களுக்கு முன்பு கொரோனா லாக் டவுனுக்கு முன்பு,  போட்ட பெட்ரோல் அப்படியே இருந்தது தான் காரணம்.   இரு வாரங்களுக்கு ஒருமுறை மழை  வரும்போது கழுவதற்காகவும், பேட்டரி சார்ஜ் ஆகவும் வெளியில் நிறுத்தி கொஞ்ச நேரம் ஆன் செய்து வைத்தது மட்டுமே.        

ஹோப் பார்ம் சிக்னல்.  மெட்ரோவிற்கான வேலை அப்படியே தான் இருந்தது. பெரிய மாற்றம் தெரியவில்லை.  எனக்கு முன்பு  ஒரு நகரப்பேருந்து சிக்னலில் நின்று இருந்தது.  பெங்களூரில் பாதி எண்ணிக்கையில் நகரப் பேருந்துகள் இயங்கத் துவங்கி சில மாதங்கள் ஆகியிருக்கிறது.  'ஆமா, தினமும்  ட்ராபிக்கில் மாட்டிய போது போட்ட  பெங்களூர் டிராபிக் ஹெஸ் டேக் (#Bangaloretraffic) என்ன ஆனது?' என்று ஒரு யோசனை கூடவே ஓடியது.  கரோனா  பெங்களூர் ட்ராபிக் பிரச்சினையை சட்டென தீர்த்துள்ளது. 
காலை நேரத்திற்கே உரிய சில வாகனங்கள்.  வேடிக்கை பார்த்தவாறே அத்திப்பள்ளியை  அடைந்தேன்.   

அத்திப்பள்ளி டோல் கூட்டம் இல்லை.  சென்ற முறை வந்தபோது போட்டிருந்த பணம் டோல்கேட் அக்கவுண்டில் இருந்தது.  6 மாதம்  வராமல் எக்ஸ்பயரி ஆகிருக்குமோ என யோசிக்கையில் தானியங்கி குச்சி திறந்தது. 'அப்பாடா,  இங்க கண்ணாடியை இறக்கத் தேவைவில்லை'. 

டோல் தாண்டி  சற்று தூரத்திலேயே கர்நாடகா-தமிழ்நாடு பார்டரில்,  தமிழ்நாடு போலீஸ் நின்றுகொண்டிருந்தார்கள்.  நண்பர்களின் ஆலோசனையில் முன்புற கண்ணாடியில்  இ-பாஸ் ஒட்டியிருந்தேன். அவர்கள் ஒருவேளை இறங்கி நோட்டில் எழுதிவிட்டு போக சொல்வார்கள்  என கூறியிருந்தார்கள்.  ஆகவே,  இறங்கிச்சென்று எழுத மனதை தயாராக வைத்து இருந்தேன். கைக்கு கிளவுஸ், மாஸ்க் அணிய முற்பட்டபோது,   இ-பாஸை  பார்த்த காவல்துறை, போகுமாறு சைகையில் கூறி விட்டார்கள். 

ஒரு  நீண்ட பெருமூச்சு.  இங்கு மட்டும் தான் இறங்க வேண்டி இருக்கும் என நினைத்து இருந்ததால்.  வண்டி அதி விரைவுச் சாலையில்  வழுக்க ஆரம்பித்தது.  கூடவே வழக்கமான கார்களும், வாரயிறுதி கார்களும் லாரிகளும் இருந்தன.  

அதிகாலை எழுந்ததால் பசி எடுக்க ஆரம்பித்தது.  ஓசூருக்கும்-கிருஷ்ணகிரிக்கும்  இடையில் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தினோம்.  கொண்டு சென்ற தக்காளி சாப்பாடு எடுத்து பிரிக்க ஆரம்பித்தோம்.    ஆறு மாதங்களுக்குப் பிறகு வெளியில் அமர்ந்து சாப்பிடும் முதல் உணவு.   அந்த இடம் அவ்வளவு ரம்மியமாக இருந்தது.  வனத்துறைக்குச் சொந்தமான ஒரு காபி குடியிலும் இருந்தது.   சுற்றிலும் மரங்கள்,  செம்பருத்தி செடிகள் அதில் பெஞ்ச் என ஒரு பூங்காவை போல் அமைத்து வைத்திருந்தார்கள்.  காலை உணவை முடித்து விட்டு,  செம்பருத்தி செடியில் இரண்டு பூவைப் பறித்து உள்ளே வைத்துவிட்டு வண்டியை மீண்டும் கிளப்பினோம்.  
இந்த கொரோனா நாட்களில் எனக்கு ஒரு வித்தியாசமான பழக்கம் வந்திருந்தது. காலையில் செடியில் இருக்கும் பூவை பறித்து, ஒரு பாட்டிலில் நீரை ஊற்றி,  அதில் பூவை வைத்தும்  எனது அறையில் வைத்துவிட்டு காலை வேலையை தொடர்ந்து கொண்டிருந்தேன்.  அதன் நீட்சியாகத்தான் இந்த பூவை பறித்திருக்க வேண்டும்.  

 ஓசூர்-கிருஷ்ணகிரியின் சாலை ஒரு இறக்கமான சாலை. ஆக்சிலரேட்டரில் மிதிக்காமலே வழுக்கிக்கொண்டு  செல்லும்.  ஓசூர் கிருஷ்ணகிரி சாலையும், அந்த காலை நேரமும் எனக்கு அலாதியான ஒன்று.  இறங்கும் வேளையில் தொலை தூரத்தில் இருக்கும் மலை முகடுகள் அந்தக் காலை நேர இளம் சூரியனில் பட்டு அவ்வளவு ரம்மியமாக இருக்கும்.   

அதி வேகமாக வந்த  பட்டாம்பூச்சி ஒன்று காரை முன் கண்ணாடியைக்  கிழித்து கண்ணில் அடித்து விடுவது போல் வந்தது.  டூ  வீலரில் செல்வது போல தலையை சற்று விலக்கினேன்.  பாட்டம் பூச்சி  சற்று லாவகமாக தப்பித்து செல்கின்றது.    

தேன் உண்ட போதையோடு 
பறந்து திரிகின்றன 
அதி விரைவுச் சாலையில் 
பட்டாம்பூச்சிகள்... 

அவைகளுக்கான 
டாஸ்மாக்கை  திறந்து வைத்துள்ளது 
நட்ட நடு அரளிப் பூச் செடிகள்.. 

அதி வேகமாக வரும் வாகனத்திலிருந்து 
மிக லாவகமாக தப்பி விடுகிறது..
ஒரு சில தவிர... 

ஓட்டும்போது கவிதை போல ஏதோ  தோன்றியது.  
 
இந்த காரின் வேகத்தை எவ்வாறு அது உணர்ந்து சைட் வாங்குகின்றது? என்று யோசித்துக் கொண்டே வண்டியை விரட்டினேன்.   காலை வேளை என்பதாலோ  என்னவோ பட்டாம்பூச்சிகள் ஏகப்பட்டவை இருந்தன.  
அதேபோல இதுவரையில் வாகனங்கள் அதிகமாக செல்லாததாலோ என்னவோ சாலை நடுவில் உள்ள பூக்கள் அழகாக பூத்து குலுங்கி இருந்தன.  

கிருஷ்ணகிரியை 9 மணி அளவில் அடைந்து இருந்தோம்.  வண்டி ஆளில்லாத ஒரு சுங்கச்சாவடியின் குச்சியை ஆட்டோமேட்டிக்காக திறந்தது.   'சுங்கச் சாவடியை பணப்  பரிமாற்றம் இல்லாமல் தானியங்கி முறைக்கு சமீபத்தில் மாற்றியது,  இப்பொழுது ஒரு இந்த கொரோனா சூழ்நிலையில் எப்படி உதவி கொண்டிருக்கின்றது என பேசிக்கொண்டோம.  வெண்புரவி கிருஷ்ணகிரியை தாண்டி சென்று கொண்டிருந்தது 

தர்மபுரி மாவட்டம் நுழையும் முன் வண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக மெதுவாக நகரத் தொடங்கியது.  சற்று தொலைவில் போலீஸ் சோதனைச் சாவடி.  லாரி மற்றும் டு வீலர் போக்குவரத்து ஒரு பக்கம் போய்க் கொண்டுதான் இருந்தது.  கார் போக்குவரத்துகளை  தனி சாலையில் விட்டு சோதனை செய்து கொண்டு இருந்தார்கள்.   இங்கும்  கண்ணாடியில் இருந்த  இ-பாஸ் பார்த்தவுடன், தூரத்திலேயே போகச் செல்லுமாறு சாடை காட்டிவிட்டார்கள்.   வண்டியை மீண்டும் அழுத்தினேன்.  தர்மபுரிக்கும் சேலத்துக்குமான சாலை நான்குவழிச்சாலை மட்டுமே என்பதால் வாகனங்கள் சற்று நெருக்கமாகத்தான் சென்றது.  

 தொப்பூர் வரும் பொழுது மலை முகடுகள் கடந்த மாதங்களில் பெய்த மழையினால், பச்சை பசேலென வரவேற்றது.  எப்பொழுதும் ஏதேனும் ஒரு விபத்து நடக்கும் பகுதி.  சென்றமுறை வந்தபொழுது தொப்பூர் மலைப்பகுதி சாலையை  விரிவுபடுத்தும் வேலை நடந்துகொண்டு இருந்தது.   இந்த முறை அந்த வேலை நிறைவு பெற்றிருந்தது.   

ஓமலூர் சுங்கச்சாவடியிலும்  ஆளில்லாமல் அழகாக கடந்து சென்று கொண்டிருந்தோம்.   ஆனால் வரும் வழி எங்கும், நான்கு  அல்லது ஆறுவழிப்பாதையின்  முதல் வழி முழுக்க இருசக்கர வாகனங்களில் 3 பேர் சாதாரணமாக வந்து கொண்டேதான் இருந்தார்கள்.   அவர்கள் சில நேரங்களில் அடுத்த லானுக்கும் வந்தது, கேதக்  என இருந்தது.  பேருந்து போக்குவரத்து வழிநெடுகிலும் இல்லவே இல்லை.   ஆனால் எதிரில் மட்டும் ஒரே ஒரு பேருந்து ஓசூரை நோக்கி சென்றது.   சங்ககிரி டோல்கேட்,  லட்சுமி நகர் என பெரிதாக எந்த கெடுபிடியும் இல்லை. ஈரோடு நகர் வராமலே ஊருக்கு  சுற்றி வந்து சேர்ந்தோம்.  

 இப்படியாக இந்த கொரோனா  காலத்தில் ஈரோட்டை ஆறு மாதங்களுக்குப் பிறகு வந்தடைந்தேன்.   இதுதான் இந்தியாவில் இருக்கும் பொழுது நான் அதிக காலம் ஊருக்கு  வராமல் இருந்த  காலகட்டம்.

இந்த வீடுகளுக்குள் இருந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் ரொம்பவும் பயந்து போய் இருக்கின்றோம்.   வெளியே சுற்றிக்கொண்டு காவல்துறை மாதிரி,  மருத்துவர்களும் எவ்வளவு பேர் பம்பரமாக இதே உலகத்தில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மட்டுமல்ல தொழில் முனைவோர்களும், அரசு அலுவலகங்களும் எப்பவும் போல இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.   வரும் வழியில் பழங்கள் அங்கங்கு வைத்துக் கொண்டிருந்தார்கள்.  அதுபோலவே எந்த உணவகம் திறக்கவில்லை.   ஆனால் அங்கங்கு டீக்கடைகளில் கூட்டம் இருந்து கொண்டுதான்  இருந்தது.  ஒரு சில உணவுகள் திறந்திருந்தன.   வழக்கமாக ஒரு காபி டீ  குடிக்கவாவது நிறுத்தும் நாங்கள், எங்கும் நிறுத்தவில்லை.   எனக்குத்தெரிந்து கரோனாவிற்குப்பின்  ஓசூர்-சேலம் நெடுஞ்சாலைகளில் பல உணவகங்கள் காணாமல் போவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றது. 

 சிலவற்றை யோசிக்கும்பொழுது இந்த உலகம் மிக இயல்பாக இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றது.   அது எளியவர்களுக்கு ஆனதாக  இருக்கின்றதா?  இல்லையா? என்பது ஆகச்சிறந்த கேள்வி.   அங்கு சோதனைச் சாவடிகளில் நின்றுகொண்டிருந்த காவல்துறையை பார்க்கும்பொழுது மரியாதையும் வணக்கங்களும் தான் தோன்றுகிறது.

புதன்கிழமை சந்தை

 காரோனா அதன்போக்கில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.   பலதரப்பட்ட மக்கள் வெளியே வந்து அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.  ஊரில் திருமணங்கள், கிடா வெட்டு விசேஷங்கள் குறைந்த எண்ணிக்கையில் நிகழத் துவங்கியுள்ளது.   அரசும் லாக் டவுனை(?!) கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தி வருகிறது.  இருந்தாலும் நகரங்களில் முடிந்தளவு மக்கள் இன்னும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறோம்.  முன்புபோல இயல்பான நிலைக்கு மாறி விட்டோமா?  என்றால் இல்லவே இல்லை. 


கடந்த ஆறுமாத கால கட்டம் பல பழக்கங்களை மாற்றி உள்ளது.   அதிலும் கடைகளுக்கு சென்று மளிகை பொருட்கள், காய்கறி வாங்கும் முறை முற்றிலும் மாறி இருக்கின்றது.  இந்த நான்கைந்து  மாதங்களில் காய்கறிகளை வாங்கியவுடன் சுத்தமாக  கழுவியது போல், வேறு எப்போதும் கழுவியது உண்டா என்று யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.   காய்கறிகள் கழுவிக்கொண்டு இருக்கும்பொழுது சோகமாக  இப்படியும் நான் உளறுவது உண்டு 'காவியங்கள் உனைப் பாட காத்திருக்கும் பொழுது, காய்கறிகளை நீ கழுவினால்  என்னவாகும் மனது'  என்று.  


 

லாக்டவுன் ஆரம்பித்த புதிதில் செய்த செயல்கள் வரலாறு முக்கியம் அமைச்சரே போன்றவை.  காய்கறிகள் வாங்கி வந்தவுடன் அவற்றை வெளியே வைத்து, முக்கால் பக்கெட் தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் போட்டு தண்ணீர் கரைசல் தயாராகும்.  அதில்  எல்லா காய்கறிகளையும் கொட்டி,  கொஞ்ச நேரம் ஊற வைத்து விடுவேன்.  பின் ஒரு பெரிய துணியை விரித்து,  அதன் மேல் காய்கறிகளைக் கொட்டி நீண்ட நேரம் ஈரம் காய உலர வைத்து விடுவோம்.  அதன் பின் அதனை குளிர்சாதன பெட்டியில் ஒவ்வொறாக தனி தனி டப்பா அல்லது கவர் அல்லது பையில்  எடுத்து வைப்போம்.  இது ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாமல் நடைபெற்று வந்தது.  


 காய்கறிக்கே அப்படி என்றால் நமக்கு.   நேராக குளியல் அறைக்கு சென்று குளித்துவிட்டு, அந்த துணிமணிகளை சோப்பு போட்டு துவைத்து காயப்போட்டு விட்டுத்தான் அடுத்த வேலை.  வேறு ஏதேனும் காய்கறிகள் தவிர மளிகைப்  பொருட்கள் வாங்கி வந்தால் அதனையும் வெளியில் வைத்துவிட்டு, அதற்கும் சனிடைசர் அல்லது டெட்டால் கரைசலில் துடைத்து வைத்ததும் நடந்தது.   பின்னர் ஓரிரு நாட்கள் கழித்துத் தான் அந்தப் பொருட்களை எடுத்து உபயோகப் படுத்தி இருக்கிறோம்.    


அதுவும் லாக்டவுன் ஆரம்பித்த மார்ச் இறுதியில் இது மிகவும் அதிகம்.   அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, கடந்த இரு மாதங்களாக அதுவும்   மங்கிப்  போய்  உள்ளது.   கொரோனாவை நாம் புரிந்து கொள்ள ஆர்மபித்துவிட்டோம் எனலாம் அல்லது சோம்பேறித்தனம் என்றும் கூறலாம்.    காய்கறிகளின் மூலமாக கொரோனா  தொற்று வராது என்று நம்பிக் கொண்டும்  இருக்கலாம்.  


அதுபோல எங்கும் தொடாமல் காய்கறிகளை வாங்கி விட்டு வந்தவுடன்,  அதற்காக கொண்டு சென்ற பணத்தை அப்படியே சோப்பு நீரில் ஊறவைத்து கழுவி அதையும் காய வைத்துவிட்டு, வண்டி சாவியையும் கழுவி காய வைத்துவிட்டு பின்னர்தான் குளிக்க செல்வேன்.   கூடவே வண்டியின் கைப்பிடி, கதவு  என தொட்ட ஒவ்வொன்றையும்  துடைத்தது  வரலாற்றில் குறித்துக்கொள்ள வேண்டும்.     

முதல் ஓரிரு மாதங்கள் இப்படியாகத் தான் சென்றது.   அதன் பிறகு கிட்டத்தட்ட அனைத்து பண பரிமாற்றமும் Gpay  மற்றும் paytm க்கு மாறியிருந்தது.   இப்பொழுது பணம் அவ்வளவாக எடுத்துச் செல்வதில்லை. ஆனாலும் வெளியில் சாலையில் கடை போட்டிருக்கும் அந்த பாட்டியை பார்த்தவுடன் அவர்களிடம் தான் வாங்க தோன்றுகிறது.     



இது ஒருபுறமிருக்க எங்களது கம்யூனிட்டிக்கு நான்கு சக்கர வாகனத்தில், ஒருவர் காய்கறியை நேரடியாக கொண்டு வர ஆரம்பித்து விட்டார்.   இது இன்னும் சுலபமாகவே இருந்தது.   அவர் உள்ளே நுழைந்ததும் ஆப் அலாரம் அடிக்கும். பலர் பரபரப்பாக ஓடி வந்து முதலில் வாங்க ஆரம்பித்தார்கள்.  அந்த கூட்டம் எனக்கு சற்று பயத்தை கொடுத்ததால், கூட்டம் குறைந்த பின்னர் கடைசியாக சென்று வாங்குவதற்கு பழக்கப்படுத்திக் கொண்டேன்.    அவரிடமும் நெருக்கம் ஆகி விட்டது. 

 "என்ன சார், இன்னிக்கு ரொம்ப லேட்டா வரீங்க?"  "கீரை பிரெஷ் சார் வாங்கிக்கோங்க"   என்பார்.  கன்னடமும், தெலுங்கும் ஹிந்தியும் பேசுவார்.   இந்த மொழி சார்ந்த விஷயம் பெங்களூரில் ஆச்சர்யமான ஒன்று.  தொழில் செய்யும் பலரும் குறைந்தது மூன்று நான்கு மொழிகளாவது பேசுவார்கள்.   


சில வாரங்கள்  அவர்களின் குழந்தைகளோடு வந்தார்.   "என்ன  இன்னிக்கு உங்க பசங்கள காணோம்? " "இல்ல சார் ரொம்ப லேட் ஆகுது,   அவங்க சாப்பிட லேட் ஆகிடுது" என்றார்.   

"இன்னிக்கு  என்ன ஆச்சு ரொம்ப லேட்டா வந்துருக்கீங்க"   எனும் மற்றோரு நாளின் கேள்விக்கு  " சார், வேற வண்டி சார் இது,  என்னோட வண்டி பஞ்சர் ஆயிடுச்சு"   என்பார்.


 மற்றொரு நாள்  "இன்னிக்கி KR புரம் மார்க்கெட் போகலைங்க.." "கொரோன அந்த பக்கம் இருக்கறதால இப்படி இந்த பக்கமா போயி சிந்தாமணியில் வாங்கிட்டு வந்துட்டேன்."  


 இவ்வாறாக பலவாறான பேச்சுக்கள் அவரோடு தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.    பெரும்பாலான காய்கறிகள் அவரிடம் பேரம் பேசாமல் வாங்கிச் செல்வேன்.   ஒரு சிலவற்றை வேறோரிடத்தில் வாங்கினால் 

 குறைவாகத்தான் இருக்கும்.  அங்குள்ள ஒரு சிலர் வெளியில கம்மியா இருக்கு என பேரம் பேசுவார்கள்.   அது ஏனோ இவர்களிடம் பேரம் பேசும்  ஆட்களை பார்த்தவுடன் சற்று ஆயாசமாக தான் இருக்கின்றது.   இவர்களிடம்  பேரம் பேசி என்ன கொண்டு செல்லப் போகிறார்கள்.   என்ன நூறு ரூபாயா அதிகமாக வைத்து விடுவார்கள் ?  சூப்பர் மார்க்கெட்டிலும் அல்லது அமேசான்களில்  அதிகமாக  வைத்திருப்பது போல.   எனக்கு கண்கூடாக தெரிந்தது வெளியில் நான் சென்று வாங்கினால் ஒரு பத்து இருபது ரூபாய் குறையத்தான் செய்யும்.  பரவாயில்லை.   நம்மைத் தேடி  வருகின்றார்.   அவரிடம் வாங்குவது தானே முறையாக இருக்கும்.



எனக்கு இந்த மாதிரி வெளியில் சென்று காய்கறி வாங்கிவிட்டு வந்தவுடன் இவ்வளவு சுத்தமாக இருப்பது,  எனது தாத்தாவின் காலத்தை நினைவூட்டியது.   பள்ளி முடிந்து புதன்கிழமை என்றதும் அவ்வளவு மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கும்.  ஆயாவும், தாத்தாவும் சந்தையிலிருந்து வாங்கி வரும் தயிர்வடைக்காக.   இன்றும் அவர்கள் நினைவு தினம் கும்பிடும் வேளையிலே,  தயிர்வடை அவர்களுக்கு பிரியமானது என இலையில் படைப்பது உண்டு.  அல்லி இலையில் சுற்றி அடியில் ஒரு காகிதம் வைத்து நூலில் சுற்றப்பட்டு இருக்கும் அந்த பொட்டலம்.  அதில் குட்டி குட்டி போண்டாக்கள்.  ஒன்றை எடுத்து வாயில்  போட்டாலும், அது அப்படியே மெதுவாக தயிரின் புளிப்புச் சுவையோடு கலந்து அவ்வளவு அமிர்தமாக இருக்கும்.   இப்பொழுதும்  இதை எழுத நாவில் எச்சில் ஊறுகிறது.   


சந்தைக்கு சென்று விட்டு வந்தவுடன் நேரடியாக கிணத்தடிக்கு சென்று குளித்துவிடுவார்.   அனைத்து உடைமைகளையும் துவைத்து காயப்போட்டு விட்டுத்தான் தாத்தா உள்ளே செல்வார்.  இந்தப் பழக்கத்தை அப்பாவிடமும் கண்டதுண்டு.  புதன்கிழமை சந்தை சென்று வந்ததும் என்ன தீனி  இருக்கும் என்று பார்க்கும் நான் தான்,  அந்த காய்கறிகளை எங்கள் வீட்டில்  எடுத்து அடுக்குவது உண்டு.   அந்த வாரத்திற்கு  தேவையான காய்கறிகள் என அனைத்தையும் பரந்த மூங்கில் கூடைகளில் கூறு போட்டு வைப்பதும் உண்டு.  முக்கியமாக அப்பொழுது ஆப்பிள் மற்றும் மாதுளை கிடைப்பது அரிது.   அன்றைய வார சந்தைக்கும் இன்று வாரம் ஒருமுறை வாங்குவதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.  இடையில்தான் தினமும் ஒருமுறை காய்கறிகள் வாங்க வேண்டும் என்பது வந்திருக்கக்கூடும்  என்று நினைக்கின்றேன்.    


அதுபோலவே அவர் காலத்தில் கசங்கிய, கிழிந்த,  அழுக்குப்படிந்த ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் நோட்டுகளை கடைகளில் வாங்க மாட்டார்கள்.  அதனை சோப்பு போட்டு கழுவி, புத்தம் புது நோட்டு போல ஆக்கி செலுத்தி விடுவார்.  அவர்கள் காலத்தில், 2 ரூபாயே  சந்தை செலவுக்கு அதிகம் என்பார்.   


இன்று கொரோனா காலத்தில் சில பழைய பழக்கங்களை  நம்மை அறியாமல் நாம் ஏற்றுக்கொண்டு இருக்கிறோம்.




Saturday, August 01, 2020

ஊரும் நீரும்




இன்று நாம் குடிக்கும் நீர் RO மூலம் சுத்தப்படுத்தி சுகாதாரமான நீரை குடிக்கிறோம். கடைகளில் கேன்களில் கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட நீரை குடிக்க பயன்படுத்துகிறோம். இப்பொழுது எங்கள் ஊருக்கு சுத்திகரிக்கப்பட்ட காவிரி நீர் பல மைல் கடந்து தெருமுனைகளுக்கும், சிலரின் வீடுகளுக்குமே வருகிறது. தண்ணீரை வியாபாரமாக்கி உள்ளார்கள் எனும் சர்ச்சைக்கு செல்லவில்லை. அதேபோல காவிரியில் கலக்கும் கழிவுகளுக்கும் செல்லவில்லை. அதில் இருக்கும் சில பிரச்சினைகள் களையப்பட வேண்டும்.  அது பலரும் பேசிய விஷயம். ஆனால் இந்த சுத்தமான சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடிக்கும் இந்த சுகாதாரமான நிலைமைக்கு எப்படி வந்தோம் என்பதை அறிந்துகொள்ள இந்த கட்டுரை.


எங்கள் ஊரின் ஆரம்பப் பள்ளியின் அருகில் ஒரு அமுக்கு பைப் இருக்கும். அது தான் எங்கள் ஊருக்கு வந்த முதல் அடி பம்ப். அதுவரையில் ஊரின் மத்தியில் இருந்த கிணற்றில் இருந்து மட்டுமே தண்ணீர் சேந்தி எடுத்துச் செல்வார்கள். அந்த கிணற்றை சுற்றியும் வட்டமாக இடுப்புயர சுவர். அதன் மேல் சம இடைவெளியில் மூன்று சுவர் தடிமனுக்கு தூண்கள். அதன் மேல் மூன்று பக்கம் இரும்பில் விட்டம். ஒரு பருந்துப் பார்வை பார்த்தால் முக்கோணமாக இருக்கும். ஒவ்வொரு விட்டத்தின் நடுவில் உருளை இருக்கும். அதில் கயிறு போட்டு பக்கெட் ஒன்றை கட்டி, அதனைக் கிணற்றில் விட்டு தண்ணீர் இறைப்பார்கள். சிலர் 'அட பாக்கெட் பக்கெட்டா ஊத்தி என்னைக்கு நாம்பறது" என குடங்களையே கயிற்றில் கட்டி ஒரே இழுப்பில் தண்ணீர் கிணற்றில் இருந்து எடுத்துவிடுவார்கள். ஊர்க்காரர்கள் புரளி பேசும் இடம். சைட் அடிக்க கூடுமிடமாகவும் இருக்கும். இது தான் ஒட்டுமொத்த ஊரின் நல்ல குடிநீருக்கான மையம்.


அப்பாவின் காலத்தில் அந்த ஊர்க்கிணறும் இல்லை. ஊர்ப் பெரியவர்களின் வீடுகளில் கிணறு இருக்குமாம். அதுவும் மூன்றே மூன்று.  அதில் பள்ளிக்கு செல்லும்முன் தண்ணீர் பல நடை மோந்து ஊற்றி வைக்க வேண்டும். பெரும்பாலும் அந்த கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டால், காட்டுக்குள் இருக்கும் செம்மண்குழி கிணற்றில் எடுப்பார்களாம். 


 அடி பம்ப் வந்தவுடன் நல்ல குடிநீருக்கான மையமாக இந்த பம்ப் மாறியிருந்தது. சைக்கிள்களில் இருபுறமும் குடங்களைக் கட்டிக்கொண்டு பலரும் எடுத்துச் செல்வார்கள். நாங்கள் இரண்டு பேர் சேர்ந்து இதனை வேகமாக அழுத்துவது ஒரு விளையாட்டு. அந்த பம்பை அடைத்து வேக வேகமாக அழுத்தி சுற்றிலும் தண்ணீரை பீச்சி அடித்து ட்ரவுசர் சட்டைகளை நனைத்து ஜாலியாக நடைபெறும் தினசரி சம்பவம். அதிலும் யாரும் இல்லாதபோது நாமே அடித்துவிட்டு வேகமாக ஓடிவந்து தண்ணீரைக் குடிக்க வேண்டும். 


தென்னை மரங்களை சுற்றி ஒரு பாத்தி கட்டி அதனை நிரப்புவது தான் கடைசி பிரிவேளையில் நடக்கும்.  கிட்டத்தட்ட அதில் தண்ணீர் நிரம்பும்  வரை நீர் எடுத்திருப்போம்.  பள்ளி சுற்றிலும் இருக்கும்  வேலிக்கும் தண்ணீரை ஊற்றவேண்டும். பூந்தோட்ட காவல்காரன் வந்த சமயம். அந்தோணி வண்டி என்று இரு நண்பர்கள் தண்ணீரை வேகமாக எடுத்து வருவார்கள். அடி பைப்பிலிருந்து சிறிய மேடு ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக ஏறி பள்ளிக்கு கொண்டு சென்று மரங்களுக்கு ஊற்ற வேண்டும். இன்று பள்ளி சுற்றுப்புற சுவரோடு, கான்க்ரீட் காட்டிடத்துடன் அழகாக உள்ளது.


அந்த பைப்பில் தண்ணீர் வரும் தலைகீழான L வடிவ பைப்பில் பாக்கெட் மாட்டி தண்ணீர் பிடிப்போம்.  ஒருமுறை பிடிக்கும்பொழுது கீழே விழுந்து பெருவிரல் நசுங்கி,  பக்கத்தில் இருந்த அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் தான் கட்டு போட்டுவிட்டு இருந்தார்கள்.  இப்பொழுது அந்த பம்பில் இருந்து மோட்டர் வைத்து மேல்நிலைத்தொட்டி கட்டிவிட்டார்கள். அதன் வழியாக கிட்டத்தட்ட ஒவ்வொரு வீதிக்கும் தண்ணீர் வரும். பத்தடி தொலைவில் சென்று பிடித்துக்கொள்ளலாம்.  அதன் அருகில் காவேரி நீர் பைப்பும் இருக்கும்.



இன்று போர் போட்டு் பராமரிப்பு இல்லாமல் உள்ள ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுந்து தத்தளிப்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. ஆனால் இந்த அடி பம்புகளின் வரலாறு எத்தனை நெடியது. நீர் சம்பந்தமான நோய்களை தீர்த்ததில் பெரும் பங்கு வகித்துள்ளது.



Guinea Worm Water Based Disease என்ற ஒரு நோயை உலகம் முழுவதும் தீர்க்க உலக சுகாதார நிறுவனம் நிதியை ஒதுக்குகிறது. 1980 இந்த திட்டம் ஒருங்கிணைத்த இந்தியாவில் ஆரம்பிக்கிறது. பொது சுகாதாரத்தில் முதல் இடத்தில் இருந்த தமிழகத்தில் நாலே வருடங்களில், நாம் சாதித்ததை ராஜஸ்தானால் 16 வருடங்கள் கழித்து தான் சாதிக்க முடிந்துள்ளது.


லிங்க் https://ncdc.gov.in/index1.php?lang=1&level=1&sublinkid=142&lid=73


இது என்ன நோய்? சேந்து கிணறு அமைப்புக்கு முன்பாக வெட்டப்பட்ட கிணறுகளில் படி வைத்து குடிநீரை எடுத்து வந்துள்ளார்கள். இன்றும் ராஜஸ்தானில் படிவைத்த பிரமாண்ட கிணறுகள் ஒரு வரலாற்று ஆவணம் போல அழகாக இருக்கும்.



குடிக்கும் நீரில் நரம்பு சிலந்தி நோய் இருப்பவர்கள் மூலம் அந்த  லார்வா குடிநீரில் கலந்துவிடும். L3 லார்வா, இரைப்பையினுள் செல்லுதல், காலில் இருக்கும் புழு நீரினுள் L1 லார்வாக்களை வெளியிடுதல். இவை இரண்டையும் தடுத்தாலே நரம்பு சிலந்தி புழு பரவ முடியாது. அதற்கு என்ன செய்ய வேண்டும்?  குடிக்கும் நீரில் நரம்பு சிலந்தியின் லார்வா செல்லுவதை தடுக்க ஆழ் துளை கிணறுகளை அமைத்து கைபம்புகளை அமைத்தல் தான். அதன்பின் தண்ணீரை காய்ச்சி குடித்தல்.



இந்த பிரச்சினை தமிழ் நாட்டில் பெரும்பாலும் தஞ்சை கும்பகோணம் பகுதிகளில் இருந்துள்ளது. குளம் அதிகமாக இருந்த இடங்கள் அவை.




நாடு முழுவதும் சுகாதாரத்திற்கான சிந்தனை மாற்றத்தை அளித்த நிகழ்வு "நரம்பு சிலந்தி ஒழிப்பு திட்டம்" தான். இதற்கான முக்கிய விஷயமாக கருதுவது நமது அரசு ஆரம்ப சுகாதார அமைப்பின் கட்டுமானம். அதனால் தான் நான்கு வருடத்தில் அதனை முடிக்க முடிந்துள்ளது.


இந்த நோய் புத்தகத்தில் கூறப்பட்ட ஒன்று,  அது தவிர நீரினால் பரவும் காலரா, டயறியா போன்றவை எல்லாம் இன்று  இல்லை. இன்று  கொரோனாவுக்கு போராடும் நிலையில் அதற்கான கட்டமைப்பு எப்படி உள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்


நான் அங்கு படித்துக் கொண்டு இருந்த போதுதான் , பள்ளியை ஒட்டி அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் ஒன்றை ஆரம்பித்தார்கள். புதிதாய் ஒரு கட்டிடம் இன்றும் அன்று காலை திறப்பு விழாவில் போது இட்ட கேசரி, தக்காளி சோறும் தயிர் வெங்காயமும் நினைவில் உள்ளது. அப்பொழுதெல்லாம் காலை நடக்கும் புதுமனை புகுவிழாக்களில் இந்த மெனுதான். சற்று வசதி உள்ளவர்கள் மெதுவடையும் போடுவார்கள்.


ஆரம்ப காலத்தில் இவை வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வந்து கொண்டுள்ளது. சில பல சமூகப் பிரச்சினைகளும் இந்த மருத்துவமனையில் தங்கி வேலை பார்க்கத்தவர்களிடம் நடந்தும் உள்ளது அதெல்லாம் வேறு விசயம். இந்த ஆரம்ப துணை சுகாதார நிலையம் கிட்டத்தட்ட 5000 மக்களுக்கானதாக இருந்துள்ளது. இவை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களுடன் இணைக்கப்பட்டு இருக்கும். இவர்களின் முக்கிய வேலை வருமுன் காப்போம் என்பது. அதாவது இவர்களின் பணி அரசின் சுகாதார திட்டங்களை கடைக்கோடி கிராமம் வரை சேர்ப்பது . குடும்ப நலம், தடுப்பூசி, தொழுநோய் தடுப்பு, பள்ளி சிறுவர்களின் நலம் , தொற்று பரவாமல் தடுப்பது என்கிறார் இந்த அமைப்பில் தனது பணியை ஆரம்பித்து அதில் ஓய்வு பெற்ற என் பக்கத்துக்கு ஊர் மாமா.   அவரிடம் பேசியபோது இந்த சுகாதார அமைப்பை உருவாக்க அவர்களின் போராட்டங்களை கூறினார்



இவர்கள் டீம் தான் பள்ளிக்கு அம்மை தடுப்பூசி போட வருவார்கள். இவர்களின் ஜீப் வந்ததும், 'அய்யயோ இன்னிக்கு ஊசி போட்டு் விடுவார்களோ' என பயந்ததும் உண்டு. ஒரு வழியாக அழுது  புரண்டு போட்டுக்கொண்டால்  ஊசி போட்ட இடம் வீங்கிக் கொள்ளும், அன்று வெந்நீர் ஒத்தடம் கொடுப்பார்கள்.



வந்ததும் காப்போம் என்பது அரசு மருத்துவமனையின் கடமை. ஆரம்ப துணை சுகாதார நிலையித்தின் வேலை வருமுன் காப்பது.  அப்பொழுதெல்லாம களத்தில் அதிகமாக வேலை செய்தார்களாம். இப்பொழுது வேலை செய்ததை எழுதி வைப்பதில் உள்ளதாக கூறினார். 

அந்த ஆரம்ப துணை சுகாதார நிலையங்கள் 85களில்  கட்ட  ஊரில் பேச்சுவார்த்தை நடத்தி, இடம் வாங்கி கட்டி உள்ளார்கள்.  இந்த அமைப்பு வியப்பில் ஆழ்த்திக்கொண்டு உள்ளது.  குடிநீர் சுகாதாரத்தில் எங்கிருந்து எங்கு வந்துள்ளோம் என்பதுவும் சாதனை தான்.   



குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...