Monday, November 16, 2020

சூரரைப் போற்று" - an EI View

"சூரரைப் போற்று" அக்குவேரு ஆணி வேராக பலரும் பிரித்து மேய்ந்து விட்டார்கள்.  அதிலும் வழக்கம்போல முரண்பட்ட கருத்துகளும் வந்து போய்விட்டது. 


 ஒரு எமோஷனல் இன்டெலிஜென்ஸ் பார்வையில் இந்த படத்தை அணுகுகிறேன்.  படத்தில் வரும் பாத்திரங்கள்  அனைத்தும் ஏதோ ஒரு வகையில்  உணர்ச்சிகளைக் கொட்டிக்கொண்டே இருப்பார்கள். ஒவ்வொரு பாத்திரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டதை  சிறப்பாக செய்திருப்பார்கள். அங்கங்கு சென்டிமென்ட்களைத் தூவி  இயக்குனர் சுதா கோங்குரா நம்மை உணர்ச்சியால் கட்டிப்போட்டு இருப்பார்.


 பல நேரங்களில்  நாயகன் மாறனாகிய  சூர்யா ஏதோ ஒரு டென்ஷனில் சுற்றிக்கொண்டு இருப்பது போலவே இருக்கும்.  கோபம் வரும்.  ஆத்திரம் வரும். அழுகை வரும்.  இயலாமை வரும்.   ஒரு ஹீரோத் தனம்  இல்லாத சாதாரண மனிதனாக,  இந்த சாதனையைச் செய்தது போல படத்தில் காண்பித்து இருப்பார்கள்.   அது தான் படத்தின்  வெற்றி.  ஆனால் இந்த திரைப்படத்தில்  சூர்யாவை விட,   EI கற்ற  இரு சிறந்த பாத்திரங்களைக் கூறுவேன். 


 ஒன்று அவர் கூடவே இருக்கும் அவருடைய மனைவி பொம்மி.  சூர்யாவுக்கு சமமான, வித்யாசமாக சிந்திக்கும், தைரியமான, பொறுமையான பாத்திரப் படைப்பு. பல  காட்சிகள் இருந்தாலும், குறிப்பாக இரு இடங்களை கூறவேண்டும்.


 முதல் முறை.  மாறன் பொம்மியை கூட்டிக்கொண்டு கேக் டெலிவரி செய்ய பைக்கில் செல்வார்.  நண்பருக்கு போன் செய்ய சொல்லி பேஜரில் ஒரு செய்தி வரும்.   வண்டியை நிறுத்தி பக்கத்தில் இருந்த போன் பூத்தில் அவரின் நண்பருக்கு  அழைப்பார்.   விமான கண்காட்சிக்கு அவர் பார்த்து வைத்த விமானம் வரவேண்டும் எனில்  அந்த விமானத்தின் ப்ளூ ப்ரிண்ட்  இருந்தால் மட்டுமே அனுமதி கிடைக்கும் என அவர் கூறுவார்.  ' வேறு யார்க்கும் இல்லாத புது ரூல்ஸ் நமக்கு  மட்டும் ஏன்' என சூர்யா உடைந்து போய் விடுவார்.  அந்த டென்சனில்,  என்ன செய்வது என  தெரியாமல், போன் பூத்துக்கு பணம் கொடுக்காமல் அப்படியே பைக் நோக்கி செல்வார்.   'காசு குடுத்துட்டு போங்க என அதன் உரிமையாளர்' பின்னால்  வர,  பூத் வெளியே நிற்கும்  பொம்மி 'அண்ணே  நான் குடுத்துக்கறேன்" என்பார்.  சூர்யா பைக்கை பதட்டமாக உதைத்து ஸ்டார்ட் பண்ணி, ஒரு பத்தடி ஓட்டி  செல்வார்.  பொம்மியை விட்டுவிட்டு செல்வதை உணர்ந்துவிட்டு, வண்டியை நிறுத்தி  திரும்பிப் பார்ப்பார்.   அந்த இடத்தில் அவ்வளவு பதட்டம் தெரியும்.   ஆனால் பொம்மியோ, முகத்தில் குழப்ப ரேகைகள் படித்திருந்தாலும்   தலையை லேசாக ஆட்டி, ஒரு கையில் கேக் பிடித்துக்கொண்டு மறு கையில் அவரைப் போகச் சொல்லும் உடல்மொழியோடு, "நான் ஆட்டோல போயிக்கறேன்.." என்பார். 

அதேபோலத்தான் கிட்டத்தட்ட அனை

த்து பிரச்சினைகளும் முடிந்து குட்டி விமானம் பறக்கத்  தயாராக இருக்கும்.  மினிஸ்டர் உள் இருக்க குட்டி விமானத்தில் முதல் முறையாக ஏறி கிளம்ப முற்படும்போது தீ பிடித்துவிடும்.  ஒரு வழியாக எமெர்ஜென்சி லேண்டிங் செய்து வெளியே வருவார்கள்.  சூர்யாவுக்கு எப்படி நடந்தது என குழப்பம்.  விமான தளத்தை விட்டு வெளியே வந்தவுடன் அவரைச் சுற்றி நிருபர்கள். பல கேள்விகள் எழுப்புவார்கள்.  பாதுகாப்பு வசதி இல்லையா என்பது உள்பட.  'அதைப்பற்றி நான் விளக்குகிறேன்' என்பார். 


 அப்பொழுது  தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருக்கும் பொம்மிக்கு பிரசவவலி வரும்.   அந்த இடத்தில சூர்யா பொம்மியின் வலியைப் பார்த்துவிட்டு பதைபதைப்பாவார்.  அப்பவும் பொம்மி "நான் பார்த்துகிறேன்..நீ போ" என ஒரு தைரியத்தை கொடுக்கும் சொற்களை உதிர்ப்பார்.  பதட்டமில்லாமல் பொறுமையாக 'என்னை நான் பார்த்துக் கொள்கிறேன்.  நீ கவலைப்படாம  தைரியமா பேசு' என்பது தான் அது. அந்த  இடங்களில் எல்லாம் பொம்மி பதட்டமடையாமல் இருப்பார்.  அவரின் உணர்ச்சியை மடைமாற்றி வேறு கனிவான சொற்களின் மூலம் பிரதிபலிப்பார்.  பொம்மியின் அந்த சிறு பார்வையும், அந்த உடல்மொழியும், சொற்களும்  தான்  சூர்யாவுக்கு பூஸ்ட்.


இவர்கள் இருவருக்கும் நடக்கும் காதல் கட்சிகளின் கவிதையை விட,  இந்த இடங்களில் பொம்மியின் உணர்வு,  ஊக்கமாக  கண்கள் வழியே கடத்தப்படும்.


மற்றொருவர், மாறனின் மேலதிகாரியாக வரும் நாயுடு(மோகன் பாபு) அவர்களின் கதாபாத்திரம்.  அவர் ஒரு ராணுவ அதிகாரி என்பதாலோ என்னவோ எந்த ஒரு இடத்திலும் அளவுக்கு மீறிய உணர்ச்சிகளைக் காட்டிக் கொள்ளவே மாட்டார்.  அவருக்கும், மாறனுக்கும் ஒரு மோதல் போக்கையே ஆரம்பத்தில் இருந்து காண்பித்திருப்பார்கள்.  ஆனால் அதனைத் தாண்டி 'க்ளுக்' என  ஆனந்தக்கண்ணீர் எட்டிப் பார்க்கும், இரு நெகிழ்ச்சியான காட்சிகளில்.   


முதன்முறையாக குட்டி விமானத்தை தரை இறக்க விட மாட்டார்கள். மாறன், விமானத்தை ஓட்டும் நண்பர் சேவிடம்"நீ தாம்பரத்துல எறக்குடா நான் பார்த்துக்கறேன்" என கூறி, தாம்பரம் விமானப் படைத் தளத்தில் கட்டுப்பாட்டையும் மீறி இறக்குவார்கள்.  

அந்த விதிமீறலுக்காக நண்பர்கள்  மூவரையும் விசாரணைக்கு நிறுத்துவார்கள்.  அந்த காட்சி அவ்வளவு அழகாக இருக்கும்.  நாயுடு சேரில் இருந்து எழுந்து மிடுக்காக நடந்து வருவார்.   அவரின் பேச்சு தெலுங்கு கலந்த தமிழில் ரசிக்கும்படி இருக்கும். 'மேடே(Mayday) டிக்லேர் பண்ணி சென்னை ஏர்போர்ட்ல லேன்ட் பண்ணி இருக்கலாமல்ல' என கூறி அந்த இடத்தில் கேள்விகளைத் துளைப்பார்.   


இருக்கு முன்னாடி இதே மாதிரியான சம்பவத்தை அவர்களிடமிருந்தே போட்டு வாங்குவார். இறுதியில்

"டெல்லி வரைக்கும் எதிரிகளை சம்பாரிச்சிட்ட.  பைன் 25000.  மூனு மாசம் கழிச்சு கொடு."

அப்போதும் அவர்கள் நம்ப முடியாமல் நிற்பார்கள். "என்ன உங்கள கட்டிபிடிச்சு  வழியணுப்பனுமா? போங்க, "


மாறன் "என்னத்தான் உங்களுக்கு பிடிக்காதே, சார்?" என்பார்


"நம்ப இன்னிக்கு பொலிட்டிக்கல் ப்ரசர்ல்ல உன்ன உள்ள வச்சா,  என்னையே நான் மதிக்க மாட்டேன்... தம்புடு...நீ பண்ணனும்ன்னு நினைக்கிறது... உன் ஈகோ, என் ஈகோவ விட பெருசு.   ஒரு சோல்ஜர் அவனை நம்பி வந்தவர்களை உயிரோடு திரும்ப சேர்க்கணும்;  நீ இன்னைக்கு பண்ண மாதிரி.  யூ ஆர் எ லீடர் டுடே"  என்று கூறிவிட்டு ஒரு சிகரெட் எடுப்பார்.   அதன்பிறகு  சூர்யாவுக்கும், நாயுடுவுக்கும் நடக்கும் சிகரெட், வயசு பற்றி உரையாடல் ஒரு ஹைக்கு.  


முன்பிருந்த பகையை மனதில் வைத்து அவர் நினைத்திருந்தால், அந்த இடத்திலேயே மாறனின் கனவை தகர்த்து இருக்க முடியும். 


அதைவிட மிக முக்கியமான காட்சி.   பல பிரச்சினைகளும் முடிந்து, இறுதியாக விமானத்தை இயக்கும் சமயம். இரண்டு மூன்று நாட்களாக மாறன் தூக்கமே இல்லாமல் அலைந்து கொண்டிருப்பார்.  "நாமதான்டா பாதுகாக்கணும், இல்லன்னா தீ கூட வச்சிருவாங்க" என்று நண்பர்களிடம் கூறிவிட்டு அவர் விமானம் நோக்கி அயற்சியான உடற்மொழியோடு வருவார்.  அங்கு அவரின் மேல அதிகாரி, நாயுடுவும் அவரது குழுவும் stand-at-ease ஆக நின்று  கொண்டிருப்பார்கள்.  ஒரு சிறு புன்முறுவலோடு பேசுவார்.   "என்ன நெடுமாறன்  அந்த  கோஸ்சாமிக்கு மட்டும்தான்  ஆள் இருக்குமா?  நமக்கு இல்லையா? நம்மள்ள ஒருத்தர நாம கைவிடமாட்டோம்.  Go and take rest man" என்பார்.  


அவரின் பாத்திரப்படைப்பு எந்த ஒரு இடத்திலும் உணர்ச்சியை மிதமிஞ்சி வெளிக்காட்டாமல் இருக்கும்.  எந்த அளவிற்கு வெளிக்காட்ட முடியுமோ அவ்வளவு அழகாக ஒவ்வொரு இடத்திலும் வெளிப்படுத்தி இருப்பார்.   அதே நேரம் நாம் ஒரு முயற்சியை நோக்கி நகரும்போது எப்படி பழகிய மனிதர்கள் உதவுகிறார்கள் என்பதுவும்.  


பொம்மி, நாயுடு இரு பாத்திரங்களும் உணர்ச்சிகளை சட்டென கொட்டிவிடாமல்,  கதையை மேலும் அழகாக்குகிறது.

டாக்டர் செலின், US-மொடக்குறிச்சி

சென்ற வாரத்தில் எங்களது ஊர் மொடக்குறிச்சி மீண்டும் தலைப்புச் செய்திகளில்.  சென்ற முறை 1996-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தல் நடந்த போது இருக்கும்.  தினமும் நூறு, ஐம்பது பேராக எங்கள் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்கள்.  தினமும் மாலை தொலைக்காட்சி செய்தியில் பரபரப்பாக பேசப்படும்.   வேளாண் பிரச்சினைகளில் கவனத்தை ஈர்ப்பதற்காக  கீழ்பவானி விவசாயிகள் சங்கத்தின் மூலம் 1033 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு கின்னஸ் சாதனை அடைந்தது.  எங்கு சென்றாலும் அதனைப் பற்றியே கேட்பார்கள்.  நக்கலின் உச்சமாக "நீயும் எலக்சன்ல நின்னயா" என்பார்கள்.    இந்த முறை அமெரிக்காவின் செலின் ராஜ் கவுண்டர் அவர்கள் முக்கியச் செய்தியாக இடம்பெற்றுள்ளார்.  அவரது அப்பா ராஜ் அவர்கள் படித்த பள்ளி தான், மொடக்குறிச்சி அரசு மேல் நிலைப்பள்ளி.  தற்போது அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி.

 

வருடா வருடம் நடக்கும் பள்ளியின் இலக்கிய மன்ற விழா மற்றும் ஆண்டு விழாக்களில் நாவல் பழ  மரத்தடியிலும், வேப்பமரத்தின் நிழலில் உட்கார்ந்து கொண்டுதான் சிறப்பு விருந்தினருக்கு காத்திருப்போம்.

அந்த காத்திருக்கும் மாலை வெயில் நேரத்தில், சின்ன கல்லை எடுத்து, சற்று தள்ளி உட்கார்ந்திருக்கும் நண்பனின் முதுகில் தூக்கி போட்டு விளையாடி சுவாரசியம் ஆக்கிக் கொண்டதுண்டு.   எப்பொழுதும் பரிசளிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு முன்பாக சிறப்பு விருந்தினரின் பேச்சு இருக்கும்.  கலை நிகழ்ச்சிகளுக்கு ஆர்வத்தோடு காத்திருக்கும் வேளையில்,  சிறப்பு விருந்தினரின் பேச்சு, அவர் கூறும் குட்டிக் கதைகளைப் பொறுத்து ஆர்வம் வரும்.  

 

பெரும்பாலும் சிறப்பு விருந்தினராக SKM நிறுவனத்தின் எஸ்கே மயில்சாமி கவுண்டர் அவர்கள் தான் அழைக்கப்பட்டு இருப்பார்கள்.  எங்கள் பள்ளியில் படித்த அவர், ஒரு சிறந்த தொழிலதிபராக, தனித்துவம் மிக்கவராக இருந்தார் அப்போதும், இப்போதும்.  பள்ளிக்கு கேட்கும் நேரங்களில் நிதி வழங்கிக் கொண்டிருந்தார்.  கீழ்மட்டத்தில் இருந்து படிப்படியாக வளர்ந்த அவரது வரலாறை, பேச்சைக் கேட்கக்  கேட்க நம்மில் ஒருவர் என சுவாரசியமும், ஊக்கமும் வரும்.   அவை மூளையின் ஓரத்தில் எங்கோ ஒரு பக்கம் உட்கார்ந்து, வேண்டிய நேரத்தில் நம்மை உசுப்பி விடும்.  சில வருடங்கள் கழித்து எஸ்கே மயில்சாமிக் கவுண்டர் எனும் அவரின் பெயரை,  எஸ்கே மயிலானந்தன் என மாற்றிக்கொண்டார். அவர் மாற்றிக்கொண்ட சமயம்,  நுயுமராலஜி படி மாற்றிக்கொண்டார் என நினைத்துக் கொண்டுதான்  இருந்தேன்.  அதன் பிண்ணணி அப்பொழுது தெரியவில்லை.  அவரது SKM நிறுவனம், இன்று நான்கு கிளை நிறுவனமாக பெருகி, எங்கள் பகுதியில் பலருக்கும் வேலை வாய்ப்பளிக்கும் சிறந்த நிறுவனம்.  அவரது பிறந்த ஊரை தத்து எடுத்து,  அவர்களின்  குழந்தைகளுக்கு,   உயர்கல்வி வரை படிக்கவும் வைத்து வருகிறார்.  வாழ்க வளமுடன் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு, வேதாந்திரி மகரிஷிக்குப்பின் அதனை வழிநடத்தி வருகிறார்.

 

சரி, எதற்காக இந்த ப்ளாஸ்பேக்.  SKM அவர்களுக்கும், டாக்டர் செலின் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்?

இன்று அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் அவர்களின் கொரோனா குழுவில் இடம்பெற்றுள்ள பெண் மருத்துவர், செலின் கவுண்டர் அவர்கள் என்பது அறிந்ததே.   சென்ற வாரம் அவரைப்பற்றிய செய்திகள் வந்த நேரத்தில், எனது வாட்ஸ்அப் முழுக்க நண்பர்கள் "மச்சி, உங்க ஊர்க்காரங்க போல" என அவரின் பார்வர்டுகளால்  நனைத்துக் கொண்டு  இருந்தார்கள்.  நண்பர் ஒருவர் எனக்கு வாழ்த்தும் கூறினார்.   காரணம் மொடக்குறிச்சி அவரின் பூர்விகம் என்பது மட்டும் தான்.  இது அவரது தனிப்பட்ட முயற்சி, சொந்த சாதனை தான்.  அதையும் தாண்டி, அவர் நான்கு முறை பள்ளிக்கு வந்து, அவரின் டிரஸ்ட் வழியாக நிறைய உதவிகளை செய்துள்ளார் என்பது தான் கூடுதல் மகிழ்ச்சி.

 

அந்த புகைப்படங்களில், நாங்கள் பள்ளியில் உட்கார்ந்து கொண்டு இருந்த திடலில்,  அதே மேடையில் சிறப்பு விருந்தினராக அலங்கரித்து மாணவர்களுக்குப் பரிசை வழங்கிய புகைப்படங்கள் வலம் வந்தன.  நாங்கள் SKM அவர்களின் பேச்சை விளையாட்டாகக்  கேட்டு  உள்வாங்கிக் கொண்டது போல,  அந்தக் கூட்டத்தில் எத்தனையோ மாணவர்கள் டாக்டர் செலின் அவர்களின் உரையைக் கேட்டிருக்க கூடும்.  அது அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் சிறு பொறியை கிளப்பிவிடும்.  அந்த சிறு பொறி அவர்களுக்கு ஊன்றுகோலாக, அவர்களை உலகம் முழுக்க எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்ய உதவும். 

 

அந்த மேடையை நோக்கி அவர் நடந்து வரும் பொழுது, அந்த சிறுவர்கள் வேடிக்கை வைத்திருப்பார்கள். அவர்களுக்குள் பேசிக் கொண்டிருப்பார்கள்.   'இவங்க தான் இன்னிக்கு பேசறதுக்கு வந்திருக்காங்களா?  எங்கிருந்து வர்ராங்க?  நம்மூர்லயா படிச்சாங்க?  என்னடா, பேன்ட்  சர்ட்டெல்லாம் போட்டுருக்காங்க?'  என்று பல வித கேள்விகள் வந்திருக்கக் கூடும்.  இத்தகைய கேள்விகள் தான் அவர்களுக்குள் ஒரு 'ஸ்பார்க்'. 'அப்ப நாமும் படிச்சால் அங்க போக முடியமா?  இவங்க மாதிரியே சாதிக்க முடியுமா?'  எனும் அடுத்தடுத்து அவர்களை யோசிக்கத் தூண்டும்.     

 

அந்த வியப்பு, ஆச்சரியம் நிறைந்த கிசுகிசு கேள்விகள்,  அவர்களுக்கு எங்கோ ஒரு பொறியை, படிப்பின் தாகத்தை, அமெரிக்காவிற்கான கனவை உருவாக்கி விட்டிருக்க கூடும்.  இன்று இவரின் தந்தையின் கனவுக்காக பள்ளிக்கு உதவி செய்து கொண்டிருப்பதைப் போல, அந்த முணுமுணுத்த கூட்டத்திலிருந்து ஒருவர்,  பல நாடுகளுக்கும் சென்றுவிட்டு வந்து மேலும் பலரைத் தூக்கி விடலாம்.   அதுதானே இன்றைய மற்றும்  நாளைய தலைமுறையின் தேவையாக இருக்கின்றது.

 

அவர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்றாரா எனத் தெரியவில்லை.   அடுத்த முறை வந்தால் அவர் அங்கேயும் செல்ல வேண்டும்.  நம்மூரில் நாம் அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் விஷயத்தை அவர் ட்வீட்டாக பதிவு செய்திருந்தார்.  இதுகூட பலருக்கும் அவரவர்களின் பள்ளிக்கு ஏதாவது செய்வோமே என தோன்றி இருக்கும். இவருக்கும் கமலா ஹாரிஸ்க்குமான ஒற்றுமை.   இருவருமே இரண்டாம் தலைமுறையாக அமெரிக்காவில் இருப்பவர்கள்.  முதல் தலைமுறை முயற்சி எடுத்து, வாயுப்புக்களைப் பயன்படுத்தி சென்றதால் தான், இவர்களால் அங்கு சாதிக்க முடிந்தது.  பேச எவ்வளவோ அவரின் சாதனைகள் இருக்கும்போது சமூக வலைதளங்களில் வழக்கம்போல ஏதோ ஒரு எதிர்மறையை எடுத்துக்கொண்டு அவரது பெயர் பற்றி  சர்ச்சையை கிளப்பிக்கொண்டு இருந்தார்கள்.   SKM  அவர்கள் போலவே அவரும் செய்யலாம். 

 

கிட்டத்தட்ட நான் ஊருக்கு வந்ததில் இருந்து, கொரோன ஊரடங்கு தளர்வுக்குப் பின் மீண்டும்  கல்யாணம், விசேஷங்கள் என பரபரப்பாகவே, எனது  தனிப்பட்ட நேரம்  நிரம்பி வழிந்து கொண்டே இருக்கின்றது.  பல வருடங்களுக்குப் பின் இங்கு இருப்பதால் கொரோன பயத்தோடு முக்கியமானவற்றில்  பங்கு கொள்கிறேன்.

பெங்களூர், சென்னையில்  இருக்கும் என்  நண்பர்கள் இதன் காரணமாகவே ஊர்ப்பக்கம் வரவில்லை என்கிறார்கள். "அட, அங்க இருந்தா சின்னச் சின்ன விசேசம் ஒவ்வொன்னுக்கும் கூப்பிடுறாங்க.  போகலைன்னா சங்கடம் வேற.  கோவிச்சுக்கறாங்க".   டாக்டர்  செலின்  போன்ற சாதனையாளர்கள், இவை எல்லாவற்றையும் கடந்து விட்டுத்தானே சாதனைகள் செய்கிறார்கள்.

 

பெரும்பாலான சாதனையாளர்கள் அந்த வட்டத்தை உடைத்து வெளியேறியதால் மட்டும் தான் அவர்களால் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடிகிறது.  ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருக்கும்போது, பார்வை விரிவடைய மறுக்கின்றது.  பார்வை விரிவடைய, வெளிவட்டத்தின் வாய்ப்புகளை அறிந்துகொள்ள, உலகத்திற்கான திறவுகோலை வழங்க,  இத்தகைய சிறப்பு விருந்தினர்களின் நேரடிப் பங்கேற்பு உதவும்.  அவர்கள் நம் ஊரில் இருந்து சென்றவர்கள் எனும்போது நாமும் அதனைச் செய்ய முடியும் எனும் நம்ம்பிக்கை ஊற்று பிறக்கிறது. 

 

எங்கள் பகுதியில் இருந்து வெளியில் வந்து பிரபலமானவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.  அவர்கள் அல்லது அவர்களின் வழித்தோன்றல்கள் எங்கு இருந்தாலும், மீண்டும் வேர்களை நோக்கி விழுதுகளைப் பரப்பி மற்றவர்களைத் தூக்கிவிடுவதென்பது கண்டிப்பாக பாராட்டப்பட  வேண்டிய விஷயம்.   அதுவும் அவரின் அப்பா படித்த பள்ளி என்பது கூடுதலாக பாராட்ட வேண்டிய விஷயம்.  வாழ்த்துக்கள்  டாக்டர் செலின். 

 #mondaymotivation #MotivationalStories

   

 



Saturday, September 26, 2020

ஈரோடு தினம்

ஈரோடு  தினம் என காலையில் FM  கேட்டுக்கொண்டு செல்லும்போதே காதில் விழுந்தது.   கூடவே வாசலின் ஈரோடு  குறித்த அனுபவம்,  நினைவுகளைக் கீற ஆரம்பித்து, கொசுவர்த்திச்  சுருளை மலர விட்டது. 

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஈரோடு வேறு வேறு பரிணாமத்தை எனக்கு வழங்கியுள்ளது. பள்ளிக்காலங்களில் பேருந்துகளில் வரும்பொழுது சும்மா வேடிக்கை பார்ப்பது திரையரங்குகளின் மீதான ஈர்ப்பாக மாறுகின்றது.  கொங்காளம்மன் கோவில் வீதி, நகைக்கடை வீதி சில காலம்  முக்கியமானதாக இருந்தது. கல்லூரி செல்லும்போது பேருந்து நிலையமும், பஸ்களும் பிடித்தமானதாக  இருந்தது.  அதன்பின் வெளியூர் சென்ற காலகட்டங்களில் ரயில் பேருந்து மற்றும் நிலையத்தில் இருந்து ஏற்றிவிடும் ஒரு ஹப் ஆக மட்டுமே இருந்தது.  இன்று வாசலின் வழி வேறு ஒரு பரிமாணம் எனலாம்.  
பள்ளி காலங்களில் ஈரோடு என்பது எங்களுக்கு ஒரு வெளிநாடு போவது போலத்தான்.  ஈரோடு போவது என்றால் ஒருவித மகிழ்ச்சி குடிகொண்டு விடும்.   "நாளைக்கு ஈரோடு போகப் போறேண்டா ",  "இன்னிக்கு ஈரோடு போய்ட்டு  வந்தேன்டா"  என்று நண்பர்களிடம் சொன்னாலே கெத்தாக  இருக்கும்.   ஈரோட்டில் திரைப்படம் பார்த்துவிட்டு சென்றால் காலர் தூக்கி விட்டுக்கொண்டு சுற்றலாம்.   அதற்கான சாட்சியாக டிக்கெட் எல்லாம் பல நாட்கள் பத்திரமாக இருக்கும்.  

கரகாட்டக்காரன் திரைப்படம் சக்கை போடு போட்ட போது குடும்பம் குடும்பமாக பல ஊர்களில் இருந்தும் ஈரோடு சென்று பார்த்தார்கள்.   அப்பொழுது புதிய படங்களைப்  பார்க்க சுற்று வட்டாரமும் ஈரோடு தான் வர வேண்டும்.  மொடக்குறிச்சி தியேட்டர் வர ஐந்து ஆறு மாதம்  வரை ஆகலாம்.  ஈரோட்டிலும்  ஒரேயொரு தியேட்டரில் தான் படத்தினை வெளியிடுவார்கள்.  ரஜினி கமல் படம் எனில் ரெண்டு தியேட்டர்கள்.     ஊரில் அண்ணா ஒருவர் ஓரிரு குடும்பங்களை ஒன்று சேர்த்து கரகாட்டக்காரன் படத்திற்கு சுற்றுலா(?) கூட்டிச் சென்றார்.  ஸ்டார் தியேட்டரில் ஐம்பது, அறுபது நாட்களைக் கடந்து படம் ஓடிக்கொண்டு இருந்தது.   பேருந்து நிலையத்தில் இறங்கி, ஸ்டார் தியேட்டர் வரை நடந்தே கூட்டிச்சென்றார்.  ஒரு மணி நேரம் முன்பே சென்று டிக்கெட் கவுண்டரின் முன்பு காத்திருந்து உள்ளே சென்றோம்.  காத்திருந்த அந்த நேரத்தில், பல சுவாரசியமான சம்பவங்களை கூறிக்கொண்டே செல்வார். அவர், அதற்கு முன்  இரண்டு முறை பார்த்திருந்தார்.   "இந்தப் படத்துல கடசீல மாரியம்மா மாரியம்மா பாட்டு  வரும்.   கொட்டாய்ல  சாமி வந்தெல்லாம் ஆடுவாங்க" என்றார்.  கூறியது போலத்தான்  திரைக்கு முன்புறம் இருந்த பெண்கள், மாரியம்மா பாட்டின் போது  சாமி ஆடினார்கள்.    "அந்த தீ மிதிக்கிறதெல்லாம்  செட்டிங்ஸ்.  அடியில செவப்பு கலர் சீரியல் பல்பு போட்டு எடுத்துருக்காங்க" என்று வாரமலரில் படித்ததையும் கலந்து கூறுவார்.   இப்படித்தான் ஈரோட்டில் முதல் திரைப்படம் பார்த்தேன்.

ஈரோடு அபிராமியில் படம் பார்ப்பது என்பது பலரின் கனவு.   அப்பாவும், அவர் நண்பரும் ஈரோடு ஒரு  வேலையாக வந்தபோது கூட்டிக்கொண்டு சென்றார்கள்.  வந்த வேலை மாலைக்கு  தள்ளி சென்றதால் எனக்கு அதிர்ஷ்டம் அடித்தது.  பக்கத்தில் தான் அபிராமி காம்ப்ளக்ஸ்.  A  என்று அபிராமியின் ஸ்டைலான லோகோ, அபிராமி எழுத்தின் பின் இருந்த A/C 70MM,  அதன் முன்புற படிக்கட்டு அமைப்பு, வாயிலின் முன்பு தோரணங்கள், பெரிய போஸ்டர், கட் அவுட் என  'பட்டிக்காட்டான் முட்டாய் கடை பார்த்த' மொமெண்ட்டை வரவழைக்கும்.   தேவி அபிராமியில்  சிங்காரவேலன் திரைப்படதிற்கு தான் டிக்கெட் கிடைத்தது.  மற்ற தியேட்டர்களின் டிக்கெட்டைவிட,  அபிராமியின் டிக்கெட் பேப்பர் தரமான காகிதத்தில் இருப்பது போல தோன்றும்.  இரண்டு மாடிகள் சாய்தள படிக்கட்டில் ஏறி, உள்ளே நுழைந்தபோது பொது 'சொன்னபடி கேளு' பாட்டு பாதி சென்றுவிட்டது வருத்தம் தான்.  

சின்ன தியேட்டர் என்றாலும் திரை சற்று பெரிதாக, சுவரில் இருந்து வெளியே வந்து சற்று வளைந்தது போல இருக்கும்.  தியேட்டருக்குள் இருக்கும் ஒருவித ஏசி வாசனை ரம்யமாக பார்க்க வைக்கும்.  குசன் சீட்கள் அப்பொழுது ஒரு மாறுபட்ட சினிமா பார்க்கும் அனுபவத்தை கொடுத்தது.   இன்னுமொரு குறிப்பிட வேண்டிய விஷயம்  இடைவேளையில் அங்கு கிடைக்கும் கட்லெட்.  'டொமோடோ  கேட்ச் அப்' போட்டு சிறு பீங்கான் தட்டில் வைத்து தருவார்கள்.  அந்த கட்லெட் சுவையை வேறு எங்கும் சுவைத்ததில்லை.  அபிராமிக்கு சென்றால் எப்போதும்  கட்லெட் மட்டுமே வாங்குவது உண்டு.  ஆனாலும் அப்போது அபிராமியில் படம்  பார்க்க முடியாத வருத்தம்.   

கரகாட்டக்காரன் கூட்டிச் சென்ற அண்ணா ஒரு தீவிர ரஜினி ரசிகர்.  அதே டீமை அதன் பிறகு சில வருடங்கள் கழித்து எஜமான் திரைப்படத்திற்கும் கூட்டிச்  சென்றார். இந்த முறை படம் அபிராமியில்.  இதற்கும் அதேபோல ஒரு மணிநேரம் முன்பாகவே வந்து, போஸ்டரை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தோம்.   "ரஜினி இந்த படத்துல ஒரே ஒரு சீன்ல மட்டுந்தா  ஜிப்பாவுல வருவாரு,  மத்தபடி படம் முழுக்க வேட்டி சட்டைதான்" என்பார்.  அதேபோல ஒருநாளும் எனை  மறவாத பாட்டு வரும்போது "இதோ இந்த சீன் தான், பாரு பாரு" என்பார்.   இடைவேளையில் அங்குள்ள சீல்டுகளை பார்ப்பதும் ஒரு குதூகலம்.  இப்படியாக அபிராமியில்  திரைப்படம் பார்ப்பது நிறைவேறியது. 

ஈரோட்டில் திரைப்படம் பார்ப்பது ஒரு அனுபவம் எனில், வரும் வழியில் வேடிக்கை பார்ப்பது மற்றுமொரு ஆனந்தம்.  மாமாவின் ஊர் அரச்சலூர். பூந்துறை வழியாக குறுக்கே சென்றால், 30 நிமிடத்தில் வண்டியில் செல்லும் தூரம்.  வண்டி இல்லாத  காலங்களில்  பேருந்து மாற்றித் தான் செல்ல வேண்டும்.   ஒன்று விளக்கேத்தி வழி. இன்னொன்று  நாடர்மேடு பெட்ரோல் பங்க் வழி.   இரண்டாவதே எனக்கு பிடித்தமான வழி.  விளக்கேத்தி வழியில் வேடிக்கை பார்க்க எதுவும் இருக்காது.    நாடார்மேடு பெட்ரோல் பங்க் அப்பொழுது  ஈரோடு நகரின் ஒதுக்குப்புறம்.  பேருந்து நிலையம் கூட்டிச் செல்ல மாட்டர்கள்.   இருந்தாலும் சோலார், கார்மல் பள்ளி என ஏதோ ஒன்று  வேடிக்கை பார்க்க கிடைக்கும். சினிமா போஸ்டர்கள், ஊர் பெயர் பலகைகள் என எதையும் விட்டு விடாமல் வரிசையாக படிப்பதும் உண்டு.   'பஸ்டாண்டு போனா  உக்கார சீட் கிடைக்கும்' என்றாலும், 'அது அர மணி நேரம் சேத்தி ஆகும்' என மாட்டார்கள்.

அம்மாவாசைக்கு திருச்செங்கோடு மலைக்கு செல்வது வழக்கம்.  அதிகாலையில் வரும் முதல் பேருந்து VMS.  அதில் ஏறி ஈரோடு பேருந்து நிலையத்தில் இறங்கி, திருச்செங்கோடு பேருந்தில் மாறுவது தான் எனக்கு நினைவு தெரிந்து முதலில் ஈரோடு வந்த அனுபவமாக இருக்கும். அதிகாலையில் செல்கையில் தூங்கிவிடுவதால், திரும்பி வரும்போது தான்  வேடிக்கை பார்க்கும் படலம்.   எப்படியும்  ஜன்னலோர சீட்டு  கிடைத்துவிடும்.  

ஓரிருவருடன் காலியாக சிவகிரியில் இருந்து 42 டவுன்பஸ் ஏறினால், ஈரோடு பேருந்து நிலையம் அடைய  45 நிமிடம் ஆகும்.    ஒவ்வொரு பஸ் ஸ்டாப்பிலும் நின்று அனைவரையும் ஏற்றி  ஊர்ந்து நத்தை போல ஊர்ந்து செல்லும்.  ஆனால் ஈரோட்டுக்குள் நுழையும்முன் நிரம்பிவிடும்.   நகருக்குள் நுழைந்ததும் ரயில்வே காலனி பள்ளி தான்  வேடிக்கை பார்க்கும் முதல் இடம்.   தாண்டியதும் ரயில்வே நுழைபாலம்.    தற்போது மேலே செல்லும் உயரம் குறைவான பழைய பாலம் மட்டுமே இருக்கும்.  பல வருடங்களாக குழி வெட்டி உயரம் அதிகமான  நுழைபாலம் கட்டினார்கள்.   அதனை நெருங்கும்போது ஏதேனும் புகைவண்டி தெரியாதா? என தேடுவது இயல்பு.  எப்பொழுதேனும் அதிர்ஷ்டம் கூடும்.   அடுத்தாக  காளைமாடு சிலை.   திமிலேறிய  காங்கேயம் காளையை ஒரு வீரன் அடக்கும், அந்த சிலை ஈரோட்டின் ஒரு அடையாளம்.  சில வருடங்கள் வண்ண, வண்ண லைட்டுகளும், சுற்றிலும் பைப் வைத்து நீர் பீச்சி அடிப்பது அழகாக இருக்கும், குறிப்பாக இரவில்.  
நகர பேருந்து அதனை அரை வட்டமிட்டு நுழைந்தால் fire  சர்வீஸ்.   அதற்கு எதிர்புறம் கோஆப்டெக்ஸ்  கட்டிடம்.   அதனை ஒட்டிய சாலையில் சற்று உள்ளே சென்றால் ஆனூர் தியேட்டர்.   கோழிமொட்டு  தியேட்டர் என்பார்கள்.  அதன் வடிவம் முட்டைபோல இருந்ததால் .  பேருந்தில் இருந்தே தியேட்டர் தெரிகிறதா என பார்ப்போம்.  இந்தியன் திரைப்படம் வந்த பொழுது, கமல் ரசிகர் அங்கு கூட்டிச் சென்றார். 

தீ அணைப்பு நிலையம் தாண்டியதும் சற்று தொலைவு சென்றால் சந்திரன் ஸ்டுடியோ.  பெரும்பாலான வீடுகளில், ஒயரில் பின்னப்பட்ட கூடை நாற்காலியில், குழந்தைகளை உட்கார வைத்து எடுத்த போட்டோக்கள், இங்கு எடுக்கப் பட்டதாகத்தான் இருக்கும்.   அடுத்து ஓடை குறுக்கிடும்.   தாண்டினால் பெரியார் நகர் ஆர்ச்.  பெரியார் அங்கு தான் பிறந்தார் என பல நாள் நம்பிக்கொண்டு இருந்தேன்.  எதிரில் மாணிக்கம் தியேட்டர் மற்றும் நடராசா  தியேட்டர்.   போஸ்ட் ஆபீஸ், அரசு பெண்கள் பள்ளி தாண்டியதும் பன்னீர் செல்வம் பார்க் வந்துவிடும்.      

எங்கள் ஊர் பேருந்துகள் பன்னீர் செல்வம் பார்க்கில்,  இடது புறம் திரும்பிவிடும்.   மாரியம்மன் கோவிலின் அம்மன் பெருந்திலிருந்தே அழகாக தரிசனம் கொடுப்பார்.  வலது கை இயல்பாக கன்னம் நோக்கி ஸ்டைல் கும்பிடு போட செல்லும்.   சற்று தொலைவு சென்றால் அப்பொழுதுதான் வந்த ரேமாண்ட்ஸ், பக்கத்திலியே உயரமான டெலிபோன் பவன் என ப்ர∴ப் ரோடு ஆரம்பிக்கும்.  ப்ர∴ப் ரோடின் மறுமுனையில் சவீதா  மருத்துவமனையின் கட்டிடம் புதிதாக மிரட்டும்.  அதன் பின் சந்துகளில் புகுந்து பேருந்து நிலையத்தின் ஒரு முனையில் நுழையும்.    

ஆனால், தொலைதூர பேருந்துகள், ஊரிலிருந்து 30 நிமிடத்தில் விரைந்து பேருந்து நிலையம் அடையும்.   காளைமாடு சிலைக்குப்பின் ரயில் நிலையம், சூரம்பட்டி  நால்ரோடு,  GH  வழியாக பேருந்து நிலையம் வந்தடையும்.   அது எனக்கு ஒரு போரிங் ரூட்.  வேடிக்கை பார்க்க பெரிதாக ஒன்றும் இருக்காது.  ஆனால் இதில் செல்லும்போது, மூன்று முக்கிய  திரைஅரங்கத்தின் போஸ்டர்களை வேடிக்கை பார்க்கலாம்.   ரயில் நிலையத்தின் எதிரில் இருந்த முத்துக்குமார், பின்பு ஸ்ரீசண்டிகாவாக மாற்றப்பட்டது.   அபிராமி காம்ப்ளக்ஸ்ஸில் இருக்கும்  அபிராமி மற்றும் தேவி அபிராமி. பேருந்து நிலையத்தை ஒட்டி இருந்த ராயல் தியேட்டர்.  இந்த திரை அரங்குகளின் போஸ்டர், கட் அவுட் மற்றும் தோரணம் வேடிக்கை பார்ப்பது அலாதி.

அடுத்து இன்னுமொரு வழி, தொலை தூர பேருந்தில் வந்து காளை மாடு சிலை அருகே இறங்கி 1ம்  நம்பர் பிடித்தால் பன்னீர் செல்வம் பார்க் வழியாக மணிக்கூண்டில் இறங்கலாம்.  பன்னீர் செல்வம் பார்க்கில் எங்கே பார்க் என பலமுறை தேடியதுண்டு.   அதேபோலத்தான் மணிக்கூண்டில் எங்கே கடிகாரம் எனவும்.  அந்த சாலை தான் மனிதர்கள் நெருக்கமாக இருக்கும் ஈரோட்டின் ரங்கநாதன் தெரு.  குட்டிக்  குட்டி கடைகள். எண்ணற்ற மனிதர்களின் வாழ்வாதாரம்.  

பன்னீர் செல்வம் பார்க் அருகில் பாடல் பதிவு செய்து தரும் கடை இருந்தது.  விரும்பும் பாடல்களை தெளிவாக பதிவு செய்து தருவார். ரெகுலர் கஸ்டமர்.   இளையராஜாவின் பாடல்களை கொடுத்து 90M கேசட்டில் பதிவு செய்தது பலமுறை நடக்கும்.  கேசட் சிஸ்டதிற்குப் பிறகு, CD, பென்டிரைவ் தற்போது இன்டர்நெடில் பாட்டுக்கேட்கும் அளவிற்கு மாறிய தொழில்நுட்பத்தில் இன்று அவர் என்ன செய்து கொண்டு இருப்பார்?  அந்தக்கடை கரும்பு ஜூஸ் கடையாக மாறி இருந்தது.  பெரும்பாலும் பன்னீர் செல்வம் பார்க் டு கொங்காளம்மன் கோவில் வீதி பேருந்து நிறுத்தம் வரை ஷாப்பிங்கோடு நடைதான்.  அங்கு ஏறினால் பேருந்து நிலையத்தை சக்தி ரோடு வழியாக அடையலாம்.  சத்தி சாலை வேடிக்கை பார்க்க பெயிண்ட் கடைகள் மட்டுமே இருக்கும்.   ஒரு சதுரம் போல ஈரோடு என்பது இந்த மூன்று வழிகளிலும் முடிந்துவிடும்.  

அனைத்து  நகரங்களையும் போல, ஈரோடும் எத்தனையோ விதமான மண்ணின் மைந்தர்களின்  உணர்வுகளோடு கலந்து அவர்களையும் வளர்த்து,  தானும் வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.   இன்று மொடக்குறிச்சியில்  இருந்து வரும்போது லக்காபுரம்  ரிங் ரோட்டிலிருந்தே  நகரம் ஆரம்பித்து விடுகின்றது.   அப்பொழுது  சென்று வந்த திரையரங்குகளும், கடைகளும், அன்று  வேடிக்கை பார்த்த  பல இடங்களும், காலமாற்றத்தில் இன்று கரைந்தும்,  புதிய பொலிவோடும் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நடைபோடுகிறது.  ஆவலாக எதிர்கொள்வோம்.

எஸ் பி பாலசுப்ரமணியம்

நேற்றும் இன்றும் FMல்  கேட்டவரைக்கும் எஸ்பிபி பாடல்கள்.   அப்பொழுதெல்லாம் திருச்சி வானொலி நிலையத்தில் காலை 7.30 க்கு  அரை மணி நேரத்திற்கு பாடல்களை ஒலிபரப்புவார்கள்.  பள்ளிக்கு கிளம்பிக்கொண்டே பாடல்களைக்  கேட்பது தான் வழக்கம்.  தொகுப்பாளர்கள் ஒரு சில நேரங்களில், பாடலுக்கு முன்பே படத்தின் பெயரை கூறிவிடுவார்கள்.  பிறகு பாடகர்களின் பெயரைக் குறிப்பிடுவார்கள்.  சில நேரங்களில்  படத்தின்  பெயருக்கு முன்பே,  பாடகர்களின்  பெயரைக் குறிப்பிடுவார்கள்.    'நிகழ்ச்சியின் தொடக்கமாக படிக்காதவன் திரைப்படத்தில் இருந்து  எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் சித்ரா பாடிய பாடல்'.  'அடுத்ததாக காக்கி சட்டை திரைப் படத்திலிருந்து எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் ஜானகி பாடிய பாடல்'  என்பார்கள் .   எஸ்பி பாலசுப்ரமணியம் என்று ஆரம்பித்தால் புதிய பாடல் என்று ஒரு குட்டி குதூகலம் அந்த கணத்தில் தோன்றி மறையும்.   'டிஎம்  சௌந்தர்ராஜன் அல்லது பிபி ஸ்ரீனிவாஸ்' என்று தொகுப்பாளர் ஆரம்பித்தால், ஏதோ பழைய பாடல் போடப் போகிறார்கள் என்று சுவாரசியம் குறைந்து விடும்.  அதற்கடுத்து படத்தின் பெயரைக் குறிப்பிடும்போது இது கமல் படமா?  அல்லது ரஜினி படமா?  என்பதில் மனம் உற்சாகமடையும்.

எங்களைப்  பொறுத்தளவில், பாடலை யார் பாடி  இருந்தாலும்,  ரஜினி பாட்டா ?  கமல்  பாட்டா? என்பதுதான்.  பள்ளிக்கு பையைத்  தூக்கிக் கொண்டு செல்லும் பொழுது  'இன்னிக்கு ரெண்டு கமல் பாட்டு, ஒரு ரஜினி பாட்டு தான்டா'  என்று தான் சண்டைகள் நடக்கும்.  ஊர் முடிந்த பின் வரும் கிணற்றை ஒட்டிய வளைவு தாண்டி, விரியம்பழ மரத்தின் அடியில் நடந்துகொண்டே தான் இந்த உரையாடல் நடந்தது.  சிலவற்றை பற்றி யோசிக்கும் பொழுது, அந்த இடமும் சம்பவமும் மனதில் காட்சிபோல பளிச்சென்று விரிகிறது.    அப்பொழுதெல்லாம் எஸ்பி பாலசுப்ரமணியம், மனோ, மலேசியா வாசுதேவன், ஜானகி, சித்ராவை யார் என்றெல்லாம் தெரியாது.   கமலுக்கும், ரஜினிக்கும் மட்டும்  எஸ்பி பாலசுப்ரமணியம்  பாடுவார்கள்;  சிவாஜி, எம்ஜிஆர் என்றால் டிஎம்  சௌந்தர்ராஜன் என்று குத்துமதிப்பாக பேசிக்கொள்வோம்.   அதன் பிறகுதான் படிப்படியாக தெரிந்தது, பாடல்களைப் பின்னணியில் பாடியவர்கள்  வேறு, அதனை முன்னிருந்த நடிப்பவர்கள் வேறு என்பது. 

"மண்ணில் இந்த காதல் இன்றி"  பாட்டு ஹிட் ஆனபோது  பாட்டு புத்தகம் வாங்கி,  பாடலை அவரோடு சேர்ந்து மூச்சுவிடாமல் பாட  முயற்சி செய்தது பலர். அந்த கால கட்டத்தில்  தான் இவர் ஹீரோவாகவும் தடம் பதித்தார். 
 

தேர்வுகளுக்கு இரவில் படித்துக் கொண்டிருக்கும்பொழுது, வீட்டின் அருகில் ரவி அண்ணன் அவர்களின் டெய்லரிங் கடை  இருக்கும்.  கமல் ரசிகர். அவர்தான் அப்பொழுது ஏரியாவின் பிரபலமான டெய்லர்.  பத்து, பதினோரு மணிக்கு மேல் இரவில் பல மென்மையான பாடல்கள் அங்கிருந்து மிதந்து வரும்.   பெரும்பாலும் கமலஹாசன் + இளையராஜா + எஸ்பி பாலசுப்ரமணியம் கூட்டணி பாடல்கள். பாடப் புத்தகம் சற்று நேரம் படித்தாலே தூக்கம்  வரும்.  கூடவே இவர்களின் கூட்டணி தாலாட்டும், . படிக்கணும் என்று இருக்கும் நேரத்தில்   தூங்க வைத்துவிடும்.  அடுத்தநாள்  'அண்ணா.. என்னண்ணா எப்ப பார்த்தாலும்  சோகப் பாட்டு போடறீங்க, ராத்திரில எல்லாம் நல்ல அடி பாட்டு போடுங்கண்ணா.. அப்ப தான தூக்கம்  வராது"  என்பேன்.  "குமாரு,  இந்த பாட்டெல்லாம்  அருமையா  இருக்கும், வேலை செய்யறதே  தெரியாம வேலை பார்க்கலாம்" என்பார்.   அவர் அன்று கூறியது,  எனக்குப் புரியவில்லை.  ஆனால் நண்பர்களோடு இரவுகளில் வேலை செய்யும் நேரங்களில்  இளையராஜா + எஸ்பிபி பாடல்களில் தான் வாழ்ந்தோம்.  இன்றும்  கூட இரவு நேர அலுவல் வேலைகளிலோ அல்லது மனது அழுத்தமாக இருக்கும்போதோ அவர்களே சரணம்.  கல்லூரி நண்பர் கூட அப்போது கூறுவார் "இன்னைக்கு ரெக்கார்ட் நோட்ட முடிக்கணும்னா,  விடிநைட் உட்காரணும்.  இளையராஜா பாட்டோட முடிச்சிடலாம்" என்பார்.  இங்கு இளையராஜா எனில், எஸ்பிபியும்  கூடவே வந்துவிடுவார். 

கல்லூரி ஹாஸ்டலில் நண்பன் ஒருவனின் டேப்ரிக்கார்டர் இருக்கும்.  ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் கேசட் கடையில் பதிவுசெய்த 90M கேசட் கூடவே இருக்கும்.   கல்லூரி முடித்த மாலைகளில்  ஒரு மணிநேரம் அவரை ரசித்த பின்பு தான் அந்த நாள் முழுமையடையும்.    மௌன ராகம் திரைப்படத்தின் ' நிலாவே வா... செல்லாதே வா..'  பாடல் தான் அதில் முதல்.   'உனக்கு புடிச்ச பாட்டு என்ன?' என்று கேள்விக்கான பதில் எப்பொழுதும் இந்த பாடலே. சற்று சோகம் கலந்த மென்மையான பாடல்.  அதற்கு அடுத்ததாக இருந்த பாடல்   "மன்றம் வந்த தென்றலுக்கு.. மஞ்சம் வர நெஞ்சம்  இல்லையா ?".  இந்த பாடலில் அவரின் குரல் மெய் மறக்க வைக்கும்.   இந்த இரண்டு பாடல்களும் ரீவைண்ட் செய்து,  ரிப்பீட் மோடில் அதிகப்படியாக கேட்டவை.  "டேய், கெஸட்டுக்கு வாய் இருந்தா,  கதறிடும் டா" என்பார்கள்   அந்த பாடல்கள் தான் பெரும்பாலான நேரங்களில்  ஹம்மிங் ஆகும்.  அவரின் குரலில் அந்த  உணர்வுகளை நமக்கு கடத்தி விடுவார் இந்த காந்தக் குரலோன்.  

ரஜினி அவர்களுக்கு  அவரது பிம்பத்தை உயர்த்திப் பிடிக்கக் கூடிய பாடலை பாடியவர் எஸ்பிபி.    அண்ணாமலையில்  "வந்தேண்டா பால்காரன்",  பாட்ஷாவில் "நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்", அருணாச்சலத்தில்  "அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா", முத்து படத்தின்   "ஒருவன் ஒருவன் முதலாளி" , படையப்பாவில் " என் பேரு படையப்பா படையப்பா இளவட்ட நடையப்பா" என வரிசையாக  ரஜினி அறிமுகம் ஆகும் பாடலை எஸ்பிபி மட்டுமே பாடுவார்.  இந்த பாடல்கலில் ரஜினிக்கு ஒரு மாஸ் ஹீரோ பிம்பத்தை ஏற்படுத்தியது, வைரமுத்துவின் வரிகளோடு இவரின் அதிரும் குரல் தான். பாபாவின் தோல்விக்கு சென்டிமென்டாக, எஸ்பிபி அறிமுகப் பாடலைப் பாடாதது  தான் காரணம் என்றும்  கூறுவார்கள். அதன்பிறகு சந்திரமுகியில் 'தேவுடா தேவுடா' பாடலை மீண்டும் அவர் பாடியதுதான், அந்த பட வெற்றிக்கு வெற்றிக்கு காரணம் என்றும் கூறுவார்கள்.   

நாயகனின் புகழ் பாடும் பாடல்கள் அந்த வரிசை என்றால்,  அதன் பிறகு ஒரே பாட்டில் பெரிய ஆளாக மாறும் பூஸ்டர் பாடல்கள் வேறு ரகம்.   அண்ணாமலை திரைப்படத்தில் "வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்" என்ற பாடல்.  அந்த பாடலில்  வரும் "அடே.. நண்பா உண்மை சொல்வேன்... சவால் வேண்டாம்... உன்னை வெல்வேன்" வரிகளுக்கு இவரின் ஹை பிட்ச் குரல், உற்சாக மூட்டும்.  நண்பர்களிடம் செல்ல சண்டைகளுக்கு ,  இந்த பாடல்களை விளையாட்டாக பாடியதும் உண்டு. மற்றுமோர் பூஸ்ட் பாடல் என்று கூறினால்  "வெற்றிக்கொடி கட்டு மலைகளை முட்டும் வரை முட்டு" தான்.  படையப்பா திரைப்படம் வந்த நேரம், கல்லூரியின் செமஸ்டர்  தேர்வு நேரம்.  ஒவ்வொரு தேர்வுக்கு செல்லும் முன்பும், சென்டிமெண்டாக இந்த பாடலை அலற விட்டு விட்டுத்தான் பரீட்சை எழுத செல்வோம்.  இன்றும் இந்த பாடல்களை கேட்கும்பொழுது உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.   ஆனால்  அந்த படங்களில்  "சிங்கம் ஒன்று புறப்பட்டதே" பாடலை மட்டும் மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடி இருப்பார்.  ரஜினி அவர்கள் இரங்கல் செய்தியில் கூறியது போல, அவரின் வாய்ஸ் ஆக இருந்தது எஸ்பிபி அவர்கள். 

அது ஏனோ துள்ளலான ஜோடியான பாடல் என்றால் எஸ்பிபி அல்லது மனோ தான் படுவார் எனவும், சோகமான பாடல் என்றால் யேசுதாசும், இளையராஜாவும் பாடுவார்கள் என மனதில் பதியப்பட்டு இருந்தது.  
இன்று எனது கணினியில் இருந்த எனக்குப் பிடித்த 80ஸ் பாடல்களை ஒரு பார்வையிட்டேன்.  அந்த 90M கேசட்டில் இருந்தவையும்  இந்த போல்டரில் இருக்கும்.  ரஜினி, கமல் பாடல்களை விட்டுவிட்டு பார்த்தால்  மோகன், ராமராஜன் பாடல்கள் என பலருக்கும் அவர்களின் குரலுக்கு தகுந்தவாறு பாடியவராக எஸ்பிபி தான்  இருந்தார்.  அவரின் வாய்ஸ்  மாடுலேஷன், அந்தந்த நடிகரோடு பொருந்திப் போகும்படி பாட்டு இருக்கும்.   தெலுங்கு தசாவதாரம் படத்தில், அனைத்து கமலுக்கும் வித்தியாசமாக குரல் கொடுத்த பல குரல் மன்னன்.    

இளையராஜாவை கொண்டாடும்  போது  கூட இவரும்  வந்து விடுகிறார்.   இருவரும் இணைந்த பாடல்கள் தான், மழையோடு வரும் வானவில் போல அழகானவை. இறுதிக்காலத்தில் நண்பர்களுக்குள் வரும் பிணக்கு  போல இருந்தாலும், இளையராஜா அவர்கள், எஸ்பிபி மருத்துவமனையில் இருந்த போது, 'பாலு எழுந்து வா, நாம் மீண்டும் ஒரே மேடையில் கச்சேரி செய்வோம்' என்று அழைத்தார்.  எஸ்பிபி அவர்களும்  எழுந்து வருவார்.  இந்த இசை நண்பர்களை ஒரே மேடையில் பார்க்கலாம் என ஆவலாகத்தான் இருந்தோம்.  ஆனால் காலம் பாடும் நிலாவிற்கு இசைஞானியை இரங்கற்பா பாட வைத்துவிட்டது.  சும்மா வேணும் இசையை  ரசிப்பதற்காகட்டும், சோகத்தில் இருந்து மீள்வதற்காகட்டும், அவரின் குரலோடு தான் பயணத்திலும் பயணிப்போம்.  நிறைவாழ்வு.  நனி நன்றி எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களே.

Sunday, August 30, 2020

பெங்களூர்-ஈரோடு; கொரோனாவில்

ஊருக்கு வருவதென்பது எப்போதுமே ஒரு ஆவலான  விஷயம்.   ஆனால் ஆறு மாதங்கள்,  ஆகி இருந்தாலும், இம்முறை தயக்கம்.    ஈ-பாஸ் வழங்குவதில்  ஈரோடு மட்டுமே ரொம்பவும் ஸ்ட்ரிக்ட்.   மூன்று வாரங்களுக்கு முன் ஈரோட்டுக்கு போட்ட பாஸ் கிடைக்கவில்லை.  கோவை சுலபமாக கிடைக்கிறது என்றார்கள்.    சென்ற வாரம் போட்ட பாஸ் கிடைத்து விட்டது.  இருந்தும் கிளம்பும் நேரம் வரை நெருடல், தயக்கம், குழப்பம்.  விநாயகர் சதுர்த்தி அன்று  காலை கிளம்பி விட்டோம்.   ஆறு மாத காலமாக  வீட்டுக்கு அரை கிலோ மீட்டரில் இருக்கும் கடைவீதி தாண்டி எங்கும் சென்றதில்லை.   இரு முறை அருகில் உள்ள பள்ளிக்கு புத்தகம் வாங்க சென்றது மட்டுமே.  

காலை 7 மணியளவில் அந்த கடைவீதியை தாண்டியபொழுது விநாயகர் சதுர்த்திக்கான வாழைக் கன்றுகளும், பூக்களும் கடை வீதியில் வந்து இறங்கிக் கொண்டிருந்தன.  ஒரு சில மக்கள் வாழைக்கன்றையும், இலைகளையும் அந்த காலை நேரத்திலும் வாங்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.   பக்கத்தில் இருந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடலாமா வேண்டாமா? என்று யோசனை செய்து கொண்டே கடந்தேன்.  ஆறு மாதங்களுக்கு முன்பு கொரோனா லாக் டவுனுக்கு முன்பு,  போட்ட பெட்ரோல் அப்படியே இருந்தது தான் காரணம்.   இரு வாரங்களுக்கு ஒருமுறை மழை  வரும்போது கழுவதற்காகவும், பேட்டரி சார்ஜ் ஆகவும் வெளியில் நிறுத்தி கொஞ்ச நேரம் ஆன் செய்து வைத்தது மட்டுமே.        

ஹோப் பார்ம் சிக்னல்.  மெட்ரோவிற்கான வேலை அப்படியே தான் இருந்தது. பெரிய மாற்றம் தெரியவில்லை.  எனக்கு முன்பு  ஒரு நகரப்பேருந்து சிக்னலில் நின்று இருந்தது.  பெங்களூரில் பாதி எண்ணிக்கையில் நகரப் பேருந்துகள் இயங்கத் துவங்கி சில மாதங்கள் ஆகியிருக்கிறது.  'ஆமா, தினமும்  ட்ராபிக்கில் மாட்டிய போது போட்ட  பெங்களூர் டிராபிக் ஹெஸ் டேக் (#Bangaloretraffic) என்ன ஆனது?' என்று ஒரு யோசனை கூடவே ஓடியது.  கரோனா  பெங்களூர் ட்ராபிக் பிரச்சினையை சட்டென தீர்த்துள்ளது. 
காலை நேரத்திற்கே உரிய சில வாகனங்கள்.  வேடிக்கை பார்த்தவாறே அத்திப்பள்ளியை  அடைந்தேன்.   

அத்திப்பள்ளி டோல் கூட்டம் இல்லை.  சென்ற முறை வந்தபோது போட்டிருந்த பணம் டோல்கேட் அக்கவுண்டில் இருந்தது.  6 மாதம்  வராமல் எக்ஸ்பயரி ஆகிருக்குமோ என யோசிக்கையில் தானியங்கி குச்சி திறந்தது. 'அப்பாடா,  இங்க கண்ணாடியை இறக்கத் தேவைவில்லை'. 

டோல் தாண்டி  சற்று தூரத்திலேயே கர்நாடகா-தமிழ்நாடு பார்டரில்,  தமிழ்நாடு போலீஸ் நின்றுகொண்டிருந்தார்கள்.  நண்பர்களின் ஆலோசனையில் முன்புற கண்ணாடியில்  இ-பாஸ் ஒட்டியிருந்தேன். அவர்கள் ஒருவேளை இறங்கி நோட்டில் எழுதிவிட்டு போக சொல்வார்கள்  என கூறியிருந்தார்கள்.  ஆகவே,  இறங்கிச்சென்று எழுத மனதை தயாராக வைத்து இருந்தேன். கைக்கு கிளவுஸ், மாஸ்க் அணிய முற்பட்டபோது,   இ-பாஸை  பார்த்த காவல்துறை, போகுமாறு சைகையில் கூறி விட்டார்கள். 

ஒரு  நீண்ட பெருமூச்சு.  இங்கு மட்டும் தான் இறங்க வேண்டி இருக்கும் என நினைத்து இருந்ததால்.  வண்டி அதி விரைவுச் சாலையில்  வழுக்க ஆரம்பித்தது.  கூடவே வழக்கமான கார்களும், வாரயிறுதி கார்களும் லாரிகளும் இருந்தன.  

அதிகாலை எழுந்ததால் பசி எடுக்க ஆரம்பித்தது.  ஓசூருக்கும்-கிருஷ்ணகிரிக்கும்  இடையில் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தினோம்.  கொண்டு சென்ற தக்காளி சாப்பாடு எடுத்து பிரிக்க ஆரம்பித்தோம்.    ஆறு மாதங்களுக்குப் பிறகு வெளியில் அமர்ந்து சாப்பிடும் முதல் உணவு.   அந்த இடம் அவ்வளவு ரம்மியமாக இருந்தது.  வனத்துறைக்குச் சொந்தமான ஒரு காபி குடியிலும் இருந்தது.   சுற்றிலும் மரங்கள்,  செம்பருத்தி செடிகள் அதில் பெஞ்ச் என ஒரு பூங்காவை போல் அமைத்து வைத்திருந்தார்கள்.  காலை உணவை முடித்து விட்டு,  செம்பருத்தி செடியில் இரண்டு பூவைப் பறித்து உள்ளே வைத்துவிட்டு வண்டியை மீண்டும் கிளப்பினோம்.  
இந்த கொரோனா நாட்களில் எனக்கு ஒரு வித்தியாசமான பழக்கம் வந்திருந்தது. காலையில் செடியில் இருக்கும் பூவை பறித்து, ஒரு பாட்டிலில் நீரை ஊற்றி,  அதில் பூவை வைத்தும்  எனது அறையில் வைத்துவிட்டு காலை வேலையை தொடர்ந்து கொண்டிருந்தேன்.  அதன் நீட்சியாகத்தான் இந்த பூவை பறித்திருக்க வேண்டும்.  

 ஓசூர்-கிருஷ்ணகிரியின் சாலை ஒரு இறக்கமான சாலை. ஆக்சிலரேட்டரில் மிதிக்காமலே வழுக்கிக்கொண்டு  செல்லும்.  ஓசூர் கிருஷ்ணகிரி சாலையும், அந்த காலை நேரமும் எனக்கு அலாதியான ஒன்று.  இறங்கும் வேளையில் தொலை தூரத்தில் இருக்கும் மலை முகடுகள் அந்தக் காலை நேர இளம் சூரியனில் பட்டு அவ்வளவு ரம்மியமாக இருக்கும்.   

அதி வேகமாக வந்த  பட்டாம்பூச்சி ஒன்று காரை முன் கண்ணாடியைக்  கிழித்து கண்ணில் அடித்து விடுவது போல் வந்தது.  டூ  வீலரில் செல்வது போல தலையை சற்று விலக்கினேன்.  பாட்டம் பூச்சி  சற்று லாவகமாக தப்பித்து செல்கின்றது.    

தேன் உண்ட போதையோடு 
பறந்து திரிகின்றன 
அதி விரைவுச் சாலையில் 
பட்டாம்பூச்சிகள்... 

அவைகளுக்கான 
டாஸ்மாக்கை  திறந்து வைத்துள்ளது 
நட்ட நடு அரளிப் பூச் செடிகள்.. 

அதி வேகமாக வரும் வாகனத்திலிருந்து 
மிக லாவகமாக தப்பி விடுகிறது..
ஒரு சில தவிர... 

ஓட்டும்போது கவிதை போல ஏதோ  தோன்றியது.  
 
இந்த காரின் வேகத்தை எவ்வாறு அது உணர்ந்து சைட் வாங்குகின்றது? என்று யோசித்துக் கொண்டே வண்டியை விரட்டினேன்.   காலை வேளை என்பதாலோ  என்னவோ பட்டாம்பூச்சிகள் ஏகப்பட்டவை இருந்தன.  
அதேபோல இதுவரையில் வாகனங்கள் அதிகமாக செல்லாததாலோ என்னவோ சாலை நடுவில் உள்ள பூக்கள் அழகாக பூத்து குலுங்கி இருந்தன.  

கிருஷ்ணகிரியை 9 மணி அளவில் அடைந்து இருந்தோம்.  வண்டி ஆளில்லாத ஒரு சுங்கச்சாவடியின் குச்சியை ஆட்டோமேட்டிக்காக திறந்தது.   'சுங்கச் சாவடியை பணப்  பரிமாற்றம் இல்லாமல் தானியங்கி முறைக்கு சமீபத்தில் மாற்றியது,  இப்பொழுது ஒரு இந்த கொரோனா சூழ்நிலையில் எப்படி உதவி கொண்டிருக்கின்றது என பேசிக்கொண்டோம.  வெண்புரவி கிருஷ்ணகிரியை தாண்டி சென்று கொண்டிருந்தது 

தர்மபுரி மாவட்டம் நுழையும் முன் வண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக மெதுவாக நகரத் தொடங்கியது.  சற்று தொலைவில் போலீஸ் சோதனைச் சாவடி.  லாரி மற்றும் டு வீலர் போக்குவரத்து ஒரு பக்கம் போய்க் கொண்டுதான் இருந்தது.  கார் போக்குவரத்துகளை  தனி சாலையில் விட்டு சோதனை செய்து கொண்டு இருந்தார்கள்.   இங்கும்  கண்ணாடியில் இருந்த  இ-பாஸ் பார்த்தவுடன், தூரத்திலேயே போகச் செல்லுமாறு சாடை காட்டிவிட்டார்கள்.   வண்டியை மீண்டும் அழுத்தினேன்.  தர்மபுரிக்கும் சேலத்துக்குமான சாலை நான்குவழிச்சாலை மட்டுமே என்பதால் வாகனங்கள் சற்று நெருக்கமாகத்தான் சென்றது.  

 தொப்பூர் வரும் பொழுது மலை முகடுகள் கடந்த மாதங்களில் பெய்த மழையினால், பச்சை பசேலென வரவேற்றது.  எப்பொழுதும் ஏதேனும் ஒரு விபத்து நடக்கும் பகுதி.  சென்றமுறை வந்தபொழுது தொப்பூர் மலைப்பகுதி சாலையை  விரிவுபடுத்தும் வேலை நடந்துகொண்டு இருந்தது.   இந்த முறை அந்த வேலை நிறைவு பெற்றிருந்தது.   

ஓமலூர் சுங்கச்சாவடியிலும்  ஆளில்லாமல் அழகாக கடந்து சென்று கொண்டிருந்தோம்.   ஆனால் வரும் வழி எங்கும், நான்கு  அல்லது ஆறுவழிப்பாதையின்  முதல் வழி முழுக்க இருசக்கர வாகனங்களில் 3 பேர் சாதாரணமாக வந்து கொண்டேதான் இருந்தார்கள்.   அவர்கள் சில நேரங்களில் அடுத்த லானுக்கும் வந்தது, கேதக்  என இருந்தது.  பேருந்து போக்குவரத்து வழிநெடுகிலும் இல்லவே இல்லை.   ஆனால் எதிரில் மட்டும் ஒரே ஒரு பேருந்து ஓசூரை நோக்கி சென்றது.   சங்ககிரி டோல்கேட்,  லட்சுமி நகர் என பெரிதாக எந்த கெடுபிடியும் இல்லை. ஈரோடு நகர் வராமலே ஊருக்கு  சுற்றி வந்து சேர்ந்தோம்.  

 இப்படியாக இந்த கொரோனா  காலத்தில் ஈரோட்டை ஆறு மாதங்களுக்குப் பிறகு வந்தடைந்தேன்.   இதுதான் இந்தியாவில் இருக்கும் பொழுது நான் அதிக காலம் ஊருக்கு  வராமல் இருந்த  காலகட்டம்.

இந்த வீடுகளுக்குள் இருந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் ரொம்பவும் பயந்து போய் இருக்கின்றோம்.   வெளியே சுற்றிக்கொண்டு காவல்துறை மாதிரி,  மருத்துவர்களும் எவ்வளவு பேர் பம்பரமாக இதே உலகத்தில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மட்டுமல்ல தொழில் முனைவோர்களும், அரசு அலுவலகங்களும் எப்பவும் போல இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.   வரும் வழியில் பழங்கள் அங்கங்கு வைத்துக் கொண்டிருந்தார்கள்.  அதுபோலவே எந்த உணவகம் திறக்கவில்லை.   ஆனால் அங்கங்கு டீக்கடைகளில் கூட்டம் இருந்து கொண்டுதான்  இருந்தது.  ஒரு சில உணவுகள் திறந்திருந்தன.   வழக்கமாக ஒரு காபி டீ  குடிக்கவாவது நிறுத்தும் நாங்கள், எங்கும் நிறுத்தவில்லை.   எனக்குத்தெரிந்து கரோனாவிற்குப்பின்  ஓசூர்-சேலம் நெடுஞ்சாலைகளில் பல உணவகங்கள் காணாமல் போவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றது. 

 சிலவற்றை யோசிக்கும்பொழுது இந்த உலகம் மிக இயல்பாக இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றது.   அது எளியவர்களுக்கு ஆனதாக  இருக்கின்றதா?  இல்லையா? என்பது ஆகச்சிறந்த கேள்வி.   அங்கு சோதனைச் சாவடிகளில் நின்றுகொண்டிருந்த காவல்துறையை பார்க்கும்பொழுது மரியாதையும் வணக்கங்களும் தான் தோன்றுகிறது.

புதன்கிழமை சந்தை

 காரோனா அதன்போக்கில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.   பலதரப்பட்ட மக்கள் வெளியே வந்து அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.  ஊரில் திருமணங்கள், கிடா வெட்டு விசேஷங்கள் குறைந்த எண்ணிக்கையில் நிகழத் துவங்கியுள்ளது.   அரசும் லாக் டவுனை(?!) கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தி வருகிறது.  இருந்தாலும் நகரங்களில் முடிந்தளவு மக்கள் இன்னும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறோம்.  முன்புபோல இயல்பான நிலைக்கு மாறி விட்டோமா?  என்றால் இல்லவே இல்லை. 


கடந்த ஆறுமாத கால கட்டம் பல பழக்கங்களை மாற்றி உள்ளது.   அதிலும் கடைகளுக்கு சென்று மளிகை பொருட்கள், காய்கறி வாங்கும் முறை முற்றிலும் மாறி இருக்கின்றது.  இந்த நான்கைந்து  மாதங்களில் காய்கறிகளை வாங்கியவுடன் சுத்தமாக  கழுவியது போல், வேறு எப்போதும் கழுவியது உண்டா என்று யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.   காய்கறிகள் கழுவிக்கொண்டு இருக்கும்பொழுது சோகமாக  இப்படியும் நான் உளறுவது உண்டு 'காவியங்கள் உனைப் பாட காத்திருக்கும் பொழுது, காய்கறிகளை நீ கழுவினால்  என்னவாகும் மனது'  என்று.  


 

லாக்டவுன் ஆரம்பித்த புதிதில் செய்த செயல்கள் வரலாறு முக்கியம் அமைச்சரே போன்றவை.  காய்கறிகள் வாங்கி வந்தவுடன் அவற்றை வெளியே வைத்து, முக்கால் பக்கெட் தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் போட்டு தண்ணீர் கரைசல் தயாராகும்.  அதில்  எல்லா காய்கறிகளையும் கொட்டி,  கொஞ்ச நேரம் ஊற வைத்து விடுவேன்.  பின் ஒரு பெரிய துணியை விரித்து,  அதன் மேல் காய்கறிகளைக் கொட்டி நீண்ட நேரம் ஈரம் காய உலர வைத்து விடுவோம்.  அதன் பின் அதனை குளிர்சாதன பெட்டியில் ஒவ்வொறாக தனி தனி டப்பா அல்லது கவர் அல்லது பையில்  எடுத்து வைப்போம்.  இது ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாமல் நடைபெற்று வந்தது.  


 காய்கறிக்கே அப்படி என்றால் நமக்கு.   நேராக குளியல் அறைக்கு சென்று குளித்துவிட்டு, அந்த துணிமணிகளை சோப்பு போட்டு துவைத்து காயப்போட்டு விட்டுத்தான் அடுத்த வேலை.  வேறு ஏதேனும் காய்கறிகள் தவிர மளிகைப்  பொருட்கள் வாங்கி வந்தால் அதனையும் வெளியில் வைத்துவிட்டு, அதற்கும் சனிடைசர் அல்லது டெட்டால் கரைசலில் துடைத்து வைத்ததும் நடந்தது.   பின்னர் ஓரிரு நாட்கள் கழித்துத் தான் அந்தப் பொருட்களை எடுத்து உபயோகப் படுத்தி இருக்கிறோம்.    


அதுவும் லாக்டவுன் ஆரம்பித்த மார்ச் இறுதியில் இது மிகவும் அதிகம்.   அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, கடந்த இரு மாதங்களாக அதுவும்   மங்கிப்  போய்  உள்ளது.   கொரோனாவை நாம் புரிந்து கொள்ள ஆர்மபித்துவிட்டோம் எனலாம் அல்லது சோம்பேறித்தனம் என்றும் கூறலாம்.    காய்கறிகளின் மூலமாக கொரோனா  தொற்று வராது என்று நம்பிக் கொண்டும்  இருக்கலாம்.  


அதுபோல எங்கும் தொடாமல் காய்கறிகளை வாங்கி விட்டு வந்தவுடன்,  அதற்காக கொண்டு சென்ற பணத்தை அப்படியே சோப்பு நீரில் ஊறவைத்து கழுவி அதையும் காய வைத்துவிட்டு, வண்டி சாவியையும் கழுவி காய வைத்துவிட்டு பின்னர்தான் குளிக்க செல்வேன்.   கூடவே வண்டியின் கைப்பிடி, கதவு  என தொட்ட ஒவ்வொன்றையும்  துடைத்தது  வரலாற்றில் குறித்துக்கொள்ள வேண்டும்.     

முதல் ஓரிரு மாதங்கள் இப்படியாகத் தான் சென்றது.   அதன் பிறகு கிட்டத்தட்ட அனைத்து பண பரிமாற்றமும் Gpay  மற்றும் paytm க்கு மாறியிருந்தது.   இப்பொழுது பணம் அவ்வளவாக எடுத்துச் செல்வதில்லை. ஆனாலும் வெளியில் சாலையில் கடை போட்டிருக்கும் அந்த பாட்டியை பார்த்தவுடன் அவர்களிடம் தான் வாங்க தோன்றுகிறது.     



இது ஒருபுறமிருக்க எங்களது கம்யூனிட்டிக்கு நான்கு சக்கர வாகனத்தில், ஒருவர் காய்கறியை நேரடியாக கொண்டு வர ஆரம்பித்து விட்டார்.   இது இன்னும் சுலபமாகவே இருந்தது.   அவர் உள்ளே நுழைந்ததும் ஆப் அலாரம் அடிக்கும். பலர் பரபரப்பாக ஓடி வந்து முதலில் வாங்க ஆரம்பித்தார்கள்.  அந்த கூட்டம் எனக்கு சற்று பயத்தை கொடுத்ததால், கூட்டம் குறைந்த பின்னர் கடைசியாக சென்று வாங்குவதற்கு பழக்கப்படுத்திக் கொண்டேன்.    அவரிடமும் நெருக்கம் ஆகி விட்டது. 

 "என்ன சார், இன்னிக்கு ரொம்ப லேட்டா வரீங்க?"  "கீரை பிரெஷ் சார் வாங்கிக்கோங்க"   என்பார்.  கன்னடமும், தெலுங்கும் ஹிந்தியும் பேசுவார்.   இந்த மொழி சார்ந்த விஷயம் பெங்களூரில் ஆச்சர்யமான ஒன்று.  தொழில் செய்யும் பலரும் குறைந்தது மூன்று நான்கு மொழிகளாவது பேசுவார்கள்.   


சில வாரங்கள்  அவர்களின் குழந்தைகளோடு வந்தார்.   "என்ன  இன்னிக்கு உங்க பசங்கள காணோம்? " "இல்ல சார் ரொம்ப லேட் ஆகுது,   அவங்க சாப்பிட லேட் ஆகிடுது" என்றார்.   

"இன்னிக்கு  என்ன ஆச்சு ரொம்ப லேட்டா வந்துருக்கீங்க"   எனும் மற்றோரு நாளின் கேள்விக்கு  " சார், வேற வண்டி சார் இது,  என்னோட வண்டி பஞ்சர் ஆயிடுச்சு"   என்பார்.


 மற்றொரு நாள்  "இன்னிக்கி KR புரம் மார்க்கெட் போகலைங்க.." "கொரோன அந்த பக்கம் இருக்கறதால இப்படி இந்த பக்கமா போயி சிந்தாமணியில் வாங்கிட்டு வந்துட்டேன்."  


 இவ்வாறாக பலவாறான பேச்சுக்கள் அவரோடு தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.    பெரும்பாலான காய்கறிகள் அவரிடம் பேரம் பேசாமல் வாங்கிச் செல்வேன்.   ஒரு சிலவற்றை வேறோரிடத்தில் வாங்கினால் 

 குறைவாகத்தான் இருக்கும்.  அங்குள்ள ஒரு சிலர் வெளியில கம்மியா இருக்கு என பேரம் பேசுவார்கள்.   அது ஏனோ இவர்களிடம் பேரம் பேசும்  ஆட்களை பார்த்தவுடன் சற்று ஆயாசமாக தான் இருக்கின்றது.   இவர்களிடம்  பேரம் பேசி என்ன கொண்டு செல்லப் போகிறார்கள்.   என்ன நூறு ரூபாயா அதிகமாக வைத்து விடுவார்கள் ?  சூப்பர் மார்க்கெட்டிலும் அல்லது அமேசான்களில்  அதிகமாக  வைத்திருப்பது போல.   எனக்கு கண்கூடாக தெரிந்தது வெளியில் நான் சென்று வாங்கினால் ஒரு பத்து இருபது ரூபாய் குறையத்தான் செய்யும்.  பரவாயில்லை.   நம்மைத் தேடி  வருகின்றார்.   அவரிடம் வாங்குவது தானே முறையாக இருக்கும்.



எனக்கு இந்த மாதிரி வெளியில் சென்று காய்கறி வாங்கிவிட்டு வந்தவுடன் இவ்வளவு சுத்தமாக இருப்பது,  எனது தாத்தாவின் காலத்தை நினைவூட்டியது.   பள்ளி முடிந்து புதன்கிழமை என்றதும் அவ்வளவு மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கும்.  ஆயாவும், தாத்தாவும் சந்தையிலிருந்து வாங்கி வரும் தயிர்வடைக்காக.   இன்றும் அவர்கள் நினைவு தினம் கும்பிடும் வேளையிலே,  தயிர்வடை அவர்களுக்கு பிரியமானது என இலையில் படைப்பது உண்டு.  அல்லி இலையில் சுற்றி அடியில் ஒரு காகிதம் வைத்து நூலில் சுற்றப்பட்டு இருக்கும் அந்த பொட்டலம்.  அதில் குட்டி குட்டி போண்டாக்கள்.  ஒன்றை எடுத்து வாயில்  போட்டாலும், அது அப்படியே மெதுவாக தயிரின் புளிப்புச் சுவையோடு கலந்து அவ்வளவு அமிர்தமாக இருக்கும்.   இப்பொழுதும்  இதை எழுத நாவில் எச்சில் ஊறுகிறது.   


சந்தைக்கு சென்று விட்டு வந்தவுடன் நேரடியாக கிணத்தடிக்கு சென்று குளித்துவிடுவார்.   அனைத்து உடைமைகளையும் துவைத்து காயப்போட்டு விட்டுத்தான் தாத்தா உள்ளே செல்வார்.  இந்தப் பழக்கத்தை அப்பாவிடமும் கண்டதுண்டு.  புதன்கிழமை சந்தை சென்று வந்ததும் என்ன தீனி  இருக்கும் என்று பார்க்கும் நான் தான்,  அந்த காய்கறிகளை எங்கள் வீட்டில்  எடுத்து அடுக்குவது உண்டு.   அந்த வாரத்திற்கு  தேவையான காய்கறிகள் என அனைத்தையும் பரந்த மூங்கில் கூடைகளில் கூறு போட்டு வைப்பதும் உண்டு.  முக்கியமாக அப்பொழுது ஆப்பிள் மற்றும் மாதுளை கிடைப்பது அரிது.   அன்றைய வார சந்தைக்கும் இன்று வாரம் ஒருமுறை வாங்குவதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.  இடையில்தான் தினமும் ஒருமுறை காய்கறிகள் வாங்க வேண்டும் என்பது வந்திருக்கக்கூடும்  என்று நினைக்கின்றேன்.    


அதுபோலவே அவர் காலத்தில் கசங்கிய, கிழிந்த,  அழுக்குப்படிந்த ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் நோட்டுகளை கடைகளில் வாங்க மாட்டார்கள்.  அதனை சோப்பு போட்டு கழுவி, புத்தம் புது நோட்டு போல ஆக்கி செலுத்தி விடுவார்.  அவர்கள் காலத்தில், 2 ரூபாயே  சந்தை செலவுக்கு அதிகம் என்பார்.   


இன்று கொரோனா காலத்தில் சில பழைய பழக்கங்களை  நம்மை அறியாமல் நாம் ஏற்றுக்கொண்டு இருக்கிறோம்.




Saturday, August 01, 2020

ஊரும் நீரும்




இன்று நாம் குடிக்கும் நீர் RO மூலம் சுத்தப்படுத்தி சுகாதாரமான நீரை குடிக்கிறோம். கடைகளில் கேன்களில் கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட நீரை குடிக்க பயன்படுத்துகிறோம். இப்பொழுது எங்கள் ஊருக்கு சுத்திகரிக்கப்பட்ட காவிரி நீர் பல மைல் கடந்து தெருமுனைகளுக்கும், சிலரின் வீடுகளுக்குமே வருகிறது. தண்ணீரை வியாபாரமாக்கி உள்ளார்கள் எனும் சர்ச்சைக்கு செல்லவில்லை. அதேபோல காவிரியில் கலக்கும் கழிவுகளுக்கும் செல்லவில்லை. அதில் இருக்கும் சில பிரச்சினைகள் களையப்பட வேண்டும்.  அது பலரும் பேசிய விஷயம். ஆனால் இந்த சுத்தமான சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடிக்கும் இந்த சுகாதாரமான நிலைமைக்கு எப்படி வந்தோம் என்பதை அறிந்துகொள்ள இந்த கட்டுரை.


எங்கள் ஊரின் ஆரம்பப் பள்ளியின் அருகில் ஒரு அமுக்கு பைப் இருக்கும். அது தான் எங்கள் ஊருக்கு வந்த முதல் அடி பம்ப். அதுவரையில் ஊரின் மத்தியில் இருந்த கிணற்றில் இருந்து மட்டுமே தண்ணீர் சேந்தி எடுத்துச் செல்வார்கள். அந்த கிணற்றை சுற்றியும் வட்டமாக இடுப்புயர சுவர். அதன் மேல் சம இடைவெளியில் மூன்று சுவர் தடிமனுக்கு தூண்கள். அதன் மேல் மூன்று பக்கம் இரும்பில் விட்டம். ஒரு பருந்துப் பார்வை பார்த்தால் முக்கோணமாக இருக்கும். ஒவ்வொரு விட்டத்தின் நடுவில் உருளை இருக்கும். அதில் கயிறு போட்டு பக்கெட் ஒன்றை கட்டி, அதனைக் கிணற்றில் விட்டு தண்ணீர் இறைப்பார்கள். சிலர் 'அட பாக்கெட் பக்கெட்டா ஊத்தி என்னைக்கு நாம்பறது" என குடங்களையே கயிற்றில் கட்டி ஒரே இழுப்பில் தண்ணீர் கிணற்றில் இருந்து எடுத்துவிடுவார்கள். ஊர்க்காரர்கள் புரளி பேசும் இடம். சைட் அடிக்க கூடுமிடமாகவும் இருக்கும். இது தான் ஒட்டுமொத்த ஊரின் நல்ல குடிநீருக்கான மையம்.


அப்பாவின் காலத்தில் அந்த ஊர்க்கிணறும் இல்லை. ஊர்ப் பெரியவர்களின் வீடுகளில் கிணறு இருக்குமாம். அதுவும் மூன்றே மூன்று.  அதில் பள்ளிக்கு செல்லும்முன் தண்ணீர் பல நடை மோந்து ஊற்றி வைக்க வேண்டும். பெரும்பாலும் அந்த கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டால், காட்டுக்குள் இருக்கும் செம்மண்குழி கிணற்றில் எடுப்பார்களாம். 


 அடி பம்ப் வந்தவுடன் நல்ல குடிநீருக்கான மையமாக இந்த பம்ப் மாறியிருந்தது. சைக்கிள்களில் இருபுறமும் குடங்களைக் கட்டிக்கொண்டு பலரும் எடுத்துச் செல்வார்கள். நாங்கள் இரண்டு பேர் சேர்ந்து இதனை வேகமாக அழுத்துவது ஒரு விளையாட்டு. அந்த பம்பை அடைத்து வேக வேகமாக அழுத்தி சுற்றிலும் தண்ணீரை பீச்சி அடித்து ட்ரவுசர் சட்டைகளை நனைத்து ஜாலியாக நடைபெறும் தினசரி சம்பவம். அதிலும் யாரும் இல்லாதபோது நாமே அடித்துவிட்டு வேகமாக ஓடிவந்து தண்ணீரைக் குடிக்க வேண்டும். 


தென்னை மரங்களை சுற்றி ஒரு பாத்தி கட்டி அதனை நிரப்புவது தான் கடைசி பிரிவேளையில் நடக்கும்.  கிட்டத்தட்ட அதில் தண்ணீர் நிரம்பும்  வரை நீர் எடுத்திருப்போம்.  பள்ளி சுற்றிலும் இருக்கும்  வேலிக்கும் தண்ணீரை ஊற்றவேண்டும். பூந்தோட்ட காவல்காரன் வந்த சமயம். அந்தோணி வண்டி என்று இரு நண்பர்கள் தண்ணீரை வேகமாக எடுத்து வருவார்கள். அடி பைப்பிலிருந்து சிறிய மேடு ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக ஏறி பள்ளிக்கு கொண்டு சென்று மரங்களுக்கு ஊற்ற வேண்டும். இன்று பள்ளி சுற்றுப்புற சுவரோடு, கான்க்ரீட் காட்டிடத்துடன் அழகாக உள்ளது.


அந்த பைப்பில் தண்ணீர் வரும் தலைகீழான L வடிவ பைப்பில் பாக்கெட் மாட்டி தண்ணீர் பிடிப்போம்.  ஒருமுறை பிடிக்கும்பொழுது கீழே விழுந்து பெருவிரல் நசுங்கி,  பக்கத்தில் இருந்த அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் தான் கட்டு போட்டுவிட்டு இருந்தார்கள்.  இப்பொழுது அந்த பம்பில் இருந்து மோட்டர் வைத்து மேல்நிலைத்தொட்டி கட்டிவிட்டார்கள். அதன் வழியாக கிட்டத்தட்ட ஒவ்வொரு வீதிக்கும் தண்ணீர் வரும். பத்தடி தொலைவில் சென்று பிடித்துக்கொள்ளலாம்.  அதன் அருகில் காவேரி நீர் பைப்பும் இருக்கும்.



இன்று போர் போட்டு் பராமரிப்பு இல்லாமல் உள்ள ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுந்து தத்தளிப்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. ஆனால் இந்த அடி பம்புகளின் வரலாறு எத்தனை நெடியது. நீர் சம்பந்தமான நோய்களை தீர்த்ததில் பெரும் பங்கு வகித்துள்ளது.



Guinea Worm Water Based Disease என்ற ஒரு நோயை உலகம் முழுவதும் தீர்க்க உலக சுகாதார நிறுவனம் நிதியை ஒதுக்குகிறது. 1980 இந்த திட்டம் ஒருங்கிணைத்த இந்தியாவில் ஆரம்பிக்கிறது. பொது சுகாதாரத்தில் முதல் இடத்தில் இருந்த தமிழகத்தில் நாலே வருடங்களில், நாம் சாதித்ததை ராஜஸ்தானால் 16 வருடங்கள் கழித்து தான் சாதிக்க முடிந்துள்ளது.


லிங்க் https://ncdc.gov.in/index1.php?lang=1&level=1&sublinkid=142&lid=73


இது என்ன நோய்? சேந்து கிணறு அமைப்புக்கு முன்பாக வெட்டப்பட்ட கிணறுகளில் படி வைத்து குடிநீரை எடுத்து வந்துள்ளார்கள். இன்றும் ராஜஸ்தானில் படிவைத்த பிரமாண்ட கிணறுகள் ஒரு வரலாற்று ஆவணம் போல அழகாக இருக்கும்.



குடிக்கும் நீரில் நரம்பு சிலந்தி நோய் இருப்பவர்கள் மூலம் அந்த  லார்வா குடிநீரில் கலந்துவிடும். L3 லார்வா, இரைப்பையினுள் செல்லுதல், காலில் இருக்கும் புழு நீரினுள் L1 லார்வாக்களை வெளியிடுதல். இவை இரண்டையும் தடுத்தாலே நரம்பு சிலந்தி புழு பரவ முடியாது. அதற்கு என்ன செய்ய வேண்டும்?  குடிக்கும் நீரில் நரம்பு சிலந்தியின் லார்வா செல்லுவதை தடுக்க ஆழ் துளை கிணறுகளை அமைத்து கைபம்புகளை அமைத்தல் தான். அதன்பின் தண்ணீரை காய்ச்சி குடித்தல்.



இந்த பிரச்சினை தமிழ் நாட்டில் பெரும்பாலும் தஞ்சை கும்பகோணம் பகுதிகளில் இருந்துள்ளது. குளம் அதிகமாக இருந்த இடங்கள் அவை.




நாடு முழுவதும் சுகாதாரத்திற்கான சிந்தனை மாற்றத்தை அளித்த நிகழ்வு "நரம்பு சிலந்தி ஒழிப்பு திட்டம்" தான். இதற்கான முக்கிய விஷயமாக கருதுவது நமது அரசு ஆரம்ப சுகாதார அமைப்பின் கட்டுமானம். அதனால் தான் நான்கு வருடத்தில் அதனை முடிக்க முடிந்துள்ளது.


இந்த நோய் புத்தகத்தில் கூறப்பட்ட ஒன்று,  அது தவிர நீரினால் பரவும் காலரா, டயறியா போன்றவை எல்லாம் இன்று  இல்லை. இன்று  கொரோனாவுக்கு போராடும் நிலையில் அதற்கான கட்டமைப்பு எப்படி உள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்


நான் அங்கு படித்துக் கொண்டு இருந்த போதுதான் , பள்ளியை ஒட்டி அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் ஒன்றை ஆரம்பித்தார்கள். புதிதாய் ஒரு கட்டிடம் இன்றும் அன்று காலை திறப்பு விழாவில் போது இட்ட கேசரி, தக்காளி சோறும் தயிர் வெங்காயமும் நினைவில் உள்ளது. அப்பொழுதெல்லாம் காலை நடக்கும் புதுமனை புகுவிழாக்களில் இந்த மெனுதான். சற்று வசதி உள்ளவர்கள் மெதுவடையும் போடுவார்கள்.


ஆரம்ப காலத்தில் இவை வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வந்து கொண்டுள்ளது. சில பல சமூகப் பிரச்சினைகளும் இந்த மருத்துவமனையில் தங்கி வேலை பார்க்கத்தவர்களிடம் நடந்தும் உள்ளது அதெல்லாம் வேறு விசயம். இந்த ஆரம்ப துணை சுகாதார நிலையம் கிட்டத்தட்ட 5000 மக்களுக்கானதாக இருந்துள்ளது. இவை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களுடன் இணைக்கப்பட்டு இருக்கும். இவர்களின் முக்கிய வேலை வருமுன் காப்போம் என்பது. அதாவது இவர்களின் பணி அரசின் சுகாதார திட்டங்களை கடைக்கோடி கிராமம் வரை சேர்ப்பது . குடும்ப நலம், தடுப்பூசி, தொழுநோய் தடுப்பு, பள்ளி சிறுவர்களின் நலம் , தொற்று பரவாமல் தடுப்பது என்கிறார் இந்த அமைப்பில் தனது பணியை ஆரம்பித்து அதில் ஓய்வு பெற்ற என் பக்கத்துக்கு ஊர் மாமா.   அவரிடம் பேசியபோது இந்த சுகாதார அமைப்பை உருவாக்க அவர்களின் போராட்டங்களை கூறினார்



இவர்கள் டீம் தான் பள்ளிக்கு அம்மை தடுப்பூசி போட வருவார்கள். இவர்களின் ஜீப் வந்ததும், 'அய்யயோ இன்னிக்கு ஊசி போட்டு் விடுவார்களோ' என பயந்ததும் உண்டு. ஒரு வழியாக அழுது  புரண்டு போட்டுக்கொண்டால்  ஊசி போட்ட இடம் வீங்கிக் கொள்ளும், அன்று வெந்நீர் ஒத்தடம் கொடுப்பார்கள்.



வந்ததும் காப்போம் என்பது அரசு மருத்துவமனையின் கடமை. ஆரம்ப துணை சுகாதார நிலையித்தின் வேலை வருமுன் காப்பது.  அப்பொழுதெல்லாம களத்தில் அதிகமாக வேலை செய்தார்களாம். இப்பொழுது வேலை செய்ததை எழுதி வைப்பதில் உள்ளதாக கூறினார். 

அந்த ஆரம்ப துணை சுகாதார நிலையங்கள் 85களில்  கட்ட  ஊரில் பேச்சுவார்த்தை நடத்தி, இடம் வாங்கி கட்டி உள்ளார்கள்.  இந்த அமைப்பு வியப்பில் ஆழ்த்திக்கொண்டு உள்ளது.  குடிநீர் சுகாதாரத்தில் எங்கிருந்து எங்கு வந்துள்ளோம் என்பதுவும் சாதனை தான்.   



Emotional intelligence கற்போம்...

சென்ற 20ம் நூற்றாண்டு வரை IQ என்று சொல்லக்கூடிய intelligence quotient (நுண்ணறிவு)  மூளை சார்ந்த, திறன் சார்ந்த விஷயங்களுக்கும் மட்டும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு வந்தது.  அதன் அடிப்படையில் தான் இந்த ரேங்க் சிஸ்டம் உருவாக்கப்பட்டு இருக்கலாம்.  நாம் இன்னும் இதனை இருக்கப் பற்றிக்கொண்டு இருக்க, இன்று பல வளர்ந்த நாடுகளும் இந்த ரேங்கிங் முறையில் இருந்து வெளியேறி வருகிறார்கள் என்பது வேறு விஷயம். 

 Emotional intelligence - உணர்வுசார் நுண்ணறிவு  இந்த நூற்றாண்டின்  கண்டுபிடிப்பு.  உலக பொருளாதார நிறுவனம் வரும் காலங்களில், ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒரு EI  ஸ்பெசலிஸ்ட்டின் தேவை கண்டிப்பாக  இருக்கலாம் என்கிறது.  கூடவே இப்பொழுது உயர் பதவியில் இருப்பவர்கள் EI அதிகம் உள்ளவர்கள் எனபதை கோடிட்டுக் காட்டுகிறது.   IQ  நிறைய இருப்பர்களாக இருந்தாலும், EQ  மட்டுமே அவர்களை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்று அமர்த்தி வைக்கிறதாம்.    IQ  மட்டுமே இருப்பவர்கள் ஒரு கட்டத்தில் தேங்கி விடுகிறார்கள். 


"எப்பொழுதெல்லாம் உணர்ச்சி வயப்படுகிறோமோ, அப்பொழுது நமது IQ ஒரு முட்டுச் சந்தில் மாட்டிக்கொள்ளும்" என்கிறார் Daniel  Goleman.   இவர் தான் உணர்வுசார் நுண்ணறிவின் தந்தை.   இவரது Emotional intelligence புத்தகம் 1995ல் வெளிவந்துள்ளது. 

உணர்வுசார் நுண்ணறிவு எந்த கால கட்டத்திலும், வயதிலும் அதனை வளர்த்துக்கொள்ளலாம்.  வேறு எந்தப் பின்னணியும் தேவை இல்லை.  EIக்காக  ஐந்து முக்கியக் குறிப்புகளை கூறுகிறார்.   இவை நமக்கு வேறு விதமான பெயர்களில், வேறு வேறு தளங்களில் சொல்லப்பட்டும் இருக்கலாம்

Self-awareness - நம்மை அறிந்து கொள்வது - நான் யார்
Self-regulation - நம்மை முறைப்படுத்திக் கொள்வது - ஒழுக்கம்
Motivation - நமக்கான உந்து சக்தி - முனைப்பு
Empathy -  மற்றவர்களைப் புரிந்து கொள்வது  - 'அனுசரிச்சு போ'
Social skills - மற்றவர்களிடம் எப்படி உரையாடுகிறோம் என்பது - 'இனிய உளவாக இன்னாத'

இப்பொழுது இதனைப்பற்றி விளக்கி கூறப்போவதில்லை. 

IQவை அப்படியே ப்ரோக்ராம் செய்தால் அது "ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்" (AI).   பல  ரோபோக்களை உருவாக்கி உலவவிட முடியும்.  மனிதன் செய்ய முடியாதவற்றையும் ரோபோக்கள் கனகச்சிதமாக செய்யும்.   IQ வழி வந்த ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனும் AI கும்,  IQ  மட்டுமே நிறைந்த புத்திகூர்மை அதிகம் வாய்ந்த மனிதர்களுக்கும் என்ன வித்யாசம்?     இங்கே தான் இந்த 'உணர்வு சார்ந்த நுண்ணறிவின்' தேவை மனிதனை இயல்பான, எதார்த்தமான மனிதன் ஆக்குகிறது.  ரோபோவிடம் இருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டுவது உணர்வு தான்.

AI தற்போதைய நிலையில் திரும்ப திரும்ப மனிதன் செய்யும் வேலைகளை செய்வதற்கு மட்டுமே உபயோகப்படுத்துகிறார்கள்.   IBM’s Watson  ரோபோ இப்பொழுதே மருத்துவ துறையில் பல சிக்கலான பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டு இருக்கிறது.    ரோபோ திரைப்படத்தில் சிட்டி ரோபோ காதல் வயப்படும்.  அழகாக ஐஸ்வர்யா ராயிடம் பூ கொடுத்து காதல் செய்யும்.  மனிதன் செய்யும் தவறை இது மிக நேர்த்தியாக தவறில்லாமல் செய்யும்.      இந்த உணர்வு பூர்வமான மனிதன் போன்றவரைத்தான் ஐஸ்வர்யா ராயும் விரும்புவார். எனினும் ரோபோ என கூறி ரோபோவை கைவிட்டுவிடுவார்.  இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ரோபோக்கள், உணர்வுப்பூர்வமானதாக இல்லாவிடினும், வருங்காலத்தில் ரோபோவின் வில்லனைப்போல அதுவும் யோசிக்க ஆரம்பிக்கலாம். 

படையப்பாவில்  ரஜினிகாந்த் , சௌந்தர்யாவிடம் காதலை கூற செல்வார்.  சௌந்தர்யாவை  பார்த்து படபடப்பாக உளறுவார்.   அதுதான் ஒரு சாதாரண மனிதர் செய்வது.  அதே படத்தில் ரஜினி, ரம்யாகிருஷ்ணனிடம் பஞ்ச் பேசும்போது படபடப்பு  இல்லாமல் தெளிவாக பேசுவார்.   இது உணர்வினை முறைப்படுத்திய மனிதன் செய்வது.

திரைப்படங்ககள் என்றாலும், இந்த ஹீரோக்களின் பிம்பங்கள் கட்டமைக்கப்படுவது உணர்வுகளின் மீது.   அவர் கோபம் தெறிக்க பேசும் போது நாமும் கோபம் அடைய நேரிடும், அவர்கள் காமெடி செய்யும்போது நாமும்.   அந்த உணர்வுகளைக் பார்த்துக்கொண்டு இருக்கும், மனிதர்களிடம் கடத்துவது தான் இயக்குனரின் வெற்றி.   அந்த உணர்வுகளுக்கு ஆட்படுபவர்கள் அதற்கான செயல்களில் இறங்குகிறார்கள்.     

சற்று நமது செய்தி தொலைக்காட்சிகளின் விவாதங்களைப் பார்த்தால் சில விஷயம் புரியும்.  சிலர் ஆணித்தரமாக கருத்தை ஒட்டி மட்டுமே பேசுவார்கள்.   எதிர்தரப்பு என்ன மாதிரியான கேள்வியை எழுப்பினாலும், கோபம் வரவே வராது.   பொறுமையாக நிதானமாக பேசுவார்கள்.   இன்னும் சிலர் ஒரு சிறிய கேள்விக்கே முதல்வன் திரைப்படத்தில் வரும் ரகுவரன்-அர்ஜுன் பேட்டி காட்சி போல கோபம் அடைந்து விடுவார்கள்.   இங்கு நான் உணர்வினை பற்றி மட்டுமே பேசுகிறேன்.  அங்கு பேசப்படும் தகவல்களின் உண்மைத்தன்மையை அல்ல.  நிறுத்தி நிதானமாக பேசுபர்கள் பொய்த்தகவலையும் கூறலாம், கோபமாக பேசுபவர்கள் உண்மையாகவும்  இருக்கலாம்.

ஒரு மிகச் சாதாரணமான சொல் நம்மை எவ்வளவு காயப்படுத்தி விடுகிறது.  அல்லது ஒரு தவறான சொல் பிரயோகம், நம்மை எவ்வளவு சிக்கலுக்கு உள்ளாக்கி  விடுகிறது.   அந்த சொல் அதற்கான எதிர்வினை இவை யாவும் என்ன செய்யும் என்பதை இன்றைய சமூக வலைத்தளங்களில் காணலாம்.     ஒரு பைசாவுக்கு உபயோகமில்லாதவை ட்ரெண்டிங் அடிக்கும், வனிதா-லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சண்டைகள், மகேஷ் பாபு பிறந்தநாள், அஜீத் விஜய் படத்தின் வசூல்,  போன்ற விஷயங்கள்.     அது ஒருவகையில் அதற்குள் நம்மை இழுத்து மன அழுத்தத்தை கூட்டி தேவையில்லாத பிரச்சனையை உண்டாக்கி விடுகிறது. நல்ல விஷயங்களுக்காக வரும் ட்ரெண்டிங் கூட அதில் நாம் பங்கேற்றுவிட்டு நமது வேலையைப் பார்க்க சென்றுவிடலாம்.   ஆனால் அதற்குள்ளேயே முழ்கி கிடப்பது தான் பிரச்சினை.   அதுவும் சில நேரங்களில் சில சம்பவங்கள் நடந்து முடிந்தவுடன் சிலர் தீர்ப்பு எழுதி விடுவதும் உண்டு.

இந்த உணர்வுகள் நம்மை எதுவும் செய்யாமல் இருக்க, அதே மனநிலையில் சுற்றிக்கொண்டு இல்லாமல் இருக்க என்ன செய்யலாம்?

லண்டனில் இருந்தபோது செமினாரில் கலந்துகொள்ள நேரிட்டது.  அந்த செமினாரை  மில்லியனர் மாங்க்  என்று சொல்லக்கூடிய Eric Ho  என்பவர் நடத்தினார்.    ஒரு மணி நேரம் தான் பயிற்சி.  ஆரம்பித்தவுடன்  "டேக் எ டீப் ப்ரீத்" என்றார்.  மூச்சை இழுத்ததும் சில நொடிகளுக்குப்பின் "அவுட்" என்றார்.      அவருடைய பேச்சுக்கு இடையே,  பத்து நிமிடங்களுக்கு  ஒருமுறை பங்குபெற்றவர்களை செய்ய சொல்லிக்கொண்டே இருந்தார்.   அதேபோல ஒவ்வொருவரும் மூச்சை இழுத்து வெளியே விட்டனர்.   அதற்கான விளக்கத்தையும்  கொடுத்தார்.  "நீங்கள் ஒவ்வொரு முறை மூச்சை வேகமாக இழுத்து வெளியில் விடும்போது,  உங்கள் மூளையில்  இருக்கும் மேகம் விலகி விடுகிறது. சிந்தனையை ஒருமுகப் படுத்த முடியும்." என்றார்   அதாவது மொக்கத்தனமான சிந்தனைகள் வெளியேறும். வேறு ஒரு பக்கம் நமது மைண்ட் டீ குடிக்கச் சென்றிருந்தால் தரதரவென கட்டி இழுத்து அந்த இடத்திற்கு கொண்டு வரமுடியும் என்கிறார்.  அது இயல்பாகவே  நமக்கு நடக்கும்.  நாம் ஒரு சவாலான வேலையை  செய்து முடித்து பெருமூச்சு விடுவது ஒருவித ஆசுவாசம் அளிக்கும். 

தொடர்ந்து படிக்கும் முன்பு இப்ப நீங்க ஒருமுறை செய்து பாருங்கள்.   எப்படி உணர்கிறீர்கள் ?

அதேபோல இன்னுமொரு கார்ப்பரேட் பயிற்சின் போதும் மூச்சு பயிற்சியை வலியுறுத்தினார்கள்.   தினமும் மூன்றுமுறை சில நிமிடங்கள் மூச்சை இழுத்து விட கூறினார்கள்.  காலையில் அலுவலகம் சென்றதும் ஒருமுறை.  ட்ராபிக்கிலிருந்து, பேருந்து நெரிசல்களில் சிக்கியும்  ஒருவழியாக அலுவலகம் சென்று  அவரவர் இருக்கையில் அமரும்போது இயல்பாகவே ஒரு பெருமூச்சு விட்டு நம்மை இலகுவாக்கிக் கொள்வோம்.  இதனை மூச்சு பயிற்சியாக மாற்றச் சொல்கிறார்கள்.    மறுமுறை அலுவலகம் முடிந்து வீடு சென்றதும் செய்யவேண்டும். அலுவலக டென்ஷன்களை வீடுகளில் காட்டாமல் இருப்பதற்கு இது உதவும்.   தூங்கச் செல்லும்போது மூன்றாம் முறை.   அன்றைய நாள் எப்படியாக கழிந்திருந்தாலும் நிம்மதியான உறக்கம் அடைவதற்கு.  இன்றைய கரனோகாலத்தில் WFH  இருப்பதில் முதல் இரண்டும் நடக்க சாத்தியமில்லை.  ஆனால் மூச்சு பயிற்சி  உதவும். 

இந்த மூச்சு பயிற்சிகளை  எனக்கென்னவோ நமது ஊரில் சம்மனங்கால் போட்டு, கை விரல்களை அபிநயம் பிடித்து யோகா, ப்ராணாயாயம்  என்ற ஒரு வட்டத்திற்குள் அடக்கி வைத்துளார்கள் என நினைக்கிறேன்.    மேலே சொன்ன மூச்சுப்பயிற்சிகள் சாதாரணமாக உட்கார்ந்து கொண்டு செய்தது தான்.   டேனியல் கோல்மேன் மூச்சுப்பயிற்சி என்பது நம்மை முறைப்படுத்திக் கொள்வது என வலியுறுத்துகிறார். மேற்கத்திய நாடுகள் இந்த பர்னிச்சரை அழகாக உடைத்து மக்களிடம் சேர்த்து உள்ளார்கள்.     

அடுத்தாக ஒரு நடை வெளியே உலவி வரலாம்.  வெளியில் இயற்கையும், மனிதர்களும்  கற்றுக்கொடுக்கும் பாடம் அலாதியானது.

அடுத்தாதாக multi-tasking  அவ்வளவாக வேலை  செய்வதில்லை என்கிறார்.  ஒரு வேலையின்போது இடையில் நிறுத்தி fb பக்கம் அல்லது ஒரு whatsapp பார்ப்பது அந்த வேலையை செய்வதில் தொடர்ந்து இருக்கும் ஈடுபாட்டை  குறைக்கிறதாம்.     

மற்றவர்களிடம் Have a nice day ன்னு சொல்றதுக்கு பதிலா,  Make your day ன்னு சொல்ல சொல்கிறார்.
அதையே நமக்கு நாமே சொல்லிக்கொண்டால்
"Make my day".
கிட்டத்தட்ட அஜீத் படத்தில் வரும் ஒரு பஞ்ச்..."ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிசமும் நானா செதுக்குனது...". 
நாமே செதுக்குவோம் நம்முடைய தினத்தை...
Make your day

இன்றைய கொரோன காலம் பல திருப்பங்களை நிகழ்த்திக்கொண்டு உள்ளது.  அதில் ஒன்று வேகமாக மனிதர்களை தொழில்நுட்பத்தின் பக்கமாக திருப்பி விட்டுள்ளது.   நிறுவனத்திற்கு வரும் காலத்தில் AI  மற்றும் EI இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல தேவை.     AI  போன்ற அட்வான்ஸஸ்ட் டெக்னாலஜி புகுத்தாத நிறுவனம் வளர முடியாது.  இதேபோல வழி  நடத்துபவர்கள் EI அதிகம் இருப்பவராக இருந்தால் மட்டுமே வளர்ச்சி பாதையில் செல்ல முடியும்.  இது நமக்கும்  மனிதர்களுக்கும் பொருந்தும்.  EI கற்போம்.

Tuesday, June 30, 2020

நூறு நாள் கரோனா



நூறு நாள் ஓட்டம் ஆரம்பித்தள்ள தற்போதைய நிலையில், 100 நாட்கள் லாக் டவுன் முடிந்துள்ளது. தினப்படி தமிழக கரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் இரண்டு இலக்கத்தில் இருந்து மூன்று இலக்கமாக மாறிய பொழுது நமக்கு கரோனாவின் மீதான பயம் போயிருக்க கூடும். இந்த மாத ஆரம்பத்தில் இலக்கம் 4 ஆக மாறி அதிலும் கடந்த சில நாட்களாக 3000 தொட்டு உள்ளது. மற்ற நாடுகளில் உச்சத்தை தொட்டு இறங்குமுகம் கண்டுவிட்டது. ஆனால் இந்தியாவில், குறிப்பாக தற்போது, புதிய புதிய உச்சங்களை தொட்டுக் கொண்டே இருக்கின்றது.



ஆனாலும் குறிப்பிட்ட சில பகுதிகள் தவிர, பல இடங்கள் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளது போல ஒரு தோற்றம் உள்ளது. கிரகணத்தன்று கூட மக்கள் வெளியில் வராமல் முடங்கி இருந்தார்கள். கை கழுவினால் அல்லது மாஸ்க் மட்டும் அணிந்திருந்தால் போதுமானது என்ற ஒரு மூடநம்பிக்கையும் பரவி வருகின்றது. சிலர் அது பற்றியும் கவலைப்படுவதில்லை.





இங்கும் பெங்களூரில் கடந்த சில வாரங்களாக, குறிப்பாக இந்த மாதத்தில் அனைத்து கடைகளும் தாராளமாக திறந்தே உள்ளது. ஏதோ கண்டிப்பாக தேவை என வார நாளில் சென்றிருந்த போதும் கடைகள் அனைத்தும் வழக்கம்போல திறந்தே உள்ளது. கடைவீதி அதற்கான நெரிசலோடு, பரபரப்பாக உள்ளது. பெங்களூரில் 30% மக்களோடு சில அலுவலகம் இயங்க ஆரம்பித்துவிட்டது. நண்பர்கள் செல்ல ஆரம்பித்து உள்ளார்கள். போக்குவரத்து சொற்பமாக உள்ளதாக சென்று வருபவர்கள் கூறுகிறார்கள். நெரிசலும் இல்லை.


இரு வாரங்களுக்கு முன் எந்த உணவகமும் திறக்கப்படவில்லை. இந்த வாரங்களில் அதுவும் திறக்கப்பட்டுள்ளது. நேற்று பலர் வழக்கம்போல அமர்ந்து உணவு உண்டு கொண்டு தான் இருந்தனர்.





இப்படித்தான், சில வாரங்களுக்கு முன் மகளின் பள்ளி கட்டணத்தை கட்டுமாறு தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள். தள்ளித் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தோம். 'வேறு மாற்று வழி என்ன இருக்கிறது' என்பது தெரியாத ஒரே காரணத்தினால் கட்டணத்தைச் செலுத்தி புத்தகங்களை வாங்க முடிவெடுத்தோம். பள்ளி எப்போது திறக்கும் என்பது கேள்விக்குறி. செப்டம்பரா, டிசம்பரா அல்லது இந்த கல்வி வருடம் முழுவதும் இப்படியாக சென்று விடுமா? இன்றைய நிலையில் யாரும் விடை சொல்ல முடியாது.





இரண்டு கிலோ மீட்டர்தான் பள்ளி. இருந்தாலும் கார் எடுத்து பல மாதங்கள் ஆகிவிட்டது என அதில் செல்ல முடிவெடுத்தேன். பள்ளியின் பெருங்கதவின் முன் சீருடை மட்டும் அணிந்த காவலாளி. அவருக்கு முகக் கவசம் இல்லை. 'பீவர் கண்' எடுத்து நெற்றியில் வைத்தார். அதை பக்கத்தில் கொண்டு வரும் பொழுது நமக்கு சற்று அச்சமாகத்தான் இருந்தது. வாகன நிறுத்துமிடத்தில் கணிசமாக கார்கள். காருக்கும் சோசியல் டிஸ்டன்ஸ் கொடுத்து நிறுத்திவிட்டு, முகக்கவசம் சரி செய்துகொண்டு இறங்கி வெளியேறினேன். பிரமாண்டமான போர்டிகோவின் முன்பு ஒரு காவலாளி நின்று காரோனா தீர்த்தம் வழங்கிக் கொண்டிருந்தார் (நன்றி ஜெகதீசன்). அதையும் வாங்கி வழக்கம்போல கைகளைக் குடிக்கச் சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தேன். வரவேற்பறையில் ஒரு பெண் அனாவசியமாக உட்கார்ந்து இருந்தார். முக கவசத்தை கவனமாக டேபிளுக்கு போட்டு இருந்தார். ஆங்காங்கு மைதானத்தில் பெற்றோர்கள் ஜோடியாக. குழந்தைகள், அவர்கள் போக்கில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். வாராவாரம் சுற்றிய கால்கள் சும்மா இருக்காது.





உள்ளே சென்று வராண்டாவில் சுற்றும் முற்றும் பார்த்த படியே நடந்து பணம் கட்டும் இடம் வந்தடைத்தேன். ஜூன் முதல் வாரங்களில் பள்ளிகளில் இருக்கும் பட்டாம் பூச்சிகளின் ஆட்டமும், ஓட்டமும் இல்லை. க்யா, முயா என்ற கோழிக்குஞ்சு சத்தமும் இல்லை. கோடை கால விடுமுறையில் பள்ளி இருப்பது போல அங்கங்கு சிலர். எனக்கும் முன்பு இருந்தவர் சென்றதும் காசாளரரின் முன்பு நின்றேன. பணம் கட்டிய புகைப்படத்தை மொபைலின் வழி காண்பித்து விட்டு எங்கும் தொடாமல் நின்று கொண்டிருந்தேன். பக்கத்து 'கவுண்டரில் ஒருவர் கண்ணாடிக்கு முன்பு படுத்துக்கொண்டு, உள்ளிருந்த காசாளரிடம் கடலை போட்டுக் கொண்டிருக்கிறார். எனக்கு முன் இருந்த காசாளரும் வாய்க்கூட்டை கீழே டேபிளின் மீது போட்டிருந்தார். இந்த வருடம் இன்னும் ஒரு மொழிப்பாடம் சேர்த்து கூடுதலாக பணம் கேட்டார்கள். 'அடேய்களா, பள்ளியே நடக்குமான்னு தெரியலை, இதுல இது வேறயா' என மைண்ட் வாய்ஸை முழுங்கிக்கொண்டு


"Paytm, Google pay இல்லைங்களா?"


"இல்லை" என்றார். இப்பொழுது ATM கார்டு உபயோகித்து தான் ஆகவேண்டும். ஒரே ஒரு விரலை மட்டும் வைத்து அழுத்தி, அந்த கார்டை பத்திரமாக வேறு பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன்.





அவர் கொடுத்த 'பில்லை' வாங்கி பட்டும் படாமல் அதனை எடுத்துக்கொண்டு, புத்தகம் வழங்கும் இடத்திற்கு மேலே ஏறினேன். அங்கு இருந்த பணியாளர்கள் மட்டும் கையுறையும், முக கவசமும் போட்டிருந்தார்கள். புத்தகம் நோட்டு மூட்டைகளைத் தூக்க முடியாமல் இறங்கி, மீண்டும் கார் எடுத்தேன். ஒரு சற்று சுற்றிவிட்டு செல்லலாம் என்று வேறு பாதையில் வண்டியை திருப்பினேன். பக்கத்து ஊரில் கொரோன உள்ளது என்று அந்த ஊருக்கு மட்டும் தடுப்புக் கட்டைகளை வைத்து முடக்கி இருந்தனர். அந்த வழியாக எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. அந்த நுழைவாயிலில் 2 காவல் அதிகாரிகள் உட்கார்ந்திருந்தார்கள். 24 மணி நேரமும் இவர்கள் இப்படித்தான் இருப்பார்களா? காவல் அதிகாரிகளுக்கான பணி அழுத்தம் இங்கு பேச வேண்டியுள்ளது. இதற்காக லாக்கப் கொலைகளை ஒத்துக்கொள்ள முடியாது.





கரோனா பெங்களூரில் ஆரம்பித்த மார்ச் முதல் வாரத்தில் இந்த வருடம் கோடைவிடுமுறை நமக்கு இல்லை என்று தான் நினைத்திருந்தேன். எழுதி இருந்தேன். உலகம் முழுவதும் இணைந்து ஒத்துழைத்து தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தால், ஜூலை வாக்கில் அதனை முற்றிலுமாக ஒழித்துவிட முடியும் என்று அப்பொழுதே சீனாவில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறியிருந்தார்கள். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பு ஊசி இப்பொழுது மனிதர்களுக்கான சோதனையில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா, மற்றும் பிரேசிலில் சோதனைக்கு தயார் படுத்துகின்றனர். இந்த வருட இறுதியில் தான் கிடைக்கும் என தெரிவிக்கிறார்கள்.





சென்ற வாரத்தில் லண்டனில் இருக்கும் சக பணியளரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அங்கும் இங்கு நடப்பது போலவே 'மக்களுக்கு கரோனா பற்றிய பயம் இருப்பது போல தெரியவில்லை' என்றார். Pornmoutth என்ற பீச் பகுதியில் அவரது வீடு இருப்பதாக கூறினார். கடந்த மே இறுதியில் நீண்ட வார இறுதி கிடைக்கும். வழக்கம் போல ஒவ்வொரு வருடமும் கூடும் கூட்டம், இந்த வருடமும் குழுமி இருந்தது என்றார். இத்தனைக்கும் அப்பொழுது பொது கழிப்பறைகள் போன்றவை அங்கு திறக்கப்படவில்லை. கரோனா உச்சத்திலும் இருந்தது. உலகமெங்கும் மக்கள் அடைந்து கிடந்து வெளியே செல்லவே நினைக்கின்றார்கள்.





அமெரிக்க நண்பர்களும் சோதனை செய்யும் குழந்தைகளில் 50 சதவீத குழந்தைகளுக்கு COVID-19 இருப்பதாக கூறுகிறார்கள். இன்னும் குறைந்ததாக தெரியவில்லை என்கின்றனர்.





நம்மூரில் கரோனாவினால் இறப்பு எல்லா வயதினரையும் பாதித்துள்ளது. இளம் வயதினர் 'ஹார்ட் அரெஸ்ட்' என இறந்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஓரிரு குழந்தைகளும் இறந்துள்ளதாக கூறுகிறாரகள். இந்தக் கரோனாவின் மியூட்டேசன் என்பது வேறு வேறு நிலையில் வீரியம் அதிகமாகிக் கொண்டு உள்ளது. இந்தியாவில் நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் அதிகமாக இருக்கின்றது என்று சற்று சாதரணமாக எடுத்துக்கொண்டு வெளியில் சுற்ற மக்கள் கிளம்பி விட்டார்களோ? அல்லது வருவது வரட்டும், இன்றைய உணவுக்கு பாப்போம் என அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்களோ?





முதல் வகையான மக்கள் தான் இங்கு பிரச்சினை என கருதுகிறேன். இரண்டாம் வகையான தினக்கூலி மக்களுக்கு வேறு வழி இல்லை. அன்று கிடைப்பது தான் அவர்களுக்கு உணவு. அரசாங்கம் அனைவருக்குமான உணவு கொடுக்க முடிவதில்லை. அதிலும் வேறு மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்தவர்களுக்கு இன்னும் சிரமம் தான். அரசின் உதவியும் கிடைக்காது.





100 வருடங்களுக்கு முன் வந்த H1N1 ஃப்ளு தொற்றுநோய் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு இருந்ததாம். அன்றைய மக்கள் தொகையில் மூன்றில் 1 பகுதியினர் இறந்து போய் உள்ளார்கள் என்கிறது வரலாறு. நவம்பரில் இன்னுமொரு உச்சம் இந்தியாவில் இருக்கும் என்கின்றனர்.





இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது. மக்கள் தொகை விகிதாசாரப்படி இது குறைவு தான். இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. தென் மாநில, வளர்ச்சி அடைந்த மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களின் புள்ளி விவரங்கள் (Data) சரியாக இல்லை, என்பதை covid -19.org சுட்டுகிறார்கள். நம் வீட்டுக்குப் பக்கத்தில் பாதிப்பு உள்ளதா இல்லையா எனும் தகவல்களை தெரிந்து கொள்வது தான் இன்றைய தேதியில் அவசியமானது..





நமது தமிழகத்தில் எண்ணிக்கை அதிகம் இருக்க காரணம், அதிகப்படியான சோதனைகள். அதுவும் நல்ல விஷயமே. இப்பொழுது தான் ஸ்டேஜ் 3 எனும் சமூகத்தொற்று அடைந்ததாக கருதுகிறேன். அது இன்னும் சில மாதங்களில் விரிவைடையும். அவரவர் உள்ளூர் நிலைமைக்கு ஏற்றவாறு, ரொம்பவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய நேரம். வந்தபின் போராடுவதை விட, நாம் தான் வருமுன் காக்க வேண்டும். சுயகட்டுப்பாடு இல்லாவிடில் என்ன நடக்கும் என்பது தெரியாது.








https://www.hindustantimes.com/india-news/oxford-vaccine-in-final-stage-of-clinical-trials/story-sVJz9DRIR4Lm9DRA7261pM.html

Monday, June 15, 2020

ஊரும் பெயரும்



இந்த பெயர் மாற்ற மீம்கள் 'மெட்ராஸை' சுற்றிப்பார்க்க வைத்தது. சென்னையில் முதலில் எங்களுக்கு தங்க கிடைத்த இடம் எம்எல்ஏ ஹாஸ்டல். தலைமை செயலகமாக கட்டப்பட்டு இப்பொழுது மருத்துவ மனையாக உள்ள இடத்தில் பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதி இருந்தது. 'எம்எல்ஏ-க்கு எதுக்கு விடுதி?' என ஆரம்பத்தில் நினைத்ததுண்டு. அந்த ஓமந்தூரார் தோட்டத்தில், தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பெரிய தனித்தனி அடுக்கக வீடு உண்டு. கூடவே அவர்கள் பரிந்துரைத்தால், அவர்களின் சார்பாக ஓரிரு அறைகளும் புது அல்லது பழைய விடுதியில் கிடைக்கும். அங்கு பெரும்பாலும் ஊர்ப் பிரச்சனைகளுக்காக கோட்டையில்(Fort) இருக்கும் தலைமை செயலகத்திற்கு வருபவர்களாக இருக்கும். வருடக்கணக்கில் தங்கிய சிலரையும் பார்த்தது உண்டு. சென்னையின் மையப் பகுதியில் அடர்த்தியான மரங்களின் ஊடக பரந்து விரிந்த அதன் அழகும், கூடவே அங்கு வளைய வந்த அதிகாரமும், சொகுசும் சற்றே மிரட்டியது.





அதனை ஒட்டிய பகுதிதான் திருவல்லிக்கேணி. Triplicane- என்று தான் அனைவருமே கூறுவார்கள். இரண்டும் ஒரே பெயர் என அங்கு இருந்த போதுதான் தெரிந்தது. அதன் வழியாக செல்லும் பேருந்து, 'Anna Square' என ஆங்கிலத்திலும் அண்ணா சதுக்கம் என தமிழிலும் இருக்கும். இப்படி பல ஊர்களின் பெயரும் இரு மொழிகளிலும் பேருந்துகளின் பலகைகளில் இருக்கும்.










சென்னை பல வித்தியாசமான பெயர்கள் கொண்ட பெருநகரம். நெடுநீண்ட வரலாறு கொண்டது. கிட்டத்தட்ட 300 வருடங்கள் ஆங்கிலேயர்கள் இருந்ததால் அதன் பெயர்கள் அவர்களின் வசதிக்கேற்ப மாற்றிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு வீதிக்கும், ஒவ்வொரு சாலைக்கும், ஒவ்வொரு ஊருக்கும் இரண்டு பெயர்கள் இருந்ததை அறிந்துகொள்ள முடிந்தது. சில இடங்களுக்கு மூன்று பெயர்கள் கூட இருக்கும், பூந்தமல்லி-பூவிருந்தவல்லி-Poonamallee அதில் ஒன்று. ஒவ்வொரு பேட்டையில் முடியும் இடங்களையும் பேட் என்று 'இஸ்டைலாக' தான் பீட்டர் விடுவார்கள். சைதாபேட், குரோம்பேட், தேனாம்பேட், ராயப்பேட் என்று பீட்டர் விட, நாமும் பழகிக் கொள்ள வேண்டும். 'பேட்டை-பேட்' போன்றே 'பாக்கங்களும்' 'பாக்' ஆகி இருந்தது. சேப்பாக், கீழ்பாக், புரசைவாக், மீனாம்பாக் என சேப்பாக்கம் என்பதின் 'கம்' விட்டுவிடுவார்கள்.





அண்ணாசாலை- மவுண்ட் ரோடு குழப்பம் நெடியது. எங்கு ஆரம்பிக்கும் எங்கு முடியும் என ஆரம்பத்தில் தெரியாது. அண்ணா சாலையில் நின்று கொண்டே 'ஏங்க, இந்த மவுண்ட் ரோட்டுக்கு எப்படி போகணும்?' என்பதை பலரும் அனுபவித்து இருக்கக்கூடும்.





பரங்கிமலை என்பதும், செயின்ட் தாமஸ் மவுண்ட் என்பதுவும் ஒன்று என அறிந்துகொள்ள சற்று நாட்கள் ஆகியிருந்தது. திருமயிலை எனும் பறக்கும் ரயில் நிலையத்தின் பெயரைப் பார்த்துதான் பலருக்கும் மயிலாப்பூர் என்பதன் உண்மையான பெயர் தெரிய வரும். இன்டர்வியூக்கான ∴பைலை தூக்கிக்கொண்டு காலை நேரங்களில் கிளம்பி விடுவோம். மாலையில் நண்பர்கள் ஒன்று கூடி, அன்று சென்ற இடங்களின் பெயரை அலசும்போது தான், ஒரே இடத்தின் இருவேறு பெயர்களை தெரிந்து கொள்ள நேரிடும்.











எம்ல்ஏ ஹாஸ்டலில் நான்கு மாதம் இருந்துவிட்டு, அப்பொழுது புறநகராக இருந்த வேளச்சேரிக்கு மாறினோம். சைதையில் எந்த பேருந்து வேளச்சேரி செல்லும் என்பதில் குழப்பமாகும் என்பதால், சின்னமலையில் இறங்கித் தான் வேளச்சேரிக்கு பேருந்தைப் பிடிப்போம். மாநகரப் பேருந்தில் கண்டக்டரிடம் ஆங்கிலத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தின் பெயரைக் குறிப்பிட்டுதான் பெரும்பாலும் பயணச் சீட்டு கேட்பார்கள். பின்புறம் படியை ஒட்டிய அவரது இருக்கையில் தான் அமர்ந்திருப்பார். ஊரில் இருப்பது போல, சென்னையின் நடத்துனர்கள் கூட்டத்தினுடாக புகுத்து வந்து பயணச்சீட்டு வழங்க மாட்டார்கள். அந்த நெரிசலில்,முன்பு உள்ளவரிடம் சில்லறை கொடுத்து 'சின்ன மலை ஒன்னு வாங்குங்க' என கூறவேண்டும். அந்த சில்லரை ஒவ்வொருவர் கையாக மாறி நடத்துனரை அடையும். அவரிடம் போவதற்குள் அது 'லிட்டில் மவுண்ட்டாக' மாறி இருக்கும். பெரும்பாலும் ஆங்கிலத்தில் கேட்பது தான் அங்கு இயல்பாகவே அனைவருக்கும் வரும்.





பெசன்ட் நகர் பீச்சுக்கு எலியட்ஸ் பீச் என்ற ஒரு பெயரும் உண்டு. எழும்பூர் - Egmore குழப்பத்தில் நண்பர்கள் ஆட்டோ ஓட்டுனரிடம் சண்டை போட்ட கதையும் உண்டு. Foreshore estate - பட்டினப்பாக்கம் எனப்படும். இன்னும் இதில் விடுபட்ட நிறைய இடங்கள் உள்ளது. பலவற்றிற்கு அப்படியே மொழி மாற்றி இருப்பார்கள் அதில் ஒன்று தீவுத்திடல் எனும் island grounds. எழிலகம் எனும் அழகான தமிழ்பெயர்கள் கண்டு வியந்ததும் உண்டு.





இதில் குறிப்பிட தோன்றியது சென்னை சென்ட்ரலில் இருந்து, சென்ட்ரல் ஜெயில் பாலம் ஏறி இறங்கியதும் பல்லவன் சாலையில் உள்ள பாடிகாட் முனீஸ்வரர் கோவிலின் பெயர். முனீஸ்வரன் கோவில் சென்னையிலும் உள்ளதா என நினைக்கையில், Bodygurad முனீஸ்வர் எனும் வித்தியாசமான பெயர் ஈர்க்கும். எப்படி 'பாடிகாட்' முனீஸ்வரர் ஆனார் என்பதில் தான் சென்னை மக்களின் பேர் வைக்கும் திறனை வியக்க வேண்டும். வேறு ஒரு மொழியை உள்வாங்கிக் கொள்வதில் சென்னை மக்கள் எப்போதும் தனி.





1995 - Bombay to Mumbai , 1996 - Madras to Chennai, 2001 - Calcutta to Kolkata என இந்திய பெருநகரங்களின் பெயர்கள் மாற்றம் அடைந்து கொண்டு இருந்தது. எனக்கு சென்னையை விட மெட்ராஸ் 'கெத்தாகத்' தான் இருந்தது. இப்பொழுது சென்னை பழகிவிட்டது. சென்னை நண்பர்களும், அங்கு தலைமுறைகளாக வாழும் மக்களும் 'மெட்ராஸ்'(Madras) என்றுதான் கூறுவார்கள். அங்கு நீண்ட காலம் இருந்த உறவினர் அப்பொழுது "என்னப்பா நீங்க எல்லாம் மெட்றாஸ்ன்னு சொல்லாம, சென்னைன்னு சொல்லறீங்க.. எங்களுக்கு எப்பவும் மெட்ராஸ் தான்" என்பார்.





ஊரிலும் பலருக்கு இன்னமும் மெட்ராஸ் தான். ஊரில் எனைப் பார்த்ததும் விசாரிப்பவர்கள் "ஏப்பா எங்க இருக்க, இப்ப என்ன பண்ணற" என்னும் அன்பர்களின் கேள்விக்கு சட்டென 'மெட்ராஸ்' என்றுதான் வரும். இப்படித்தான் ஒருமுறை "அப்பறம் மெட்ராஸ்ல எங்க இருக்க" என்ற கேள்வி வந்தது. " வேளச்சேரிங்க" என்றேன். " அட.. மெட்ராஸ்ல வேலை செய்யறேன்னு தெரியுது.. அங்க எங்க இருக்கன்னு கேட்டன்" என்று கேட்பார்கள் நம்மைக் கலாய்த்து விட்டு செல்வார்கள் அந்த வெள்ளந்தி மனிதர்கள்.





சென்னை தவிர மற்ற ஊர்களில் இந்த மாதிரியான பெயர்க் குழப்பங்கள் குறைவுதான். 'ஊட்டிக்கு ஒரிஜினல் பெயரே உதகமண்டலம், அத வெள்ளைக்காரங்க ஒத்தக்கமண்ட் என கூப்பிட்டு பார்த்தாங்க... அதுவும் முடியாம ஊட்டி என சுருக்கிட்டாங்க' . 'இப்படித்தான் முந்திரி பழம் வித்துட்டு இருந்த ஆயாகிட்ட, இது என்ன என கேட்க, அந்த ஆயா, காசுக்கு எட்டு என்றார்களாம். அதன் பெயர் என நினைத்து cashew nut என முந்திரியை மாற்றினார்கள்' என்று சிறுவயதில் இந்த பெயர் காரணங்களை வியந்து கொண்டது உண்டு.





என்னளவில் முதலில் இந்த ஆங்கில- தமிழ் பெயர் குழப்பம் அநேகமாக திண்டுக்கலுக்கு தான் வந்து இருக்கும். லாரிகளில் பக்கவாட்டில் பர்மிட்டுக்காக எழுதப்பட்டு இருக்கும் Dindigal எழுதிய பெயரை பார்த்த ஞாபகம். ஈரோட்டில் சுற்றிக்கொண்டு இருந்தபொழுது, எங்கள் ஊரில் பெரிதாக குழப்பம் வந்தது இல்லை, VMC-வேளாளர் மகளிர் கல்லூரி தவிர. மதுரைக்குள் வளம் வந்த போது தான் குழப்பம் இன்னும் அதிகமானது. பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பரங்குன்றம் கல்லூரிக்கு செல்லும் வழியில் மதுரை கல்லூரி இருக்கும். 'Madura college' என்று ஆங்கிலத்தில் எழுதி இருப்பார்கள். மதுரை கல்லூரி என தமிழில் இருக்கும். அதை மதுரை அல்லது மதுரா என்றும் கூற மாட்டார்கள் நண்பர்கள். 'மெஜ்ரா காலேஜ்' என்று தான் கூறுவார்கள்.





மதுரையின் பக்கத்துக்கு ஊர்களில் இருந்து வரும் நண்பர்களின் பேச்சுவழக்கில் அவர்களின் ஊர்களின் பெயர்கள் அலப்பறையாக இருக்கும். திண்டுக்கல் நண்பர்கள் ' திண்டில்' என வேகமாக கூறுவார். நாரோயில், தின்னெலி என்பது நாகர்கோவிலில், திருநெல்வேலி என கேலி கிண்டலுக்குப்பின் தான் தெரிய வரும். மக்களின் பேச்சு வழக்கு என்பது வேறாகத்தான் இருந்து கொண்டிக்கிறது. அது அந்தந்த உள்ளூர் மக்களைப் பொறுத்தளவில் நாகரிகமாக, ஸ்டைலாக பெருமையாக கருதப்படுகிறது.





லண்டனில் இருந்த நேரம். பேச்சுவாக்கில் அங்கிருந்த உள்ளூர் பிரிட்டிஷ் மேலாளரிடம் சென்னை, கொல்கத்தா, மும்பை பெயர் மாற்றம் பற்றிய உரையாடல் வந்தது. அவர் 'எதற்காக இப்படி மக்களின் பழக்கத்தில் உள்ள பெயர்களை மாற்றுகிறார்கள். இது ஒரு நேர, பணம் விரயம் அல்லவா?' என்றார். பதிலுக்கு அவரிடம் "நீங்கள் எங்கள் ஊருக்கு வந்து உங்கள் வசதிக்காக ஆங்கிலத்தில் மாற்றிக்கொண்டீர்கள். எங்கள் மக்களுக்கு புரிய வேண்டுமல்லவா?" என்றதும் உண்டு. 'அப்படியானால் லண்டன் என்பது லண்டனியம்(Londinium) என்று மாறுமோ?' என்று நம்மை பகடி செய்து கொண்டிருந்தார். லண்டனுக்கான பழைய பெயர் லண்டனியம் என்பதும் அப்போது தான் தெரிந்தது. கவுண்டமணி கூறியது போல 'இந்த வெள்ளைக்காரன் லண்டன்ன்னு எவ்வளவு சின்னதா நாளே எழுத்துல வெச்சுருக்கான். நீ ஏன்டா நீட்டி முழக்கற' என்பது போல நம் ஊர்களின் பெயரை அவர்களின் வசதிக்காக சின்னதாக வைத்துவிட்டு சென்றார்களோ என்னவோ?









இங்கு கர்நாடகத்தில் மைசூரு, பெங்களூரூ( Bengaluru) என்று கன்னடத்தில் மாற்றி இருந்தாலும், அதை 'பேங்ளூர்' (Banglore) என்று சொல்வதையே விருப்பமாக பலரும் கருதுகின்றனர். 'நீங்க எப்படி வேணாலும் பேரு வச்சுக்குங்க, நாங்க இப்படி தான் கூப்பிடுவோம்'. பேச்சு வழக்கில் அந்த மாற்றம் என்பது தலைமுறைகள் கடக்க வேண்டும். அவர்கள் அறியும் பொழுது என்ன பெயர் இருக்கின்றதோ அதைத்தான் பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள். இந்த பெயர் மாற்றங்கள் தேவையா இல்லையா எனில், புதிதாக செல்பவர்களுக்கு பல குழப்பங்கள் விளைவிப்பதை தடுக்கும் எனபதால் தேவை தான். ஆனால் பணப்புழக்கம் குறைந்த இக்கட்டான இந்த நேரத்தில் இது தேவையா என்பது யோசிக்க வேண்டியது. கூடவே அதன் ஸ்பெல்லிங் 'வீலுர்' என குழப்பம் விளைவிப்பதாக இருக்ககூடாது.





இந்த பெயர் மாற்றம் தேவையா, இல்லையா என்பது பற்றி ஈரோடு கதிர் மற்றும் ஷான் கருப்பசாமி நேற்று நேரலையில் அடித்து துவைத்து உள்ளார்கள். லிங்க்

https://youtu.be/oONN0Ep_HXY












Monday, June 01, 2020

தற்சார்பு எனப்படுவது யாதெனின்


என்பதுகளின் இறுதியில் ஒட்டகம் மார்க் சீயக்காய் தூள், காந்தி மார்க் சீயக்காய்த்தூள் மிக அதிகமாக விற்பனை ஆகும்.  அதே போல்தான் கோபால் பல்பொடி, பயோரியா பல்பொடி போன்றவையும். சோப்பு என்று பார்த்தால் அது ஹமாம்.  துணி துவைக்க உள்ளூர் சோப்பு தான், டிஸ்கவுண்ட் போலவே இருக்கும்.  அதன் பிறகு 501 சக்கை போடு போட்டது.  அப்பொழுது 501 மற்றும் ஹமாம் இரண்டும் டாடா நிறுவனத்திடம் இருந்தது.  ஹமாம் ஐந்து ரூபாய்.   இந்த இரண்டு சோப்புகளும் பெட்டியில் வாங்குவோம்.  அதனை எடுத்து அழகாக அடுக்கி வைப்பது என் பொறுப்பு.  அதேபோல கலர் குடிப்பதற்கும் குண்டு அழுத்தி உள்ளே விழ  வைக்கும் கோலி  சோடா.  சிகப்பு கலர், மஞ்சள் கலரும்  இருக்கும்.  பிறகு 55 எனப்படும் பன்னீர் சோடா வகை பிரபலம்.  மொடக்குறிச்சியில் அப்பொழுது ஒரு சோப்பு அலகு யூனிட் எனும் கதர் சோப் தொழிற்சாலையும் இருந்தது.    

90-களின் ஆரம்பமாக இருக்கலாம்.    அந்த நேரங்களில் தான் பிரபலமானது  சிக், மீரா  ஷாம்புகள். 
 ஒட்டகம் மார்க் சீயக்காய் தூள், காந்தி மார்க் சீயக்காய்த்தூள் விற்பனை குறைய ஆரம்பித்தது.   குளோசப், மற்றும் கோல்கெட்  பேஸ்ட் விற்பனை அதிகமான நேரம் கோபால் பல்பொடி இறங்கு முகத்தை அடைந்தது.    கூடவே ஹமாம் மற்றும் 501 ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட் நிறுவனத்திற்கு கை மாறியது.   அப்பா கூறுவார்  லாபம் முன்பு போல் இல்லை என.   பெப்சி வர ஆரம்பித்தது உள்ளூர் கோலி  சோடா குறைய ஆரம்பித்தது.   

அப்பொழுது ஊரில் ஒருவர் வந்து சுதேசி இயக்க பொருள்களை தான் நாம் பயன்படுத்த வேண்டும், அப்பொழுது தான் நம் நாடு நன்றாக இருக்கும் என்பார் என்று கூறிவிட்டு செல்வார்.    அதுநாள்  வரையிலும் கடையில் என்ன பொருட்கள் புதிதாக வந்தாலும் அதனை பயன்படுத்த முயற்சிப்பேன்.  பியர்ஸ் சோப்பெல்லாம் அந்த வகையில் போட்டது தான்.  அவரின் மீது இருந்த மதிப்பு காரணமாக, முடிந்த அளவு நமது ஊர்  நிறுவன பொருட்களை மட்டுமே பயன்படுத்த ஆரம்பித்தேன்.  மெடிமிக்ஸ் க்கும், மீராவிற்கும் 
 மாறினேன்.   அவ்வப்போது இந்த எண்ணம் தோன்றி மறையும்.   அவ்வப்போது இதில் மாற்றமும் வரும்

இப்பொழுது கூட அந்த சீவக்காய் மற்றும் அரப்புத்தூள்களை வாங்கி தலையை அலசிக் கொள்ளலாம் என்று நமது குளிக்கும் அறையில் டைல்ஸ் முழுக்க தெரிந்து விடுகின்றது.  அதற்கேற்ப நம் அளவுகடந்த தண்ணீரையும் வீண் செய்ய வேண்டியுள்ளது 

வேற்று நாட்டு நிறுவனத்திற்கு நாம் வேலை செய்ய ஆரம்பிக்கும் அந்த நொடியில், தற்சார்பு கொள்கை  முடிந்து போய் விடுகின்றது.   இன்று நமது நாட்டில் தயாராகும் பொருட்களை வாங்கினாலும்,  அதன் பங்குதாரர்கள் யாரேனும் ஒருவர் வெளிநாட்டில் இருக்கலாம்.  

அப்படியானால் தற்சார்பு என்பது எது?  
தற்சார்பு என்பது எழுபது என்பதுகளின் காலத்திற்கு செல்வது மட்டுமாக இருக்காது. அந்த பொருளாதாரத்தை கடந்து  வந்து வெகு காலம் ஆகிவிட்டது என நினைக்கிறேன். காலத்துக்கு காலம் அதுவும் மாறி மாறித்  தான் வந்திருக்கும்.   கோபால் பல்பொடிக்கு முன்னர் வேப்பங் குச்சியை வைத்து விளக்குவது  தற்சார்பாக இருந்திருக்கலாம்.


வால்காவிலிருந்து கங்கை வரை எனும் புத்தகத்தில் ஆரம்பகால மனிதர்கள் பற்றி குறிப்பிடுவார்கள். 

ரஸ்யாவின் வால்கா நதியிலிருந்து  கங்கை வரை மனிதர்கள்  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக புலம் பெயர்ந்து வந்த கதை.  புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது போல பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் காடுகளில்  இருந்தனர். அந்தக் காடுகளில் விலங்குகளுடன், விலங்குகளாக மனித இனம் திரிந்தது. அவர்களுக்குள் மாமிசத்திற்கு சண்டை நடக்கும்.     அங்கு கிடைத்த காய்களையும் பழங்களையும், அங்கிருக்கிற விலங்குகளை வேட்டையாடி சாப்பிட்டு  இருந்ததை  தற்சார்பு என குறிக்கலாம்.

90 க்கு பிறகு பொருளாதார தாராள மயமாக்கல் ரொம்பத் தீவிரமா நடந்த காலகட்டங்கள் மிக முக்கியமானவை.  உலகதோடு ஒட்டி உறவாட ஆரம்பித்து விட்டோம்.    உலகமயமாக்களுக்கு  முன் எப்படி இருந்தது.   இந்தியா முழுக்க இருந்த மக்கள் அங்கங்கு  அவரவர்  கிராமங்களிலும் அவரவர்  ஊர்ளிலும்  இருந்தார்கள்.  வெளி உலகம் தெரியாமலேயே.  பக்கத்தில் இருக்கும் சாமியைப்  பார்த்துக்கொண்டு,  அருகில் இருந்த உறவினர்களை விசாரித்துக்கொண்டு, கிடைத்த  வேலையைப் பார்த்துகொண்டும் தான்  இருந்தார்கள்.   ஆனால் அதில் தான் சாதியப் படிநிலைகள் ரொம்ப தீவிரமாக இருந்தது என்பது பலரும் கூறும் கருத்து.   

 இன்று தமிழ்நாட்டிற்கு எத்தனையோ மக்கள் பஞ்சம் பிழைப்பதற்காக வந்த மக்கள், கொரோனாவின் முடக்கத்தால் திரும்ப அவர்களின் ஊருக்கு போகும், அந்த காட்சிகளையும் நாம் பார்க்கிறோம்.  தமிழகத்தில் இதுவரை பிரச்சனை எல்லாம் இன்றைய காலகட்டத்தில் வண்டிக்கு டியூ  கட்ட முடியலை,  குழந்தையோட பள்ளிக் கூடத்திற்கு பீஸ் என்ன பண்றதுண்ணு  தெரியவில்லை எனும்  இந்த மாதிரியான விஷயங்களில் பிரச்சினை ஆரம்பித்து உள்ளது.   எனக்கு தெரிந்து பசி, பஞ்சம் மாதிரியான பிரச்சினைகள் இதுவரை வரவில்லை என்கிறார்  பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்.   ஒருவிதத்தில்  அது உண்மை என்றே தோன்றுகிறது.   அரிசி முதற்கொண்டு எல்லாமுமே நமக்கு அரசு அளிக்கின்றது,  அதற்கான வருவாய் எந்த வழியாக என்று இப்பொழுது  நம்ம பாக்கத் தேவையில்லை.  

தற்சார்பு பொருளாதாரத்தின் படி, இந்த மாதிரி கிராமங்களில்  வேலை பார்த்துக்கொண்டு இருந்த எல்லாருமே ஏதாவது ஒரு தொழில் சார்ந்த, இண்டஸ்ட்ரீஸ்  மாதிரியான  சூழலுக்கு போய்விட்டோம்.  அந்த தொழில் உலகத்தை சார்ந்து ஒரு கண்ணியாக  இருக்கிறது.   ஓரிடத்தில் அறுபட்டால் அது மற்றோரு பக்கம் பிரச்சினையை விளைவிக்கும்.     

இப்பொழுது தான் நாம்  இண்டஸ்ட்ரியல் வளர்ச்சியால் நடந்த சூழலியல் பிரச்சினைகள் குறித்துப் பேச ஆரம்பிக்கின்றோம்.  இங்கிலாந்திலும் தொழிற்புரட்சிக்குப் பின் நடைபெற்ற சூழலியல் மாற்றங்கள், அதற்குப் பிறகு சூழலின் மீது அக்கறை கொண்டு அவர்கள் மாறியது போல அவற்றைப் பற்றி நிறைய பேசவேண்டும்.    கொரோனா காலம் நம்மை இந்த  நிலைமையை  விட கொஞ்ச காலம் பின்நோக்கி தள்ளி விட்டு போகும். 

 இப்போது  நாம்  செய்துகொண்டு  இருந்த விஷயங்களில் எந்தெந்த  தவறான விஷயம் இருக்கிறது என ஆராய்ந்து அதனை சரி கட்டுவதற்கான வேலைகளை  ஆரம்பிக்கவேண்டும்.   அந்த மனப்பான்மை எல்லா தரப்பு மக்களுக்கும் வரும்.   

தற்சார்பு பொருளாதாரம் இன்றைய காலகட்டத்தில் கண்டிப்பா முடியாது.  நம் ஒரு மாடு வைத்து பராமரிக்க , அதற்கு இடம் வேணும்.  அந்த இடம் எங்கே கிடைக்கும்? அவன் அந்த இடத்திலிருந்து படித்து மேலே சென்று அந்த இந்த முன்பு இருந்த ஜமீன்தார் இருந்த முறை மாறி இப்போ அது ஒரு ஒரு நிறுவனத்துக்கு கீழே போய் இருக்கிறார்கள்.   இங்கே ஒரு கிராமத்தில் அவர்கள் அடிமையாக இருந்த நிலைமை மாறி இன்றைக்கு ஒரு முதலாளித்துவத்தின் கீழ் ஒரு அடிமையாய் இருக்கிற ஒரு நிலைமையில் தான் இருக்கும்.   அதில் கொஞ்சம் படிக்காமல் விஷயம் தெரியாமல் இருந்திருக்கும்.  இப்போ படித்து விஷயம் தெரிஞ்சு இருக்கும் என தோன்றுகிறது.  

தற்சார்பு விஷயங்களெல்லாம்  நமக்கு ஒத்து வருமா என்றால் நம்ம தற்சார்பு னா என்ன அப்படின்னு இருக்கு ஒரு கேள்விக்குறி?  பதில் எந்தப் பொருளையும் வாங்காமலேயே   உற்பத்தி செய்ய முடியுமா?  அப்போழுது ஒரு துறவயின்  வாழ்க்கையைமட்டுமே  வாழ முடியும் என நினைக்கிறேன்.   இந்த கால கார்பொரேட் துறவிகள் அல்ல.     கிடைப்பதை சாப்பிட்டுவிட்டு அப்படியே இருக்கிற வாழ்க்கை.   அந்த வாழ்க்கை முறை நம்ம சாமானியர்களுக்கு இப்போழுது வருமா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்விதான்.   
அப்படியே அது ஒத்து வந்தாலும் இந்த நுகர்வு சமூகத்தில் நம்ம இருக்க முடியுமா?  சிக்கனாமான  மினிமலிஸம் சார்ந்த வாழ்க்கை தான்.   நமக்கு இன்றைய காலகட்டத்தின் தேவை. தேவைக்கு அதிகமாக வாங்குவது நிறுத்தினால் பல பிரச்சனைகள் தீரும்.   

அதற்கடுத்தபடியாக குளோபலைசசன்,  எல்லாருமே கரோனாவிற்கு பின், லோகலைசேஷன் ஆகும் என நினைத்தாலும், அது டி-சென்டர்லைஷேஷன் ஆகுமே ஒழிய  லோகலைசேஷன் ஆகும் வாய்ப்பு குறைவு.  


நெருக்கடிக்குப் பிந்தைய கால கட்டத்தைத்தான் new normal என்று பொருளாதார வட்டாரத்தில் கூறுகிறார்கள்.  new normal என்பதை நாம் புரிந்துகொண்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அது கண்டிப்பாக தற்சார்பை  நோக்கி நகராது, வேண்டுமானால் மினிமலிசம் நோக்கி நகரலாம்.  






குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...